Wednesday, March 21, 2012

பிரிந்து செல்வதை மறுக்கும் சுய நிர்ணய உரிமை -ந.இரவீந்திரன் / இது தொடர்பாக சில கருத்துப் பரிமாற்றங்கள் .....

"பிரிந்து செல்வதை மறுக்கும் சுய நிர்ணய உரிமை " என்ற கட்டுரையை தமது இணைய இதழ்களில் வெளியிட்டு அதற்கான எதிர்வினைகளை நான் அறியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அனைத்து இணைய இதலாழர்களுக்கும் நன்றி. ஒவ்வொன்றுக்குமான பதிலை தனித்தனியாக தர இயலாமைக்கு மன்னிக்கவும்.. குறிப்புக்களாக பதில்களைத் தருகிறேன்.


ஒட்டுமொத்தமாக புலப்பெயர்வாளர்கள் தமிழக ஈழ ஆதரவாளர்கள் அனைவரையுமே குற்றம் சாட்டுவதாக கட்டுரை அமைக்கப் படவில்லை;மீறி அந்த தொனி ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.சில நண்பர்கள் எனது முகப்புப் புத்தகத்தில்  ஏற்றுக் கொண்டமையையும் அவதானிக்க முடிந்தது.மேற்படி இரு தரப்பிலும் மூன்று பிரிவினர் உண்டு.அடைந்தால் ஈழம், இல்லையேல் தமிழருக்கும் கெடுதியே வந்தாலும் இலங்கை முழுதையும் ஆக்கிரமிப்பாளர் வசம் ஆக்குவோம் என்கிற நாடு கடந்த ஈழவாதிகள்.சுய நிர்ணய உரிமையை அர்த்தமுள்ள வகையில் வென்றெடுக்க முன்முடிவுகளைக் கடந்து ஆழமான தேடல்களை மேற்கொள்பவர்கள் இரண்டாம் பிரிவினர்.இரண்டிலும் சேராமல் அவ்வப்போதைய நிலவரத்துக்கு ஏற்ப ஒரு தரப்பை தற்காலிகமாக ஆதரிக்கும் நடுநிலைச் சக்தி மூன்றாம் தரப்பினர்.

முதல் தரப்பினர் இங்கு சுயநிர்ணயத்துக்காகப் போராடக் கூடிய சக்திகளுடன் இணைந்து செயலில் முன்னேற ஏற்ற நடவடிக்கைகளில் செயர்ப்படுகிறார்கள்.கட்டுரையை ஏற்று கருத்துக் கூறிய நண்பர்கள் அத்தரப்பினர்.அவர்கள் எல்லோரும் கட்டுரையுடன் பூரண உடன்பாடு கொண்டிருப்பார் என்பதற்கில்லை.பிரதான அம்சம் இவ்வகையில் தேடல் அவசியம் என்பதால் ஆதரவை வெளிப்படுத்தினர்.நானும் முடிந்த முடிவு எதனையும் சொல்லிவிடவில்லை.அனைவரது சுதந்திரமானதும் சமத்துவமானதுமான கருத்தாடல்களின் வாயிலாகவே எமது விடுதலைக்கான பாதையைக் கண்டறியப் போகிறோம்.

ஈழவாதிகள் ஆதிக்கச் சாதித் தேசியத்தை முன்னெடுக்கின்றனர்.அவர்கள் இந்தியாவின் ஐந்தாம் படையாகவும் இருப்பர்;அமெரிக்காவின் ஐந்தாம்படையினராகவும் இருப்பர்.ஆர்குத்தியும் அரிசியாக்கி,ஆண்டபரம்பரையினரான தம்மிடம் ஈழத்தைத் தந்துவிட்டால் சரி என்று இருப்பர்.இலங்கையில் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக அனைத்துசிறு பான்மையினருடன் தமிழருக்கான சயநிர்ணய உரிமையை வடிவப்படுத்துவது என்ற தேடலில் ஈடுபடும் தமிழ் தேசியர்கள் ஈழ வாதிகள் எனப் பொருள் கொள்ளப்படவில்லை என்பதையும் ,அவர்கள் மேலே குறித்த முதல் பிரிவினர் என்பதால் ஈழவாதத் தொப்பியைப் போட்டுப் பார்த்து இடர்ப்பட வேண்டாம் என்பதையும் சொல்லத்தேவை இல்லை என்று நினைக்கிறேன். 

தமிழக தமிழ்த் தேசியர்களிலும் இரு பிரிவினர் உண்டு.பௌசர்குறிப்பிட்டதைப் போல,இந்தியாவில் தமக்குப் பிரிவினை பற்றி எந்த நினைப்பும் இல்லாமல் பிரிய வாய்ப்பற்ற ஈழத்தை பிரிக்கிறோம் பேர்வழிகள் எனக் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயல்கிற சுரண்டலாளர்கள் ஒரு பிரிவினர்.மக்கள் விடுதலையின் பகுதியாக ஈழத்தமிழர் சுயநிர்ணயத்தை வடிவப்படுத்த முன் வருகிறவர்கள் அடுத்தபிரிவினர்.

