Tuesday, December 11, 2012

தமிழ் ஆய்வில் மார்க்சியத் திறனாய்வு எதிர்நோக்கும் பிரச்சனைகள்


தமிழ் ஆய்வில் மார்க்சியத் திறனாய்வு எதிர்நோக்கும் பிரச்சனைகள்                                                                                                                                                                                                                                                                                       -ந.இரவீந்திரன்

                                                               இங்கு எமது பிரதான பேசுபொருள் தமிழில் மார்க்சியத் திறனாய்வு எதிர்நோக்கும் சவால்கள் எனும்வகையில், அதற்கான வரலாற்றோட்டத்தை மிகச் சுருக்கமாகப் பார்த்து, இன்று முகங்கொள்ளும் பிரச்சனைகளை(அது கண்ணோட்டம் சார்ந்தது எனும்வகையில் அதனை) விரிவாகப் பார்ப்பது உகந்தது. மார்க்சியத் திறனாய்வு தமிழியலுக்கு வழங்கிய பங்களிப்பை முதல் பகுதி பேசும். இரண்டாம் பகுதியில் இந்தச் செல்நெறிக்கான நெருக்கடியை அலசுவோம். பிரச்சனைகளும், அதன் பேறான இடர்ப்பாடுகளிலிருந்து மீளக் கண்டடைந்து வரிக்கவேண்டிய பார்வைத் தெளிவும், அதன்வழியேயான செயற்பாட்டு வடிவமும் குறித்து இறுதியில் அலசுவோம்.
                -1-
சாதனைகள்
உண்மையில் மார்க்சிய ஆய்வுகள் தமிழியலில் பெறும் முக்கியத்துவத்துடன் ஒப்பிடும்போது மார்க்சிய நோக்கிலான விமரிசனங்கள் போதிய அளவு இல்லை எனும் குற்றச்சாட்டு கவனிப்புக்குரியது. இங்கு ஆய்வைக்காட்டிலும் விமரிசனமே அதிக அக்கறைக்குரியது. அதேவேளை, விமரிசனப் பார்வைக்கு உதவிய வகையில் மார்க்சிய ஆய்வுக்கண்ணோட்டமும் கவனிப்புக்குரியது.
தொ.மு.சி.ரகுனாதன், முத்தையா, வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரது மார்க்சியத் திறனாய்வு பிரயோகிக்கப்படுவதற்கு முன்னர் இலக்கியத்தை ரசனை அடிப்படையில் அணுகுவதே திறனாய்வாகக் கொள்ளப்பட்டது. அதற்கு அமைவாகக் கொண்டு கூட்டிப் பொருள் கூறுவதும் இதன்பாற்பட்டதாய் இருந்தது. ரசிகமணி டி.கே.சிதம்பரனார் முதல் ரசிகமணி கனகசெந்திநாதன் வரை இவ்வகைத் திறனாய்வில் கைதேர்ந்தவர்களாய் இருந்தனர். பழம்பெரும் இலக்கியப் பனுவல்களை மட்டுமன்றி நவீன படைப்புகளையுங்கூட அவற்றின் ரசனையை அடிப்படையாகக் கொண்டு அளவிடுவதோடு அமைதிகொள்வது இவர்களுக்குப் போதுமானதாக அமைந்தது.
இத்தகைய ரசனை மோகம் அன்று மேலோங்கிவந்த ஆதிக்கசக்திகளது இந்தியத் தேசியத்தை ஏற்புடையதாக்குவதாக அமைந்தது. இதனை முறியடிக்கும் எதிர்த்தேசிய மனப்பாங்கோடு எழுச்சியுற்ற திராவிட அரசியலும் மாற்றுப் பிரதிகளைத் திராவிட உணர்வோடு முன்வைப்பதாக அமைந்ததேயன்றி ரசனை மனப்பாங்கைக் கடந்து புதிய தளங்களுக்கு விரிவாக்கம்கொள்ள இயலவில்லை. முந்தியவர்களுக்கு கம்பராமாயணம் பிரதான பிரதியெனில் திராவிடர் இயக்கம் சிலப்பதிகாரத்தை முன்னணிக்குரிய படைப்பாக நிறுத்தியது. இவர்கள் போற்றும் நவீன படைப்புகளும் அடுக்கு மொழிகளுடன் அலங்கார நடையைப் போற்றுமளவுக்கு சமூகப் பிரச்சனைகளுக்கோ பெறுமானங்களுக்கோ அதிக அழுத்தம் கொடுத்ததில்லை(ஒப்பீட்டுரீதியில் பிராமணத் தேசியத்தைவிட திராவிடத் தேசியம் சமூக ஊடாட்டங்களை அதிகமாய் வெளிப்படுத்தியிருந்ததை வலியுறுத்துவது அவசியம்).
