Wednesday, October 23, 2024
‘ஜெய் பீம்’
நம்பிக்கைக்
குறிகாட்டி
இன்றைய அரசியல்-பண்பாட்டுச் சூழல் சமூக மாற்றத்தை நாடும் பலரிடமும் துயர் தரும் சம்பவங்கள் நிறைந்துள்ள காரணத்தால் அவநம்பிக்கைகளை வளர்ப்பதாயே உள்ளது.
என்னுடைய நேற்றைய பதிவில் மார்க்சியர்கள் சரியான கருத்தியலை அடையாமல் இருப்பதனால் இத்தகைய அவல நிலை நீடிக்கிற துயர்மிகு சூழல் உடனடியாக மாறப்போவதில்லை என்ற அவநம்பிக்கைக் குரல் இருந்தது.
‘ஜெய் பீம்’ படம்பற்றி கருத்துரைத்த பலர் வர்க்கவாத அடிப்படைகளைக் கடக்காமலே அதனைப் பாராட்டியதும் என் கருத்து வெளிப்பாட்டுக்கான காரணம்.
அவர்களும் மாறுவர், மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தும் போராட்ட விழிப்புணர்வுகள் வளர்ந்தபடி உள்ளன என்ற நம்பிக்கையை ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, சந்துரு அவர்களது நேர்காணல்கள் இது தொடர்பில் பலமான நம்பிக்கையை விதைப்பன!
தொண்ணூறாம் ஆண்டுகளின் பழங்குடி மக்கள் மீதான அரச இயந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் ஒன்றிணைந்த மூன்று சக்திகளை அவர் அடையாளப்படுத்தினார்.
அடக்குமுறைக்கு எதிரான விட்டுக்கொடுக்காத போராட்டங்களை அந்த மக்கள் தொடுத்தனர். அந்தப் பலத்தோடு பாதிக்கப்பட்ட பெண் ஆளுமைகள் எந்தவொரு மாயைகளுக்கும் ஆட்படாமல் இறுதிவரை மிகப்பலமான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்,
மார்க்சிய அணியின் வெகுஜன அமைப்புகள் அந்தப்போராட்டங்களை நாடுபரந்த இயக்கமயப்படுத்தியமை,
நிர்வாக ரீதியிலும், உயர்சாதி-அதிகார மட்டங்கள் சார்ந்தும் இருக்கக்கூடிய நல்லெண்ணங்கொண்ட ஜனநாயக சக்திகளது பங்களிப்புகளை உரிய வகையில் கையாண்டமை,
- என்கிற அம்சங்கள் கவனிப்புக்கு உரியன.
வெகுஜன அமைப்புகள் கவனங்குவிக்காத வேறுபல இடங்களது கொடுமைகளையும் சந்துரு குறிப்பிடத்தவறவில்லை.
தோழர்கள் கோவிந்தன் - கல்யாணி போன்றோரும் அறிவொளி இயக்கமும் முன்கையெடுத்த களங்கள் இத்தகைய ஆரோக்கியமான விளைச்சல்.
தஞ்சை சாணிப்பால், சவுக்கடிக் கொடுமைகளுக்கு எதிரான மார்க்சிய அணியின் போராட்டத்தில் தோழர் சீனிவாசராவ் அவர்களது பங்கேற்பு முக்கியத்துவம் உடையது. அவர்போல தனிப்பட்ட தோழர்களது அக்கறையாகவே ஒடுக்கப்பட்ட சாதியினர், பழங்குடி மக்கள் ஆகியோரது பிரச்சினைகள் மார்க்சியர்களது கவனத்துக்கு வந்திருக்கின்றன என்பதாக சவுத் விஷன் பாலாஜி போன்ற தோழர்கள் முன்வைக்கின்ற விமரிசனங்கள் கவனிப்புக்கு உரியன!
இத்தகைய ஆரோக்கியமான சூழல் மார்க்சிய அணி இக்களங்களுக்கான கோட்பாட்டு முடிவை வெளிப்படுத்த உதவுமென நம்புவோம்!
தனிப்பட்ட ஆர்வத்துடன் இயக்கத் தோழர்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்கு அமைப்பு உறுதியான ஆதரவை வழங்கி அவற்றை வெற்றிபெற வைத்திருக்கின்றது.
கோட்பாட்டு ரீதியாக அமைப்பே முழுச் சமூக சக்திகளுக்கான அத்தகைய போராட்டங்களுக்கு அறைகூவுமெனில் நாம் வரலாறு படைக்கும் தொடக்கத்தை அடைந்துவிட்டோம் என்று பொருளாகும்!
ஜெய் பீம்
அனைவர்
கவனத்துக்கும்
கொண்டுவரப்படுவதற்கு
வேண்டிய அனைத்தையும்
முன்னெடுப்போம்!
யாழ்ப்பாண மனோபாவம்
யாழ் மேலாதிக்கம்
ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம்
அண்மையில் யோகன் கண்ணமுத்து (அசோக்) வழங்கிய பெறுமதிமிக்க நேர்காணல் ஒன்று தொடர்ச்சியாக முகநூலில் பதிவாகி வருகிறது. ஈழத் தமிழ் இனத்தேசிய வரலாற்று நெருக்கடிகளை உணர்ந்தறிய உதவும் பல தகவல்கள் இதன்வழி வெளிப்பட்டு இருப்பது வரவேற்புக்கு உரியது. தனது அனுபவங்கள் ஊடாக அவர் ஈழப் போராட்ட வரலாற்றை வெளிப்படுத்துகிறார்; சம்பத்தப்பட்ட ஏனைய ஆளுமைகள் தமது நோக்கு நிலைகளை - மாற்றுக் கருத்துகளை - வெளியிடுவது வாயிலாக ஆரோக்கியமான வரலாற்றுப் பதிவு சாத்திமாகும். அதனூடாக மெய் வரலாறு ஒன்று கண்டறியப்பட வாய்ப்புள்ளது.
அவர் இயங்கிய PLOTE அமைப்பில் ஏற்பட்ட தவறுகளில் அதிகார மட்டத்தில் இருந்த யாழ்ப்பாண தோழர்களது பங்கு அதிகம் இருந்தது; ‘இவை யாழ்ப்பாண மனோபாவ வெளிப்பாடுகளா?’ எனக் கேட்கப்பட்ட பொழுது ‘மத்தியதர வர்க்கக் குணாம்ச வெளிப்பாடு’ என்பதாக அசோக் பதிலிறுத்துள்ளார்.
அவர் கிழக்கு மாகாணத்தின் களுவாஞ்சிக்குடியில் பிறந்து வளர்ந்தவர்; விடுதலை பெறும் தமிழீழம் சாதி, மத, பிரதேச வேறுபாடுகளற்ற சமத்துவ சமூக அமைப்பை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக உழைத்தவர். இன்று கிழக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண எதிர்ப்பு உணர்வுடன் கூடிய பிரதேசவாதம் வளர்வதைக் கண்டு விசனப்பட்ட நிலையில் ‘யாழ்ப்பாண மனோபாவம்’ அல்ல இயக்கத் தலைமையில் இருந்த மத்தியதர வர்க்கக் குணாம்சமே தவறுகளுக்குக் காரணம் என்கிறார்.
இன்றைய கிழக்குத் தலைமையைப் பெற முனைபவர்களில் பெரும்பாலோர் ‘ஒத்தோடிகளாக’ இருந்து (சிங்களப் பேரினவாதக் கைக்கூலிகளாகச் செயற்பட்டு) ஆதாயம்பெறவே ‘யாழ் எதிர்ப்பை’ முன்னிறுத்துகின்றனர் என்பது அவர் கருத்து. அதனை மறுக்க இயலாத வகையில் சிலரது நடைமுறைகள் உள்ளன.
யாழ்ப்பாண மேலாதிக்கம் கிழக்கின் முன்னேற்றத்தில் தடைகளை இடுகின்றன என்ற குற்றச்சாட்டுத் தவறானதல்ல. யாழ் மேலாதிக்க உணர்வுடன் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையே அதன் தோல்விக்குக் காரணம் என்பதனை மறுதலிக்க இயலாது; யாழ் குடாவுக்கு அப்பால் ஏனைய பிரதேசங்கள் குறித்த அக்கறை தமிழீழத் தேசியம் பேசும் பலரிடம் இல்லை என்பது உண்மை!
அசோக் ஏற்க மறுக்கும் பார்வையைக் கொண்டிருக்கும் கற்சுறா யாழ் மேலாதிக்க எதிர்ப்புடன் எழுதிய கவிதைகள் (அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு), கட்டுரைகள் அடங்கிய “DISCONNECT” என்ற தொகுப்பு நூலை இப்போது படித்துக்கொண்டு இருக்கிறேன். கற்சுறா ஒடுக்குமுறைகளுக்கு எதிரான விடுதலைத் தேசிய உணர்வுடன் வெளிப்படுத்தும் யாழ்ப்பாண எதிர்ப்புணர்வு எவ்வகையிலும் பிரதேசவாதமோ ஒத்தோடிக் குணாம்சமோ அல்ல (அந்த தூல் குறித்த விமரிசனத்தைப் பின்னர் எழுதுவேன்).
‘யாழ்ப்பாணச் சமூகத்தை எப்படிப் புரிந்துகொள்வது? வீரஞ்செறிந்த ஈழப் போராட்டத்தை ‘தலைமையேற்று நடாத்திய’ ஆளுமைகளைத் தந்ததாகவா, மேலாதிக்கச் சாதிவெறி பீடித்த ஒன்றாகவா?’ என்ற கேள்வி பலரால் எழுப்பப்படுகின்ற சூழல் புறக்கணிப்புக்கு உரியதல்ல!
சாதியாதிக்க மனோபாவத்துக்கு இடங்கொடுத்து தலைமை தோல்வியைத் தழுவியதும் மெய்; விட்டுக்கொடுப்பற்ற போர்க்குணம் அங்கு உள்ளது என்பதும் மெய்!
குறிப்பாக சாதியத்துக்கு எதிராக ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கத்தைத் தந்து வரலாற்றியலுக்கான மகத்தான பங்களிப்பை நல்கியதும் இதே யாழ் மண் என்பதைக் கவனங்கொள்வது அவசியம்!
விடுதலைத் தேசிய நாட்டமற்ற
தேசியவாதம்
மேலாதிக்கத்துடன் உறவாடும்
இனத்தேசிய எழுச்சி, சாதிய மோதல்கள் என்பன முனைப்புற்ற எண்பதாம் ஆண்டுகளில் பின்நவீனத்துவம் பேசுபொருள் ஆகியிருந்தது. மார்க்சியம் அதுவரை முன்னெடுத்த அரசியல் செயற்பாடுகளுக்கு மாறான பாதை அவசியப்பட்ட போது மேலைத்தேச மார்க்சிய சிந்தனையாளர்கள் சிலர் பின்நவீனத்துவத்தை முன்வைத்தனர்.
அதுவரையான வர்க்க அரசியல் முன்னெடுப்பின் வகைப்பட்டதாக தேசிய, சாதிய மோதல்கள் இருக்கவில்லை. மாற்றுச் சிந்தனையாக அவர்கள் முன்வைத்த பெருங்கதையாடலைக் கைவிட்ட சிறுகதையாடல்கள் எனும் கருத்துநிலை சமூக மாற்றத்தை வேண்டி நிற்பதாக அன்றி நட்பு முரண்களையும் பகையாக்கி இரத்தக்களரி மோதல்களை வளர்ப்பதாகவே அமைந்தது.
இனிமேல் குழு மோதல்களே வரலாறெனச் சொன்ன தமிழ் பின்நவீனத்துவர்களும் இரண்டு மூன்று தசாப்தங்களின் பின்னர் தேசியவாதம், சாதியவாதம் என்பன தீர்வுக்கு வழியாகாது எனக்கூறி, மீண்டும் வர்க்கப் போராட்டமே கையேற்கப்பட ஏற்றது என்றனர். அது பின்நவீனத்துவக் குழு மோதல்களுக்கு உரிய மற்றொரு வடிவமான ‘வர்க்கவாதம்’ - மார்க்சியத்தை வர்க்கவாதமாக ஒடுக்க இயலாது!
மக்களே வரலாற்றைப் படைப்பவர்கள்; அவ்வகையில் படைப்பாக்கம் பெறும் இயக்கச் செல்நெறி ஊடாகவே அதற்கான மார்க்கமும் வெளிக்கிளம்பும். முழுச் சமூக சக்திக்கான வரலாற்றியல் வர்க்க இயங்கு முறையினின்றும் வேறுபட்ட ஒன்று!
வர்க்கப் போராட்டம் முனைப்புடன் களமாடிக் கொதிநிலையில் இருந்த பொழுது மார்க்சியம் பிறந்தது. அதன் இறுதிநிலையில் வர்க்க இயங்காற்றலுக்கு அப்பால் ஒடுக்கப்பட்ட தேசங்கள் எனும் முழுச் சமூக சக்தி வரலாறு படைக்கும் மாற்றப் போக்குக்கான சந்தியில் லெனினிசம் வெளிப்பட்டது.
அதன் பின்னர் வர்க்க அரசியல் செயலொழுங்கு முனைப்பாக இருந்த, (ஏகாதிபத்தியச் செயலொழுங்கில் இருக்கும்) மேலை நாடுகள் வரலாறு படைக்கும் ஆற்றலை இழந்தன. அந்த நாடுகளின் சிந்தனையாளர்கள் எவ்வளவு மேதைமையுடன் மாற்றுகளைத் தேடினும் புதிய வரலாற்றுக் கட்டத்துக்கான மார்க்கத்தை வகுக்க இயலாத பலவீனங்களுக்கு உரியோரே; பின்நவீனத்துவம் கவைக்குதவாத சரக்காக இருப்பது அவர்களது குற்றமல்ல.
முழுச் சமூக சக்தியாக வரலாற்று இயக்கம் எமக்கான சாதி வாழ்முறையில் நீண்டகாலமாக இருந்து வருகிறது; ஏற்றத்தாழ்வு வாழ்முறையின் ஆரம்பம் வர்க்க வேறுபாட்டுக்கு உரியதாக அன்றி, தொடக்கம் முதலாக சாதிச் சமூக நியதியாக ஏற்பட்டு அதற்கே உரிய பிரத்தியேகச் செல்நெறியுடன் இயங்கி வந்துள்ளது.
சாதி என்பதைத் தமிழக வரலாற்றுத் தொடக்கமே தெளிவுறுத்துகிறது; திணை மேலாதிக்கம் சாதியை உள்வாங்கியதற்கான அவசியம் என்ன? மேலாதிக்க ஒடுக்குமுறை வாயிலாகச் சுரண்டலை மேற்கொள்ள வேண்டும் என்பதல்லாமல் வேறென்ன?
அங்கே வர்க்க முறைமை ஏற்படுத்திய வாய்ப்பை இங்கே சாதி அமைப்பு வழங்கி உள்ளது. முழுச் சமூக சக்திகளுக்கான வாழ்வியல் தொடக்கத்தைக் காட்டியதோடு மட்டுமன்றி, அத்தகைய சமூகத்தின் அமைப்பு மாற்றங்கள் வர்க்கப் போராட்டம் வாயிலாக அன்றி வேறொரு வடிவத்துக்கு உரியது என்பதையும் தமிழகமே தெளிவுறுத்தி இருந்தது.
வர்க்கப் போராட்டச் சிந்தனையாக அல்லாமல் மாஓ சேதுங் சிந்தனைப் பிரயோகத்தில் சாதி அமைப்புக்கு எதிரான ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கத்தை வெளிப்படுத்திய இலங்கை மண்ணே நவீன வரலாற்றில் திணை அரசியல் (முழுச் சமூக சக்திக்கான) செயலொழுங்கைத் துலக்கமாக காட்டி நின்றது.
அதன் ஒளியில் மாஓ சேதுங் சிந்தனையை வர்க்க அரசியல் நீடிப்பாக அன்றி ‘விடுதலைத் தேசியச் சிந்தனை முறை’ என இனங்காண அவசியம் உள்ளதைக் காண்கிறோம்.
தேசியப் பிரச்சினை வர்க்கச் சிந்தனை முறையினின்றும் வேறுபட்டது. அதற்காக மார்க்சியத் தொடர்ச்சி அற்றதல்ல (அதனைப் புரிந்துகொள்ளாத ‘மார்க்சியப் பின்நவீனத்துவர்கள்’ இடறுகின்றனர்).
முதலாளித்துவ நிலைப்பட்ட தேசிய விடுதலை அரைக்கிணறு தாண்டிய நிலை; இந்தியா போல மேலாதிக்கத் தேசமாக, இலங்கையைப் போல மேலாதிக்க நாடுகளுக்கு கட்டுப்பட்டு (அதனை மறைக்க உள்ளே சிறு தேசிய இனங்களின் மீது பேரினவாத மேலாதிக்கத்தை ஏவுவதாக) இருக்க வேண்டும்.
பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை மேற்கொள்ளும் விடுதலைத் தேசியச் சிந்தனை வழிகாட்டலுடன் இயங்கும் தேசம் சோசலிசத்தை வெற்றிகொண்டு அனைத்து வடிவங்களிலுமான மேலாதிக்கங்களையும் தகர்த்துத் தேசங்கள் இடையே சமத்துவத்தை நிலைநாட்ட உழைக்கும்.
மாஓ சேதுங் சிந்தனைக்கு உரிய மக்கள் சீனம் அதற்கான எடுத்துக்காட்டு.
பின்நவீனத்துவம் போன்ற முயற்சிகளைக் கற்பதில் தவறில்லை; ‘முன்னேறிய’ மேலைச் சிந்தனை முறை மட்டுமே எமக்கான அனைத்துத் தீர்வையும் காட்டவல்லது என்ற அடிமைப்புத்தியைக் கைவிடுவோம்!
முழுச் சமூக சக்தியெனும் வேறு வடிவ வரலாற்று இயங்கு முறைக்கு உரிய எமது நாடுகளும் ‘மிகமுன்னேறிய’ வளர்ச்சி நிலைகளுடன் ‘கோலோச்சிய’ காலங்கள் இருந்தன!
கீழது மேலாய்,
மேலது கீழாய்
சுழன்றடிக்கும்
வரலாற்றோட்டம்… !
கீழைக்காற்று மேலைக்காற்றை
மேவிப் பாயும்
காலம் இது!
நாமும்
நமக்கென்றோர்
நலியாக் கலையுடையோம்!!
அடம்பன் கொடி போல
ஒன்றுபட்டுத்திரளத்
தடை என்ன?
கடந்த 6 ம் திகதி பேராசிரியர் கைலாசபதி நினைவு கூரப்படும் மெய் நிகர் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. உரையாளர்கள் பல்கலைக்கழக எல்லைக்குள் வைத்தே அவரை அணுகினர்.
கட்சிப் பத்திரிகையான தேசாபிமானி முதல் செம்பதாகை வரை அவரது எழுத்து வியாபித்திருந்தது குறித்துக் கலந்துரையாடலின் பொழுது சுட்டிக்காட்டப்பட்ட கருத்தை உரையாளர்கள் மறுக்கவில்லை.
சமூக மாற்றத்தின் வாயிலாகச் சமத்துவ சமூகம் படைக்கப்படுவதற்குத் தம்மை அர்ப்பணிக்கத் தவறுகிற கலை-இலக்கியச் செயற்பாட்டாளர்களது ஆக்கம் தலைசிறந்ததான இடத்தை எட்ட இயலாது என்ற கருத்தை உடையவர் க.கை.!
புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் கட்சியுடனும் அந்தக் கட்சியைச் சாராதவராயினும், சமூக மாற்றத்துக்காக உழைக்கும் அக்கறை உடையவராக உள்ள படைப்பாளிகளுடனும் நெருக்கமான உறவைப் பேணியவர் க.கை. !
பல்கலைக்கழகத்துக்கு வெளியே சமூக மாற்றக் களத்தில் செயற்பட்ட பலரை வளர்த்தெடுக்க அவரால் இயலுமானதாக இருந்தது; அதற்கான அடிப்படை அவருக்கு மார்க்சியத்தில் மட்டுமன்றி அதனை முன்னிறுத்தி இயங்கும் கட்சியுடனும் அவருக்கு இருந்த ஊடாட்டமே!
இவ்விவகாரம் பேசுபொருளான பொழுது உரையாளர் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட கருத்தொன்று கவனிக்கத்தக்கதாக இருந்தது. இப்போதும் கைலாசின் அடியைப் பின்பற்றும் பேராசிரியர்கள் இருக்கவே செய்கின்றனர்; கட்சித் தொடர்புதான் இல்லாது போயுள்ளது என்பதே அக்கருத்து!
இவ்வகையில் ஏற்பட்ட இடைவெளிக்கு கல்வியாளர்களை மட்டும் குற்றம் சொல்ல இயலுமா?
கட்சி அணி சுய விமரிசனத்தை மேற்கொள்ள இடமில்லையா?
சரியான கோட்பாட்டை முன்னிறுத்தி வெகுஜனப் பங்கேற்புக்குத் தலைமை தாங்கும் ஆற்றலைக் கட்சி இழந்து நிற்பதோடு தொடர்புபட்ட விவகாரம் அல்லவா இது?
விவாதிப்போம், சரியான மார்க்கத்தைக் கண்டு தெளிய முயற்சிப்போம்!
(படக்குறிப்பு: புத்தர் ஞானம்பெற்ற அரச மரக் கிளையுடன் சங்கமித்திரை இலங்கை வந்தடைந்து தரையிறங்கிய தளம் சம்பில் துறை - ஜம்புகோளப் பட்டினம்; அதற்கான விகாரை அமைந்த இடத்திற்கு பக்கத்தில் எமது மயானம். நேற்று சத்தியன் அங்கு அக்கினியில் சங்கமித்த பொழுது கடற்கரைச் சூழலில் இருந்த அடம்பன் கொடி பூத்துக்குலுங்கி வாழ்வின் அர்த்தங்களை உள் மன விசாரணைக்குத் தூண்டியிருந்தது. தொலைபேசிக் கமரா உள்வாங்கிய அந்தப் படத்துடன் கைலாஸ் தன்னைப்பற்றியும் எழுத த்தூண்டியதன் பேரில் இப்பதிவு!)
எல்லாம்
எப்பவோ
முடிந்ததோ?
கே.ஏ. சுப்பிரமணியம் நூலகத்தை பார்வை இட்டு வந்த இளம் செயற்பாட்டாளரான நண்பர் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்டார்.
‘மணியம் தோழர் பங்கெடுத்த போராட்டங்கள், நிகழ்வுகளின் படங்கள் இங்கே இருப்பதைப் பார்க்கிற போது இவ்வளவு காத்திரமான செயற்பாடுகளால் வளர்ந்திருந்த மார்க்சிய அணி பின்னர் ஏன் தளர்ந்து பின்னடைவுக்கு உள்ளானது என்ற கேள்விதான் எனக்குள் எழுகிறது’ என்றார்.
படங்களில் ஒன்று, தோழர்கள் பீற்றர்கெனமன், சரத் முத்தெட்டுவேகம ஆகியோருடன் மணியம் தோழர் கலந்துகொண்ட (பதுளையில் இடம்பெற்ற ஊர்வலம் ஒன்றின் போது) தோளோடு தோள் சேர்த்துப் போராடிய கணத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஒன்றுபட்டுப் போராடிய கால வளர்ச்சி, 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட கட்சிப் பிளவுக்குப் பின் பாராளுமன்றப் பாதையை முன்னெடுத்த அந்தத் தோழர்கள் பாராளுமன்றப் பாதையின் போது ஏற்பட்ட தவறுகளால் பின்னடைவுக்கு உள்ளான பொழுதிலும் தம்மளவில் இனவாதமற்ற மானுட நேசிப்பைக் கொண்டிருந்தனர் என்பது பற்றிப் பேசினோம்.
வெகு மக்கள் போராட்டப் பாதையே சமத்துவத்தை வென்றெடுக்க ஏற்ற ஒரே மார்க்கம் என்று மாஓ சேதுங் சிந்தனையைக் கையேற்ற புரட்சிகர அணி மாற்றுக் களத்தைத் தேர்வு செய்திருந்தது; வீறுமிக்க தொழிலாளர்-விவசாயிகள்-ஏனைய உழைப்பாளர் போராட்டங்களை அந்த அணி முன்னெடுத்திருந்தது; அக்காரணத்தால் தோழர் சண்முகதாசன் தலைமையிலான தொழிற்சங்க சம்மேளனத்திலேயே மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அணிதிரண்டு இருந்தனர்.
யாழ்ப்பாணத்தின் சாதியத்துக்கு எதிரான போராட்டங்களையும் அந்தப் புரட்சிகர அணி முன்னெடுத்தது. தெற்கில் அந்த அணி இன்று பலத்துடன் இல்லை; வர்க்கப் போராட்ட அரசியல் பின்னடைந்து முழுச் சமூக சக்திகளது (திணை அரசியல்) செயல் வேகச் சூறாவளியில் தெற்கை மார்க்சிய அணி கைதவறிப்போகவிட்டு இருந்தது. சிங்களத் தேசியவாத நோய்ப் பீடிப்புடன் உள்ள ஜேவிபி அந்தக் களத்தைக் கபளீகரம் செய்தது.
திணை அரசியலுக்குரிய சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த காரணத்தால் வடக்கில் மார்க்சிய அணி இன்னமும் வலுவுடன் இருக்கிறது. ஆயினும், தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைக் கையேற்கத் தவறியமையால் புது வரலாறு படைக்கும் ஆற்றல் கைநழுவிப் போயுள்ளது.
தேசியத்தை போர்க்குணமிக்க விடுதலைத் தேசிய உணர்வுடன் முன்னெடுக்கத் தவறியமை பற்றிய சுய விமரிசனம் உள்ள பொழுதிலும் அதற்கான களச் செயற்பாடுகளில் மேலாதிக்கத் தமிழ் தேசிய இனவாதிகளை எதிர்த்து முறியடிக்கும் வேலைப் பாணி குறித்த தெளிவு எட்டப்படவில்லை.
வர்க்க அரசியலுக்கு அப்பால் திணை அரசியலுக்கான கோட்பாட்டுத் தெளிவு எட்டப்படவில்லை என்றால் ஜேவிபி யின் இனவாத த் தவறை எப்படி விமரிசிக்க இயலும்?
ஏற்கனவே சரியாக அனைத்தும் சொல்லப்பட்டுள்ளது எனப் புத்தகங்களை மட்டும் புரட்டிப் பார்த்துத் தீர்வுகளைக் கண்டடைய இயலுமா?
‘எல்லாம் எப்பவோ முடிந்த கதை’ என்ற மத வாதிகள் போல இருப்போமா?
புதிய களம்,
புதிய பல பிரச்சினைகள்,
மாறுபடு சூரத்தனங்களுடன் காப்பிரேட் ஏகாதிபத்தியம்,
மக்கள் மனங்களைச் சிப்பிலியாட்டும் ஊடக குறுக்கறுப்புகள்,
இத்தகைய சவால்களை முகங்கண்டு
புத்தம்புதிய -
இன்றும் புதிதாய் பிறக்கும்
ஆற்றல் படைத்த
மார்க்சியக் கோட்பாடான
விடுதலைத் தேசிய மார்க்சியச் சிந்தனை முறைமையைக் கையேற்று,
வளர்த்தெடுப்போம்!
வர்க்கச் சிந்தனை
நீடிப்பாக
விடுதலைத் தேசியச் சிந்தனை
முன்னெடுப்பு
இன்றைய நிதர்சனத்தின் தேவை
‘பிற்போக்குத் தேசியத்தை நிராகரித்து முற்போக்குத் தேசியத்தைக் கையேற்க வேண்டும்’ என்ற கருத்தைச் சொன்ன தோழரிடம் அப்படியான பார்வை ‘பழைமை வாத வகைப்பட்டது’ எனச் சொல்ல வேண்டியிருந்தது.
வர்க்க மோதல்களே வரலாற்றை முன்னகர்த்தும் இயக்கு விசை என்ற நிலைப்பாட்டுக்கு உரியது அந்தக் கருத்து. முழுச் சமூக சக்திகள் இடையேயான மோதல்கள் வேறொரு வரலாற்று இயக்கம் எனும் மார்க்சியத்தின் வளர்ச்சி நிலையை வந்தடைந்து,
தமக்கான சிந்தனை முறையாக அதனை வரித்துக்கொள்ளத்தக்க இயங்குநிலை மார்க்சியரென ஆகும் போது,
புதிய ஒளியுடன் தேசியப் பிரச்சினையை அணுக இயலும்.
மார்க்சியம் மீண்டும் சமூகத்தளத்தில் தீர்மானிக்கும் தலைமைச் சக்தியாக ஆவதற்கு இந்த விருத்திபெற்ற பார்வை அவசியமானது.
வர்க்கச் சிந்தனைக்கு அப்பால் வேறொரு முறைமையைச் சொல்வது மார்க்சிய விரோதமாக மாட்டாதா?
தனியொரு தேசத்தில் சோசலிசத்தை வென்றெடுப்பது சாத்தியம் என லெனின் சொன்ன பொழுது ட்ரொட்ஸ்கியால் அதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. உலகப் புரட்சி பற்றியே அவரது நம்பிக்கையும் அக்கறைகளும் இருந்தன.
சோவியத் சோசலிச விருத்தியை விடவும் உலகப் புரட்சிக்கான வேலையைப் பிரதானப்படுத்திய போது சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியுடன் முரண்பட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு ஆளானார்.
அவருடைய அந்தப் பார்வை தவறென்ற போதிலும் அவரை வெளியேற்றாமல் தொடர்ந்தும் ஐக்கியமும் போராட்டமும் என்ற நடைமுறையை அவர் பொருட்டு மேற்கொண்டிருக்க வேண்டும்.
மார்க்சியத்தை மாறாநிலைக்கு உரிய வறட்டுவாதமாக்கும் ட்ரொட்ஸ்கியிசம் மீதான விமரிசனத்தை (உட்கட்சிப் போராட்டத்தை) நடாத்தியவாறே அவரைக் கட்சியில் இயங்க அனுமதித்திருக்க இயலும்.
லெனினிடம் அத்தகைய நடைமுறை இருந்தது. ட்ரொட்ஸ்கியின் கருத்தை நிராகரித்து, வென்றெடுக்கப்பட்ட சோவியத் சோசலிசத்தைத் தனித்தே விருத்தி செய்ய இயலுமென்ற கருத்தில் லெனின் உறுதியாக இருந்தார்.
அதேவேளை மேற்கு ஐரோப்பாவில் சோசலிசப் புரட்சி வெடிக்கும் என்ற நம்பிக்கயையும் லெனின் கொண்டிருந்தார்; அவ்வாறு ஏற்பட்டு மேற்கு ஐரோப்பா சோசலிச முன்னெடுப்பை மேற்கொள்ளும் பொழுது சோவியத் புரட்சியின் முக்கியத்துவம் இதே வீச்சுக்கு உரிய கவனத்தைப் பெறாமல் போகும் என்றும் அவர் சொல்லியிருந்தார்.
ஆயினும் வர்க்கப் புரட்சி வாயிலாக சோசலிசம் வெற்றிகொள்ளப்படுவதற்கு மாறாக, லெனின் எதிர்வு கூறிய மற்றொரு மார்க்கமான விடுதலைத் தேசியங்கள் சோசலிசத்தை நிதர்சனமாக்கும் வரலாற்று இயங்கு முறையே பின்னர் முன்னிலைக்கு வந்தது!
அவ்வாறு தேசியத்தின் பாத்திரத்தை ஏற்பதற்காக ‘தரகு முதலாளித்துவப் பிற்போக்குத் தேசியம்’ , தேசிய முதலாளித்துவத்தின் ‘முற்போக்குத் தேசியம்’ என்ற கணிப்புகளைக் கைவிட வேண்டுமா?
இந்தக் கேள்வி தேசியம் குறித்த தவறான ஒரு எடுகோளில் இருந்து மேலெழுவது!
முதலாளித்துவம் வரலாற்று அரங்குக்கு வந்த பின்னர் எழுச்சியடைந்த அரசியல்-சமூக வடிவந்தான் தேசியம்; அதற்காக முதலாளி வர்க்கத்துக்கு மட்டுமே தேசிய நாட்டம் இருக்கும் என்றில்லை. தனியொரு தேசத்தில் சோசலிசம் சாத்தியமாகிவிட்ட பின்னர் பாட்டாளி வர்க்கத் தேசியம் கூட வரலாற்று அரங்கில் தோற்றம்பெற்று இருந்தது.
சோவியத் பாட்டாளி வர்க்கத் தலைமை அணியாகிய கொம்யூனிஸ்ட் கட்சி வரலாற்று மாற்றப்போக்கைக் கவனங்கொள்ளத் தவறியமையால் மேலாதிக்கவாத நாட்டத்துக்கும் ஆட்பட்டுத் தனது வீழ்ச்சிக்கு அடிகோலி இருந்ததென்பதை மறந்துவிட இயலாது.
இன்று முதலாளித்துவத்துடன் ஐக்கியப்பட்டுச் சந்தைச் சோசலிச நடைமுறையை முன்னெடுக்கும் வரலாற்று அவசியத்தைக் கையேற்றுள்ள மக்கள் சீனத்தின் கொம்யூனிஸ்ட் கட்சி, தாங்கள் ஒருபோதும் மேலாதிக்கத்தை நாட மாட்டோம் எனத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வரக் காண்கிறோம்!
மேலாதிக்க நாட்டம் உடைய தேசியங்கள், விடுதலைத் தேசியங்கள் என்பதாக வரையறுக்க ஏற்ற வகையிலேயே முழுச் சமூக சக்திகள் இடையேயான இயங்கியல் செயற்பட்டு வந்துள்ளது!
மார்க்சிய நோக்கு நிலையை வர்க்க அடிப்படைக்கும் அப்பால் மற்றொரு வரலாற்று இயங்கு தளமாகிய முழுச் சமூக சக்திகளது இருப்பும் போராட்டங்களும் மாற்றங்களும் என்ற வகைமைக்கு மடைமாற்றி விரிவாக்கும் பொறுப்பு எம்முன்னால்!
(படம்:
கே.ஏ. சுப்பிரமணியம் நூலக நுழைவாயில் தாங்கி நிற்கிற அவரது உருவப் பதிவு.
‘தோழர் மணியத்தை ஒருவகையில் ஜோர்ஜ் தோம்சன் போன்றவர் எனக் கூறலாம்’ என்று தோழரும் நண்பருமாகிய பாலாஜி கூறியிருந்தார். பேராசிரியர் தோம்சன் பண்டைக்கால கிரேக்க இலக்கியத்தை-சமூகத்தை மார்க்சிய நோக்கில் ஆய்வுக்கு உள்ளாக்கியவர். அதே நோக்கு நிலையில் மரபை அணுகியது மட்டுமன்றி மாற்றத்துக்கான புதிய வீச்சுகளை வருவித்துக் கொண்டவர் தோழர் மணியம்!
தமிழ் தேசியத்தின் நாலாவது கட்டப் போராட்டத்தை மார்க்சியர்கள் கையேற்க வேண்டும் என்ற தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் கருத்து நிலை விருத்தி பெற்று எழுச்சி பெற்ற வடிவமே விடுதலைத் தேசியச் சிந்தனையியல்!)
இதயமொன்று
அதனது
நிலைத்த
இயக்கத்துக்கான
போராட்டத் தருணங்களைப்
பேசும் தனித்துவமான
படைப்பாக்கம்
நண்பர் வ. திவ்வியராஜன் எழுதியுள்ள நூல் “இன்னும் கொஞ்சநேரம் இருந்தால்தான் என்ன - ஓர் இதயத்தின் கதை - “ !
கலாலயம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூன்றாவது நூல்!
ஏற்கனவே முக நூல் பக்கத்தில் தொடராக இதனை வெளியிட்ட போது எமது இதயங்களையும் எம்மோடு உரையாடத் தூண்டிய படைப்பாக்கமாக உணர முடிந்தது; கவனத்தில் எடுக்கிறோமென இதயத்துக்கு பதிலுரைத்தும் இருந்திருக்கிறேன்!
நான் மட்டுமன்றிப் பல நண்பர்களும் தமது உடலங்கங்கங்களைக் காதல் கொண்டு உரையாடத் தூண்டிய ஆக்கமாக அதனை உணர்ந்துள்ளனர் என்பதை நூலின் இறுதிப் பக்கங்கள் காட்டி நிற்பதைக் கவனிக்கலாம்!
ஒரு மாத த்தினுள் ஆயிரம் பிரதிகளை மக்களிடையே விநியோகிக்கும் உத்வேகத்துடன் பதிப்பகத்தார்!
எமது இதயத் துடிப்பின் இரகசியங்களது வைத்திய நுட்பங்களை வைத்தியராக (அச்சமூட்டும் போதனையாக) அல்லாமல் பயனாளரின் பார்வையில் இருந்து (எமக்கான நோக்கு நிலையில் இருந்தவாறு) மிகச் சுவாரசியமாக நண்பர் திவ்வியராஜன் இந்நூலில் சொல்லிச் செல்கிறார்!
தன்னைத் தான் காதலராக வாழ்தல் முதல் அறம் என்பது வள்ளுவம்; அத்தகையோரே பிறரை உயிர்ப்புடன் நேசித்தல் சாத்தியம். அந்த உணர்வை வளர்த்தெடுக்கும் இந்த நூலை ஒவ்வொருவரும் தம் வசம் வைத்திருந்து படிப்பது மிகமிக அவசியம்!
Subscribe to:
Posts (Atom)