தமிழகத்தின் ஈழப் பிரிவினர் இந்தியாவில் பிரிவினை பற்றி அக்கரைகொள்ளாமல் இருக்கக் காரணம் தமது சுரண்டல் நலனை முழு இந்தியாவிலும் கடைவிரித்திருப்பதுடன் இந்தியா மேலாதிக்க ஆக்கிரமிப்புக்குரிய வாய்ப்பை பிற நாடுகளுடன் ஏற்ப்படுத்தித்தருவதனையும் பயன்படுத்தி கொள்வதற்காகவே.எமது பிரச்சனையில் தீர்வுக்கான தேடலை இடையூறு செய்து வேண்டாத உணர்ச்சி முறுக்கேற்றல்களை அவர்களது ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டல் நலனுக்காக முன்னெடுக்கிறார்கள் என்பதில் இரகசியம் எதுவுமில்லை.

தமிழக ஈழ ஆதரவாளர்கள் பட்டியலில் சீமான்,தங்கர்பச்சான் வகையறாக்கள் முன்னிலை வகிப்பதில் சினிமாக் கைத்தொழில் தமிழகத்தின் பிரதான அன்னியசெலாவனியாக இருக்கிறது என்பதுடன் தொடர்பானதே அன்றி தற்செயலானது அல்ல.இவர்களும் ஈழ வாதப் புலம் பெயர்வாளர்கள் ஜெனிவாவில் முன்னெடுக்கிற செயற்பபாடுகளும் சிங்கள மக்களை சிங்களப் பேரினவாதிகள் ஏமாற்றி அரவணைக்கவும் வாய்ப்பேர்ப்படுத்திக் கொடுத்துள்ளனர்.இரு தரப்பு இனவாதிகளும் தமிழ் சிங்கள மக்களை பிளவுபடுத்தியுள்ளனர்.அது அவர்களுக்கு ஆதாயமானது.மக்கள் விடுதலையை நேசிக்கும் சக்திகள் மக்கள் இவ்வகையில் பிளவுபடுத்தப்படுவதை எவ்வகையிலும் விரும்பமுடியாது.

இவ்வாறு சொல்வதனால் இன்றைய நிதர்சனத்தில் சிங்கள மக்கள் சுயநிர்ணய உரிமையை மறுக்கிறார்கள் என்ற உண்மையைக் காணத் தவறுகிறோம் என்று பொருள் இல்லை.இந்தநிளைமையை இரு தரப்பு இனவாதிகளே ஏற்ப்படுத்தியுள்ளனர் என்பதையே வற்புறுத்துகிறோம்..சிங்கள முற்போக்கு சக்திகள் பேரினவாத அரசுக்கு எதிராக விட்டுக்கொடுக்காத கருத்தியல் போராட்டத்தை நடாத்திய போது ஒன்றில் கொல்லப்பட்டார்கள் அல்லது நாட்டைவிட்டு ஓடும்படி செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு இவர்கள் இடைஞ்சல் செய்கின்றனர் ,புலிகளுக்கு உதவுகின்றனர் என்ற பேரினவாத அரசின் சூழ்ச்சி பலிக்கும் யதார்த்தம் எவ்வகையில் ஏற்ப்படுத்தப் பட்டதென்பதை அறிய மாட்டோமா?

இந்த புற நிலைமையால் சிங்கள மக்கள் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் பாரதூரமான வரலாற்றுத்தவரைச் செய்கிறார்கள் என்பது உண்மையே.கடைசி நேர யுத்தத்தில் புத்தரின் தம்மபிடகத்தொடு தேச ஹீரோக்கள் தர்ம யுத்தம் செய்தனரே அன்றி பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது புலிகளாலேயே அன்றி பேரினவாத இராணுவத்தால் அல்ல என்று போலித்தனமான நம்பிக்கை கொள்ள சிங்கள மக்கள் விரும்புவது அபத்தமானது.இத்தகைய அபத்தம் சிங்கள மக்களுக்குக் குறையாத அளவில் தமிழ் மக்களிடமும் உண்டு.புலிகளின் பல தவறுகளை ஊக்கப்படுத்தும்வகையில் புலிகளை எப்போதும் நியாயப் படுத்தி வந்த மக்களின் பொறுப்பற்ற ஆதரவே புலிகள் தறிகெட்டு செயற்ப்பட்டு அழிவைத்தேட நேர்ந்தது.

இன்றைய மோசமான தவறுக்கு சிங்கள மக்கள் ஆட்பட்டுள்ளமையால் பிறரோடு இணக்கமாக வாழ்வதில் ஒருசில இனங்களில் ஒன்றாக சிங்கள இனம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.நிச்சயமாக யாழ்ப்பாணத் தலைமையிலான ஈழத்தேசிய சக்தி உன்னத இனத்தின் பக்கத்துக்குரியதல்ல.மட்டுமன்றி ஆக்கிரமிப்புக் குணாம்சம் என்ற பண்பில் இஸ்ற்றவேல் யூதர்களுடன் முதலிடத்துக்காகப் போட்டியிடுகிறவர்களாக நாம் இருக்கிறோம்.இந்தப் பண்புள்ள ஆதிக்க சாதித் தேசியத்திலிருந்து உழைக்கும் மக்களின் சார்பான தமிழ் தேசிய வெற்றிக்காக எப்படி முயல்வது என்பது பெரும் சவாலாகவே உள்ளது.