இத்தகைய போக்குகள் நிலவிய சூழலில் தொ.மு.சி.ரகுநாதன், முத்தையா, வானமாமலை போன்றோர் சிலம்பின் பின்புலத்தையும் - கம்பராமாயணம் இலங்கையைச் சோழர் ஆக்கிரமித்திருந்த காலப்படைப்பாக எவ்வாறு வெளிப்படக் காணலாம் என்பதையும் பட்டவர்த்தனமாய்க் காட்டுகிறவர்களாக இருந்தனர். பழம்பெரும் படைப்புகளையும் நவீன ஆக்கங்களையும் அவையவற்றுக்கான சமூகப் பின்புலத்தோடும் வரலாற்றுக்கட்டங்களோடும் இணைத்துப்பார்க்கும் ஆய்வு முறையியலை இந்த மார்க்சியத் திறனாய்வாளர்கள் முன்வைத்தனர். இதன்பேறாக நெசவுத் தொழிலாளர்களது வாழ்வையும் போராட்டங்களையும் பேசும் தோ.மு.சி.யின் "பஞ்சும் பசியும்" எனும் தொழிலாளி வர்க்க முதல் நாவல் தோன்ற இயலுமாயிற்று.
தமிழகத்தில் பிராமணத்தேசியம், திராவிடத்தேசியம் என்பவற்றின் வெளிப்பாடான ரசனைத் திறனாய்வுகளின் போதாமைகளை வர்க்கப்பார்வையில் மார்க்சியத் திறனாய்வாளர்கள் இவ்வகையில் வெளிப்படுத்தியபோது இளைய தலைமுறையினர் அதன்பால் ஈர்க்கப்பட்டு புதிய செல்நெறியொன்று வளர ஏதுவாயிற்று; இருப்பினும், வரலாற்றின் எழுச்சி நிலையில் இந்தியத் தேசியம்(பிராமணத் தேசியம்), தமிழ்த்தேசியம்(திராவிடத்தேசியம்) என்பனவே காணப்பட்டன. இதனோடு ஒப்பிடும்போது ஐம்பதாம் ஆண்டுகளில் இலங்கையில் தோற்றம்பெற்று வளர்ந்த மார்க்சியத் திறனாய்வு தமிழியலின் பிரதான செல்நெறியாக இங்கு வெளிப்பட்டது என்பது கவனிப்புக்குரியது. இதன் விமர்சன-ஆய்வியல் ஆளுமைகளாக வெளிக்கிளம்பிய கைலாசபதியும் சிவத்தம்பியும் தமிழகத்திலும்கூட முதன்மைக் கணிப்புக்குரியவர்களாய்த் துலங்கினர்.
எந்தவொரு படைப்பையும் எந்தவகை(மதத்துக்குரிய பிராமணத்தேசிய அல்லது தமிழ்த்தாய் வணக்கத்துக்கான திராவிடத்தேசியப்) புனிதங்களுக்குள் மட்டுப்படுத்திப் பார்க்காமல் பாட்டாளிவர்க்க உலக நோக்கில் பகுத்தாராய்ந்து அதன் சமூக உள்ளடக்கங்களை வெளிக்கொணர்வதாக மார்க்சியத் திறனாய்வு அமைந்தது. தமிழரின் முதற் பொற்காலம் எனத் திராவிடரியக்கம் புளகாகிதங்கொண்ட சங்க இலக்கியம் என்பது, தீயிடலும் கொலைகளும் மலிந்து ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் ஏற்றத்தாழ்வுச் சமூக முறை தோற்றம் பெற்ற படைப்பு வெளிப்பாடு எனக் காட்டினர் மார்க்சியத் திறனாய்வாளர்கள். பக்திப் பரவசத்துக்குரியது எனப் பிராமணத்தேசியம் கொண்டாடிய திருமுறைகளும் பிரபந்தங்களும் நிலப்பிரபுத்துவம் ஆதிக்கம்பெறப் போராடிய சமூகமாற்ற அரசியல் பண்பாட்டு இயக்கத்தின் இலக்கிய வெளிப்பாடுகள் எனக்காட்டினர்.
பாரதி முதல் வானம்பாடிகள் வரையானோர், சோமசுந்தரப் புலவர் முதல் முருகயன் வரையானோர் தேசிய உணர்வோடு நவீன இலக்கிய வெளிப்பாட்டை வழங்கியவாறினை- பாரதிதாசன் முதல் மஹாகவிவரை தமிழ்த் தேசியத்தை முற்போக்கு அடையாளங்களுடன் வெளிப்படுத்த முனையும்போது தேசியவாத முடக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களையும் மார்க்சியத் திறனாய்வு வெளிச்சம் போட்டுக்காட்டியிருந்தது. இந்த விமரிசனப் பட்டைதீட்டல் வாயிலாக மக்கள் இலக்கியம் விருத்திபெறுவதற்கு அடிகோலினர்.
