Thursday, October 24, 2024
பாபாசாஹேப் அம்பேத்கர்
தலைமையேற்று முன்னெடுத்த
‘முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்’
என்ற வரலாற்றுத் தடம் -
மகத்தான மஹத் போராட்டம்
மிகமிக அற்புதமான படைப்பாக்கமாக ஆனந்த் டெல்டும்டே அவர்களால் மஹத் எழுச்சி நூலாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தின் வழியாக தமிழில் கமலாலயன் வழங்கியுள்ள இந்த நூல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு!
இன்னும் ஐந்து வருடங்களில் மஹத் போராட்டம் நூற்றாண்டைக் காண உள்ளது. நிறைவுரையாக 506 ம் பக்கத்தில் “தலித் மக்களுக்கு மஹத் ஒரு மகோன்னதமான தருணத்தை ஐயத்திற்கு இடமின்றி நிறுவியிருக்கிறது. ஆனால், அதே சமயம்…” என அந்தப் போராட்டத்தின் பலம்-பலவீனங்கள் அனைத்தையும் தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர். குறிப்பாக அரசு பற்றிய தெளிவீனம் - தொடர்ந்து அரசைச் சார்ந்திருக்கும் இயக்கமுறையைத் தொடக்கி வைத்தமை என்பன விமரிசனத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதனை அவதானிக்கலாம்!
இத்தகைய விமரிசனக் கண்ணோட்டத்தை கடந்த கால வரலாற்றின் மீது பிரயோகிப்பது அவசியம்; அதன் வாயிலாகவே எதிர்காலச் செயற்பாட்டைத் தவறற்ற வகையில் முன்னெடுக்க இயலும் என வலியுறுத்தும் ஆசிரியர்,
இது எந்தவகையிலும் வரலாறு படைத்த அன்றைய சாதனையாளர்களை மதிப்பிறக்கம் செய்வதாகாது எனவும் எடுத்துக்காட்டுகிறார்!
மாறாக, அந்த முன்னோடிகளை வழிபாட்டுக்கு உரியவர்களாக ஆக்குவதே அவர்களுக்கும் வரலாற்றுக்கும் செய்யும் மிகப்பெரும் துரோகம் என இடித்துரைப்பார் ஆனந்த் டெல்டும்ப்டே!
இந்தப் போராட்டத்தை வடிவப்படுத்தித் தொடக்கிவைத்த (பாபாசாஹேப் அம்பேத்கரை வற்புறுத்தித் தலைமை ஏற்க வைத்த) தோழர் ஆர்.பி. மோரே அவர்கள் அந்த நிகழ்வுப் போக்குகள் அனைத்தையும் தெளிவுற 1963-64 ம் ஆண்டுகளில் எழுதி இருந்தார்; சிறுநூலுக்கான அந்தப் பகுதியும் ஆனந்த் டெல்டும்ப்டேயின் நூலுக்கான ஒரு பகுதியாக இடம்பெற்று உள்ளமை சிறப்பம்சம். தோழர் மோரே தொடர்ந்து பாபாசாஹேப் அம்பேத்கருடன் இயங்க இயலாமல் கொம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்பட்டவர்; இந்த விலகலை (வளர்ச்சியை) பாபாசாஹேப் விருப்புறுதியுடன் ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் நட்புணர்வுடன் - அதனை ஏற்றுத் தட்டிக்கொடுத்து நட்புறவைப் பேணியவராக வாழ்ந்தார் என்ற பதிவையும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக இயங்கிய தோழர் மோரே தந்துள்ளார்.
அந்தப் போராட்டம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் இந்த நூல் உள்வாங்கி ஆய்வுபூர்வமாக (படிப்பதற்கு சிரமமற்ற வடிவில்) தந்துள்ளது. போராட்ட வரலாற்று பக்கங்கள் விரித்துரைக்கப்பட்ட பாங்கு பாபாசாஹேப் அம்பேத்கரை வழிபாட்டு உணர்வுடன் ஆசிரியர் முன்வைக்கிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியமை மெய்; அந்த வெளிப்பாடு தவிர்க்கவியலாதது - சரியானதே - என்ற புரிதலை “மஹத்தைப் பிரதிபலித்தல்: பின்னோக்கிப் பார்த்தலும் முன்னோக்கி நகர்தலும்” என்ற இறுதி அத்தியாயம் தெளிவுபடுத்திவிடுகிறது. அந்த முதல் தொடக்கம் பற்றிய தயவுதாட்சண்யமற்ற முழுமைப்பட்ட விமரிசனம் இந்த அத்தியாயத்தில் முழுமையாக (எந்த விடுபடலும் அற்ற பரிபூரணத் தன்மையுடன்) முன்வைக்கப்பட்டு உள்ளது.
தலைமையைச் சார்ந்திருத்தல், தலைமையின் வர்க்கப் பார்வையும் வர்க்கக் குணாம்சமும் முழு இயக்கத்தையே குறுகத் தறிக்க இடமளித்தல், இன்றுவரை குட்டிமுதலாளி வர்க்கப் பண்புடன் தலித் அரசியல் தொடருதல், தூலமான பிரச்சினைகளை விடுத்து அரூபங்களில் - அடையாளங்களில் மட்டுப்பட்டு இருத்தல் … எனப் பலவும் பேசப்பட்டுள்ளது.
பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் தலித் அரசியல் முன்னெடுக்கப்படுவதற்கு,
மகத்தான (முதலாளித்துவச் சிந்தனை வரம்புக்குள் இருந்தபோதிலும்) புரட்சிகரமான தலித் எழுச்சி முன்னோடியாகத் திகழ்ந்த அம்பேத்கரது வகிபாகத்தை எவ்வகையில் உள்ளெடுக்க இயலும் - வேண்டும்
என்கிற புரிதலை வந்தடைவதற்கு
இந்த நூல் அனைவராலும் படிக்கப்படுவது மிகமிக அவசியம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment