Thursday, October 24, 2024
பாபாசாஹேப் அம்பேத்கர்
தலைமையேற்று முன்னெடுத்த
‘முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்’
என்ற வரலாற்றுத் தடம் -
மகத்தான மஹத் போராட்டம்
மிகமிக அற்புதமான படைப்பாக்கமாக ஆனந்த் டெல்டும்டே அவர்களால் மஹத் எழுச்சி நூலாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தின் வழியாக தமிழில் கமலாலயன் வழங்கியுள்ள இந்த நூல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு!
இன்னும் ஐந்து வருடங்களில் மஹத் போராட்டம் நூற்றாண்டைக் காண உள்ளது. நிறைவுரையாக 506 ம் பக்கத்தில் “தலித் மக்களுக்கு மஹத் ஒரு மகோன்னதமான தருணத்தை ஐயத்திற்கு இடமின்றி நிறுவியிருக்கிறது. ஆனால், அதே சமயம்…” என அந்தப் போராட்டத்தின் பலம்-பலவீனங்கள் அனைத்தையும் தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர். குறிப்பாக அரசு பற்றிய தெளிவீனம் - தொடர்ந்து அரசைச் சார்ந்திருக்கும் இயக்கமுறையைத் தொடக்கி வைத்தமை என்பன விமரிசனத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதனை அவதானிக்கலாம்!
இத்தகைய விமரிசனக் கண்ணோட்டத்தை கடந்த கால வரலாற்றின் மீது பிரயோகிப்பது அவசியம்; அதன் வாயிலாகவே எதிர்காலச் செயற்பாட்டைத் தவறற்ற வகையில் முன்னெடுக்க இயலும் என வலியுறுத்தும் ஆசிரியர்,
இது எந்தவகையிலும் வரலாறு படைத்த அன்றைய சாதனையாளர்களை மதிப்பிறக்கம் செய்வதாகாது எனவும் எடுத்துக்காட்டுகிறார்!
மாறாக, அந்த முன்னோடிகளை வழிபாட்டுக்கு உரியவர்களாக ஆக்குவதே அவர்களுக்கும் வரலாற்றுக்கும் செய்யும் மிகப்பெரும் துரோகம் என இடித்துரைப்பார் ஆனந்த் டெல்டும்ப்டே!
இந்தப் போராட்டத்தை வடிவப்படுத்தித் தொடக்கிவைத்த (பாபாசாஹேப் அம்பேத்கரை வற்புறுத்தித் தலைமை ஏற்க வைத்த) தோழர் ஆர்.பி. மோரே அவர்கள் அந்த நிகழ்வுப் போக்குகள் அனைத்தையும் தெளிவுற 1963-64 ம் ஆண்டுகளில் எழுதி இருந்தார்; சிறுநூலுக்கான அந்தப் பகுதியும் ஆனந்த் டெல்டும்ப்டேயின் நூலுக்கான ஒரு பகுதியாக இடம்பெற்று உள்ளமை சிறப்பம்சம். தோழர் மோரே தொடர்ந்து பாபாசாஹேப் அம்பேத்கருடன் இயங்க இயலாமல் கொம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்பட்டவர்; இந்த விலகலை (வளர்ச்சியை) பாபாசாஹேப் விருப்புறுதியுடன் ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் நட்புணர்வுடன் - அதனை ஏற்றுத் தட்டிக்கொடுத்து நட்புறவைப் பேணியவராக வாழ்ந்தார் என்ற பதிவையும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக இயங்கிய தோழர் மோரே தந்துள்ளார்.
அந்தப் போராட்டம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் இந்த நூல் உள்வாங்கி ஆய்வுபூர்வமாக (படிப்பதற்கு சிரமமற்ற வடிவில்) தந்துள்ளது. போராட்ட வரலாற்று பக்கங்கள் விரித்துரைக்கப்பட்ட பாங்கு பாபாசாஹேப் அம்பேத்கரை வழிபாட்டு உணர்வுடன் ஆசிரியர் முன்வைக்கிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியமை மெய்; அந்த வெளிப்பாடு தவிர்க்கவியலாதது - சரியானதே - என்ற புரிதலை “மஹத்தைப் பிரதிபலித்தல்: பின்னோக்கிப் பார்த்தலும் முன்னோக்கி நகர்தலும்” என்ற இறுதி அத்தியாயம் தெளிவுபடுத்திவிடுகிறது. அந்த முதல் தொடக்கம் பற்றிய தயவுதாட்சண்யமற்ற முழுமைப்பட்ட விமரிசனம் இந்த அத்தியாயத்தில் முழுமையாக (எந்த விடுபடலும் அற்ற பரிபூரணத் தன்மையுடன்) முன்வைக்கப்பட்டு உள்ளது.
தலைமையைச் சார்ந்திருத்தல், தலைமையின் வர்க்கப் பார்வையும் வர்க்கக் குணாம்சமும் முழு இயக்கத்தையே குறுகத் தறிக்க இடமளித்தல், இன்றுவரை குட்டிமுதலாளி வர்க்கப் பண்புடன் தலித் அரசியல் தொடருதல், தூலமான பிரச்சினைகளை விடுத்து அரூபங்களில் - அடையாளங்களில் மட்டுப்பட்டு இருத்தல் … எனப் பலவும் பேசப்பட்டுள்ளது.
பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் தலித் அரசியல் முன்னெடுக்கப்படுவதற்கு,
மகத்தான (முதலாளித்துவச் சிந்தனை வரம்புக்குள் இருந்தபோதிலும்) புரட்சிகரமான தலித் எழுச்சி முன்னோடியாகத் திகழ்ந்த அம்பேத்கரது வகிபாகத்தை எவ்வகையில் உள்ளெடுக்க இயலும் - வேண்டும்
என்கிற புரிதலை வந்தடைவதற்கு
இந்த நூல் அனைவராலும் படிக்கப்படுவது மிகமிக அவசியம்!
சிப்பாய் புரட்சி முறியடிப்பு,
“கடைசி முகலாயன் -
ஓர் அரச குலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857”
இன்றைய உலகச்
செல்நெறி மாற்றம்
மார்க்சியத்தின்
நெருக்கடி
வில்லியம் டேல்ரிம்பிள் எழுதிய “கடைசி முகலாயன் (ஓர் அரச குலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857)” என்ற நூலைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். இன்றைய சமகால மாற்றச் செல்நெறிகளுடன் பொருத்திப் பார்த்துப் படிப்பதற்கான சுவாரசியத்துடன்,
ஏகாதிபத்தியப் பிடிக்குள் முழுதாக மாட்டப்படுவதற்கான வன்முறைக் கொடூரங்களில் எமது முன்னோர் (நூற்றைம்பது வருடங்களின் முன்னர்) அனுபவித்த தாங்கவியலாத சித்திரவதைகளை மனதால் சுமந்தபடி படிக்க ஏற்றதாக இந்த நூல் படைக்கப்பட்டு உள்ளது!
இதனடிப்படையை “தமிழ்ப் பண்பாடு: ஊற்றுக்களும் ஓட்டங்களும்” எழுநா தொடரில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். முன்னதாக எழுதிய “சமணப் பள்ளிப் படி தாண்டி பக்தி இயக்கத்துக்கு” என்ற அத்தியாயம் ஓரிரு தினங்களில் எழுநாவில் வெளிவந்த பின்னர் ‘கடைசி முகலாயன்’ அனுபவத்தை உள்வாங்கி எழுதும் “பிராமண மத வரம்பைக் கடந்த மக்கள் களம்” என்ற அத்தியாயம் ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் உங்கள் பார்வைக்கு வரும்.
நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த மாற்றம் ஏகாதிபத்திய அரசியல் பிணைப்புக்குள் எங்களை முழுதாக மாட்டி வைத்ததென்றால் ஆயிரத்தைநூறு வருடங்களுக்கு முன்னர் பக்திப் பேரியக்கத்தின் ஊடாக நடந்த மாற்றம் நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் பிணித்துக் கொண்டது; முன்னதாக ‘நல்ல மதங்கள்’ (பௌத்தமும் சமணமும்) அதிகாரத்தில் இருந்தன - இந்த மாற்றத்துடன் பிராமண மதம் மீளெழுச்சி பெற்றது என்பதான பிறழ் வரலாற்று எழுது முறையை மறுத்து, பக்திப் பேரியக்கம் மகத்தான சமூக மாற்றத்தை நிதர்சனம் ஆக்குவதன் பொருட்டு புதிய மத உருவாக்கத்தை வெளிப்படுத்தியது எனக் காட்டுவதாக அந்தத் தொடர் உள்ளது!
சிப்பாய் புரட்சி முந்திய நிலப்பிரபுத்துவ இணைப்புடன் தேசிய விடுதலைக்காக முனைந்து
முறியடிக்கப்பட்ட ஒன்று!
கிறிஸ்தவத் திணிப்பு காலனித்துவத்துடன் இணைந்து இந்து-இஸ்லாமியர்களை அச்சுறுத்திய சூழலில் இரு தரப்பாரும் இணைந்து அந்தப் புரட்சியை முன்னெடுத்தனர். சீக்கியர்களையும் தலித் மக்களையும் ஒன்றுபடுத்தத் தவறியதுடன் வேறும்பல விடுபாடுகளால் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக் கொள்ளையரால் மீண்டும் டெல்லியைக் கைப்பற்ற இயலுமாயிற்று. அதன் பின்னரே பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சிக்குள் எமது பிரதேசங்கள் கொண்டு வரப்பட்டன.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்தில் இருந்து சுதந்திரம் எழுபது வருடங்களுக்கு முன்னர் எட்டப்பட்ட போதிலும் அமெரிக்க ஏகாதிபத்திய நவ காலனித்துவப் பிடி இன்று வரை தொடர்கிறது.
இந்த ஏகாதிபத்தியப் பெரும் பிணைப்பு இறுதியாகத் தகர்க்கப்படுவதாக இல்லை என்ற போதிலும் ஒடுக்கப்பட்ட தேசங்கள் ஒன்றிணைந்து இயங்கித் தேசங்கள் இடையே சமத்துவத்தை வென்றெடுக்க ஏற்ற அரசியல் கள மாற்றம் ஒன்று இப்போது ஏற்பட்டு வருகிறது.
இவை குறித்து மார்க்சிய அணிகளுக்குப் பெரிதான புரிதலோ அக்கறையோ இருப்பதாகத் தெரியவில்லை;
இப்போதும் வர இருக்கிற
‘வர்க்கப் புரட்சி’
தங்களைத் தலைமை ஏற்க வருமாறு அழைக்கும் என்ற கனவுகளுடன் அவர்கள்!
இலங்கையில் மார்க்சியப் பிரயோகத்துக்கான அணி உருவாக்கம் சாத்தியப்பட்டு நூற்றாண்டை பத்து வருடங்களில் சந்திக்க உள்ளோம். எமது மண்ணுக்கேற்றதாக ‘சம சமாஜக் கட்சி’ என்ற பெயரில் அனைத்து மார்க்சியர்களும் சென்ற நூற்றாண்டின் முப்பதாம் ஆண்டுகளில் இணைந்து செயற்பட்டனர். மார்க்சியமல்லாத சிந்தனைக் கோளாறால் பத்து வருடங்களில் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி தனியே பிரிந்து இயங்க நேர்ந்தது (ச.ச.கட்சியின் தலைமையின் பெரும்பான்மையினர் ட்ரொஸ்கியத்தைப் பின்பற்றியதால் ஸ்டாலினிஸ்ட்டுகளை வெளியேற்றிய துர்ப்பாக்கியத்தின் வெளிப்பாடு தனிக்கட்சி!).
சோவியத்-சீன மாபெரும் விவாதம் 1964 இல் முன்னெடுப்பட்டு வந்த போது ருஷ்ய சார்புத் தலைமையால் வெளியேற்றப்பட்ட சீன சார்பினர் தமக்கான தனிக் கட்சியை ‘புரட்சிகர இலங்கை கொ.க.’ என்ற புதிய பதாகையுடன் உருவாக்கி இயங்கினர்.
சோவியத் சார்பு கொ.கட்சி பாராளு மன்றப் பாதையை முன்னெடுத்த போது சீன சார்புத் தலைமை வன்முறைப் புரட்சி பற்றிய புத்தக வாத முழக்கங்களை முன்வைத்தவாறு இருந்தது (யாழ்ப்பாணப் பிரதேசத்தில் உயிர்ப்பான மார்க்சியப் பிரயோகத்துடன் சாதியத் தகர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, அதற்கான வகைமுறைப்படி வன்முறைப் பாதை இடம்பெற்று இருந்தது). தலைமையின் அந்த வன்முறை மார்க்கப் பிரசாரத்தை முழுமைப்படுத்திய வடிவமாக்க முயன்ற ரோகண விஜயவீரவின் ஜே.வி.பி. தொடர்ந்தும் முன்னெடுக்கும் தலைவர் வழிபாடு காரணமாக இன்றளவும் தெளிவான மார்க்சியப் பாதையைக் கண்டடைய இயலாததாக இயங்குகிறது!
ட்ரொட்ஸ்கிய
திரிபுவாத
புத்தகவாத
வன்முறை
பாதைகளைக் கடந்த
வெகுஜன மார்க்கத்துடன்
மக்கள் போராட்டங்கள் வாயிலாக
விடுதலைத் தேசிய முன்னெடுப்பில்
சோசலிசத்தை வென்றெடுக்கும் சரியான மார்க்சியப் பிரயோகத்துக்கு தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் முற்பட்டதன் அடையாளமாக 1978 இல் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (இடது) உதயமானது!
அதன் 45 ஆவது ஆண்டு நினைவுகூரல் கூட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது!
மார்க்சியப் பிரயோகத்தில் கடந்த காலத்து அனுபவங்கள் ஊடாகத்
தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு,
சரியான நடைமுறைகளை மேலும் செழுமைப்படுத்துவதாக
தோழர் மணியம் பாதை அமைந்துள்ளது!
புறநிலையான ஆய்வுகள்,
சரியான கொள்கை-கோட்பாடுகளை வகுத்தல்,
வெகுஜன மார்க்கம்,
பரந்த ஐக்கிய முன்னணி,
மக்கள் நலன்களை நிறைவாக்கும் செயற்பாடுகள் வாயிலாக மக்களிடம் இருந்து கற்றல்,
கீழிருந்து மேல், மேலிருந்து கீழ் எனும் கலந்துரையாடல் முறையால் தீர்மானங்களை எட்டுதலும் செயலுருப்படுத்தலும்,
கூட்டான முடிவும் தனிநபர் பொறுப்பும்,
உட்கட்சிப் போராட்ட உரிமையுடன் சரியைக் கண்டறிதல், தவறைத் திருத்துதல்,
ஜனநாயக மத்தியத்துவ நடைமுறையைப் பின்பற்றுதல்
எனும் தோழர் மணியம் பாதையை மக்கள் மயப்படுத்தி சமத்துவ சமூகம் படைக்க முன்வருவோம்!
உலகுக்கோர்
தீய எடுத்துக்காட்டு
‘இலங்கையில் நடந்தேறி உள்ள மக்கள் புரட்சி அண்மைக்கால வரலாற்றுக்கான பெரும் பங்களிப்பு’
‘மக்கள் சக்தி எந்தவொரு சர்வாதிகாரத்தையும் தூக்கி எறியும் என்பதற்கான உதாரணம் இது’
‘கறுப்பு ஜூலை என்று இதுவரை இருந்த நிலையை மாற்றி சிவப்பு ஜூலை என்ற மகத்தான வரலாற்றை 2022 ஜூலை 9 ம் திகதி பதிவு செய்துவிட்டது’
- என்பதாகவும் இன்னும் பலவாறும் குதூகல வாசகங்கள் வலம் வந்தபடி!
இதன் மறுபக்கம் பற்றிய உரையாடல்களும் இடம்பெறத் தவறவில்லை. வழக்கம்போல, மறுத்தோடும் மாற்றுக் கருத்துகளுக்கான அடிப்படைகள் வெவ்வேறு தளங்களுக்கு உரியன!
இங்கு எங்களது பேசுபொருளாக அமைவது இந்தப் பிரச்சினையை வெறும் பொருளாதார நெருக்கடி/சர்வாதிகாரம் என்பவற்றைக் கடந்து இத்தகைய சூழலை தமக்கு அமைவாக கையாளும் ஏகாதிபத்திய சக்தியின் நுட்பத்திறன் மிக்க சதுராட்டம் பற்றியது!
இலங்கைத் தேசம் பூகோளப் பரப்பில் இருந்து காணாமல் ஆக்கப்படும் செயல் ஒழுங்கை ஏகாதிபத்திய அணி கையாண்டு வருவது பற்றியது.
பல தேசங்களாக இருந்தவற்றை இந்தியா என்ற ஒரு தேசமாக ஆக்கிய ஏகாதிபத்தியம் தான் ஒரே பேரரசுக்குள் இயங்கிய வரலாற்று நீடிப்பை உடையதாக இருந்ததோடு, அரபு மொழி-இஸ்லாம் மதம் எனும் ஒரே பண்பாட்டுடன் நிலப்பரப்பு அடிப்படையிலும் ஒரே தேசமாக இயங்க ஏற்றதாக இருந்த அரபு நாடுகளைப் பல தேசங்களாக சிதறடித்து நவீன வரலாற்றை தொடக்கி வைத்தது!
இத்தகைய கையாளுகைகளில் உள்ள வேறுபாடு என்பது ஏகாதிபத்திய நலனைப் பேணுவது எனும் ஒரே குறிக்கோளுக்கு உட்பட்ட விவகாரம்!
இலங்கைக்குள்ளேயும் ரஜரட்ட, ருகுணு, மலையரட்ட, யாழ்ப்பாண இராச்சியம் என்ற நாடுகள் இயங்கின; அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு தேசமாக்கிய பிரித்தானிய ஏகாதிபத்தியம் நிர்வாக ரீதியில் பல விடயங்களை இந்தியாவுக்கு உட்பட்டதான கையாளுகையை முன்னெடுத்தது. இரு நாடுகளுக்குமான நாணயக் குற்றிகளை வெவ்வேறாகவும் ரூபாய் தாளை ஒன்றாகவும் கையாண்டனர்.
வேற்றுமையும் ஒற்றுமையும் என்ற இந்தக் கையாளுகை மட்டுமன்றி வேறு பல சதிகளையும் முன்னெடுத்தனர்.
இந்தியாவில் விஞ்ஞான-தொழில் நுட்பக் கல்வியை மறுத்தவர்கள் இலங்கையில் தாராளமாக அனுமதித்தனர்; டொக்ரர் கிரீன் தனது மாணவர்களுடன் இணைந்து பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தமிழ் மூலமாக உடற்கூற்றியல், பௌதீகம், இரசாயனம், உயிரியல் சார்ந்த நூல்களை வெளியிட்டார். அதன்பொருட்டாக ‘மானிப்பாய் (யாழ்ப்பாண) ஆங்கில-தமிழ் பேரகராதி’ வெளிவர இயலுமாயிற்று.
ஐரோப்பிய நாடுகளில் சர்வஜன வாக்குரிமை நடைமுறைப்பட்டு ஓரிரு வருடங்களில் (1932 இல்) இலங்கையில் அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்தது; இரண்டு தசாப்தங்களின் பின்னரே இந்தியாவில் இதனைச் சாத்தியப்படுத்த இயலுமாயிற்று.
உள்ளாட்சிக் கட்டமைப்பு, விஞ்ஞான-தொழில்நுட்ப அறிவு, கல்வி விருத்தி, மருத்துவம் - சுகாதாரம் என்பவற்றில் இந்தியாவைவிட மேலான நிலை என்பவற்றை இலங்கை பெறும் வகையில் பிரித்தானியா செயற்பட்டதற்கான காரணம் என்ன?
தேச விடுதலைக்காக அர்ப்பணிப்பு மிக்க போராட்டங்கள் வாயிலாக சுதந்திரத்தை வென்றெடுக்கும் இந்தியாவை ஏகாதிபத்தியப் பிணைப்புக்குள் கட்டுப்படுத்தி வைப்பதற்குப் பின் தளமாக இலங்கையைக் கையாள வேண்டும் என்ற ஏகாதிபத்திய நலனின் ஓரங்கம் அது.
சுதந்திர இந்தியா சோவியத் யூனியனுடன் நட்புறவு பூண்டிருந்த காரணத்தால் ஏகாதிபத்திய அணியின் தலைமையைப் பெற்ற அமெரிக்காவுடன் பகைமை பாராட்டிய வரலாறு எண்பதாம் ஆண்டுகளின் ஆரம்பம் வரை இருந்தது. அப்போது அமெரிக்காவை அரவணைத்து இந்தப் பிராந்தியத்தில் உலகமயமாதலை (திறந்த பொருளாதாரக் கொள்கையை) முதன்முதலில் உள்வாங்கிய நாடாக இலங்கை இருந்தது.
இந்தியப் பாதுகாப்புக்கு இலங்கை அச்சுறுத்தலாக அமையும் நடவடிக்கை வலுப்பட்டபோது ஈழத் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கான பின் தளத்தை இந்தியா வழங்கியது.
முப்பது வருடங்கள் நீடித்த யுத்தம் இலங்கையை முற்றாக கருவறுத்தது. அதற்கெனப் பட்ட கடன்களின் நெருக்கடி இன்றைய பொருளாதாரப் பிரச்சினையின் அடிப்படை என்பதுல் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
அதைவிடப் பிரதானம், 2009 இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ‘போராட்ட வரலாறு’ என்ற காவியத்தின் கதை-வசனம்-இயக்கத்தை இந்தியா செயற்படுத்திக்கொண்டு இருந்தது என்ற உண்மையைக் களத்தில் இயங்கியவர்கள் போதிய அளவு புரிந்துணர்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை எனும் விவகாரம்!
யுத்த களத்தில் போராடியவர்கள் அத்தகைய வகிபாகத்தைப்பெற அவர்களுக்கான ஆற்றல், அர்ப்பணிப்பு என்பவற்றைக் கொண்டிருந்தனர் என்பது கவனிப்புக்கு உரியன. அதேவேளை எவரோ போட்டு இயக்கும் களத்தில் இயங்குகிறோம் என்ற புரிதலின்றிச் செயற்பட்டதால் இயக்குனர் ‘கட்’ சொன்னதும் காணாமல் போக நேர்ந்தது என்ற உண்மையையும் மறுத்துவிட இயலாது. களத்தின் நாயகர்கள் இடையிட்டு சுதந்திரமாகப் பேசித் தமக்கான ‘நாயக விம்பங்களைத்’ தக்க வைத்துக்கொண்ட போதிலும் பலாபலன்களை முற்றுமுழுதாகப் பெற்றது என்னவோ இந்தியாதான்.
பின்னரான இலங்கை சுயாதீனத்தை முற்றாக இழந்தது. யுத்தம் முடிந்த அடுத்த நாள், அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார்: ‘யுத்தத்தை நடாத்தி முடித்தது இந்தியா; அவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதையெல்லாம் செய்ய வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம்’!
அதன்பொருட்டு ஒரு வருடத்தின் பின்னர் டில்லிக்குச் சென்று 16 ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு வந்தார். இயக்கும் கரங்களை அறிந்த போதிலும் உச்சிவிட இயலும் என்று நினைத்தார். உண்மைகளை மக்களுக்கு முன்வைக்காமல் யுத்தத்தை வென்ற வீரனாகத் தன்னைக் காட்டி மக்கள் ஆதரவை வென்றெடுக்க நினைத்தார்!
இந்தியா இரண்டாம் சருக்க கதை-வசனம்-இயக்கத்தைத் தொடங்கிவிட்டதை ராஜபக்சக்கள் கவனத்தில் எடுக்கத்தவறி இருந்தனர்; 2015 இல் மகிந்த எப்படித் தோற்கடிக்கப்பட்டார் என்பதைப் படிப்பினையாக எடுத்துக் கொள்ளாமல் 2019 இன் வெற்றியில் மதிமயங்கிப் போயினர்!
கோத்தபாய ஜனாதிபதி ஆனது முதல் பசில் நிதியமைச்சர் ஆனதுவரை டில்லிக்குப் போவதும் வருவதும் ‘உங்கள் சித்தப்படியே எங்கள் நடப்புகள்’ என ஒரு பக்கம் காட்டிக்கொண்டே மக்களின் முன் தங்களது வீர நாயக விம்பங்களைப் பிரம்மாண்டமாக்கிக் காட்ட இயலுமெனக் கருதியும் நடந்துகொண்டவற்றுக்கான விலையை இன்று நாடு முழுவதும் கொடுத்தபடி!
வீழ்த்தப்பட்ட அவர்களுக்கான பாடங்கள் மட்டுமல்ல இவை. இந்திய மேலாதிக்க சக்தியின் இயக்கமே அரங்கேறி இருக்கிறது என்பதைக் காணத்தவறி ஏதோ ‘மக்கள் போராட்டம்’ ஒன்றைத் தாங்கள் நடாத்தி முடித்து இருப்பதாக கருதிக்கொண்டு இருக்கும் அரகலய (போராட்ட) வீரர்களும்,
கடந்து செல்லும் இந்த வரலாற்றுப் படிப்பினைகளைக் கவனங்கொள்வது அவசியம்!
முதலாவது சருக்கத்தை 2009 இல் நடாத்தி முடித்தது போன்ற பண்புக்கூறுகளுடன் இன்றைய இந்தியா இல்லை;
அப்போதும் (சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர்) ஏகாதிபத்திய அணிக்கான சாய்வு இந்தியாவுக்கு (அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியாலேயே) ஏற்பட்டு வந்தது என்பது மெய்.
இன்றைய இந்துத்துவ பா.ஜ.க. ஆட்சி முற்றுமுழுதாக அமெரிக்க மேலாதிக்கத்துடன் கரங்கோர்த்தபடி ஏகாதிபத்தியத்தின் தலைமைக் கேந்திரமாக இந்தியாவை மாற்றும் செயலொழுங்குகளைக் கனகச்சிதமாக முன்னெடுத்து வருகிறது.
இன்று இலங்கையில் நடந்தேறி வருகிற மாற்ற நிலைகள், இந்தியாவின் ஆளுகைக்குள் முழுதாக இந்த நாட்டை மாற்றுவதற்கான செயற்திட்டங்களை உள்ளடக்கியவை;
நிலையான ஆட்சியை இலங்கையின் எந்தத் தரப்பாலும் ஏற்படுத்த இயலாது என மக்களே ஏற்கும்படி செய்வதற்கானவை.
மக்கள் போராட்ட நடைமுறைகளுக்கான செயலொழுங்குகளாக இல்லாத, அராஜகவாதப் ‘போராட்டங்கள்’ ஊடகப் பரப்புரைகள் வாயிலாக இன்னும் இன்னும் தூண்டப்படும்.
எவரோ இயக்கும் கைப்பாவைகளாகத் தொடர்ந்தும் இருக்கப்போகிறோமா?
வீர வசனங்களல்ல இன்று அவசிப்படுவது; நிதானமிக்க செயற்பாடுகள் அவசியம்.
விடுதலைத்தேசியச் சிந்தனை முறையை வளர்ப்போம்!
அன்றைய ஏகாதிபத்திய அணிக்கு
ஆளுமை மிக்க இலங்கை -
தேச விடுதலைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த இந்தியாவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காகத் தேவைப்பட்டது!
இன்றைய ஏகாதிபத்திய அணிக்குத் தலைமையேற்கும் வகிபாகம் நோக்கி முன்னேறுகிற இந்தியாவின் அங்கமாக இலங்கை கட்டுப்பட வேண்டும் என்பது மேலாதிக்க வாதிகளின் நாட்டமாக உள்ளது!
காப்பிரேட் ஏகாதிபத்திய ஊடக ஊடுருவல்கள் இதற்கானது!
இன்றைய அவலத்துக்கு இரையென ஆவோமா?
விடுதலைச் சக்திகளுக்கு எடுத்துக்காட்டு என வளர்வோமா -
மேலாதிக்க வாதிகளுக்கு இரையாகிக்கொண்டே வீர வசனங்கள் பேசும் போலித்தனங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகத் தொடர்வோமா?
அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி!
இந்தியக் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று(27.07.2015) மாலை தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார் எனும் செய்தி அனைவரையும் அதிர்வுக்குள்ளாக்கியது. அவரது வயது 84 என்றபோதிலும் நோயுற்று மரணிப்பாரோ என்ற எதிர்பாப்பு எதுவும் இருக்கவில்லை. அப்போதும் கூட ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிவிட்டே ,அவரது இதயம் தனது இறுதி அதிர்வைக் காட்ட அவர் இடமளித்திருந்தார்.
ஒரு சாதனையாளர் மறைந்ததும் சம்பிருதாயத்துக்காக இறுதி மரியாதை செலுத்துவது, அல்லது அப்படி என்ன சாதனை - அவற்றின் பின்னே இன்ன இன்ன தப்புத்தாளங்கள் இருந்தனவே எனப் பட்டியல் இடுவது இன்றைய மரபாகியுள்ளது. அப்துல் கலாமும் இதற்கு விலக்காக மாட்டார். அணுகுண்டு, ஏவுகணை என்பவற்றைக் கண்டு பிடிப்பதில் அவரது பங்களிப்பு, ஜனாதிபதியாக இருந்து அவர் ஆற்றிய பணி என்பவற்றுக்கு அப்பால் அவர் உன்னதமிக்க ஒரு மனிதர், முன்னுதாரணமான மானுட ஆளுமை என்பதற்காக விமர்சனங்களுக்கும் அப்பால் போற்றப்பட வேண்டியவர் எனப் புதிய பண்பாட்டுத் தளம் கருதுகின்றது.
இவரது முழுப்பெயர் அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார்.
இந்திய குடியரசு தலைவராக பதவி ஏற்கும் முன்னர், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அழைக்கப்பட்டு வந்தார்.
அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம்! இறுதி மூச்சுவரை தனது மக்களுக்காக - குறிப்பாக எதிர்கால வளம்மிக்க உலகைப் படைக்கவேண்டிய மாணவர் சமூகத்துக்காக உழைக்கும் அவரது மனப்பாங்கைக் கையேற்று விருத்தி செய்ய உறுதி பூணுவோம்! புதிய பண்பாட்டுச் சமூகம் உங்களைத் தனக்குரியவராக வரித்துள்ளது மாமனிதரே; எங்கும் சென்றுவிடவில்லை நீங்கள், மக்கள் உள்ளங்களில் வாழ்கிறீர்கள்!
வணக்கம் ஐயா! எங்களை மீறி வரும் கண்ணீரை நீங்கள் விரும்பாத போதும் வருகிறதே, என்ன செய்ய. இல்லை, உங்கள் மூச்சு வலியுறுத்தியவாறு புதிய உலகம் படைப்போம்! உங்கள் மூச்சு எங்களில் கலந்துள்ளது !
Wednesday, October 23, 2024
மாத்தி யோசிக்க
நிர்ப்பந்திக்கும்
நிதர்சனம்
நேற்றைய தினம் ஒக்ரோபர் 21 எழுச்சியின் ஐம்பத்தைந்தாம் ஆண்டு நினைவைப் பகிர்ந்துகொண்ட மெய்நிகர் அமர்வு ஒன்றில் பங்கேற்றிருந்தோம். “ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கத்தின் வரலாற்றியலுக்கான பங்களிப்பு” எனும் தலைப்பிலானது எனது உரை. அதனை எழுத வேண்டுமெனத் தோழர்கள் வலியுறுத்தினர். எழுதுவேன்.
ஒரு வாரத்திற்கு மேலாக ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம் பற்றிய பேசுபொருள் வெவ்வேறு தளங்களில் இடம்பெற்றபடி உள்ளது. முதல் தடவையாக அதனை அறிமுகங்கொள்கிற இளைய தலைமுறை நண்பர்கள் பலர் இதனை ஊடகங்கள் பரவலாக்காது இருப்பது ஏன் என ஆச்சரியம் தெரிவித்தனர்.
காப்பிரேட் ஏகாதிபத்தியப் பிடியில் ஏதோவொரு வகையில் அகப்பட்டிருக்கும் ஊடகங்கள் மக்கள் விடுதலைப் போராட்டத்துக்கான அந்தப் பக்கங்களை காட்டப்போவதில்லை; சாதிவாத, இனவாத, மதவாத, வர்க்கவாத முடக்கங்களில் அழுந்தும் மனங்களாக ஊடகங்கள் இன்றைய தலைமுறையினரைக் கட்டமைத்து வருகின்றன.
அன்றைய எழுச்சியை வர்க்கப் போராட்டம் என வடிவப்படுத்த முனைகிற வர்க்கவாதம் ஒருபுறம்; அம்பேத்கரிய-பெரியாரியச் சாதிப்போராட்டமாக அதனை விருத்திபெறக் கொம்யூனிஸ்ட்டுகள் விடவில்லை, அதனாலேதான் சாதி ஒழிந்து போகாமல் இப்போதும் வட்டுக்கோட்டை அனர்த்தம் போன்றன இடம்பெற ஏதுவாகி உள்ளன எனும் விமரிசனங்கள் இன்னொரு புறம்.
முதலாளித்துவ ஜனநாயக முழுமைப்படல் ஏற்பட்டால் சாதி ஒழிந்துவிடும் என்ற குரல்களையும் கேட்கிறோம்!
ஐரோப்பிய வர்க்க சமூக முறையினின்றும் வேறான எமது வாழ்முறையைச் சார்ந்த - எமக்கேயுரிய, தனித்துவமிக்க வரலாற்று இயக்கப்போக்கை விளக்கம் கொள்ள மறப்பதால் (மறுப்பதால்) இத்தகைய வர்க்கவாத, சாதிவாத எண்ணங்கள்!
இனமரபுக்குழுக்கள் வர்க்கங்களாகப் பிளவுபட்டு ஏற்பட்டது ஐரோப்பிய சமூக முறை; உற்பத்தி சக்தி விருத்தி ஏற்படும்போது பழைய உற்பத்தி உறவு தகர்க்கப்படும் - அவற்றுக்குரிய பழைய வர்க்கங்கள் அற்றுப்போகப் புதிய உற்பத்தி உறவுக்கான புதிய வர்க்கங்கள் வரலாற்று அரங்கினில் உருவாகும்.
வர்க்கப் பிளவுறாமல் இனமரபுக் குழு மேலாண்மையால் ஏற்பட்ட சாதி வாழ்முறை எமக்கானது. சமூக அமைப்பு மாற்றத்தில் வேறுபடும் அமைப்பு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சாதி மேலாதிக்கத்தை வென்றெடுத்திருக்கும்; முந்திய மேலாதிக்க சாதி அதிகாரத்தை இழந்தபோதிலும் தொடர்ந்தும் அடுத்தடுத்த அமைப்புகளில் நீடிக்கும், மீளவும் ஆதிக்கம்பெறப் போராடும்.
ஐரோப்பாவின் சோசலிசம் வர்க்கங்களை ஒழிப்பதாக இருந்தது. பாட்டாளி வர்க்க அரசு ஏற்படும் போது ஒரு வர்க்கமாக முதலாளி வர்க்கம் அற்றுப்போயிருக்கும்; மீண்டெழ இடம் கொடுக்காத வகையில் அரை-அரசுக்கு உரியதாக கொம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியப்படும்!
எங்களுடைய வரலாறு அத்தகைய வர்க்க உறவு சார்ந்ததல்ல; வேளிர்கள் ஆட்சியில் திணைகளிடையே சமத்துவம்(கிமு 7-கிமு4 ம் நூற்றாண்டுகள்), மருத திணை மேலாதிக்கத்தில் கிழார்கள் மேலாதிக்கம் (கிமு 3 - கிபி 1 ம் நூற்றாண்டுகள்), வணிகச்சாதி மேலாதிக்கம் (கிபி 2 - கிபி 6 ம் நூற்றாண்டுகள்), வெள்ளாள-பிராமண மேலாதிக்கம் (கிபி 7-கிபி 18 ம் நூற்றா.) காலனித்துவ-ஏகாதிபத்தியப் பிடிப்பில் இன்றுவரையான காலம் நீட்சிபெற்று உள்ளது என்பதாக ஏற்கனவே எமக்கான வரலாற்றுப்போக்கை வகைப்படுத்த முயற்சிக்கிறோம்.
மேலாதிக்கங்கள் தகர்க்கப்பட்டு, ஏற்றத்தாழ்வுச் சமூக நியதிகள் அகற்றப்பட்டால் மட்டுமே அவற்றின் பொருட்டு உருவான சாதிகள் அற்றுப் போகும் என்பதனைக் கவனத்தில் கொள்ளாமல் இருக்கலாமா?
எமக்கான சோசலிசம், சாதிய - மூலதன மேலாதிக்கங்களைத் தகர்த்து சாதிகள் இடையேயும் தேசங்கள் இடையேயும் சமத்துவம் ஏற்படுத்தப் போராடுவதாகவே இருக்க இயலும்.
சோசலிசம் பற்றிய புதிய கருத்தியல் அவசியப்படுவதனை மறுக்க இயலுமா?
மத உணர்வில்
விடுதலைத் தேசியமும்
மத அடிப்படை வாதங்களும்
அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் மக்கள் அபிப்பிராயத்தின் ஓரம்சத்தைத் தெளிவுற காட்டியுள்ளது. அதீத தமிழ் வெறியைப் பரப்பி மக்களிடையே பெரும் சலசலப்பை ‘நாம் தமிழர்’ அமைப்பு ஏற்படுத்தி வருவதாகவும் அதன் அறுவடையை இத்தேர்தல் துலக்கமுற எடுத்துக்காட்டும் எனவும் சமூக ஊடகங்கள் அலப்பறை பண்ணிக்கொண்டு இருந்தன.
மக்கள் தீர்ப்புத் தெளிவாகவே நாம் தமிழர் அமைப்பை நிராகரித்து இருப்பதனையே இந்தத் தேர்தல் உணர்த்தி உள்ளது.
இது சார்ந்து வெளிப்பட்டுள்ள மூன்று கருத்துகள் கவனத்தை ஈர்ப்பன:
1. ஈழத்தமிழர் மத்தியில் யாழ் மேலாதிக்க வாதம் எடுபட்டதைப் போலத் தமிழகத்தில் மேலாதிக்கவாத தேசியம் மேலோங்க இயலாது; தமிழகத்தில் நிலவும் ஜனநாயகப் பண்பு பிரபாகரன் போன்ற ஒரு பாசிசத் தலைவரை அங்கே அனுமதிக்க இடம் தந்துவிடாத அரண்!
2. இதற்கு நேர்விரோதப் பண்பியல் சார்ந்தது இரண்டாந்தரப்புக் கருத்து. புலிகளை முன்னிறுத்திப் பாசிசத் தமிழ் தேசியம் தமிழகத்தின் இளந்தலைமுறை ஒன்றை நாசப்படுத்த இயலுமாய் உள்ள போதிலும் வெகுஜனச் செல்வாக்கை அதனால் பெற்றுவிட இயலாத தடை ஒன்று இருக்கிறது; சாதிய முரண் கூர்மைப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம் (1966 இல் அது முனைப்புற்று ஐந்து வருடங்களுக்கு மேலாகப் பன்முகப் போராட்டங்கள் இடம்பெற்றன; ஆயினும் அதன் வேர் 1925 இன் மாணவர் காங்கிரஸ் மாநாட்டு நடவடிக்கைகள், 1944 இல் உருப்பெற்று இயங்கிய சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் செயல்வேகம் என்பவற்றின் அத்திவாரத்தில் ஊன்றி நின்றது) இரட்டைத் தேசியப் பிளவுடன் இருந்த தமிழர்களை ஒன்றிணைத்தது போல தமிழக நிலை இல்லை. தலித் எழுச்சி தமிழகத்தின் தமிழ் தேசியத்தை முறியடிப்பதாக தீடித்திருக்கும்!