இலங்கையில் ஐம்பதாம் ஆண்டுகளில் எழுச்சிபெற்ற முற்போக்கு இலக்கிய இயக்கம் தமிழ்ப் படைப்புலகத்துக்குப் புதிய பரிமாணங்களை வழங்குவதற்கு இந்த மார்க்சியத் திறனாய்வு பெரும் பங்களிப்பை நல்கியுள்ளது. மார்க்சியர்கள் வெறும் வர்க்கம் பற்றி மட்டுமே அக்கறை கொள்வர் என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கும் வகையில் சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை மார்க்சியர்கள் தலைமையேற்று இங்கே நடாத்தியுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் சிறுபான்மைத் தமிழர் மஹாசபை என ஒரே அமைப்பாக்கம் கொள்ளலும், சாதியத் தகர்ப்பை இலட்சியமாகக் கொள்ளத்தக்க ஆதிக்க சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் அங்கம் பெறத்தக்க தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமும் இங்கே உருவாக இயலுமாயிற்று. இதற்கும் சரி, எந்தவொரு சாதியும் எதிராகக் கருதப்படாமல் சாதியம் தகர்க்கப்படுவதே இலட்சியம் என வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களை முன்னெடுக்க இயலுமானதற்கும் சரி மார்க்சிய வழிகாட்டலே இங்கு அடிப்படையாக அமைந்தது என்பது அழுத்தியுரைக்க அவசியமான ஒன்று. சாதியவாதம் தலைதூக்காமைக்கு அதன் பாட்டாளிவர்க்க உலக நோக்கே அடிப்படைக் காரணமானது(அத்தகைய பார்வையற்று இந்தியாவில் பெரியாரியமும் அம்பேத்கரியமும் செயற்பட்டபோது, சாதிமுறைமையை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகத்தவறினர்; சாதியத்தைப் புரிந்துகொள்வதற்கு அவை பங்களிப்பை நல்கியபோதிலும், இந்த எல்லைப்பாட்டுடன் சாதியொழிப்புக்காக முனைந்தபோது) பிராமணியத்தை எதிரியாக முன்னிறுத்தவும், தவிர்க்கவியலாதவகையில் பிராமணர்கள் எதிரிகளாகப் பார்க்கப்படும் நிர்ப்பந்தம் நடைமுறையில் நிதர்சனமாயிற்று. ஆகவும் ஒவ்வொரு சாதியும் அருகிலுள்ள மற்றொரு சாதியை எதிரியாகக் காணும் நிலை ஏற்பட்டது. இதன்பேறாக, சாதியத் தகர்ப்புக் குறிக்கோள் திசைமாறிச் சாதியம் வலுப்பெறவே பெரியாரியமும் அம்பேத்கரியமும் வழிகோலின).
சாதியத் தகர்ப்புக்கான போராட்டங்களை இங்கே படைப்பாக்கம் செய்கையில் சாதியவாதம் மேற்கிளம்புமாயின் அதையுங்கூட மார்க்சியத் திறனாய்வு தோலுரித்துக் காட்டத் தவறியதில்லை. "பஞ்சமர்" முதல் "பஞ்சகோணங்கள்" நாவல்கள்வரை டானியல் படைப்பு முயற்சிகளில் சாதியவாதம் தலைதூக்குகிறது எனும் விமரிசனத்தை மார்க்சிய விமரிசகர்கள் முன்வைத்தனர். சாதியத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட அனுபவங்களை ஒரு கொம்யூனிஸ்ட்டாக அவர்களோடு பங்கேற்று வாழ்ந்து இயங்கிப் பட்டறிவு பெற்றவன் என்கிறவகையில் பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டத்தில் நாவல்களாக எழுதுகிறேனேயல்லாமல் சாதியவாத அடிப்படையில் அல்ல என மீண்டும் மீண்டும் டானியல் வலியுறுத்தத் தவறவில்லை. இருப்பினும் இந்த விமரிசனங்களில் உண்மையில்லாமலும் இல்லை; அதனை மனங்கொண்டு எவ்வகையிலும் சாதியவாதம் தலைதூக்காதவகையில் தனது சொந்தக்கிராமத்தின் சமூக அசைவியக்கப்போக்கை "கானல்" எனும் நாவலாக டானியல் படைப்பாக்கித் தந்தமையை அவதானிக்கலாம். அவரது உன்னத பங்களிப்பாக அந்த நாவல் அமைந்துள்ளது.
இலங்கையில் இவ்வகையில் மார்க்சியத்துக்கான பரிமாணத்தை ஏற்படுத்தித் தந்த அந்த இயங்காற்றலுக்குரிய இலங்கை மார்க்சியர்கள் பின்னர் பிரதான செல்நெறியாக வளர்ந்த தமிழினத் தேசியம் பற்றிய புரிதலின்றி இருந்தனர். தமிழகத்தில் சாதியத்துக்கு எதிரான போராட்டம் இங்குபோல் பிரதான நிலையில் கவனிக்கப்பட்டதில்லை. இதன்பேறாக இங்கே இனத்தேசியமும், அங்கே தலித்தியமும்(சாதித்தேசியமும்) மார்க்சிய இயக்கங்களுக்கு சவாலாக மாறி, எண்பதுகளின் புதிய எழுச்சிகள் மார்க்சியத்தைக் கேள்விக்குள்ளாக்குவனவாக அமைந்தன.
மரபுப்பிடிக்குள் கட்டுப்பட்டு பழைமை பேணும் பாரம்பையத்தில் மூழ்கியிருந்த தமிழ்ச் சமூகத்தையும் இலக்கியத்தையும் அதிர்வுக்குள்ளாக்கிய மார்க்சிய இயக்கம் இவ்வகையில் "பழைமையாகும்" நிலை எண்பதுகளைத் தொடர்ந்த செல்நெறியாக ஆனது; தலித்தியம், இனத்தேசியம், பெண்ணியம் என்பன எண்பதுகளைத் தொடர்ந்து பிரதான பேசுபொருள்களாயின. அறுபதாம் ஆண்டுகளில் பழைமைவாதத்துக்கு எதிரான மரபுப் போராட்டமும் தேசிய இலக்கியமும் பிரதான இலக்கிய விவாதப் பொருள்களாகும். இதன்பேறாக வாழ்வோடு சம்பந்தமின்றி இயற்கை எழிலைப் பாடுபொருளாகக்கொள்வதும் ரசனை மனப்பாங்கில் திழைப்பதும் தகர்க்கப்பட்டு, வாழும் சொந்த மக்களைப் பேசுபொருளாக்கும் படைப்பாக்கங்கள் எழுச்சிபெற்றன. பொதுப்படையான இலக்கியம் என்பதைக் கடந்து பிரதேசிய இலக்கியங்கள் - மண்வாசனைப் படைப்பாக்கங்கள் தோற்றம்பெற்றன. இதைச் சாதித்த மார்க்சிய இயக்கமும் புதிய போக்குகளின் வீச்சில் தன்னைப் புடமிடுவது அவசியமாயிற்று.
