Thursday, October 24, 2024
“வன்னிக் குடிசை”:
தனித்துவம்மிக்க
ஈழப்போராட்ட நாவல்
மு.சி. கந்தையாவின் புதிய நாவல் ‘வன்னிக் குடிசை’. பொன்னுலகம் புத்தக நிலையம் டிசெம்பர் 2021 இல் இதனை வெளியிட்டுள்ளது. இவரை முதன்முதலில் மே மாதம் சாத்தூரில் இடம்பெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் சந்தித்தேன். மலையகத்தில் இருந்து புலச்சிதறலுக்கு ஆளாக்கப்பட்ட சி. பன்னீர்செல்வம், அரு. சிவானந்தன் ஆகியோருடன் கவிஞர் மு.சி. கந்தையா அவர்களது பெயரும் இணைந்து பேசப்படுவதனை அறிந்திருந்த போதிலும் மேற்படி மதுரை மாநாடு தான் எங்கள் இடையேயான சந்திப்பைச் சாத்தியம் ஆக்கியிருந்தது!
இலங்கைத் தேசிய உணர்வுடன் இளமைச் செயற்பாட்டில் தடம்பதித்த மு.சி.க. பின்னரான இந்தியத் தேசிய அடையாளத்துக்குள் இயங்கிப் பெற்ற அனுபவத்துடன் ஈழப் போராட்ட வாழ்வியலை நாவலாக்கி உள்ளார். படைப்பாக்கத்துக்கான உள்ளார்ந்த அனுபவச் செழுமையும் விமரிசன பூர்வ ஆக்கமாக்க அவசியமான விலகிப் பார்க்கும் சாத்தியமும் இந்த நாவலைத் தனித்துவமிக்கதாக வெளிப்படுத்த உதவி உள்ளது!
வெளிப்படையாக இயக்கங்கள் செயற்பட்ட களத்தின் யதார்த்த பூர்வப் படைப்பாக உள்ள அதேவேளை ஆழ்ந்திருக்கும் ‘கவியுள்ளத்துக்கான’ குறியீட்டுப் பாங்குடன் ஆக்கப்பட்டுள்ள பண்பின் காரணமாகப் பன்முக விசாரணைகளை வாசக மனங்களில் ஏற்படுத்திவிடுகிறது. ‘வன்னிக் குடிசை’ என்பதே ஈழப்போராட்ட இயங்கு முறையினதும் இறுதி முடிவினதும் உச்சமான படிமம் என்பதை உணர இயலும்.
வரலாற்றுப் பாங்கு கையாளப்பட்ட போதிலும் படைப்பாக்கப் புனைவு மயமாக ஆக்கப்பட்டதில் நாவல் வெற்றிபெற்றுள்ளது. இறைகுமாரன், உமைகுமாரன் கொலை பேசப்பட்ட பின்னர் சித்திரா அச்சகத்தில் வைத்து இடம்பெற்ற சகோதர இயக்கப் படுகொலை நாவலில் காட்டப்பட்டு உள்ளது. நடைபெற்ற ஒழுங்கு தலைகீழானது. சகோதரப் படுகொலைகள், வெறும் சந்தேகக் கொலைகள் என்பவற்றைச் செய்து இராணுவ வாதச் செயற்பாட்டில் மட்டும் விடுதலையைப் பெற இயலுமென இயங்கி இறுதியில் ஆயுதங்களை மௌனிக்கச் செயத அமைப்பே சித்திரா அச்சக கொலையை முதலில் செய்தது; அதற்கான காட்டிக் கொடுப்பாளர் என்ற சந்தேகத்தின் பேரிலான பழிவாங்கல் கொலைத் ‘தண்டனையே’ இறை-உமை ஆகியோருக்கானது.
சமாந்தரமாக இயக்க மோதல்களின் வரலாற்றைப் படைப்பாக்குவதாக இல்லாமல் குறியீட்டுப் பாங்குடன் எமது இயங்குமுறையை வெளிப்படுத்திய வகையில் ஏற்படுத்தப்பட்ட மேற்படி மாற்றம் ஏற்கத்தக்கதே!
எந்த அமைப்பின் பெயரும் குறிப்பிடப்பட அவசியம் இல்லாமல் போராட்ட வரலாற்றின் தோற்றம், வளர்ச்சி, முடிவு என்பவற்றை சிறப்பாக இப்படைப்பு வெளிப்படுத்தி உள்ளது. நாவல் குறித்த முழுமையான திறனாய்வு வேறொரு தளத்தில் எழுதப்பட அவசியம் உள்ளது!
அரகலயவும்
வர்க்கப் போராட்டமும்
முன்னிலை சோசலிசக் கட்சி உதயமானபோதே தனக்கான வெகுஜன அமைப்பு வேலைத்திட்டமாக மக்கள் போராட்ட செயற்திட்ட வேலைப்பாணி ஒன்றை முன்வைத்திருந்தது. அந்த மக்கள் ‘போராட்ட (அரகலய)’ அலை பேரிரைச்சலுடன் வெளிப்பட்ட களம் காலிமுகத்திடல் ‘மக்கள் போராட்டம்’.
அவர்களது முன்னெடுப்பை அரசியல் தெளிவுடன் செயற்படுத்தி முன்னேறி இருப்பின் சிறந்த மார்க்சிய அமைப்பு ஒன்று உதயமாக வாய்ப்பிருந்தது. அவக்கேடாக இவர்களது வேலைப்பாணியை இவர்கள் வெளியேறிய தாயமைப்பான ஜேவிபி கையேற்று ‘தேசிய மக்கள் சக்தி’ எனும் வெகுஜன அமைப்பாக கட்டியெழுப்பிவிட்டிருந்தது; அதன் வேகமான வளர்ச்சி அரகலயவைக் காலிமுகத் திடலில் அரங்கேற்றி அரைவேக்காட்டு அவியலுக்குள் தள்ளி உள்ளது!
சரி, தாயமைப்பான ஜேவிபி மக்கள் சக்தியை உருப்படியாக கட்டியெழுப்பும் வெகுஜன மார்க்கத்தைச் செயலுருப்படுத்துகிறதா?
அவர்களது வேலைத்திட்டங்களும் மிகச் சிறப்பாக வடிவப்படுத்தப்பட்டவை. முற்போக்கு ஜனநாயக சக்திகள் பலர் இணைந்து (ஜேவிபி மீது கடும் விமரிசனங்களை உடையவர்களும் ஒன்றுபட்ட வகையில்) அந்தச் செயற்திட்டங்கள் வடிவப்படுத்தப்பட்டன!
இதன் வாயிலாக இலங்கை சிவப்பு மயப்படும் அபாயம் இருப்பதை உணர்ந்த மேலாதிக்க சக்திகள் அவசர அவசரமாக களமாட இடமேற்படுத்தும் உத்தியைக் கையாள்கின்றனர்; அதனை உச்சி வெளியேறித் தொடர்ந்து மக்கள் மத்தியில் நிதானமாக இயங்கும் பக்குவம் மேற்படி இரு தரப்பாரிடமும் இல்லை. உடனே கிடைத்த களத்தில் வீரப்பிரதாபம் காட்ட முனையும் சிறு முதலாளித்துவ இளம்பருவக் கோளாறுக்கு ஆட்பட்டு விடுகின்றனர்.
பாட்டாளி வர்க்க நோக்கு நிலை உடன் சமூகத்தைப் பகுத்தாராயும் மார்க்சியக் கண்ணோட்டம் இவர்களிடம் வந்தமையவில்லை!
வர்க்கப் பகுப்பாய்வு அவசியமே அல்லாது இப்போது அரங்காடும் அரசியல் செல்நெறி வர்க்கப் போராட்ட வகைப்பட்டது அல்ல என்ற தெளிவு மிகமிக அவசியம்.
திணை அரசியல் கண்ணோட்டத்தில் (புதிய வடிவிலான சிந்தனை முறைமையுடன்) இன்றைய மாற்றப் போக்குகளை அணுகுவது அவசியம்.
‘அரகலய’ பிரபல்யப்பட்டது ஒருவகையில் நல்ல விடயம்.
சிங்களத் தேசியத்துடன்
தமிழ், முஸ்லிம், மலையகத் தேசிய இனங்களும்
அனைத்துச் சிறுபான்மை இனத்தவர்களும்
ஒன்றிணைந்து
‘அரகலய சக்தி’ என ஆகியுள்ளது வரவேற்கத்தக்க அம்சம்!
அனைத்து இனங்களது சமத்துவத்தை வென்றெடுப்பதுடன் இலங்கைத் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கும் இது அத்தியாவசியமான ஒன்று!
அதேவேளை மீண்டும் சிங்களத் தேசியவாதச் சகதியே ‘இலங்கைத் தேசியம்’ என்ற ரோகணயிஸத்துக்குள் மூழ்கிவிடாது இருப்பதும் மிகமிக அவசியம்!
‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ எனபதுபோல ஆகிவிடாமல்
கடந்தகாலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு
இரு தரப்பினரும் முன்னேறுவர் என நம்புவோம்!
மட்டுமன்றி, ஏதோ பெரிய மக்கள் போராட்ட வெற்றியைக் கண்டிருக்கிறோம் என்ற முற்றிலும் தவறான கண்ணோட்டத்தைக் களைந்தெறிய அவசியமான
சுயவிமரிசன அரசியல் தெளிவுக்கும் வர வேண்டும்.
இன்றைய (14.8.2022) ‘தினக்குரல்’ கோகர்ணன் பக்கத்துக்கு உரிய பத்தி இந்தக் கற்றலுக்கான அடிப்படைகளை வழங்குவதாக உள்ளது:
மலையகத் தேசிய
மக்களின் வாழ்வியலை
மிகுந்த கலை நேர்த்தியுடன்
வெளிப்படுத்தும் அற்புதமான
நாவல்
மு.சி. கந்தையாவின்
“குறு நதிக் கரையில்”.
கண்டிச் சீமையில், தமது தேவைக்கெனக் கடத்தி வந்து வாழ வைக்கப்பட்ட தென்னிந்திய மக்களைப் பற்றிய எத்தகைய கரிசனையும் இன்றிக் கைவிட்டுச் சென்ற பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் அயோக்கியத்தனமான சுதந்திரக் கையளிப்புச் செயற்பாட்டுக்கு உரிய 1948 இன் முன் பின்னாகப் பிறந்த மாந்தர்களின் கதைகளைப் பேசும் நாவல் ‘குறு நதிக் கரையில்’!
புதிய ‘விடுதலைக்கான’ வாழ்வியலை மேற்கொள்ள வேண்டிய இலங்கை ஆட்சியாளர்களது மேலாதிக்கக் கொடூரமும் ஏகாதிபத்திய அயோக்கியத்தனத்தை மிஞ்சுவதாகவே தொடர்ந்தது!
போதாக்குறைக்கு ஈழப் போராட்டமும் தன் பங்குக்குக்கு மலையக மக்களின் வாழ்வை வாட்டி வதைத்தது!
இத்தனை நெருக்கீடுகளையும் படைப்பாக்கும்போது படிப்பதற்கு மனம் வராத சோகப்பிழிவு மேலோங்காமல் இருக்குமா?
அத்தகைய கவலைக்கிடமான நிகழ்வுகளைக் காட்டாமல் ஒரு படைப்புக் கடந்து சென்றுவிட இயலாது.
இத்தனை கொடூரங்களுக்குள்ளும் மலையகத் தொழிலாளர்களது வாழ்வியல் இனிமைகளைத் தமக்குள்ளான உரையாடல்கள் - ஊடாட்டங்கள் வாயிலாக செழிப்பூட்டி வளர்த்தெடுத்து முன்னேறியபடி தான் அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்!
இந்த வாழ்வியல் அச்சு அசலாக அப்படியே வெளிப்பட்டுக் காட்டப்பட்ட படைப்பு ‘குறு நதிக் கரையில்’!
அண்மைக்கால மலையகப் படைப்புகளில் மேலெழுந்துள்ள தொழிலாளர் பற்றிய அவ நம்பிக்கைத் தொனிக்கு மாறாக அந்த உழைக்கும் மக்களது உருக்கு உறுதிமிக்க வலிமைச் சக்திக்கான அதீத பலத்தை மிகச் சிறப்பாக இந்த நாவல் வெளிக்கொணர்ந்துள்ளது.
குறிப்பாக மலையகத்தை விட்டுத் தொலைத்து மாற்றுத் தொழில்களைத் தேடுவதே முன்னேற்றம் என்று காட்ட முற்படும் அண்மைக்காலப் படைப்பு நோக்கில் இருந்து விலகி அந்த மக்களுக்கான வாழ்வியல் அடிப்படைகளை வென்றெடுக்கும் மார்க்கம் மிகக் கச்சிதமாக இந்த நாவலில் காட்டப்பட்டுள்ளது; அந்த மக்களின் வாரிசுகளாக இருந்தவாறு மத்தியதர வாழ்வுக்கு வளர்ந்தோரிடையே மண்ணை நேசித்துப் போராட்டத்தில் பங்கேற்கும் நாலாம் தலைமுறையினர் நம்பிக்கை நட்சத்திரங்களாக இப்படைப்பில் வெளிப்பட்டு நிற்கின்றனர்!
பேரினவாத ஒடுக்குமுறையின் அதீதங்களை வெளிப்படுத்துகிற போது சிங்கள மக்களின் உன்னதமான பக்கங்களைப் போதிய அளவு காட்டுவதற்கு அனேகமான படைப்புகள் முற்படுவதில்லை; தவிர்க்கவியலாத இடத்தில் சிற்சில அம்சங்களைக் காட்டுவதுண்டு.
இந்த நாவல் பேரினவாத அட்டூழியங்களை அணுவளவும் குறைத்துக் காட்டவில்லை; அதேவேளை உழைக்கும் மக்களதும் ஜனநாயக சக்திகளதும் சமூக மாற்ற அக்கறையாளர்களதும் ஒன்றுகூடலுக்கான போராட்டக் களத்தில் சிங்கள மக்களது முன் முயற்சிக்கான அக்கறை எந்தளவில் - எவ்வகையில் வெளிப்படுமோ அந்த விடயங்கள் நாவலின் மையப் பேசுபொருள் என்பது அழுத்தி வலியுறுத்த அவசியமாயுள்ளது!
அவ்வாறு ஒன்றுபட்டு மார்க்சியர்களாகப் பலரும் இயங்கிய கட்சிச் செயற்பாட்டாளராக இளமைக் காலத்தில் மலையகத்தில் வாழ்ந்து ‘தாயகத்துக்குத்’ துரத்தப்பட்டவர் மு.சி. கந்தையா!
இந்த மண்ணின் வீரியங்களும் துயரங்களும் மட்டுமன்றி மீளக் குடியேறும் மண்ணிலும் காடழித்துக் கோப்பி, தேயிலைச் செடிகளைப் பயிரிட்டு வாழ்வைத் தொடர நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்வையும் அனுபவித்தவர்.
அந்தவகையில் மலையக வாழ்வியலின் பன்மைப் பரிமாணங்களை உயிர்த்துடிப்புடன் வெளிப்படுத்தும் வாய்ப்பை முழுமையாகப் பெற்றிருந்தவர்!
அவர் இந்தப் படைப்பைத் தராது போயிருப்பின் எத்தகைய பெரிய இழப்பாக அமைந்திருக்கும்?
நாவலின் நிறைவு மிகுந்த நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது; நடந்தேற இயலாத கனவியல் நம்பிக்கையூட்டல் அல்ல அது!
அத்தகைய ஒன்றுபட்ட வாழ்வியலை வென்றெடுக்கச் சபதம் ஏற்போம்!
மலையகப் படைப்புலகத்துக்கு நம்பிக்கை நட்சத்திரமாக ‘குறு நதிக் கரையில்’ நாவலின் வரவு அமைந்திருப்பதனை எவராலும் மறுத்துரைக்க இயலாது!
ஆயிரம்
உண்டிங்கு
சிந்தனைத் தேட்டங்கள்!
மார்க்ஸ், லெனின் ஆதியோர் முன்வைத்த சோசலிச வடிவம் நடைமுறைக்கு வராமல் - ஸ்டாலினும் மாஓ சேதுங்கும் முன்னெடுத்த சோசலிச முனைப்பு அத்தகையதாக அல்லாமல் வேறுபட்டதாக இருந்ததென, பல மார்க்சியர்கள் கருத்துரைத்து வரக் காண்கிறோம்.
முனைப்புப்பெற்று இருந்த ‘புரட்சிக்குப் பிந்திய’ ஸ்டாலின், மாஓ கையாண்ட சமூக முறைமை எத்தகைய வடிவத்துக்கானது, எவ்வாறு அவற்றை அழைக்க இயலும் என்ற நுண்ணாய்வு வெளிப்பாடுகளும் காத்திரமான வகையில் வந்தவண்ணம் உள்ளன.
ஸ்டாலினும் மாஓ சேதுங்கும் தலைமை தாங்கி முன்னிறுத்திய சோசலிசத்தின் மீது ஈர்ப்புக்கொண்டுதான் எழுபதாம், எண்பதாம் ஆண்டுகளின் பல்லாயிரக் கணக்கான ஆற்றலாளர்கள் அரசியல்-பண்பாட்டு-சமூக களங்களில் செயலாற்ற முற்பட்டிருந்தனர். அந்த ஒளியிலேயே மார்க்சும் லெனினும் முன்வைத்த சோசலிசத்தைப் புரிதல் கொள்ள முனைந்தனர்; அந்த முன்னோடிகள் வடிவப்படுத்திய வகையில் அல்லாமல் சோவியத் யூனியனிலும் சீனாவிலும் வெவ்வேறு வகையிலே வேறுபடுவதற்கான காரணங்களையும் கண்டு தெளிவதற்கு ஆர்வம் கொண்டனர்.
அறுபதுகளின் நடுக்கூறில் அவ்விரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கித் திரிபுவாதப் பாதைக்கு சரிவதாக மற்றதன் மீது குற்றம் சாட்டிய போதிலும் அவற்றை ஆதரித்தோர் அவற்றின் சோசலிச சாதனையைத் தமது நாடுகளுக்கு உரியதாக்க முனைப்புக் கொண்டுழைத்தனர்.
மாறிவந்த வரலாற்று இயக்கம் பண்பு ரீதியாக வேறுபட்டு இருப்பதனை உணராது இரு நாடுகளும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார (வர்க்க அரசியல்) வடிவத்தைப் பிரயோகிக்க முற்பட்டு இடர்ப்பட்டன.
சீர்படுத்த இயலாமல் சோவியத் தகர்ந்தது, மக்கள் சீனம் சந்தைச் சோசலிச முறையை கையேற்று மறுவடிவத்தில் சோசலிசக் கட்டுமானத்தைப் பாதுகாத்து வளர்க்க முனைகிறது.
இரு நாடுகளும் பல தவறுகளுடன் சோசலிசத்தை முன்னெடுப்பதை வலியுறுத்திய ஹொரேஷ் பி டேவிஸ் போன்ற தென்னமரிக்க மார்க்சியர்கள் ஏனைய முதலாளித்துவ நாடுகளை விடவும் அந்தச் சோசலிச நாடுகள் நுட்பத் திறனுடன் சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்து வந்தமையை எழுபதாம் ஆண்டுகளிலேயே காட்டி இருந்தனர். இன்றும் அவ்வழியில் தென்னமரிக்க நாடுகளில் இருபத்தோராம் நூற்றாண்டுச் சோசலிச வடிவத்தைக் கட்டியெழுப்புவதற்கு சோவியத்-சீன அனுபவங்களை முன்னுதாரணமாக கொள்ளும் எத்தனங்கள் முனைப்பில்!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்க்சுக்கு முன்னரே சோசலிச சிந்தனையாளர் பலர் களத்தில் இருந்தனர். அதனை எவ்வாறு வென்றெடுப்பது என்ற தெளிவு எட்டப்படாமல் இருந்தது. பாட்டாளி வர்க்கமே அதனைச் சாத்தியமாக்கும் அதற்கான கருவி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனக் கண்டுகாட்டியதிலே மார்க்சுக்கான பங்களிப்பு மகத்தானது. அதன்பேரிலேயே மார்க்சியம் இன்றும் ஆளுமை செலுத்தும் அரசியல் ஒளிவிளக்காக நீடிக்க இயலுமாயுள்ளது!
