Wednesday, February 15, 2012

இரண்டக நிலையும் இரண்டு மனமும் - ந.இரவீந்திரன்

இரண்டக நிலையும் இரண்டு மனமும் - ந.இரவீந்திரன்

நாற்பது ஆண்டுகளின் முன்னர் எங்களுர் பாட்டுப்பெட்டிகளில் எல்லாம் ஒலித்த ஒரு பாடல் 'இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்பேன் - நினைத்துவாட ஒன்று, மறந்து வாழ ஒன்று'ளூ இரண்டு என்றால் பன்மை என்பதால் மனங்கள் என்றல்லவா வந்திருக்க வேண்டும் என்று எவரும் கேட்பதில்லை. பாட்டை அனுபவித்துவிட்டு எவராவது இலக்கண ஆராய்ச்சியில் இறங்குவார்களா எனக் கேட்கலாம். அப்படி அபசுரமாய்ப் பல விடயங்களை வெட்டி ரணகளம் பண்ணுவதாய் இல்லாமல் எமது சமூகம் இயங்கிவந்ததில்லை. தவிர, நாரதர் கலகம் நன்மைக்கே என்றவகையில் ரணகளப்படும் போராட்டங்கள் வாயிலாக அநேகமாய் நன்மையான முடிவுகளை நாம் பல சந்தர்ப்பத்தில் எட்டியுமிருக்கிறோம்.

     அதெப்படி, சண்டை மூட்டுவதே கெட்ட நடத்தை – அது நன்மையில் முடிவதாவது? அதுவே இயற்கை. எங்கும் கெட்டது ஒட்டுமொத்தமாய் ஒரேயிடத்திலும், நல்லதெல்லாம் பிறம்பாய்த் தனியிடத்திலும் இருந்துவிடுவதில்லை. ஒவ்வொன்றிலும் கெட்டதும் - நல்லதும் உடனுறைவன, கெட்டது ஒருநிலையில் நல்லதாகவும் ஆகிவிடலாம், சரியாகக் கையாளத் தவறுகையில் நல்லதே கெட்டதாயும் மாறிவிடவும் ஏற்றதாயே உலகப் போக்கு அமைந்துவரும்.

     இது, இது, இதுவே அந்த இரண்டு மனம். இரண்டாய் இருந்தும், ஒன்றாய் - ஒரு மனமாய் எம்முள் உறைவது. நினைப்பதற்கு அவசியமற்றது தானே மறந்துபோயிருக்கும். மறக்க நினைக்கையிலேயே அது நினைக்கப்படுவதாகிவிடுகிறதே! மறக்கவும் முடியாமல், நினைவுச் சுமையைத் தாங்கவும் இயலாத தவிப்பின் அங்கலாய்ப்பு அந்தவரிகள்.

     ஒரேயிடத்தில் எதிர்நிலைகளின் இருப்புக்கு மற்றொரு உதாரணமாய் இருபது வருடங்களின் முன்னர் வந்த 'நாயகன்' படக்காட்சி ஒன்று உண்டு. நாலுபேர்களுக்கு நல்லது செய்வதற்காக சட்டமீறலோடு கள்ளக்கடத்தல் செய்யும் நாயகன் தனது கரங்களில் சட்டத்தை எடுத்துச் செய்யும் சமூக மீறல்கள் காரணமாக மகளிடமிருந்து எதிர்ப்பை சந்திப்பான். அவனை நிராகரித்து வெளியேறிக் கணவனோடு வாழும் மகள்வழிப் பேரன் தாத்தாவிடம் கேட்பான், 'நீங்கள் நல்லவரா, கெட்டவரா?'

மக்களால் நேசிக்கப்படும் அந்த நாயகன் நல்லவன்ளூ மகளினால் சட்டமீறல் குற்றவாளியாகப் பார்க்கப்படும் அதே ஆள் கெட்டவன். தன்னை உணர இயலாத அங்கலாய்ப்போடு பேரக் குழந்தையிடம் அந்த நாயகன் சொல்வான்: 'தெரியலியேப்பா!'