                                                          2
                                                     நெருக்கடி
எண்பதாம் ஆண்டுகளில் இலங்கையிலும் தமிழகத்திலும் மட்டுமல்ல, உலக அளவிலேயே மார்க்சிய இயக்கம் நெருக்கடியை முகங்கொண்டது. அறுபதுகளின் இறுதிக்கூறில் பிரான்சின் மாணவர் போராட்டங்கள், பாட்டாளி வர்க்கமல்லாத தலைமைச் சக்திகள் பற்றிப் பேசுகிற நிலையை உருவாக்கிற்று. அதற்கான நீடிப்பில் இங்கே, வர்க்கங்கள் பற்றிப் பேசுவது பொருளற்றது - இனத்தேசியம், தலித்தியம், பெண்ணியம் போன்றன பற்றியே இலக்கியங்களும் விமரிசகர்களும் சமூக இயக்கங்களும் கவனங்கொள்ள அவசியமேற்பட்டுள்ளது என வலியுறுத்தப்பட்டது.
எமது சமூக அமைப்பில் சாதிமுறை பெறும் முக்கியத்துவத்தை(கோட்பாட்டு அளவிலன்றி நடைமுறையிலேனும்) விளங்கிக்கொண்ட இலங்கையில் இனத்தேசியம் கவனிக்கப்படாமையும், தமிழகத்தில் சாதி இழிவுகளுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படாமையும் மார்க்சிய இயக்கங்களில் இருந்த தவறென்பதை ஏற்கனவே கண்டுள்ளோம். இதன்பேறாக, இங்கே இனத்தேசியம் யுத்த்மாக பரிணமித்தமையும் - தமிழகத்தில் தலித்தியவாதம் சாதி மோதல்களையும் சாதிக்கட்சிகளை வளர்த்தமையும் எத்தகைய வளர்ச்சிகளை ஏற்படுத்தின? முன்னர் மூன்று தசாப்தங்கள் மார்க்சியத் திறனாய்வு ஏற்படுத்திய சாதனைகளுடன் ஒப்பிடக்கூடியவாறு இதற்குரிய மூன்று தசாப்தங்களில் எதுவும் எட்டப்படவில்லை; மட்டுமல்லாமல் தோல்விகளும் பின்னடைவுகளுமே ஏற்பட்டன. இலங்கையில் யுத்தத்தின் தோல்வி வெளிப்படையானது. அவ்வாறே தமிழகத்திலும் தலித்தியம் தோல்வியுற்றமை குறித்து தலித் சிந்தனையாளர்களே இன்று விமரிசிக்க முற்பட்டுள்ளனர். தலித்தியத்தினால் குறைந்தபட்சம் தலித் சாதிகளையேனும் ஐக்கியப்படுத்த இயலவில்லை, ஓரடிகூட முன்னேற்றம் ஏற்படவில்லை, மதவாத-இனவாத சக்திகளோடு தலித் கட்சிகள் கூட்டமைப்பதைத் தடுக்க இயலவில்லை என்ற விமரிசனங்கள் தலித் சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
இலங்கையில் நாற்பதாம் ஆண்டுகளில் இருந்தே ஒடுக்கப்பட்ட(தலித்) மக்கள் மார்க்சிய வழிகாட்டலுடன் ஒரே அமைப்பாக ஒன்றிணைய இயலுமானதோடு, மதவாத இனவாத சக்திகள் எவற்றுக்கும் விட்டுக்கொடுக்காமல் மக்கள் விடுதலை என்ற இலக்கோடு அவை இயங்க முடிந்தமைக்கு வர்க்கப் பார்வை சிறப்பான பங்களிப்பை நல்கியிருக்கிறது. அதேவேளை இந்த நோக்குடன், வர்க்க இருப்பு-வர்க்கப்பிரச்சனை என்பவற்றைக் கடந்து, சாதி-தேசம் என்பவற்றின் இருப்பு இன்னொருவகையானது, அவ்வாறே பெண் ஒடுக்குமுறை வர்க்க பேதங்களுடன் மேலதிகமாயுள்ள இன்னொரு பரிமாணத்துக்குரியது என்பவற்றைக் காணத்தவறுகிற அவலம் இங்கும் நேர்ந்தது. மார்க்சிய இயங்கியல்- பொருள்முதல்வாதச் சிந்தனைமுறை என்பதை மறந்து ஏதோ சில முடிந்த முடிவான பெறுமானங்கள் மார்க்சியத்திடம் உண்டு என்ற தவறான முன்முடிவு காரணமாக எமது சமூக நிதர்சனங்களைச் சரியாக இனங்காண இயலாத தடைகள் எம்மிடம் உண்டு.
வர்க்கப்போராட்டம் ஏடறிந்த வரலாறு முழுமையிலும் இருந்துள்ளது; இதனை, இழப்பதற்கு எதுவுமற்றதான பாட்டாளி வர்க்கம் முடிவுக்குக் கொண்டுவரும். பெரும்பான்மையினரான பாட்டாளிகளின் உழைப்பால் பெருகிய மூலதன விருத்தியே முதலாளித்துவத்தின் அபார வளர்ச்சிக்கு அடிப்படை; அந்தவகையில், சமூகத்தால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திசாதனங்கள் ஒருசில முதலாளிகளால் அபகரிக்கப்பட்டுள்ள முறையற்ற சமூக நியதி இன்று நிலவுகிறது - அதனைத் தகர்த்து, சமூகப் படைப்பான உற்பத்திசாதனங்களைச் சமூகத்துக்குரியதாக்கும் பணியையே அரசுடைமையாக்கும் செயற்பாடு வாயிலாக பாட்டாளிவர்க்க அரசு நிறைவு செய்யவுள்ளது. சுரண்டல் நிலவிய காலம் முழுமையும், மிகச் சிறுபான்மையினரான சுரண்டலாளர்கள் மிகப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களை ஒடுக்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட கருவியே அரசு; அதனைத் தலைகீழாக்கி, சுரண்டலாளர்களான மிகச் சிறுபான்மையினரைப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்கள் சார்பாக ஒடுக்கும் அரை-அரசை நடைமுறையாக்கி, சுரண்டல் முடிவுக்கு வருகிறவரை பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தைப் பிரயோகித்து, பூரண பொதுவுடைமை சாத்தியமானதும் அரசு உலர்ந்து உதிர்ந்துபோக வகைசெய்து, மண்ணில் நல்ல வண்ணம் மாந்தர்கள் பரஸ்பர புரிந்துணர்வோடும் நல்லிணக்கங்களோடும் வாழ ஏற்றதான வர்க்கபேத ஒழிப்பு முயற்சியே பாட்டாளிவர்க்க முன்னணிப் படையான கொம்யூனிஸ்ட் கட்சியின் பணி என்பது மார்க்சியத்தின் அடிப்படை. தனது பங்களிப்பு எது என்பதைக் குறித்து மார்க்ஸ் பேசும்போது இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஆயினும், தொடர்ந்த ஆய்வு முயற்சிகளில்(குறிப்பாக, மூலதனம் பற்றிய ஆழமான தேடலில்) வர்க்கப் பிளவுறாத சமூக முறை குறித்து அவர் கண்டு காட்டியுள்ளார். ஐரோப்பாவில் இனமரபுக்குழுக்கள் வர்க்கங்களாகப் பிளவுற்று ஏற்றத்தாழ்வுச் சுரண்டல் சமூக அமைப்பாக்கம் நடந்தேறியது; அவ்வாறன்றி ஆசியாவில், முன்னேறிய இனமரபுக்குழுக்கள் மலாண்மை பெற்று சுரண்டுவதற்கு ஏற்றதாக ஏனைய இன மரபுக்குழுக்கள் ஒடுக்கப்பட்டன; அதன்பேறானதே சாதிகள் என்பது மார்க்ஸ் எடுத்துக்காட்டியிருந்த உண்மை. வேறு சந்தர்ப்பங்களில் ஆசிய உற்பத்திமுறையின் தனித்துவப் பண்புகள் குறித்துப் பேசியுள்ளார். ஆசியாவில் மதங்கள் பெறும் முக்கியத்துவம் குறித்தும், முகமது நபியால் மதம் வாயிலாக சமூகமாற்றம் ஒன்றைச் சாதிக்க இயலுமாயிருந்தது எப்படி எனும் கேள்வியையும் எழுப்பி, அதுகுறித்து ஆய்வு செய்யவேண்டுமென மார்க்ஸ் வலியுறுத்தியிருந்தார்.
இவற்றைத் தொடர்புபடுத்தி ஆய்வு செய்யும் அவகாசம் மார்க்சுக்கு அமையவில்லை. வர்க்கப்பிளவடைந்து,கூர்மையான அரசியல் புரட்சிகளூடாக சமூகமாற்றங்களைச் சாத்தியமாக்கி வந்த ஐரோப்பாவில் புத்திய சமூக சக்தியான பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தைச் சாதியமாக்கும் வாய்ப்பு இன்னும் இருந்தநிலையில், வர்க்கங்கள் குறித்தும் - அரசியல் புரட்சிகள் பற்றியும் மென்மேலும் ஆய்வுகளை விருத்தி செய்ய வேண்டியிருந்தமையால், சாதிகள் குறித்தோ மதங்கள் வாயிலாக(பண்பாட்டுப் புரட்சியூடாக) சமூக மாற்றச் சாத்தியம் குறித்தோ ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள இயலாமற்போயிற்று. அவரது எதிர்பார்ப்புக்கு அமைவாக ருஸ்யப்புரட்சி சாத்தியமாகியிருந்த போதிலும் அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுமையையும் பாட்டாளிவர்க்கப் புரட்சி சோசலிசமாக மாற்றும் என்ற எதிவுகூறல் நிகழவில்லை.
