பிரிந்து செல்வதை மறுக்கும்
சுய நிர்ணய உரிமை
-ந.இரவீந்திரன்
மூன்று தசாப்தங்களின் முன் ஈழத்தமிழ்த் தேசியம் பிரிவினைப் போராட்டத்தை முன்னெடுத்தபோது அதன் ஆபத்துக்கள் குறித்து மார்க்சியர்கள் எச்சரித்திருந்தனர். அதேவேளை தமிழ்த் தேசியத்தின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்திய போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கத் தவறியமையால் வரலாறு அவர்கள் கைகளை விட்டுத் தவறிப் போனது. போகவும், இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தால் வழிநடாத்தப்பட்டு இன்று நாடு பூராவும் இந்திய ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்டுப் போயுள்ளது.
அன்று ஈழத்தமிழ்த் தேசியத்தை நீண்டகால நோக்கில் பலவீனப்படுத்தும் நோக்குடன் சிங்களப் பேரினவாதப் பிதாமகனான ஜே.ஆர் கையாண்ட தந்திரோபாயம் மேலாதிக்க சக்திகளுக்குப் பயன்பட்டுள்ளதுளூ மக்கள் விடுதலைக்குப் பாரிய பின்னடைவாகியுள்ளது. புலம்பெயர் தமிழ்ப் பட்டாளம் இத்தனை பெரும் சக்தியாக முடிந்தமையே ஜே.ஆரின் அந்த நரித் தந்திரம். இந்தப் புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் ஈழத்தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு தீங்கிழைப்பதோடு தெற்காசிய சமூகத்துக்கும் பாதகமாய்ச் செயற்படுகின்றனர்.
இவர்களது கூட்டு தமிழகத் தமிழுணர்வாளர்களுடனானது. இவ்விரு சக்திகளும் எமக்கு உதவுபவர்களா? பிரிவினை இல்லாத சுயநிர்ணய உரிமையை ஏன் நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது? எமது வடபிரதேசக் கடல் வளம் தொடர்பான சர்ச்சையிலிருந்து எமது விவாதத்தை முன்னெடுப்போம்.
ஐ
இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் கடல் எல்லைகளை மீறுவதனால் எமது மீனவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி தடைசெய்யப்பட்ட வலைகளை அவர்கள் பாவிப்பதால் மீன்களின் இனப்பெருக்கத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய இழுவைப் படகுகளின் பிரவேசம் மன்னார், யாழ்ப்பாணம் எனப் பரந்து விரிந்து தற்போது முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அப்பாலும் சென்றுவிட்டது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது 2011.12.14 அன்று தினக்குரல் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற செய்தியின் ஒரு பகுதி. வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் பட்ஜெட் விவாதத்தின்போது அவையில் ஆற்றிய உரையாக அச்செய்தி அமைந்திருந்தது. யுத்தம் நிறைவடைந்ததும் எமது மீனவர்கள் கடற்றொழிலுக்காக அனுமதிபெறும் பாஸ் நடைமுறை இன்னமும் தொடர்வது பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், சந்தைப்படுத்துவதற்கு முயலும்போது எதிர்கொள்ளும் பாதுகாப்புப் படையின் கெடுபிடிகளையும் அவ்வுரையில் குறிப்பிட அவர் தவறவில்லை.
படையினர் வடபகுதி மீனவர்களுக்கு பல தடைகளை ஏற்படுத்தும் அதேவேளை, தென்பகுதிச் சிங்கள மீனவர்கள் வடபிரதேசக் கடல் வளத்தைப் பயன்படுத்துவதற்குத் தாராளமாக இடமளிப்பதாக அவ்வப்போது செய்திகள் அடிபடுவதையும் அவதானித்து வருகிறோம். ஆயினும், வடபகுதித் தமிழ் மீனவர்கள் தம்மளவில் சிங்கள மீனவர்களிடமிருந்து பெறும் நெருக்கடிகளை விடவும் இந்தியத் தமிழக இழுவைப் படகுகளின் பிரசன்னம் ஏற்படுத்தும் கடல்வள அபகரிப்பால் எதிர்நோக்கும் இடர்பாட்டையே தாங்கவியலாததாகக் கருதுகிறார்கள். அதன் வெளிப்பாடே பாராளுமன்றத்தில் எழுந்த குரல்.
