Saturday, October 20, 2012

சில நினைவுத் தடங்கள்


கவிஞர் இ.முருகையன் : சில நினைவுத் தடங்கள்
                                                                                                                                                   -ந.இரவீந்திரன்  

இது முருகையன் குறித்த ஆய்வு முயற்சியல்ல; விரிவான ஆய்வுக்கான தேவை உள்ள போதிலும், அவரைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் அவர் குறித்த சில நினைவுகளை மீட்பதே இக்கட்டுரையின் நோக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அவர் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து நெருக்கமாக செயற்பட்ட அவரது இறுதிக் காலத்தின் இரு தசாப்தங்களில் அவருடன் நெருங்கிப்பழக அமைந்த வாய்ப்பின் பேறாக இந்தப் பதிவினை வரைகிறேன்.
பேரவை 1974 இல் தொடங்கி "தாயகம்" சஞ்சிகையை வெளியிடத் தொடங்கியிருந்தது. ஆயினும் ஒரு வருடத்துக்கு மேல் "தாயகம்" வெளி வராதது மட்டுமின்றி பேரவையும் காத்திரமாக இயங்க இயலாத முடக்கம் ஏற்பட்டது. தோழர் சண்முகதாசன் தலைமையில் வரலாறு படைத்த புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் கட்சி, ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வரையறை கடந்து பிரசார முழக்கமாக்கிய நிலையில், வன்முறை வழிபாட்டுக்கு உரியதாக்கி, இடது திரிபு வாதத்துக்கு ஆட்பட்டது. அதன் பண்பாட்டு அணியாக தோன்றி இயங்கத் தொடங்கிய "தேசிய கலை இலக்கியப் பேரவை" இலும் இந்த இடது திரிபின் வெளிப்பாடு மேலெழவும், தொடர் முன்னேற்றம் தடைப்பட்டது. நெல்லியடி அம்பலத்தாடிகள், மட்டுவில் மோகனதாஸ் சன சமூக நிலையம் தொட்டு கொழும்பு அவைக்காற்றுக் கழகம் வரையான செயற்பாடுகளில் பேரவைக்குரியவர்கள் செயற்பட்டனரேயன்றி, பேரவை ஒன்றுபட்ட அமைப்பாக இயங்காது இருந்தது.
தவிர்க்கவியலாமல் 1978 இல் சண் தலைமையை நிராகரித்து "புதிய ஜன நாயக கட்சி" எனப்பின்னால் பெயர் பெற்ற பிளவடைந்த கட்சியுடன் தொடர் பயணத்தை தேசிய கலை இலக்கியப் பேரவை மேற்கொண்டது. வறட்டுவாத இறுக்கத்திலிருந்து மீண்டு வெகுயன மார்க்கத்தை வரித்து பேரவை இயங்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயற்படும் முனைப்பை கட்சி ஊக்கப்படுத்தியது. கட்சி செயலாளராக இருந்த கே.ஏ.சுப்பிரமணியம், இடையில் தொய்ந்திருந்த கைலாசபதி, முருகையன் போன்றோருடனான உறவைப் புதுப்பிப்பதில் நேரடியாக ஈடுபட்டிருந்தார். இவர்கள் இருவரும் பேரவையின் தொடர் வேலைகளுக்கான கலந்துரையாடல்களிலும் செயற்பாடுகளிலும் பற்றுறுதியுடன் ஈடுபட்டனர். அந்த நிலையில் பாரதி நூற்றாண்டுவிழா (1982) வந்தமைந்தது.
பதின்ரண்டு தலைப்புகளில் மாதம் ஒன்றாக பாரதி ஆய்வுகளை முன்னிறுத்திய கருத்தரங்கு திட்டமிடப்பட்டது; முதல் கூட்டம் முருகையன் உரையாக அமைந்தது. ஆய்வுக் கட்டுரைகள் "பாரதி ஆய்வுகள்" எனும் தலைப்புடன் நூலாக்கப்பட திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு ஆய்வையும் தாங்கி 1983 இலிருந்து "தாயகம்" சஞ்சிகையை வெளியிடுவதற்கும் எதிர்பார்ப்பிருந்தது. நினையாப்பிரகாரமாய் கைலாசபதி 82 டிசெம்பரில் மறைந்துவிட முழுப் பொறுப்பையும் முருகையன் ஏற்க நேர்ந்தது. அவரும் பூரண சம்மதத்துடன் பேரவைத் தலைவர் எனும் பதவி நிலையில் உறுதியுடன் செயற்பட்டார். முன்னதாக ஐம்பதுகளின் எழுச்சியுடன் தோன்றி வளர்ந்த "முற்போக்கு இலக்கிய இயக்கம்" தனது அர்த்தமிழந்து கிட்டத்தட்ட செயற்படாத கோமா நிலையில் இருந்தமையால் முழுமையாக பேரவைத் தலைவராக முருகையனால் இயங்க இயலுமாயிற்று.
"பாரதி ஆய்வுகள்" என்ற தலைப்பில் மறைந்த கைலாசபதியின் பாரதி குறித்த கட்டுரைகள் தொகுத்து வெளியிடப்பட்ட நிலையில் பேரவையின் பாரதி ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலுக்கு "பாரதி: பன்முகப் பார்வை" என்ற பெயரை முருகையன் சூட்டிக்கொண்டார். அது நூலுருப் பெறுமுன்னதாக அதற்கான ஒவ்வொரு கட்டுரைகளும் தாங்கி வெளியான "தாயகம்" சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் முருகையன் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். இக்காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகமுடிந்தது. இதன் போது ஒரு பண்பாட்டு இயக்கத்துக்கு தலைமை தாங்கும் அவரது ஆளுமையை இனங்காண இயலுமாயிற்று.
அவர் அப்போது யாழ். பல்கலைக் கழகத்தின் உதவிப் பதிவாளராக வந்துவிட்டமையால் இந்தப் பொறுப்பை சிரமமின்றி மேற்கொள்ள இயலுமாயிருந்தது. அதற்கேயான கூட்டம் தவிர்ந்த வேளைகளிலும் அவரைப் பல்கலைக் கழக பணிமனையில் சென்று சந்தித்து வேண்டிய உதவிகளைப் பெற்றுக்கொள்வோம். அவ்வேளைகளில் அவருடனான உரையாடல்கள் பலதும் பத்துமாக அமையும். ஒரு தடவை சிற்பக் கலை குறித்துக் கேட்டோம். முன்னர் வடிக்கப்பட்ட வடிவத்தை அப்படியே மரபு பிறலாமல் ஒருவர் புதிதாக செதுக்கும்போது, அது கலை ஆவதில்லை; புத்தாக்கத்துடன் ஒன்றை சிற்பி வடித்தால் மட்டுமே கலைஞனுக்குரிய பாத்திரத்தை வரிப்பவராவார் என்றார். எவ்வளவு செய் நேர்த்தியுடன் வடிக்கப்பட்டாலும் முன்னர் இருந்ததின் பிரதியெனில் தொழில் நுட்பத்தை வியக்கலாமே அல்லாமல் கலை எனக் கொண்டாட இயலாதென்பார். வடிவப் புதுமை குறித்து மட்டுமல்லாமல் பேசு பொருளின் புதுமை பற்றியும் அக்கறை கொள்வார் முருகையன்.
