Monday, November 26, 2012



தோழர் மணியம் 





நவம்பர் 27 இல் பதிவாகும் ஒக்டோபர் 21

 முந்திய சந்திப்பில் ஒக்டோபர் 21 எழுச்சி குறித்த பதிவொன்று பேசுபொருளாயிருந்தது. வேறு பல வேலைகளின் காரணமாக இடையில் எமது உரையாடல் தடைப்பட்டிருந்தது. மீண்டும் முக்கியத்துவம்பெறும் திகதியொன்றில் இந்தச் சந்திப்பு. தமக்கு ஊட்டமளிக்கும் எதிர் இனவாதம் ஒன்றை அவாவும் இனவாத சக்திகளுக்கு இந்த நாள் வேறு பொருள்தரும். மக்கள் விரோதமாக முனைப்படைந்த அந்த 'கார்த்திகைக் கொடுங்கனவு' வரலாற்று ஏட்டிலிருந்து விரைவில் மறக்கப்பட்டதாகிவிடும்(தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய பல்வேறு அமைப்புகளின் போராளிகளோடு விடுதலைப் புலிகள் அமைப்பில் போராடியவர்களும் ஒட்டுமொத்தமாக மாவீரர்களாக நினைவுகூரப்பட வேண்டும்; அது பாசிச வழிப்படுத்திய ஒரு பிற்போக்குத் தலைவரின் பிறந்த நாளாக இருக்கப்போவதில்லை). மாறாக, மக்கள் விடுதலையை நேசிக்கும் பொதுவுடமைவாதிகளுக்கு இந்தத்தினம் புரட்சிகர உணர்வை புத்தாக்கம் செய்யத் தூண்டுவதாக இருக்கும். ஒக்டோபர் 21 எழுச்சியை நினைக்கும் போதெல்லாம் கிளர்ச்சியூட்டும் முக்கியத்துவம்மிக்க ஆளுமையான கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களது இதயத் துடிப்பு அடங்கிய நாள் 1989 இன் நொவெம்பர் 27 ஆகும்.
சண் ,மணியம் 
இங்கு அவரோடான ஊடாட்டத்தில் இன்றைய சூழலில் மேற்கிளம்பும் நினைவலைகளைப் பேசிக்கொள்வோம். பத்துவருடங்களின் முன்னர் மணியம் தோழரின் மூத்த மகன் ஒரு விடயத்தைச் சொன்னார்; "அப்பா, சண் தலைமையிலிருந்து விலகியது தனது மிகப்பெரும் தவறு" என்று சொன்னதாக அவர்(சத்தியராசன்) கூறியபோது மிகுந்த கோபாவேசத்தோடு மறுப்பைத் தெரிவித்தேன். "வேறு வடிவத்தில் சொல்லியிருக்கக் கூடியதை இவ்வகையில் தவறாகப் பொருள்கொண்டு சொல்லாதீர்கள்" என்றேன். பின்னர் ராசன் விபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்தும் நாலைந்து வருடங்கள் கடந்தோடிய நிலையில் மணியம் தோழரின் இளைய மகன் சத்தியகீர்த்தியும் அதேவிடயத்தைச் சொன்னார்; முன்னதாக ராசன் சொன்னதை நான் மறுத்திருந்தது கீர்த்திக்குத் தெரியாது.
இருவரும் ஒரேவிடயத்தைக் கூறிய நிலையில் அவர் இந்தப்பொருளில் கூறியிருக்க முடியாது எனத் தொடர்ந்து என்னால் கருத இயலவில்லை. பொதுவாகவே கொம்யூனிஸ்ட் கட்சி காலத்துக்குக் காலம் பிளவுபட்டு மக்களைவிட்டுத் தூரப்பட்டுப்போன தவறை இளைத்துவிட்டோம் என்று என்னோடும் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அந்தவகையில் தனது அரசியல் செயற்பாட்டு அனுபவங்களை "ஒரு கொம்யூனிஸ்ட்டின் சுயவிமர்சனம்" என்பதாக எழுதவேண்டும் எனக்கூறிக்கொண்டிருந்தார். எழுத முன்னர் அவரே 'காலம் ஆகினார்'. அந்தக் கடந்த காலத்தவறில் தனதுமான பங்கை சுயவிமர்சனமாக முன்வைக்கும் நினைவே சண் தன் அரசியல் அனுபவங்களை 'ஒரு அப்பழுக்கற்ற கொம்யூனிஸ்ட்டின்' வாழ்க்கை போல எழுதியிருந்த காரணத்தால்தான். சண் மீது மிகுந்த மதிப்பு அவருக்கு இருந்தபோதிலும், திரிபுவாதத்துக்கு எதிராக வீறுடன் முன்னேறிய புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் கட்சி பல பிளவுகளைச் சந்திக்க சண்ணே காரணமாக இருந்தார் என்பதைப் பல சந்தர்ப்பங்களிலும் அவர் கூறியிருக்கிறார்.
மணியம்,டானியல்,சிவதாசன் 

                                                     பிரேமலால், கார்த்திகேசன், வி.ஏ.கந்தசாமி ஆகியோர் 1972 இல் பிளவடைந்தபோது அவர்களது அரசியல் நிலைப்பாடு சரியாகவும் ஸ்தாபன அணுகுமுறை தவறாகவும் இருந்தது; தனது அரசியல் வறட்டுத்தனங்களை சுயவிமர்சனத்தோடு சண் ஏற்று ஜனநாயகப் பண்பைப் பேணியிருந்தால் அந்தப்பிளவைத் தவிர்த்திருக்க இயலும். அதன்பின்னராவது சண் வறட்டுவாதத்தைக் கைவிட்டு வெகுஜன அணிதிரட்டலுக்குரிய கட்சிக் கட்டமைப்பைப் பேணுவார் என்ற எதிர்பார்ப்புப் பொய்த்துப்போனது. தேசிய இனப்பிரச்சனை தொடர்பில் அவர் "தொழிலாளி" பத்திரிகைக்கும் பிரசுரங்களுக்கும் எழுதிய ஆக்கங்கள் பல தடவை விவாதத்துக்கு உட்பட்டது. தமிழினம் தேசிய இனமல்ல எனத் தொடர்ந்தும் எழுதி வந்தார்; தவிர்க்கவியலாதநிலையில் 'தேசிய இனமாக வளர்ந்து வருகிறது' என்று மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது.
தேசிய இனமல்ல என்பதனூடாக சுயநிர்ணய உரிமையை மறுப்பதில் அவர் பிடிவாதமாக இருந்தது சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதுசார்ந்ததே; புறநிலை யதார்த்தம் குறித்த ஆய்வோ, ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றின் மறுக்கப்படும் உரிமைகள் குறித்தோ அவற்றை வென்றெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியோ எந்தத் தேடலும் அவருக்கு அவசியமற்றதாக இருந்தது.
தர்மலிங்கம்,மணியம் 
அத்தகைய சூழலில் மூன்றாமுலகக் கோட்பாடு விவாதத்துக்கு வந்தது. பல சந்தர்ப்பங்களில் மாஒ சேதுங் மூன்றுலகக் கோட்பாட்டு அணுகுமுறையில் நாட்டுக்கும் நாட்டுக்கும் - மக்களுக்கும் மக்களுக்கும் - கட்சிக்கும் கட்சிக்கும் - இடையிலான உறவை அணுகியமை பற்றிச் சண் அறியாதவரல்ல. தேசிய இனப்பிரச்சனையில் மக்கள் நலன் பற்றி எந்தத் தேடலும் அற்று இருந்தது போலவே, சர்வதேச விவகாரங்களில் நிதர்சனத்தைக் காணத்தவறி, தன்னைப் பெரும் புரட்சியாளராகக் காட்டும் அவதியில் மூன்றாம் உலகக் கோட்பாட்டுக்கு எதிராக கருத்துரைக்க முனைந்தார். முன்னர் இதுபோன்ற கருத்துப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் போலன்றி உட்கட்சிப் போராட்டமாக தொடர்ந்து விவாதித்து இறுதியில் சிறப்பு மாநாடு வரை போராட்டம் உச்சம்கண்டது. தமிழ் உறுப்பினர்களில் மிகமிகப் பெரும்பான்மையினர் மூன்றுலகக்கோட்பாட்டை ஏற்றனர்; ஓரிருவர் தவிர்ந்த ஏனைய சிங்கள உறுப்பினர்கள் சண் தலைமையைச் சரியென ஏற்றனர். ஆயினும், மூன்றுலகக் கோட்பாட்டை நிராகரிப்பதாக பகிரங்கப்படுதுவதில்லை என முடிவானது.
அமிர்தலிங்கம் ,மணியம் 
தன்னிச்சையாக இயங்கும் தனது இயல்புப்பிரகாரம் கட்சி முடிவைமீறி சண் மூன்றுலகக் கோட்பாட்டைக் கட்சி எதிர்ப்பதாக அறிக்கைவிட்டார். இதன்பின்னரும் அவர் கூட்டு முடிவை முன்னெடுக்கும் புரட்சிகரக் கட்சிக்குத் தலைமை தாங்கத் தகுதியற்றவர் என்ற முடிவை எட்டிய நிலையிலேயே, அவரிலிருந்து வெளியேறி "இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (இடது)" உதயமானது. சண் தொடர்ந்து இயங்க இயலாத முடக்கத்துக்காளானார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. முன்னெப்போதும் இல்லா அளவில் இந்தப் பிளவு அவரைப் பெரிதும் பாதித்தது. மணியம் இப்படித் துரோகம் செய்துவிட்டாரே என ஆதங்கப்பட்டதும் மெய். கோட்பாட்டையும் நடைமுறையையும் மீறி ஒரு விசுவாசத்தை அவரால் எப்படி எதிர்பார்க்க இயலுமாயிற்று? உண்மையில் அப்படியொரு போர்க்குணமிக்க உறவுப்பிணைப்பு சண்-மணியம் இடையே இருந்தது. சாதித் தகர்ப்புப் போராட்டத்திலும் தொடர்ந்து கட்சியைக் கட்டிவளர்ப்பதிலும் மணியம் காட்டிய உறுதியிலேயே சண்ணின் தலைமை ஆட்டங்காணாமல் இருந்தது. நடைமுறை சார்ந்த பிரயோகத்தில் சண்ணுடைய வரட்டுவாதத்தை மீறிச் சரியான பிரயோகத்தை முன்னெடுக்க ஏற்றதாக செயற்படும் அதேவேளை, ஏனைய கோட்பாட்டு விவகாரங்களிலும், பிரசாரங்களிலும், பல்வேறு தொடர்பாடல்களிலும் சண்ணின் ஆளுமை கட்சிக்குப் பலமாக அமைவதை மணியம் புரிந்தவராயிருந்தார். அதுசார்ந்த உயர் மரியாதை சண் மீது அவருக்கு இருந்தது. இதன் காரணமாகவே மணியம் தனது எந்த வறட்டுத்தனத் தவறையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்தும் தன்னோடு இருப்பார் என நம்ப வைத்திருக்கிறது.
மணியம் ,யோகநாதன் ,கதிரேசு 
தனிப்பட்ட உறவைவிடவும் மக்கள் நலனுடைய புரட்சிகரக் கட்சியைக்  கட்டியெழுப்ப வேண்டும் என்பதால் சண்ணிலிருந்து பிரிவது தவிர்க்க இயலாதது என்ற முடிவுக்கு வந்தார். அதிதீவிரப் புரட்சிகரச் சுலோகங்களை முன்வைத்து மக்களிலிருந்து பிரிந்துபோவதாயில்லாது 'மக்களிடமிருந்து மக்களுக்கு' எனும் மார்க்கத்தை இனி முன்னெடுக்க இயலும் எனக் கருதினார். அதற்கு அமைவாக கட்சிப் பெயரும் "புதிய ஜனநாயகக் கட்சி" என மாற்றப்பட்டது.
இத்தகைய புதிய பாணி என்பது அடிப்படையில் மார்க்சிய-லெனினிய-மாஒ சேதுங் சிந்தனை மார்க்கத்துக்குரியதே. முரண்பாடு என்பதை எதிர்நிலைக்குரியதாக மட்டும் பார்ப்பதிலிருந்து நட்பு முரண்பாடு என்கிற ஒன்றை அறிமுகம்செய்த மாஒ, "மக்கள் மத்தியிலான முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது" என்பதையும் பேசியவர்; வலதுசாரிப் பிற்போக்காளார் மிகமிகச் சிறுபான்மையினர்-கொம்யூனிஸ்ட்டுகளும் சிறுபான்மையினரே; இடைநிலையில் உள்ளவர்களே மிகப் பெரும்பான்மையினர், அவர்களை வென்றெடுப்பது குறித்த மாஒ சேதுங் சிந்தனை வழிகாட்டல் மூன்றாமுலகக் கோட்பாட்டிலும் வெளிப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு சண்ணிலிருந்து வெளியேறியமை உதவிகரமானது எனக் கூறுவார்.
எஸ் டி பண்டரநாயக்க ,சண் ,மணியம் ,சிவதாசன் 
ஆயினும் அவர் விரும்பிய புதிய பாணியிலான கட்சிக் கட்டமைப்பு வந்தமையவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்துள்ளது. அதனாலேயே ராசன், கீரு ஆகியோரிடம் சண்ணிலிருந்து விலகியது தவறு என்பதை அவர் கூறியிருக்கிறார். அவ்வாறானபோதும் என்னிடம் விலகலின் அவசியத்தை அவர் தொடர்ந்து நியாயப்படுத்தியமை என்பது அடிப்படையில் வறட்டுவாதம் கடந்த இத்தகைய சரியான பாட்டாளிவர்க்க கருத்தியலை நான் வந்தடைய வேண்டும் என அவர் கருதியமை கரணமாகும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்புதிய கருத்தியல் மற்றும் மூன்றுலகக் கோட்பாடு வாயிலாக அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டமை பற்றி அடுத்த சந்திப்பில்.
(இங்கு இடம்பெற்றுள்ள படங்களில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த சிங்கள-தமிழ்த் தலைவர்களுடன் மணியம் இடம்பெற்றிருப்பதைக் காணலாம் .அன்றைய வெகுஜன மார்க்கம் சண்முகதாசனால் முடக்கப்படாத ஆரோக்கியமான சூழலின் பேறு இது. போராட்ட வெற்றிகளின் பின் தானே சரியான கோட்பாட்டில் தலைமை தாங்குவதான அகங்காரம் அவரிடம் ஏற்பட்ட பின்னரே வறட்டுவாதியானார் ).