தமிழக – வடபிரதேச – தெற்கு மீனவர்கள் எனும் முத்தரப்பு நெருக்கடி குறித்து மீனவர் சங்கங்கள் அவ்வப்போது சந்தித்துப் பேசியுள்ளனர். கடல்வளப் பயன்பாட்டின் கள நிலவரங்களில் அவர்களிடையே கை கலப்புகள் இடம்பெற்ற போதிலும், ஒரே வர்க்க உணர்வு, மேற்கிளர்ந்து தமக்குள் சுமூகத் தீர்வை எட்டியதோடு, அவ்வப்போது நீடித்த தீர்வுக்காக மீனவர் சங்கங்களின் இத்தகைய சந்திப்புகள் பல்வேறு முயற்சிகளில் இறங்கியது வரவேற்புக்குரியது. அவை திருப்திகரமான முடிவுகளை எட்ட இயலா வகையில் அவர்களது பிரச்சினைகளையும் கடந்த வேறு அரசியல் நெருக்கடிகள் தடைகளை வளர்ப்பனவாய் உள்ளன.
இன்று பாராளுமன்றத்தினுள் யாழ்- மன்னார் மீனவர்களின் உரிமைக் குரலை எழுப்பும்போது தமிழக மீனவர்கள் எதிரிகளாகக் காணப்படுகிறார்கள்ளூ இலங்கைத் தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத சக்திகளால் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்குள்ளாவதைக் கண்டித்துத் தமிழுணர்வாளர்கள் தமிழகத்தில் போராட்டங்களை முன்னெடுத்த வேளைகளில் தமிழக மீனவர்கள் அவர்களோடு கைகோர்த்துக் குரல் எழுப்பியுள்ளனர். 'சிங்களக் கடற்படை எம்மைத் தாக்குகிறது - உடைமைகளை அபகரிக்கிறது - கொலை செய்கிறது' எனத் தமிழக மீனவர்கள் போராடும் எந்தச் சந்தர்ப்பங்களிலும், அங்குள்ள தமிழுணர்வாளர்கள் தம்மை ஆதரித்து எந்தவொரு செயற்பாட்டிலும் இறங்கியதில்லை எனத் தமிழக மீனவர்கள் தமிழுணர்வாளர்கள்மேல் குற்றச்சாட்டு முன்வைப்பதையும் கண்டுள்ளோம்.
இலங்கை வடபிரதேச மீனவர்களுக்குத் தமிழக மீனவர்கள் கெடுதி செய்கிறார்கள் என்பதாலேதான் அவ்வாறு தமிழகத் தமிழுணர்வாளர்கள் தமிழக மீனவர்களுக்கு எந்த ஆதரவையும் காட்டாது இருக்கிறார்களோ? அப்படி ஒரு குற்றச்சாட்டை தமிழுணர்வாளர்கள் முன்வைத்ததில்லை. அவர்களுக்கு உண்மையில் மீனவர்களின் வாழ்க்கைப் போராட்டம் குறித்தோ, அவர்களைச் சிங்களப் படையினர் கொல்வது பற்றியோ உணர்வு கொள்ள இயலுவதில்லை. அங்கே தமிழுக்கு என்ன அவலம் வந்துவிட்டது? அன்றாட, வயிற்றுப் பாட்டுக்கு அல்லாடுகிறவர்களது அற்பப் பிரச்சினைக்கு எல்லாம் தமிழுணர்வைக் கிளர்ந்தெழச் செய்தால் தமிழுக்கு ஓர் அச்சுறுத்தல் நேரும்போது பெரிதாக எதுவும் பண்ணவியலாமல் போய்விடுமே!
வயிற்றுப்பாடுகள் என்ற அற்ப விவகாரங்களுக்கு ஆட்படாத புனிதமான இந்தத் தமிழுணர்வாளர்களில் இரு பிரிவினர் உள்ளனர். எங்கேயும் இருக்க முடிவதைப்போல! தமிழுக்கு அவலம் எனக் கருதி அவசர கோலமாய்த் தீப்பாயும் நிலைவரை செல்கிற உண்மையான உணர்வாளர்கள் - இதனைத் தமது பொருளாதார மற்றும் அரசியல் இலாபங்களுக்காக முதலீடுகளாக ஆக்கிக்கொள்ளும் போலிகள் என்பன அத்தகைய இரு பிரிவுகள். ஆரம்பத்தில் உண்மை உணர்வாளர்களாய் இருந்து, கால ஓட்டத்தில் போலிகளாய் ஆனவர்களும் உண்டுளூ ஆரம்பம் முதல் இறுதி வரையில் ஆதாயமே குறியென இருப்பவர்களும் குறையவில்லை. முதல் உந்துதல் போலவே மடியும் வரை உண்மை உணர்வோடு வாழ்ந்தவர்களும் உண்டுளூ போலிகளே பயன்பெறும் அர்த்தமற்ற விவகாரம் இது என விழிப்படைந்து அனுபவ முதிர்ச்சியில் விரக்தியுற்று ஓதுங்குவோரே ஏராளம்!
தமிழகத்தைப் பொறுத்தவரை வர்த்தக நலனின் உந்துதலுடன் செயற்படும் போலிகளின் கஜானாவைப் பெருக்கவும் - அரசியல் வியாபாரிகளின் வாக்கு வங்கியை ஊதிப் பெருக்க வைக்கவுமே தமிழுணர்வு தூண்டப்பட்டுவரக் காண்கிறோம். மீனவர்களின் பிரச்சினையில் தமிழக மீனவர்களை ஆதரிக்க முனைந்தால் இலங்கை வடபிரதேச மீனவர்களைப் பகைக்க நேரும். அதற்காகப் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லைளூ புலம்பெயர் ஈழப்பற்றாளர்கள் தவறாகக் கருதிவிட்டால்தான் வெளிநாட்டுப் பயணங்கள் தடைப்பட்டு கஜானாவும் வற்றிப்போக நேரும்.
இந்தத் தமிழுணர்வாளர்கள் மீனவர்களின் உயிர்ப்பான போராட்டங்கள் குறித்து எந்த அக்கறையும் கொள்ளாமல், போலியான தமிழ்ப் பாதுகாப்பு முழக்கங்களுக்காய் இளம் இரத்தங்களைச் சூடேற்ற முயல்வது இத்தகைய குறுகிய மனப்பாங்கில் ஆதாயம் தேடுவதற்கானது என்பதில் இரகசியம் ஏதுமில்லை. அத்தகையவர்களின் போலித்தனங்களை விளங்கிக் கொண்டு தமக்கான விளம்பரத்துக்காக அவர்களைப் புலம்பெயர் நாடுகளுக்கு வரவேற்றுக் களிபேருவகை கொள்ளச்செய்யும் புலம்பெயர் கனவான்கள் - சீமாட்டிகளின் ஆசைகளும் மறைபொருள்கள் அல்ல. இத்தகையவர்களது பணப் பரிமாற்ற – புகழ்வெறி என்பவற்றுக்கு அப்பால் உயிர்ப்பான வாழ்க்கைப் போராட்டங்களை முன்னெடுக்கும் இந்தத் தெற்காசியப் பிரச்சினை என்பதை சரியாகப் புரிந்து கொள்வதென்பது வேறொரு தளத்துக்கானது.
ஐஐ
இலங்கைத் தமிழ் மக்கள் இந்த மண்ணில் சிங்களப் பேரினவாத மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படுவதற்கு சற்றும் குறைவற்றதாய்த் தமிழகத்தின் சூறையாடலுக்கான மேலாதிக்கம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளமையை வெளிப்படுத்துவதாக இந்த மீனவர் பிரச்சினை அமைந்துள்ளது. வாழ்க்கைப் போராட்ட நிதர்சனம் பட்டவர்த்தனமாய் உணர்த்தும் இந்த உண்மையைக் கனக்கப் படித்த யாழ்ப்பாண மூளை வீங்கிகள் விளங்கிக்கொள்ள முடியல்வதில்லை. வேறு தளங்களில் தமிழகம் எம்மை அபகரிப்பது பற்றிய உணர்வுகொள்ளாமலேதான் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
வேறெதையும்விட எமக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழகத்தின் தமிழுணர்வாளர்களே எமது விடுதலையின் முதல் எதிரிகள்! எமது பொருளியல் வளத்தைச் சுரண்டுவதை விடவும், எம்மீது கருத்தியல் மேலாதிக்கம் செய்து எமது மண்ணில் நட்புறவு கொள்ளவேண்டிய சொந்தச் சகோதரர்களிடையே மோதலை வளர்ப்பவர்களாய்த் தமிழகத் தமிழுணர்வாளர்கள் உள்ளனர். அவர்களது பிரதான வேட்டைக்காடாக புலம்பெயர் தமிழர்களது வளங்களும், மனங்களும் இருக்கின்றனளூ தமிழகப் பெரு முதலாளிகளின் ஏனைய சூறையாடல் களங்கள் இங்கே ஒட்டுமொத்தமான இலங்கை மண்ணையும் அபகரிப்பதற்கான மன இசைவையும் அவர்கள் ஏற்படுத்தித் தருகிறார்கள்.
இங்கே பேரினவாதச் சக்திகள் மிகுந்த சுயாதிபத்தியத்துடன் பல்வெறு நாடுகளோடு உறவாட இயலுவதாகத் தோற்றம் காட்டியபோதிலும், உண்மையில் இந்தியாவிடம் இலங்கை தனது சுயநிர்ணயத்தை இழந்து போயுள்ளது என்பதில் இரகசியம் ஏதுமில்லை. ஆக, சிங்கள மக்கள் ஏனைய சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வழங்க மறுத்து, இறுதியில் தம்மிடம் இருந்ததையும் கைநழுவ விட்டுள்ளனர்.
இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்கம் வெற்றி கொள்ளப்பட்டதில் அதிக ஆதாயத்தைப் பெற்றவர்கள் தமிழகப் பெரு முதலாளிகளே. இங்கே தமிழக மீனவர்களின் மேலாதிக்கச் சூறையாடலைப் பேசுகிற எமது தமிழபிமான அரசியல் கனவான்கள் இத்தகைய தமிழக - இந்தியப் பெருமுதலாளிகளது மேலாதிக்கத்தையோ, சூறையாடலையோ பற்றிப் பேசுவதில்லை. உண்மையில் தமிழக மீனவர்கள் எமது மீனவர்களைப் பாதிக்கும் சூறையாடலைச் செய்தபோதிலும், கடின உழைப்புக்கான அர்ப்பணிப்பையும் உடையவர்கள். அவர்களது தவறை உணர்த்தும் அதேவேளை, அதை விடவும் கொடிய சுரண்டலாளர்களான தமிழக - இந்தியப் பெரு முதலாளிகளையும், அவர்களது கருத்தியல் அடிவருடிகளான தமிழுணர்வாளர்களது கபடத் தனங்களையம் கண்டிக்க முன்வர வேண்டும். தமிழக மீனவர்கள் இத்தகைய பெரு முதலாளிகளுக்கும், தமிழுணர்வுக் கபட வேடதாரிகளுக்கும் எதிராகப் பல்வேறு போராட்டங்களை அவ்வப்போது மேற்கொண்டிருக்கிறார்கள். மக்கள் விடுதலைக்காகப் போராடும் தமிழக முற்போது சக்திகள் மட்டுமே அவர்களுடன் தோள் சேர்ந்து எமக்குமான நியாயத் தீர்வுகள் குறித்த அக்கறையுடையவர்களாய் இயங்கி வருகின்றனர். அந்த முற்போக்கு சக்திகள் தமிழுணர்வைப் போலிக் கபடதாரிகளிடம் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களும் அனந்தம்.
ஐஐஐ
இலங்கையினுள் ஆளும் சிங்கள இனம் ஏனைய தேசிய இனங்களை ஒடுக்கி மேலாதிக்கம் புரிகிறது. அந்த ஆளும் இனமும் இந்திய மேலாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுகிறது. இந்த மேலாதிக்கம் செய்யும் சக்திகளுக்குள்ளும் ஒடுக்கப்படுவோர் உண்டு. தமிழகம் உழைக்கும் மீனவர்களை ஒடுக்கப்பட்டோராயே நடாத்துகிறது. சாதிய மேலாதிக்கத்துக்கு எதிராக இந்தியா முழுமையிலும் தலித் மக்கள் போராடுவதை நிறுத்த முடிவதில்லை.
இத்தகைய அனைத்துச் சமூக சக்திகளிடையேயும் சுரண்டுவோர் - உழைப்போர் என்கிற வர்க்க பேதங்களும் உள்ளன. முன்னர், இந்த உழைக்கும் மக்கள் பல்வேறு சமூக வேறுபாடுகளையும் (இன – மத – சாதி பேதங்களை) கடந்து ஒன்றுபட வேண்டும் என்பதனை அதிகமாய் வலியுறுத்தியுள்ளோம். அது சாத்தியப்படாத வண்ணம் மேலாதிக்க சக்தி – ஒடுக்கப்படும் சமூகப் பிரிவு எனும் பேதம் இன்று வலுப்பெற்று வருவதனைக் காண்கிறோம்.
ஆயினும், இன்றுங்கூட இன, மத, சாதி பேதங்களைக் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டுப் போராடுவதன் அவசியம் இன்னும் அதிக கவனிப்பைப் பெறும் வகையில் வலியுறுத்தப்படுவது அவசியமானது. அதேவேளை மேலாதிக்க சக்தி – சமூக வர்க்கமாய்ச் சுரண்டப்படும் பிரிவினர் என்ற பேதம் நிதர்சனமாயுள்ள உண்மையையும் கவனங் கொள்வது அவசியமாகும். மேலாதிக்க சமூகத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள், தம்மவரால் ஒடுக்கப்படும் சமூகப் பிரிவினரது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கக் குரல் கொடுத்துத் தனக்கான ஐக்கியப்படும் சக்தியை அணிதிரட்டுவதன் வாயிலாக மட்டுமே தமக்கான விடுதலையை வென்றெடுக்க இயலும். அதேபொல ஒடுக்கப்படும் சமூகப் பிரிவிலுள்ள உழைக்கும் மக்கள் தம்மைச் சுரண்டும் தமது சமூக பெருந்தனக்காரர்களோடு தவிர்க்கவியலாமல் ஐக்கியப்பட நேர்ந்தபோதிலும் இனவாத – மதவாத – சாதியவாத மனப்பாங்குக்கு ஆட்படாமல், அனைத்து உழைக்கும் மக்களோடு ஐக்கியமுறுவதற்கு முதன்மை கொடுப்பது அவசியம். இவை குறித்துப் பேசுவது இன்னொரு அரசியல் பரிமாணமாக விரியத்தக்கது.
ஐஏ
அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் - சுரண்டலையும் தகர்க்கப் போராடும் மார்க்கத்துக்கான கருத்தியலையும், கோட்பாடுகளையும், போராட்ட வழிமுறைகளையும் வழங்கும் மார்க்சியம் - லெனினியம் பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற சிந்தனையை எம்மிடம் ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிந்தனைமுறை கால – தேச நிலவரங்களுடன் வளர்ச்சி பெற்று வருகிற ஒன்றாயிலும் உலகளவிலான மார்க்சிய அணியினரே போதிய சிரத்தையுடன் அதனை விருத்தியுறச் செய்வதற்குத் தவறியுள்ளனர்ளூ அவ்வாறு விருத்தியுறுத்த நெறிப்படுத்தும் முன்னுதாரணங்கள் மார்க்சிய இயக்க வளர்ச்சியில் இருக்கவே செய்கிறது.
பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் கொதிநிலை நீடித்த ஐரோப்பிய மண்ணில் ஊற்றெடுத்த மார்க்சியம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என முழக்கமிட்டபோது பட்டாளி வர்க்கப் புரட்சி வாயிலாகவே ஐரோப்பா முழுமையும் முதலில் சோஷலிஸத்தை வெற்றி கொண்டு, அதனால் குடியேற்ற நாடுகளாக்கப்பட்ட ஏனைய நாடுகளுக்கும் அதனை யதார்த்தமாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்தவகையிலான உலகப் புரட்சியின் சாத்தியம் இருபதாம் நூற்றாண்டின் நுழைவாயிலிலேயே தகர்ந்து போயிருந்தது.
அப்போது ஏகாதிபத்தியக் கட்டத்துக்கு முதலாளித்துவமும் பரிணமித்திருந்ததுளூ இன்னமும் ஐரோப்பிய மண்ணில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கொந்தளிப்பு நீடித்திருந்தது. புரட்சியின் மையம் கிழக்கு நோக்கி நகர்ந்து ருஷ்யாவில் தீவிரம் பெற்றிருந்தது. ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு எதிராக, பாட்டாளி வர்க்கத் தலைமையில் பல்வேறு வர்க்கங்களும் - ஜாரிஸ ருஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்டிருந்த தேசங்களும் ஐக்கியப்பட்டுப் போராடும் விருப்புடையனவாய் இருந்தன. இத்தகைய ஏகாதிபத்தியக் கட்டத்தில் உலகப் புரட்சியின் சாத்தியமின்மையை வலியுறுத்திய லெனின், சமனற்ற வளர்ச்சிப் போக்கில் முதலாளித்துவம் பலவீனமுற்றிருக்கும் தனியொரு நாட்டில் சோஷலிஸத்தை வென்றெடுக்க இயலும் எனக் காட்டினார். தனியே பாட்டாளி வர்க்கம் என்றில்லாமல் விவசாயிகளோடான ஐக்கியத்திலான புரட்சியைக் கையேற்க வேண்டுமென அழுத்தினார்ளூ ஒடுக்கப்பட்ட தேசங்களை அந்தப் புரட்சியில் ஐக்கியப்படுத்தும் வகையில் தேசிய இனங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உள்ளது என வலியுறுத்தினார். பாட்டாளி வர்க்கப் புரட்சியினதும், ஏகாதிபத்தியக் கட்டத்தினதும் வளர்ச்சி நிலைக்குரிய மார்க்சியத்தின் விருத்தியான லெனினியம் 'உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்' என வளர்ச்சி பெற்ற சுலோகத்தை வழங்கியிருந்தது.
அதன் பின்னர் பாட்டாளி வர்க்கப் புரட்சியினால் சோஷலிஸம் வென்றெடுக்கப்படுவது நடைமுறையில் நிகழவில்லை. முதலாளித்துவம் தனது தந்திரோபாயங்களில் ஏற்படுத்திய மாற்றங்களினால் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கொந்தளிப்பு ஐரோப்பாவில் பின்னடைவுகளுக்கு உள்ளானது. ஆயினும் புரட்சியின் மையம் இன்னும் கிழக்கு நோக்கி நகர்ந்து குடியேற்ற நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வாயிலாக சோஷலிஸத்தை வென்றெடுக்கும் வளர்ச்சி நிலையில் பாட்டாளி வர்க்கச் சிந்தனை புதிய வடிவப் பரிமாணத்தைப் பெற்றிருந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயி வர்க்கத்தைப் பிரதான சக்தியாக அணி திரட்டி பாட்டாளி வர்க்க சிந்தனை முறையில் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தபோது மா ஓசேதுங் சிந்தனை என்ற புதிய வடிவத்தை மார்க்சிய – லெனினியம் பெற்றிருந்தது. ஏகாதிபத்தியங்களின் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டிருந்த சீனத்துக்குப் பிரிந்து செல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமை பலவீனத்தை ஏற்படுத்திவிடும் எனச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கருதியது. மார்க்சிய – லெனினியம் வசனங்களில் முடங்கியதாயில்லாத விஞ்ஞானபூர்வ சிந்தனை முறை என்பதால், ஏகாதிபத்திய நாடாக இருந்த ருஷ்ய நிலைக்குரியதாக லெனின் வலியுறத்திய சுயநரிணய உரிமை இலக்கணத்தில் சீ.க.க. மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. பிரிந்து செல்லும் உரிமை அற்ற சுயநிர்ணய உரிமையைச் சீ.க.க சோஷலிஸ சீனத்தில் வெற்றிகரமாய்ப் பிரயோகித்து உலகின் முதல்நிலை நாடாக இன்று சீனா வளர்ச்சிபெறும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஏ
பட்டாளி வர்க்கப் புரட்சி வாயிலாக மட்டுமல்ல, பாட்டாளி வர்க்கச் சிந்தனை முறையை வழிகாட்டு நெறியாக வரித்துக்கொண்ட தேசிய விடுதலபை; போரட்டமூடாகவும் அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்துச் சமத்துவ சமூகத்தை வென்றெடுக்க இயலும் என்பதை உலக வரலாறு எடுத்துக் காட்டியுள்ளது. தேசிய இனப்பிரச்சினையையும் சுயநிர்ணயப் பிரயோகத்தையும் மேலும் வளர்ச்சிபெற்ற வரலாற்று நிலவரத்துக்கு அமைவாக மார்க்சியர்கள் விருத்தி செய்துள்ளனர்.