அவ்வாறு ஒரு தனி உரையாடலின் போது புதிது புனைதலின் அவசியத்தை வலியுறுத்திவிட்டு சொன்னார், இன்றைய தலைமுறையினரான நீங்கள் புதிய ஒன்றைப் படைத்து அதை ஆளுமையுடன் பிரகடனப்படுத்த இயலாது திண்டாடுகிறீர்கள் என்று. முற்போக்கு இலக்கிய எழுச்சியின் பிரதிநிதியான அவரிடம் அத்தகைய ஆளுமை பூரணமாய் அமைந்திருந்தது. ஒரு சம்பவத்தைக் கூறினார். தன்னுடைய கவிதை ஒன்றில் வந்த "கொச்சைத்" தமிழைச் சுட்டிக்காட்டி, இவற்றை தவிர்க்க வேண்டுமல்லவா என்பது அந்த நண்பரின் ஆதங்கம். முருகையன் அவருக்கு சொன்னார்,"அதை ஒரு ஆற்றல் மிக்க கவிஞர் கவிதையில் பாவித்திருப்பதால் இப்போது அது கொச்சைத் தமிழ் அல்ல, நல்ல சொல்தான்" என்று. "யார் அந்தக் கவிஞர்" என நண்பர் கேட்டபோது "கவிஞர் முருகையன்" எனப் பதில் கூறியதாக முருகையன் சொல்லிவிட்டு தனக்கேயுரிய முகம் மலர்ந்த சிரிப்பால் முற்றுப்புள்ளியிட்டார்.
படைப்பூக்கத்துடன் புத்தாக்கத்தை முன்னெடுக்கும் அவர் அதுபோன்றது எனக் கருதும் எதனையும் அங்கீகரித்துப் பங்கேற்கப் பின்னிற்பதில்லை. எண்பதுகளில் கம்பன் கழகம் ராமகாவியத்தை இலகுவில் மக்களிடம் எடுத்துச் செல்லும் விவாதம் உள்ளிட்ட அரங்க நிகழ்வுகளை நடாத்தியபோது, ஆரம்பத்தில் அவற்றில் பங்கேற்று வேடமிட்டு விவாதித்துள்ளார். கம்பராமாயணத்தை மக்கள் மயப்படுத்துவதாக அல்லாமல் பிற்போக்குவாத வியாபார உத்தியே மேலோங்கியுள்ளது என்ற பலரது கருத்தையும் ஏற்கவியலாமல் சிறிது காலம் அந்நிகழ்வுகளில் பங்கேற்றவர், எதிர்க் கருத்தாளர்களின் கூற்றுகளில் உண்மையிருப்பதை கண்டதும் தயக்கமின்றி பங்கேற்பதை நிறுத்திக் கொண்டார்.
இதுபோன்ற அவரது அவசர ஆதரவு நிலைப்பாடு ஒன்று அவரை மதிப்பீடு செய்வதில் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்ணூறுகளில் யுத்தம் கொடூரமாய் மக்களைக் காவுகொண்டிருந்த நிலையில் போராடும் விடுதலைப் புலிகளை வாழ்த்தி இரு கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார். இதை வைத்து அவரும், தேசிய கலை இலக்கியப் பேரவையும் புலிகளின் இலக்கியப் பிரதிநிதிகள் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதை மறுத்து பேரவை அறிக்கையிடுவதை முருகையன் ஆதரித்தார். வெகுஜன மார்க்கத்தில் பேரவை முன்னேறி வந்தபோதிலும், சண் காலத்து இடது திரிபுவாத முனைப்பாக்கம் கட்சியிலும் பேரவையிலும் ஏற்பட்டு வருவது மெய்யாயினும், மக்கள் போராட்டம் என்பதிலிருந்து பல காத தூரம் விலகிய புலிகளின் முன்னெடுப்புகளில் உடன்படாத விடயங்கள் அனேகம் இருந்தன. சில அம்சங்களை வன்முறை வழிபாட்டு இடது அதிதீவிரப் பண்பினால் ஆதரித்தமையினாலேயே விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்டதாகிவிடாது.
முன்னதாக எண்பதுகளில் மக்கள்மீது திணிக்கப்பட்ட யுத்த அனர்த்தக் கொடூரங்களுக்கு எதிரான பேரவைச் செயற்பாடுகளில் முருகையனின் படைப்பாக்கங்களிலூடாக வெளிப்பட்ட பேரினவாத எதிர்ப்புக் குரலுடன் தொடர்புபடுத்தி இதனைக் காண வேண்டும். "புது வரலாறும் நாமே படைப்போம்" என்ற பேரவை வெளியீடான ஒலிப் பேழை சிறப்புற அமைய ஏற்ற புதிய கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார். அக்கொடூரங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்ற ஆதங்கம் அவரிடமிருந்து வெளிப்பட்டதே அல்லாமல் மக்களைப் பிரிந்த போராட்டக்குழுவை ஆதரிப்பவராக கருத்துரைக்கவில்லை.
அதற்கு முன்னதாக எழுதிய "வெறியாட்டு" நாடகமும் மக்களை விழிப்பூட்டுவதாக வடிவமைக்கப்பட்டதே அல்லாமல் புலிகளை வக்காலத்து வாங்கியதாக அமையவில்லை எனக் காண இயலும். இந்த நாடகப் பிரதி வெளியிடப்பட்ட அதே அரங்கில் அவரது வரலாற்றுப் பொருள்முதல் வாத அடிப்படையில் விஞ்ஞான நோக்குடன் மனிதகுல தோற்ற வளர்ச்சியைக் கூறும் "அவன், அவள், அது" எனும் கவிதைக் குறுங்காவியமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நூலுக்கு, அப்போது விஞ்ஞான ஆசிரியராக இருந்த நான் விமர்சன உரை ஆற்றுவது பொருத்தமாய் இருக்கும் எனக்கூறியிருக்கிறார் முருகையன்; அதனை ஏற்பாடு செய்த நண்பர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமையால் எனக்கு "வெறியாட்டு" நூலுக்கான விமர்சனமே தரப்பட்டது. அந்த விமர்சன உரையைப் பின்னர் எழுத்துருவாக்கி "தாயகம்" சஞ்சிகையில் வெளியிட்டபோது அதற்கு மாற்றுக்கருத்து எதையும் வெளிப்படுத்தியதில்லை. மக்களைப் பிரிந்த இனவாத யுத்தம் குறித்த விமர்சனம் உடையாதாக அப்பிரதி மீதான எனது வாசிப்பு அமைந்திருந்தது. என்னுடைய விமர்சனம் நன்றாக இருந்ததாகவோ வேறெந்தக் கருத்துகளையோ அவர் சொல்லாததுடன் மற்ற நூலுக்கு நான் விமர்சன உரை ஆற்றியிருப்பின் பொருத்தமாய் இருந்திருக்கும் என்பதையே மீளவலியுறுத்தினார்.
முருகையன் ஐம்பதுகளில் மொழிப் பற்றுடன் தனது கவிதை எழுத்தாக்கத்தைத் தொடங்கியவர். ஐம்பதுகளின் பிற்கூறில் முனைப்படைந்து வளர்ந்த முற்போக்கு இயக்கத்துடன் இணைந்து சமூக நோக்குடனான மக்கள் விடுதலைக்கான படைப்பாக்கங்களை ஆக்கியளித்தார். என் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்தது , வாழ்த்துப் பாடி தலைமை தாங்கியது மட்டுமல்ல, எங்கள் வீடான "சத்திமனை" இல் யுத்த அனர்த்தங்களின் போது ஒரு மாதங்கள் தங்கி இருந்ததும் ,பரிமாறிய நினைவுகளும் என்றும் இனிமையானவை. அதன் மூலம் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பும் கிட்டியது. இறுதிக்காலத்தில் எவ்வகையிலும் இனவாதத்துக்கோ, மக்களைப் பிரிந்த வீர சாகசங்களுக்கோ துதிபாட அவர் முனைந்திருக்கவில்லை; மக்களை நேசிக்கும் மனப்பாங்குடன் போராட்டத்தை ஆதரிக்க முற்பட்டபோது ஒரு கவிக்குரிய அவசர கோலம் வெளிப்பட்டதாயினும் (அதுசார்ந்த விமர்சனத்துக்கு அப்பால்) என்றென்றும் மக்கள் கவியாகவே அவர் கொண்டாடப்படுவார்.
( 23-04 -1935 - 27 -06 -2009).

No comments:

Post a Comment