3. தமிழ் மக்கள் தமது தாய் மத த்துக்குத் திரும்ப வேண்டும் என்ற நாம் தமிழர் அமைப்பின் முழக்கம் தேசியத்துக்குப் பொருத்தமற்றது. மொழி உணர்வுதான் தேசியத்துக்கு உரியதாக இருக்க இயலும், மத அரசியல் என்பது இந்துத்துவம் போன்ற அடிப்படைவாத பாசிசவாத த்துக்கு வழிகோலும்!
தேசியம் குறித்த வர்க்கவாத அணுகுமுறை சார்ந்த தவறின் பாற்பட்ட கருத்துகள் அவை. பழகிப்போன வர்க்க அரசியல் மட்டுமே விஞ்ஞான பூர்வமானது - அதுவே மார்க்சியம் என்ற மயக்கம் கலையாமல் தேசியப் பிரச்சினையைப் புரிதல் கொள்ள இயலாது. தவறான சக்திகள் தேசியவாத, சாதிவாத அரசியலை முன்னெடுத்து அழிவுகள் பெருக க் காரணம் இந்த வர்க்க வாத முடக்கம் என்ற உணர்வு இன்று அழுத்தி வலியுறுத்தப்பட வேண்டும்.
வர்க்கப் போராட்டம் மட்டும் வரலாற்றை இயக்கும் சக்தியல்ல; சாதி, தேசம் எனும் முழுச் சமூக சக்திகளிடையேயான போராட்டங்கள் ஊடாகவும் வரலாற்று இயக்கம் (சமூக அமைப்பு மாற்றங்கள்) ஏற்பட்டு வரும் மற்றொரு விஞ்ஞான பூர்வ உண்மையையும் புரிதல்கொள்வது அவசியம்.
ஆதிக்க நாட்டம் உடையவை - விடுதலை நாடுவன என்ற இரட்டைத் தன்மை சாதிகளிடமும் தேசியங்களிடமும் உள்ளன. யாழ்ப்பாணத்தின் சாதியத் தகர்ப்புப் போராட்ட வரலாறு விடுதலைத் தேசிய வகைப்பட்டது. புலிகள் முன்னெடுத்த மேலாதிக்கத் தமிழ் தேசியத்துக்கு வழிவிட்டுக்கொடுக்கும் துரோக வரலாறல்ல அது. வர்க்கவாதச் சிந்தனை வரம்பிட்ட காரணத்தால் பேரினவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தை மார்க்சியர்கள் முன்னெடுக்கத் தவறினர்; பேரினவாத இராணுவ ஒடுக்குமுறையை ஊக்குவிப்பதாக தமிழ் தேசிய மேலாதிக்கவாத புலிகளின் இராணுவ வாத முன்னெடுப்புகள் அமைந்தன; அவற்றில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளான தலித் மக்கள் புலிகளின் போராட்டத்துக்கு களப்பலியானது முற்போக்கு சக்திகள் வரலாற்றைக் கைநழுவ விட்ட துரதிர்ஷ்ட நடைமுறையின் பேறு.
அவ்வாறேதான் மத உணர்வு பற்றிய தெளிவின்மை இன்று இந்தியாவில் இந்துத்துவப் பாசிசம் வளர இடமளிப்பதாக உள்ளது. வர்க்கப் போராட்டம் போன்று அல்லாமல் கருத்தியல் ஒடுக்குமுறைக்கு எதிரான பண்பாட்டுப் புரட்சி வடிவத்துக்கு முன்னுரிமை வழங்கியாக வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கான வரலாற்றியலின் சிறப்புப் பண்பு.
மதம் அடிப்படை வாத த்துக்கானது மட்டுமல்ல. ஏனைய மதங்களில் விடுதலை இறையியல் சாத்தியப்பட்டுள்ளதைப் போல இந்து விடுதலை நெறியை விவேகானந்தர் முதல் குன்றக்குடி அடிகளார் வரை பலர் எடுத்துக்காட்டி உள்ளனர் அல்லவா?
காந்தி முன்னிறுத்திய இராமராச்சியம் விடுதலைத் தேசியக் குரலுக்கு உரியதா இந்துத்துவ இராமராச்சியம் போன்றதா?
பாரதி ஆன்மீக நாத்திக இந்து மதம் ஒன்றை முன்னிறுத்திப் புதிய பண்பாட்டு இயக்கத்தை கட்டியெழுப்ப முனைந்தமையைக் கண்டுகொள்ளாது இருக்கப்போகிறோமா?
ஐரோப்பிய நிழலாக எமது வரலாற்றைப் பார்ப்பதில் இருந்து விடுபட்டு வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையில் எமது சாதியச் சமூகத்தையும் மதங்களையும் புரிந்துகொள்ள முற்பட வேண்டாமா?
இருவேறு
உலகத்து
இயற்கை
பிரித்தானியாவை அடைந்திருக்கும் இலங்கை ஜனாதிபதி மிகப்பெரும் ‘ஆத்ம’ பலத்தோடு இனி நாடு திரும்ப இயலும். எமது வீரப் புலிக்கொடிகள் அங்கே ‘எதிர்ப்பை’ வலுவாக காட்டி அதற்கான ஆசீர்வாத த்தை வழங்கியிருக்கிறார்கள்!
பலமான எதிர்ப்பைத்தானே காட்டினார்கள் அது எப்படி ஆசீர்வாதமாக இயலுமென எவரும் கேட்க மாட்டார்கள். ‘சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியாகினேன்’ என்றவர், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வயிற்றில் அடிப்பவராகி விட்டாரே என வாக்களித்த மக்களின் வலுவான எதிர்ப்பைச் சம்பாதித்து வருகிறார்; இந்நிலை உருவாகி ஓரிரு வாரங்கள் கூட இல்லை -
‘இந்த விலையேற்ற வெங்காய விவகாரங்களைக் கையாளவா நான் ஜனாதியாகினேன்; ஆற்ற வேண்டிய பணிகள் எவ்வளவு இருக்கின்றன?’ எனக் கேட்டவருக்கு, ‘ஓமோம், புலிக்கொடிகள் இலங்கை உள்ளேயும் வந்துவிடாமல் காவாந்து பண்ண அவரது மூளை உழைக்க வேண்டுந்தான்’ எனச் சிங்களப் பொது மனம் ஆறுதல் கொள்ள இந்த எதிர்ப்பு ‘போராட்டம்’ உதவியுள்ளது.
‘ஒரே தேசம், ஒரே சட்டம்’ என்பதை நிதர்சனமாக்குவதற்கு ஞானசார தேர ர் போன்ற ஒருவர் பொருத்தமானவரா என்ற சந்தேகத்துடன் இருந்த ஒரு சிங்களப் பொதுமகனுங்கூட இனி இத்தகைய நடைமுறைகளின்றி ஒரே தேசமாக்கும் கனவு பலிக்காது என எண்ண வைக்கப்பட்டிருப்பார்.
வல்லவன் வகுத்ததே சட்டம் என்று புலிகளால் மட்டுந்தான் இயங்க இயலுமா?
சிங்களப் பேரினவாதமும் ‘கெடுகுடி சொல் கேளாது’ என்று பட்டுத்தெளிய வேண்டாமா?
பேரினவெறிக்கூச்சல் மாகாண சபைத் தேர்தலை நடாத்தக்கூடாது என்று குரல் எழுப்புகிறது. இந்திய நிர்ப்பந்தத்தால் திணிக்கப்பட்ட அந்த அமைப்பைத் தொடர்வது என்பது எமது தேசத்தின் இறைமையைக் கைவிடுவது என்பதன் அடையாளமாக இருக்குமென அவர்கள் கருத்துரைக்கின்றனர்.
சரியாகத்தான் சொல்கிறார்கள்!
என்ன, இறைமையை ஏற்கனவே இந்தியாவிடம் தாரைவார்த்துக் கொடுத்தாயிற்று என்ற நிதர்சனத்தைப் புரிந்துகொள்ளாத வாய்ச்சவடால் (பல பேரினவெறியர்கள் அதனை விளங்கி இருந்தாலும் வெளிவேசத்துக்குப் பேசும் வெற்றாரவாரமாகவே கொக்கரிக்கின்றனர்).
இலங்கையின் ஆட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இங்குள்ள பெரும்பான்மை மட்டுமே தீர்மானிப்பதான ‘இறைமை’ என்பது வெறும் தோற்ற மயக்கமே!
இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்குவதை வெளியே தெரியாமலே இந்தியாவால் செயற்படுத்த இயலுமாக இருக்கின்றது; இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பிராமணியப் பண்பாட்டு ‘ஏகாதிபத்திய’ மேலாதிக்க வாய்ப்புக் கற்றுத்தந்த இராஜதந்திரம் அது!
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏனைய நாடுகளது ஆட்சி முறைமையில் மூக்கை நுழைத்து அம்பலப்பட்டு நிற்பதைப்போல இந்திய நடைமுறை இல்லை.
இலங்கையின் குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிப்பது அமெரிக்காவும் இந்தியாவும் மட்டுமல்ல; சீனாவும் எதிர்க்கப்பட வேண்டிய வெளிச்சக்திதான் என அந்த இரு மேலாதிக்க நாடுகளோடு சீனாவையும் இணைத்துச் சொல்கிற பரப்புரைகளை ஊடகங்கள் வலுவாக முன்னெடுக்கின்றன!
சீனாவை ‘அம்பலப்படுத்தும்’ புனிதப் பணியையே ஊடகங்கள் அதிகமாக முன்னெடுக்கின்றன என்பதே உண்மை. ஒப்புக்கு - வெளிவெளியாகத் தெரியும் உண்மைகளை மறைக்க இயலாது என்பதால் - இரு மேலாதிக்கங்களின் சிற்சில நடத்தைகளைச் சொன்னாலும் சீனவை ‘அம்பலப்படுத்தும்’ கண்டுபிடிப்புகளை அதிகமாகவே ஊடகங்கள் முன்வைக்கின்றன.
எந்தவொரு நாட்டின் ஆட்சி முறைமையிலும் தலையிடுவதில்லை, எந்த நாட்டின் மீதும் மேலாதிக்கம் புரிவதில்லை என்ற கொள்கை-நடைமுறைகளை மாஓ சேதுங் காலம் முதல் இன்றுவரை மக்கள் சீனம் உறுதியாகப் பின்பற்றி வருகிறது. இன்று பொருளாதார வளர்ச்சியில் அதிக முன்னேற்றத்தை எட்டியுள்ள நிலையில் மூன்றாமுலக நாடுகள் சுய பொருளாதார விருத்தியை எட்ட உதவும் வகையில் வர்த்தக உறவுகளை மக்கள் சீனம் வலுப்படுத்தி வருகிறது.
அந்த உறவு மேலாதிக்க நாடுகளுடனான வணிகத் தொடர்பாடல்களைவிட உகந்ததாக இருக்கும் காரணத்தாலேயே வறிய நாடுகள் சீன நட்பைக் கூடுதலாக விரும்புகின்றன.
விஞ்ஞான-தொழில் நுட்ப அறிவைத் திருடுவதாக ஏகாதிபத்திய நாடுகள்வாத இயக்கங்கள் அந்த முழுச் சமூக சக்திகளது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கட்டும், அதன் பின்னர் வர்க்கப் போராட்டத்தைக் கையேற்று ஒரு வழிப்படுத்துகிறோம் என்ற புத்தகவாத (வர்க்கவாத) மார்க்சியர்களே அதிகம் விமரிசிக்கப்பட வேண்டியவர்கள்!
அம்பேத்கரியம், பெரியாரிம் என்பன ஒன்றுபட்டுப் போராட வேண்டிய மக்கள் சக்தியைப் பிளவுபடுத்தும் தவறுகளுக்கு உரியன என்ற உண்மையும் வெளிப்படுத்தப்படும் அவசியம் உள்ளது; மார்க்சியர்கள் இயங்கத் தவறிய களங்களை அவர்கள் கையேற்று அத்தவறுகளுடன் செயற்படுகின்றனர் என்ற நிதர்சனத்தையும் கருத்தில் இருத்த வேண்டியுள்ளது!
பல தவறுகளுடன் இயங்குகிற ஏனைய சிந்தனைப்பள்ளிகளை அம்பலப்படுத்த அதிகம் மினைக்கிட வேண்டியதில்லை. அவர்களது தவறுகளுடன் கலந்துவிடாமல் ( அவர்களில் கரைந்துவிடாமல்) அவர்களுடன் ஒன்றுபட்டு இயங்க அவசியம் நிலவுகிற காலகட்டம் இது!
வரலாற்று - பொருள் முதல் வாத - இயங்கியல் கண்ணோட்டத்தில் விடுதலைத் தேசியச் சிந்தனை முறைக்கு உரிய மார்க்சியத்தை வரித்துக்கொண்டு இயங்க முன் வராமல் இருக்கும் நாம், எங்களைக் கடும் சுய விமரிசனத்துக்கு உள்ளாக்காது இருப்பது மாபெரும் வரலாற்றுத் தவறு!
வலுவான சிந்தனை ஆயுத த்தைத் துருப்பிடித்துப்போக விடும் இன்றைய மார்க்சியர்கள் வரலாற்றால் மன்னிக்கப்பட இயலாத பெருங்குற்றத்தை இழைக்கிறோம்!
ஆயினும்,
மார்க்சியம் தவறிப்போகாது!
புதிய வீச்சுடன் விடுதலை சக்திகள் சரியான மார்க்சிய வழித்தடத்தைக் கண்டடைவர்!
Subscribe to:
Posts (Atom)