பிரதானமாய், தேசியம் முதலாளித்துவத்துக்குரியது என்ற லெனின் பார்வையிலிருந்து விடுபட்டு அனைத்து வர்க்கங்களிடமும் தேசிய உணர்வு உள்ளமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் தேசியம் சீன – சோவியத் பிளவில் வகித்த பாத்திரம் இன்றைய மீளவாசிப்பில் வெளிப்பட்டுவரக் காணலாம்ளூ கோட்பாட்டு விவாதத்தை இரு பாட்டாளி வர்க்க அரசியல் அணிகளும் தமக்கான தேசிய உணர்வு இல்லாதிருந்திருப்பின் சுமுகநிலையில் அணுகி, பாட்டாளி வர்க்க இயக்கம் இன்றைய பின்னடைவை ஏற்படுத்துவதிலிருந்து தவிர்த்திருக்கவியலும்.
எவ்வாறாயினும், எமது தேசியப் பிரச்சினையை எமது வரலாற்று செல்நெறியூடு மார்க்சிய – லெனினிய சிந்தனை முறைமையைப் பிரயோகித்துப் புதிய அணுகுமுறையில் கண்டறிய வழிப்படுத்துவதாய் இந்த வரலாற்று உண்மை அமைந்துள்ளமை தெளிவு. வர்க்கப் பிளவுறாமல் விவசாய வாய்ப்புப் பெற்ற இனமரபுக் குழு ஆளும் சாதியாக மாறி ஏனைய இனமரபுக் குழுக்களை ஒடுக்கப்படும் மற்றும் இடைச்சாதிகளாக மாற்றி சமூக வர்க்கங்களாய் ஒட்டுமொத்தமாக சுரண்டுவதாக எமது ஏற்றத்தாழ்வு சமூக வரலாறு அமைந்துள்ளது. ஒடுக்கப்படும் தேசங்கள் ஏகாதிபத்திய நாட்டினால் சமூக வர்க்கமாய்ச் சுரண்டப்படுவது போன்ற ஒடுக்கப்படும் சாதிகளும் சமூக வர்க்கங்களாய்ச் சுரண்டப்படுகின்றன.
அந்தவகையில் எமது பிராந்தியத்தில் மேலாதிக்க சக்தியாய் எம்மைச் சுரண்டும் இந்தியாவினுள் தலித் மக்கள் தமது ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டியவர்களாயுள்ளனர். அதேவேளை, தலித் பிரிவினரான தமிழக மீனவர்கள் எமது கடல் வளத்தின்மீது மேலாதிக்கம் புரிய அவாப்படுகின்றனர். அவர்களும் எம்மைப் போன்ற தமிழர்களே ஆயினும் அவர்கள் இந்திய தேசியத்துக்குட்பட்ட தமிழ்த் தேசியத்துக்குரியவர்கள். (அதனுள் மூன்றாவது தேசிய வடிவமாய் அவர்களுக்கான தலித் தேசியத்தையும் உடையவர்கள்.) எமது மீனவர்கள் தலித் தேசியமாய் யாழ் வெள்ளாளத் தேசிய மேலாதிக்கத்துக்கு அடங்கிப் போகாத சுயநிர்ணயத்தைக் கொண்டிருக்கும் அதேவேளை, சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக தமிழ்த் தேசியத்தின் சுயநிர்ணயத்தையும் வலியுறத்த வேண்டியவர்களாயுள்ளனர்.
எமது கடல்வளம் இந்திய மேலாதிக்கச் சுரண்டலுக்கு ஆட்படும்போது, தவிர்க்கவியலாமல் எமது தமிழ்த் தேசியம் இலங்கைத் தேசியத்தின் பகுதி என்பதை ஏற்கும் நிர்ப்பந்தத்தையுடையவர்களாய் உள்ளோம். இந்தியத் தேசியம் - தமிழகத் தமிழ்த் தேசியம் - தலித் தேசியம் என்பவற்றை போராடட்ங்களினூடே அவர்கள் பேணும் அதேவேளை எம்மை இவ்வகையில் இயங்கவியலாவகையில் மிக மோசமாய்ப் பிளவுபடுத்தியுள்ளனர். இந்தச் சதிக்கு நாம் தொடர்ந்து பலியாக வேண்டுமா? இந்தியாவினுள் தலித் தேசியம் - இனத் தேசியம் என்பன பிரிவினை உணர்வின்றி ஒன்றுபட்ட இந்தியத் தேசியத்தினுள் தமது சுயநிர்ணய உரிமையை விரிவுபடுத்த ஏற்ற போராட்டங்களை முன்னெடுக்கக் கற்றுக்கொண்டுள்ளதைப் போல எம்மால் இயலாதா?