இன்று ஆயிரம் திசைப் பிளவாக மார்க்சிய அரசியல் மார்க்கம் சிதறக் காரணம் என்ன?
பாட்டாளி வர்க்க அரசியல் வீறிழந்த நிலையில் மார்க்சியத்தால் வழிகாட்ட இயலாதா?
மார்க்சியர் ஒவ்வொருவரும் ஓரோர் திசையில் மார்க்கத்தைக் காட்டுவதில் இருந்து ஒரு வெளிச்ச வீட்டுக் கீற்று (பாட்டாளி வர்க்கத் தலைமை எனக் காட்டப்பட்டதும் பெற்ற தெளிவைப்போல) கண்ணில் படாதா?
ஒருவகையில் தற்செயலாகத்தான் மகாபலிபுரத்தில் இந்தியப் பிரதமரை வரவழைத்துச் சீன ஜனாதிபதி ஆசியா உலகுக்கு வழிகாட்டும் அரசியல் முன்னெடுப்புக்கு அத்திவாரம் இட்டார்.
மகாபலிபுர வெளிச்ச வீட்டில் சீனா முதலாளித்துவத்தை உள்வாங்கி சந்தைச் சோசலிசத்தை முன்னெடுப்பதற்கு ஏற்பட்ட அவசியத்தை விளக்கும் மருந்து உள்ளது.
திணை அரசியல் எனும் உலகின் இன்றைய ஆளுமைபெற்றெழுந்துள்ள முழுச் சமூக சக்திகளுக்கான வரலாற்று இயக்கு முறையின் தெளிவையும் இந்த மண்தான் உலகுக்குக் காட்டவல்லது!
திணை அரசியலுக்கான தெளிவோடு மார்க்சியர் பிரச்சினைகளை அணுகும் பொழுது முன்னர் போல் ஒருவர்போலப் பேச இயலுமாகும்!
தமிழர் எமக்கு அதனை ஆழ்ந்து கற்றறிந்து தெளிவாக உலகின் முன் சமர்ப்பிக்கும் பொறுப்புள்ளதை உணர்வோம்!
சுதந்திரப்
போராட்டத்தின்
தலித் அரசியல்
இருபதாம் நூற்றாண்டின் இருபதுகள் காந்தி தலைமையில் சுதந்திரப் போராட்டம் வெகுஜனமயப்படத் தொடங்கி இருந்தது. முன்னதாக திலகர், கோகலே போன்றோரது தலைமைகள் பிராமணியத் தேசிய வடிவில் முன்னெடுத்த இயக்கச் செயற்பாடுகளைவிட காந்தியின் தாராளவாத அரைப் பிராமணியத் தேசியச் செயற்திட்டங்கள் மென்மேலும் வெகுஜனங்களைத் தட்டியெழுப்புவதாக அமைந்திருந்தது.
நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் காங்கிரஸ் உதயமான போதே ஜோதிராவ் பூலே மராட்டியத்திலும் அயோத்திதாசர் தமிழகத்திலும் ‘மீண்டும் பிராமண மேலாதிக்கத்தை வென்றெடுப்பதே காங்கிரசின் திட்டம்; அந்நியராட்சியில் ஒடுக்கப்பட்ட சாதியினர் பெற்ற வாழ்வுரிமைகளைக்கூட சுதந்திரம் அடைந்துவிட்டால் பின்னர் இழந்துவிட நேரும்” என எச்சரித்திருந்தனர். இருபதாம் ஆண்டுகளில் கூட ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த அக்கறை ஏதும் காங்கிரசிடம் இருந்ததில்லை.
முப்பதாம் ஆண்டுகளில் லண்டனில் இடம்பெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் தலித் மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கர் இரட்டை வாக்குரிமையை வெற்றிகொண்டதை காந்தியால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆரம்ப முதலாகவே தலித் மக்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் அவசியமில்லை, அவர்களும் இந்துக்களே எனக் காந்தி வாதாடி வந்தார்.
பூனா சிறையில் இருந்தபடி மேற்கொண்ட உண்ணாவிரத மிரட்டலில் அம்பேத்கர் இரட்டை வாக்குரிமையைக் கைவிடும்படி செய்யப்படும் அரசியலைக் காந்தி நடைமுறைப்படுத்தி இருந்தார்.
காந்தி இறந்து, அந்தப் பழி தலித் மக்கள் மேல் வரவேண்டாம் என்பதால் அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் என்பதாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அப்படியே அனைத்தையும் தாரைவார்த்து தோல்வியை அந்த ஒப்பந்தமூடாக அம்பேத்கர் வந்தடையவில்லை.
“சமூக நீதிக்கான அறப்போர்” (சவுத் விஷன் புக்ஸ் வெளியீடு) நூலில் பி.எஸ். கிருஸ்ணன் பூனா ஒப்பந்தம் வாயிலாக அம்பேத்கர் வெற்றிகொண்ட அம்சங்களை வெளிப்படுத்தி இருப்பதைக் காணலாம். ஒப்பந்தச் சரத்துகளிலேயே சாதி இந்துக்கள் விட்டுத்தர வேண்டிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை பின்னர் காந்தி நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திக்கவும் செய்தார்.
அதைவிட, காந்தி தன்னளவில் தலித் மக்களது உண்மை நிலவரங்களை அறியாமலே இருந்த தவறை உணர்ந்து கொண்டு ஓரளவிலேனும் அவர்களது கோரிக்கைகளைக் காங்கிரஸ் கவனம் கொள்ளும் வகையில் ஆற்றுப்படுத்தினார்.
சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்பை எழுதும் தலைமைப் பொறுப்பு அம்பேத்கரிடம் வழங்கப்பட வேண்டும் என நேருவிடம் வலியுறுத்தியதே காந்திதான் எனக்கூறப்படும் நிலையையும் பூனா ஒப்பந்தமே ஏற்படுத்திக்கொண்டது எனக் கருத இடமுண்டல்லவா?
‘ஹரிஜனங்கள்’ எனத் தலித் மக்களுக்குக் காந்தி பெயரிட்டதைக் கண்டிப்போர் உள்ளனர்; அதற்கான தர்க்கங்கள் நியாயமானவை. அதேவேளை, அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களையும் சுதந்திரப் போராட்டதில் காந்தி அரவணைக்க முற்படவில்லை எனில் ஏகாதிபத்திய சக்தி மேலும் சில காலம் இந்தியாவை அடிமைப் படுத்தி வைத்திருக்க இடமளிப்பதாகி இருந்திருக்கும் அல்லவா?
முழுமையான ஏகாதிபத்தியத் தகர்ப்புடன் விடுதலைத் தேசியம் வெற்றிகொள்ளப்பட இந்தப் படிப்பினை மீட்டுப்பார்க்கப்படுவது அவசியமல்லவா?
தேசியத்தின் அனைத்துத் தரப்பினரது கோரிக்கைகளையும் உள்வாங்கி இயங்க வேண்டிய தேவையையே விடுதலைத் தேசிய (மார்க்சியத் திணை) அரசியல் வலியுறுத்துகிறது!
இன்றைய இருள் சூழ் நிலை
மேலாதிக்க சக்திகளால்
வடிவப்படுத்தப்படும்
பாங்கு குறித்துப்
பலரும் பேசத்
தொடங்கி
உள்ளனர்!