அதை விடவும் சிங்கள முற்போக்கு சக்திகளின் சவாலும் கடினமானதே.எண்பதாம் ஆண்டுகளில் இருந்தே தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் பக்கம் வருகிற முற்போக்காளர்கள் வேட்டையாடப்பட்டு வரப்பட்டுள்ளனர்.இன்றும் அதுவே நிலை.தவிர சிங்களவர் இலங்கையில் மட்டுமே வாழும் போது,இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களும் மத்தியகிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்களும் பிறருக்கு நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களாயே உள்ளனர்  எனக்கூறி  சிங்கள மக்கள் சிறு தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை மறுக்கிற நிலைக்கு ஆட்படுத்தப் பட்டுள்ளனர்.

வர்க்க ஒடுக்குமுறை ஊடாக மட்டுமன்றி சாதி ஏற்றத்தாழ்வு சார்ந்த சமூக ஒடுக்கு முறையூடாகவும் வரலாறு இயங்கி வருகிறது.இன்றைய முதலாளித்துவ அமைப்பில் சமூக ஒடுக்குமுறை என்பது தேசிய ஒடுக்குமுறையாக வடிவம் கொண்டுள்ளது.சின்ன மீன் ,பெரிய மீன் ,பென்னாம்பெரிய மீன் விழுங்குவது தேசிய ஒடுக்கலிலும் நடக்கிறது.சிங்களப் பேரினம்  பெரிய மீன் என்றால் இந்தியா பென்னாம் பெரிய மீனாக சிங்கலத்தேசியத்தையும் ஆக்கிரமித்துள்ளது.இதற்கு மீனவர் பிரச்சனையை கட்டுரையில் உதாரனமாக்கியிருந்தேன் .கட்டுரையிலேயே மீனவர் எதிர் நோக்கும் சிக்கல் பற்றி எழுத்யுல்லேன்;அதுபற்றி தமிழ்த் தேசியர்கள் அக்கறையற்று இருக்கிறார்கள் என்ற அதிர்ப்தியைத் தெரிவித்திருந்தேன்.

இலங்கையின் மீனவர்களை தலித்கள் என்று கூறமுடியுமா என்ற கேள்வி எழுப்பப் பட்டிருந்தது.வேறுபட்ட சாதியினர் இங்கு மீனவர்கள்;அவர்களில் பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்டவர்களாயிருந்து அதற்கு எதிராக போராடி வெற்றி ஈட்டியுள்ளனர்.இருபதாம் ஆண்டுகளிலேயே யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் முன்னோடி அமைப்பான மாணவர் சங்கம் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.அப்போரட்டப் பாரம்பரியம் தொடர்ந்து வளர்ந்த போது அணைத்து சாதி முட்போக்காளர்களது ஆதரவுடன் ஒடுக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் முன்நேரிவன்தனர்.நாற்பதுகளில் தோன்றிய கொம்யூனிஸ்ட் கட்சி பிளவுகளைச் சந்தித்த போதிலும் அனைத்துப் பிரிவினரும் தத்தமது கருத்தியல் நிலை நின்று ஒடுக்கப்பட்டவர்களின் சாதிய இழிவுகளுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்துவந்தனர்.அந்தவகையில் தலித்தியத் தேவை இங்கு இல்லை எனும் பொருளில் மீனவர்கள் இந்தியா அர்த்தப்படுத்தும் வகையில் தலித் அல்ல;அதேவேளை தாழ்த்தப்பட்டவர்கள் என்று மட்டுமன்றி ஒடுக்கப்பட்டவர்கள் என்ர்கூடச் சொல்லக்கூடாது ,தலித்துக்கள் என்பதே போர்க்குணம் மிக்கது என்பதால் அவ்வாரே அழைக்கவேண்டும் என்ற குரலையும் கவனம் கொள்வது அவசியம்.

இறுதியாக ,சீனா பற்றிய கேள்வி.சீனா எமது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடவும் இல்லை,மேலாதிக்கம் புரியும் நடவடிக்கைகளில் இறங்கவும் இல்லை.இன்றைய நிலையில் அமெரிக்காவும்,இந்தியாவுமே எமது நாட்டையும் எமது தேசிய இனப் பிரச்சனையையும் குழம்பிய குட்டையாக்கி ஆதாயம் தேட முனைகின்றன.சீனா அவ்வாறு செய்ய முனைந்தால் கண்டிப்போம்.

மீண்டும் ,சுதந்திரமான கருத்தாடலை வலியுறுத்தி தற்காலிகமாய் விடை பெறுகிறேன் நன்றி. தொடர்வேன்,,, 
-- 

No comments:

Post a Comment