அவலச் சுவையின் உச்சமாய் இருக்கும் அந்தக்காட்சியை மீட்டுருவாக்கி விவேக் நகைச்சுவையோடு 'தெரியலேப்பா' என்பதும் பிரபலம். அதீத துயர் இவ்வகையில் சிரிப்புக்குரியதையும் தன்னுள் கொண்டிருப்பதைப் போலவே ஒருவருக்குள் நல்லதும் கெட்டதும் பங்குபோட்டு குடித்தனம் பண்ணக் காண்கிறோம். அது அந்தப் படைப்புக்கு மட்டும் உரியதல்ல, உண்மையில் ஒவ்வொருவரிடமும் அந்த இரு அம்சங்களும் இருப்பதே நிதர்சனம்.

எமது பண்பாடு கடவுள் - அரக்கர் என்ற எதிர்நிலைகளைக் கட்டமைத்திருப்பதால் ஒவ்வொருவரையும் கடவுளாகவோ அன்றி அரக்கராகவோ (சாத்தானாகவோ) பார்க்கப் பழகிவிடுகிறோம். மாறாக, ஒருவரிடமே இரு அம்சங்களும் சாத்தியமென உணர்ந்து, கடவுள் குணம் வெளிப்படுவதை ஊக்கப்படுத்துவதும், அரக்க குணம் மேலோங்குகையில் தயங்காமல் எதிர்ப்பதும் அவசியம். ஒருவரை எதிர்க்க முற்படுகையில் அவரிடம் நல்லது எதுவும் இருக்காது எனக் கருதுவதோ, ஏற்கப்படும் ஒருவரை விமரிசனப் பார்வை ஏதுமின்றி கண்மூடித்தனமாகப் பக்தி விசுவாசம் செய்வதோ ஏற்புடையதல்ல.

இந்த உண்மை தனிநபர்களுக்கு மட்டுமல்ல, ஆட்களின் கூட்டாக உருவாகும் அமைப்புகளுக்கும் பொருந்தக்கூடியது. என்மீது தாக்குறவைக் கொண்டுள்ள எனது ஊரின் இரு அமைப்புகள் சார்ந்த அனுபவப் பகிர்வூடாக இந்த விடயம் தொடர்பில் அலச எண்ணம்.

தலைப்பில் இரண்டு மனம் என்பதோடு இரண்டக நிலை என்பதையும் சேர்த்திருந்தபோதிலும் இங்கு அதுபற்றி அதிகம் பேசப்போவதில்லை. அவ்வாறிருந்தும் அது இடம்பெறக் காரணம் இரண்டக நிலையாக இல்லாத இரண்டு மனம் சார்ந்த இயக்கச் செல்நெறியின் தன்மையை அழுத்த விரும்புவதை உணர்தலே.

இரண்டு மனம் என்பது எதிர்நிலைகள் தமக்குள் மோதி, பலமானது -  நல்லது மேலெழுவது வாயிலாக மானுடம் மேல்நிலை எய்திவருவதைக்காட்டும் ஒரு பண்புநிலை.

இரண்டக நிலை என்பது செயலற்ற முடக்கத்துக்கு இட்டுச் செல்வது. இருதலைக்கொள்ளி எறுப்பு என்பதாக ஒரு மரபுத்தொடர் உண்டு. இரு திசையிலும் போக இயலாத நிலையை உணர்த்தும் தொடர் இது.

இன்றைய உலகமயமாதல் சூழலில் இத்தகைய இரண்டகநிலை ஏற்பட்டு பல அமைப்புகளிலும் எமது தேசிய இனத்திலும் குழப்பங்களை உருவாக்கி முன்னேற இயலாத முடக்கங்கள் ஏற்பட்டிருப்பதைப் பற்றியும் விரிவாகப் பேச வேண்டும். இந்தக் கட்டுரையின் அளவு குறித்து அதனை அடக்கிவாசித்து, இரண்டு மனப்போராட்டம் ஆரோக்கியமான இயங்காற்றலை ஏற்படுத்திய 'அந்தக் காலத்தின்' இனிய நினைவு மீட்டலை இங்கு பதிந்து வைப்பது பயனுள்ளது எனக் கருதுகிறேன்.

எங்களுடைய பனிப்புலம் கிராமம் அம்மன் கோயில் - அம்பாள் சனசமூக நிலையமும் வாசிகசாலையும் (இவை ஒரே வளவினுள் அமைந்துள்ளன) என்பவற்றை மையமாக கொண்டுள்ளது. ஒரு முனையில் உள்ள காலையடியில் எனது வீடு. என் வீட்டின் பின்னால் காலையடி மறுமலர்ச்சி மன்றம் (கா.ம.ம.). கோயிலும் வாசிகசாலையும் எனது சமூக வாழ்வின் அரிச்சுவடியைத் தொடங்கிவைக்க மன்றம் என்னை இளைஞனாக முறுக்கேற்றி வளர்த்தது.

அப்போது எனக்கு நாலைந்து வயதாயிருக்கலாம் (1959 – 1960)ளூ அம்மன் கோயிலின் வெள்ளிக்கிழமை பசனையில் 'தோடுடைய செவியன்...' தேவாரத்தைப் பாடி எல்லோரையும் அசரவைத்தேன். இன்றும் பசுமையான அந்த நினைவுகள்! மூன்றுவயதில் சம்பந்தர் உமாதேவியாரின் ஞானப்பாலைக்குடித்து பாடியதை, அட்லீஸ்ட் யானைப்பால்கூடக் குடிக்காமல் நாலைந்து வயதுக் குழந்தை பாடினால் ஊர் ஆச்சரியப்படாதா? என்ன, அந்த ஒரு தேவாரம் தவிர வேறெதையும் இன்றுவரை என்னால் பாடமாக்கி ஒப்புவிக்க முடியவில்லை என்பது வேறொரு தனிக்கதை.

அம்மாளின் குஞ்சுகளில் ஒன்றாய் கோயில் வீதிப்புழுதியழைந்து வளர்ந்தகாலை, அடுத்து நினைவில் ஆணியடித்துப் பதிந்து கிடப்பது 1967 இல் வாசிகசாலையில் இரவுப்பாடசாலைப் படிப்பும், அதன் முன்பின்னாக அங்கு இடம்பெற்ற போட்டிகளும். விளையாட்டுப் போட்டியில் எதையும் சாதித்த நினைவில்லை (இருந்தால்தானே நினைவில் பதிய). கட்டுரைப் போட்டியொன்றில் இரண்டாம் இடம் எடுத்திருக்கிறேன் (இரண்டு பேர்தான் பங்கெடுத்தோம் என்பதை எவருக்கும் சொல்லிவிட வேண்டாம்).

அந்த உத்வேகம் தொடர இயலாமல் அவற்றை செயலாக்கிய இளைஞர்கள் தொழில்நாடி சிதறிப்போய் இருக்க வேண்டும். வாசிகசாலையின் இயக்க வேகம் மந்தப்பட்டிருந்தபோது, இன்றைய மன்ற வளவு எங்களுக்கு களம் அமைக்க ஏற்றதாய் உள்ளீர்த்தது. முன்னதாக அது வெற்றி என்பவரால் பராமரிக்கப்பட்ட மடமொன்றை மையமொன்றாய்க் கொண்டிருந்த 'வெற்றி மடம்'. அதனுள் ஊரவர் எவரும் பொதுநோக்கில் கால் பதித்ததில்லை. வெற்றியின் பராமரிப்பிலிருந்து அக்குடும்ப உறவினருள் ஒருவரான கந்தையா வாத்தியார் பொறுப்பில் அந்த மடம் வந்தபோதுதான் எங்களால் உள்நுழைந்து விளையாட இயலுமாயிற்று.

ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்று மடப் பராமரிப்புக்காக வந்த கந்தையா வாத்தியார் ஆசிரியர் பண்பு தொடர்ந்து குடிகொண்ட மனத்தோடு எங்களை அரவணைத்து உள்ளீர்த்தார். எங்களையும் ஊரையும் எப்படிப் புரட்டியெடுக்கும் செயல் என்ற புரிதலின்றி அவரோடு – அங்கே, நாங்கள்! அவரும், தான் ஏதோ பெரிய தொண்டூழியம் புரிவதான எடுப்புகள் எதுவுமின்றி மிகச்சாதாரண 'நைன்ரி ஒன்றை' போலக் காட்சிதந்தவாறே ஆசிரிய வாண்மைத்துவத்தோடு எம்மை விரிந்த சமூகத்தளங்களுக்கு ஆற்றுப்படுத்தினார்.

     முன்னதாக அம்மன் கோயில் - வாசிகசாலை என்பன கல்வியையும் ஆன்மீக உணர்வுகளையும் என்னுள் விருத்தியுற அடித்தளமிட்டு அக்காலத்தில், எனது ஏழாம் வகுப்பில் (1967) எனக்கு ஒரு விஞ்ஞான ஆசிரியை வாய்த்தார். ஒரு கேள்வி ஊடாக பாடத்தைத் தொடக்குவதில் என்னை முன்னிறுத்தி 'அவன் தான் விஞ்ஞான முறைப்படி சாப்பிர்றான்' எனச் சொன்னதில் நான் விஞ்ஞானியாகிவிட்டேன். ஒரு பாடம் என்றில்லாமல், சாப்பிடுவது உட்பட நாளாந்தச் செயல் எதையும் விஞ்ஞான நோக்குக்குரியதாய்க் காண வழிப்படுத்திய அந்த ஆசிரியை இன்றுவரை ஒருவிரலைப்பிடித்து வழிநடத்தியவாறு ஒவ்வொன்றிலும் கிறுக்குத்தனமான 'விஞ்ஞானப் பார்வையை' கண்டு காட்ட நெறிப்படுத்தியவாறிருக்கிறார்.

     வளரும் பயிரை முறையிலே தெரியுமே! இருப்பதிலிருந்து ஓடுவதுவரை 'விஞ்ஞானமுறை' பறைந்து 'விஞ்ஞானி' என்ற பட்டத்தை சகபாடிகளிடமிருந்து பெற்றுக்கொண்டேன். தொடர்ந்து சந்திரமண்ணில் மனிதக்கால் பதிக்கும் எத்தனங்கள் நடந்துகொண்டிருந்த காலம் என்பதால் 'சந்திரமண்டத்துக்கு சயிக்கிள்ளை போய்வந்தவர்' என்ற அதியுச்சப் பட்டமும் பெற்றிருக்கிறேன் (எந்தப்பட்டத்துக்கும் எவரும் பாராட்டுவிழா வைக்கவில்லையென்ற வெப்பிசாரத்திலை அளந்துதள்ளிறார் எண்டால், இதோடை நிப்பாட்டிறது நல்லது கண்டியளோ!).

     விசயத்துக்கு வந்துவிடுறன். முன்னதாக ஆன்மீகத் திலகமாய் முகிழ்ந்து இப்படி விஞ்ஞானியுமாகிய நிலையில் கந்தையா வாத்தியாரால் பக்குவப்பட்ட பாங்கினை இன்று உணரும் காரணமாகயே இந்த அளப்பு (மன்னித்தோம் என்கிறீர்களாளூ நன்றி). மன்றம் உருவாகுவதில் அவரது பாத்திரம் வெளிப்பட்டு தெரியாதபோதிலும், உண்மையில் அவரையே சூத்திரதாரியாக சொல்வதற்கு இன்று தோன்றுகிறது. அம்பாள் சனசமூக நிலையமும் வாசிகசாலையும் உருவாகுவதில்கூட ஐம்பதாம் ஆண்டுகளில் அவருக்கு பங்கிருந்ததைப் பின்னால் அறிந்திருக்கிறேன். அப்போது அவரே அதன் தலைவர்.