நாம் அவ்வகையில் இயங்காற்றல் கொள்ள இயலாத வகையில் தமிழக - இந்திய மேலாதிக்கவாதச் சக்திகளின் கருத்தியல் ஆக்கிரமிப்புப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே உலக மேலததிக்கவாதத்தின் ஐந்தாம் படையாக இருந்து புலம்பெயர் தமிழுணர்வாளர்களும் எமது விடுதலைக்கு கேடு செய்கிறவர்களாயுள்ளனர். புலம்பெயர் தமிழர்கள் இனியும் இலங்கை அல்லது ஈழத்தமிழ்த் தேசியத்துக்குரியவர்களல்லளூ தத்தமது நாட்டு தேசியத்துக்கு உட்பட்ட தமிழ்த் தேசியத்தை வேண்டுமாயின் பெற்றுக் கொள்க - இந்திய தமிழ்த் தேசியம், இலங்கையின் ஈழத்தமிழ்த் தேசியம் என இங்கே வேறுபட்டு இருப்பதுபோல, இரத்தபந்தத்தால் எம்மீது உண்மைப் பற்று இருப்பின், நாம் எமக்கான விவாதங்கள் வாயிலாக வந்தடையும் தீர்வுக்குப் பங்கம் ஏற்படாத வகையில் உங்களுடைய செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
அதேவேளை புலம்பெயர் இனவாதிகளைக் காரணமாயக் காட்டி எமது சுயநிர்ணய உரிமையைச் சிங்களப் பேரினவாதம் மறுக்க இடமற்ற வகையில் நாம் பிரிவினையற்ற சுயநிர்ணயத்தையே வலியுறுத்துகிறோம் என அழுத்தியுரைப்போம். ஏனைய இனங்களோடு இணக்கமாய் வாழ்வதில் மிகச் சிறந்த பண்புகளுடைய சிங்கள மக்கள் பேரினவாதிகளின் சதிகளுக்கு ஆட்பட்டுச் சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பது இந்தப் பிரிவினை அச்சத்தினாலேயே. கடந்தகால வரலாற்றில் புலிக்கொடி ஏந்திய சோழர்களின் படையெடுப்பினால் சிங்கள பண்பாட்டின் அநுராதபுர – பொலனறுவ நகரங்கள் அழிக்கப்பட்டமை பற்றிய அச்சம் அவர்களிடம் எப்போதும் மீள் வலியுறுத்தப்படுவதுண்டு. பிரிந்து செல்லும் ஈழம் தமக்கு மீள இயலாத அழிவு என அவர்கள் அச்சங் கொள்வதை நியாயமற்றதெனக் கூறவியலாது.
அந்தவகையில் எமது பிரத்தியேக இருப்பையும், வரலாற்றுக் கட்டத்தையும் கவனங் கொண்டு தேசிய இனப்பிரச்சினை குறித்த ஆழமான விவாதங்களை முன்னெடுப்போம். பிரிந்து செல்லும் உரிமையற்ற சுயநிர்ணயம் குறித்து அழுத்தி வலியுறுத்தி உழைக்கும் சிங்கள மக்களது போராட்டங்களுடன் இணைந்து செயற்பட்டு எமது தேசிய இனத் தீர்வுக்கு வழிசமைப்போம். அனைத்துச் சிறு தேசிய இனங்களது சுயநிர்ணய அமைப்பாக்கங்களைச் சரியான முறையில் வடிவமைப்போம்ளூ சிக்கலான இந்த விவகாரத்தில் ஈடுபடாமல் பொதுப்படப் பேசிக் காலங்கழிப்பது தொடர்ந்தும் எமது அடிமைத்தனத்தை நீடிக்கவே வழிகோலும். புதிய தலைமுறை அதனைத் தகர்த்து வரலாற்றைக் கையேற்று மக்கள் விடுதலையை வெற்றி கொள்ளும் என்பது நிச்சயம்.
'உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, தலித் மக்களே ஒன்று சேருங்கள்'
நன்றி மல்லிகை 47 வது ஆண்டுமலர்
No comments:
Post a Comment