பாட்டாளிவர்க்கப் புரட்சி ஐரோப்பாவில் சுரண்டலை ஒழித்துக்கட்டும்போது குடியேற்ற நாடுகள் விடுதலை பெற்று அங்கும் சோசலிசத்துக்கான வாய்ப்பிருப்பதைக் கூறிய அதேவேளை, முன்னதாக அந்தக் குடியேற்ற நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள் வெற்றியீட்டத்தக்க சாத்தியத்தையும் மார்க்ஸ் கூறியிருந்தார். இருப்பினும், ஏகாதிபத்திய வளர்ச்சி ஏற்பட்டு லெனினிசப் பரிணமிப்பைப் பெற்ற நிலையில் தேசிய விடுதலைப் புரட்சிகள் நேரடியாக சோசலிசக் கட்டுமானங்களை ஏற்படுத்த இயலும் என்ற முன்முடிவை லெனின் வெளிப்படுத்தக்கூடியதாக இருந்த வளர்ச்சி நிலையை மார்க்ஸ் காண இயலவில்லை. அந்தவகையில் மார்க்சியத்தின் அடிப்படை கோசமாக "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்பது அமைய, அதன்பரிணமிப்பான லெனினிசம் "உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்" எனப் புதிய சூழல் மாற்றத்தில் சமூக மாற்ற சக்தியாக பாட்டாளிவர்க்கப் புரட்சியோடு தேசிய விடுதலைப் புரட்சியையும் இணைத்துக்காண வகையேற்பட்டது.
தேசவிடுதலைப் போராட்டம் வாயிலாக சோசலிசத்தைக் கட்டமைக்கும் நம்பிக்கையோடு 1945 இல் முதல் சுதந்திரப் பிரகடனத்தை ஹோசிமின் தலைமையில் வியட்நாம் பாட்டாளிவர்க்க முன்னணிப்படை முன்மொழிந்தது; தொடர்ந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளால் வியட்நாம் சிக்கல்களை எதிர்நோக்கியபோது 1949 இன் மக்கள் சீனப் பிரகடனம் பல சாதனைகளை எட்ட வாய்ப்பளித்தது. உலகின் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட சோசலிச சீனாவும், உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பையுடையதும் முதலாவது சோசலிச நாடுமாகிய சோவியத் யூனியனும் கோட்பாட்டுப் பிளவுற்று அறுபதுகளின் நடுக்கூறிலிருந்து சோசலிச முகாம் இருமுகப்பட்டபோது மார்க்சியம் ஆரொக்கியமான வளர்ச்சியை எட்டுவதற்குமாறாக, எரிந்த கட்சி-எரியாத கட்சி விவாதத்துக்குள் மாட்டுப்பட்டுப் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேர்ந்தது.
உண்மையில் மார்க்சியத்துக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக சோவியத்-சீனப் பிளவு அமைந்தது. சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சி வலது திரிபுவாதத்தை முன்னிறுத்தியபோது அதற்கு எதிராக மார்க்சிய-லெனினிசத்தைப் பாதுகாக்கும் கோட்பாட்டு விவாதத்தை முன்னிறுத்திய சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி காலவோட்டத்தில் அதிதீவிர அதிதீவிர இடதுசாரித் திரிபுவாதத்தைச் சரிவைச் சந்தித்தது. உலகநாடுகள் எங்கும் பாராளுமன்றம் வாயிலாக சோசலிசத்தை வென்றெடுத்தல் அல்லது வன்முறை வழிபாடு எனப் புரட்சிகர சக்திகள் பிளவுண்டு போயின. சோவியத் சார்பு-சீன சார்பு என்பன விகாரப்பட்டு ஒவ்வொருவரும் ருஸ்யப் புரட்சி அல்லது சீனப் புரட்சி பற்றிய வியாக்கியானங்களில் கைதேர்ந்தவர்களாக ஆகினரேயல்லாமல், தத்தமது நாட்டு புறநிலை மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சிகள் பற்றி ஆராய்வதில் அக்கறையற்றவர்களாயினர்; அந்த நாடுகள்போல இங்கில்லையே என்ற பிலாக்கணம் வேறு. சொந்தச் சமூக சக்திகள் பற்றிய புரிதலின்றி, ஏற்கனவே நடந்தேறிய அந்த நாடுகளின் புரட்சிகள் குறித்து வித்துவக் காய்ச்சல் விவாதம் புரிவோரால் தமது சொந்த நாடுகளில் சமூக மாற்றப் புரட்சியை எவ்வாறு முன்னெடுக்க இயலும்? ஓரளவுக்கு சாத்தியப்பட்ட சில நாடுகளின் சாதனைகளையும் அந்த நாடுகளின் விவாதமும் போட்டாபோட்டியும் முடக்கிப்போட்டது. இன்று தென்னமரிக்க நாடுகளின் மார்க்சிய அணிகள் இப்பின்னடைவிலிருந்து மீண்டு புதிய வளர்ச்சிகளை எட்டும் நம்பிக்கை ஒளிக்கீற்றுகளைக் காட்டி நிற்கின்றன. தவிர, மார்க்சியத்திலிருந்து விலகி முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் படுமோசமான பின்னடைவுகளையே தந்த அனுபவம் காரணமாக, மீண்டும் மார்க்சிய-லெனினிசத்தைச் சரியான புரிதலுடன் கற்றுக்கொண்டு தத்தமது நாட்டு நிதர்சன நிலைமைகளுக்கு ஏற்ப அதனை எவ்வாறு பிரயோகிப்பது எனும் தேடலுக்குரிய ஆரோக்கியமான நிலை உலகெங்கும் இன்று ஏற்பட்டுவரக் காண்கிறோம்.
                    -3-
  பிரச்சனைகளும் தீர்வுகளும்
மார்க்சியத்தை மிகுந்த பற்றுதியுடன் கையேற்று, இயலுமான தளங்களில் பல்வேறு போராட்டங்களை நடாத்தி வீறுமிக்க போர்க்குணத்தையும் அர்ப்பணிப்புகளையும் வெளிப்படுத்தியதன் வாயிலாக செழுமைமிக்க வரலாற்று அனுபவங்களை இலங்கை, இந்தியா போன்ற எமது நாடுகளின் மார்க்சிய முன்னோடிகள் எமக்கு வழங்கிச்சென்றுள்ளார்கள். அதன் இணை வளர்ச்சியாகப் புலமைத் தளத்திலும் இலக்கியக் களத்திலும் மார்க்சியத் திறனாய்வு ஆரோக்கியமான வளர்ச்சி நிலைகளைச் சாத்தியமாக்கியிருக்கிறது. குறிப்பாக, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சாதியத் தகர்ப்புப் போராட்ட அனுபவங்கள் எமது சமூக அமைப்பைப் புரிந்துகொள்வதில் இரட்டைத் தேசியக் கோட்பாட்டை முன்னிறுத்தியுள்ளது.
சாதிப்பிரச்சனை அடிப்படையில் தேசியப் பிரச்சனை எனக் கைலாசபதி காட்டியிருந்தார். தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம் என்றவர்கள் அந்தச் சாதியப் பிரச்சனைக்கு எதிர்முகம் காட்டியபோது எமது தேசியம் ஆளும் சாதியினதும் ஒடுக்கப்பட்ட சாதியினதும் எனப் பிளவுபட்டிருக்கும் யதார்த்தத்தை உணர்த்தியது. ஈழத் தமிழ்த் தேசிய முன்னெடுப்பு ஆளும் சாதித் தேசியமாக(யாழ் வெள்ளாளத் தேசியமாக) வடிவம் பெற்றமையால் ஐக்கியப்படுத்த வேண்டியவர்களைப் பகைவர்களாக்கிக்கொண்டு, இறுதியில் அவலமான முடிவைச் சந்திக்க நேர்ந்தது. இந்த வரலாற்றுப் படிப்பினையின் பேறானதே இரட்டைத் தேசியக் கோட்பாடு.
இந்த அனுபவத்தோடு இந்திய சுதந்திரப் போராட்ட கால வரலாற்றை மீட்டுப்பார்க்கலாம். இந்திய கொங்கிரஸ் கட்சி உதயமானபோது, அதனைப் பிராமண தேசியமாய் ஜோதிராவ் புலேயும் அயோத்திதாசரும் அடையாளப்படுத்தியமையை இரட்டைத் தேசியக் கோட்பாட்டின் அடிப்படையில் புரிந்துகொள்ள முடியும். முப்பதாம் ஆண்டுகளில் அம்பேத்கர் முன்னெடுத்த தலித் அரசியலையும் பெரியாரின் திராவிடரியக்கத்தையும் எதிர்த் தேசியமாக விளங்கிக்கொள்வோம். இவ்வகையில் முன்னெடுக்கப்படும் இரட்டைத் தேசியக் கோட்பாடு ஆரோக்கியமான விவாதப் பொருளாக இன்று ஆகியுள்ளபோதும் நடைமுறைப் பிரயோகத்துக்கான சக்தியெனும் வகையில் மார்க்சியக் கட்சிகள் இதனைப் பாராமுகமாக ஒதுக்கிவைத்து மார்க்ஸ், லெனின், மாஓ சேதுங் போன்றோரது வசனங்களைப் பாராயணம் செய்வதிலேயே காலங்களிப்பதைக் காண்கிறோம்.
வர்க்கப்பிளவடைந்த ஐரோப்பாவின் தேசியக் கட்டமைப்பைப் போலன்றிச் சாதிச் சமூகத்தில் தேசியம் பிளவடைந்துள்ளது என்பதை மார்க்சிய மூலவர்கள் எழுதிவைத்துவிட்டு போகவில்லைத்தான்; புனிதநூலில் கண்டுள்ளவாறு ஒழுகுவதற்கு மார்க்சியம் இன்னுமொரு மதமல்ல. மார்க்ஸ், லெனின் போன்றோரது வசனங்களில் நேரடியாக இல்லாத போதிலும் மார்க்சியச் சிந்தனை முறை எமது சமூகங்களில் ஆதிக்க சாதி-ஒடுக்கப்பட்ட சாதித்தேசியங்களாகப் பிளவுபட்ட யதார்த்த நிலையைக் கண்டுணர வழிப்படுத்தி, இரட்டைத் தேசியக் கோட்பாட்டை வந்தடைய ஆற்றுப்படுத்துவதாய் அமைந்துள்ளது. ஆசிய உற்பத்திமுறை என்பது இனமரபுக்குழு மேலாண்மையால் சுரண்டலைச் சாத்தியமாக்கி சாதி அமைப்புத் தோற்றம்பெற்றதன் பேறு என மார்க்ஸ் கண்டு காட்டியபோதே, வர்க்க ஒடுக்குமுறை மட்டுமன்றி சமூக வர்க்கமாக ஒடுக்கப்படுதலும் மற்றொரு நியதி என வெளிப்படுத்தியிருந்தார். சமூக வர்க்கமாய்ச் சுரண்டப்படுகின்ற ஒடுக்கப்படும் தேசம் விடுதலைப் போராட்ட வெற்றிவாயிலாக சோசலிசப் புரட்சியை சாத்தியமாக்க இயலும் என லெனின் காட்டியபோது எமது சமூக அமைப்புச் செல்நெறிகளைப் புரிந்துகொள்ளும் இன்னுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார்.
மார்க்ஸ் ஆய்வுக்குட்படுத்த விரும்பிய முகமது நபி குறித்த பிரச்சனை, சாதியச் சமூகத்தில் காணப்படும் இனமரபுக்குழுத் தொடர்ச்சியானது தமக்கேயுரித்தான பண்பாட்டுக் கோலங்களில் சாதிக்குச் சாதி வேறுபாடு நிலவுதல் மற்றும் பண்பாட்டு நீடிப்பு நிலவுகிற காரணத்தால் ஆசிய உற்பத்திமுறை எனும் வேறுபட்ட கட்டமைப்பு பண்பாட்டுப் புரட்சிகள் வாயிலாகவே சாத்தியமாகும் சமூக அமைப்பு மாற்றங்களுக்கான வேறுபட்ட புரட்சியின் வடிவம் ஒன்று பற்றிக் கருத்துரைக்க வழிகோலியிருக்கும். அந்த முடிவினை மார்க்ஸ் கூறாதபோதிலும், அவர் எழுப்பிய வினாவும் தொடக்கிவைத்த சிந்தனை முறைமையும் எமக்கான சமூக மாற்ற வடிவம் பண்பாட்டுப் புரட்சி வகைப்பட்டது என நாம் கண்டடைய வழிப்படுத்துகிறது.
அரசியல் தீவிரத்துடன் இயங்கும் கட்சி அணிகள் கிரேக்க-ரோம் புரட்சியிலிருந்து பிரான்சிய-ருஸ்ய-சீனப் புரட்சிகள் வரையானவை குறித்த கற்றலுக்கு அழுத்தங்கொடுக்கும் அவசியம் ஏற்படுத்தியுள்ள தோற்ற மயக்கம் காரணமாக வர்க்க இருப்பை மட்டுமே பார்த்து சாதியமைப்பின் பிரத்தியேகத் தன்மை குறித்தும், இதன் மாற்றியமைத்தலுக்கு பண்பாட்டுப் புரட்சி அவசியம் என்பதையும் காண இயலாதவர்களாயுள்ளனர். புலமைத் தளத்திலும் பண்பாட்டுக்களங்களிலும் இயங்குவோருக்கு அத்தோற்றமயக்கத்திலிருந்து மீண்டு எமது நிதர்சனத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகம். அவ்வாறு விளக்கம்பெற்று புதிய மார்க்கத்தை வகுத்துக் காத்திரமான செயலாற்றலைச் சாத்தியமாக்கி ஏற்படும் அதிர்வினால் கட்சிகளும் தோற்றமயக்கப் பின்னடைவைத் தகர்த்துக்கொண்டு புதிய வரலாறு படைக்கும் ஆற்றல் கைவரப்பெற இயலும்.
மார்க்சியக் கருத்தியல் உயிர் எனில், அதன்வழிநின்று சமூகமாற்றத்தை வென்றெடுக்கும் கட்சி அமைப்பு உடலாகும். புத்தூக்கம் பெறும் உயிர்த்துடிப்பு இல்லையெனில் உடல் செத்த பிணமாகும், அல்லது அந்நிலை நோக்கிச் செல்லும் நோய்க்கூறுக்குரியதாகும். அந்தவகையில், சேடமிழுக்கும் நோய்க்கூறுடன் வறட்டுச் சுலோகங்களைப் பாராயணம் செய்வோரை உயிர்த்துடிப்புமிக்க புதிய வளர்ச்சிக்கு இட்டுவர ஏற்ற பண்பாட்டு இயக்கங்கள் இங்கே உடனடி அவசியமாகும்.
கட்சி அமைப்புத் தொடர்பில் மார்க்சியத்துக்கு புது இரத்தம் பாய்ச்சும் தென்னமெரிக்க மார்க்சியர்கள் ஆரோக்கியமான விவாதங்களை முன்வைத்து, ஏற்ற புதிய மாற்றங்களையும் சாத்தியமாக்கி வருகின்றனர். ஜாரிஸ ருஸ்யாவின் கொடுங்கோலாட்சிச் சூழலில் வடிவமைக்கப்பட்ட கட்சி வடிவம், குறைந்தபட்ச ஜனநாயகம் நிலவும் காலத்தில் அப்படியே பின்பற்றத்தக்கதல்ல என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பண்பாட்டுப் புரட்சியைப் பிரதான வடிவமாகக் கொண்டுள்ள எமது சூழலுக்கு அமைவான கட்சி அமைப்புக் குறித்து எமக்கு மேலும் விரிவான ஆய்வுகள் அவசியமாகும். அதனை நடைமுறை அனுபவம் வாயிலாகக் கண்டறிய ஏற்றதாக, சாத்தியமான புதிய பண்பாட்டுத் தளங்களைக் கட்டமைக்க ஏற்ற காலம் முழுதாய்க் கனிந்துள்ளது.ஜீவநதி 2012

No comments:

Post a Comment