Sunday, October 21, 2012

ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கம்:


ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கம்: தொடரும் புரட்சிகர மரபுரிமை

ந.இரவீந்திரன்




ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கத்தைத் தொடரும் மரபுரிமையாகக் கூறுவது முற்றிலும் பொருத்தப்பாடுடையது; அதன்வழி நின்று தொடர்ந்து சிந்தித்துச் செயற்படுகிறவர்கள் நிறையவே உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் மதித்தவண்ணமாக, அந்த எழுச்சியின் வழிகாட்டலில் வளர்த்தெடுக்கப்பட்டவன் என்கிறவகையில் என் பதிவை இங்கு அழுத்தமாக முன்வைக்க அவசியமுள்ளது.
அந்தமார்க்கத்தின் இரண்டாம் சருக்கமாக அமையும் "புதிய பண்பாட்டுத் தளம்" சென்ற வாரம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது; இன்றைய தினம் அதற்குரிய தனித்துவத்தோடு நினைவுகூரப்பட வேண்டும் என்பதால் அவ்வாறு 13ம் திகதியில் அது தொடக்கம் பெற்றது. தவிர, கால வளர்ச்சியோடு ஒக்டோபர் 21 எழுச்சியின் இன்னொரு பரிணாமமாக அமைவது "புதிய பண்பாட்டுத் தளம்". அன்று யாழ்ப்பாண மண்ணில் புரையோடிப் போயிருந்த சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சி மார்க்கத்தின் படிப்பினைகளை இன்று நாடு பூராவிலும் உள்ள  ஒட்டுமொத்த அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டத்தில் பிரயோகிக்க வேண்டியதாக உள்ளது. அதன்பேறாக, புதிய பண்பாட்டு வெகுஜன அமைப்புக்குரியதாக இன்றைய செயற்பாட்டுப் பாணி வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது. தொடர்ச்சியுடனான இந்தப் பரிணமிப்புக் கவனிப்புக்குரியது.
"சாதிமுறை தகரட்டும்; சமத்துவ நீதி ஓங்கட்டும்" என்ற பதாகையின் கீழ் 1966 ஒக்டோபர் 21 அன்று அணிதிரண்ட புதிய சக்தியுடன் எனது இணைவு சுவாரசியமிக்கது; அப்போது நான் ஆறாம் வகுப்பு மாணவன். அந்த ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கி மிகமோசமாக சாதிவெறிப் போலீசாரால் தாக்கப்பட்டதோடு அம்மார்க்கத்தின் வழிப்படுத்தலுக்கு பிரதான கருத்தியலாளராக இருந்தவரான கே..சுப்பிரமணியம் எனது ஊரிலும் இருந்துள்ளார். அப்போது அவரை நான் புரிந்து கொள்ளவோ சந்திக்கவோ இயலுமாயிருக்கவில்லை. தொடர்ந்து தேனீர்க்கடைப் பிரவேசம், ஆலயப்பிரவேசப் போராட்டங்கள் என வலுப்பட்டு வந்த காலத்திலும் 'ஏதோ பயங்கரவாத' நடவடிக்கைகள் எங்கோ நடந்துகொண்டிருப்பதாகக் கருதும் மாணவனாகவே நான்.
உச்சநிலையில் ஒரு சம்பவம் என் ஊரோடும் தொடர்புபட்டபோது உயர்தர மாணவனாக இருந்தேன். மறுமலர்ச்சி மன்றத்தில் சமூக அக்கறை கொள்ளும் முதல் அனுபவம் பெறும் செயற்பாடுகள் இருந்தபோதிலும் சமூக மாற்றம் பற்றி எந்தப் புரிதல்களும் இருந்ததில்லை. அப்போது நிற்சாமத்தில் வெங்காயம் ஏற்றி விற்பனைக்கு பரிமாற்றும் சிறிய லொறி ஒன்றை வைத்திருந்த எமது ஊரவரைப் பொலீசார் பயன்படுத்தி நல்லப்பு என்கிற சமூகப் போரளியைக் கொலை செய்திருந்தனர்(வெங்காய லொறியைக் கண்டதும், ஏற்கனவே போராட்ட முனைப்பில் தேடப்படுபவராய்த் தலைமறைவாக இருந்த தோழர் நல்லப்பு தெரிந்தவர்தானே என்ற நினைப்பில் வெளிப்பட்டு வந்தார்; வரக் கண்டதும், உள்ளே பதுங்கி ஒழிந்திருந்த பொலீசார் குதித்து இறங்கித் துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்துக் கொலைபாதகம் புரிந்தனர்).
எங்கள் அளவில், ஒரு பயங்கரவாதியைக் கொல்வதற்கு எம்மூரவர் துணை போயிருக்கிறார்; சண்டியர்களான அவர்களால் இவர் விரைவில் தீர்த்துக்கட்டப் படுவார் என்ற பேச்சுத்தான் இருந்தது. அப்படி எதுவும் நடக்காததோடு, சிறிய அடிதானும் விழவில்லை என்பது அதிசயமாகப் பட்டதாயினும், சலனம் ஏதுமில்லாததால் விரைவில் மறந்தும் போனோம்(பின்னாலே கட்சிக்கு வந்தபோது அவர்களிடம் கேட்டேன்; அவர் அப்படிக் காட்டிக்கொடுத்தும் கூட எப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தீர்கள் என்று. 'அவர் என்ன செய்வார் தோழர்; வியாபார ஊடாட்டத்தைத் தெரிந்துகொண்ட பொலீஸ் அவரை வெருட்டிப் பயன்படுத்தியிருக்கிறது என்பதைக் கட்சிக்கிளைக் கூட்டக் கலந்துரையாடலில் முடிவாய் அறிந்து கொண்டதால் அவருக்கு எதிராக எதுவும் பண்ணுவதில்லை என்று முடிவு செய்ததோடு, தொடர்ந்து நட்பைப் பேணிவந்தோம்' எனச் சொல்லக்கேட்டபோது உண்மையில் முன்னர் இவர்கள் பற்றி எவ்வளவு தவறான புரிதல்களுடன் இருந்துள்ளேன் என்று வெட்கப்பட மட்டுமே முடிந்தது).
ஓரிரு வருடங்களில் மார்க்சியத்தைக் கற்றுக்கொண்ட போதிலும் அவர்களோடு இணையும் நோக்கம் இருந்ததில்லை; மார்க்சிய வழிப்பட்டதாக அல்லாமல் வெறும் சாதியச் சண்டித்தனம் புரிந்தவர்கள் என்ற கருத்தே எங்களிடம் இருந்தது. சண் தலைமைக் கட்சி என வந்த போதிலுங்கூட, முன்னர் தீவிரமாக இயங்கியவர்களாயினும் இப்போது இயக்கத்தில் இல்லை என்பதான நினைப்பேயிருந்தது. அப்படியொரு நாள், யாழ். நகர் சென்று திரும்பிக்கொண்டிருந்தபோது, சங்காணைச் சந்தைக்கருகே சண்முகதாசனின் கூட்டம் ஒன்று நடப்பதைக் கண்டு அதனைச் செவிமடுக்கச் சென்றோம். அவரது உரை முடிந்ததும் மூன்று கேள்விகள் எழுதிக் கொடுத்தோம். திருப்திகரமான பதிலாக அமையவும் மகிழ்ந்துபோனோம். மேடையிலிருந்து வந்தவரிடம் நேரே சென்று, அருகிலுள்ள எங்களூரில் இதுபோன்ற கொள்கை விளக்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்ற வேண்டும் எனக் கேட்டோம்.
கட்சி அமைப்பு, செயற்பாட்டுப் பாணி, கட்டுப்பாடு என்பதெல்லாம் எங்களுக்கு எங்கே தெரிந்தது. சண் எங்கள் ஊரை அறிந்ததும் அருகில் நின்ற மணியம் தோழரைக் காட்டி, இவர் உங்கள் ஊரில் முன்னர் இருந்தார்; இப்போது தொல்புரத்தில் இருக்கிறார்; அவரோடு தொடர்புகொண்டு மேற்கொண்டு செய்யவேண்டியதை முடிவு செய்யுங்கள் என்றார்.
மணியந்தோழர் நெறிப்படுத்திய வகையில் சங்கானைக் கிளையில் இணைந்து நாங்கள் செயற்பட்டபோது ஒக்டோபர் எழுச்சி மார்க்கப் போராளிகளோடு இரத்தமும் சதையுமாக ஒன்றித்து சமூகமாற்ற இயங்காற்றல் குறித்த நடைமுறைக் கற்றலைப் பெற இயலுமாயிற்று.
தமிழ்த் தேசியப் போராட்டம் உண்மையில் இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக அமைந்திருக்க வேண்டியது. சாதியப் பண்ணையடிமைத் தனத்துக்கு எதிரான போராட்டம் என்கிற வகையில் தேசியப் போராட்டத்தின் ஒரு அங்கம் எனக் கொண்டு இதனை ஆதரிக்கும் மனப்பாங்கு தமிழ்த்தேசியர்களுக்கு இருக்கவில்லை; அவர்கள் உயர்சாதித் தேசியமாயே தமிழ்த் தேசியத்தை கட்டமைத்தார்கள் என்றவகையில், சாதியத் தகர்ப்புப் போராட்டத்துக்கு எதிராகவே இயங்கினர். அந்த வலதுசாரிப் பிற்போக்குத் தலைமைக்கு எதிராகக் கிளர்ச்சியுற்று இடதுசாரித் தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்க முனைந்தவர்களும் போதிய அளவு ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கத்தைக் கவனம்கொள்ளவில்லை. ஆயினும் தொடர் இயக்கம் வாய்த்திருப்பின் அவர்கள் கற்றுக்கொண்டு சரியான செல்நெறியை வகுத்திருக்க இயலும். மாறாக வலதுசாரிப் பிற்போக்கு ஃபாசிசமே தொடர்ந்து ஆயுதப் போராட்டத் தலைமையையும் கையகப் படுத்தியிருந்தமையால் மக்கள் விரோதப் போக்கே தொடரலாயிற்று. ஆகவும், தமிழீழம் பெறுவது ஒன்றே இலட்சியம், இவ்வேளையில் சாதி முரண்கள் பற்றிப் பேச்செழக்கூடாது என்ற ஆணை பிறந்தது.
இதனைச் சாதியச் சக்திகள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாயினர். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை முன்வைப்பேன். வளக்கம்போல நிச்சாமத்திலுள்ள மூத்த தோழர் ஒருவரைச் சந்திக்கப் போயிருந்தேன். அது 90ம் ஆண்டு என்பதாக நினைவு. அந்தத் தோழர் மிகுந்த பதட்டமும் கோபமும் கொண்டிருந்தார். நடந்ததைச் சொன்னார். தெரிந்த ஒரு உயர்சாதியினர் மரணச் சடங்குக்கு அவர் சென்றிருக்கிறார். சுடலையில் இறுதிச் சடங்கு. ஒரு சாதிமான் 'அம்பட்டன் வா, வண்ணான் வா' என்று அறைகூவி தட்சணை கொடுத்துக்கொண்டிருக்கிறார். இவருக்கோ தாங்க இயலாக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. மரணச் சடங்கு என்பதால் ஏறுக்கு மாறாக நடக்கக் கூடாது என்பதைவிடத் துப்பாக்கி மட்டுமே சிந்திக்கவும் பேசவும் கூடிய காலம். 'பள்ளன் வா' என்ற போது, அங்கே சில வேலைகளைச் செய்தவரே அழைக்கப்படுகிறார் என்பது தெரிந்திருந்தும் இவர் போகிறார். கூவியழைத்தவர் திகைத்துப்போகிறார். இவர் மீது பயங்கலந்த மரியாதை அவருக்கு உண்டு; எவ்வளவு காட்த்திரமான சமூகப் போராளி இவர் என்பது அவருக்குத் தெரியும். 'என்ன, அண்ணை நீங்கள்' என்று தடுமாறிய போது, 'இல்லை, நான் பள்ளன் தானே, தரவேண்டியதைத் தா' என்றார். செய்வதறியாதவராகச் சில்லறைகளைக் கொடுத்தார். வாங்கிய காசை வேகமாக நிலத்தில் மோதி அடித்து, 'இந்த மாதிரிச் சாதி இழிவுபடுத்தல்கள் இருக்கக் கூடாது என்றதுக்காகத்தானே பத்துப் பதினைஞ்சு வருசங்களுக்கு முந்திவரை போராடின்னாங்கள்; இப்ப குளிர்விட்டுப்போய்த் திரும்பப் பழையபடி நடக்கலாம் எண்டு வாறீங்களோ' எனக்கூறிவிட்டு அவ்விடம்விட்டு அகன்றிருக்கிறார்.
எல்லாந்தான் முடிஞ்சுபோச்சே எதற்கு இந்தப் பழைய கதை என்று முணுமுணுக்கும் சில முனகல்களும் காதில் விழத்தான் செய்கிறது. வரலாற்றிலிருந்து கற்பதற்கு தவறிய விளைவைச் சுட்டிக்காட்ட இதனைச் சொல்கிறோமேயல்லாமல், தோல்வியைக் குதூகலிக்க முனையவில்லை. தமிழ்த் தேசியம் மக்கள் நலனிலிருந்து வேறுபாட்டு ஆளும் சாதித் தேசியமானதால் இந்தப் பின்னடைவு என்பதை விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும் என்கிற வகையில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசியக் குரலை ஒடுக்கப்படும் ஏனைய தரப்பினரோடும் இணைத்து முன்னெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். இதனையே "புதிய பண்பாட்டுத் தளம்" முன்னெடுக்க உள்ளது.
இதனைக் கூறும்போது மக்கள் விடுதலை என வந்த 1917 ஒக்டோபர் புரட்சியின் சோவியத் யூனியனும் இன்று காணாமல் போயிருக்கிறது தானே என்ற கேள்வியும் எழாமல் போகாது. அந்த ஒக்டோபர் புரட்சி மகத்தான சாதனைகளில் முக்கால் நூற்றாண்டு நீடித்து விடுதலைக்காகப் போடாடும் சக்திகளுக்குக் கலங்கரை விளக்காக விளங்கியது. பின்னர் ஏன் சோவியத் யூனியன் தகர்ந்து போனது என்பது இன்னொரு படிப்பினைக்கு உரியதும், தொடர்ந்து போராடும் சக்திகளுக்கு மற்றொரு பாடத்தை வழங்குவதும் ஆகும். ஒக்டோபர் புரட்சியின் நேர்-மற்றும் எதிர்ப் படிப்பினைகளையும் பார்க்க வேண்டும்தான்; அடுத்த அமர்வில் அதுபற்றிப் தொடர்வோம் ....

No comments:

Post a Comment