Sunday, October 21, 2012

ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கம்:


ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கம்: தொடரும் புரட்சிகர மரபுரிமை

ந.இரவீந்திரன்




ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கத்தைத் தொடரும் மரபுரிமையாகக் கூறுவது முற்றிலும் பொருத்தப்பாடுடையது; அதன்வழி நின்று தொடர்ந்து சிந்தித்துச் செயற்படுகிறவர்கள் நிறையவே உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் மதித்தவண்ணமாக, அந்த எழுச்சியின் வழிகாட்டலில் வளர்த்தெடுக்கப்பட்டவன் என்கிறவகையில் என் பதிவை இங்கு அழுத்தமாக முன்வைக்க அவசியமுள்ளது.
அந்தமார்க்கத்தின் இரண்டாம் சருக்கமாக அமையும் "புதிய பண்பாட்டுத் தளம்" சென்ற வாரம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது; இன்றைய தினம் அதற்குரிய தனித்துவத்தோடு நினைவுகூரப்பட வேண்டும் என்பதால் அவ்வாறு 13ம் திகதியில் அது தொடக்கம் பெற்றது. தவிர, கால வளர்ச்சியோடு ஒக்டோபர் 21 எழுச்சியின் இன்னொரு பரிணாமமாக அமைவது "புதிய பண்பாட்டுத் தளம்". அன்று யாழ்ப்பாண மண்ணில் புரையோடிப் போயிருந்த சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சி மார்க்கத்தின் படிப்பினைகளை இன்று நாடு பூராவிலும் உள்ள  ஒட்டுமொத்த அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டத்தில் பிரயோகிக்க வேண்டியதாக உள்ளது. அதன்பேறாக, புதிய பண்பாட்டு வெகுஜன அமைப்புக்குரியதாக இன்றைய செயற்பாட்டுப் பாணி வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது. தொடர்ச்சியுடனான இந்தப் பரிணமிப்புக் கவனிப்புக்குரியது.
"சாதிமுறை தகரட்டும்; சமத்துவ நீதி ஓங்கட்டும்" என்ற பதாகையின் கீழ் 1966 ஒக்டோபர் 21 அன்று அணிதிரண்ட புதிய சக்தியுடன் எனது இணைவு சுவாரசியமிக்கது; அப்போது நான் ஆறாம் வகுப்பு மாணவன். அந்த ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கி மிகமோசமாக சாதிவெறிப் போலீசாரால் தாக்கப்பட்டதோடு அம்மார்க்கத்தின் வழிப்படுத்தலுக்கு பிரதான கருத்தியலாளராக இருந்தவரான கே.ஏ.சுப்பிரமணியம் எனது ஊரிலும் இருந்துள்ளார். அப்போது அவரை நான் புரிந்து கொள்ளவோ சந்திக்கவோ இயலுமாயிருக்கவில்லை. தொடர்ந்து தேனீர்க்கடைப் பிரவேசம், ஆலயப்பிரவேசப் போராட்டங்கள் என வலுப்பட்டு வந்த காலத்திலும் 'ஏதோ பயங்கரவாத' நடவடிக்கைகள் எங்கோ நடந்துகொண்டிருப்பதாகக் கருதும் மாணவனாகவே நான்.
உச்சநிலையில் ஒரு சம்பவம் என் ஊரோடும் தொடர்புபட்டபோது உயர்தர மாணவனாக இருந்தேன். மறுமலர்ச்சி மன்றத்தில் சமூக அக்கறை கொள்ளும் முதல் அனுபவம் பெறும் செயற்பாடுகள் இருந்தபோதிலும் சமூக மாற்றம் பற்றி எந்தப் புரிதல்களும் இருந்ததில்லை. அப்போது நிற்சாமத்தில் வெங்காயம் ஏற்றி விற்பனைக்கு பரிமாற்றும் சிறிய லொறி ஒன்றை வைத்திருந்த எமது ஊரவரைப் பொலீசார் பயன்படுத்தி நல்லப்பு என்கிற சமூகப் போரளியைக் கொலை செய்திருந்தனர்(வெங்காய லொறியைக் கண்டதும், ஏற்கனவே போராட்ட முனைப்பில் தேடப்படுபவராய்த் தலைமறைவாக இருந்த தோழர் நல்லப்பு தெரிந்தவர்தானே என்ற நினைப்பில் வெளிப்பட்டு வந்தார்; வரக் கண்டதும், உள்ளே பதுங்கி ஒழிந்திருந்த பொலீசார் குதித்து இறங்கித் துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்துக் கொலைபாதகம் புரிந்தனர்).
எங்கள் அளவில், ஒரு பயங்கரவாதியைக் கொல்வதற்கு எம்மூரவர் துணை போயிருக்கிறார்; சண்டியர்களான அவர்களால் இவர் விரைவில் தீர்த்துக்கட்டப் படுவார் என்ற பேச்சுத்தான் இருந்தது. அப்படி எதுவும் நடக்காததோடு, சிறிய அடிதானும் விழவில்லை என்பது அதிசயமாகப் பட்டதாயினும், சலனம் ஏதுமில்லாததால் விரைவில் மறந்தும் போனோம்(பின்னாலே கட்சிக்கு வந்தபோது அவர்களிடம் கேட்டேன்; அவர் அப்படிக் காட்டிக்கொடுத்தும் கூட எப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தீர்கள் என்று. 'அவர் என்ன செய்வார் தோழர்; வியாபார ஊடாட்டத்தைத் தெரிந்துகொண்ட பொலீஸ் அவரை வெருட்டிப் பயன்படுத்தியிருக்கிறது என்பதைக் கட்சிக்கிளைக் கூட்டக் கலந்துரையாடலில் முடிவாய் அறிந்து கொண்டதால் அவருக்கு எதிராக எதுவும் பண்ணுவதில்லை என்று முடிவு செய்ததோடு, தொடர்ந்து நட்பைப் பேணிவந்தோம்' எனச் சொல்லக்கேட்டபோது உண்மையில் முன்னர் இவர்கள் பற்றி எவ்வளவு தவறான புரிதல்களுடன் இருந்துள்ளேன் என்று வெட்கப்பட மட்டுமே முடிந்தது).
ஓரிரு வருடங்களில் மார்க்சியத்தைக் கற்றுக்கொண்ட போதிலும் அவர்களோடு இணையும் நோக்கம் இருந்ததில்லை; மார்க்சிய வழிப்பட்டதாக அல்லாமல் வெறும் சாதியச் சண்டித்தனம் புரிந்தவர்கள் என்ற கருத்தே எங்களிடம் இருந்தது. சண் தலைமைக் கட்சி என வந்த போதிலுங்கூட, முன்னர் தீவிரமாக இயங்கியவர்களாயினும் இப்போது இயக்கத்தில் இல்லை என்பதான நினைப்பேயிருந்தது. அப்படியொரு நாள், யாழ். நகர் சென்று திரும்பிக்கொண்டிருந்தபோது, சங்காணைச் சந்தைக்கருகே சண்முகதாசனின் கூட்டம் ஒன்று நடப்பதைக் கண்டு அதனைச் செவிமடுக்கச் சென்றோம். அவரது உரை முடிந்ததும் மூன்று கேள்விகள் எழுதிக் கொடுத்தோம். திருப்திகரமான பதிலாக அமையவும் மகிழ்ந்துபோனோம். மேடையிலிருந்து வந்தவரிடம் நேரே சென்று, அருகிலுள்ள எங்களூரில் இதுபோன்ற கொள்கை விளக்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்ற வேண்டும் எனக் கேட்டோம்.
கட்சி அமைப்பு, செயற்பாட்டுப் பாணி, கட்டுப்பாடு என்பதெல்லாம் எங்களுக்கு எங்கே தெரிந்தது. சண் எங்கள் ஊரை அறிந்ததும் அருகில் நின்ற மணியம் தோழரைக் காட்டி, இவர் உங்கள் ஊரில் முன்னர் இருந்தார்; இப்போது தொல்புரத்தில் இருக்கிறார்; அவரோடு தொடர்புகொண்டு மேற்கொண்டு செய்யவேண்டியதை முடிவு செய்யுங்கள் என்றார்.
மணியந்தோழர் நெறிப்படுத்திய வகையில் சங்கானைக் கிளையில் இணைந்து நாங்கள் செயற்பட்டபோது ஒக்டோபர் எழுச்சி மார்க்கப் போராளிகளோடு இரத்தமும் சதையுமாக ஒன்றித்து சமூகமாற்ற இயங்காற்றல் குறித்த நடைமுறைக் கற்றலைப் பெற இயலுமாயிற்று.
தமிழ்த் தேசியப் போராட்டம் உண்மையில் இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக அமைந்திருக்க வேண்டியது. சாதியப் பண்ணையடிமைத் தனத்துக்கு எதிரான போராட்டம் என்கிற வகையில் தேசியப் போராட்டத்தின் ஒரு அங்கம் எனக் கொண்டு இதனை ஆதரிக்கும் மனப்பாங்கு தமிழ்த்தேசியர்களுக்கு இருக்கவில்லை; அவர்கள் உயர்சாதித் தேசியமாயே தமிழ்த் தேசியத்தை கட்டமைத்தார்கள் என்றவகையில், சாதியத் தகர்ப்புப் போராட்டத்துக்கு எதிராகவே இயங்கினர். அந்த வலதுசாரிப் பிற்போக்குத் தலைமைக்கு எதிராகக் கிளர்ச்சியுற்று இடதுசாரித் தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்க முனைந்தவர்களும் போதிய அளவு ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கத்தைக் கவனம்கொள்ளவில்லை. ஆயினும் தொடர் இயக்கம் வாய்த்திருப்பின் அவர்கள் கற்றுக்கொண்டு சரியான செல்நெறியை வகுத்திருக்க இயலும். மாறாக வலதுசாரிப் பிற்போக்கு ஃபாசிசமே தொடர்ந்து ஆயுதப் போராட்டத் தலைமையையும் கையகப் படுத்தியிருந்தமையால் மக்கள் விரோதப் போக்கே தொடரலாயிற்று. ஆகவும், தமிழீழம் பெறுவது ஒன்றே இலட்சியம், இவ்வேளையில் சாதி முரண்கள் பற்றிப் பேச்செழக்கூடாது என்ற ஆணை பிறந்தது.
இதனைச் சாதியச் சக்திகள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாயினர். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை முன்வைப்பேன். வளக்கம்போல நிச்சாமத்திலுள்ள மூத்த தோழர் ஒருவரைச் சந்திக்கப் போயிருந்தேன். அது 90ம் ஆண்டு என்பதாக நினைவு. அந்தத் தோழர் மிகுந்த பதட்டமும் கோபமும் கொண்டிருந்தார். நடந்ததைச் சொன்னார். தெரிந்த ஒரு உயர்சாதியினர் மரணச் சடங்குக்கு அவர் சென்றிருக்கிறார். சுடலையில் இறுதிச் சடங்கு. ஒரு சாதிமான் 'அம்பட்டன் வா, வண்ணான் வா' என்று அறைகூவி தட்சணை கொடுத்துக்கொண்டிருக்கிறார். இவருக்கோ தாங்க இயலாக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. மரணச் சடங்கு என்பதால் ஏறுக்கு மாறாக நடக்கக் கூடாது என்பதைவிடத் துப்பாக்கி மட்டுமே சிந்திக்கவும் பேசவும் கூடிய காலம். 'பள்ளன் வா' என்ற போது, அங்கே சில வேலைகளைச் செய்தவரே அழைக்கப்படுகிறார் என்பது தெரிந்திருந்தும் இவர் போகிறார். கூவியழைத்தவர் திகைத்துப்போகிறார். இவர் மீது பயங்கலந்த மரியாதை அவருக்கு உண்டு; எவ்வளவு காட்த்திரமான சமூகப் போராளி இவர் என்பது அவருக்குத் தெரியும். 'என்ன, அண்ணை நீங்கள்' என்று தடுமாறிய போது, 'இல்லை, நான் பள்ளன் தானே, தரவேண்டியதைத் தா' என்றார். செய்வதறியாதவராகச் சில்லறைகளைக் கொடுத்தார். வாங்கிய காசை வேகமாக நிலத்தில் மோதி அடித்து, 'இந்த மாதிரிச் சாதி இழிவுபடுத்தல்கள் இருக்கக் கூடாது என்றதுக்காகத்தானே பத்துப் பதினைஞ்சு வருசங்களுக்கு முந்திவரை போராடின்னாங்கள்; இப்ப குளிர்விட்டுப்போய்த் திரும்பப் பழையபடி நடக்கலாம் எண்டு வாறீங்களோ' எனக்கூறிவிட்டு அவ்விடம்விட்டு அகன்றிருக்கிறார்.
எல்லாந்தான் முடிஞ்சுபோச்சே எதற்கு இந்தப் பழைய கதை என்று முணுமுணுக்கும் சில முனகல்களும் காதில் விழத்தான் செய்கிறது. வரலாற்றிலிருந்து கற்பதற்கு தவறிய விளைவைச் சுட்டிக்காட்ட இதனைச் சொல்கிறோமேயல்லாமல், தோல்வியைக் குதூகலிக்க முனையவில்லை. தமிழ்த் தேசியம் மக்கள் நலனிலிருந்து வேறுபாட்டு ஆளும் சாதித் தேசியமானதால் இந்தப் பின்னடைவு என்பதை விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும் என்கிற வகையில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசியக் குரலை ஒடுக்கப்படும் ஏனைய தரப்பினரோடும் இணைத்து முன்னெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். இதனையே "புதிய பண்பாட்டுத் தளம்" முன்னெடுக்க உள்ளது.
இதனைக் கூறும்போது மக்கள் விடுதலை என வந்த 1917 ஒக்டோபர் புரட்சியின் சோவியத் யூனியனும் இன்று காணாமல் போயிருக்கிறது தானே என்ற கேள்வியும் எழாமல் போகாது. அந்த ஒக்டோபர் புரட்சி மகத்தான சாதனைகளில் முக்கால் நூற்றாண்டு நீடித்து விடுதலைக்காகப் போடாடும் சக்திகளுக்குக் கலங்கரை விளக்காக விளங்கியது. பின்னர் ஏன் சோவியத் யூனியன் தகர்ந்து போனது என்பது இன்னொரு படிப்பினைக்கு உரியதும், தொடர்ந்து போராடும் சக்திகளுக்கு மற்றொரு பாடத்தை வழங்குவதும் ஆகும். ஒக்டோபர் புரட்சியின் நேர்-மற்றும் எதிர்ப் படிப்பினைகளையும் பார்க்க வேண்டும்தான்; அடுத்த அமர்வில் அதுபற்றிப் தொடர்வோம் ....

Saturday, October 20, 2012

சில நினைவுத் தடங்கள்


கவிஞர் இ.முருகையன் : சில நினைவுத் தடங்கள்
                                                                                                                                                   -ந.இரவீந்திரன்  

இது முருகையன் குறித்த ஆய்வு முயற்சியல்ல; விரிவான ஆய்வுக்கான தேவை உள்ள போதிலும், அவரைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் அவர் குறித்த சில நினைவுகளை மீட்பதே இக்கட்டுரையின் நோக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அவர் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து நெருக்கமாக செயற்பட்ட அவரது இறுதிக் காலத்தின் இரு தசாப்தங்களில் அவருடன் நெருங்கிப்பழக அமைந்த வாய்ப்பின் பேறாக இந்தப் பதிவினை வரைகிறேன்.
பேரவை 1974 இல் தொடங்கி "தாயகம்" சஞ்சிகையை வெளியிடத் தொடங்கியிருந்தது. ஆயினும் ஒரு வருடத்துக்கு மேல் "தாயகம்" வெளி வராதது மட்டுமின்றி பேரவையும் காத்திரமாக இயங்க இயலாத முடக்கம் ஏற்பட்டது. தோழர் சண்முகதாசன் தலைமையில் வரலாறு படைத்த புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் கட்சி, ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வரையறை கடந்து பிரசார முழக்கமாக்கிய நிலையில், வன்முறை வழிபாட்டுக்கு உரியதாக்கி, இடது திரிபு வாதத்துக்கு ஆட்பட்டது. அதன் பண்பாட்டு அணியாக தோன்றி இயங்கத் தொடங்கிய "தேசிய கலை இலக்கியப் பேரவை" இலும் இந்த இடது திரிபின் வெளிப்பாடு மேலெழவும், தொடர் முன்னேற்றம் தடைப்பட்டது. நெல்லியடி அம்பலத்தாடிகள், மட்டுவில் மோகனதாஸ் சன சமூக நிலையம் தொட்டு கொழும்பு அவைக்காற்றுக் கழகம் வரையான செயற்பாடுகளில் பேரவைக்குரியவர்கள் செயற்பட்டனரேயன்றி, பேரவை ஒன்றுபட்ட அமைப்பாக இயங்காது இருந்தது.
தவிர்க்கவியலாமல் 1978 இல் சண் தலைமையை நிராகரித்து "புதிய ஜன நாயக கட்சி" எனப்பின்னால் பெயர் பெற்ற பிளவடைந்த கட்சியுடன் தொடர் பயணத்தை தேசிய கலை இலக்கியப் பேரவை மேற்கொண்டது. வறட்டுவாத இறுக்கத்திலிருந்து மீண்டு வெகுயன மார்க்கத்தை வரித்து பேரவை இயங்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயற்படும் முனைப்பை கட்சி ஊக்கப்படுத்தியது. கட்சி செயலாளராக இருந்த கே.ஏ.சுப்பிரமணியம், இடையில் தொய்ந்திருந்த கைலாசபதி, முருகையன் போன்றோருடனான உறவைப் புதுப்பிப்பதில் நேரடியாக ஈடுபட்டிருந்தார். இவர்கள் இருவரும் பேரவையின் தொடர் வேலைகளுக்கான கலந்துரையாடல்களிலும் செயற்பாடுகளிலும் பற்றுறுதியுடன் ஈடுபட்டனர். அந்த நிலையில் பாரதி நூற்றாண்டுவிழா (1982) வந்தமைந்தது.
பதின்ரண்டு தலைப்புகளில் மாதம் ஒன்றாக பாரதி ஆய்வுகளை முன்னிறுத்திய கருத்தரங்கு திட்டமிடப்பட்டது; முதல் கூட்டம் முருகையன் உரையாக அமைந்தது. ஆய்வுக் கட்டுரைகள் "பாரதி ஆய்வுகள்" எனும் தலைப்புடன் நூலாக்கப்பட திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு ஆய்வையும் தாங்கி 1983 இலிருந்து "தாயகம்" சஞ்சிகையை வெளியிடுவதற்கும் எதிர்பார்ப்பிருந்தது. நினையாப்பிரகாரமாய் கைலாசபதி 82 டிசெம்பரில் மறைந்துவிட முழுப் பொறுப்பையும் முருகையன் ஏற்க நேர்ந்தது. அவரும் பூரண சம்மதத்துடன் பேரவைத் தலைவர் எனும் பதவி நிலையில் உறுதியுடன் செயற்பட்டார். முன்னதாக ஐம்பதுகளின் எழுச்சியுடன் தோன்றி வளர்ந்த "முற்போக்கு இலக்கிய இயக்கம்" தனது அர்த்தமிழந்து கிட்டத்தட்ட செயற்படாத கோமா நிலையில் இருந்தமையால் முழுமையாக பேரவைத் தலைவராக முருகையனால் இயங்க இயலுமாயிற்று.
"பாரதி ஆய்வுகள்" என்ற தலைப்பில் மறைந்த கைலாசபதியின் பாரதி குறித்த கட்டுரைகள் தொகுத்து வெளியிடப்பட்ட நிலையில் பேரவையின் பாரதி ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலுக்கு "பாரதி: பன்முகப் பார்வை" என்ற பெயரை முருகையன் சூட்டிக்கொண்டார். அது நூலுருப் பெறுமுன்னதாக அதற்கான ஒவ்வொரு கட்டுரைகளும் தாங்கி வெளியான "தாயகம்" சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் முருகையன் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். இக்காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகமுடிந்தது. இதன் போது ஒரு பண்பாட்டு இயக்கத்துக்கு தலைமை தாங்கும் அவரது ஆளுமையை இனங்காண இயலுமாயிற்று.
அவர் அப்போது யாழ். பல்கலைக் கழகத்தின் உதவிப் பதிவாளராக வந்துவிட்டமையால் இந்தப் பொறுப்பை சிரமமின்றி மேற்கொள்ள இயலுமாயிருந்தது. அதற்கேயான கூட்டம் தவிர்ந்த வேளைகளிலும் அவரைப் பல்கலைக் கழக பணிமனையில் சென்று சந்தித்து வேண்டிய உதவிகளைப் பெற்றுக்கொள்வோம். அவ்வேளைகளில் அவருடனான உரையாடல்கள் பலதும் பத்துமாக அமையும். ஒரு தடவை சிற்பக் கலை குறித்துக் கேட்டோம். முன்னர் வடிக்கப்பட்ட வடிவத்தை அப்படியே மரபு பிறலாமல் ஒருவர் புதிதாக செதுக்கும்போது, அது கலை ஆவதில்லை; புத்தாக்கத்துடன் ஒன்றை சிற்பி வடித்தால் மட்டுமே கலைஞனுக்குரிய பாத்திரத்தை வரிப்பவராவார் என்றார். எவ்வளவு செய் நேர்த்தியுடன் வடிக்கப்பட்டாலும் முன்னர் இருந்ததின் பிரதியெனில் தொழில் நுட்பத்தை வியக்கலாமே அல்லாமல் கலை எனக் கொண்டாட இயலாதென்பார். வடிவப் புதுமை குறித்து மட்டுமல்லாமல் பேசு பொருளின் புதுமை பற்றியும் அக்கறை கொள்வார் முருகையன்.
அவ்வாறு ஒரு தனி உரையாடலின் போது புதிது புனைதலின் அவசியத்தை வலியுறுத்திவிட்டு சொன்னார், இன்றைய தலைமுறையினரான நீங்கள் புதிய ஒன்றைப் படைத்து அதை ஆளுமையுடன் பிரகடனப்படுத்த இயலாது திண்டாடுகிறீர்கள் என்று. முற்போக்கு இலக்கிய எழுச்சியின் பிரதிநிதியான அவரிடம் அத்தகைய ஆளுமை பூரணமாய் அமைந்திருந்தது. ஒரு சம்பவத்தைக் கூறினார். தன்னுடைய கவிதை ஒன்றில் வந்த "கொச்சைத்" தமிழைச் சுட்டிக்காட்டி, இவற்றை தவிர்க்க வேண்டுமல்லவா என்பது அந்த நண்பரின் ஆதங்கம். முருகையன் அவருக்கு சொன்னார்,"அதை ஒரு ஆற்றல் மிக்க கவிஞர் கவிதையில் பாவித்திருப்பதால் இப்போது அது கொச்சைத் தமிழ் அல்ல, நல்ல சொல்தான்" என்று. "யார் அந்தக் கவிஞர்" என நண்பர் கேட்டபோது "கவிஞர் முருகையன்" எனப் பதில் கூறியதாக முருகையன் சொல்லிவிட்டு தனக்கேயுரிய முகம் மலர்ந்த சிரிப்பால் முற்றுப்புள்ளியிட்டார்.
படைப்பூக்கத்துடன் புத்தாக்கத்தை முன்னெடுக்கும் அவர் அதுபோன்றது எனக் கருதும் எதனையும் அங்கீகரித்துப் பங்கேற்கப் பின்னிற்பதில்லை. எண்பதுகளில் கம்பன் கழகம் ராமகாவியத்தை இலகுவில் மக்களிடம் எடுத்துச் செல்லும் விவாதம் உள்ளிட்ட அரங்க நிகழ்வுகளை நடாத்தியபோது, ஆரம்பத்தில் அவற்றில் பங்கேற்று வேடமிட்டு விவாதித்துள்ளார். கம்பராமாயணத்தை மக்கள் மயப்படுத்துவதாக அல்லாமல் பிற்போக்குவாத வியாபார உத்தியே மேலோங்கியுள்ளது என்ற பலரது கருத்தையும் ஏற்கவியலாமல் சிறிது காலம் அந்நிகழ்வுகளில் பங்கேற்றவர், எதிர்க் கருத்தாளர்களின் கூற்றுகளில் உண்மையிருப்பதை கண்டதும் தயக்கமின்றி பங்கேற்பதை நிறுத்திக் கொண்டார்.
இதுபோன்ற அவரது அவசர ஆதரவு நிலைப்பாடு ஒன்று அவரை மதிப்பீடு செய்வதில் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்ணூறுகளில் யுத்தம் கொடூரமாய் மக்களைக் காவுகொண்டிருந்த நிலையில் போராடும் விடுதலைப் புலிகளை வாழ்த்தி இரு கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார். இதை வைத்து அவரும், தேசிய கலை இலக்கியப் பேரவையும் புலிகளின் இலக்கியப் பிரதிநிதிகள் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதை மறுத்து பேரவை அறிக்கையிடுவதை முருகையன் ஆதரித்தார். வெகுஜன மார்க்கத்தில் பேரவை முன்னேறி வந்தபோதிலும், சண் காலத்து இடது திரிபுவாத முனைப்பாக்கம் கட்சியிலும் பேரவையிலும் ஏற்பட்டு வருவது மெய்யாயினும், மக்கள் போராட்டம் என்பதிலிருந்து பல காத தூரம் விலகிய புலிகளின் முன்னெடுப்புகளில் உடன்படாத விடயங்கள் அனேகம் இருந்தன. சில அம்சங்களை வன்முறை வழிபாட்டு இடது அதிதீவிரப் பண்பினால் ஆதரித்தமையினாலேயே விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்டதாகிவிடாது.
முன்னதாக எண்பதுகளில் மக்கள்மீது திணிக்கப்பட்ட யுத்த அனர்த்தக் கொடூரங்களுக்கு எதிரான பேரவைச் செயற்பாடுகளில் முருகையனின் படைப்பாக்கங்களிலூடாக வெளிப்பட்ட பேரினவாத எதிர்ப்புக் குரலுடன் தொடர்புபடுத்தி இதனைக் காண வேண்டும். "புது வரலாறும் நாமே படைப்போம்" என்ற பேரவை வெளியீடான ஒலிப் பேழை சிறப்புற அமைய ஏற்ற புதிய கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார். அக்கொடூரங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்ற ஆதங்கம் அவரிடமிருந்து வெளிப்பட்டதே அல்லாமல் மக்களைப் பிரிந்த போராட்டக்குழுவை ஆதரிப்பவராக கருத்துரைக்கவில்லை.
அதற்கு முன்னதாக எழுதிய "வெறியாட்டு" நாடகமும் மக்களை விழிப்பூட்டுவதாக வடிவமைக்கப்பட்டதே அல்லாமல் புலிகளை வக்காலத்து வாங்கியதாக அமையவில்லை எனக் காண இயலும். இந்த நாடகப் பிரதி வெளியிடப்பட்ட அதே அரங்கில் அவரது வரலாற்றுப் பொருள்முதல் வாத அடிப்படையில் விஞ்ஞான நோக்குடன் மனிதகுல தோற்ற வளர்ச்சியைக் கூறும் "அவன், அவள், அது" எனும் கவிதைக் குறுங்காவியமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நூலுக்கு, அப்போது விஞ்ஞான ஆசிரியராக இருந்த நான் விமர்சன உரை ஆற்றுவது பொருத்தமாய் இருக்கும் எனக்கூறியிருக்கிறார் முருகையன்; அதனை ஏற்பாடு செய்த நண்பர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமையால் எனக்கு "வெறியாட்டு" நூலுக்கான விமர்சனமே தரப்பட்டது. அந்த விமர்சன உரையைப் பின்னர் எழுத்துருவாக்கி "தாயகம்" சஞ்சிகையில் வெளியிட்டபோது அதற்கு மாற்றுக்கருத்து எதையும் வெளிப்படுத்தியதில்லை. மக்களைப் பிரிந்த இனவாத யுத்தம் குறித்த விமர்சனம் உடையாதாக அப்பிரதி மீதான எனது வாசிப்பு அமைந்திருந்தது. என்னுடைய விமர்சனம் நன்றாக இருந்ததாகவோ வேறெந்தக் கருத்துகளையோ அவர் சொல்லாததுடன் மற்ற நூலுக்கு நான் விமர்சன உரை ஆற்றியிருப்பின் பொருத்தமாய் இருந்திருக்கும் என்பதையே மீளவலியுறுத்தினார்.
முருகையன் ஐம்பதுகளில் மொழிப் பற்றுடன் தனது கவிதை எழுத்தாக்கத்தைத் தொடங்கியவர். ஐம்பதுகளின் பிற்கூறில் முனைப்படைந்து வளர்ந்த முற்போக்கு இயக்கத்துடன் இணைந்து சமூக நோக்குடனான மக்கள் விடுதலைக்கான படைப்பாக்கங்களை ஆக்கியளித்தார். என் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்தது , வாழ்த்துப் பாடி தலைமை தாங்கியது மட்டுமல்ல, எங்கள் வீடான "சத்திமனை" இல் யுத்த அனர்த்தங்களின் போது ஒரு மாதங்கள் தங்கி இருந்ததும் ,பரிமாறிய நினைவுகளும் என்றும் இனிமையானவை. அதன் மூலம் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பும் கிட்டியது. இறுதிக்காலத்தில் எவ்வகையிலும் இனவாதத்துக்கோ, மக்களைப் பிரிந்த வீர சாகசங்களுக்கோ துதிபாட அவர் முனைந்திருக்கவில்லை; மக்களை நேசிக்கும் மனப்பாங்குடன் போராட்டத்தை ஆதரிக்க முற்பட்டபோது ஒரு கவிக்குரிய அவசர கோலம் வெளிப்பட்டதாயினும் (அதுசார்ந்த விமர்சனத்துக்கு அப்பால்) என்றென்றும் மக்கள் கவியாகவே அவர் கொண்டாடப்படுவார்.
( 23-04 -1935 - 27 -06 -2009).

இங்கிருந்து எங்கே?


இங்கிருந்து எங்கே? சமகாலம் -கடைசிப் பக்கம் ஐப்பசி -1 -2012


                                                                                                                                                         -ந இரவீந்திரன் 

இன்றைய நிலையில் ஒவ்வொரு தனி மனிதரும், சிலரோ பலரோ ஒன்று கூடியுள்ள குழுக்களும் அமைப்புகளும் எங்கிருக்கிறோம் என்பதுபற்றிய புரிதல் இல்லாமலே எதையெதையோ செய்த வண்ணமாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம்; எங்கே போகிறோம் என்று ஒரு எடுகோள் இருந்தாலும், எங்கிருந்து-எப்படிப் பயணிக்கிறோம் என்ற கரிசனையற்ற ஓட்டம் என்பதால், இடையிலேயே எங்குபோவது என்பதையும் மாற்ற நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.இந்த நெருக்கடிக்கு இன்று நடந்துகொண்டிருக்கிற பல்கலைக்கழக ஆசிரியர்களது போராட்டமே தலைசிறந்த எடுத்துக்காட்டு. கனக்கப் படித்த அந்தப் பேராசியர்களும் விரிவுரையாளர்களுமே எங்கிருந்து எங்கு நோக்கிப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம் என்ற புரிதல் இல்லாமல்தான் தொடங்கி இருக்கிறார்கள். தங்களது சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தொடங்கியவர்கள் இன்றுதான் பொதுக் கல்வியையும் கவனம்கொண்டு, கல்விக்குத் தேசிய வருமானத்தில் 6 வீதத்தை ஒதுக்கவேண்டும் என்ற முழக்கத்தை முன்னிறுத்துகிறார்கள். இந்த அடிப்படைக் கோரிக்கை ஆரம்பத்திலேயே அவர்களுக்குள் இருந்திருக்க இடமுண்டாயினும் இதனையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற புரிதல் அப்போது இல்லாமல் போயிற்று. தாமுண்டு தம் படாடோபமுண்டு என்ற நினைப்பு முன்னாலே வந்து கண்ணைக் கெடுத்துவிட்டது. மக்கள் பிரச்சனையின் பகுதியாகத் தங்கள் பிரச்சனையை அப்போது காணத்தவறினர்.அதனை உணர்த்தியது அரசு சார்பாளர்கள்தான்; நானும் பல்கலைக் கழகப் பேராசிரியர், லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறேன்- இந்தக் கோரிக்கையெல்லாம் தவறு, உண்மையில் பாடசாலை ஆசிரியர்களது சம்பளமே அதிகரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் ஊடகங்களில் ஊடாடவிடப்பட்டன. பின்னரே பொதுக்கல்விக் கோரிக்கை முன்னணிக்கு வந்தது. சரி, ஆசிரியர்கள் சம்பளக் கோரிக்கையை முன்வைத்தால் இந்தக் கனவான் குரல்கள் என்ன பேசும்? எத்தனை நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போரடியபோதெல்லாம் இவர்கள் எங்கே போனார்கள்? அதனை முறியடிக்க அதற்கு எதிராக எதை நிறுத்தலாம் என்று அரசுக்கு ஆலோசனை தேடிக்கொண்டு இருந்திருப்பார்கள்.ஒருவர்க்கு எதிராக மற்றவரை நிறுத்திப் பிரித்தாளும் சூழ்ச்சி பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு மட்டும் உரியதல்ல; ஆதிக்கசக்திகள் அனைத்தும் கையாளும் மலினப்பட்ட தந்திரோபாயந்தான். தற்போதைக்கு எமது அக்கறை எங்கிருந்து தொடங்குகிறோம் என்ற புரிதலின்மையால் ஏற்படும் இடர்ப்பாடு பற்றியது என்பதால் அது குறித்து அலசுவோம். இங்கிருக்கிறோம் எனும் புரிதலைத் தனி நபர் கண்டுகொள்ளாதிருப்பது ஆச்சரியப்படத் தக்கதல்ல; மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கப் போராடுகிறோம் என்று செயற்படுகிற அமைப்புகளேகூட பிரச்சனையின் மையம் எங்கிருக்கிறது என்ற அக்கறையற்று எதையாவது முன்வைத்துப் போராடிக்கொண்டு இருந்தால் போதும் எனக் கருதிக் கருமமாற்றிக்கொண்டு இருப்பதாகவே இன்றைய நிதர்சனம் உள்ளது. மக்கள் விடுதலைக்காக இயங்குகிறோம் என்ற அமைப்புகளேகூட இவ்வகையில் ஏனோதானோ என்றபோக்கில் செயற்படுவது இன்றைய துயரின் உச்சம் எனலாம். அவற்றின் தலைமை சக்திகள் மாறாத நிலைப்பாடுகளுக்குள் சிக்குப்பட்டுள்ளதும் புதிய மாற்றங்களைக் கண்டறிய இயலாமற் போவதற்குக் காரணமாயாகியுள்ளது. "மக்கள் சக்தியே வரலாற்றின் உந்து சக்தி" என்பவர்களும், அதன் அடிப்படை உண்மையைக் கண்டுகொள்ளாமல் தலைவர்களான தாமே வரலாற்றைப் படைப்பவர்கள் என மயங்கிவிடுவதால் தன்முனைப்பு மிகையாகி மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள மறுக்கிறவர்களாகிறார்கள். இது சிறிய கட்சிகளில் உள்ள நிலைமை மட்டுமல்ல, உலக வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த மகத்தான புரட்சிகளுக்குத் தலைமை தாங்கிய தலைவர்கள்கூட நெருக்கடியான சில சந்தர்ப்பங்களில் மக்கள் சக்திக்குமேல் தமது தலைமை ஆற்றல்மீது அதீத நம்பிக்கைகொண்டு செயற்பட்ட அனுபவங்கள் ஏற்கனவே வரலாற்றுத் தடங்களாயுள்ளன. பொதுமைப் புத்துலகம் படைப்பதில் மாபெரும் சாதனைகளை எட்டிய சோசலிச நாடுகளில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பல்வேறுகாரணங்களோடு தலைமையில் இருந்த இப்போக்கும் அடிப்படைக் காரணமாயிருந்தது. "படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில்" என்று ஒரு சொலவடை எம்மத்தியல் உண்டு; அதனை நினைவுபடுத்துவதாகவே, மக்கள் சக்தியே வரலாற்றைப் படைக்கிறது எனச் சொல்லிக்கொண்டு தலைவர்கள் மக்களை அணிதிரட்டி வென்றெடுத்த சில சாதனைகளுக்குத் தலைமை தாங்கியதைத் தமது மாபெரும் பங்களிப்பாய் மயங்கி செயற்படுவதிலும் காண்கிறோம். கூட்டுத் தலைமை மறுக்கப்பட்டு பெரும் சாதனைகளுக்குத் தலைமை தாங்கிய தானே சரியாகச் சிந்தித்துச் செயற்படுவதாக ஒரு தலைவர் எண்ணிக் கருமமாற்றும்போது நாட்டை முன்னேற்றத் தவறி, அவரை வழிபாடு செய்தவாறு மக்கள்மீது ஆதிக்கம் புரிய எத்தனிப்பவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறவராவார்.அவ்வாறு அல்லாது பல அல்லற்பாடுகளில் மக்களை ஆட்படுத்துகிற எமது தலைவர்களும் தமது 'சரியான' தலைமைப் பாத்திரம் பற்றிப் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தச் சோசலிச நாடுகளின் தலைவர்களாவது மகத்தான சாதனைகளோடு சிறிய பின்னடைவுகளுக்கும் காரணமாய்விட்டனர் என்ற விமர்சனத்துக்கு மட்டுமே ஆட்படுகின்றனர்; இவர்கள் தலைவர்கள் எனக்கொள்ளத்தக்க எந்தத் தகுதியும் அற்றவர்களாயே உள்ளனர். எங்கிருக்கிறோம் என்பதுபற்றிய புரிதல் இல்லாமல் மட்டுமல்ல, தலைமையும் சரியான அமைப்பும் இல்லாமலே எமது மக்கள் உள்ளனர். நாற்பது வருடங்களுக்கு முன்னர் பசுபதி என்ற கவிஞர் "அடிமைகளை அடிமைகளே அடிமைகொள்ளும் நாடு" என்று எமக்கான இருப்பை உணர்த்தியிருந்தார். பேரினவாதத்தால் அடிமைப்படுத்தப்பட இடமளியோம் என்கிறவர்கள் தமக்குள் அடிமைப்படும் சாதிகள், பிரதேசங்கள், இனங்கள் இருக்கவேண்டும் என அவாவுகின்றனர். ஆதிக்கம் பெற்றுள்ள பேரினவாதமும் இறைமையை பிராந்திய மற்றும் உலக மேலாதிக்கத்திடம் தாரைவார்த்து அடிமைப்பட்டேயுள்ளது.ஆக, எமது பிரச்சனை வெறும் சுற்று மதில்களுக்குள்ளேயோ பிராந்தியத்துக்குள்ளேயோ மட்டுப்பட்டதாய் இல்லை. எமது பிராந்திய மேலாதிக்கம் என்கிறவகையில் இந்தியா எம்மை அடிமைகொண்டிருப்பது வேறெதையும்விட வலிமையானது. பிரதானமாக தமிழகம் எம்மீது கொண்டிருக்கும் கருத்தியல் ஆக்கிரமிப்பு மலினப்பட்ட சினிமா-சஞ்சிகைகள் வாயிலாக மட்டுமானதாய் இல்லை; சுதந்திரம் தவறிக்கெட்டுத் தலைமையும் அற்றுள்ள எமக்கு தலைமைதாங்க முன்வரும் 'உலகத் தமிழ்த் தலைவர்கள்' அங்கிருந்து கிளம்பும் அபாயமும் மேற்கிளம்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து அனுமதிப்பது மேலும் பன்மடங்கு நெடுக்கடிகளை எமக்கு வழங்குவதாய் அமையும். இவ்வகையில் நாம் அடிமைப்படுவது தமிழக கருத்தியல் ஆக்கிரமிப்பாளர்களால் பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டதோடும் தொடர்புடையது.அந்தவகையில், எமக்கான விடுதலையின் முதல் தேவையாக பரந்துபட்ட பண்பாட்டு இயக்கத்தை முன்னெடுப்பது உடனடி அவசியமாகியுள்ளது. பல்வேறு அடிமைத்தனங்களைக் கொண்டுள்ள பாரம்பரியப் பண்பாட்டைப் பேணுவதற்கானதாக அது அமையக்கூடாது; உழைப்பவர் நலனோடு ஊடாட்டம் உடைய புதிய பண்பாட்டு இயக்கமாக அது அமைய வேண்டும். அதன் தொடர் வளர்ச்சி சரியான இலக்கை வகுத்து பொருத்தமிக்க மார்க்கத்தில் ஏற்ற வேலைத்திட்டத்தோடு சரியான மூல உபாயம்-தந்திரோபாயங்களோடு முன்னேறும் போது வலிமையான தலைமையைக் கட்டமைக்க இயலும். கூட்டுத் தலைமை மக்களிடமிருந்து மக்களுக்கு என்ற பாணியில் அத்தகைய புதிய பண்பாட்டு இயக்கத்தை முன்னெடுப்பதற்கு அமைவாக இன்று காலம் கனிந்துள்ளது.

Saturday, September 15, 2012

தமிழ்ப் பண்பாட்டு வரலாறு: சில மீள் பார்வை


சில மீள் பார்வைக் குறிப்புகள்

                               "இரட்டைத்தேசியமும் பண்பாட்டுப்புரட்சியும்" தொடரின் விவாதத்தை மேலும் புதிய தளமான இங்கு முன்னெடுக்கப்போகிறோம். எந்தவொரு முடிந்த முடிவான சித்தாந்தத்தையும் விலங்காக மாட்டிக்கொள்ளாத தோழர்கள் அங்கு அக்கறையோடு எதிர்வினையாற்றி வழிப்படுத்தியிருந்தது போன்றே இங்கும் என்னோடு உடனிருந்து விவாதித்து எமக்கான சரியான வழித்தடம் கண்டு பயணிக்க எந்தத்தடையும் இல்லை. எம்மை இவ்வழியே ஆற்றுப்படுத்தும் மார்க்சியம் எமது சமூகப் புறநிலை நிதர்சனத்தை புரிந்துகொள்ளவும், மக்கள் விடுதலையீட்டும் திசைவழி மாற்றவும் உதவுவதாயுள்ளதே அல்லாமல், எந்தவொரு தீர்க்கதரிசியின் முடிந்த முடிவான முன் கட்டளைகளின் பேரில் இயங்க வற்புறுத்தவில்லை.விவாதங்கள் விருப்புக்கு உகந்ததில்லை என அச்சங்கொள்பவர்கள் இருக்கவே செய்வர். அறிவுத்தேடல் என்பது செங்குத்துப் பாறையில் ஏறும் கடின முயற்சி எனும்வகையில் சிரமங்களுக்கு முகங்கொடுக்கத் துணிந்தவர்களே சிகரங்களைத் தொடவல்லவர்கள் என மார்க்ஸ் சொன்னதை மறவாதிருப்போம். எம்மைத்தான் ஏற்கனவே மார்க்ஸ்-லெனின்-மாஓ சிகரங்களில் கொண்டுவந்து அமர்த்திவிட்டார்களே,அதிலிருந்தாலே விடுதலை சித்திக்குமே, அதை நோக்கி மக்களை அறைகூவுவதற்கு ஒருப்படாமல் ஏன் விவாதங்களுக்கு எல்லாம் அழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என எரிச்சல்படும் தோழர்கள் இருக்கிறார்கள். விவாதிக்க வந்து ஏற்கனவே நம்பிய புனித முடிவுகளை மாற்ற நேர்ந்துவிடுமோ என அஞ்சுவர்.ஒரு கடும் ஆன்மீகப் பிரசங்கப் பீரங்கியையும் தீவிர நாத்தீக பேச்சாளரையும் நேருக்கு நேர் தர்க்க மோதலுக்கு ஏற்பாடு பண்ணி மக்கள் எது உண்மை என அறியக் கேட்போராய் இருக்கிறார்கள். மக்களுக்கு இருதரப்பிலும் மேலும் போதிய கருத்துவிளக்கம் வேண்டும்போல் இருந்திருக்கலாம்; மக்கள் முன் விட்டுக்கொடுக்காமல் சண்டப் பிரசண்டம் பண்ணி வீடு போன இருவரும் தெளிவாக மாறியிருந்தனர். ஆணித்தரமாக மாற்றுக்கருத்தை முறியடிக்க அப்படி விவாதித்தார்கள் அல்லவா, ஆட்களின் முன் விட்டுக்கொடுக்காவிட்டாலும், அடிமனம் அதிர்ந்து போனதால் ஆள்மாறாட்டம் நேர்ந்துவிட்டது. அவன் இவன் இப்போது இவன் அவன் ஆகிவிட்டார்கள். ஆன்மீகம் பேசியவன் நாத்தீகத்துக்கும் நாத்தீகம் பேசியவன் ஆன்மீகத்துக்கும் மாறிவிட்டனர்(பின்னாலே, தொடர்ந்து விவாதித்தால் இதையும் இழப்போமோ என்ற அச்சத்தில் விவாதக் களத்தைத் தவிர்த்திருக்கக் கூடும்; பின்னாலே கதை தொடர்ந்ததாக மேற்படி நாட்டார்கதையில் தகவல் இல்லை).இவ்வாறு அச்சங்கொள்ளும் ஆளுமைச் சிதைவு மார்க்சியர்களுக்கு ஏற்படாது. இயங்கும் களமும் காலமும் மாற்றங்களோடு புதுக் கோலம் பூணும்போது அது குறித்த விவாதம் அவசியம் என்பதை அவர்கள் அறிவர். ஏகாதிபத்திய ஒடுக்குமுறை ஆட்சியின் கீழ்த் தேசங்கள் சுதந்திரம் தவறிக் கெட்டிருந்த நிலை இன்று இல்லை. ஒடுக்கப்பட்ட தேசங்களை ஐக்கியப்படுத்திய பாட்டாளிவர்க்கப் புரட்சியூடாக சோஸலிஷத்தை வென்றெடுத்த சோவியத் யூனியன் நிதர்சனமாயிருந்தபோது, தேச விடுதலைப் போராட்டம் சோசலிசத்தின் பகுதியாக இருந்தது;
 சோவியத்தின் தகர்வின் பின்னர் விடுதலை பெற்ற முன்னாள் குடியேற்ற நாடுகளுக்குள் மோதல்களை ஏற்படுத்தும் அமரிக்க மேலாதிக்கத்தின் சதியின் பகுதியாக இனத்தேசியங்கள் கையாளப்படும் யதார்த்தம் அரங்கேறியுள்ளது. அடிமைத் தளையினின்றும் விடுதலை பெற்ற வறுமையுடையதான புண்ணிய பூமியென்று கூறியவாறு மேலாதிக்கம் கொள்ளும் இந்தியா அமரிக்காவுக்கு நிகராக எமது சுதந்திரத்தைப் பறித்து தொடர்ந்தும் எமது நாட்டினுள் தன் சேறாக்கலில் அல்லாடும் மீன் களுக்கு வீசும் புதுப்புது வலைகளில் பலதரப்பினரும் மாட்டியவாறு காலம் நகர்கிறது.உலகின் எப்பகுதியையும் விட காத்திரமான போராட்டங்களையும் தியாகங்களையும் நல்கிய இந்தியக் கொம்யூனிஸ்ட் அமைப்புகள் இன்றும் வேறெந்த நாட்டையும்விட பெரியனவாயும் வலியனவாயும் இருக்கவே செய்கின்றன; இருந்துமென்ன மக்களைவிட்டுக் காத தூரம் ஒதுங்கியபடிதான். ஏன்? மக்களைச் சரியாகப் புரிந்துகொண்ட கோட்பாடுகளுடன் இல்லை. வர்க்கப் பார்வை எனும் வலிய ஆயுதத்தைப் பெற்றபோதும் சாதியமைப்புடைய இந்தியச் சமூகம் பற்றிய தெளிந்த பார்வை போதிய அளவில் எட்டப்படாமலே உள்ளது. தனிநபர்கள் இதுதொடர்பில் சில முன்னேற்றங்களை எட்டியபோதிலும் கட்சிகள் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய படிதான். பெரும்பெரும் தத்துவ மேதைகளைக் கண்ட கட்சிகளும் நிலப்பிரபுத்துவத்துக்குரியதாக சாதியமைப்பைக் காணும் அவலம் தொடர்கிறது. இன்றும் சாதி இருப்பது நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சமாம்; நிலப்பிரபுத்துவத்துக்கு முன்னரே, புத்தர்காலத்தில் பேசப்பட்ட சாதி முன் தயாரிப்பாம். என்ன கொடுமை? சாதிப் பேய் வாராதிருந்தால் "மார்க்சே" என்று நிம்மதியாக வர்க்கம் பற்றிப் பாராயணம் பண்ணிப் பூசித்தே சோசலிசத்தைக் கண்டிருக்கமாட்டோமா?புரட்சிகர வர்க்க அணிதிரட்டல் மட்டுமே போதுமானதாக இல்லை. ஒடுக்கப்படும் தேசங்களினதும், ஒடுக்கப்பட்ட-பிற்படுத்தப்பட்ட சாதிகளினதும் கோரிக்கைகள்-தீர்வுகள் குறித்த தெளிவு அவசியம். சாதி-தேசங்களினுள் வர்க்கங்களுண்டு; அவற்றினுள் உள்ள பாட்டாளி வர்க்க நலனே முன் கவனிப்புக்குரியன. அனைத்து உழைக்கும் மக்களது ஒன்றிணைவுக்குத் தடையாக உள்ள சாதி-தேசப் பிரச்சனைத் தீர்வுக்கு அனுசரணையாக அவற்றின் சுயநிர்ணயம் குறித்த வரையறை வகுக்கப்படாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை. இது எமது மண்ணுக்கு மட்டுமுரியதல்ல. இன்று உலகளாவிய பிரச்சனையாகியுள்ளது. ஒடுக்கப்படும் தேசங்கள் புரட்சிகர சக்தியின் கவனிப்புக்குரியதான காலத்திலேயே இதற்கான கோட்பாட்டு உருவாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். புத்தம்புதிய சோவியத் உருவாக்கத்தில் வேறு அக்கறைகள் முன்னுருமை பெற்றமையால் இது கவனம்பெறாமல் போனது. சீன-சோவியத் தத்துவார்த்த மோதலில் திரிபுவாதம் குறித்த கோட்பாட்டுருவாக்கத்தை மாஓசேதுங் சிந்தனை மேற்கொண்டிருக்க வேண்டும். தவறிப்போயிருப்பினும், எமது வரலாற்று முன்னேற்றத்துக்கு சாதி-தேச நிதர்சனத்தில் சோசலிச முன்னெடுப்பு தொடர்பான கோட்பாடு உருவாக்கம் பெற அவசியம் ஏற்பட்டுள்ளது. தேசிய உணர்வு பாட்டாளி வர்க்கத்தையும் பற்றியுள்ள நிதர்சனத்திலிருந்து சோவியத் திரிபுவாதம் அறுபதுகளில் தோன்றிய சூழலை அணுகியிருப்பின் மாஓ சேதுங் சிந்தனை சோசலிச முகாம் தகர்வுறாமலே பாட்டாளி வர்க்க சர்வதேச உணர்வுடன் தத்தம் தேச-சோசலிசக் கட்டுமானத்தை முன்னெடுப்பது என்பதற்கான கோட்பாட்டை( திரிபுவாதத்துக்கான கோட்பாட்டையும்) கண்டடைந்திருக்க இயலும். இது சாதி-தேசங்களினுள் புரட்சியின் இணைவோடு உள்ள தொடர்பாடல். தேசக் கட்டுமானம் எப்படி சோசலிச நிர்மாணத்துக்குரியதாகலாம் என்பதற்கு மாஒசேத்ங் சிந்தனை வழி காட்டியிருப்பின் எமக்கான பாதை தெளிவாகியிருக்கும். தவறினால் என்ன, சாதியமைப்பில் வர்க்க அமைப்பு மாற்றம் குறித்த எமது வரலாற்று அனுபவத்தை வர்க்கப் பார்வையில் மீட்டுக் கோட்பாட்டு உருவாக்கம் கொள்ளும்போது சாதி-தேசப் போராட்டம் வாயிலாக சோசலிச நிர்மாணத்துக்குரிய கோட்பாட்டையும் கண்டு அடைந்தவர்கள் ஆவோம். இந்த நோக்கத்தோடு எமது இந்த சமூக உரையாடலைத் தொடர்வோம். சாதிபேதங்களில் பந்திக்கப்பட்ட எமது சமூகத்தில் வரலாற்று இயக்கமே இருந்ததில்லை எனும் கருத்துப் பழங்கதையாகிவிட்டது. இங்கு சமூக மாற்றங்கள் பண்பாட்டுப் புரட்சிவாயிலாக எட்டப்பட்டன என்பது போதிய கவனம்பெறவில்லை. இந்த அமர்வின் வாசிப்பில் அதனைப் பார்ப்போம். முன்னதாக, பண்பாட்டுப் புரட்சி இயக்கம் கட்டியெழுப்பட அவசியமுள்ளமையை வலியுறுத்தி, உண்மையில் அதனூடாக மேலெழும் வேலைப் பாணியாகவே இந்த உரையாடல் தொடரவேண்டும்.
 தேவை உணரப்படும்போது அமைப்பு கண்டிப்பாக உருவாகும்! புதிய பண்பாட்டு வெகுஜன இயக்கம் கவனம் கொள்ளவேண்டிய அம்சங்கள் சிலவற்றை பின்வருமாறு பட்டியலிடலாம்( இது பூரணமானதில்லை; உருவாகும் புதிய பண்பாட்டு இயக்கமே இதனை முழுமையாக வரைந்து செயலுருக் கொடுக்க இயலும். இது ஒரு முன்னோட்டம் மட்டுமே):
1. தேசத்தின் இறைமையை மீட்டெடுத்தலும் பாதுகாத்தலும்.
 2. தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையை முறியடித்தல்
.3. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்தலும் இனங்களிடையேயான நல்லுறவை வலுப்படுத்தலும்.
 4. சாதி ஒடுக்குமுறையைத் தகர்த்தல்.
5. பெண்ணொடுக்குமுறையைத் தகர்த்தல்
.6. உழைப்பின் உன்னதம் போற்றுதல்.
7. புதிய கல்விக்கோட்பாட்டை வகுத்து கற்றல்-கற்பித்தல் ஜனநாயக ஒழுங்கமைப்பை வென்றெடுத்தல்
.8. சுகாதாரம்-மருத்துவம் ஆகிய துறைகள் வணிகமயமாதலை முறியடித்தல்
.9. பொதுச்சேவையை மக்கள் நலநாட்டமுள்ளதாக விருத்தி செய்தல்.
10. விளையாட்டுத்துறை வணிகமயப்படுதலை முறியடித்து மக்கள் நலநாட்டமிக்கதாக்குதல்.
11. சிறுவர் பாதுகாப்பையும் உடல்-உள-ஆத்மீக விருத்தியையும் உத்தரவாதப்படுத்தல்.
12. தமிழ் நூல்கள், கலைகள், சினிமா போன்றவற்றின் பரவலில் தமிழ்நாடு-இலங்கை இடையே இருவழிப்பாதையை உத்தரவாதப்படுத்தல்.
                                               எமது சாதிய-வர்க்க சமூகத்தில் விழுமியப் பெறுமானங்கள் தலைகீழ் நிலைப்பட்டது. அதன்பேறே பஞ்சமாபாதகங்கள் பற்றிய புலம்பல். பயிரை மேயும் வேலியின் வளாகத்துள் எந்த விழுமியம் தன்னைத் தற்காத்துக்கொள்ள இயலும்? சாதிய-வர்க்க பேதம் தகர்த்து உருவாகும் புத்துலகில் எல்லோரும் உழைத்துண்ணும் உத்தமர் ஆவதற்கு அமை  வான புதிய பண்பாட்டு இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!சேர்ந்து செயலாற்ற அவசியமான உரையாடலைத் தொடர்வோம்!....

Wednesday, September 12, 2012

தேடலுடன் ... கூடங்குளமும்.கிழக்கும்,சுயநிர்ணயமும்


  பாரதியின் நினைவை வலியுறுத்திய செப்ரெம்பர் 11 கடந்த ஒரு நாளின் பின்னரே இந்தச் சமூக உரையாடலுக்குக் குந்தியிருக்கிறேன்; வேகமாகப் பல சங்கதிகள் கடந்து போய்க் கொண்டிருக்கையில் 'என்னத்தைப் பேசி, என்னத்தைக் கண்டோம்' என்ற வெறுப்பே மிஞ்சியிருந்ததால் ஆற இருந்து எதுவும் பேச வரவில்லை. வேளாங்கண்ணி- பூண்டி மாதா கோயில்களுக்கு யாத்திரை சென்ற சாதாரண சிங்கள மக்களைத் தாக்கியதை ஈழத்தமிழருக்கான மாபெரும் பிரதியுபகாரமாக தமிழக தமிழ்த் தேசியர்கள் மார்தட்டிக் கூறும்போது, அந்த இனவாதச் சங்காரத்தின் முன்னே கையறு நிலையில் வேதனையை மட்டும் பெருமூச்சாக்கி சில எதிர்ப்புக்குரல்களுடன் ஒதுங்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட ஜனநாயக சக்திகளைக் குறைகூற எதுவுமில்லை என்று புரிந்தது. புரிதலின் மறுகரையாய், இலங்கைத் தமிழர் மீதான இனச்சங்கார யுத்த முன்னெடுப்பில் சிங்கள முற்போக்கு சக்திகள் போதிய எதிர்ப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை எனக்குற்றம் சுமத்துவது எத்தனை அபத்தம் எனப் புரிந்தது. உண்மையில் அத்தகைய நல்லெண்ணங்கொண்ட பல சிங்கள ஜனநாயகர்கள் பேரினவாத அரசுக்கு எதிரான ஆக்கிரோசமான பதிவுகளைப் பல்வேறு களங்களில் வெளிப்படுத்தியிருந்தனர். இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழ்-சிங்கள பாசிச சக்திகள் கை மேலோங்கி இருப்பது மெய்யாயினும், தற்காலிகமானது. வெற்று நம்பிக்கை அலட்டலில்லை என்பதைக் கூடங்குளம் மக்கள் உணர்த்தி நிற்கின்றனர். ஜனனாயக சக்திகள் முன்னெடுக்கும் மக்கள் போராட்டம் எத்தனை கனதியானது என்பதற்கு அவர்கள் நேர் உதாரணம். தலைமை தாங்கிய உதயகுமார் தவிர்க்கவியலாத நிலையில் சரணடைய முற்பட்டபோது போராடும் மக்கள் அவரைச் சூழ்ந்து ஆர்ப்பரிப்போடு குண்டுக்கட்டாய்த் தூக்கித் தம்மோடு எடுத்துச் சென்று பாதுகாத்து, போராட்டத்தையும் தொடர்கின்றனர். தன்னைக் காக்க மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களைக் காவிச் செல்ல ஒரு தலைவர் உருவாகிய துன்பியல் தொடரப் போவதில்லை; மக்களுக்கான சரியான கோட்பாடு கண்டறியப்பட்டு ஏற்ற போராட்ட மார்க்கம் வகுக்கப்பட்டு முன்னேறும் போது தலைமைக்கும் புத்தூக்கமூட்டும் மக்கள் எழுச்சி இந்த உலகமயமாதலிலும் சாத்தியம் என்பதை மெய்ப்பிப்பதற்காகவே கூடங்குளம் மக்களுக்கான புரட்சிகர வணக்கங்களைக் கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.  

 சரியான கோட்பாடு என்பதில் சுயநிர்ணயத்தை இன்று எவ்வாரு வரையறைப்படுத்துவது என்ற சங்கதி பிரதான இடத்தை எடுத்துள்ளது. முன்னர் இலங்கைத் தேசியம் மட்டுமே உ ள்பொருளென்று ஈழத்தமிழ்த் தேசியம் அதற்குட்பட்டிருப்பது சாத்தியம் என்பதை மறுதலித்தது உண்மையேயாயினும் விரைவில் தவறைத் திருத்தி தமிழ்த் தேசியத்தையும் சுயநிர்ணயத்தையும் இலங்கைக் கொம்யூனிஸ்ட்டுகள் ஏற்பவராயினர். இன்றும் அதில் மாற்றமில்லை. பல கொம்யூனிஸ்ட்டுகள் பிரிந்துசெல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயத்தையே வலியுறுத்துகின்றனர். என்னைப் பொறுத்தவரை நூறு வருடங்களின் முன்னர் ஏகாதிபத்திய நேராட்சியில் குடியேற்ற நாடுகளாக நாம் இருந்த காலத்தில் பேசப்பட்ட அந்த வரையறை பெயரளவிலான சுதந்திரத்தை ஈட்டி, அதைப் பொருளுள்ளதாக்கப் போரடும் இன்றைய சூழலில் மாற்றத்துக்குரியது எனத் தோன்றுகிறது. குறிப்பாக, இடியப்பச் சிக்கலாக (பிட்டும் தேங்காய்ப்பூவும் போல) கலந்தே வாழும் சிங்கள-தமிழ்-முஸ்லிம்-மலையக மக்களை எப்படிக் கூறு போட்டுப் பிரிந்து செல்லும் உரிமை பேசப்போகிறோம்? நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் உணர்த்தும் யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டாமா? இதன் பிரதிநிதித்துவம் கறாரான உண்மை எனக்கொள்ளத்தக்கது இல்லை என்றபோதும் முழுதாகப் புறக்கணிக்கத்தக்கதுமல்ல என்பதறிவோம். முஸ்லிம் 15, தமிழ் 12, சிங்களம் 8 எனும்வகையில் அமையும் பிரதிநிதித்துவம் கிழக்கில் தமிழ்ப் பெரும்பான்மை என்பதைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. விரைவில் முஸ்லிம் பெரும்பான்மை என்பதும் காணாமல்போய், கிழக்கு சிங்களமயப்படவுள்ள வாய்ப்பை முஸ்லிம் மக்கள் உணர்ந்த அளவுக்கு தமிழ்த் தேசியர்கள் புரிந்ததாகத் தெரியவில்லை(சம்பந்தர் கேட்டும் ஹக்கீம் வரவில்லை என்ற தலைகீழ் யதார்த்தம் சந்தர்ப்பவாத அரசியலாளர் விவகாரம்; இதில் சம்பந்தர் சரி ஹக்கீம் தவறிழைக்கிறார் என்பதும் பொருளல்ல. இரு சிறு தேசிய இனத் தலைவர்களைக் கடந்து கிழக்கில் சிங்கள ஆக்கிரமிப்பு நிதர்சனமாகாது தடுக்க மக்கள் என்ன செய்ய வேண்டும், எது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதே இங்கு அக்கறைக்குரியது). செய்யக்கூடாததைச் செய்வதும், செய்யவேண்டியதைச் செய்யாதிருப்பதும் கேடு விளைப்பதாகும் என்பது குறளில் வலியுறுத்தப்பட்டிருந்த ஓர் உண்மை. சிங்கள மக்கள் தத்தமது வாழிடங்களில் தமது வாழ்வாதாரங்களை வென்றெடுக்கப் போராடும் வகையில் நாம் உதவ இயலும். எமது நடைமுறையில் செய்ய வேண்டியதையும்-தவிர்க்க வேண்டியதையும் இனங்காண நாம் முயல்வதில் அது தங்கியுள்ளது. பிரிவினையால் தமக்கு கேடு நேரும் என்ற சிங்கள மக்களது அச்சத்தைப் போக்கி, அதேவேளை வடக்கு-கிழக்கில் எமது சுயநிர்ணயத்தை வென்றெடுக்க சிங்கள மக்களையும் ஏற்புக்கொள்ளவைப்பதற்கு பிரிவினையற்ற சுயநிர்ணயக் கோட்பாடு குறித்த விவாதமே இன்று அவசியமாகிறது. வடக்கை மட்டும் பிரிப்பதா, கிழக்கின் தமிழ்ப் பகுதியை சேர்த்துக்கொண்டு பிரிவதா(ஊடறுத்து நிற்கும் முஸ்லிம்-சிங்களக் கிராமங்களை என்ன செய்வது), தென் கிழக்கு முஸ்லிம் மக்களை பிரிந்துபோக அனுமதிப்பதாயின் வடக்கு-கிழக்கு பிராந்தியத்துக்குட்பட்ட முஸ்லிம் கிராமங்களின் நிலை என்னாவது எனக்கேள்விகள் ஆயிரமுண்டு. சுயநிர்ணய விவாதத்தை சிங்கள-முஸ்லிம் முற்போக்கு சக்திகளோடு இணைந்து முன்னெடுப்பதிலேயே இவற்றுக்கான தீர்வுகள் தங்கியுள்ளன. இல்லாமல் யூக்கோஸ்லவாக்கியா, திமோர், சூடான் போல ஏகாதிபத்திய வேட்டைக்காடாக இந்த இலங்கை மண்ணை ஆக்கப்போகிறோமா? தொடரும் சிங்கள-தமிழ்-முஸ்லிம் இனவாத சக்திகளின் முன்னே முற்போக்கு சக்திகள் கையறுநிலையில் இருப்பது நீடிப்பின் அந்த அச்சுறுத்தலின் படிப்பினையையும் கண்டுதான் திருந்துவோமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறாகினும், இன்று முன்னெடுக்கும் ஆரோக்கியமான விவாதமும் அதுசார்ந்த ஒன்றுபடலும் அழிவின் கொடூரத்தையாவது குறைக்க ஏதுவாகும். அந்த நம்பிக்கை இல்லாமல் இல்லை. சில சிங்களக் கட்சிகள் வெளியிட்டுள்ள "மக்களைப் பிளவுபடுத்தும் இனவாதத்தை தோற்கடிப்போம்" என்ற துண்டுப்பிரசுரம் அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவுள்ளது; தெற்கில் முஸ்லிம் பள்ளிவாசல்கள்மீது சிங்கள இனவாத சக்திகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை  வன்மையாகக் கண்டித்து அனைத்து இன மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்துக்கு அறைகூவல்விடுத்துள்ளது.  இனவாதத்தைக் கடக்க எத்தனிக்கும் நேசசக்திகள்  நாம் கோரும் சுயநிர்ணயம் குறித்த விவாதத்தில் இணைவர் என நம்ப இடமுண்டு. "ஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி, சூழ்ந்திடும் இருள் அகல்வதும் உறுதி".


Saturday, August 11, 2012

இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப்புரட்சியும் -9 "மற்றொரு தொடக்கத்துக்காக"

"மற்றொரு தொடக்கத்துக்காக"

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்த முடிவுரை. இரட்டைத் தேசியம் குறித்த விவாதம் ஒருவகையில் முடிவடைந்த மாதிரித்தான். இதனைச் சந்தேகித்து (எவ்வகையில் என்பது குறித்துப் பின்னாலே பார்ப்போம்) எதிர்த்த பல நண்பர்கள், அது அவசியமற்றது எனக் கண்டு மௌனித்துள்ளார்கள். அவர்கள் இரட்டைத் தேசியக் கோட்பாட்டை விளங்கி ஏற்றுள்ளார்கள் எனும் உண்மையைப் புரிந்து கொள்ளாமலே இதனை இருட்டடிப்புச் செய்ய விரும்பும் 'மாற்றம்பெறாத புனித மார்க்சிய வசனப்பக்தர்கள்', எல்லாம் ஒருவழியில் ஓய்வுக்கு வந்துவிட்டதாக மகிழ்வர். "மரம் ஓய்வை விரும்பிய போதிலும் காற்று அதனை அனுமதிப்பதில்லை". 
இதனை முடிவுரை என்று தலைப்பிடாமல் "மற்றொரு தொடக்கத்துக்காக" எனக் கூறியிருப்பது காரணத்தோடுதான். பண்பாட்டுப் புரட்சியைக் கோட்பாட்டு வடிவங்கொடுக்கும் வகையில் தனது சமூக மாற்ற வரலாற்றை முன்னெடுத்த தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை மறுவாசிப்புக்குள்ளாக்கும் ஒரு புதிய தொடரை எழுத ஏற்றதாக இந்தத் தொடர் முடிவு பெறுகிறது. இப் பேசுபொருளை பூரணமாய்ப் புரிந்துகொள்ளவும், எமது வரலாற்றுப் போக்கை விளங்கிக்கொண்டு செயலில் இறங்கவும் அந்தப் புதிய தொடர் அவசியமாகும். எமது செயற் களத்துக்கான முன்னுரையாக உள்ள இத்தொடர் இச்சந்திப்போடு நிறைவுறும்.
தவிர, எந்தக் கோட்பாடும் முடிந்த முடிவாகிவிடுவதில்லையே; நடைமுறை அனுபவங்களைத் தொகுத்து உருவாக்கப்படும் ஒரு புதிய  கோட்பாடு தொடரும் நடைமுறைக்கான மார்க்கத்தை வடிவமைத்துத் தந்து பிரயோகிக்கப்படுகையில், முகங்கொள்ளும் இடர்ப்பாடுகளுக்கு அமைவாக புதிய செழுமைப்பாட்டுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். அதற்கு இடந்தரும் வகையில் முடிவில்லாத் தொடர் வளர்ச்சிக்குரியதாக சரியான கோட்பாடு கட்டமைக்கப்பட வேண்டும். மிகுந்த இடர்ப்பாட்டில் தொடரமுடியாத முடக்கத்துக்குள்ளாகும் கோட்பாட்டைக் கைவிட்டு புதிய கோட்பாட்டை வரித்துக் கொள்வதாக வரலாற்று வளர்ச்சி இயங்கியவாறுள்ளது. அவ்வாறு புதிய கோட்பாடுகளின் வழி மக்கள் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுப்பதாக மார்க்சியம் உள்ள காரணத்தினாலேயே, அது இறந்துவிட்டது என்று எக்காளமிட்டவர்களையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியவாறு புத்தொளி பெற்று மீண்டும் தேடலுக்குரிய தத்துவமாகியுள்ளது மார்க்சியம். 
மார்க்சியம் அதன் தொடக்க நிலையில் ஐரோப்பாவில் சோஸலிசம் வெற்றிகொள்ளப்படும் வகையில் பாட்டாளி வர்க்கப் புரட்சி சாத்தியமாகும் எனக்கருதியது; ஒரு நாட்டில் வெற்றிபெறும் பாட்டாளி வர்க்கப் புரட்சி உடன் ஐரோப்பா பூராகப் பரவுவதன் வாயிலாக உலகம் சோசலிச மாற்றம்பெறும் எனக் கருதப்பட்டது. ருசியப்புரட்சி சாத்தியமான போதிலும், லெனினிசத்தின் வழி தனியொரு நாட்டில் சோசலிசத்தைச் சாத்தியமாக்குவது எனும் புதிய கோட்பாடு வரிக்கப்பட்ட நிலையிலேயே அவ்வெற்றி சாத்தியமாக முடிந்தது. "உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" எனும் மார்க்ஸ் எதிர்பார்த்தவாறான உலகப் புரட்சிக் கோட்பாட்டை பிரயோகித்திருப்பின் சோவியத் ருசியா படைக்கப் பட்டதனூடாக முக்கால் நூற்றாண்டு சோசலிசச் சாதனையை உலகு கண்டிருப்பதும் நிறைவேறாமல் போய், மார்க்சியம் நடைமுறைச் சாத்தியமற்றதோ எனும் சந்தேகம் எழுந்திருக்கும் (வேறு வடிவில் புதிய கோட்பாட்டை மர்க்சியம் வழங்கி மக்கள் விடுதலை சாத்தியப்பட்டிருக்குமாயினும், மிகுந்த சிரமங்களையும் கால தாமதத்தையும் கண்டிருக்க நேர்ந்திருக்கும்).
மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் எதிர்பார்த்தவாறு மேற்கு ஐரோப்பா பூராவிலும் ஒரேவேளையில் பாட்டாளிவர்க்கப் புரட்சி ஏற்படாமல் போனது ஏன்? அப்போது ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கத்துக்கும் அங்குள்ள முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயான முரண்பாடே பிரதானமானதாக இருந்தது. அவர்களின் மறைவைத் தொடர்ந்து, லெனின் காலத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது ஏகபோக மூலதனத்தைக் குடியேற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்த நாடுகளைச் சுரண்டுவது தீவிரம் பெற்றபோது, ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஒடுக்கப்பட்டநாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு பிரதான இடத்தை எடுத்தது. எடுக்கவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பாட்டாளி வக்க - முதலாளி வர்க்க முரண் கூர் மழுங்கலாயிற்று.
கிழக்கு ஐரோப்பிய - ஆசியக் கண்டங்களுக்கான ருசியாவில் புதிய எழிச்சியோடு வரலாற்று அரங்குக்கு வந்த பாட்டாளி வர்க்கம் லெனின் தலைமையில் புதிய கோட்பாட்டை வகுத்து மார்க்சியத்தை வளர்த்தெடுத்து, ஒடுக்கப்பட்ட தேசங்களையும் விவசாயி வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்தி சோசலிசத்தைச் சாத்தியமாக்கிக் காட்டியிருந்தது. அதன் பின்னர் பாட்டாளி வர்க்கப் புரட்சி நிகழவில்லை என்பதால் மார்க்சியம் தோற்றுப்போய்விடவில்லை. ஏகாதிபத்தியத்துக்கும் ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கும் இடையேயான முரண்பாட்டில் பாட்டாளி வர்க்கச் சிந்தனை வழிகாட்டலோடு சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கியூபா, வியட்னாம், வட-கொரியா போன்ற நாடுகள் எட்டிய சுதந்திரந்திரத்தினூடே சோசலிசத்தை வென்றெடுக்கும் வரலாற்றைத் தொடர்ந்தனர். 
இது தொடர்பில் மாஓ சேதுங் சிந்தனை பெறும் முக்கியத்துவத்தை அறிவோம். நகரங்களில் தொழிலாளர் புரட்சியை எதிபார்த்திருந்த சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியைக் கிராமங்களுக்கு ஆற்றுப்படுத்தி தேசப்பற்றுள்ள அனைத்து வர்க்கத்தினரையும் பாட்டாளிவர்க்கச் சிந்தனையின் கீழ் அணிதிரட்டி சீனப்புரட்சி வெற்றிவாகை சூட மா ஓசேதுங் சிந்தனை வழிவகுத்தது. தனித்த வழித் தடத்தில் முற்றிலும் தேசிய விடுதலைப் போராட்டமாகவே அமைந்த கியூபப் புரட்சியும் விரைவில் பாட்டாளி வர்க்கச் சிந்தனைத் தலைமைக்கு வர இயலுமாயிற்று. சுதந்திரத்தை வென்ற வேளையிலும் மார்க்சியத்தை ஏற்பதா இல்லையா என்ற தயக்கத்தோடு இருந்த தலைவர் பிடல் காஸ்ற்றோ விரைவில் கொம்யூனிஸ்ட் ஆகும் வகையில் வரலாற்று நெருக்கடி அமைந்தது; மார்க்சிய வழிகாட்டல் இல்லையெனில் தேச விடுதலையையும் பாதுகாக்க இயல்லாது எனக்கண்ட பின்னர் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆழமாக மார்க்சியத்தைக் கற்றுப் பிரயோகித்த பிடலும், அவரை மார்க்சியத்தை ஏற்கவைக்க கடுமையாக உழைத்த அவரது உற்ற நண்பர் சே குவேராவும் இன்று மார்க்சியச் சிந்தனைத் தேடலாளர்களது பிரதான நாயகர்களாகியிருப்பது தற்செயலானதல்ல - தேசிய விடுதலைப் போர்க்குணத்தின் வாயிலாகச் சோசலிசத்தை வென்றெடுக்கும் அவசியத்தோடு தொடர்புடையது அது.
இந்த அம்சத்தில் முன்னர் அதிக முக்கியத்துவம்பெற்று, இன்று காலவோட்டத்தின் மறதிக்கு உள்ளாகும் மற்றொரு தலைவரான ஹோசிமின் கவனிப்புக்குரியவர். அவர் தலைமையில் முதலில் வியட்னாம் தேச விடுதலை மூலமாக சோசலிசத்தை அடையும் முன்னோடி நாடு எனப் பிரகடனப்படுத்தியிருந்தது, ஏகாதிபத்தியத் தலையீட்டால் அது முறியடிக்கப்பட்ட போதிலும் பின்னர் அவ்வழியில் சோசலிசத்தை வென்றெடுக்கும் தேச விடுதலையைப் பெற்றிருந்தது. ஐரோப்பிய நாடுகளில் இருபதாம் ஆண்டுகளில் வாழ்ந்த ஹோசிமின் மூன்றாம் அகிலம் தேசிய விடுதைக்காகப் போராடும் நாடுகளின் பால் சரியான வழிகாட்டலைக் காட்டுவதற்கு உதவும் வகையில் உழைக்க முடிந்தது. இது குறித்து யெவ்கனி கொபலெவ் எழுதியுள்ள "ஹோசிமின்" (தமிழிலில் க.விஜயகுமார்) எடுத்துக்காட்டியுள்ளமை கவனிப்புக்குரியது. ஏற்கனவே அவ்வழியில் செல்லும் கோட்பாட்டை லெனின் வகுத்து வழங்கியிருந்தமையை அறிவோம்.
லெனினிசம் இவ்வகையில் பெறும் முக்கியத்துவத்தை ஹோசிமின் வார்த்தைகளினூடாகக் காண்போம்: "முதலில் கம்யூனிசமல்ல, தேசியமே என்னை லெனின் மீதும் அகிலத்தின் மீதும் நம்பிக்கை கொள்ளச்செய்தது. படிப்படியாக போராட்டத்தின் போக்கில் நான் மார்க்சிய-லெனினியத்தைக் கற்றும், நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வந்தேன். உலகம் முழுவதும் உள்ள அடிமைப்பட்டுக்கிடக்கும் நாடுகளுக்கும், உலகெங்குமுள்ள தொழிலாளர்களுக்குமான விடுதலை என்பது சோசலிசத்தினாலும் கம்யூனிசத்தினாலும் மட்டுமே வென்றெடுக்கப்பட முடியும் என்ற முடிவுக்கு இறுதியாக நான் வந்து சேந்தேன். எவ்வாறு தேசபக்தியும் பாட்டாளிகளின் சர்வதேசியமும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்துள்ளன என உணர்ந்தேன்" ("ஹோசிமின்" ப.82).
இவ்வகையில் தேச விடுதலைக்கும் சோசலிசத்துக்கும் இடையேயான உறவை ஏற்காமல் இல்லை, பிரச்சனை தேசியத்தைப் பிளவுபடுத்தும் உங்கள் இரட்டைத் தேசியக் கோட்பாட்டில்தான் உள்ளது என்கிறீர்களா. ஒட்சிசனையோ, நைதரசனையோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள் என்றால் அதற்கு முன்னர் அந்த வாயுக்கள் வளிமண்டலத்தில் இல்லாமலா இருந்தது? இருக்கத்தான் செய்தது; இவற்றைக் கண்டுபிடித்த பின்னர் பல விளங்காப் புதிர்களுக்கு விடை கண்டறிந்து மனுக்குலம் முன்னேற இயலுமாயிற்று. எமது சாதியச் சமூகம் ஒடுக்குவோர்-ஒடுக்கப்படுவோர் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் சமூக சக்திகளாக சாதிகளை இன்றும் கொண்டுள்ள நிலையில் தேசியம் ஏற்கனவே ஒடுக்குவோருக்கானது-ஒடுக்கப்பட்
டோருக்கானது எனப் பிளவு பட்டுள்ளமையைக் கண்டறிந்து அதற்கமைவாக எமது விடுதலைத் திசைமார்க்கத்தைக் கண்டறிய முயல்வதே இரட்டைத் தேசியக் கோட்பாடு மேற்கொள்ளும் முயற்சியாகும். ஈழத் தமிழ்த் தேசியம் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தமக்குள் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூக சக்திகளுக்கான சுய நிர்ணயத்தை வழங்குவதன் வாயிலாக ஒரே தேசிய அபிலாசைக்குள் ஐக்கியப்படுத்த இயலும் என்றே கூறுகிறோம். தவறும் பட்சத்தில் எதிரிகளால் பயன் படுத்த ஏற்ற எதிர்த் தேசியத்தை விட்டுவைத்தவர்களாவோம்.
இப்படிச் சொல்லும்போது எதிரிகளால் பயன் படுத்தப்படலாம் என்பதாலே தான் இரட்டைத்தேசியம் குறித்து தேடல் கொள்ள வேண்டுமா எனக் கேட்கப்படுகிறது. இல்லை, எமக்கான ஏற்றத்தாழ்வான சமூக உருவாக்கமே ஒடுக்கும்- ஒடுக்கப்படும் தேசங்கள் போன்று மருதத் திணையால் ஏனைய திணைகள் ஒடுக்கிச் சாதிமுறை வாயிலாக சுரண்டப்படுதல் சார்ந்தது என்கிற வகையில் தேசத்துக்கான முந்திய வடிவம் ஒன்று நவீன தேசிய உருவாக்கத்துள் கொண்டிருக்கும் பிரச்சனையை விளங்கிக்கொள்ள வேண்டும். நிதர்சனமாயுள்ள இந்தப் பிளவாக்கத்தை நிவர்த்திசெய்து ஈழத்தமிழ்த் தேசியத்துக்கான சுயநிர்ணயத்தை வென்றெடுக்க வேண்டுமாயின் கசப்பான உண்மைகளைக் கற்றறிந்தாக வேண்டியவர்களாயுள்ளோம். நெருப்பு சுடும் என்பதால் சுட்டுவிடுவதில்லை, சாதிய இழிவு எனும் நெருப்போடு இருக்கிறோம் என்று சொல்வதால் சாதி வந்துவிடுகிறது எனப்படுகிறதா? அவ்வாறாயின் நனவிலி மனதில் உறைந்துள்ள சாதிமனம் ஏற்படுத்தும் சூடுபற்றி சுயவிமர்சனம் கொள்ள அவசியமுள்ளது என்ற புரிதலோடு ஏற்ற கற்றலுக்கான "வைத்தியரை" நாடுங்கள்.
இன்னொருவகையில் வேறொரு நியாயமான சந்தேகம் சில நண்பர்களிடம் உண்டு. பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டைக் கைவிட்டு ஒடுக்கப்படும் சாதித் (தலித்) தலைமையில் போராட வேண்டும் என்கிறீர்களா? இது மற்றொரு யதார்த்தம்; மிகப்பெரும்பான்மையான தலித் மக்கள் தொழிலாளர்களாயே உள்ளனர். அப்படியிருந்தும் சமூக மாற்றப் போராட்டத்தை பாட்டாளி வர்க்க நோக்கிலேயே முன்னெடுக்க வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் வலியுறுத்திவந்தோம். இதுவரையான வரலாற்றில் பாட்டாளி வர்க்கம் மட்டுமே தனது இருப்பையும் ஒழித்துக்கட்டினால் மட்டுமே ஈடேற்றம் என்ற யதார்த்தத்துடன் தோன்றியது; இழப்பதற்கு எதுவுமற்றதாகத் தோன்றி சோசலிசத்தின் வாயிலாகப் புத்துலகம் படைக்கக் கிடைத்த வாய்ப்பினாலேயே அவ்வர்க்கத்தால் மார்க்சியத்தைச் சிருஸ்டித்துத் தர இயலுமாயிற்று. அந்த மார்க்சிய வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சாதியத்தகர்ப்புப் போராட்ட அனுபவங்களின் தொகுப்பாகவே இரட்டைத்தேசியக் கோட்பாடு வெளிக் கிளம்பியிருந்தது என்பதை இத் தொடரில் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். 
வர்க்கப்பார்வை சாதிச் சமூக வரலாற்று வளர்ச்சிச் செல்நெறியைக் கண்டறிய இடந்தராத தோற்றமயக்கத்தை ஏற்படுத்த அவசியமில்லை; வர்க்கப்போராட்டம் மட்டுமின்றி தேசிய விடுதலைப் போராட்டமும் சோசலிசத்தை வென்றெடுக்க வழி கோலியுள்ளது என்ற வரலாற்றை மறுக்கவும் அவசியமில்லை. வர்க்கம் போல தேசமும் சாதியும் 'சமூக வர்க்கமாய்' ஒடுக்கலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும்போது வர்க்கப் போராட்டத்தின் வேறொரு வடிவமாகவே சாதி-தேச விடுதலைப் போராட்டங்களும் அமைவன என்பதை ஏற்பதற்கும் தடையிருக்க அவசியமில்லை. இந்த ஒடுக்கலில் பண்பாட்டு ஒடுக்கலுக்குள்ளாகும் நிலை காரணமாக பண்பாட்டுப் புரட்சிக்குள்ள இடத்தை நிராகரிக்கவும் அவசியமில்லை. பண்பாட்டுப் புரட்சியூடாக சமூக மாற்றத்தைச் சாத்தியமாக்கிய வேறுபட்ட வடிவத்தை தமிழ்ப் பண்பாட்டு வரலாற்று மறுவாசிப்பு வாயிலாக கண்டறிய இயலும். அதை மற்றுமொரு புதிய தொடரில் மேற்கொள்வோம். தொடர்வோம்...