     இவ்வகையில் கந்தையா வாத்தியார் எமது கிராமத்தை ஒரு புதிய பண்பாட்டு தள விரிவாக்கம் நோக்கி வளர்த்தெடுப்பதற்கு முன்னதாக வாசிகசாலையையும் பின்னர் மன்றத்தையும் களமாக்கியுள்ளார். நாடுபூராவிலும் ஐம்பதுகளில் ஏற்பட்ட தேசிய முதலாளித்துவ எழுச்சியும், எழுபதுகளில் முன்றாமுலக நாடுகள் மார்க்சிய இயக்க உச்ச இயங்காற்றலைப்பெற்றிருந்தமையும் இவ்விரு அமைப்புக்கள் வாயிலாகவும் வெளிப்பட்டனளூ அவை குறித்து வேறாக அலசவேண்டும்.

மன்றம் ஒரு புதிய பண்பாட்டு களம் என்பதற்காக அடிப்படை, அங்கே எவரும் பெரியவரோ – சிறியவரோ ஆனதில்லை. செயலாற்றல் மதிப்பைப்பெறும், விவாதங்களில் யார் கருத்து என்பதைவிட எது சரி என்பதே ஏற்புடையதாயிருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளின்முன் தமிழியல் முழக்கமாயிருந்த 'பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்பதற்கு மன்றம் உதாரணமாயிருந்தது. இக்கட்டுரையை எனது அனுபவவாயிலாக சொல்வதாய் அமைத்தமையால் ஏனையவரை என்னால் சொல்ல இடமற்றுப்போயுள்ளது, ஒவ்வொருவரும் மன்றத்தைக் கட்டியெழுப்புவதில் அளப்பெரிய பங்காற்றியதோடு, மன்றத்தால் புடமிடப்பட்ட தத்தமது அனுபவங்களை வெளிப்படுத்தும்போது அதன் வீரியம் மேலும் விரிந்த தளத்தில் வெளிப்பட இடமேற்படும். என்னளவில் விஞ்ஞானப் பார்வையும் ஆன்மீக உணர்வுத்தளமும் சங்கமித்து புதிய பார்வைவீச்சை எனக்கு உருவாக்கித்தந்தது மன்றமே.

     அப்போது கருத்தியல் வேறுபாடுகளால் அம்பாள் சனசமூக நிலையமும் வாசிகசாலையும் கா.ம.மன்றத்துடன் முரண்பட்ட அனுபவங்களுண்டு. அதைத் தவிர்த்திருக்க வேண்டுமென்பதில்லை. தொடக்கத்தில் காட்டியவாறு எதிர்நிலைகளின் மோதுகை இயங்காற்றலின் அடையாளம். இப்போது புரிந்துணர்வுகொள்வதில் இருந்த தடை இன்று நீங்கியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் ஊர் முழுமையும் ஒன்றுபடும் களங்கள் இத்தகைய புரிந்துணர்வுக்கு வாய்பேற்படுத்தித் தருகின்றன. இதன் உதவியோடு இரு அமைப்புகளும் ஆரோக்கியமாய் முன்னேற இயலும் - இடையிடும் முடக்கங்களைத் தகர்க்க வேண்டும்.

     இடையிடும் தடைகள் இன்றைய உலகமயமாதல் குழறுபடிகளோடு தொடர்புடையன. ஆரோக்கியமாய் பெரும் பங்களிப்பை வெளிப்படுத்திய இருபதாம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியின் வரலாற்றை மீட்டெடுக்கும்போது எமக்கான புதிய பாதையைத் தெளிவுறக் காண இயலுமாயிருக்கும். அதற்கான தேடலுக்கு இக்கட்டுரை உந்துதல் வழங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment