Sunday, September 29, 2024
சுதந்திரப் போராட்டத்தின் தலித் அரசியல்
சுதந்திரப்
போராட்டத்தின்
தலித் அரசியல்
இருபதாம் நூற்றாண்டின் இருபதுகள் காந்தி தலைமையில் சுதந்திரப் போராட்டம் வெகுஜனமயப்படத் தொடங்கி இருந்தது. முன்னதாக திலகர், கோகலே போன்றோரது தலைமைகள் பிராமணியத் தேசிய வடிவில் முன்னெடுத்த இயக்கச் செயற்பாடுகளைவிட காந்தியின் தாராளவாத அரைப் பிராமணியத் தேசியச் செயற்திட்டங்கள் மென்மேலும் வெகுஜனங்களைத் தட்டியெழுப்புவதாக அமைந்திருந்தது.
நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் காங்கிரஸ் உதயமான போதே ஜோதிராவ் பூலே மராட்டியத்திலும் அயோத்திதாசர் தமிழகத்திலும் ‘மீண்டும் பிராமண மேலாதிக்கத்தை வென்றெடுப்பதே காங்கிரசின் திட்டம்; அந்நியராட்சியில் ஒடுக்கப்பட்ட சாதியினர் பெற்ற வாழ்வுரிமைகளைக்கூட சுதந்திரம் அடைந்துவிட்டால் பின்னர் இழந்துவிட நேரும்” என எச்சரித்திருந்தனர். இருபதாம் ஆண்டுகளில் கூட ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த அக்கறை ஏதும் காங்கிரசிடம் இருந்ததில்லை.
முப்பதாம் ஆண்டுகளில் லண்டனில் இடம்பெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் தலித் மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கர் இரட்டை வாக்குரிமையை வெற்றிகொண்டதை காந்தியால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆரம்ப முதலாகவே தலித் மக்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் அவசியமில்லை, அவர்களும் இந்துக்களே எனக் காந்தி வாதாடி வந்தார்.
பூனா சிறையில் இருந்தபடி மேற்கொண்ட உண்ணாவிரத மிரட்டலில் அம்பேத்கர் இரட்டை வாக்குரிமையைக் கைவிடும்படி செய்யப்படும் அரசியலைக் காந்தி நடைமுறைப்படுத்தி இருந்தார்.
காந்தி இறந்து, அந்தப் பழி தலித் மக்கள் மேல் வரவேண்டாம் என்பதால் அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் என்பதாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அப்படியே அனைத்தையும் தாரைவார்த்து தோல்வியை அந்த ஒப்பந்தமூடாக அம்பேத்கர் வந்தடையவில்லை.
“சமூக நீதிக்கான அறப்போர்” (சவுத் விஷன் புக்ஸ் வெளியீடு) நூலில் பி.எஸ். கிருஸ்ணன் பூனா ஒப்பந்தம் வாயிலாக அம்பேத்கர் வெற்றிகொண்ட அம்சங்களை வெளிப்படுத்தி இருப்பதைக் காணலாம். ஒப்பந்தச் சரத்துகளிலேயே சாதி இந்துக்கள் விட்டுத்தர வேண்டிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை பின்னர் காந்தி நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திக்கவும் செய்தார்.
அதைவிட, காந்தி தன்னளவில் தலித் மக்களது உண்மை நிலவரங்களை அறியாமலே இருந்த தவறை உணர்ந்து கொண்டு ஓரளவிலேனும் அவர்களது கோரிக்கைகளைக் காங்கிரஸ் கவனம் கொள்ளும் வகையில் ஆற்றுப்படுத்தினார்.
சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்பை எழுதும் தலைமைப் பொறுப்பு அம்பேத்கரிடம் வழங்கப்பட வேண்டும் என நேருவிடம் வலியுறுத்தியதே காந்திதான் எனக்கூறப்படும் நிலையையும் பூனா ஒப்பந்தமே ஏற்படுத்திக்கொண்டது எனக் கருத இடமுண்டல்லவா?
‘ஹரிஜனங்கள்’ எனத் தலித் மக்களுக்குக் காந்தி பெயரிட்டதைக் கண்டிப்போர் உள்ளனர்; அதற்கான தர்க்கங்கள் நியாயமானவை. அதேவேளை, அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களையும் சுதந்திரப் போராட்டதில் காந்தி அரவணைக்க முற்படவில்லை எனில் ஏகாதிபத்திய சக்தி மேலும் சில காலம் இந்தியாவை அடிமைப் படுத்தி வைத்திருக்க இடமளிப்பதாகி இருந்திருக்கும் அல்லவா?
முழுமையான ஏகாதிபத்தியத் தகர்ப்புடன் விடுதலைத் தேசியம் வெற்றிகொள்ளப்பட இந்தப் படிப்பினை மீட்டுப்பார்க்கப்படுவது அவசியமல்லவா?
தேசியத்தின் அனைத்துத் தரப்பினரது கோரிக்கைகளையும் உள்வாங்கி இயங்க வேண்டிய தேவையையே விடுதலைத் தேசிய (மார்க்சியத் திணை) அரசியல் வலியுறுத்துகிறது!
Saturday, September 28, 2024
விடுதலைத் தேசியச் சிந்தனையின் அடித்தளம் மார்க்சியம்
விடுதலைத் தேசியச்
சிந்தனையின்
அடித்தளம்
மார்க்சியம்
வரலாற்றின் இயக்கு சக்தி வர்க்கப் போராட்டம் என மார்க்ஸ் வலியுறுத்தி இருந்தார். ஐநூறு வருட ஐரோப்பிய எழுச்சி, நூற்றாண்டுக்கு மேலான கூர்மைப்பட்ட வர்க்கப் போராட்டம் ஐரோப்பாவை எரிதழலாக்கியபடி இருந்த சூழல், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் கிரேக்க-ரோம் அடிமைப் புரட்சிகள் தொடக்கி வைத்த வரலாற்று உணர்வு என்பவை சார்ந்தே மார்க்ஸ் அந்த முடிவுக்கு வந்தார்.
வர்க்கப் பிளவுறாமலே சாதிகளாக இனமரபுக்குழு வாழ்முறையை நீடிக்கிற இந்தியாவுக்கு வரலாறு கிடையாதென அவர் கருதியதன் அடிப்படை, அன்றைய ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்திக்கொண்ட தகவல் பரிமாற்ற எல்லைப்பாடு!
இந்திய மார்க்சியர்கள் நமக்கான வரலாற்று இயக்கம் இருந்ததை வலியுறுத்தி உள்ளனர். அது இருந்தால் வர்க்கமும் இருக்குமே என இங்கிருந்த வர்க்க வடிவங்களைத் தேடிய தவறுக்கும் ஆட்பட்டனர்.
முழுச்சமூக சக்தியாக (சாதிகளாக) இயங்கிய வேறுபட்ட வரலாற்று இயக்கத்தைக் கண்டுகாட்டத் தவறினர்; சில மார்க்சியர்கள் சாதியைக் கவனத்தில் கொள்ள முற்பட்டு சாதியையே வர்க்கமாகப் புரிதல் கொள்ள முற்பட்டனர்.
சாதிப் பிரச்சினையே பிரதானமானது என இயங்கிய அம்பேத்கர் முதலாளித்துவச் சிந்தனை வரையறை காரணமாக சாதியைப் புரிந்துகொள்ள இயலாத இடர்பாட்டை ஏற்படுத்தி உள்ளார்.
முப்பதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் சாதி பேதங்களை, இழிவுபடுத்தல்களை, தீண்டாமையை அகற்ற முற்போக்கு இந்து அமைப்புகள் முன்முயற்சி எடுத்தன. அத்தகைய முயற்சிக்கான மாநாடு ஒன்றுக்கு அம்பேத்கர் தலைவராக அழைக்கப்பட்டார்.
தலைமையுரையை அச்சிட்டு வழங்கும் நோக்குடன் அவரிடம் முன்கூட்டி கேட்டிருந்தனர். அதன் தொடக்கத்திலேயே ‘இதுவே ஒரு இந்துவாக எனது கடைசி உரை’ என்ற பிரகடனத்தை அம்பேத்கர் முன்வைத்தார். இந்து மாநாடொன்றில் இப்படி ஒரு பிரகடனம் வேண்டாம், அந்த வரியை நீக்குங்கள் எனக் கோரிய போதிலும் அதற்கு சம்மதிக்க மறுத்து மாநாடு கைவிடப்படும் நிலையை ஏற்படுத்தினார்.
தனது கோரிக்கைகளை வலியுறுத்தியவாறே முற்போக்கான இந்துக்களுடன் ஐக்கியப்பட்டு சாதி ஒடுக்குமுறையையும் ஏகாதிபத்தியத் தளையையும் தகர்க்கும் விடுதலைத் தேசியச் சிந்தனையை நோக்கி முன்னேற அம்பேத்கரால் இயலவில்லை.
“சாதி ஒழிப்பு” என அந்த மாநாட்டுக்காக எழுதிய உரையிலேயே சாதி பற்றிய அவரது புரிதல்களில் உள்ள தவறுகள் வெளிப்பட்டன. ஏற்றத்தாழ்வைத் தகர்க்கும் சமத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் அனைத்துச் சாதிகளையும் ஒன்றிணைக்க ஏற்றதாக சாதி பேதங்கள் முன்னதாக களையப்படுதல் வேண்டும். அதன்பொருட்டு தீண்டாமை ஒழிப்பு வென்றெடுக்கப்பட்டு, எந்தச் சாதியும் புனிதமானதோ இழிவுக்குரியதோ அல்ல என்பதை நிலைநாட்ட வேண்டும்.
சாதியொழிப்பு என்பது வெறுமனே தவறான சொற்கோவையல்ல. எமது சமூகத்தைப் புரிந்துகொள்ளாத தவறுக்கு உரியதும் விடுதலைக்கு எதிரானதுமான சிந்தனை முடக்கம்.
உற்பத்தி சக்தி, உற்பத்தி உறவு என்பவற்றின் இயங்கியலாக வரலாற்றைப் புரிந்துகொள்ளும் மார்க்சியமே சாதியைப் புரிந்துகொள்ள ஆற்றுப்படுத்தும். ஐரோப்பாவில் உற்பத்தி உறவாக இருந்த வர்க்கங்களின் இடத்தில் இங்கே சாதி இருக்கிறது. ஏற்றத்தாழ்வு முறை இல்லாமல் போகும் போதுதான் சாதி இல்லாமல் போகுமேயன்றி, சாதியை முதலில் ஒழித்துவிட்டுப் பின்னர் தேசிய விடுதலையை - பொருளாதார சமத்துவத்தைப் பற்றிப் பேசுவோம் எனும் அம்பேத்கரியம் மக்கள் விடுதலைக்கு விரோதமானது.
சாதிய ஒடுக்குமுறைக்குள் அல்லற்பட்ட போதிலும் கடின உழைப்பும் கற்றலும் மேதைமையும் அம்பேத்கரை நவ இந்திய வரலாற்றின் சிற்பிகளில் ஒருவராக முன்னிறுத்தி உள்ளது!
தனக்கான முன்னேற்றம் தான் சார்ந்த மக்களுக்குமானதாக அமைய வேண்டும் என்ற அவரது அக்கறை, அதற்கான அவரது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு என்பன போற்றுதலுக்குரியன!
தலித் மக்கள் மீது அம்பேத்கருக்குள்ள அக்கறை மதிக்கப்பட வேண்டும்; அவரது பாதை தலித் மக்களுக்கான விடுதலையை வென்றெடுக்கப் போதுமானதல்ல என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும்.
மார்க்சியம் மட்டுமே
ஏகாதிபத்தியப் பிணைப்பை முற்றாகத் தகர்க்க,
சாதி ஒடுக்குமுறைகளைத் தகர்த்தெறிய,
பூரண சமத்துவத்தை எட்ட
வழிகாட்டும் நெறி எனும் புரிதலுடன் அதனை நுண்மாண் நுழைபுலத்துடன் கற்போம்!
இன்றைய
‘சனாதன ஒழிப்பு’ இயக்கம்
குறித்து எதுவும் சொல்ல
வேண்டாம் என இருந்தேன்
இரண்டு வருடங்களுக்கு
முந்திய இந்தப் பதிவைப்
பகிர ஏற்றதாக நினைவூட்டல்
தலித் அரசியலின் இன்றைய முதன்மைத் தலைவர் திருமாவளவன்; மலினப்பட்டுப் போயுள்ள பாராளுமன்ற அரசியல் மோசடிகளுக்குள் மதிக்கத்தக்க வகையில் கோட்பாட்டு நிலைப்பட்ட அரசியல் முன்னெடுப்பை அவர் மேற்கொண்டு வருகிறார்.
இருப்பினும்
அவரால் முன்னிறுத்தப்பட்ட
சனாதன ஒழிப்பு
என்பது நடைமுறையில் அதனை
வலுப்படுத்தவே வழிகோலும்.
இதன் வாயிலாக இந்துத்துவம் வலுவுடன் களமாட இடமேற்படுத்திக் கொடுக்கிறார்கள் எதிர்ப்பரசியலாளர்கள்
(புதிய பண்பாட்டு இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய மார்க்சியர்களும் தமிழகத்தில் எதிர் பண்பாட்டு அரசியலை இவ்விவகாரத்தில் கையேற்றிருப்பது பெரும் துயர்).
இது இன்றைய தவறு மட்டுமல்ல;
தலித் அரசியலைத் தொடக்கி வைத்த போது அம்பேத்கரும் இதே தவறுகளுடன் களமாடினார்.
பரந்துபட்ட மக்களை ஒன்றுபடுத்திச் சாதியத்துக்கு எதிராகப் போராடுவதாக அல்லாமல்
தலித் மக்களை
பிற்படுத்தப்பட்ட மக்களை
தனிவழி காண
ஆற்றுப்படுத்தி
அம்பேத்கரியமும் பெரியாரியமும்
இழைத்த அதே தவறை
இன்றைய மார்க்சியர்களும்
செய்யும் துன்பியல்
முடிவுக்கு வருமென நம்புவோம்!
ஆறுமுக நாவலருடன் சம்பாசனை செய்த சில மணித்துளிகள்
ஆறுமுக நாவலருடன்
சம்பாசனை செய்த
சில மணித்துளிகள்
நாவலர் 1848 இல் ஆரம்பித்து வைத்த ‘சைவப் பிரகாச வித்தியாசாலை’ இன்னமும் ஆளுமையுடன் இயங்குகிறது!
அதனைக் கடந்து பல தடவைகள் பயணித்த போதிலும் உள்ளே நுழையும் வாய்ப்புக் கிட்டியதில்லை; இன்று அதற்கான சந்தர்ப்பம் எப்படி ஏற்பட்டது என்பதை இப்போது சொல்லப் போவதில்லை. அந்த ‘மெயின் பிக்சர்’ பின்னாலே விரிவாக வரும்!
படப் பிடிப்பாளனாக அந்தத் திக் விஜயத்தைப் பதிவிட்டு வந்த போது நண்பர் என்னையும் கமராவுக்குள் நுழைக்க விரும்பினார். நாவலர் காரியாலயமாகவும் பிரதான அறையாகவும் பாவித்த இரண்டு முனைகளில் எனது ‘போஸ்’.
உயரமான எட்டு இரும்புத் தூண்களில் நிமிர்ந்து நிற்கும் பிரதான (பிரமாண்ட) மண்டபம் இன்றும் நாவலருக்கு உரிய கம்பீரத்துடன்!
அவற்றையும் கீழே பதித்த மாபிள்ஸ்கள் அனைத்தையும் தமிழகத்தில் இருந்து நாவலர் கொண்டு வந்துள்ளார். அவை அனைத்தும் பொலிவு குன்றாமல் இன்றும்!
கூரை வேலைப்பாடுகளின் உறுதியும் வியப்பூட்டுவன. காற்றோட்டத்துடன், எதிரொலியை ஏற்படுத்தாத மண்டப நேர்த்தி பற்றிய அக்கறை அவருக்கு இருந்தது பற்றி நண்பர்கள் சொன்னார்கள்; அதனை இங்கே காண இயலுமாக இருந்தது!
நாவலரது இறுதிப் பிரசங்க உரைகள் அங்கே ஒலித்த உணர்வை அனுபவங்கொள்ள ஏற்றதாக,
நாவலர் கூடவே கைகோர்த்து நடந்து வந்தார்!
தமிழகத்தின்
எதிர் பண்பாட்டு அரசியலும்
ஈழத் தமிழரின்
ஏகாதிபத்திய (சுய)நிர்ணய
அரசியல் முன்னெடுப்பும்
காரணமாக,
ஏகாதிபத்திய எதிர்ப்பின் பண்பாட்டுத் தேசிய முன்னோடியான நாவலர் குறித்த நிதானமான மதிப்பீடு ஏற்பாடாதுள்ளது; முன்னதாக இலங்கை முற்போக்கு இலக்கிய அணியினர் இந்தத் துறையில் காத்திரமான பங்களிப்பைச் செய்தனர். இன்று தமிழக மார்க்சியர்களில் பலரும் எதிர் பண்பாட்டு அரசியல் அலைக்கு ஆட்பட்டுள்ளதால் வள்ளலார், நாவலர் பற்றிய ‘எரிந்த கட்சி + எரியாத கட்சி’ விவாதங்களில் மாட்டுப்பட்டுள்ள அவலச் சூழல்!
மக்கள் நல நாட்டத்துடன்
விடுதலைத் தேசிய மார்க்கத்தை
வளர்த்தெடுக்கும் வகையில்
எமது முன்னோடிகளின்
பலமான பக்கங்களை
வளர்த்தெடுப்போம்!
நவீன இலங்கைத் திணை அரசியல்
நவீன இலங்கைத்
திணை அரசியல்- 4 (தொடர்ச்சி)
''""""""""""""""""""""""""""""""""""""""""""""
‘மக்கள் புரட்சியை நாடுகின்றனர்’ எனும் மாஓ வின் கருத்துடன் உடன்பட்டு இயங்கிய கொம்யூனிஸ்ட் அணியினர் அதுவரை சாத்வீகப் போராட்ட வடிவத்தை மட்டுமே பின்பற்றிய சாதியத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றுப் போக்கினை , இன்னொரு பரிமாணத்துக்கு வளர்த்தெடுத்தனர்; புரட்சிகர அணி எனும் பெயருக்கு ஏற்றவண்ணம் ஆயுதமேந்திய சாதிவெறியினருக்கு ஆயுதம் மூலமாகவே பதிலிறுக்கும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் இவர்களின் வாயிலாக வரலாற்றரங்கில் தோற்றம் பெற்று வரலாறு படைத்திருந்தது.
சாதிய ஒடுக்குமுறையை இவ்வகையில் புறங்காணச் செய்த புரட்சிகர அணி அடுத்த தனது வேலைத்திட்டமாக பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழினத் தேசியப் போராட்டத்தைக் கையேற்க இடமுள்ளதாக காவல்துறையின் இரகசிய அறிக்கை கூட எச்சரிக்கை விட்டிருந்தது. ஆயினும் அவ்வாறு நேர்நதுவிடவில்லை.
‘தேசங்கள் விடுதலையை நாடுகின்றன’ என்ற மாஓ வின் குரலை ஏன் கவனங்கொள்ளத் தவறினர்? ‘நாடுகள் சுதந்திரத்தை நாடுகின்றன’ என்ற முதல் அம்சத்துக்கு அவர்கள் அதீத முக்கியத்துவத்தைக் கொடுத்துவிட்டனர். அன்று தமிழ் தேசியத்தை பேசி வந்த தமிழரசுக் கட்சி, தமிழ் கொங்கிரஸ் கட்சி, இவையிரண்டும் இணைந்து உருவான தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன ஏகாதிபத்திய சக்திகளுக்கு பக்கபலமாக இயங்கி வந்தனர்; பிரித்தானிய, அமெரிக்க தாசர்களாக செயற்பட்டனர். இஸ்ரவேல் போன்ற தமிழரசு தோன்ற வேண்டும் எனும் முழக்கத்தையே வெளியிட்டு வந்தனர். அப்போது அமெரிக்காவை எதிர்த்த இந்திய விஸ்தரிப்பு வாதிகளது ஆக்கிமிப்புக் கரத்தின் பிடிக்குள் இலங்கையைக் கொண்டு வரும் செயலொழுங்குகளுக்குத் துணைபோகும் வேலைகளையும் முன்னெடுத்தனர்.
இன்னொரு பிரதான அம்சமும் தமிழ் தேசியத்தை மார்க்சியர்கள் கையேற்க இயலாத நெருக்கடியைத் தோற்றுவித்திருந்தது. புரட்சிகர அணி என்று மார்க்சியச் செயற்பாட்டாளர்கள் பிளவடைந்தது 1964 இல். இதற்கு முன்னரே ஒன்றுபட்ட கொம்யூனிஸ்ட் கட்சி தோற்றம் பெற்ற 40 ம் ஆண்டுகளில் இருந்து சாதியமைப்புக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வந்தவர்கள். அதற்கும் பத்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியாகத் தோற்றம் பெற்ற இலங்கை சமசமாஜ கட்சியும் மாரக்சிய அமைப்பு என்ற வகையில் அதுவும் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்தது. அதற்கும் முன்னதாக, 1925 இல் உதயமான யாழ்ப்பாண மாணவர்கள் காங்கிரஸ் சாதியமைப்புத் தகர்க்கப்பட வேண்டும் எனக் குரலெழுப்பிச் செயல் வடிவங்கொடுக்கத் தொடங்கிவிட்டிருந்தது. அந்த அமைப்பு யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் எனப் பரிணமித்த நிலையில் மிகத் தீவிரமாக சாதிபேதங்களுக்கு எதிராக போராடி வந்தது. ஹன்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்பிரமணியம் போன்ற தலைவர்கள் தொடர்ந்து மார்க்சிய ஆதரவுடன் செயற்பட்டு வந்தனர். சமசமாஜக் கட்சியில் முனைப்புடன் செயற்பட்ட தர்மகுலசிங்கம் சாதியொடுக்குமுறைக்கு எதிரான காத்திரமான பங்களிப்புகளை முன்னெடுத்து வந்ததன் பேரில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே அக்காலக் குழந்தைகள் பலர் அப்பெயர் தாங்கியவர்களாக இந்தனர்.
மார்க்சிய அணி தோற்றம் பெற்றது முதல் சாதி பேதங்களுக்கு எதிராகப் போராடிய பொழுது தமிழ் தேசியம் அதனை ஆதரித்திருக்க வேண்டுமல்லவா? ஆதரிக்காத து மட்டுமல்ல, சாதியொடுக்குமுறைக்குரிய தரப்புடன் சேர்ந்து இயங்கினர். தமிழ் தேசியத்துக்குள் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்ட வேண்டும் என்பதைவிடவும் “ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளவொரு தனி நாடு” வேண்டும் என்பதே அவர்கள் அக்கறையாக இருந்தது. மிகச் சிறு தொகைச் சாதி வெறியர்களது நலனின் பொருட்டு பெருந்தொகையான ஒடுக்கப்பட்ட மக்களை வெளியே வைத்துக்கொள்வது பற்றி அவர்களுக்குப் பிரச்சினை இல்லை; அப்போது அவர்களுக்கு வேண்டியிருந்தது பாராளுமன்ற ஆசனங்கள், அதைக்கடந்து இனப்பிரச்சினைத் தீர்வை இந்தியாவோ அமெரிக்காவோ பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்பே அவர்களுக்கு உரிய நிலைப்பாடு.
அவர்கள் எப்படியும் இருந்துவிட்டுப் போகலாம்; மக்கள் நலநாட்டமற்ற அவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க இயலும்? மக்கள் விடுதலையை இலட்சியமாக கொண்டியங்கிய மார்க்சியர்கள் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் அவசியத்தைக் கையேற்றிருப்பின் ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த தமிழ் தேசிய முன்னெடுப்பு அரங்குக்கு வந்திருக்கும் அல்லவா? கோட்பாட்டு ரீதியில் இது நியாயமான கேள்வி. மார்க்சியத் தெளிவுடன் இயங்கும் புரட்சியாளரகள் மாஓ முன்மொழிந்த பிரகாரம் ‘தேசங்கள் விடுதலையை நாடுகின்றன’ என்பதனைப் புரிதல் கொண்டு சிறு தேசிய இனங்களுக்கு பிரதேச சுயாட்சி ஏற்படுத்தப்பட. வேண்டும் என்ற கட்சித் தீர்மானத்தின் அடிப்படையில் அதற்கான போராட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். செய்யத் தவறியது பாரதூரமான பாதகங்களை விளைத்துள்ளது என்பதை ஏற்று சுயவிமரிசனத்துடன் இன்று மார்க்சியர்கள் புத்தூக்கத்துடன் களத்தில்!
அன்றைய நிலையில் இத்தகைய தெளிவை மார்க்சியர்கள் வர இயலாமல் போனமைக்குப் பல காரணங்கள் இருந்தன. பிரதானமான ஒன்று, புரட்சிகர அணியின் வலுவான தளமாக இருந்தது ஒடுக்கப்பட்ட மக்களது கிராமங்களே. ஆண்ட பரம்பரைத் தமிழ்த் தேசிய முழக்கங்களை அவர்கள் வெறுத்தார்கள். தமிழீழம் ஒன்று அமையும் பட்சத்தில் தம்மீதான ஒடுக்குமுறை மேலும் வலுப்பெறும் என்ற சந்தேகங்கள் அவர்களிடம் அதிகமாய் காணப்பட்டிருந்தது. பின்னர் பேரினவாத ஒடுக்குமுறை அதைவிடக் கோரமாக எழுந்து களத்திலிருந்து மிக அதிகம் பாதிக்கப்பட்டது ஒடுக்கப்பட்ட மக்களே என்ற நிலையில் இன்று தமிழ் தேசியத்தை அந்த மக்களை முன்னறுத்தியும் பார்க்க வேண்டியுள்ளது.
இருப்பினும் விடுதலை உணர்வுடன் தமிழ் தேசியத்தை அணுகுவதைவிட மேட்டுக்குடிகளின் நலனை முன்னிறுத்திய மேலாதிக்கவாத அரசியல் நிலைப்பாட்டுக்கு உரிய சக்திகள் தாம் இன்றும் களத்தில் செயற்படும் அவலம் இருப்பதனைக் காண்கிறோம். புலம்பெயர் தமிழ் தேசிய ஆர்வலர்கள் தொடர்ந்தும் அந்நியத் தலையீட்டுக்கான களமாக எமது பிரச்சினையைத் தொடர ஆற்றுப்படுத்துகின்றனர். வலுவுடன் இயங்கும் ஊடகங்கள் விடுதலைத் தேசிய எழுச்சிக்கு விரோதமாக ‘மீண்டும் முள்ளிவாய்க்கால்’ தொடக்கங்களுக்கு அத்திவாரமிட முனைகின்றன.
இத்தகைய பாதக அம்சங்கள் இருந்த போதிலும் விடுதலை மார்க்கத்தில் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் பொறுப்பை மார்க்சியர்கள் கையேற்றாக வேண்டியது தவிர்க்கவிலாத வரலாற்றுக் கடமையாக உள்ளது. எமது செயற்பாட்டுக்கான தளம் உழைக்கும் மக்கள் என்கிற பொழுது, அவர்கள் இத்தகைய மேட்டுக்குடி - மேலாதிக்கத் தமிழ் தேசியர்களால் ஏமாற்றப்பட்டு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதற்காக வாழாதிருந்து இன்னொரு முள்ளிவாய்க்காலில் பட்டுத் தெளிந்த பின்னர் பார்ப்போம் என்று இருந்துவிட இயலாது. தமிழ் மக்கள் மட்டுமின்றி, ‘தமிழ்’ ‘முஸ்லிம்’ பயங்கரவாதங்களின் பேரால் முழு நாடும் இராணுவமயமாக்கப்பட்டு வரப்படுகிற நிலையில் ஒடுக்கப்படும் எமது தேசிய இனங்களின் விடுதலை வடிவங்களை வரையறுத்து உழைக்கும் மக்கள் போராட்டங்களுக்கான வேலைத்திட்டங்களை வகுத்தாக வேண்டும். அதன் வாயிலாகவே சிங்கள மக்களும் இன்றைய மக்கள் விரோத ஆட்சியாளர்களை தூக்கியெறிய வகை செய்தவர்களாவோம். நாட்டின் இறைமையை மீட்டெடுத்து பூரண சுதந்திரத்தை வென்றெடுக்க இயலும்!
ஒடுக்கப்படும் தேசிய இனங்களான எமது விடுதலையுடன் முழு இலங்கைத் தேசத்தின் பூரண சுதந்திரம் இணைந்த ஒன்றாகும். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட ஆற்றலை வைத்தேதான் இந்திய மேலாதிக்கம் இலங்கையின் இறைமையைக் கபளீகரம் செய்தது என்பதைக் கண்டோம்; முப்பது வருட யுத்தத்தின் பின்னர் இருந்த இருப்பையும் பறிகொடுத்துப் பின்னடைந்த நிலைக்கு நாம் வந்த பொழுது இந்தியா இலங்கையைத் தனது மீறப்பட இயலாத சந்தையாக்கியதோடு, தன்னைக் கேளாது எந்தவொன்றையும் செய்ய இயலாது என ஆக்கிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது.
அந்தவகையில், “ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிதிரட்டல்” பற்றித் தொடர்ந்து பேசுவோம்!
Wednesday, September 25, 2024
திணை அரசியலுக்கான தனித்துவக் கூறுகள்!
திணை அரசியலுக்கான
தனித்துவக் கூறுகள்!
இந்த தலைப்பு ‘திணை அரசியல்’ பற்றி எழுதி வரும் தொடரின் இறுதிக் கட்டுரைக்கு உரியது. அதனை இங்கு எழுதப்போவதில்லை. கடந்த ஞாயிறன்று (30.8.2020) இடையிட்ட 15,16 வது தலைப்புகளைப் பின்னதாகப் பதிவிடுவதாக கூறி 17 வது அமர்வைப் பேசுவேன் எனக் கூறியிருந்தேன். ஒரு மாற்றம், வரும் அமர்வுகளைப் பகுதி -2 எனப் பிரித்து அதன்கண் நவீன இலங்கையின் திணை அரசியல் முன்னெடுப்பு, மற்றும் எதிர்கால இயங்கு தளம் என்பவற்றைப் பேசலாம் என வகுத்துக் கொண்டுள்ளேன். இவை தொடர்பில் உங்களுடைய கருத்துப் பரிமாறல்களை எதிர்பார்க்கிறேன்.
வர இருப்பன:
1. விளங்காது இருப்பதைப் புரிந்துகொள்வோம்.
2. சிங்கள மக்கள் நல்லவர்கள், சிங்கள இன மேலாதிக்கம் மோதியழிக்கப்பட வேண்டியது!
3. தமிழ் இனச் சாதனைப் பாறையை வெற்றிச் சிகரமாக்குவோம்!
4. சாதியத் தகர்ப்புத் தேசிய இன விடுதலைக்கான முதன்மைப் பணி!
5. ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேரணி!
6. திணை அரசியலுக்கான தனித்துவக் கூறுகள்!
ஏற்கனவே வர்க்க அரசியல், அடையாள அரசியல் என்பன அனுபவ வயப்பட்டுள்ள சூழலில் இவ்வாறு புதிய வடிவம் ஒன்றை ஏன் நுழைக்க வேண்டும்? கொம்யூனிஸ்ட் கட்சிச் செயற்பாடுகள் பலவும் மாறிவந்த வரலாற்று செல்நெறியைக் கவனத்தில் எடுக்காதனவாக ஆகியுள்ளன. மாஓ சேதுங் மறைவை அடுத்துக் கொம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக ஹுவா குவாபெங் வந்திருந்தார். அவரிடமே மக்கள் படைத் தலைமையும் தேசத் தலைமையும் (ஜனாதிபதி) இருந்தது. அவர் ஒரு கோசத்தை முன்வைத்தார்:”மாஓ சொன்ன ஒவ்வொன்றும் சரியானவை, அவரது நடைமுறையை அப்படியே பின்பற்றுவோம்” என்பது அந்த முழக்கம்.
அதனைக் கைவிடும்படி கட்சி மத்திய குழு வலியுறுத்தியது. இல்லாத பட்சத்தில் ஆயுதப்படைத் தலைமையைக் கைவிடச் சொன்ன பொழுது பின்னதை விட்டாரே அன்றி ‘மாஓ பாதையை’ விடவில்லை. மீண்டும் ஜனாதிபதியை இன்னொருவரிடம் இழப்பதற்கும் அவரது பக்த நிலைப்பாடே காரணமாயிற்று. அடுத்த மாநாட்டில் மத்திய குழுவுக்கும் அவர் தெரிவு செய்யப்படாத நிலை ஏற்பட்டதாயினும் இன்னும் அவர் அந்த நம்பிக்கையை இழக்காமல் உள்ளார். மாஓ மீண்டும் அவதரித்து அவருக்குக் கதிமோட்சம் தர இறைஞ்சுவோம்!
‘கடவுள் அருளிய மூல மொழிகள் மீறப்பட இயலாதன, இறை தூதர்களது நடைமுறைகளை அப்படியே பின்பற்றி ஒழுகுதல் அவசியம்’ என்ற மத நம்பிக்கை எப்படி ஒரு பலம்பொருந்திய கொம்யூனிஸ்ட் கட்சிக்குள் நுழைய இயலுமாயிற்று?
மூலதனச் சதியினாலே, அல்லது அதன் வெற்றியினாலேதானா இன்று விடுதலை அரசியல் மேலெழ இயலாதிருக்கிறது?
உலகெங்கும் பிற்போக்குவாதிகளும், பாசிசவாதிகளும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடுகளது தலைவர்களாக முடிந்துள்ளது எப்படிச் சாத்தியமானது? மக்கள் அனைவருமே சுயநலக் கும்பல்களாயும் பிற்போக்குவாதகளும் ஆகிவிட்டனரா?
சில வருடங்களுக்கு முன்னர் முற்போக்கு இலக்கிய முன்னோடி டொமினிக் ஜீவா அவர்கள் “நான் தொடர்ச்சியாக ஒரே கொம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வருகிறேன்” என்றார். அதுபற்றி “இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்” நூலில் சில கேள்விகளை எழுப்பி இருந்தேன். நீங்கள் இருந்த கட்சி சிங்களப் பேரினவாதச் சகதிக்குள் அமிழ்ந்து சீரழிந்துவிட்ட பின்னரும் அந்த அமைப்பில் இருக்கிறேன் என்பது எவ்வகையில் பெருமைக்கு உரியதாக இருக்க இயலும்?
ஒரு தசாப்தம் முன்னர் (அண்மையில் மறைந்த) மிகப் பெரும் மாக்சிய ஆளுமையான கோவை ஞானி அவர்கள், “கொம்யூனிஸ்ட் கட்சிகள் சீரழிந்துவிட்டன; கட்சிக்கு அப்பாலான மார்க்சியத்தை வளர்ப்போம்” என்பது போன்ற கருத்தொன்றை முன் வைத்தார். கட்சிகள் சுய சிந்தனை ஆற்றல் கொண்டு தமது நாட்டமைவுக்குப் பொருத்தமான மார்க்சியப் பிரயோக வளர்ச்சியைச் செய்யத் தவறின என்பது பின்னடைவுக்கான அடிப்படைக் காரணம் தான், அதற்காக கட்சி இல்லாத மார்க்சியம் மேலானது எனலாமா என்ற கேள்வியை அப்போதே ஒரு நூலில் எழுப்பி “கட்சியற்ற மார்க்சியம் உடலற்ற ஆன்மா, பிரயோக விருத்தியற்ற மார்க்சியம் ஆன்மா அற்ற உடல்” என்பதாகுமல்லவா என எழுதியதாக ஞாபகம்.
கட்சிகள் தரைவர் வழிபாட்டுக்கு ஆட்பட்டு ரசிகர் மன்றங்கள் போலச் சிதைந்து விட்டுள்ள இன்றைய சூழலில் கட்சி அமைப்புக்குள் சுய சிந்தனை ஆற்றல்மிக்க உண்மையான மார்க்சியர்களால் இருக்க இயலாமல் போகலாம்; அதன் காரணமாக கட்சி உறுப்பினர்களைவிடவும் ஆற்றல்மிக்க,நேர்மையான, அர்ப்பணிப்புடன் மக்கள் மத்தியில் இயங்கவல்ல மார்க்சியர்கள் பலர் உள்ளனர்.
எந்த நிலையிலும் இயங்கும் மார்க்சிய அமைப்புகளைச் சிதைக்க முற்படாத அதேவேளை அவற்றின் மீதான நேர்மையான விமரிசனங்களை முன் வைத்தவாறு புதிய வரலாறு படைத்தலுக்கான மார்க்சியத்தைக் கண்டடைய முற்பட வேண்டிய பொறுப்பு கட்சிகளுக்கு வெளியேயுள்ள மார்க்சியர்களுக்கு இருக்கிறது. அதேவேளை, இயங்கிய பாதையில் விசுவாசத்துடன் தொடர்ந்து செயற்படுவதனால் உயிர்ப்பான மார்சிய வளர்ச்சியைக் கட்சிகள் வந்தடையாத போதிலும், அத்தகைய மார்க்கம் கண்டடையப்படும் பொழுது அதன்பாலுள்ள அர்ப்பணிப்புமிக்க தோழர்க்ள் அதனை ஏற்று தமது கட்சியை அதன்வழி முற்படுவதற்கு முனையமாட்டார்கள் என்று ஏன் அவநம்பிக்கை கொள்ள வேண்டும்?
சரியான கோட்பாட்டு நெறி கண்டடையப்பட்டு, தெளிந்த அரசியல் மார்க்கம் வகுக்கப்படாமையினாலேயே மார்க்சியர்களால் விடுதலை அரசியலில் மக்களை அணிதிரட்ட இயலாமல் இருக்கிறது. மாற்றமடைந்த வரலாற்றுச் செல்நெறி வர்க்க மோதலைவிட முழுச் சமூக சக்திகளிடையேயான (திணைகள் இடையேயான) மோதலாக இன்றைய அரசியல் களத்தை ஆக்கிவிட்டுள்ளது. அதன் பொருட்டு விளங்க இயலாது திகைப்பூட்டுவதான ‘திணை அரசியல்’ குறித்துக் கற்றாக வேண்டி உள்ளது.
இணைந்து விவாதிப்போம்; நாளை சந்தித்து உரையாடுவோம்!
‘புவி அரசியல்’
என்பது
இன்றைய பிரதான
பேசுபொருளாகி
உள்ளது
முன்னதாக இதுபற்றிய அக்கறை போதிய அளவு இல்லாதிருந்தது ஏன்?
எழுபதாம் ஆண்டுகள் வரை பாட்டாளி வர்க்கப் புரட்சி வர இருப்பதான நம்பிக்கை உலக நாடுகளெங்கும் இருந்தன; அப்போதும் கொம்யூனிஸ்ட் கட்சிகள் ‘ஏகாதிபத்தியத்துக்கும் ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கும் இடையேயான முரண்பாடு’ கூர்மையாக இருப்பது குறித்து வலியுறுத்தி வந்த போதிலும்
தத்தமது நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் தவறைக் கொம்யூனிஸ்ட் கட்சிகள் செய்தன.
இன்று ஏகாதிபத்தியம் ‘சாவா, வாழ்வா’ என்ற இறுதிக்கட்ட (அல்லது அதற்கு முந்திய காலத்துக்கான) போராட்டத்தில்…
அதன்பேறு ஒடுக்கப்பட்ட நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் கைவரிசைகள் வலுத்துள்ளன!
அவற்றுடனான கணக்கைத் தீர்த்தவாறே தான்
சுயநிர்ணயத்தை,
சோசலிசத்தை
வென்றெடுக்க ஏற்ற வேலைத்திட்டங்களை வகுத்தாக வேண்டி உள்ளது!
விடுதலைத் தேசிய அரசியலில் தலித்பிரச்சின
விடுதலைத் தேசிய
அரசியலில்
தலித் பிரச்சினை
தலித் மக்களின் விடுதலையை முதன்மைப் பணியாக கருதும் வரலாற்றுக் கட்டம் இன்று. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இயங்கிய தலித் எழுச்சி காரணமாக இன்றைய தமிழ் பண்பாட்டின் கொடுமுடியான சினிமாவும் தலித்திய வீச்சை ஏற்று வெளிப்படக் காண்கிறோம்.
உலகளவில் இன்றைய சீனப்பாதை குறித்த விவாதமும் மேலெழுந்துள்ளது. மாஓவுக்குப் பின்னர் சீனா தடம்புரண்டு சென்றுவிட்டதாக கருதிய சில நண்பர்கள் கூட சீனாவின் பிரத்தியேகப் பண்பைக் கவனங்கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் மார்க்சியர்களது கருத்துகள் மீது நாட்டம் செலுத்தத் தொடங்கி உள்ளனர்.
சீனா முதலாளித்துவத்தை உள்வாங்கியது மட்டுமன்றி அமெரிக்கா இன்று தன்னைத் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்குத் தொடங்குவதற்கு முன்னர் வரை அதனோடு வலுவான உறவைக் கொண்டிருந்ததே, அவ்வாறு இருக்க மாஓ சேதுங் சிந்தனையைச் சீனா இப்போதும் முன்னெடுப்பதாக எப்படிக் கூற இயலும்?
இக்கேள்வியின் அடிப்படையில் மாஓவை விசுவாசிக்கும் பழைய சீன சார்புக் கொம்யூனிஸ்ட்டுகள் பலர் இன்றைய சீனாவை முதலாளித்துவ நாடு என்றே கருத்துரைத்து வருவதனையும் பார்க்கிறோம். அத்தகையவர்கள் இயங்கியல் அணுகுமுறையைக் கைவிட்ட புத்தக வாதிகள் என்பது ஏற்புடையதே.
பாட்டாளி வர்க்கப் புரட்சியாலன்றி விவசாயிகளது தேசிய விடுதலைப் போராட்டத்தினூடாக வென்றெடுக்கப்பட்ட சீனாவுக்கு மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தைப் பிரயோகிக்கும் கோட்பாட்டை வகுத்து இயங்கியவர் மாஓ. ஜனநாயக மாற்றியமைத்தல் காலகட்டம் நிறைவுற்ற பின்னர் சோசலிச முன்னெடுப்புக்கு முனைந்த பொழுது, அதற்கான பாதையை சோவியத் பாணியில் பின்பற்ற முனைந்த ஏனைய தலைவர்களை ஏற்க மறுத்து விவசாயத் தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்க வேண்டுமென வலியுறுத்தியவர் மாஓ.
உலகின் பிரதான எதிரியெனக் கணித்த காலத்திலேயே அமெரிக்காவுடன் உறவை ஏற்படுத்தி வலுப்படுத்தியவரும் மாஓ சேதுங் என்பதை வரலாற்றை அறிந்தோர் மறக்கமாட்டார்கள். அமெரிக்க மக்களோடான உறவு மக்கள் சீனத்துக்கு அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார். இன்றுங்கூட அமெரிக்க அதிகாரத் தரப்புக்கு எதிராகச் சீனாவுடன் உறவை மீளப் புதுப்பிக்க வேண்டுமென்ற குரல் அமெரிக்க மக்களிடம் வலுவாக உள்ளது.
எதிரியுடனான இந்த ஊடாட்டத்தை எவ்வாறு புரிந்துகொள்வது?
ஏகாதிபத்தியத் திணையெனும் முழுச் சமூக சக்திக்குள் இயங்கும் வர்க்கப் போராட்டத்தைக் கவனங்கொள்ளும் மார்க்சிய நிலைப்பாடு இது.
முழுச்சமூக சக்திகளிடையேயான போராட்டங்களூடாக வரலாறு இயங்குவதனை அறியப்பட்ட மார்க்சியம் சொல்லியிருக்கவில்லை. வர்க்க அரசியல் பாதைக்கு விரோதமான வழியில் இன்றைய சீனா செல்வதாக விமரிசிக்கப்படும் பொழுது ‘சீன நிலவரத்துக்கேற்ற மார்க்சியம்’ எனச் சொல்வது மாற்று இயக்க முறையை அவர்கள் புரிந்துகொள்ளாத நெருக்கடியின் பாற்பட்ட குறைபாடு என்பதை விளங்கிக்கொள்வது அவசியம்.
முழுச்சமூக சக்திகளிடையேயான மோதல்கள் வாயிலாக இயங்கிய வரலாற்றுச் செல்நெறியைத் தமிழகம் தெளிவுறக் காட்டி இருப்பது பற்றிப் பேசப்பட்டு வருகிற எம்மத்தியிலேயே பலராலும் இதனைப் புதிய பார்வை வீச்சோடு விளங்கவும் விளக்கவும் முடியாமல் இருக்கிற அவலம் நீடிக்கிறதே?
சீனப் பிரயோகத்தைச் சரியெனச் சொல்ல முடிகிற சில தோழர்களால் அதற்கான கோட்பாடுதான் விடுதலைத் தேசிய அரசியல் எனக் கூறப்படுவதன் தனித்துவத்தையும் கனதியையும் புரிந்துகொள்ள இயலவில்லையா; இது மார்க்சியத்துக்கு அவசியப்படுகிற ஒரு கோட்பாடென வலியுறுத்துவதன் தேவையை மறுக்கின்றனரா அல்லது வேறேதும் காரணங்கள் உள்ளனவா?
வேறு காரணம் இருக்க இயலுமாவெனக் கருத வேண்டியிருப்பது, இத்தகைய தோழர்கள் தலித்தியவாத நிலைப்பாட்டை அப்படியே ஏற்கிறவர்களாக உள்ளனர் என்பதால்!
இந்து சமயத்தை ஒழித்துக் கட்டுவது, பிராமண எதிர்ப்பு எனும் தலித்தியவாத, சாதிவாத நிலைப்பாட்டை விமரிசிக்காமல் அம்பேத்கரியர்களோடும் பெரியாரியர்களோடும் ஐக்கியப்பட்டு இயங்க இயலாது.
ஐக்கியமும் போராட்டமும் என்ற நிலைப்பாடு இவர்களோடும் உண்டு, ஆதிக்க சாதிகள் மத்தியிலான வர்க்கப் போராட்டத்தால் விடுதலைத் தேசிய அரசியலுடன் ஐக்கியப்பட வர உள்ள சமூக சக்திகளுடனும் உண்டு!
சீனத்தன்மைக்கான மார்க்சியம் என்ற கோட்பாட்டுத்தெளிவற்ற இன்றைய சீனாவின் நிலைப்பாட்டினால் பெரியாரியம், அம்பேத்கரியம் என்பவற்றை இந்திய நிலவரத்துக்கான மார்க்சியம் என மயங்குகிற திருகுதாளங்களுக்கு இட்டுச் செல்கின்ற அவலம் ஏற்படுகிறது!
சீனா திணை அரசியல் சார்ந்த விடுதலைத் தேசியச் சோசலிசக் கட்டுமானம் என்ற கோட்பாட்டை வகுத்துத் தெளிவுறுத்தத் தவறும் பட்சத்தில் முதலாளித்துவச் சறுக்கலில் சோவியத் யூனியன்போலத் தகர்ந்துவிட இடமுண்டு.
மார்க்சியம் சர்வவியாபக உண்மை. கால-தேச நிலவரத்துக்கு அமைவாகப் பிரயோகிப்பதையும் அதன் அடிப்படையை திரிபுபடுத்துவதையும் வேறுபடுத்தும் தெளிவு ஒரு மார்க்சியருக்கு அவசியம்!
விடுதலைத் தேசிய நாட்டமற்ற தேசியவாதம்
விடுதலைத் தேசிய நாட்டமற்ற
தேசியவாதம்
மேலாதிக்கத்துடன் உறவாடும்
இனத்தேசிய எழுச்சி, சாதிய மோதல்கள் என்பன முனைப்புற்ற எண்பதாம் ஆண்டுகளில் பின்நவீனத்துவம் பேசுபொருள் ஆகியிருந்தது. மார்க்சியம் அதுவரை முன்னெடுத்த அரசியல் செயற்பாடுகளுக்கு மாறான பாதை அவசியப்பட்ட போது மேலைத்தேச மார்க்சிய சிந்தனையாளர்கள் சிலர் பின்நவீனத்துவத்தை முன்வைத்தனர்.
அதுவரையான வர்க்க அரசியல் முன்னெடுப்பின் வகைப்பட்டதாக தேசிய, சாதிய மோதல்கள் இருக்கவில்லை. மாற்றுச் சிந்தனையாக அவர்கள் முன்வைத்த பெருங்கதையாடலைக் கைவிட்ட சிறுகதையாடல்கள் எனும் கருத்துநிலை சமூக மாற்றத்தை வேண்டி நிற்பதாக அன்றி நட்பு முரண்களையும் பகையாக்கி இரத்தக்களரி மோதல்களை வளர்ப்பதாகவே அமைந்தது.
இனிமேல் குழு மோதல்களே வரலாறெனச் சொன்ன தமிழ் பின்நவீனத்துவர்களும் இரண்டு மூன்று தசாப்தங்களின் பின்னர் தேசியவாதம், சாதியவாதம் என்பன தீர்வுக்கு வழியாகாது எனக்கூறி, மீண்டும் வர்க்கப் போராட்டமே கையேற்கப்பட ஏற்றது என்றனர். அது பின்நவீனத்துவக் குழு மோதல்களுக்கு உரிய மற்றொரு வடிவமான ‘வர்க்கவாதம்’ - மார்க்சியத்தை வர்க்கவாதமாக ஒடுக்க இயலாது!
மக்களே வரலாற்றைப் படைப்பவர்கள்; அவ்வகையில் படைப்பாக்கம் பெறும் இயக்கச் செல்நெறி ஊடாகவே அதற்கான மார்க்கமும் வெளிக்கிளம்பும். முழுச் சமூக சக்திக்கான வரலாற்றியல் வர்க்க இயங்கு முறையினின்றும் வேறுபட்ட ஒன்று!
வர்க்கப் போராட்டம் முனைப்புடன் களமாடிக் கொதிநிலையில் இருந்த பொழுது மார்க்சியம் பிறந்தது. அதன் இறுதிநிலையில் வர்க்க இயங்காற்றலுக்கு அப்பால் ஒடுக்கப்பட்ட தேசங்கள் எனும் முழுச் சமூக சக்தி வரலாறு படைக்கும் மாற்றப் போக்குக்கான சந்தியில் லெனினிசம் வெளிப்பட்டது.
அதன் பின்னர் வர்க்க அரசியல் செயலொழுங்கு முனைப்பாக இருந்த, (ஏகாதிபத்தியச் செயலொழுங்கில் இருக்கும்) மேலை நாடுகள் வரலாறு படைக்கும் ஆற்றலை இழந்தன. அந்த நாடுகளின் சிந்தனையாளர்கள் எவ்வளவு மேதைமையுடன் மாற்றுகளைத் தேடினும் புதிய வரலாற்றுக் கட்டத்துக்கான மார்க்கத்தை வகுக்க இயலாத பலவீனங்களுக்கு உரியோரே; பின்நவீனத்துவம் கவைக்குதவாத சரக்காக இருப்பது அவர்களது குற்றமல்ல.
முழுச் சமூக சக்தியாக வரலாற்று இயக்கம் எமக்கான சாதி வாழ்முறையில் நீண்டகாலமாக இருந்து வருகிறது; ஏற்றத்தாழ்வு வாழ்முறையின் ஆரம்பம் வர்க்க வேறுபாட்டுக்கு உரியதாக அன்றி, தொடக்கம் முதலாக சாதிச் சமூக நியதியாக ஏற்பட்டு அதற்கே உரிய பிரத்தியேகச் செல்நெறியுடன் இயங்கி வந்துள்ளது.
சாதி என்பதைத் தமிழக வரலாற்றுத் தொடக்கமே தெளிவுறுத்துகிறது; திணை மேலாதிக்கம் சாதியை உள்வாங்கியதற்கான அவசியம் என்ன? மேலாதிக்க ஒடுக்குமுறை வாயிலாகச் சுரண்டலை மேற்கொள்ள வேண்டும் என்பதல்லாமல் வேறென்ன?
அங்கே வர்க்க முறைமை ஏற்படுத்திய வாய்ப்பை இங்கே சாதி அமைப்பு வழங்கி உள்ளது. முழுச் சமூக சக்திகளுக்கான வாழ்வியல் தொடக்கத்தைக் காட்டியதோடு மட்டுமன்றி, அத்தகைய சமூகத்தின் அமைப்பு மாற்றங்கள் வர்க்கப் போராட்டம் வாயிலாக அன்றி வேறொரு வடிவத்துக்கு உரியது என்பதையும் தமிழகமே தெளிவுறுத்தி இருந்தது.
வர்க்கப் போராட்டச் சிந்தனையாக அல்லாமல் மாஓ சேதுங் சிந்தனைப் பிரயோகத்தில் சாதி அமைப்புக்கு எதிரான ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கத்தை வெளிப்படுத்திய இலங்கை மண்ணே நவீன வரலாற்றில் திணை அரசியல் (முழுச் சமூக சக்திக்கான) செயலொழுங்கைத் துலக்கமாக காட்டி நின்றது.
அதன் ஒளியில் மாஓ சேதுங் சிந்தனையை வர்க்க அரசியல் நீடிப்பாக அன்றி ‘விடுதலைத் தேசியச் சிந்தனை முறை’ என இனங்காண அவசியம் உள்ளதைக் காண்கிறோம்.
தேசியப் பிரச்சினை வர்க்கச் சிந்தனை முறையினின்றும் வேறுபட்டது. அதற்காக மார்க்சியத் தொடர்ச்சி அற்றதல்ல (அதனைப் புரிந்துகொள்ளாத ‘மார்க்சியப் பின்நவீனத்துவர்கள்’ இடறுகின்றனர்).
முதலாளித்துவ நிலைப்பட்ட தேசிய விடுதலை அரைக்கிணறு தாண்டிய நிலை; இந்தியா போல மேலாதிக்கத் தேசமாக, இலங்கையைப் போல மேலாதிக்க நாடுகளுக்கு கட்டுப்பட்டு (அதனை மறைக்க உள்ளே சிறு தேசிய இனங்களின் மீது பேரினவாத மேலாதிக்கத்தை ஏவுவதாக) இருக்க வேண்டும்.
பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை மேற்கொள்ளும் விடுதலைத் தேசியச் சிந்தனை வழிகாட்டலுடன் இயங்கும் தேசம் சோசலிசத்தை வெற்றிகொண்டு அனைத்து வடிவங்களிலுமான மேலாதிக்கங்களையும் தகர்த்துத் தேசங்கள் இடையே சமத்துவத்தை நிலைநாட்ட உழைக்கும்.
மாஓ சேதுங் சிந்தனைக்கு உரிய மக்கள் சீனம் அதற்கான எடுத்துக்காட்டு.
பின்நவீனத்துவம் போன்ற முயற்சிகளைக் கற்பதில் தவறில்லை; ‘முன்னேறிய’ மேலைச் சிந்தனை முறை மட்டுமே எமக்கான அனைத்துத் தீர்வையும் காட்டவல்லது என்ற அடிமைப்புத்தியைக் கைவிடுவோம்!
முழுச் சமூக சக்தியெனும் வேறு வடிவ வரலாற்று இயங்கு முறைக்கு உரிய எமது நாடுகளும் ‘மிகமுன்னேறிய’ வளர்ச்சி நிலைகளுடன் ‘கோலோச்சிய’ காலங்கள் இருந்தன!
கீழது மேலாய்,
மேலது கீழாய்
சுழன்றடிக்கும்
வரலாற்றோட்டம்… !
கீழைக்காற்று மேலைக்காற்றை
மேவிப் பாயும்
காலம் இது!
நாமும்
நமக்கென்றோர்
நலியாக் கலையுடையோம்!!
Monday, September 23, 2024
மாஓ சேதுங் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 9 பாகங்கள்
மாவோ: தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 9 பாகங்கள் .
மாவோ: தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் ஒன்பது தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இதற்கான முயற்சியில் விடியல் சிவாவின் பங்கு குறித்து எற்கனவே சொல்லி இருந்தேன்.. அதன் வெளியீட்டுக்கு ஓரிரு மாதங்களின் முன்னர் அவரது மறைவு ஏற்பட்டிருந்தது. இருப்பினும், அத்தகைய முயற்சியின் வெற்றி குறித்த மகிழ்வோடுதான் கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டார். இந்த வெளியீட்டில் முதல் நாலு விடியல் ஊடாகவும், ஏனைய ஐந்தும் அலைகள் வாயிலாயும் வெளியாகின.
இவற்றை எனக்கு உடனடியாகவே பெற்று அனுப்பியவர் நண்பர் நவநீதன்; முதல் இரு தொகுதிகள் வழக்கமான கலைச்சொல்லாக்கத்திலிருந்து வேறுபட்டு அமைவதாகக் கூறி, அதுகுறித்து எனது அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தார். முதல் நாலு தொகுதிகளில் உள்ளவை அனேகமாய் பலதடவை படிக்கப்பட்டவை. ஐந்தாம் தொகுதி மாஒவின் இறுதிக்காலத்தில் சீனாவில் தொகுக்கப்பட்டு ஆங்கில மொழியாக்கம் வெளிவந்தது. ஏனையவை நடைமுறை அவசியத்தொடு வெளியிடப்பட வேண்டும் என்ற கருத்து மாஒவிடம் இருந்ததாக அறிந்திருக்கிறேன். பிந்திய தொகுப்புகளைப் பார்த்தபோது மாஒ மறைவின் பின்னர் சீனப்பாதையை நிராகரித்தவர்களால் ஆதாரபூர்வ சீன வெளியீடுகளில் இருந்து பெறப்பட்டுத் தொகுக்கப்பட்டமையைக் காண முடிந்தது.
இந்த மாற்றநிலை மிகுந்த கவனிப்புக்குரியது. மாஒவின் இறுதிக்காலத்தில் மூன்றுலகப் பகுப்பாக்கம் பேசுபொருளாயிருந்ததை அன்றைய "பீக்கிங்க் ரிவியூ" சஞ்சிகையில் பார்த்த நினைவுண்டு. பின்னர் மாஒவின் மறைவைத் தொடர்ந்து மூன்றுலகக் கோட்பாடு பிரதான விவாதப்பொருளாகி, மீண்டும் இன்னொரு தடவை உலகப் பொதுவுடமை இயக்கம் பிளவடைந்தது. இதன் பேறாக இத்தொகுதி மூன்றுலகப் பகுப்பாக்கம் தொடர்பில் மாஒவின் நிலைப்பாட்டை எவ்வாறு காட்டுகிறது என்பதை அறியும் ஆர்வம் உந்திய நிலையில் ஒன்பதாவது தொகுதியை முதலில் படித்து முடித்தேன். வழக்கமாக முதலில் இருந்தே படித்துச் செல்லும் என் மரபுக்கு மாற்றாக, மேலிருந்து கீழாகப் படித்துச் செல்ல முடிவெடுத்தேன்.
மூன்றுலகக் கோட்பாட்டை நிராகரித்த பிரிவினரின் தொகுப்பு முயற்சி என்கிறவகையில் வலிந்து அதற்கு ஆதரவாக எதையும் சொல்லியிருப்பார் என்று காட்ட எத்தனம் இருக்கும் எனும் ஐயத்துக்கு இடமில்லை. இப்படிச் சொல்வதால் மூன்றுலகக் கோட்பாட்டை ஏற்று மாஒ சொன்னதாக ஆதாரம் இருந்ததாகப் பொருள் இல்லை. இது ஆழமான தத்துவார்த்த-நடைமுறை விவாதப் பொருள் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை. அதேவேளை மூன்றுலகப் பகுப்பை அவர் கவனம்கொண்டு அதுதொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்தியமை ஒன்பதாம் தொகுதியில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கக் காணலாம். அது தொடர்பில் அடுத்த பதிவில்.
எட்டாவது தொகுதியில் சோவியத் யூனியனோடான தத்துவார்த்த, நடைமுறை முரண் கூர்மைப்படத் தொடங்கியபோதிலும், வெளிப்படையாக எதிர்நிலை எடுக்காது, அவதானமாகக் கையாளும் முயற்சியாக அவர் தன் கருத்தை வெளிப்படுத்தும் நுட்பம் தெரிகிறது. ஸ்டாலின் சோசலிச மாற்றியமைத்தலில் இழைத்த தவறுகளை சுட்டிக்காட்டி, அதிலிருந்து கற்றுக்கொண்டு, சீனா எத்தகைய நடைமுறையைக் கையாள வேண்டும் என்பதைக்கூறியிருந்தமை கவனிப்புக்குரியது. ஒன்பதாம் தொகுதியில், குருஷேவ் ஸ்டாலின்மீது அபாண்டமான குற்றவிமர்சனங்களை வெளிப்படுத்திய நிலையில், மாஒ ஸ்டாலின் தொடர்பாக சமநிலையான விமர்சனத்தையும், சோவியத் யூனியன் மீது வெளிப்படையான கண்டன விமர்சனங்களை முன்வைப்பதையும் காண இயலும்.
அரை நூற்றாண்டைக் கடந்து, தொடர்மாற்றங்கள் பலவற்றைக் கண்டுள்ள இன்றைய அனுபவங்களோடு அன்றைய போக்கு அமைந்தவாறை அவ்வப்போதைய அனுபவப் பதிவுகளாக இத்தொகுதிகளில் காண முடிந்துள்ளமை பெரும் வாய்ப்பு. ஏனைய தொகுதிகளைப் படித்துச் செல்லும் நகர்வில் இவை தொடர்பாக உரையாடுவோம். இன்று எமது தேடல் வலுப்பட்டுவருகிற சூழலில் மாஒவைக் கற்றல் மிகுந்த அவசியமுடையது. புத்தகங்களில் இருந்து பத்துவீதமும், நடைமுறை வாயிலாகவே மிகுதித் தொண்ணூறு வீதமுமான மார்க்சியத்தைக் கற்றேன் என்கிற மாஒவை கற்று, எமக்கான தொண்ணூறு வீத நடைமுறைக்கான மார்க்கத்தைக் காண ஏற்ற கருத்தியலைப் பெற இந்தக்கற்றல் உதவும். இன்று நண்பர்களிடையே எதிரியைக் கையாள்வது போன்ற மோதல் வலுத்துவருவது, கருத்தியல் தெளிவீனத்தின் வெளிப்பாடாகும். அதன்பொருட்டு இக்கற்றல் தொடரப்படும்.
மாஓ சேதுங்கைக் கற்றல்
என்பது
திணை அரசியலின் அடித்தளத்தைப்
புரிதல் எனவாகும்!
வர்க்க வாத முடக்கங்களைத்
தகர்த்துச்
சோசலிச முன்னெடுப்பானது
வர்க்கச் சமூக முறைமையால் இயலாமலாகி
விடுதலைத் தேசிய (திணை)
- முழுச் சமூக சக்திக்கான -
அரசியல் முன்னெடுப்பு முறைமை
வாயிலாகவே சாத்தியமாகி இருப்பதனை
மாஓவிடமிருந்தே அதிகம்
புரிதல் கொள்ள இயலும்
இப்போது இந்த நூல்களை கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகத்தில் பெற்றுப் படிக்க இயலும். எமது பாரம்பரியத்தில் இயங்கியல்-பொருள்முதல்வாதச் சிந்தனை முறைமை எதுவுமே இருந்ததில்லை என்ற விஞ்ஞானக் கேடான ‘மார்க்சியத்தை’ நடிப்புப் ‘புரட்சி வேடதாரிகள்’ வெளியிட்டுப் பம்மாத்துக் காட்டும் ஏமாற்றுகளில் இருந்து விடுபட்டு
சமூக மாற்றத்துக்காக உண்மையில் உழைக்க முயலும் ஒவ்வொரு மார்க்சியரும் மாஓ சேதுங் சிந்தனையையும்
திணை அரசியல் செல்நெறியையும் (இதன்பொருட்டு பழந்தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றையும்)
கற்பது அவசியம்!
அவற்றைத் தாங்கிய நூலக வாசல் திறந்தே உள்ளது,
அனைவர்க்குமாக!
வீறார்ந்த புரட்சி எழுச்சியா? ஏகாதிபத்திய வெற்றியில் துவளும் துயரமா?
வீறார்ந்த புரட்சி எழுச்சியா?
ஏகாதிபத்திய வெற்றியில்
துவளும் துயரமா?
இந்தியா மிகப்பெரும் சுதந்திரப் போராட்டம் வாயிலாக விடுதலையை வென்றெடுத்தது!
அது காந்தி-நேரு தலைமையில்
தாராளவாத அரை பிராமணியத் தேசிய நிலைக்கு உரியது!
நாட்டுத் தலைமையைக் கையேற்ற நேரு ‘தாராளவாத அரை பிராமணிய-முதலாளித்துவ சோசலிச அமைப்பை முன்னிறுத்தி நாட்டைக் கட்டி எழுப்ப முயன்றார்!
மார்க்சியர்கள் தேச விடுதலையை முதன்மை எனக் கருதிய நிலையில் அரை பிராமணிய - முதலாளித்துவத் தலைமைச் சோசலிசத்தைக் கடந்த ‘விடுதலைத் தேசிய சோசலிச முன்னெடுப்புக்கு’ மார்க்சியச் சிந்தனையை எவ்வகையில் வளர்த்தெடுக்க வேண்டும்
என்ற புரிதலுடன்
இயங்க முற்பட்டிருக்க
வேண்டும்;
ருஷ்ய-சீனப் பாதைகள்
என்ற சிந்தனை
முடக்கம் காரணமாக
இந்தியச் சமூக விடுதலைக்குத் தலைமை தாங்கும் வரலாற்றுக் கடமையிலிருந்து தூரப்பட்டனர் இந்திய மார்க்சியர்கள்!
நேருவின் அரச சோசலிசம் இந்தியப் பெருமுதலாளித்துவத்தை வளர்க்கப் பயன்பட்டதில்
தொடர் வளர்ச்சிக்குப் போராட
அவசியப்பட்ட
செயலொழுங்குகளுடன்
மார்க்சியர்கள்
இல்லாது இருந்தார்கள்
என்பதும்
காரணமாக இருந்தது என்ற சுய விமரிசனம்
அவசியம்!
- தமிழிலக்கியச் செல்நெறியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும்; காலையில் தொடங்கலாம். மின் தடையின் இடர்ப்பாட்டில் இதனைப் பதிவிட்டேன்;
பின்னர்,
மற்றைய அணிகள்,
இலங்கையின் ஓடு பாதை
என்பன கட்டுரையை வளர்த்தெடுக்கும்!
இப்போதைக்குத்
தூக்கத்தை
அணைக்கலாம்!
மீண்டும் சந்திப்போம்!
துவண்டு வீழும் கணங்களிலும்
சிலிர்த்தெழுந்து
மிடுக்குடன்
பயணம் தொடர்வோம்!
திணை அரசியல் செல்நெறி
ஏற்கனவே
இன்றைய உலகுக்கான
செயலொழுங்காகிவிட்டது
வர்க்க அரசியல் முன்னெடுப்பில் ஐக்கிய அமெரிக்க - சோவியத் யூனியன் இடையேயான பனிப்போர் சென்ற நூற்றாண்டின் எண்பதாம் ஆண்டுகள் வரை இயங்கு நிலைக்கு உரியதாக இருந்தது.
மாறிவரும் வரலாற்று முன்னெடுப்பானது,
வர்க்கப் போராட்டம் வாயிலாக சமூக மாற்றம் என்பதாக அல்லாமல்
முழுச் சமூக சக்தியான (திணையாகிய) ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைப் போராட்டம் வாயிலாக சமத்துவத்தை வென்றெடுத்தல்
என ஆகிவிட்டமையைப் புரிந்துகொள்ளாத சோவியத் யூனியன் பின்னடைந்து தகர்ந்து போய்விட்ட சூழலில்
அடையாள அரசியல் மேலெழுந்தது.
முதலாளித்துவ அற்பத்தனங்களுடன்
முழுச் சமூக சக்திகள் தமக்குள் மோத
ஏற்ற கையாளுகை காப்பிரேட் மூலதன
ஊடகத் துறையால் ஏற்படுத்தப்பட்டது.
ஏகாதிபத்திய அணி பெற்ற மேலாதிக்கம் மூன்று தசாப்தங்களைக் கடந்த நிலையில் சீர்குலைவுகளையே வளர்த்தன. அதுபற்றி முதலாளித்துவம் பெரிதாக அலட்டிக்கொள்ளாது; குழம்பிய குட்டைக்குள்ளும் நீச்சலடித்து முத்துக்களைப் பெறவே முயலுவது அதன் இயல்பு!
நான்கைந்து ஆண்டுகளாக பொருளாதார வீழ்ச்சி அவர்களை நடுநடுங்க வைத்தது. சோசலிச சீனம் உலகப் பொருளாதாரத்தின் முதல் நிலை நோக்கி வேகப்பட்ட வளர்ச்சியைப் பெற்று வரும் அதேவேளை, வளரவிடக்கூடாது எனக் கணிக்கப்பட்ட முன்னாள் சோசலிச ருஷ்யாவும் பொருளாதார விருத்தி பெறத் தொடங்கிவிட்டது.
இவற்றைத் தடுக்கும் வகையில் தைவானில் மக்கள் சீனத்தை யுத்தத்தில் இழுத்துவிட எடுக்கப்பட்ட நடைமுறைகள் எடுபடவில்லை;
உக்ரேனைப் பலிக்கடாவாக்கும் யுத்த முனையில் ருஷ்யா மென்மேலும் பலம்பெறும் துரதிர்ஷ்டமே அவர்களுக்கான பரிசாகக் கிடைக்கிறது.
எத்தனையோ அலங்கோலங்களுடன் இந்திய ஆளும் கும்பல் இருந்தாலும் சீனாவைக் கட்டுப்படுத்த வலுவான போட்டியாளராக இந்தியாவை வளர்த்து ஏகாதிபத்திய அணியின் தலைமைப் பொறுப்பை வகிக்க வைக்கும் முனைப்பில் இன்றைய உலக முதலாளித்துவம்.
ஆயினும்,
இந்தியா தனக்குள் திணை அரசியல் செயலொழுங்குடன் இயங்கிவரும் நாடு.
வர்க்க அரசியலின் பனிப் போராக அல்லாமல்
இனிவரும் உலக இயக்கம்
திணை அரசியல் களமாக அமையும்!
மாஓ சேதுங் சிந்தனையைச்
சோசலிச நிர்மாணத்துக்குமான
அரசியல் முன்னெடுப்பாக
மேற்கொள்ளும்போது
திணை அரசியல் வடிவம்
உலகின் பிரதான செல்நெறியாக மாறும்!
இன்றைய “ஈழநாடு” பத்திரிகையின் கட்டுரை ஒன்று இந்தியாவின் இராஜதந்திர அணுகுமுறையைப் பட்டவர்த்தனமாக காட்டியுள்ளது; திணை அரசியல் பிரகாரம் சீனாவைக் கையாளும் வழிமுறையை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதற்கான ஒரு உதாரணமாக இதனைப் பார்க்கலாம்!
தங்களை மார்க்சியர்கள் எனக் கூறிக்கொள்வோரிடம், ‘அவர்களை, அவர்களுக்குரிய வடிவில்’ - புறநிலை ரீதியாக - அணுகும் பார்வை இல்லாது இருப்பது எமக்கான துன்பியல்!
எல்லாம் எப்பவோ முடிந்ததோ?
கே.ஏ. சுப்பிரமணியம் நூலகத்தை பார்வை இட்டு வந்த இளம் செயற்பாட்டாளரான நண்பர் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்டார்.
‘மணியம் தோழர் பங்கெடுத்த போராட்டங்கள், நிகழ்வுகளின் படங்கள் இங்கே இருப்பதைப் பார்க்கிற போது இவ்வளவு காத்திரமான செயற்பாடுகளால் வளர்ந்திருந்த மார்க்சிய அணி பின்னர் ஏன் தளர்ந்து பின்னடைவுக்கு உள்ளானது என்ற கேள்விதான் எனக்குள் எழுகிறது’ என்றார்.
படங்களில் ஒன்று, தோழர்கள் பீற்றர்கெனமன், சரத் முத்தெட்டுவேகம ஆகியோருடன் மணியம் தோழர் கலந்துகொண்ட (பதுளையில் இடம்பெற்ற ஊர்வலம் ஒன்றின் போது) தோளோடு தோள் சேர்த்துப் போராடிய கணத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஒன்றுபட்டுப் போராடிய கால வளர்ச்சி, 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட கட்சிப் பிளவுக்குப் பின் பாராளுமன்றப் பாதையை முன்னெடுத்த அந்தத் தோழர்கள் பாராளுமன்றப் பாதையின் போது ஏற்பட்ட தவறுகளால் பின்னடைவுக்கு உள்ளான பொழுதிலும் தம்மளவில் இனவாதமற்ற மானுட நேசிப்பைக் கொண்டிருந்தனர் என்பது பற்றிப் பேசினோம்.
வெகு மக்கள் போராட்டப் பாதையே சமத்துவத்தை வென்றெடுக்க ஏற்ற ஒரே மார்க்கம் என்று மாஓ சேதுங் சிந்தனையைக் கையேற்ற புரட்சிகர அணி மாற்றுக் களத்தைத் தேர்வு செய்திருந்தது; வீறுமிக்க தொழிலாளர்-விவசாயிகள்-ஏனைய உழைப்பாளர் போராட்டங்களை அந்த அணி முன்னெடுத்திருந்தது; அக்காரணத்தால் தோழர் சண்முகதாசன் தலைமையிலான தொழிற்சங்க சம்மேளனத்திலேயே மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அணிதிரண்டு இருந்தனர்.
யாழ்ப்பாணத்தின் சாதியத்துக்கு எதிரான போராட்டங்களையும் அந்தப் புரட்சிகர அணி முன்னெடுத்தது. தெற்கில் அந்த அணி இன்று பலத்துடன் இல்லை; வர்க்கப் போராட்ட அரசியல் பின்னடைந்து முழுச் சமூக சக்திகளது (திணை அரசியல்) செயல் வேகச் சூறாவளியில் தெற்கை மார்க்சிய அணி கைதவறிப்போகவிட்டு இருந்தது. சிங்களத் தேசியவாத நோய்ப் பீடிப்புடன் உள்ள ஜேவிபி அந்தக் களத்தைக் கபளீகரம் செய்தது.
திணை அரசியலுக்குரிய சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த காரணத்தால் வடக்கில் மார்க்சிய அணி இன்னமும் வலுவுடன் இருக்கிறது. ஆயினும், தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைக் கையேற்கத் தவறியமையால் புது வரலாறு படைக்கும் ஆற்றல் கைநழுவிப் போயுள்ளது.
தேசியத்தை போர்க்குணமிக்க விடுதலைத் தேசிய உணர்வுடன் முன்னெடுக்கத் தவறியமை பற்றிய சுய விமரிசனம் உள்ள பொழுதிலும் அதற்கான களச் செயற்பாடுகளில் மேலாதிக்கத் தமிழ் தேசிய இனவாதிகளை எதிர்த்து முறியடிக்கும் வேலைப் பாணி குறித்த தெளிவு எட்டப்படவில்லை.
வர்க்க அரசியலுக்கு அப்பால் திணை அரசியலுக்கான கோட்பாட்டுத் தெளிவு எட்டப்படவில்லை என்றால் ஜேவிபி யின் இனவாத த் தவறை எப்படி விமரிசிக்க இயலும்?
ஏற்கனவே சரியாக அனைத்தும் சொல்லப்பட்டுள்ளது எனப் புத்தகங்களை மட்டும் புரட்டிப் பார்த்துத் தீர்வுகளைக் கண்டடைய இயலுமா?
‘எல்லாம் எப்பவோ முடிந்த கதை’ என்ற மத வாதிகள் போல இருப்போமா?
புதிய களம்,
புதிய பல பிரச்சினைகள்,
மாறுபடு சூரத்தனங்களுடன் காப்பிரேட் ஏகாதிபத்தியம்,
மக்கள் மனங்களைச் சிப்பிலியாட்டும் ஊடக குறுக்கறுப்புகள்,
இத்தகைய சவால்களை முகங்கண்டு
புத்தம்புதிய -
இன்றும் புதிதாய் பிறக்கும்
ஆற்றல் படைத்த
மார்க்சியக் கோட்பாடான
விடுதலைத் தேசிய மார்க்சியச் சிந்தனை முறைமையைக் கையேற்று,
வளர்த்தெடுப்போம்!
வர்க்கச் சிந்தனை நீடிப்பாக விடுதலைத் தேசியச் சிந்தனை முன்னெடுப்பு
வர்க்கச் சிந்தனை
நீடிப்பாக
விடுதலைத் தேசியச் சிந்தனை
முன்னெடுப்பு
இன்றைய நிதர்சனத்தின் தேவை
‘பிற்போக்குத் தேசியத்தை நிராகரித்து முற்போக்குத் தேசியத்தைக் கையேற்க வேண்டும்’ என்ற கருத்தைச் சொன்ன தோழரிடம் அப்படியான பார்வை ‘பழைமை வாத வகைப்பட்டது’ எனச் சொல்ல வேண்டியிருந்தது.
வர்க்க மோதல்களே வரலாற்றை முன்னகர்த்தும் இயக்கு விசை என்ற நிலைப்பாட்டுக்கு உரியது அந்தக் கருத்து. முழுச் சமூக சக்திகள் இடையேயான மோதல்கள் வேறொரு வரலாற்று இயக்கம் எனும் மார்க்சியத்தின் வளர்ச்சி நிலையை வந்தடைந்து,
தமக்கான சிந்தனை முறையாக அதனை வரித்துக்கொள்ளத்தக்க இயங்குநிலை மார்க்சியரென ஆகும் போது,
புதிய ஒளியுடன் தேசியப் பிரச்சினையை அணுக இயலும்.
மார்க்சியம் மீண்டும் சமூகத்தளத்தில் தீர்மானிக்கும் தலைமைச் சக்தியாக ஆவதற்கு இந்த விருத்திபெற்ற பார்வை அவசியமானது.
வர்க்கச் சிந்தனைக்கு அப்பால் வேறொரு முறைமையைச் சொல்வது மார்க்சிய விரோதமாக மாட்டாதா?
தனியொரு தேசத்தில் சோசலிசத்தை வென்றெடுப்பது சாத்தியம் என லெனின் சொன்ன பொழுது ட்ரொட்ஸ்கியால் அதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. உலகப் புரட்சி பற்றியே அவரது நம்பிக்கையும் அக்கறைகளும் இருந்தன.
சோவியத் சோசலிச விருத்தியை விடவும் உலகப் புரட்சிக்கான வேலையைப் பிரதானப்படுத்திய போது சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியுடன் முரண்பட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு ஆளானார்.
அவருடைய அந்தப் பார்வை தவறென்ற போதிலும் அவரை வெளியேற்றாமல் தொடர்ந்தும் ஐக்கியமும் போராட்டமும் என்ற நடைமுறையை அவர் பொருட்டு மேற்கொண்டிருக்க வேண்டும்.
மார்க்சியத்தை மாறாநிலைக்கு உரிய வறட்டுவாதமாக்கும் ட்ரொட்ஸ்கியிசம் மீதான விமரிசனத்தை (உட்கட்சிப் போராட்டத்தை) நடாத்தியவாறே அவரைக் கட்சியில் இயங்க அனுமதித்திருக்க இயலும்.
லெனினிடம் அத்தகைய நடைமுறை இருந்தது. ட்ரொட்ஸ்கியின் கருத்தை நிராகரித்து, வென்றெடுக்கப்பட்ட சோவியத் சோசலிசத்தைத் தனித்தே விருத்தி செய்ய இயலுமென்ற கருத்தில் லெனின் உறுதியாக இருந்தார்.
அதேவேளை மேற்கு ஐரோப்பாவில் சோசலிசப் புரட்சி வெடிக்கும் என்ற நம்பிக்கயையும் லெனின் கொண்டிருந்தார்; அவ்வாறு ஏற்பட்டு மேற்கு ஐரோப்பா சோசலிச முன்னெடுப்பை மேற்கொள்ளும் பொழுது சோவியத் புரட்சியின் முக்கியத்துவம் இதே வீச்சுக்கு உரிய கவனத்தைப் பெறாமல் போகும் என்றும் அவர் சொல்லியிருந்தார்.
ஆயினும் வர்க்கப் புரட்சி வாயிலாக சோசலிசம் வெற்றிகொள்ளப்படுவதற்கு மாறாக, லெனின் எதிர்வு கூறிய மற்றொரு மார்க்கமான விடுதலைத் தேசியங்கள் சோசலிசத்தை நிதர்சனமாக்கும் வரலாற்று இயங்கு முறையே பின்னர் முன்னிலைக்கு வந்தது!
அவ்வாறு தேசியத்தின் பாத்திரத்தை ஏற்பதற்காக ‘தரகு முதலாளித்துவப் பிற்போக்குத் தேசியம்’ , தேசிய முதலாளித்துவத்தின் ‘முற்போக்குத் தேசியம்’ என்ற கணிப்புகளைக் கைவிட வேண்டுமா?
இந்தக் கேள்வி தேசியம் குறித்த தவறான ஒரு எடுகோளில் இருந்து மேலெழுவது!
முதலாளித்துவம் வரலாற்று அரங்குக்கு வந்த பின்னர் எழுச்சியடைந்த அரசியல்-சமூக வடிவந்தான் தேசியம்; அதற்காக முதலாளி வர்க்கத்துக்கு மட்டுமே தேசிய நாட்டம் இருக்கும் என்றில்லை. தனியொரு தேசத்தில் சோசலிசம் சாத்தியமாகிவிட்ட பின்னர் பாட்டாளி வர்க்கத் தேசியம் கூட வரலாற்று அரங்கில் தோற்றம்பெற்று இருந்தது.
சோவியத் பாட்டாளி வர்க்கத் தலைமை அணியாகிய கொம்யூனிஸ்ட் கட்சி வரலாற்று மாற்றப்போக்கைக் கவனங்கொள்ளத் தவறியமையால் மேலாதிக்கவாத நாட்டத்துக்கும் ஆட்பட்டுத் தனது வீழ்ச்சிக்கு அடிகோலி இருந்ததென்பதை மறந்துவிட இயலாது.
இன்று முதலாளித்துவத்துடன் ஐக்கியப்பட்டுச் சந்தைச் சோசலிச நடைமுறையை முன்னெடுக்கும் வரலாற்று அவசியத்தைக் கையேற்றுள்ள மக்கள் சீனத்தின் கொம்யூனிஸ்ட் கட்சி, தாங்கள் ஒருபோதும் மேலாதிக்கத்தை நாட மாட்டோம் எனத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வரக் காண்கிறோம்!
மேலாதிக்க நாட்டம் உடைய தேசியங்கள், விடுதலைத் தேசியங்கள் என்பதாக வரையறுக்க ஏற்ற வகையிலேயே முழுச் சமூக சக்திகள் இடையேயான இயங்கியல் செயற்பட்டு வந்துள்ளது!
மார்க்சிய நோக்கு நிலையை வர்க்க அடிப்படைக்கும் அப்பால் மற்றொரு வரலாற்று இயங்கு தளமாகிய முழுச் சமூக சக்திகளது இருப்பும் போராட்டங்களும் மாற்றங்களும் என்ற வகைமைக்கு மடைமாற்றி விரிவாக்கும் பொறுப்பு எம்முன்னால்!
(படம்:
கே.ஏ. சுப்பிரமணியம் நூலக நுழைவாயில் தாங்கி நிற்கிற அவரது உருவப் பதிவு.
‘தோழர் மணியத்தை ஒருவகையில் ஜோர்ஜ் தோம்சன் போன்றவர் எனக் கூறலாம்’ என்று தோழரும் நண்பருமாகிய பாலாஜி கூறியிருந்தார். பேராசிரியர் தோம்சன் பண்டைக்கால கிரேக்க இலக்கியத்தை-சமூகத்தை மார்க்சிய நோக்கில் ஆய்வுக்கு உள்ளாக்கியவர். அதே நோக்கு நிலையில் மரபை அணுகியது மட்டுமன்றி மாற்றத்துக்கான புதிய வீச்சுகளை வருவித்துக் கொண்டவர் தோழர் மணியம்!
தமிழ் தேசியத்தின் நாலாவது கட்டப் போராட்டத்தை மார்க்சியர்கள் கையேற்க வேண்டும் என்ற தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் கருத்து நிலை விருத்தி பெற்று எழுச்சி பெற்ற வடிவமே விடுதலைத் தேசியச் சிந்தனையியல்!)
மார்க்சியம் செயலற்றுப் போயிருப்பது மார்க்சிடமிருந்த அடிப்படைத் தவறினாலேதான்
மார்க்சியம்
செயலற்றுப்
போயிருப்பது
மார்க்சிடமிருந்த
அடிப்படைத் தவறினாலேதான்
அண்மையில் உலகுக்கான பெரும் நம்பிக்கை ஒளி, டில்லி விவசாயிகள் போராட்டம் ஒரு வருடத்தின் மேல் நீடித்து உறுதிமிக்க வெற்றியை ஈட்டியதுதான்!
ஆயினும், அர்ப்பணிப்புமிக்க அந்தப் போராட்டம் மக்கள் விடுதலைக்கான அடித்தளமாக அமைய வாய்ப்பில்லை என்ற துயரத்தைக் கூடவே வெளிப்படுத்தும் சமிக்ஞைகளும் வெளிப்பட்டபடி!
அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு தோழர் ‘வர்க்கப் போராட்டத்தின் வெற்றியை விவசாயிகளின் இந்தப் போராட்ட வரலாறு மீண்டும் நிரூபித்திருக்கிறது’ என்று உறுதி கூறினார்.
ஆக, வர்க்கப் புரட்சி என்ற கானல் நீருக்கு அந்த உருக்கு உறுதிமிக்க போராட்ட சாதனை காவுகொடுக்கப்பட்டு வீண்டிக்கப்படும் நிலை!
இன்றைய உலகின் சமூக மாற்ற விசை முதலாளித்துவத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கானது என்ற எடுகோள் காரணமாகவே விவசாயிகள் போராட்டம் குறித்த இந்த
- ‘வர்க்கப் போராட்ட வெற்றி’ என்ற பிரகடனம்!
காப்பிரேட் மூலதனத்தின் மேலாதிக்கத்தை முறியடித்த மக்கள் போராட்டம் அது; விவசாயிகள் களமாடிய போதிலும் பரந்துபட்ட மக்கள் சக்தியின் ஆதரவுதான் அந்த வெற்றியை உறுதிப்படுத்தியது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவருமே குறித்தவொரு ‘விவசாயி வர்க்கப்’ பிரிவினரல்ல - விவசாயம் சார்ந்த பல தளங்களிலும் இயங்கும் வேறுபட்ட வர்க்கப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்!
காலனித்துவத்திலிருந்து ‘சுதந்திரம்’ பெற்ற கையுடன் எங்கள் நாடுகளில் முதலாளித்துவத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டமே முதன்மை முரண்பாடு என மார்க்சியர்கள் கருத வேண்டி வந்தது ஏன்?
நிதர்சனம் வலியுறுத்திய போது காலனித்துவம் முற்றாக நீங்கவில்லை, நவ காலனித்துவ நடைமுறையில் மூன்றாம் உலக நாடுகள் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு ஆட்பட்டபடியே நிலைமை நீடிக்கிறது எனச் சொல்லப்பட்டதே -
அப்போதும் ஏகாதிபத்தியப் பிணைப்பை முற்றாகத் தகர்க்கும் விடுதலைத் தேசிய முன்னெடுப்புக்கு உரிய பிரதான முரண்பாடு கவனம்பெறாமல் போனது ஏன்?
மார்க்சிடம் அடிப்படைத் தவறு இருந்தது!
காலனி நாடுகள் கொள்ளையடிக்கப்பட்டு ஆதி மூலதனத் திரட்சி ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டிய போதிலும் முதலாளித்துவ - பாட்டாளி வர்க்க உற்பத்தி உறவு சார்ந்த மூலதன அபகரிப்புக் குறித்த ஆய்வுக்கே அதிக அழுத்தத்தை மார்க்ஸ் கொடுத்தார்.
வரலாறு அவரது எதிர்பார்ப்பைப் பொய்ப்பித்துக்கொண்டு ஏகாதிபத்தியத்துடன் மோதும் ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைப் புரட்சிக்கான சுயநிர்ணயக் கோட்பாட்டை முன்னிறுத்திய லெனினிசத்தின் வாயிலாகவே சோசலிசத்தை வென்றெடுக்க இயலுமாக இருந்தது!
ஆயினும் லெனினுங்கூட ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலையால் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சோசலிசப் புரட்சி சாத்தியம் என்ற கனவுடனேயே இருந்தார். வரலாற்றுப் போக்கின் அடியந்தமான மாற்றத்தை (வர்க்கப் புரட்சி வாயிலாக சமூக மாற்றத்துக்கான வாய்ப்பு முற்றுப்பெற்று முழுச்சமூக சக்திகளது மோதல்கள் ஊடாக வரலாற்று இயக்கம் நடந்தேறும் செல்நெறி முதன்மைக்கு உரிய இடத்தைப் பெறத் தொடங்குகிறது என்பதை) லெனினும் கண்டு காட்டத் தவறிவிட்டார்.
தேசிய விடுதலைப் புரட்சிக்கான முக்கியத்துவத்தை லெனின் வலியுறுத்திய வழிப்படுத்தலுடன் மேலெழுந்த மாஓ சேதுங் சிந்தனையும் வர்க்கப் போராட்டத்துக்கு அப்பாலான முழுச் சமூக சக்திகளது மோதலின் வரலாற்று இயக்கத்துக்கான கோட்பாட்டு உருவாக்கத்துக்கு முயற்சிக்கவில்லை!
வர்க்கப் போராட்டத்துக்கு அப்பால் உலக வரலாற்று இயக்கத்துக்கு முழுச் சமூக சக்திகள் இடையேயான மோதல்களும் காரணம் என்பது சார்ந்த கோட்பாட்டை ஏன் முன்வைக்க இயலவில்லை?
மார்க்சிடம் தவறிருந்தது!
இதைச் சொன்னால் மார்க்சிய விரோதம் என எந்த வழிபாட்டாளர்கள் கிளம்பினாலும் அஞ்ச வேண்டியதில்லை. பெரியாரிய, அம்பேத்கரிய வழிபாடு போன்ற ‘மார்க்சியமதம்’ ஒன்று மேலோங்கி இருப்பதே மக்கள் விடுதலை முன்னோக்கிச் செல்ல இடந்தராத இடர்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.
மார்க்சின் சில விடயங்களை நிராகரித்து,
ஏற்பட்டு வந்துள்ள வரலாற்று மாற்றப் போக்குக்கு அமைவான வளர்ச்சி எட்டப்பட்டதன் காரணமாகவே
மார்க்சிய-லெனினியம் அன்றைய உலகுக்கு வழிகாட்டும் நெறியாக வந்தமைய முடிந்தது!
வர்க்கப் போராட்டப் பாராயணத்தைக் கைவிட்டு,
முழுச் சமூக சக்திக்கான
திணை அரசியல் மார்க்சியத்தை வந்தடைய
மார்க்சின் ஆய்வு நெறி தடையல்ல; அத்தகைய மாற்றத்துக்கான முறையியலாக மார்க்சியம் அமைந்தமையாலேயே லெனினிஸம்-மாஓ சேதுங் சிந்தனை என்பன வரலாற்றுச் சாதனைகளாக இயலுமாயின!
இன்றைய உலகுக்குத் தலைமை தாங்க இயலாத நெருக்கடி
மார்க்சியத்துக்கானது அல்ல!
மார்க்சியர்கள் பக்தி நெறிக்கு ஆட்பட்டு,
வரலாற்று வரம்பு
மார்க்சின் கருத்தில் ஏற்படுத்தி இருந்த எல்லையைத் தகர்க்க இயலாமல் முடங்கிப்போகிறவர்களுக்கு உரியது இத்தவறு!
இயங்கியல் அணுகுமுறையுடன்
வரலாற்று பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்தை வழங்கும்
மார்க்சியத்தைக் கையேற்று,
மார்க்சிடம் ஏற்பட்ட தவறைக் களைந்து
மார்க்சிய-லெனினியத்தை வளர்த்தெடுப்போம்!
லெனின் நினைவு நூற்றாண்டு மூன்று வருடங்களில்!
லெனின்
நினைவு நூற்றாண்டு
மூன்று வருடங்களில்!
நேற்று சவுத் விஷன் பாலாஜியுடன் உரையாடிய பொழுது லெனின் - ரோஷா லக்சம்பேர்க் ஆகியோரிடையே இடம்பெற்ற விவாதம் பற்றிய விடயமும் பேசுபொருளாக இருந்தது. லெனின் எதிர்பார்ப்புகளுக்கு மாறான இன்றைய நிலவரமங்கள் சில தொடர்பில் ரோஷா லக்சம்பேர்க் முன்வைத்த கருத்துகள் கூடுதல் பொருத்தமுடையன என்ற கருத்து பல மார்க்சியர்களிடம் நிலவுகிறது. குறிப்பாக குடியேற்ற நாடுகள் ஒட்டச் சுரண்டப்பட்ட விவகாரம் உலக வரலாற்று இயக்கு சக்தியில் ஏற்படுத்தும் மாற்றத்தை இவர்களில் லெனின் கவனித்ததைவிட மற்றவர் அதிகம் கவனம் செலுத்தினார் என்பது இன்றைய அக்கறைக்கு உரியதல்லவா?
ஆயினும், இன்றும் லெனின் சகாப்த நீடிப்பு என்பது மாறிவிடவில்லை! அவரைப் படிப்பது மிகமிக அவசியமாகவுள்ள அதேவேளை, இடைவெளிகளை நிறைவு செய்யும் கற்றலுக்கான வளங்களில் ரோஷா லக்சம்பேர்க் முன்னிலைக்கு உரியவராக இருப்பார் என்பதும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது!
திணை அரசியல் ஒளியில் லெனின் நினைவு நூற்றாண்டு மேலும் பல தெளிவுகளை வழங்கும் என்பது உறுதி!!
ஏகாதிபத்தியத்தைக் கருவறுத்து வீழ்த்தும் மார்க்கம்:
ஏகாதிபத்தியத்தைக்
கருவறுத்து வீழ்த்தும்
மார்க்கம்:
சோசலிசத்தைக் கட்டமைக்கும்
விடுதலைத் தேசிய வழிமுறையால்
சாத்தியமாகும்
“ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” என்ற ஆய்வு வெளிப்பாட்டின் வாயிலாக உலகம் இருபதாம் நூற்றாண்டின் சோசலிச சாதனையைப் படைக்கும் ஆற்றலைப் பெற வழி வகுத்தார் லெனின்!
மகத்தான ஒக்டோபர் புரட்சி (1917) லெனின் தலைமையில் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்கி, இறுதிக்கட்டத்தை எட்டிய முதலாளித்துவத்துக்கு சாவு மணி அடிக்கப்பட்டதைக் கட்டியங்கூறியது!
பின்னர், நன்கு வளர்ச்சி அடைந்து இறுதிக்கட்டமெனக் கிழடுதட்டிப்போன - ஏகாதிபத்தியமாகி முதிர்ச்சி பெற்ற - எந்தவொரு முதலாளித்துவ நாட்டிலும் சோசலிசத்தை வென்றெடுப்பதற்கான பாட்டாளி வர்க்கப் புரட்சி சாத்திப்படவில்லை.
மட்டுமன்றி -
இறுதித் தசாப்த த்தில் (1991 இல்)அந்தப் பாட்டாளி வர்க்கம் கட்டமைத்த சோசலிசம் வீழ்ந்துபட்டு, சோவியத் யூனியனும் காணாமல் போயிற்று.
வர்க்க அரசியல் செல்நெறிப்படி -
புராதன பொதுவுடைமைச் சமூகம் - ஆண்டான் அடிமைச் சமூகம் - நிலவுடைமைச் சமூகம் - முதலாளித்துவச் சமூகம் - பொதுவுடைமைச் சமூகம் என்ற வளர்திசை மாற்றச் செல்நெறி இயக்கம் நடந்தேறும் என்ற எதிர்பார்ப்புப் பொய்த்துப் போனது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏங்கல்ஸ் ‘வரலாறு எங்களையும் பொயப்பித்துவிட்டது’ எனச்சொன்னதைப் போன்றே லெனினது எதிர்பார்ப்பும் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பொய்ப்பிக்கப்பட்டது!
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘மார்க்ஸ் எதிர்பார்த்தது தோற்றுப்போய் இருந்தாலும் மார்க்சியம் தோற்றுப்போக இடந்தரோம்’ எனக்கூறி லெனினிசம் புதிய தளங்களுக்கு மார்க்சியத்தை வளர்த்தெடுத்துச் சாதனைகள் பல படைத்திருந்தது!
முதலாளித்துவ நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் பலவீனமான கண்ணிக்கு உரிய நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெற்று முதலாளித்துவத்தின் இறுதி நிதர்சனம் ஆகும் என்ற லெனினது எதிர்பார்ப்புப் பொய்த்துப் போயிருந்தாலும் -
சோசலிச சோவியத் யூனியனது பலத்துடன் ஏகாதிபத்தியத்தைத் தகர்த்துச் சோசலிசம் வெற்றியீட்டும் விடுதலைத் தேசிய மார்க்கம் இனிச் சாத்தியமென லெனின் ஆக்கபூர்வமான மற்றொரு எதிர்பார்ப்பை முன்மொழிந்தார்!
அதன் பிரகாரம் மார்க்சிஸம் - லெனினிசம் மற்றொரு பரிணமிப்பாக மாஓ சேதுங் சிந்தனை என்ற அடுத்த கட்ட வளர்ச்சியைப் பெற்றது!
மக்கள் சீனம் இன்று, அன்றைய சோவியத் யூனியன் போல ஒடுக்கப்பட்ட தேசங்கள் சுயசார்புப் பொருளாதாரத்தை முன்னெடுக்க உதவியபடி; அதற்கான மார்க்கத்தை இன்னமும் மாஓ சேதுங் சிந்தனை வழங்கியபடி உள்ளதென இளம் சீனக் கொம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கூறிச் செயற்பட்டு வரக் காண்கிறோம்!
ஏகாதிபத்திய காப்பிரேட் சுரண்டலை ஜனநாயக-மனிதவுரிமைப் போர்வைகளில் முன்னெடுக்க இயலாமல் போனால் இராணுவ வல்லமை வாயிலாக முன்னெடுக்கும் முஸ்தீபுகளுடன் ஏகாதிபத்தியத் திணை!
ஊடக சுதந்திரம் ஜனநாயகம் சோஷலிஸம்
ஊடக சுதந்திரம்
ஜனநாயகம்
சோஷலிஸம்
இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனநாயகம் பற்றிப் பதிவிட்ட எனது பதிவுக்கு பின்னூட்டம் இட்ட நண்பர்கள் முதலாளித்துவத்தில் உள்ளது போன்ற ஜனநாயகமும் ஊடக சுதந்திரமும் கொம்யூனிஸ்ட் கட்சி (ஒருகட்சி) ஆட்சியில் உள்ள நாடுகளில் இருப்பது இல்லையே என்று ஆதங்கத்தைத் தெரிவித்து இருந்தனர். அது தொடர்பில் சில குறிப்புகள்:
இன்றைய நாடுகளது அரசாங்கங்களை அந்தந்த நாட்டு மக்களில் எத்தனை வீதமானவர்கள் ஆதரிக்கிறார்கள் என்ற கணிப்பு ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வெளியாகி இருந்தது. சீனாவில் 90 விழுக்காட்டுக்கு மேலானவர்கள் தமது நாட்டின் கொ.கட்சி அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டு உள்ளார்கள். வேறெந்த முதலாளித்துவ ஜனநாயகம் உள்ள நாட்டின் அரசாங்கமும் 60 விழுக்காட்டுக்கு மேல் மக்களது ஏற்பினைப் பெற்றதில்லை. தலையிடிக்கு தலகணியை மாத்துகிற நம்பிக்கையோடு அடுத்த தெரிவை எதிர்நோக்கி ஒவ்வொரு நாட்டின் 40 விழுக்காட்டுக்கு மேல் மக்கள்!
சீனாவில் பத்து வீத த்துக்கு குறைவானவர்களது அதிருப்தியை எமது ஊடகங்கள் ஊதிப் பெருக்கி காட்டி எமது மனங்களைக் கட்டமைக்கிறது. அதனால் சுதந்திரத்தையும் தமக்குரிய வடிவிலான ஜனநாயகத்தை (அவர்களுக்கான வடிவில் face book அங்கும் உண்டு) அவர்கள் அனுபவித்து தமது ஆதரவை அரசுக்கு உறுதியுடன் சீன மக்கள் வழங்குகிறார்கள் என்பதை எமது ஊடகங்கள் காட்டுவதில்லை.
ஊடகம் பரப்புரை செய்து நாங்களாக தீர்மானித்துள்ள ‘சோஷலிஸ விரோத’ மனப்பாங்கை விட்டவழித்தபடி உலகைப் பார்ப்போம்!
உலகை மாற்றி, அனைவர்க்கும் மகிழ்வளிக்கும் பொதுமைப் புத்துலகம் படைப்போம்!!
(ஒரு படம் போட நினைத்த போது, “மதமும் மார்க்சிசமும்” நூல் இறுதிப் படிவத்துக்கு செய்த திருத்தம் கண்ணில் பட்டது:)
கார்ல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ்
- 141 வது நினைவு நாளில்
அலைகள் வெளியீடாக 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த தணிகைச்செல்வனின் “தேசியமும் மார்க்சியமும்” நூலைப் படித்துக்கொண்டு இருந்தேன். எழுநாவுக்கான “சமரச சன்மார்க்கம்” அத்தியாயத்தை எழுதத் தொடங்க வேண்டும். சிறிது நேர வாசிப்பை அடுத்து எழுத எண்ணி இருந்த வேளை ‘மார்க்ஸ் சிந்திப்பதை 1883 மார்ச் 14 ஆம் திகதி நிறுத்திக்கொண்டார்’ என்ற வரிகள் வந்தன.
காலையில் மார்க்ஸின் முழுமைப்பட்ட வரலாற்று நூலை (சோவியத் ஆய்வாளர் குழுவால் எழுதப்பட்டு அலைகள் வெளியீடாக வந்ததனை இரண்டாம் வாசிப்பில் தொடர்ந்த வண்ணம் இருந்தேன்; ‘சிவப்புப் புத்தக நாளான’ பெபரவரி 22 ஆம் திகதி இந்தப் படிப்புத் தொடங்கியது) படித்து மீதம் தொடர அவகாசம் கொடுத்திருந்தேன்.
மார்க்சுடன் பயணித்தபடி இருந்த வேளையில்,
கார்ல் மார்க்ஸ் நினைவு நாளைப்
பகிராது இருந்துவிட
இயலாதல்லவா?
லெனின் சொன்னதைப்போல
ஒவ்வொரு
சிந்தனை நெருக்கடி ஏற்படும்போதும்
மார்க்சுடன்
உரையாடும்
அவசியமுள்ளது!
அவரது மூளை 141 ஆண்டுகளின் முன்னர் சிந்திப்பதை நிறுத்திக்கொண்ட போதிலும்
மார்க்சியச் சிந்தனை
தொடர்ந்து
வளர்ந்த வண்ணமாகவே….
இலங்கைத் திணை அரசியல் : ஏகாதிபத்திய எதிர்ப்பு
இலங்கைத் திணை அரசியல் : 5.
ஏகாதிபத்திய எதிர்ப்பு
----------------‐----------------------------
அணிதிரட்டல்!
----------------------------
இன்று எரியும் பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் முன்னெடுப்பைப் பற்றிப் பேசாமல் எங்கோ உள்ள விடயங்களைப் பேச வேண்டுமா என்ற கேள்வி எழலாம். பௌத்த - சிங்களப் பேரின வாத மேலாதிக்கம் வடக்கு - கிழக்கு மண்ணைத் தொல்லியல் ஆய்வு என்ற பேரில் ஆக்கிரமித்து வருகிறது; முஸ்லிம் மக்கள்மீது பல்வேறு ஒடுக்குமுறைகள் வளர்ந்து வரும் அதேவேளை கொரோனா மரண உடல்களைக் கட்டாய எரிப்பு என்ற பெயரில் அவர்களது மத நம்பிக்கைக்கு விரோதமாக அரசு நடப்பது என்ற விவகாரங்கள் தடுக்கப்படுவதற்கான பேசு பொருளை விட்டு இப்போது ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிதிரட்டல் பற்றி அக்கறை கொள்ள என்ன அவசியம் இருக்கு?
சிறு தேசிய இனங்கள் மீது ஒடுக்கு முறையை வளர்த்து சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த அரசு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு புறக்கணிக்கத்தக்கது அல்ல. பௌத்த சிங்கள மக்களுக்கு கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு வழங்கப்பட்ட ஒரேயொரு புண்ணிய பூமியில் பிற இனத்தவர்கள் வேற்று மண்ணிலிருந்து வந்து குடியேறி இருந்துகொண்டு அட்டூழியம் புரிகிறார்கள், அவர்களது கொட்டத்தை அடக்கிச் சிங்கள மக்களுக்கு அரசு சுபீட்சத்தைத் தர முற்படுகிறது என்று காட்டும் முயற்சி இருக்கவே செய்கிறது!
அதேவேளை சிங்கள மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க வக்கற்றுள்ள இந்த அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் குரல் கொடுக்கும் நிலையும் தொடங்கி உள்ளது. அந்த நெருக்கடி வலுத்தால் மேலும் இனவாத த்தைச் சரணடையும் நிலை அரசுத்தரப்புக்கு தேவைப்படத்தான் செய்யும். சிங்கள மக்கள் தமது கவனத்தைத் திசை திருப்ப அரசு முயற்சிப்பதை உணர்ந்து ஏனைய தேசிய இனங்களது நியாயமான கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்து எங்களோடு ஒன்றுபட்டுப் போராட முன்வராமல் இருப்பது ஏன்?
இங்கேதான் தொல்லியல் இடங்களை வடக்கு - கிழக்கில் தோண்டும் அவதிக்கு அரசு அதீத முக்கியத்துவத்தை இப்போது கொடுப்பதில் உள்ள சூட்சும ம் அடங்கி உள்ளது. இன்று ஜெனீவாவில் அரசுக்கு எதிராக, குறிப்பாக சிறு தேசிய இனங்களை ஒடுக்குவது (ஏற்கனவே இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணை என்ற பிரச்சினையும் இருப்பது) என்ற சுருக்குக் கயிறு நெருக்குகிற நேரத்தில் எந்த அசூசையும் இல்லாமல் இவர்கள் இப்படி வீராவேசமாக முனைப்புக்காட்டுவது முட்டாள்தனமாக அவர்களுக்குப் படவில்லையா?
தொல்லியல் இடங்களை ஆய்வு செய்து ஒரு நாடு அதனது வரலாற்றை வெளிக்கொணர முயற்சிப்பதை உலகம் எதிர்க்காது என்ற துணிச்சல் அவர்களுக்கு. நியாயமான வரலாற்றுத் தடங்களைக் கண்டறிவதைத் தமிழ் இனவாத அரசியல் சக்திகள் தடுக்கின்றன எனக்காட்ட இயலுமாக இருப்பதால் தமிழருக்கு எதிராக சிங்கள மக்களைத் திசை திருப்ப இயலுமென்ற வாய்ப்பு அரசுக்கு!
சூலம் வழிபடப்பட்ட கோயிலை அகற்றி அங்கே புத்தரை வைத்ததுடன் தாமே புதைத்த புத்தரை எடுக்கப் போகிறார்கள், அதைக்காட்டி முன்னர் பௌத்தம் இருந்த இடம் இதுவெனக் காட்ட முயல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு குருந்தூர் மலையில். இந்த விவகாரத்தை இவ்வகையில் அரசு கையாண்டதில் பாரதூரமான தவறுகள் உள்ளன. பலகாலமாக வழிபாட்டில் இருந்த இடத்தை அகற்றித் தொல்லியல் ஆய்வை மேற்கொள்ள முனைவது தவறானது. அதேவேளை தொல்லியல் ஆய்வில் பௌத்த அடையாளங்கள் வெளிப்படாது, அப்படி வந்தால் தாமே புதைத்து வைத்து எடுப்பதாக இருக்கும் என்று சொல்வது ஏற்புடையதாக இருக்காது. நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து தொல்லியல் ஆய்வை அரசு மேற்கொள்ள அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
குருந்தூர் மலையிலேயோ வன்னிப் பிராந்தியத்திலோ ஆயிரம் வருடங்களுக்கு முந்திய பௌத்த அடையாளங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏற்கனவே வல்லிபுரம், கந்தரோடை போன்ற இடங்களில் பௌத்த அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வன்னியில் முன்னர் வெளிப்படையாகவே தெரிந்த புராதன பௌத்த எச்சங்கள் மக்களாலேயே அழிக்கப்பட்டது பற்றிய கதைகள் உண்டு, இதுபோன்ற ஆக்கிரமிப்பாளர்களது அடாவடித்தனம் நேரும் என்ற அச்சத்தில் மக்கள் அப்படி அழித்தனர்.
இவ்வாறு புராதன பௌத்த வழிபாடு இங்கு இருந்ததை வைத்து ஆக்கிரமிக்கப்படுவதனை எதிர்ப்பது அவசியம். அதேவேளை முன்னர் பௌத்தம் வடக்கில் இருந்ததை ஏன் மறைக்க வேண்டும்? தமிழர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பௌத்தர்களாக இருந்திருக்கிறோம் என்பது வரலாறல்லவா? தமிழரிடம் மகாயான பௌத்தம் அதிகம் இருந்ததால் சிங்களவரிடையே வெற்றி பெற்றிருந்த தேரவாத பௌத்தத்திக்குரிய மஹாவம்சம் ‘சிங்கள பௌத்தர்களுக்கு’ ஆசீர்வதிக்கப்பட்ட பூமி பற்றிப் பேச வேண்டி வந்தது. தமிழ் பௌத்தத்திக்கு “மணிமேகலை” காப்பியம் சிறந்த எடுத்துக்காட்டு. அந்தக் காப்பியத்தில் எமது மண்ணும் பேசுபொருளாக இருந்தது. இங்கு தமிழ் பௌத்தம் 13 ம் நூற்றாண்டு வரை இருந்ததனை பேராசிரியர் இந்திரபாலா காட்டியுள்ளார்.
ஆக, குருந்தூர் மலையில் புத்தர் முன்னர் இருந்தால் அச்சப்படத் தேவையில்லை; அவர் தமிழர் கடவுளாக இருந்தார் என்பதை மறைக்க ‘மேன்மைகொள் சைவ நீதி’ தயங்கவும் வேண்டியதில்லை.
பிரச்சினை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபடுவதற்கு எதிராக உள்ள இத்தகைய விடயங்களை மக்கள் விரோத சக்திகள் ஏன் கையில் எடுக்கிறார்கள் என்பதை நாம் கவனங்கொள்ளாது விடுவதில் இருக்கிறது. அவர்கள் செய்யப்பட வேண்டிய வேலைகளை விடுத்து வேண்டாத வேலைகளைக் கையில் எடுப்பதில் அவர்களுக்கு ஆதாயம் இருக்கு. எது செய்யப்பட வேண்டும் எனக் காலமறிந்து அவற்றைக் கையிலெடுக்க வேண்டிய பொறுப்பு மக்கள் விடுதலையை நேசிக்கும் சக்திகளுக்கு உள்ளதல்லவா?
தொடர்ந்து பேசுவோம்
அமெரிக்காவில் ஜனநாயகமும் பிறரும்
அமெரிக்காவில்
ஜனநாயகமும்
பிறரும்!
இரு தினங்களுக்கு முன்னர் தடுப்பூசி ஏற்றப்பட முடிந்தது தொடர்பில் கருத்துரைத்த நண்பர்களுக்கு நன்றிகள். அங்கே தெரிவித்த பிரகாரம் இந்த மேலதிக உசாவல்!
அமெரிக்கா தனது மக்களுக்கு உயர்ந்த ஜனநாயகத்தை வழங்குகிறது என்பதில் ஆச்சரியமில்லை. இது தொடர்பில் ஃபிடல் காஸ்ட்ரோ இரு தசாப்தங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் சொன்ன விடயம் கவனிப்புக்கு உரியது:”அமெரிக்காவில் சர்வாதிகாரம் ஏற்பட இயலாது. அமெரிக்க மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள். ஜனநாயகம் அங்கே முழு அளவில் செயற்பட இயலும். பிரச்சினை, மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டி எமக்கான ஜனநாயக வாய்ப்புகளை இல்லாமலாக்குகிறது அமெரிக்கா, அதனை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்ள இடமற்றவகையில் விவகாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதுதான்.’
புதிய ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்ததும், சூழலியல் விவகாரங்களில் இணைவதாகவும் அத்தளத்தில் மீண்டும் உலகுக்குத் தலைமை தாங்கப் போவதாகவும் அறிவித்தார். அப்போது ஒரு நண்பர் பதிவிட்டார், ‘ஜனநாயக பூரவமாக அனைத்து நாடுகளுடனும் இணைந்து இயங்க வருவதைவிட்டுத் தலைமைத் தலைப்பாகையை ஏன் எடுக்க வருகிறீர்கள்’ என்பதாக.
ட்ரம்ப் ஏன் விலகினார்? உலகுக்குத் தலைமை தாங்குவதற்கு உள்ளே கணக்குத் தீர்க்க வேண்டி உள்ளது என்பதால். வெள்ளையர் மேலாதிக்கம் அமெரிக்காவினுள் உறுதிப்பட வேண்டும் என்பது அவரது அக்கறை. அதற்குரிய அரசியல் நிலைப்பாடு அவர்கள் மத்தியில் வலுத்துள்ளது. கறுப்பின மக்கள், ஆசியர், லத்தீன் அமெரிக்கர் குடியுரிமை பெற்றிருப்பினும் இரண்டாம் நிலைப் பிரசைகள் என அங்கீகரிக்கப்பட வேண்டும் என இயங்கும் போக்கு வலுத்து வருவது மெய். இந்த உணர்வுடன் கொரோனா விவகாரத்தை அவர் கையாண்டு மரணங்கள் அதிகரித்து உலகளவில் அமெரிக்காஙுக்கு கெட்ட பெயர் வலுத்திருந்தது.
அதற்கு எதிராக, ஆட்சிக்கு வந்ததும் கொரோனாவை ஒழிப்பேன் என பைடன் அறிவித்தார். இரண்டாம் நிலைப் பிரசாவுரிமை, குடிவரவாளர்கள் அவமதிக்கப்படுதல் என்பவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தார். இந்த நிலைப்பாட்டினாலேயே வெற்றி பெற்றார். ஆசியர்களுக்கு ஆட்சியில் முன்னுரிமை கொடுத்தார். மெக்ஸிக்கோ எல்லைச் சுவரை நிறுத்தினார். கொரோனா தடுப்பூசி விண்ணப்பத்தில் தமர், பிறர் பற்றி எந்த இடமும் இடம்பெறாமல் நானும் விண்ணப்பிக்க முடிந்தது.
உலக நாடுகள் பூரண ஜனநாயகத்துக்கும், சம உரிமைகளுக்கும், சுதந்திரத்துக்கும் தொடர்ந்து போராட வேண்டி உள்ளது. அமெரிக்க மக்களும் அனைவருக்கும் சம உரிமை என்பதற்காக தொடர்ந்து போராட வேண்டி உள்ளது. வெள்ளையின மேலாதிக்க உணர்வுக்கு எதிராக பெரும்பான்மையான வெள்ளை இன மக்கள் போராட்ட உணர்வுடன் உள்ளார்கள் என்பது ஆறுதலளிக்கும் விடயம். ஆயினும் அதன் அச்சுறுத்தல் அற்றுப்போய்விடவில்லை என்ற விழிப்புணர்வும் அவசியமான ஒன்று!
பிரசன்ன விதானகே இலங்கைக் கலையின் அற்புதப் படைப்பு
பிரசன்ன விதானகே
இலங்கைக் கலையின்
அற்புதப் படைப்பு
நேற்று மாலை இலங்கைச் சமூகத்தவன் என்பதற்கான நியாயமான பெருமையை மீளவும் உணரும் வாய்ப்புக் கிட்டியது.
யாழ்ப்பாண சர்வதேசத் திரைப்பட விழா ஏழாம் வருடத்தின் இறுதி நாளை நேற்று சிறப்பாக கொண்டாடியது. ஆறு நாட்களாக இடம்பெற்ற போதிலும் நூலகத்தில் புத்தகங்களை அடுக்கும் வேலையில் மூழ்கி இருந்தமையால் சென்று பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.
நல்லவேளையாக நேற்று தேவர் அழைப்பு விடுத்து கலந்துகொள்ளச் செய்தமையால் இறுதிநாள் நிகழ்வையும் பிரசன்ன விதானகேயின் மிக உன்னதப் படைப்பான “கெடி” என்கிற சினிமாவையும் பார்க்க இயலுமாயிற்று.
படம் ஆரம்பிப்பது 1814 ம் ஆண்டு; கண்டி இராச்சியத்தைப் பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்கள் கபளீகரம் செய்வதற்கு முந்திய வருடம். வெள்ளையருடன் ஒத்துழைத்து வடக்கத்திய ஆக்கிரமிப்பாளரான விக்கிரமராசசிங்கனிடம் இருந்து சிங்கள ஆளுகையை வென்றெடுக்கவென எகலப்பொல முயற்சியைத் தொடங்குவதோடு களம் ஆரம்பிக்கிறது.
அடுத்த வருடத்தில் கண்டி இராச்சியத்தை ஆங்கிலத் தளபதி கைப்பற்றிவிட்ட ‘நல்ல செய்தியை’ எகலப்பொலவிடம் சொல்லும்போது ஆகப்பெரும் மகிழ்வுக் கொந்தளிப்பு இந்தக் காட்டிக் கொடுப்பாளரிடம் வெளிப்பட்டதாக காட்டப்படவில்லை (ஏதோ தப்பு நடப்பதான நெருடல் உள் மனதில் உறுத்தி இருக்க வேண்டும்).
ஆயினும் எகலப்பொல சொல்வார் “வடக்கத்தையான் ஆதிக்கம் ஒழிந்தது; இனிச் சிங்கள ஆட்சி” என்பதாக!
திரையில் வசனம் வரும் “நாடு முழுமையும் பிரித்தானியக் கொலனியானது; பழைய சாதி ஒடுக்குமுறையைப் பிரித்தானிய ஆட்சியாளரும் தொடர்ந்து பயன்படுத்தினர்” என்பதாக (இதே வசனங்களல்ல; கூடியவரை நினைவிலிருந்து பொருளை வெளிப்படுத்த முயன்று இருக்கிறேன்).
இடையே அரசியல் மாற்றச் செயலொழுங்கு, ஆக்கிரமிப்பு யுத்தம் என்பவற்றுக்கான விடயங்கள் பிரதான பேசுபொருளாக இடம்பெறாத வகையில் கதையோட்டத்தில் சிற்சில காட்சிப் படிமங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டன. ஆதிக்க சாதிக் குடும்பம் ஒடுக்கப்பட்ட சாதி உடன் ஊடாட்டம் கொண்டதன் பேரில் வழங்கப்பட்ட மரண தண்டனை சார்ந்த விடயம் கதைக்கான மையக் கரு. மரணத்தை ஏற்க மறுக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த இளம் பெண், வாழும் ஆசைக்காக ‘இழிந்த சாதி’ வாழ்வின் அவமானத்தைச் சுமக்கும் தண்டனைக்கு ஆட்படுத்தப்படுவாள்; முன்னதாக முதிர் பெண்கள் நாலைந்து பேர் மரணத்தை ஏற்பர், சாதி இழிவைவிட மரணம் மேல் என்ற வாழ்வனுபவமோ வாழ்ந்தது போதும் என்ற வெறுப்போ காரணமாகலாம் (முதிர் பருவத் தொடக்க நிலைப் பெண் அழுவதும் முதலாவதாக மரணத்தை ஏற்கும் கிழப்பெண் ஆக்கிரோசத்தோடும் ஒவ்வொரு அடுத்த நிலை வயது இறக்கத்துக்கு உரியோரின் உணர்வு வெளிப்பாட்டு வேறுபாடுகளும் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன).
ஆக்கிரமிப்பை முறியடித்து நவ காலனித்துவப் பிடிக்கான அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர் தொடர்ச்சியான போராட்டங்கள் வாயிலாக சாதி இழிவுகள் தகர்க்கப்பட இயலுமாகி உள்ளதாயினும் சாதி பேதங்களை அதிகாரத்தில் உள்ள ஆளுந்தரப்புகள் பயன்படுத்தும் வாய்ப்புகள் முற்றாக அற்றுப்போய்விடவில்லை.
வாழ்க்கை நேசிப்புக்கு உரியது!
ஆதிக்கத் தரப்பு அவமானகரமான ‘வெற்றிகளின் மயக்கத்தில்’ வாழ்வைத் தொலைப்பது!
திணிக்கப்பட்ட இழிவையும் போர்க்குணத்துடன் ஏற்றுத் தொடர்ந்து போராடி உரிமைக்கான வாழ்வியல் அர்த்தத் தேடலாக
உயிர்ப்பை நீடித்து
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
எனும் துடிப்புடன்
வாழ்வை முன்னெடுப்பது
அவசியம்
என்ற உணர்வை பிரசன்ன விதானகே இன் இந்தப் படைப்புத் தொற்றவைத்துள்ளது. (மார்புச்சட்டை அணியும் ‘ஆதிக்க சாதி மனோபாவத்துக்காக’ தன்னை நேசித்த ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும் விலையைக் கொடுக்க நேர்ந்ததை இளம் நாயகி காண நேர்ந்ததும் ஆக்கிரோசத்துடன் மார்புத்துணியைக் கழற்றி வீசுவதை சித்திரிக்கும் காட்சிப்படிமம் மிகச்சிறப்பானது)!
ஒரு சமூக மாற்ற அவசியத்தின் பகுதிகளாகத் தற்செயல் நிகழ்வுத் திரட்சிகள்
ஒரு சமூக மாற்ற அவசியத்தின் பகுதிகளாகத் தற்செயல் நிகழ்வுத் திரட்சிகள்
(எனது மனப்பதிவில் தோழர் நீர்வை பொன்னையன்)
- ந.இரவீந்திரன்
நீர்வை பொன்னையன் எம்மைவிட்டு நீங்கி ஓராண்டு கடந்த நிலையில் அவர் விட்டுச் சென்ற நினைவுத் தடங்களை மீட்டுப் பார்க்கும் அவசியமுள்ளது. அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் பற்றிய மதிப்பீடுகள் பலவடிவங்களில் வெளிப்பட்டன. அவரது இறுக்கமான கருத்தியல் நிலைப்பாடு காரணமாக அவரைப் பலரும் நெருங்க இயலாதவரெனக் கண்டபோதிலும் சமூக நலநாட்டம்மிக்க பக்கத்தில் எவ்வகையிலும் புறக்கணித்துவிட முடியாதவர் என்ற வகையில் நீர்வை கவனிப்புக்கு உரியவராக இருந்து வந்தார்; இலங்கா இரத்தினா விருது வரை அவர் அடையாளப்படுத்தபட வேண்டியவராக இருந்துள்ளார்.
தனக்கான அரசியல் இலக்கியத் தளத்தில் சமரசத்துக்கு இடமளிக்காதவர் என்ற ரீதியில் நானும் கூட அவருக்கு மாறுபட்ட அணிக்கு உரியவன் தான், என்னுடனும் அதிகம் நெருங்க மாட்டார் என்ற நினைப்பு எனக்கு இருந்ததுண்டு. ஊரில் இருந்தவரை நான் யாழ் ஸ்ரான்லி வீதியில் உள்ள யாழ்ப்பாணம் அச்சகத்தில் “தொழிலாளி”, “செம்பதாகை” ஆகிய பத்திரிகைகள் அச்சிடப்படும் பொழுது உதவிபுரிகிற வேலைகளில் இருப்பேன். அருகேயுள்ள யாழ்ப்பாணம் புத்தகசாலைக்கு நீர்வை வந்து நின்று உரையாடுவதைக் கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அவருடன் தொடர்புகொள்ள முயற்சித்ததில்லை. இரு நிறுவனங்களும் ஒரே கட்சிக்கு உரியனவாக இருந்த காலத்தில் நான் அங்கு செல்லவில்லை. இருவேறு கட்சிகளாகப் பிளவுபட்ட பின்னர் இரண்டும் எதிர் தரப்பினருக்கானவை என இயங்கத் தொடங்கிய பின்னரே நான் அங்கு செல்லும் நிலை இருந்தது.
பிளவுபட்ட இரு தரப்பினரும் மற்ற அணியினரைக் கண்டாலே முகத்தைத் திருப்பிக்கொண்டு போகிற நிலை. உள் நாட்டு யுத்தம் தீவிரப்பட்டிருந்த புதிய மிலேனியத்தின் தொடக்க கட்டத்தில் நீர்வையைக் கொழும்பில் சந்திக்க நேர்ந்தது. வெள்ளவத்தைக் கடற்கரையில் அவர் நடைப்பயிற்சியில் வேகமாக நடந்துவந்த போது எதிர் பக்கமாக அவரைக் கடந்து செல்ல இருக்கிறேன். ஒரு முன்னோடி முற்போக்கு இலக்கிய கர்த்தா என்ற வகையில் ஒரு சிரிப்புடன் கடந்துவிட நினைப்பு. மாறாக அவர் நின்று என்னுடன் உரையாடத் தொடங்கினார். குடும்ப நிலவரங்கள் பற்றிய உசாவல்; எனது மனைவியைச் சிறுவயதில் நன்கு அறிந்தவர். தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் குடும்பத்துடன் அப்போதெல்லாம் மிக நெருக்கமான உறவு அவருக்கு இருந்தது. அவர்களது மூத்த மகன் இவர் வீட்டில் குழந்தையாக வளர்ந்தவர். கட்சி பிளவடைந்த பின்னர் அத்தகைய உறவுகள் எப்படிக் காணாமலாகின என்ற ஏக்கத்தினை அக்குடும்பம் உணர்வலைகளாக வெளியிட்டு வரக் கண்டிருக்கிறேன்.
முதற்தடவையாக தாம் நடாத்தும் கருத்தரங்கு நிகழ்வில் கே.டானியல் படைப்புகள் பற்றி உரையாற்ற அழைப்பு விடுத்தார். எனது கட்சியிடம் அதற்கான அனுமதியைக் கோரிய போது கட்சியும் அவ்வாறு பங்குபற்றுவதனை அனுமதித்திருந்தது. பின்னர் பல உரைகளை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தில் நிகழ்த்தினேன். அவற்றில் சில கட்டுரைகளாக்கப்பட்டு அந்த அமைப்பு வெளியிட்டிருந்த தொகுப்பு நூல்களில் இடம்பெற்றிருந்தன. “முற்போக்கு இலக்கியத்துக்குக் கைலாசபதியின் பங்களிப்பு”, “முற்போக்கு இலக்கிய முன்னோடிகள்” ஆகிய தனி நூல்களையும் எழுதவைத்து அந்த அமைப்பு வாயிலாக வெளியிட்டார் நீர்வை பொன்னையன். எந்தவொரு கூட்டத்திலும் எனது உரைகளில் அவர்களது அமைப்பின் நிலைப்பாட்டுக்கு மாறுபட்டு நான் சார்ந்த கட்சி நிலைப்பாட்டையே தொடர்ந்து வலியுறுத்த நான் தவறியதில்லை. இருப்பினும் நீர்வை எப்போதும் அதை மறுத்துரைக்காமல் தொடர்ந்து என்னுடனான தொடர்பை விருத்தித் திசையிலேயே வளர்த்து வந்தார். இந்த அம்சம் சார்ந்து இங்கு வலியுறுத்திப் பேச அவசியம் உள்ளது.
முற்போக்கு கலை இலக்கிய மன்றமும் சரி நீர்வை பொன்னையனும் சரி நான் செயலாளராக இயங்கிய தேசிய கலை இலக்கியப் பேரவையை அங்கீகரித்ததில்லை. அதேவேளை எனது பேச்சிலும் அவர்கள் வெளியிட்ட நூல்களிலும் தே.க.இ.பே. குறித்து நான் எழுதுவதில் எந்தக் குறுக்கீட்டையும் அவர்கள் செய்ததில்லை. எனது கருத்தியல் நிலைப்பாட்டை அவர்களால் ஏற்கவியலாது இருந்த பொழுதிலும் அவற்றை வெளியிடவும் விருத்தி செய்யவும் தொடர்ந்து களம் அமைத்துத் தந்தனர். எனது அரசியல் - இலக்கிய - கருத்தியல் நிலைப்பாடுகளை எனது அணி ஏற்கவியலாமல் என்னை வெளியேற்றிய பின்னரும் தொடர்ந்து நீர்வை எனது கருத்து நிலையை வெளிப்படுத்தவும் வளர்த்தெடுக்கவும் களம் அமைத்துத்தர மறுக்கவில்லை.
உண்மையில் நீர்வை உட்பட அவரது அமைப்பைச் சேர்ந்த எவரும் எனது கருத்துகள் அனைத்துடனும் உடன்பட்டிருக்கவில்லை; எனது அமைப்பினருக்கு இருந்த அதே நிலைப்பட்ட ஏற்கவியலாத் தன்மைகள் எல்லோரிடமும் இருந்தன. இரட்டைத் தேசியம், திணை அரசியல், ஆன்மீக நாத்திகம் என்பவற்றில் ஒவ்வொருவர் ஒருசில நிலைகளை ஏற்ற போதிலும் அவற்றுடன் முழுதாக உடன்பட்டுவிட இயலாத தயக்கம் எல்லோருக்கும் இருக்கிறது. மார்க்சியத்தின் அடிப்படை என மார்க்ஸ், லெனின் ஆகியோர் வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்துவர்; இனிப் பாட்டாளி வர்க்கம் ஆட்சியை வென்றெடுத்துப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பிரயோகிப்பதனூடாக வர்க்கங்கள் அற்ற பொதுவுடமை சாத்தியப்படும் என்பதனை ஏற்காத ஒருவர் மார்க்சியராக மாட்டார் எனவும் கூறியுள்ளனர்.
வர்க்கப் போராட்டத்தின் வாயிலாக மட்டும் வரலாறு இயங்கவில்லை; முழுச் சமூக சக்திகளாக இயங்கும் சாதி, தேசங்கள் எனும் திணைகளிடையேயான போராட்டங்கள் வர்க்கப் போராட்டத்தினின்றும் முற்றிலும் வேறுபட்ட இயக்க முறை உடையன எனச் சொல்லும் எனது நிலைப்பாடு அவர்களால் அப்படியே ஏற்றுவிட இயலாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. இனியொரு பாட்டாளி வர்க்கப் புரட்சி எழுச்சி ஏற்படுவதாக அன்றி விடுதலைத் தேசிய முன்னெடுப்பு மூலமாகவே சோசலிசக் கட்டுமானம் சாத்தியமாகும் வகையில் வரலாற்றுச் செல்நெறி மாற்றம் ஏற்பட்டுள்ளமையை அதற்குரிய பரிமாணத்துடன் வேறு எவருமே முன்வைக்காதுள்ளனர். இன்றைய உலகில் மார்க்சியர்கள் தீர்மானகரமான சக்தியாக இயங்கவியலாது இருப்பதற்கான காரணம் இத்தகைய அடிப்படையான (பண்பு ரீதியிலான) வேறுபட்ட வரலாற்று முன்னெடுப்புக்குத் தலைமை ஏற்றாக வேண்டும் எனக் கூறி எந்தவொரு நாட்டுக்குமுரிய கொம்யூனிஸ்ட் கட்சியும் இயங்க முன்வரவில்லை என்பதில் அடங்கியுள்ளது. அதிகாரத்தில் இருக்கும் எந்தக் கட்சியும் இத்தகைய வரலாற்றுச் செல்நெறி மாற்றத்தை அங்கீகரிக்கவும் இல்லை.
அவ்வாறு முழுமையாக ஏற்கவியலாத கருத்துகளுடன் இருந்த அதேவேளை, தனது கருத்து நிலைக்கு மாறாகத் தன்னால் எதிர் தரப்பென அடையாளப்படுத்தப்படுகிற கே.ஏ. சுப்பிரமணியத்தின் நிலைப்பாடுகளைச் சரியெனத் தனது அரங்குகளிலேயே வலியுறுத்துகிற ஒருவனான என்னை நீர்வை எக்காரணம் கொண்டு ஏற்றார் என்பது கவனிப்புக்கு உரியது. தேசிய கலை இலக்கியப் பேரவையிலிருந்து நான் வெளியேறிய பின்னரும் அவரது முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தில் சேர்ந்து இயங்க உடன்பட்டிருக்கவில்லை. அவ்வாறு தனித்து இருக்க வேண்டாமெனப் பலரும் வலியுறுத்தியபொழுது தனியொரு அமைப்பு என்றில்லாமல் வெவ்வேறு அமைப்பினரும் சுதந்திரமாக கருத்தாடலை முன்னெடுக்கும் அரங்காக “புதிய பண்பாட்டுத் தளம்” என்பதை உருவாக்குவோம் என்ற முடிவுக்கு வந்தோம். அதன் அங்குரார்ப்பணக் கூட்டம் அட்டனில் இடம்பெற்றது. பயணத்துக்குச் சிரம மாக இருந்த பொழுதிலும் அட்டன் வந்து அக்கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை நீர்வை ஏற்று மிகச் சிறப்பாக அந்த நிகழ்வை நிறைவாக்கித் தந்தார். அந்த அமைப்பின் சஞ்சிகையான “புதிய தளம்” முதல் இதழ் அவரது தலைமையில் கொழும்பில் வெளியிடப்பட்டது. அதன் ஆசிரியர் குழுக் கூட்டங்களுக்கு வெள்ளவத்தையிலிருந்து கல்கிசைக்கு அவர் வந்து கலந்துகொண்டு முன்வைத்த கருத்துகள் வலுமிக்கன. அந்த சஞ்சிகையின் நோக்கத்தை வலியுறுத்தித் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது.
அறுபதாம், எழுபதாம் ஆண்டுகளில் இயங்கிய இடதுசாரிச் செயற்பாட்டாளர்களது செவ்விகள் தொடர்ந்து இடம்பெற வேண்டுமென ஆசிரியர் குழு கருதியிருந்தது. முதல் இதழில் வெளிவந்த மறைந்த ம.பா.சி. அவர்களது செவ்வி பெரு வரவேற்பைப் பெற்றிருந்தது. இரண்டாவது இதழுக்கு தோழர் எம்.ஏ.சி. இக்பால் இடமிருந்து நேர்காணலைப் பெற்றிருந்தோம். அதனை ஆசிரியர் குழுவில் விவாதித்த போது ஒரு விடயத்தை நீக்க வேண்டுமென நீர்வை வலியுறுத்தினார். ‘மு. கார்த்திகேசன், வி.ஏ. கந்தசாமி, கே.ஏ. சுப்பிரமணியம் போன்றோர் துரோகமிழைத்துக் கட்சியைப் பிளவுபடுத்திப் போனதால் சண் ஆதரவுக்குழு என்ற நிலையை இறுதியில் வந்தடைந்தோம்’ என்பதாக இக்பால் கூறியிருந்தார். அந்த வசனத்தை மட்டும் நீக்கிவிட்டு செவ்வியை வெளியிடலாமென நீர்வை சொன்னார்.
வெவ்வேறு கருத்துடைய பலரது செவ்விகளையும் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம்; இந்தக் கருத்தின் தவறை வெளிப்படுத்துகிற பேட்டிகள் தொடர்ந்து வரும் என்ற வகையில் இக்பாலின் அபிப்பிராயத்தை அப்படியே வெளியிடுவோம் எனக் கேட்டுக்கொண்டேன். ஏனைய தோழர்களும் அக்கருத்தை வலியுறுத்தியமையால் நீர்வை முழுதாக மனமொப்பாத போதிலும் இறுதியில் உடனபாட்டைத் தெரிவித்தார். காலையிலிருந்து மதியம் வரை அந்த அமர்வு இடம்பெற்றிருந்தது. பொழுதுபட்ட வேளையில் நீர்வை தொலைபேசியில் தொடர்புகொண்டார். “நான் ‘கொம்யூனிஸ்ட் கார்த்திகேசன் நினைவுக்குழுத்’ தலைவராக இருக்கிறேன். அவரால் வழிப்படுத்தப்பட்டவர்கள் நாங்கள். என்னை ஆசிரியர் குழுவில் ஒருவராக கொண்டிருக்கிற சஞ்சிகையில் அவரைத் துரோகமிழைத்ததாகச் சொல்கிற வசனம் வெளிவருவது நல்லதல்ல. எனக்கு அதில் உடன்பாடில்லாத அதேநேரம் நான் அங்கம் வகிக்கிற ஏனைய அமைப்புகளுக்கும் அதனால் நெருக்கடி. தயவுசெய்து அந்த வசனத்தை நீக்கிவிடுங்கள்” என்று நீர்வை பொன்னையன் கேட்டுக்கொண்டார். “எவரும் தமது கருத்தைச் சுதந்திரமாக வெளியிட இடமளிக்கும் தளம் என்று கூறிச் செவ்வியைப் பெற்றிருக்கிறோம். அந்த வசனத்தை நீக்குவது சரியல்ல, உங்களது அணிக்குரிய கார்த்திகேசன், வி.ஏ. கந்தசாமி ஆகியோரது பெயரை எடுத்துவிடுவோம். ‘மணியம் கட்சியைப் பிளவுபடுத்திய பின்னர்...’ என்பதாக அந்த வசனத்தை விட்டுவைக்கலாம்” என்று சொன்னேன். “இல்லையில்லை, அப்படி இருவரது பெயர்களை மட்டும் நீக்குவது சரியல்ல; முழுதாக வரட்டும். மூன்றாவது இதழில் மறுபக்கத்தை வெளிப்படுதலாம்” என்று நீர்வை அமைதிகொண்டார்.
மூன்றாவது இதழ் வெளிவர முடியாமல் போகிற அளவில் அந்தப் பிரச்சினை பெரிதாகிப் போனது. “புதிய பண்பாட்டுத் தளம்” அதனது செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள வேறுபல காரணங்களும் இருந்தனவாயினும் இந்தப் பிரச்சினையும் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக இருந்தது. நாங்கள் முகங்கொண்ட நெருக்குவாரங்களைவிட நீர்வை அதிகம் சிரமத்துக்காளானார். அவருக்கே உடன்பாடின்றி, இடதுசாரி இயக்க வீச்சினை வெளிப்படுத்தும் வகையில் அதற்குப் பங்களித்த பல்வேறு கருத்து நிலைப்பட்ட ஆளுமைகளைப் பதிவிடுவது என்ற நிலைப்பாட்டில் அந்தச் செவ்வி வெளிவந்தது என்பதனைக் கொம்யூனிஸ்ட் கார்த்திகேசன் ஆதரவாளர்களில் பலரால் ஏற்க இயலாமல் போனது. வேறெந்த ஆளுமைகளை விடவும் கொம்யூனிஸ்ட் கார்த்திகேசன் மீது நீர்வை மிகமிக அதிக ஈடுபாட்டைக் கொண்டுள்ளார் என்பதனை அவரோடு நெருங்கிப் பழகுகிற எவரும் புரிந்துகொள்வர். அதனை மேவி ‘புதிய தளம்’ மீது அவருக்கு நாட்டம் வருவதான சந்தேகம் எப்படி ஏற்பட இயலுமாயிற்று என்பது புரியாத புதிர்!
தோழர் கார்த்திகேசன் நூற்றாண்டை நினைவுக்குழு ஏற்பாட்டில் காத்திரமான ஆய்வுரைகளுடன் கொழும்பில் நடாத்த வேண்டுமென நீர்வை திட்டமிட்டிருந்தார். என்னையும் ஆய்வுரை ஒன்றைத் தயாரித்து சமர்ப்பிக்கத் தயாராக இருக்கப் பணித்திருந்தார். அவ்வாறு செய்ய இயலாமல் போன நிலையில் கூட ஒரு பிரசுரத்தை வெளியிட்டிருந்தார் என்பதை மறந்துவிட இயலாது. முன்னதாக “நினைவலைகள்” என்ற தன் வரலாற்று நூலில் தோழர் கார்த்திகேசன் தன்னைச் செப்பனிட்டிருந்தார் என்ற அம்சத்தைப் பெரிதும் வலியுறுத்திக் காட்டியிருந்தார். அவர்கள் பிளவடைந்து 1972 இல் “இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)” என இயங்கத் தொடங்கிய போது தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் தம்முடன் சேர்ந்து இயங்க வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவ்வாறில்லாமல் தோழர் சண்முகதாசன் தலைமையில் தொடர்ந்து இயங்கியது தொடர்பில் கடும் கோபம் நீர்வைக்கும் அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கும் இருந்தது. பின்னர் 1978 இல் கே.ஏ. சுப்பிரமணியம் பிளவடைந்தபோது கார்த்திகேசன் அணியினர் முன்வைத்த காரணங்களையும் உட்படுத்தி இருந்தார்.
அந்தக் காரணங்களை முன்னிறுத்தி 1972 இல் வெளியேறாமல் போனதற்கு கட்சிக்கான ஸ்தாபன ஒழுங்கமைப்புப் பேணப்படவில்லை என்பதனையே கே.ஏ. சுப்பிரமணியம் வலியுறுத்துவார். அந்த விடயத்தில் கோட்பாட்டை அவர் முன்னிறுத்தத் தவறினார் என்ற குற்றச்சாட்டு நீர்வைக்கு இருந்தது. குறுங்குழு வாத நிலைப்பாட்டைக் கைவிட்டு வெகுஜன மார்க்கத்தை முன்னெடுக்க வேண்டும், அதற்குரிய வகையில் ஐக்கிய முன்னணி கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பன இரு பிளவுகளிலும் முன்வைக்கப்பட்ட காரணங்கள். ஸ்தாபனக் கட்டுக்கோப்பு பின்பற்றப்பட வேண்டும் என்பது மேலதிகமாக கே.ஏ. சுப்பிரமணியம் வலியுறுத்திய அம்சம். இந்த மேலதிக விடயத்தில் நீர்வைக்கு உடன்பாடு இல்லாமல் இல்லை. என்னுடன் அவர் தொடர்பை வளர்த்ததில் அந்தத் தோழர்கள் இடையே ஊடாடியிருந்த அந்த உடன்பாட்டு அம்சங்களை இணைப்பதும் காரணியாக இருந்தது.
அப்படியிருந்தும், தனது “நினைவலைகள்” நூலில் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் பற்றி மிகத் தவறான விடயங்களை அவர் வெளிப்படுத்தி இருந்தார். ஏற்கனவே முற்போக்கு கலை இலக்கிய மன்றக் கருத்தரங்குகளில் அந்த விடயங்கள் பேசுபொருளாக இருந்து அவையொவ்வொன்றையும் ஆதாரங்களுடன் நான் மறுத்துரைத்திருக்கிறேன். அவ்வாறிருந்தும் அவற்றை மீண்டும் கூறிய “நினைவலைகள்” நூலை ஒப்பு நோக்குவதற்கு என்னிடம் நீர்வை தந்தார். எனக்கு பெரும் அதிர்ச்சியும் குழப்பமும் இருந்த போதிலும் எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொடுத்தேனே அன்றிக் கருத்துப் பிழைகளைப் பற்றிப் பிரஷ்தாபிக்கவில்லை; ஏற்கனவே பல தடவைகள் சொன்ன பின்னரும் எழுதியிருப்பதால் அதனைக்கூறி ஆகவேண்டும் எனக் கருதுகிறார் என எண்ணியிருந்தேன்.
நூல் வந்த பின்னர் இந்த விடயம் பேசுபொருளாயிற்று. கே.ஏ. சுப்பிரமணியம் அங்கம் வகித்த கட்சிப் பத்திரிகை நான் மெய்ப்புப் பார்த்த நூலில் அவர் பற்றி மோசமாக எழுதப்பட்டதைச் சுட்டிக்காட்டி நீர்வை மீதும் என்மீதும் தாக்குலைத் தொடுத்திருந்தது. அந்த இதழ் வந்த ஓரிரு நாட்களில் நீர்வை வீட்டுக்கு வந்திருந்தார். பல தடவைகள் நான் சொன்ன பின்னரும் தவறான குற்றச்சாட்டுகளை நீங்கள் சொல்லியிருந்தமையாலேயே இவ்வாறு நேர்ந்திருக்கிறது என்றேன். அந்த நிலைமைக்காக அவர் பெரிதும் வருந்தினார். “அந்த நூல் நீங்கள் கூட்டங்களில் வந்து பேசுவதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே எழுதப்பட்டு வந்தது. பின்னர் எழுதியவற்றில் அவை சொல்ல நேர்ந்திருக்காது. உங்களிடம் புரூஃவ் பார்க்கத் தந்ததே வெறும் எழுத்துப் பிழைகளை நீங்கள் பார்க்காமல் இதுபோன்ற கருத்துப் பிழைகளைத் திருத்த வேண்டும் என்பதற்காகத் தான். நானும் திரும்ப எல்லாவற்றையும் மீட்டுப் பார்க்கத் தவறிவிட்டேன். இனி ஒரு பதிப்புக் கொண்டு வருவேன். இரண்டு பகுதிகளைத் தனித்தனி நூலாக்குவேன். அப்போது இந்தத் தவறைத் திருத்த முடியும்” என்று நீர்வை கூறியிருந்தார். அவ்வாறு புதிய பதிப்பு ஒன்று வரவில்லை என்பது துரதிர்ஷ்டம்!
இருப்பினும் அந்த இரு தோழர்களதும் கோட்பாட்டு உறுதி, ஸ்தாபனக் கட்டுக்கோப்புக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்குதல் என்ற பண்பின் வெளிப்பாடாகவே நீர்வை என்னுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார் எனப் புரிந்து கொள்வதில் சிரம மேதும் இருக்க இயலாது. இதன்பொருள் கொம்யூனிஸ்ட் கார்த்திகேசன் மீதான ஈர்ப்பை நீர்வை குறைத்துக் கொண்டார் என்பதல்ல. என்னுடைய கருத்துகள் அனைத்துடனும் நீர்வை உடன்பட்டதாக கொள்ள இயலாது என்றேன். கே.ஏ. சுப்பிரமணியம் இன்றிருந்தாலும் அதே போன்று சிலபல விவகாரங்களில் ஒவ்வாமையை வெளிப்படுத்த இடமுண்டு. வர்க்கக் கோட்பாடு என்பது அத்தகைய வலுப்பட்ட ஓரம்சம். திணை அரசியல் என்பது அடையாள அரசியலில் இருந்து வேறுபட்டிருப்பதே வர்க்கப் போராட்டத்தை இன்னொரு வடிவில் ஏற்பதனால் என்றபோதிலும் இதுவும் அடையாள அரசியல் தான் எனக் குற்றஞ்சாட்டுபவர்கள் இருந்தபடிதான்!
ஆயினும் திணை அரசியல் எனது கண்டு பிடிப்பல்ல. அது தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்துடையதுதான். நான் கட்சிக்கு வந்த போது சாதி அமைப்புக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. அதன் வரலாற்றெழுத்து முயற்சியூடாக பலவற்றைக் கற்றேன். அவற்றை விட அதிகளவில் தோழரிடம் உடனிருந்து கேட்டறிந்த விடயங்கள் பற்பல. தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தைக் கண்டடைந்த 1974 முதல் அவர் விடைபெற்ற 1989 வரை நான் அதிகம் ஊடாட்டம் கொண்ட ஆளுமையாக அவர் இருந்தார். சாதியம் குறித்தும் அதனைத் தகர்க்கும் போராட்டங்களுக்கான கருத்தியலையும் எந்தவொரு புத்தகத்தில் இருந்து கற்றுக்கொண்டதை விட அதிகமாக அவரிடம் இருந்தே அறிந்துகொண்டேன். அவற்றின் ஒழுங்கமைக்கப்பட்ட திரட்சியே திணை அரசியல் சார்ந்த கோட்பாடுகள். இதனைச் சரிதான் என நான் உறுதிகொண்டது தோழர் நீர்வை அவர்களுடனான தொடர்பாடலின் வாயிலாக. இரு தோழர்களுடைய இறுதிப் பதினைந்து வருடங்களில் அவர்களுடன் நெருங்கி ஊடாடி இருக்கிறேன். அவர்களது செயற்துடிப்பு அனுபவங்களை அசைபோட்டசைபோட்டு அறிவுத் திரட்சியாக எனக்குள் கடத்த ஏற்ற பக்குவப்பட்ட முதிர்ச்சி நிலைகளின் வழங்கல்கள் அவை!
நீர்வை பொன்னையன் எழுத்துப் பதிவுகள் வாயிலாக பலவற்றை எமக்கு வழங்கி உள்ளார். எழுதித் தீராத பக்கங்களாக நடைமுறை ஊடாக அவர் கற்றுத் தந்தவை இருந்தன. இடதுசாரி இயக்கம் சாதித்தவை குறித்த தெளிவு இன்றைய தலைமுறைகளுக்கு தெரிவதில்லை. போதிய பதிவில்லை, பிற்போக்கு வாத அலை உண்மைகளை மறைத்துப் பொய்களைப் பரப்புரை செய்ய இடமளித்திருப்பது என்ற காரணங்களுக்கு அப்பால் சாதனைகளை நிகழ்த்திய ஆளுமைகள் ஒருவர் மீது மற்றவர் சுமத்திய குற்றப்பத்திரிகைகள் ஒட்டுமொத்த இயக்கத்தையே குறை மதிப்பீடு செய்ய வழிவகுத்திருந்தது என்பதும் கவனிப்புக்கு உரியது. இதனைத் திருத்திக்கொண்டு சமூகமாற்ற சக்திகள் வல்லமை பெறவும் கடந்தகால வரலாற்றுச் சாதனைகளைக் கோட்பாடாக்கவும் ஏற்ற தெளிவை ஏற்படுத்துவதாக நீர்வையிடம் இருந்து பெற்ற தொடர்பாடல்கள் அமைந்திருந்தன!
இந்தியாவின் கிரக நிலை அப்படி!
இந்தியாவின்
கிரக நிலை
அப்படி!
இனிவரும் காலங்களில் சீனாவும் இந்தியாவும் முதலிரு நாடுகளாக மாறிவிட இன்றைய முதல் நிலை நாடான அமெரிக்கா மூன்றாம் இடத்துக்குப் பின்னடைந்து போகவுள்ளதாக வேறுபட்ட ஆய்வறிக்கைகள் கணிப்பீடுகளை வெளிப்படுத்துகின்றன. அதனை ஏற்கனவே இயங்கி வந்த பொருளியல் செல்நெறி தீர்மானித்திருந்தது; கொரோனா வீச்சு துரிதப்படுத்தி உள்ளது.
சீனாவும் இந்தியாவும் ஏகாதிபத்திய நாடுகளது சுரண்டலுக்கு ஆட்பட்டிருந்து கடுமையான போராட்டங்கள் வாயிலாக விடுதலை பெற்ற நாடுகள் தாம். இரண்டும் மீட்சிபெற்று உயர்வடைவது வரவேற்கத்தக்கது தான். சோசலிசத்தை முன்னெடுத்த சீனா எண்பதாம் ஆண்டுகளில் இருந்து முதலாளித்துவத்தையும் அரவணைத்தபடி ‘சந்தை சோசலிசம்’ என்ற நடைமுறையை இன்று பின்பற்றி வருகிறது; உலக மயமாதலை வாய்ப்பாக்கிக்கொண்டு புதிய பட்டுப்பாதைத் திட்டத்தின் வாயிலாக துரித கதி முன்னேற்றத்தைப் பெற்று வருகிறது. சீனா உலக மயத்தை ஏற்ற பின்னர் மிகுந்த தயக்கத்தோடு அதன் வழி தொடர்ந்த இந்தியா முன்னதாக பூரண முதலாளித்துவத்தை அன்றி சோசலிசக் கூறுகளையும் உள்ளடக்கிய கலப்புப் பொருளாதாரத்தையே பின்பற்றி வந்திருந்தது. அப்படி இருக்க சீனா மக்கள் நல நாட்டத்தோடு சோசலிசத்தைக் கட்டமைக்க முற்படுவதாகவும் இந்தியா ஏகாதிபத்திய - மேலாதிக்க வாத அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும் கூறுவது என்ன வகை நியாயம்?
மற்றொரு வேடிக்கை, கோடிக் கணக்கான வறியவர்களைக் கொண்டுள்ள பரம ஏழை நாடான இந்தியா இரண்டாவது பெரிய வல்லரசாக ஆகிவிடுமா - அதெப்பிடி? அதுதாங்க இந்தியாவுக்கான இன்றைய கிரக நிலை! இந்தக் கிரக சஞ்சாரம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இரண்டு நூற்றாண்டுக்கு மேற்பட்ட சங்கதி. சீனா துண்டாடப்பட்ட பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளால் சுரண்டப்பட்டது. எந்தவொரு நாட்டின் நேரடி நிர்வாகத்தில் ஒருமுகப்படுத்தி ஆள இயலவில்லை. மாறாக இந்தியா பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் நீண்டகாலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் முதலாளித்துவம் வளர்ந்த அளவில் சீனாவில் இல்லை. தொழிலாளரது போராட்டங்களுக்கு முற்படுவதற்கான தேவையை விடவும் விவசாயிகளை அணிதிரட்டி ஒன்றுபடுத்திய தேசிய விடுதலையை வென்றெடுக்க மார்க்சியம் வழிகாட்ட இடமளித்தமையால் அதற்குரிய வளர்ச்சி பெற்ற கோட்பாட்டு நிலைகளோடு போராடிச் சீனா விடுதலையை ஈட்டத்தடை இருக்கவில்லை. இந்தியாவில் ஒப்பீட்டு ரீதியில் வலுவாக இருந்த தொழிலாளர் அணிக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டி இருந்தமையால் இந்தியச் சமூக நியதிக்கான மார்க்சியப் பிரயோக வளர்ச்சிகளில் நாட்டம் காட்ட இயலவில்லை.
சீனத் தேசிய விடுதலைப் போராட்டம் மார்க்சிய வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டமையால், முன்னர் இருந்த மேலான வாழ் நிலை பற்றி அதிகம் பிரஸ்தாபிக்காமல் விவசாயிகளது வாழ்வியல் விருத்திக்கு கட்டியெழுப்பப்பட வேண்டியுள்ள எதிர்கால அமைப்பாக்கம் பற்றிய அக்கறையே மேலோங்கியதாக இருந்தது. இந்தியாவின் தேசிய விடுதலைப்போராட்டம் முதலாளி வர்க்த்தால் தலைமை தாங்கப்பட்டது அதன் சுரண்டல் நலன் சார்ந்து நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டமைத்துப் பிற்போக்கு வாத நிலைப்பாட்டையும் இணைவாக்கிக் கொண்டது. பழம் பெருமைகளை முன்னிறுத்திய இந்துத் தேசியவாதம் தலைமை பெற்று வேதகால மீட்டெடுப்புகளும் சாதிவாத நிதர்சனங்களும் மேலோங்கி இருந்தன.
அதேவேளை, கனகச்சிதமான பிரித்தானிய ஆட்சிமுறை இந்திய வாழ் நிலையைக் கற்றுக்கொண்டு அதன் சாதிபேத இயங்காற்றல் படி பிரித்தாளும் தந்திரோபாயத்தை வரித்துக் கொண்டது. இந்திய சுதந்திரப்போராட்டம் தொழிலாளர் அணியின் கைவசப்படாமல் இருக்க ஏற்றதாக காங்கிரசுடனான ஊடாட்டத்தைக் கையாண்டு அக்கட்சியிடம் ஆட்சி மாற்றத்தைக் கையளித்துச் சென்றது பிரித்தானிய ஏகாதிபத்தியம். என்னதான் கெட்டித்தனமாக காங்கிரஸ் சோசலிச/ஏகாதிபத்திய நாடுகளில் எந்த ஒன்றோடும் ஒட்டிக் கொள்ளாமல் இரு அம்சங்களையும் இணைக்க முயன்றாலும் நீண்ட காலத்தில் இந்தியா ஏகாதிபத்திய நாடாகும் என்ற கணிப்புடன் இயங்கிய மேலாதிக்க சக்திகள் இன்றைய இந்துத்துவ மேலோங்கலுடன் அக்கனவு மெய்ப்படக் காண்கின்றனர்.
வரலாற்று செல்நெறி விதி பிரித்தானியாவின் முதல் நிலையையைப் பறித்து அமெரிக்காவிடம் கையளித்ததைப் போல அமெரிக்கப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும் என்பதை சுரண்டல் கும்பலின் சிந்தனையாளர் தரப்பு அறியாமல் இல்லை. தனது சோசலிச முறையைத் தக்க வைக்கச் சந்தைச் சோசலிசத்தை இணைக்கும் சீனப் பாணி அதனை முதல் நிலைக்கு இட்டுச் செல்லும் போது, அது பின்னர் முழு நிறைவான சோசலிச மாற்றியமைத்தல்களுக்கு முன்னுரிமை கொடுக்கும். ஏனைய நாடுகளும் சோசலிச நாட்டத்தை மேற்கொள்வர். சீனாவுக்குப் போட்டியாக அதன் அயல் நாடுகளான யப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து ஆகியவற்றை மேலாதிக்க வல்லரசுகள் வளர்த்ததைப் போல எதிர்காலசோசலிச அச்சுறுத்தலைத் தவிர்க்க வேண்டி இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய ஏகாதபத்திய அணிக்கு.
இந்தியாவின் சாதியமைப்பு பணக்கார நாடாக முன்னேற இடமளிக்காது என்ற வாய்ப்பாடு பலரிடம் உண்டு. ஐநூறு ஆண்டுகளின் முன்னர் முதலிரு நாடுகளாக ஏற்கனவே இந்தியாவும் சீனாவும் இருந்தபோதும் இந்தியா சாதியமைப்பு உடையதுதான். ஏகாதிபத்திய ஆட்சி முறைக்கு ஐரோப்பா முன்னர் கண்டனுபவித்து வந்த வர்க்க அரசியலை விடவும் இந்தியாவின் சாதிமுறை சார்ந்த முழுச் சமூக சக்தியின் இயக்க முறை அதிக பயனுடையது என்பதை அவர்கள் கண்டு, அதனைக் கற்றறிந்து பிரயோகித்து இருந்துள்ளனர்.
ஏற்கனவே இலங்கையை ஆக்கிரமித்து மேலாதிக்கவாத அரசியலை எவ்வளவு கனகச்சிதமாக இந்தியா கையாள்கிறது? இலங்கையில் உள்ளவர்களுக்கும் தாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம் என்று தெரியவிடாமல், இந்திய மக்களுக்கும் தமது ஏழ்மை நிலை பற்றியன்றி வேறு சிந்தனை கொள்ள இடமில்லாத மேலாதிக்க நாட்டுப் பிரசைகள் நாம் என்ற கர்வம் கொள்ளத் தேவையில்லாத ஒரு அரசியல் முறையை எத்தனை சிறப்புடன் இந்தியா முன்னெடுக்க முடிகிறது? இது திணை அரசியல் செயல் ஒழுங்கு. தமிழர் வரலாற்றில் சிறப்போடு இயங்கி வந்தது. தமிழர் சமூகமும் இதுபற்றிக் கண்டுகாட்ட முன்வராத போது ஏனையவர்கள் எப்படி அறிந்திருக்க இயலும்? வர்க்க அரசியல் போக்குக்கு மாறான திணை அரசியல் இயக்க மாதிரி பற்றியும் பேசும் பொழுதுதான் வரலாற்றுப் பொருள் முதல் வாத - இயங்கியல் பற்றிய முழுமையான புரிதலை எட்ட இயலும்! தொடர்ந்து உரையாடுவோம்!
சமூக உற்பத்தியின் ஒரு வடிவமே கலை
என் இருபதுவயதுகளின் தொடக்கத்தில் விஞ்ஞான ஆ,சிரியராக வேலையைத் தொடர்ந்த நான் - நாளையுடன் அரச வேலையில் இருந்து ஓய்வு பெறுகிறேன்!
வேலையின் ஓய்வின் போது அதிகம் வாசிக்கவும் ,எழுதவும் நேரம் கிடைத்தது. இனிமேல் எப்படியோ தெரியவில்லை.. ,
இக்கட்டுரையை ஓய்வின் இறுதியில் எழுதி இருந்தேன்.
=======================================
சமூக உற்பத்தியின் ஒரு வடிவமே கலை
ந. இரவீந்திரன்
மனித சமூகம் பெற்று வந்த வளர்ச்சிச் செல்நெறியின் வெளிப்பாடாக உற்பத்தியானது கலை. அதன் எழுத்து வடிவமாய்ப் பரிணமித்த இலக்கியம் குறித்து பல்வேறு கோட்பாடுகள் உண்டு. மனிதப்படைப்பு என்பதைக்கடந்து உள்ளொளி வாயிலாகக் கடவுள் வெளிப்படுத்தும் கொடையெனக் கொள்வோரும் உளர். மனுக்குலம் எதிர்நோக்கிய பிரச்சனைகளை மக்கள் போராட்டங்கள் வாயிலாக தீர்க்கும் மார்க்கம் கண்டறியப்பட்ட போது, அத்தகைய இயங்காற்றல்களின் செயல்திறன் கலை - இலக்கியத்தின் பேசு பொருளான போது, இவை அருள் கொடைகளல்ல சமூகம் உற்பத்திசெய்கின்ற இன்னொரு வடிவமே எனக்கண்டறிய இயலுமாயிற்று.
சமூக மாற்றத்துக்கான அந்த இயங்காற்றலில் பங்கேற்று அதனைக் கோட்பாட்டுருவாக்கம் செய்த மார்க்ஸியத்தின் மூலவர்களான மார்க்சும் ஏங்கெல்சும் இலக்கியம் குறித்தோ அதனைத் திறனாய்வு செய்யும் முறையியல்கள் பற்றியோ தனியாக எழுதி வைக்கவில்லை. எரியும் பிரச்சனையாகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகள் எழுச்சிகொண்டு இயங்கிய அனுபவங்கள் சார்ந்த எழுத்தாக்கங்களே அவர்களது முழுமைப்பணியாக இருந்தன. அத்தகைய எழுத்துகளில் வெளிப்பட்ட கருத்துகள் பின்னால் தொடர்ந்த மார்க்சியச் சிந்தனையாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தன. கலை - இலக்கிய - சமூக விஞ்ஞான நூல்களைக் கற்றுத்தேறி மார்க்சிய இலக்கியத் திறனாய்வை அறிவதென்பதை விட, மார்க்சையும் ஏங்கெல்சையும் போன்றே சமூக மாற்றப் போராட்டங்களில் இணைந்து இயங்கியவாறே ஏனைய மார்க்சியச் சிந்தனையாளர்களும் மார்க்சியத்தையும் அதன் இலக்கியக்கோட்பாடுகளையும் செழுமைப்படுத்தினர்.
அந்த வகையில் பிளெக்கனோவ், லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின், மார்க்சிம்கோர்க்கி, பெஞ்சமின், ப்ரெக்ட், லூகாக்ஸ், அல்தூசர், ஜோர்ஜ் தாம்சன், ரேமன்ட் வில்லியம்ஸ், பியோமா ஷே, கிறிஸ்டோபர் காட்வெல், லூசியன் கோல்ட்மான் ஆகியோரின் பங்களிப்புகள் கவனிப்புக்குரியன. இன்னும் லூசூன், மாஒசேதுங், கோசிமின், பிடெல் காஸ்ட்ரோ என இந்தப்பட்டியல் மிக நீளமானது என்ற போதிலும் மேற்குறித்த செயற்பாட்டாளர்களும் சிந்தனையாளர்களும் முன்வைத்த இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகளை அடியொற்றியுங்கூட அடிப்படைத் தெளிவை எட்ட இயலும் என்பது மெய். அத்தகைய ஒரு முயற்சி டெரி ஈகிள்டன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்' என்ற டெரி ஈகிள்டனின் நூல் இலக்கியத் திறனாய்வு குறித்த மார்க்சியர்களின் கருத்தாடல்களை அலசும் போக்கில் மார்க்சியத்தில் மேலும் தெளிவுபெற இயலும் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அவர் முன்னெடுத்த மார்க்சியத் திறனாய்வு வகுப்புகளின் பேறானதே இந்நூல், ஆயினும், வெறும் கல்விப்புலச் செயற்பாடு என்பதைக் கடந்து சமூக மாற்றக்கருவியாக இந்தச் சிந்தனைப்போக்கு அமைவதற்கு பங்கம் ஏற்படாதவகையில் நூல் அமைய வேண்டும் என்பதில் அவர் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். 'கோட்பாடுகளைப் புரிந்துகொள்வது என்பது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மேலும் ஆழமாகப் புரிந்து கொள்வதேயாகும். அத்தகைய புரிதல் நமது விடுதலைக்குப் பங்களிக்கிறது. அந்த நம்பிக்கையுடன் தான் நான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன்' என்று நூலின் முன்னுரையில் டெரிஈகிள்டன் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சியம் இன்னமும் முதன்மைக் கருத்தியல் என்ற நிலை நிலவிய 1976 ஆம் ஆண்டில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அந்த முதன்மை நிலை தளர்வடைந்து மேற்குலக வரலாறு ஒரு திருப்பத்தைச் சந்தித்துக்கொண்டு பிற்போக்குக் காலகட்டம் தலை தூக்கும் சூழலில் அதனை உணர்ந்து கொள்ளாமல், 1970களின் நடுப்பகுதிவரை நீடித்த புரட்சிகர சிந்தனைகளின் நொதிப்பிலிருந்தே இந்நூலினை எழுதியிருப்பதாக 2002ம் ஆண்டின் புதிய பதிப்புக்கான முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் டெரிஈகிள்டன். இந்த உணர்நிலை கவனிப்புக்குரியதாகும். இன்றுள்ள சூழலில் ஆக்கப்பட்டிருப்பின் அதன் வடிவம், தொனி என்பன வேறு வகையில் அமைந்திருக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக, சோவியத்யூனியன் வீழ்ச்சியடைந்து தகர்ந்து போய்விடும் என்பதற்கான அடையாளம் எதுவும் அன்று உணரப்பட்டதில்லை. மாறாக, பல தவறுகளுடன் முன்னேறுவதான தோற்றமே நிலவியது. அத்தகைய தவறுகளின் பல அடிப்படைகளை நூலாசிரியர் ஸ்டாலினியத்தில் காண்கிறார். ஸ்டாலினியத்துக்கு எதிரான கடும் விமர்சனம் வாயிலாக இலக்கியத்திறனாய்வு பரந்துபட்ட மக்களை வென்றெடுக்கும் வண்ணம் மார்க்சிய அணியினால் எவ்வாறு முன்னெடுக்கப்படலாம் என்பதனைக் கண்டடைவது டெரிஈகிள்டனின் நோக்கமாக அமைவதைக் காண்கிறோம். கட்சி நலனுக்கானதாயே இலக்கியம் அமைய வேண்டும் என 1928இல் ஸ்டாலின் தலைமையில் கட்சி பிறப்பித்த ஆணையும், 1934இல் இலக்கிய மாநாட்டின் வாயிலாக ஸ்டாலின் - மார்க்சிம் கோர்க்கி ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட சோசலிச யதார்த்த வாதமும் பெரும் சேதங்களை ஏற்படுத்தின. அத்தகைய அரசியல் பணியை மறுக்காத அதேவேளை, முற்போக்கு இலக்கியத்தின் பரந்துபட்ட பல்வேறு தளங்களை அனுமதிக்கத்தவறியமை ஏற்படுத்திய பாதகங்களை நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.
இவ்வகையில் ஸ்டாலினியத்தின் ஒரு முனைவாதத் தவறை எடுத்துக்காட்டும் போது மறுபக்கத்துக்கான இன்னொரு ஒருமுனைவாதத் தவறை ஏற்புடைமையோடு டெரிஈகிள்டன் எடுத்துக்காட்டுவது நெருடலானது. இலக்கியத்தின் அரசியல் பணிபற்றி தவிர்க்கவியலாத சூழலில் வசன அளவில் ட்ரொட்ஸ்கி உச்சாடனம் பண்ணிய போதிலும் அவர் முன்வைப்பது மார்க்சிய அழகியலுக்குரியதல்ல் சமூக இருப்பிலிருந்து பிரிக்கப்பட்ட வர்க்க சமூக நியதிகள் வளர்த்த அழகியலையே ட்ரொட்ஸ்கி பேசுகிறார். டெரி ஈகிள்டன் முன்வைக்கும் தர்க்கங்கள் மார்க்சிய அழகியலைக் கண்டறிய உதவுவனவாக அமைந்த போதிலும் இவற்றுக்கு அப்பால் ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாடு பிற்போக்கானது என்பதை வரலாறு எடுத்துக்காட்டியுள்ளது.
ஸ்டாலின் இலக்கியத்துக்கான பன்மைத்தன்மையைக் காணத்தவறி அரசியல் பணிக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தமை தவறெனினும், அதனை அன்றைய வரலாற்றுச் சூழலிலிருந்து பிரித்தெடுத்து நோக்க இயலாது. கோர்க்கியின் 'தாய்' நாவல் வெறும் பிரசாரமாக இருப்பதாக பிளெக்கனோவ் கூறியமையை லெனின் கண்டித்திருப்பது கவனிப்புக்குரியது.
இதனை எடுத்துக்காட்டும் றூலாசிரியர் 'ஒரு வெளிப்படையான வர்க்கச் சார்பு இலக்கியம் தேவை என்று கூறும் லெனின் ஷஒரு பெரும் சமூக ஜனநாயக எந்திரத்தின் பற்சக்கரங்களாகவும் மறையாணிகளாகவும் இலக்கியம் மாற வேண்டும்| என்று அறைகூவல் விடுக்கிறார்' என்பதையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை (ப.53)
ஆயினும் கட்சி இலக்கியம் என்பதில் லெனின் பெரிதும் வலியுறுத்துவது நாவல்கள் அல்ல, கட்சிக்கான கொள்கை சார்ந்த எழுத்துக்கள் என்று அடுத்த பந்தியிலேயே மாறுபடவும் செய்கிறார் டெரிஈகிள்டன். நாவல்களிலும் கட்சி இலக்கியத்தேவையை வலியுறுத்தியவாறேதான் ஏனைய வடிவங்களையும் லெனின் கோருகிறார் என்பதை இந்நூலின் வழியும் காண்கிறோம். ஆக்க இலக்கியம் கட்சி இலக்கியத்தைக் கடந்து பல தளங்களில் அமைவதை மார்க்சியம் வலியுறுத்துகிறது எனக்காட்டுவதற்காக இதனை மறுக்க அவசியமில்லை.
சமூக நோக்கில் பிற்போக்காளராய் உள்ளவர்களது படைப்புகள் அவர்களது நோக்கத்தையும் மீறி மார்க்சியர்களது ஏற்புக்குரியதாக இடமுண்டு. 'கத்தோலிக்க சமயம் சார்ந்த, மேட்டுக்குடி நியதிகள் சார்ந்த பாகுபாட்டுச் சிந்தனைகள் இருந்தபோதிலும், பால்சாக் தனது சொந்த வரலாற்றின் முக்கிய இயக்கங்கள் குறித்த ஒரு ஆழமான, கற்பனைத்திறனோடு கூடிய புரிதலைக் கொண்டிருந்தார். தனது சொந்த கலைக் கண்ணோட்டங்களின் வலிமையால் அவர் தனது அரசியல் கண்ணோட்டங்களுடன் முரண்படுகிற பரிவுகள் கொண்டவராக இருக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவதை அவருடைய நாவல்கள் காட்டுகின்றன. ஷஉண்மை நிலைமையை ஆழமாக உள்வாங்கிக்கொண்டவர்| என்று அவரைப்பற்றி மார்க்ஸ் ஷமூலதனம்| நூலில் குறிப்பிடுகிறார்...... பால்சாக் மேற்பரப்பில் மேட்டுக்குடி நியதிகளின் ஆதரவாளராக இருக்கிறார், ஆனால் தனது இலக்கிய ஆக்கத்தின் ஆழத்தில் தனது கசப்பான அரசியல் எதிரிகளான குடியரசுவாதிகள் மீது ஒழிவு மறைவற்ற மரியாதையை வெளிப்படுத்துகிறார். ஒரு படைப்பின் அகநிலை நோக்கத்திற்கும் புறநிலைப்பொருள் விளக்கத்திற்கும் இடையேயான இந்த தனிவேறுபாடு, இந்த ஷமுரண்பாட்டு விதி| டால்ஸ்டாய் பற்றிய வெனினின் எழுத்திலும், வால்டர் ஸ்காட் பற்றிய லூகாக்ஸ் எழுத்திலும் எதிரொலிக்கிறது' என்ற டெரிஈகிள்டன் கருத்து மனங்கொள்ளத்தக்கது.
மார்க்சிய அழகியல் பற்றி ட்ரொட்ஸ்கியைத் துணைக்கு அழைப்பதில் விமர்சனமற்று இருப்பதும், ஸ்டாலின் தவறை வரலாற்றிலிருந்து பிரித்தெடுத்து அணுகுவதிலும் அவரது விருப்பையும் மீறி கல்விப்புலத் தளத்துக்குரியதாக அவரது எழுத்து மட்டுப்பட்டுப் போனபோதிலும், ஒட்டுமொத்தமாக டெரிஈகிள்டனின் நூல் மார்க்சியத்தையும் இலக்கியத் திறனாய்வையும் புரிந்து கொள்வதற்கு பெரும் பங்களிப்பு நல்கியுள்ளது என்பது தெளிவு.
முடிந்த முடிவுகளை வலியுறுத்துவதை விட மார்க்சியச் சிந்தனையாளர்களது மாறுபட்ட கருத்துகளை விவாதப்பாணியில் வளர்த்தெடுத்து சுயசிந்தனைத்தர்க்க நிலையில் வாசகர் உட்செரிக்க ஏற்றதாக விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இயற்பண்புவாதம் - யதார்த்த வாதம் என்பன குறித்த தெளிவை அடைய இடமுள்ளது. பட்டறிவின் எண்ணப்பதிவாக உண்மை அறிவு இருப்பதில்லை. புறநிலை யதார்த்தத்தின் ஒரு ஆழமான - விரிவான பிரதிபலிப்பாக அறிவு உள்ளது. இப்பிரதிபலிப்பு படைப்பாற்றலுடனான தலையீட்டை உட்படுத்தியதாகும். அனுபவம் கலையாகும் போது கலைஞரால் பெறும் மாற்றம் கவனிப்புக்குரியது. யதார்த்தவாத எழுத்தில் இருப்பிலுள்ள அனைத்தும் அப்படியே காட்டப்படுவதில்லை; காட்டப்படாத பகுதிகளும், முன்னேறும் வரலாற்று அம்சம் கூடுதலாக ஊடுருவிப் பார்க்கப்படுவதும், இலக்கியகர்த்தாவால் மாற்றிப்புனையப்படும் உழைப்பும் சேர்ந்தே யதார்த்தவாத எழுத்தாக்கம் அமைகிறது.
இந்த விமர்சனக்குறிப்பை எழுதும் போதுங்கூட பழக்க தோசத்தில் வரும் ஷபடைப்பு| ஷபடைப்பாளி| என்பதைப் பெரும் சிரமத்துடன் தவிர்க்க வேண்டியுள்ளது. வெறுமையிலிருந்து எதுவும் படைக்கப்படவில்லை என்பதற்கு ஆசிரியர் கொடுத்த அழுத்தம் இந்த எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இலக்கியம் என்பது அடிப்படையில் உற்பத்திப்பொருள், பதிப்பாளருடன் எழுத்தாளரது உறவு என்பன ஞ}லில் தெளிவுபடுத்தப்படுகிறது. இறுதி இயலில் இதனை வலியுறுத்துகிறபோது வெறும் வறட்டுவாதமாகிவிடாத எச்சரிக்கையுணர்வும் வெளிப்படுகிறது. இலக்கியமும் வரலாறும், உருவம் - உள்ளடக்கம், எழுத்தாளரும் கடப்பாடும், எழுத்தாளரே உற்பத்தியாளராக எனும் தலைப்புகளில் அமைந்துள்ள 94 பக்கங்கள் கொண்ட இச்சிறு நூல் மார்க்சியமும் திறனாய்வும் குறித்த அடிப்படைகளை அறியப் பேருதவி புரிகிறது.
எழுத்தாக்கத்தை வரலாற்றில் வைத்து நோக்குதல், படைப்போடு ஒன்றிப்போதல் என்பதாயன்றிச் சிந்தனைத்திறனை வளர்ப்பதோடான உணர்நிலையாக எழுத்தாக்கத்தை அணுகுதல், மெய்மறக்கும் அழகியலாய் அன்றி செயற்பூர்வமான அழகுணர்வு, எழுத்தாளர் ஒரு உற்பத்தியாளர் - தொழிலாளி எனும் கருத்தாக்கம் என்பவற்றை தெளிவுறுத்தும் 'மார்க்சியமும் இலக்கியத்திறனாய்வும்' எனும் இந்நூல் அ. குமரேசன் மொழியாக்கத்தில் இலகுவான தமிழில் தரப்பட்டுள்ளது. சமூக அக்கறை கொண்ட ஒவ்வொரு எழுத்தாளரும் படித்தாக வேண்டிய நூல் இது என்பது மிகையுரையல்ல.