Sunday, February 26, 2012

1___ .....

ஸ்ரீ பாதா கல்விக் கல்லுரி 
                                                      கல்லூரியின் முகப்பு


1992 -05 -11  ஸ்ரீ பாதா கல்விக் கல்லூரியில் இணைந்து கொண்டேன். இந்தக் கல்லூரிக்கும் எனக்குமான உறவை தொடர்ந்து பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. அதன் வெளிப்பாடு தான் இந்தத்  தொடர்... 
                                                                             வெள்ளிக்கிழமை (24.02.2012 )    ஸ்ரீ பாதா கல்விக் கல்லூரி பீடாதிபதி சுந்தரலிங்கத்தை கல்வி அமைச்சில் சந்தித்தேன்.இரு தினங்களுக்கு முந்திய கல்லூரி இருபதாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்துக்கு ஏன் அறிவிக்கவில்லை எனக் கேட்டேன் .அந்தக் கொண்டாட்டம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.அதேவேளை இது போன்ற சிறிய தவறுகளும் நடந்துவிட்டது எனக் கவலை தெரிவித்தார்.அறிவிக்கப் பட்டிருந்தாலும் போயிருக்க இயலாதுதான்.சுகவீனம் தடையாக உள்ளது.இருப்பினும் அந்தநிகழ்வூடாக கல்லூரித்தொடக்க கால நினைவுகளுக்கு செல்லக்கூடியதாக அமைந்திருந்தது.அது வைரம் பாய்ந்த மறக்கவியலாத நாட்கள்.


                                                            அந்தக் கொண்டாட்டத்துக்கு அடுத்தநாளே முரளி வீட்டுக்கு வந்திருந்தார்.என்சுகவீனம் பொருட்டாக என்னைப் பார்க்க வந்தபோது அந்தக்கால பயன்மிக்க நினைவுகளை மீட்டுக்கொண்டார்.மதிவானமும் செல்வராசா மற்றும் முரளி ஆகியோரின் இரு வேறு பார்வைகள் தன்னோடு தொடர்பாடியமையை கூறியிருதார்.எனது அணி சார்ந்த இன்னொரு பார்வையும் ஜோதிக்குமாரின் நந்தலாலா அணியின் பார்வையும் தனித்தனியாக இயங்கின.எனது அணிக்குரிய நிலைப்பாட்டை வலுப்படுத்துவதே என் பிரதான செயற்பாடாக அமைந்தபோதிலும் மாற்றுக்கன்னோட்டம் உடையவர்களோடு ஊடாடுவதற்கு தடை இருக்கவில்லை.உயிர்ப்பான வரலாற்று பங்களிப்புக்கான தருணங்கள் அவை என்பதால் வேறுபட்ட பார்வை உடைய நண்பர்கள் மாற்றுக் கருத்துக்களுடனும் ஒன்றுபட்டு இயங்க இயலுமாயிருந்தது.

                                                              இன்று பல சிதைவுகளோடு காலம் அவலமாக அனைத்தையும் பிளவுபடுத்தி தனியன்களாகஆட்களை மாற்றியுள்ளது.எனது அணி என்பதும் காணாமல் போயுள்ளது.தன்னிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவதற்காக வால் ஒன்றை சேர்த்து அகோரமாக தோற்றம் தருகிறது.அதுபற்றி பின்னர் பார்க்கலாம்.இப்போது அன்றைய ஆரோக்கியமான காலம்பற்றி மீட்டுப் பார்ப்போம்.  ...
                                                                                                            (தொடர்வேன்...)


                                                                       2
  ஸ்ரீ பாதா கல்விக் கல்லுரி .....                             
  
                                                
                      தனராஜ் சேர் , மாணவர்கள் ,மற்றும் திருமதி சுப்ரமணியம் , எனது மகள் சுபரா .
                                       
                                               வவுனியா மத்திய மஹா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்த நிலையில் தற்காலிகமாக இணைந்திருந்த அந்தக் காலம்.ஒருநாள் பாடசாலையின் நிகழ்வு ஒன்றுக்கு ஸ்ரீ பாதா கல்விக் கல்லூரியின் பீடாதிபதி வந்திருந்தார். செல்வி இராசரத்தினம் என்கிற அவர் பெரிதும் அறியப்பட்டவராக இருந்தார்.சில வருடங்களில் ஒய்வு பெறும் நிலையில் இருந்த அவர் திருமணம் செய்யாமலே இருந்தார்.பின்னர் ஒரு நாள் எங்கள் விடுதிக்கு அவர் வந்தபோது பபி(என் மனைவி) அவரிடம் நீங்கள் ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேட்டார்."செய்யக்கூடாது என்ற எந்த நோக்கமும் எனக்கு இருக்கவில்லை;சொல்லப்போனால் செய்யவேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தேன்.கிறிஸ்த்தவராகவும் உயர்சாதிக் குடும்பத்தை சேர்ந்தவராகவும் இருந்ததனால் மாப்பிள்ளை கிடைக்காததினால் வீட்டாரினால் எனக்கு திருமணம் செய்துதர இயலவில்லை.என் அனுபவித்தினால் பின்னர் என் சகோதரிகளுக்கு சாதி சமயம் எல்லாம் பொருந்திவர வேண்டும் என்று பார்க்காமல் நான் திருமணம் செய்து வைத்திருந்தேன்" என்றார்.அவரது சகோதரிகளில் ஒருவர் என் வாழ்க்கை விளக்காக அமைந்த விஞ்ஞான ஆசிரியர்.அதுபற்றி வேறோர் சந்தர்ப்பத்தில் உங்களோடு பேச வேண்டும்;அந்தச்   சந்தர்ப்பத்தில் பீடாதிபதியிடம் அவரது சகோதரி எனக்கான அறிவியல் பார்வையை ஊட்டியது பற்றி சொல்லியிருந்தேன்.அவரது சந்தோசத்துக்கு அளவில்லை என்பதைச் சொல்லத்தேவையில்லை.


இப்போது வவுனியாவில் அவரை சந்தித்த இடத்துக்குப் போயாக வேண்டும்.சகல ஆசிரியர்களோடும் அளவளாவியபோதும் ஸ்ரீ பாதவுக்கு விரிவுரையாளர்களை எடுக்கவேண்டும் என்ற நினைவோட்டம   அவரிடம் இருந்திருக்க வேண்டும்.எனது பட்டப்படிப்பு பெறுபேற்றை கேட்டதும் வர்த்தமானியப் பார்க்கும்படியும் கண்டிப்பாக விண்ணப்பியுங்கள் என்றும் கூறினார்.கீருவும்(சகோதரன் )  வர்த்தமானிபற்றி அறிந்து விண்ணப்பங்கள் எடுக்க வழி செய்திருந்தார்.விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சையும் முடிந்து ஓரிரு மாதங்களில்  மே மாதம் பதினோராம் திகதி வந்தபோது நான் ஸ்ரீ பாதா கல்விக் கல்லூரிக்கு கடமை ஏற்க சென்றேன்.அந்தப் புதிய நிலை மிகப் பெரும் மகிழ்வாக முடியாதவகையில் பீடாதிபதி இருக்கையில் செல்வி இராசரத்தினம்.இருக்கவில்லை.அரசியல் நெருக்குவாரங்களுக்கு உடன்பட மறுக்கும் அவரது ஆளுமை காரணமாக அவர் வெளியேறியிருந்தார்.புதிய பீடாதிபதி அங்குள்ள அரசியல் ஆதிக்கத்தால் இருத்தப்பட்டவர் என்பதெல்லாம்  எங்களுக்கு எங்கே தெரியப் போகிறது?


ஜெர்மனி அரசால் புதிதாகக் கட்டப்பட்ட அங்குள்ள விரிவுரையாளர்  விடுதியில் குடும்பத்துடன் குடியேறினேன்.எல்லாமே புதிது.ஏற்கனவே மலையகத்தில் புதிய வாழ்க்கை,புதிய பண்பாடு படைக்கும் அரசியல் செயற்பாடுகளை செய்திருந்த அனுபவத்துடன் இந்தப் புதிய சூழல் மேலும் காத்திரமான பங்களிப்பைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையுடன் கால் பதித்தேன்.வவுனியா மத்திய மஹா வித்தியாலயத்தில் எனக்கான பிரியாவிடையை பாடசாலை செய்தபோது அதிபர் தனது உரையில் ,அடுத்த வருடம் வவுனியாவில் கல்விக் கல்லூரி வர இருப்பதால் ,அப்போது இடமாற்றம் பெற்று வந்துவிடுங்கள் என்ற கோரிக்கையையும் முன் வைத்திருந்தார்.எனது ஏற்பு உரையில் ,பெரும் நடப்பாக சொல்லியிருந்தேன்,இனி எனது வேலை முழுமையும் மலையகத்தில்தான் என்று.


          அதற்கு ஏற்ப மே மாத ஸ்ரீ பாத சூழல் மிகுந்த இதமாக வரவேற்றது.மலைகளின்  நடுவே கல்லூரி கம்பீரமாக எழுந்து நின்றது.அதைவிட வீரியமிக்க பயிலுனர்களை அது கொண்டிருந்தது.கல்லூரியைவிட்டு வெளியே வந்தால் டெவன் அருவியின் சலசல ஓசை காதில் வரவேற்பு இசையை ஒலிக்கும்.இருநூறு மீட்டர் நடந்தால் அதனைக் கண்ணாரக் கண்டு களிக்க இயலும்.இன்னும் நூறு மீட்டர் தூரத்தில் சென்ட் கிளையர் அருவி.ஒரு திசையில் bus எடுத்தால் ஹட்டன்.மறு திசையில் தலவாகலை.இடையில் பத்தன சந்தி ஊடாக போனால் நாவலப்பிட்டி. அற்புதமான அந்தச் சூழலில் அமைந்த கல்வி நிறுவனத்தில் எத்தகைய அரசியல் எல்லாம் இயங்கின?எத்தகைய உன்னதமிக்க படிப்பினைகளைப்  பெற்றோம்?      தொடர்வேன்......

                                                3---
ஸ்ரீ பாதா கல்விக் கல்லுரி 

பொதுவான நினைவலைகளுக்குள் போவதற்கு முன் ,முதல் பயிலுனர்கள் போர்க்குணமும் சமூக அக்கறையும் மிக்கவர்களாக இருந்தார்கள் எனச் சொன்னதுபற்றி பார்ப்பது அவசியம் எனக் கருதுகின்றேன்.


மூன்று வருடங்களுக்கு முன்னர்(2009) புதிதாக பயிலுனர்கள் எடுக்கப்படாமல் தாமதமாக்கப்பட்டது.எடுக்கப்போவதில்லை என்றும் கல்விக் கல்லூரிமுறை தோல்வியடைந்துவிட்டது என்றும் அன்றைய கல்வி அமைச்சர் சொன்னார்.அதனை நம்பியிருந்த மாணவர்களும் பெற்றோர்களும் வலியுறுத்தி இருந்த நிலையில் ஆறு மாதங்களின் பின்னர் பயிலுனர்கள் உள்வாங்கப்பட்டனர்.      

             புதிதாக உள்வாங்கப்பட்ட பயிலுனர்கள் உள்ள நிலையில் தர்காநகர் தேசியக் கவிக் கல்லூரியில் இருந்து பணி நிமித்தம் ஸ்ரீ பாதா தேசியக் கல்விக் கல்லூரிக்கு  சென்றேன்.அப்போது பயிலுனர்கள்,விரிவுரையாளர்கள் மத்தியில் பேசவேண்டிய  சந்தர்ப்பம்  ஒன்று ஏற்பட்டது.ஆரம்பத்தில் கல்விக் கல்லூரிமுறை மிகுந்த பாராட்டைப் பெற்றிருந்து , இன்று தோல்வி அடைந்ததாக சொல்லப்படக் காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பி எனது பதிலைச் சொன்னேன்.


நிர்வாகக் காரணம் தவிர்த்து பயிலுனர்கள் தொடர்பான அம்சத்தை இங்கு பார்த்தால் போதும்.முதல் தொகுதியினர் கல்லூரிக்குள் வருவதற்கு முன்னர் இரண்டு வருடங்களுக்கு மேலாக நம்பிக்கை அற்ற சூழலில் தவித்தவர்கள்.கிடைக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த வேலையையும் செய்தனர்;சமூகத்துடன் நன்கு ஊடாடினர்.சமூகம் தன்னிடம் எதனை எதிர் பார்க்கிறது?நான் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய பணி என்ன? என்பது  போன்ற  சில புரிதல்களோடு  கல்லூரிக்குள் வந்தார்கள்.இப்போது அப்படி அல்ல.உயர்தரப் பரீட்சைப் பெறு பேறு வெளியான  கையோடு வந்துவிடுகிறார்கள்.இங்கு மாணவர்கள் என்ற உணர்வோடு இருக்கிறார்களே அல்லாமல் ஆசிரியர்கள் ஆகப் போகிறோம் ;எம்மிடம் சமூகம் எதை எல்லாம் எதிர் பார்க்கிறது என்ற புரிதல் கொள்ள இயலாதவர்களாகவே உள்ளனர்.


தவிர,ஒரு புதிய அமைப்பாக அப்போது அதன் நல்ல அம்சங்கள் வெளிப்பட,இன்று அந்த அமைப்பின் நல்ல அம்சங்கள் முழுதாக அமுங்கிப் போய் தீய அம்சங்களே மேலோங்கி நிற்கிறது.அப்போதும் நல்ல அம்சங்களை தீய அம்சங்கள் அமுக்கிவிட முயன்றனதான்;ஆயினும் அதனை முறியடித்து நல்ல அம்சத்தால் வெற்றி பெற இயலுமாயிற்று.இங்கேதான் பயிலுனர்களது போர்க்குணமும் சமூக அக்கறையும் பெரும் பங்களிப்பை நல்கின.


அன்று புதிதாக வந்த விரிவுரையாளர்களும் ஸ்ரீ பாதா கல்லூரியில் ஆரோக்கியமான பங்களிப்பை நல்கினர்.பொதுவாகவே எல்லாக் கல்விக் கல்லூரிகளிலும் ஆரம்ப காலம் வீறுள்ளதாக இருந்து பின்னர் தேய்வடைந்ததாக கருத்து உண்டு .இது முனைப்பாக வெளிப்படுவது ஸ்ரீ பாதவில்தான்.இதற்கு மலையக அரசியல் செல்நெறிப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களும் பிரதான காரணமாகும்;நாங்கள் அன்றைய மலையகத்தின் விடிவெள்ளியாகப் பார்க்கப்பட்ட ஸ்ரீ பாதா கல்விக் கல்லூரி பற்றிப் பார்ப்போம். ...
தொடர்வேன்....


                                      4---
  ஸ்ரீ பாத கல்விக் கல்லுரி 

கல்லூரிக்கு புதிய விரிவுரையாளர்களாக நாங்கள் செல்வதற்கு முன்னதாக பயிலுனர்கள் அங்கு வந்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.அதற்கு ஆறேழு மாதங்களுக்கு முன்னரே பீடாதிபதியுடன் சில விரிவுரையாளர்கள் அங்கு இணைக்கப்பட்டு இருந்தனர்.செல்வராசா,முரளி,தனராஜ் போன்றவர்கள் அவ்வகையில் முன்னரே வந்தவர்கள்.என்னுடன் சமகாலத்தில் ராஜ்குமார்,ராஜேந்திரன் போன்றவர்கள் வந்தனர்.


ராஜ்குமார் நினைவூட்டப் பட அடிப்படையான இரு காரணங்கள் உண்டு.தொடர்ந்து மலையகத்தில்தான் எனது பணி என்று வவுனியா மத்திய மஹா வித்தியாசாலையில் சூளுரைத்த போதிலும் கடும் குளிருக்கு தாக்குப் பிடிக்க இயலாமல் மூன்று வருடங்களின் பின்னர் நான் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரிக்கு மாற்றம் பெற வேண்டியாகிவிட்டது.அப்படி வெளியேறிய போது எங்களை தனது காரில் ராஜ்குமார் நாவலபிட்டியாவில் கொண்டுவந்து விட்டார்.அதைவிட சுவாரசியமானது சேர்ந்த புதிதில் எங்களுக்குள் சிறு முரண்பாடு முகிழ்க்க முனைந்து அவரது பெருந்தன்மையால்  தவிர்க்கப்பட்டது.


முதலில் அவருக்கு ஒரு விடுதி தருவதாக கூறப்பட்டிருந்தது;அதன் திறப்பை பெறாமலே அவர் குடும்பத்தை கூட்டி வருவதாக ஓரிரு நாள் விடுப்பில் போய்விட்டார்.அதனை மறந்து ,அந்த இடையில் வந்த என்னிடம் அதேவிடுதித் திறப்பை பீடாதிபதி தந்துவிட்டார்;நான் அதனை சுத்தப்படுத்தி குடும்பத்துடன் குடியேறிய பின்னர் வந்த ராஜ்குமாருக்கு தான் விரும்பிய விடுதி கை நழுவிப்போய்விட்டமை தெரியவந்தது .அடுத்த ஒரு விடுதியை பெற முடியுமாயினும்,பெரிதாக உள்ள உப பீடாதிபதியின் விடுதியை இரண்டாக்கி , அதில் ஒன்றையே பெறவேண்டி இருந்தது.இப்போது பிரச்சனை நான் சுத்தப்படுத்திக் குடியேற வந்துவிட்ட நிலையில் அதனைக் கொடுக்க முடியாது என்பதுதான்.என்னையும் ராஜ்குமாரையும் பீடாதிபதி காரியாலையத்தில் அழைத்து கைமாற்றுவதட்கு பேச்சுவார்த்தை நடத்தியபோது ,வேறு விடுதிக்கு என்னால் மாற இயலாது;அப்படி இதனை நான் தர வேண்டுமாயின் நான் வெளியில் வாடகை வீட்டைப் பார்க்கிறேன் என்று உறுதியாக கூறிவிட்டேன்.


சண்டைபோட விரும்பாத  ராஜ்குமார் எனத் இறுக்கமான நிலைப்பாடு கண்டு அதிர்ந்து போனார்.இப்படி முதல் நாளே பீடாதிபதியுடன் போராடமுடியுமா என்ன?அவர் பின்வாங்கி மற்ற  விடுதியையே பெறுகிறேன் என்றுவிட்டார்.அந்த மாற்றிக்கூறிய நாட்டாமைத்தீர்ப்போடு வெளியே வந்தபோதுதான் நானும் அவரும் முதன்முதலில் கதைத்துக்கொண்டோம்.பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டோம்;முடிவாக அவர் நான் அதிரும்வகையில்,சர்வசாதாரணமாகவே சிரித்தபடி என்கோவம் பற்றி எதோ சொன்னார்.

முதலில் அவர் என்னைக் கொச்சைப்படுத்தியதாகத்தான் கருதினேன்;இருப்பினும் பிரச்சனை தராமல் அவர் பின்வாங்கியதை உத்தேசித்து அவரிடமிருந்து சுமுகமாகவே அன்று விடைபெற்றேன்.தவறுக்கு எதிராக எந்த விட்டுக்கொடுப்பும் இன்றி நான் போராடுவதைப் பரவணி இயல்பாக கொண்டிருப்பவன் என்பதனை அவர் விரைவில் தெரிந்துகொள்ளக்கூடியதாக காலம் கனிந்தே இருந்தது;எங்கள் விடையத்தில் முதல் கோணலாக இருந்ததைப்போலவே நிர்வாக விடயங்களில் பல கோல்மால்களுடன் பீடாதிபதி இருந்தார் .அவற்றுக்கு எதிராக நாங்கள் போராடியபோது முதலில் தனது இயல்புக்கு ஏற்ப மென்மையாக இருந்த ராஜ்குமார் ,பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எங்கள் எவரையும்விட கடும் தொனியில் ஏசினார் என்பது வேறு விடயம்.


உண்மையில் பல போராட்டங்களுக்கு களமாக அமைந்து கல்லூரி எங்களைப் புடம் போட்டு எடுத்தது.அவைபற்றி தொடர்வேன் .....
ஸ்ரீ பாத கல்விக் கல்லுரி   5

                               இங்கு  எனக்கு கிடைத்த சில நன் நட்புகள் இன்று  வரை தொடர்கின்றது 
                           ந. இரவீந்திரன் , சு .முரளீதரன் , திருமதி கணேஷன் , திரு கணேஷன் -இவர் தான் ஐயர்                                                  -                         ஈழ போராடத்தின் ஆரம்ப உறுப்பினர் )

எந்த ஒரு குறிப்பும்,அல்லது எழுத்துபூர்வமான எந்த ஆவணமும் இல்லாமல் வெறும் மனப்பதிவை மட்டுமே கொண்டுதான் இதனை எழுதுகிறேன்.கற்றலுக்கான ஒரு நிறுவனத்துக்கு,புதிய கனவுகளுடன் போன எங்களுக்கு முன்னால் கல்வியியல்  சார்  கல்வியை விடவும் ,சாமூக மாற்ற இயங்காற்றல் தொடர்பான  கல்விக்கான  களமே வரிந்து பரந்து கிடந்தது எனக் குறிப்பிட்டிருந்தேன் .சமூக அக்கறையுடனான பயிலுனர்களும்,புத்திய சிந்தனையுடனான விரிவுரையாளர்களும்,மலையக அதிகாரத்துவ தொழிற்சங்க அரசியல் தொடர்பு பீடாதிபதியும் ஊடாடிய களம் என்ற வகையில் நெருப்பும் பஞ்சும் அக்கம் பக்கமாக இருந்த nilai என்கிறவகையில் போராட்டங்கள் வலிந்து வரவேற்க அவசியமற்றது ;வாராதது போலிருந்து எப்போதும் வெடிக்கக் கூடியதுதான்.


இந்தக்  கள நிலவரத்தில் இன்னொரு அம்சமும் சேர்த்தி;முதலே நீங்கள் ஊகித்திருக்கக் கூடியது தான்.புதிதாகக் கட்டி ஜொலிஜோளித்த அதனை ஜெர்மனி கட்டித்தந்தது என்றேன் அல்லவா?ஜெர்மனி என்றால் பின்னாலே அமரிக்கா என்று பொருள்;ஆக, இந்தப் போராட்டக் களத்தில் அமரிக்காவும் பிரசன்னம்.
ஓ! ,உங்கடை பெரிய போராட்டத்துக்குள்ளை அமெரிக்காவையும் கண்டு பிடிச்சிருக்கிறீர்கள் என்கிறீர்களா? தொடர்வேன் ..... 


ஸ்ரீ கல்விக்கலூரி - 6 ஸ்ரீபாதா கல்விக்கல்லூரி விரிவுரையாளர்கள் என்ற வகையில் நீர்கொழும்பில் ஆசிரியர்களாக களமிறங்க உள்ள பயிலுனர்கள் சிலருக்கு ஆசிரிய வாண்மைத்துவம் தொடர்பான பயிர்ச்சியளிக்கச் சென்றிருந்தோம். அங்கு எமது போராட்டக் களங்களில் அமெரிக்கா உள்ளதை உணர்த்திய சம்பவம் ஒன்று 
இடம்பெற்றிருந்தது. கடைசியாக சந்தித்தபோது இதுபற்றிய கேள்வியோடு தான் பிரிந்திருந்தோம்.


முன்னதாக நீர்கொழும்பு முன் ஆசிரிய பயிர்ச்சியாளர்கள் பற்றி சொல்வது அவசியம். இரண்டொரு வருடங்களின் முன்னர் வடக்கிலிருந்து புலிகளினால் 
வெளியேற்றப் பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், சிலாபம் பகுதிகளில் அகதி முகாங்களில் குடியிருத்தப்பட்டிருந்தனர். அவர்களது பிள்ளைகளின் கல்விக்காக
அமைக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அவர்கள் மத்தியிலிருந்தே படித்த வாலிபர்களும், யுவதிகளும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு முழுமையான
பயிற்சி வழங்க இயலாத நிலையில் இருவாரங்கள் வதிவிட பயிற்சி வழங்கவேண்டியிருந்தது.


அந்தப் பயிற்சி வழங்கும் பொறுப்பை ஜி.ரி.இசட். எடுத்திருந்தது. இதுவே எமது கல்லூரி கட்டிடங்களையும் ஏனைய வளங்களையும் வழங்கி, குறிப்பிட்ட காலம்வரை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தது என்பதை முன்னரே பார்த்திருந்தோம்.அவர்களது ஒரு வளமான எங்களை பயிற்றுவிப்பாளர்களாக 
நீர்கொழும்புக்கு வரவழைத்திருந்தனர்.


இருவாரங்கள் சிறப்பாக பயிற்சி முடியும் இறுதிக் கட்டத்தில் அதன் முன்னேற்றம் பற்றி பார்வையிடுவதற்காக அமைச்சர் மஜீத் வந்திருந்தார். மஜீத் அவர்கள் 
அன்றைய  பேரினவாத - ஐ.தே.க. அரசில் அங்கம் வகிப்பவர் என்கிற வகையில் இனவாதியாக இருப்பத்ற்கே சந்தர்ப்பம் அதிகம் என்று நீங்கள் கருதக்கூடும்; அவ்வாறு இல்லை என்பதை வலியுறுத்துவது அவசியம். ஐ.தே.க.இன் பெரும்பாலான அமைச்சர்கள் மோசமான இனவாதிகளே. மாறாக,மஜீத் இதய
சுத்தியுடன் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்காக செயற்பட்டிருந்தார்.


இந்த உமது சான்றிதழுக்கு என்ன அவசியம் வந்தது என்று கேட்டால் அதுவும் சரிதான். பல தவறான புரிதல்களுடன் பலரையும் தட்டிக்கழித்து விடுகிறோம் என்பதால் இதைச் சொல்ல நேர்ந்தது. இன்னொரு அதிகம் தேவையாயில்லாத ஒரு விசயத்தையும் சொல்லிவிட்டு மேற்கொண்டு போவோம்.


வந்த அமைச்சரை மகிழ்விப்பதற்காகவும், தமது திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் ஆசிரியப் பயிலுனர்கள் சிறிய கலை நிகழ்வை நிகழ்த்தினர். தேவை கருதி ஒருசில தமிழ்ப் பெண்கள் இருந்த போதிலும் மற்றவர்கள் அனைவரும் முஸ்லிம் பெண்களும் ஆண்களுமே பயிலுனர்கள். நடன நிகழ்த்துகையை ஆற்றிய
ஒன்றிரண்டில் முஸ்லிம் பெண்கள் அதிகமாய் இடம்பெற்றிருந்தனர்.


இது ஒரு முஸ்லிம் அமைச்சர் என்கிறவகையில் மஜீத் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. முஸ்லிம் பெண்கள் நடனம் ஆடுவது தடுக்கப்பட்ட ஒன்று.
அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி அந்த நடனங்கள் அமைந்திருந்தமையே அமைச்சருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் தனது உரையில் அதுபற்றி அவர் பேசியிருந்தார். மாறிவரும் உலகில் இப்போதும் முஸ்லிம் பெண்கள் நடனம் ஆடக்கூடாது என்று சொல்கிற பழமைவாதி அல்ல நான்; ஆசிரியைகளாகப் பயிற்சி பெற்ற உங்களுக்கு நடனம் அவசியம், பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான கற்பித்தலை வழங்கப்போகிற உங்களுக்கு மிகமிக அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆயினும் எனக்கு முன்னால் நடனத்தை நீங்கள் தவிர்த்திருக்கலாம். எவராவது இதனை அறிந்தால், அதெப்படி முஸ்லிம் பெண்கள் தன் முன்னே ஆடுவதை அமைச்சர் அனுமதித்தார் என்று என்மீது குற்றச்சாட்டை சுமத்த இடம் உண்டு.


இங்கு அவசியப்படுகிற ஒருவிடயமும் அவரது உரையில் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு பெறுமதிமிக்க பயிற்சியை ஜி.ரி.இசட். வழங்கியிருந்தது என்கிறவகையில்
அது தொடர்பில் அவர் பேச வேண்டியிருந்தது. அந்த நிறுவனம் ஜெர்மனிக்குரியது. ஜெர்மனிக்கு நன்றியைச் சொன்னவர், இதுபோல அமெரிக்கா ஏன் முன்வந்து உதவ வருவதில்லை என்பதற்கு விளக்கம் சொல்ல முற்பட்டார். என்ன இருந்தாலும் ஐ.தே.க. அமைச்சர் ஒருவர் அமரிக்காவை சந்தேகப்படும் தனது மக்களிடம் அந்த நாடு பற்றிய நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தும் அரசியல் பொறுப்பு இருக்கிறதுஅல்லவா?


அமரிக்க தூதுவருக்கு முஸ்லிம்களின் அகதி முகாங்களை அழைத்துச்சென்று தான் காட்டியிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் ஜெர்மனி இவர்களுக்கு நிறையவே உதவுகிறது நீங்கள் ஏன் உதவக்கூடாது என்று கேட்டிருந்தாராம்; அதற்கு அமரிக்க தூதர் சொன்ன பதில்தான் முக்கியமானது; ஜெர்மனிக்கூடாக எமது உதவி இவர்களை வந்தடைகிறது. நேரடியாக நாமே உதவி செய்வதில் அரசியல் பிரச்சனை உண்டு. சி.ஐ.ஏ. ஊடுருவல் என்று பிரச்சாரங்கள் வலுத்துவிடும் என்பதால் தவிர்த்துக்கொண்டு ஜெர்மனிக்கூடாக உதவிகளைச் செய்கிறோம் என்று அமரிக்க தூதர் சொன்ன பெரியதொரு உன்மையை அங்கே போட்டுடைத்தார் அமைச்சர்.


ஆக, அமெரிக்க கண்காணிப்பு ஜி.ரி.இசட். ஊடாகவும் செயல்படும். எங்களுடைய சிறிய கல்லூரிப் போராட்டம் அமெரிக்காவின் கண்காணிப்புக்குள்ளாகாதா என்ன?
இப்படிச் சொல்வதால் அமெரிக்கா கல்லூரியில் வந்து இறங்கிய கதை ஏதோ அளக்கப்போவதாக நினைக்க வேண்டாம். நேரே விசயத்துக்கு வருகிறேனே! தொடர்வேன்.. 
No comments:

Post a Comment