பிரச்சினை, மீள இயலாக் கையறு நிலைக்கு உரிய பலமிழந்த சக்தி நாமெனக் காலங்கடத்துவதை விடுத்து ஆரோக்கியமான தற்காப்பு நடவடிக்கை என எவற்றை மேற்கொள்ள வேண்டும் என்ற தேடலும் இன்றி இருக்கிறோம் என்பதில் உள்ளது!
அதன்பேறாக எதிரி விரித்த வலைக்குள் விழுந்து ‘போராட்டம்’ பண்ணி எதிரியின் வெற்றிக்கு எம்மை அறியாமலே உதவும் ‘கபடத்தனங்களுக்கு’ ஆட்பட நேர்கிறது.
‘தவறில் விழுதல்
அறிவில் எழுதல்’
என்பது
மானுடப் பண்பு - மக்கள் விடுதலைச் சக்திகளுக்கான சிறப்புக் குணம்!
அவ்வாறன்றித் தற்செயல் தவறை மறைக்கும் நியாயங்களைக் கற்பித்து,
பேசி வந்த கோட்பாடுகளைத் திரிபுபடுத்தும் இழிநிலைக்கு ஆட்பட்டுவிடலாகாது!
‘அரசியலில்
நேர்மை - பலத்தின் விளைவு,
கபடம் - பலவீனத்தின் விளைவு!’
புதிய சிந்தனைப் பலத்துடன் விடுதலைத் தேசிய மார்க்கத்தைக் கட்டியெழுப்புவோம்!
(மீள வலியுறுத்தல்):
சொல்லிப் பயனில்லை
செயலில் இறங்க வழியுமில்லை
செய்ய வேண்டியது என்ன?
‘சொல்லி வேலையில்லை!’ என்பது இலங்கைப் பேச்சு வழக்கில் அடிபடும் சொலவடை ஒன்று. சிங்கள மக்களிடம் இருந்து வந்தது. விடயம் ஒன்றை விதந்து உரைக்கும் ஆச்சரியத் தொனிக்கு உரியது!
இங்கு இன்னொரு வகைப் பயன்பாடு. நேற்று உரையாடிய செயற்பாட்டாளரான ஒரு தோழர் ஏற்கனவே நாங்கள் கடந்து செல்லும் ஆபத்தான சூழல் பற்றி இடித்துரைத்து வந்தாலும் அரசியலாளர்கள் நாட்டைப் படுகுழிக்குள் தள்ளும் செயற்பாடுகளைத் தானே தொடர்நதும் செய்கிறார்கள் என அந்தத் தோழர் ஆதங்கம் தெரிவித்தார்.
சொல்லிப் பயனில்லை. அரங்காடும் அரசியல் அமைப்புகள் எல்லாம் விரும்பியோ விரும்பாமலோ ஏகாதிபத்திய வலைக்குள் விழும் கைங்கரியங்களையே முன்னெடுக்கின்றனர். வாக்குப் பெறும் அரசியல் முனைப்பில் மக்களைக் கவரும் உத்திகளான போராட்டங்களை முன்னெடுத்து ‘ஓயாத அலையாக’ எதையாவது செய்ய முனைகிறார்கள்;
சரியான கோட்பாடு,
விடுதலைத் தேசிய நாட்டம்,
வெகுஜன மார்க்கம்,
மக்களிடம் செல்ல ஏற்ற கடுமையான வேலைப்பாணி
என்பன இல்லாமல்,
எதிரி கட்டமைத்த (ஊடகப் பிரசார வலைப் பின்னலுக்கு உரிய) களத்தில் செயற்பட்டு மேலாதிக்க சக்திகளுக்கு உதவும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.
உலகமயமாதலில் மூழ்கத் தொடங்கிய எண்பதாம் ஆண்டுகளில் இருந்து
அனைத்துத் தேசியவாத சக்திகளும்
மேலாதிக்க மனோபாவத்துடன்
இயங்க ஆற்றுப்படுத்தப்பட்டன.
மோசமாக ஒடுக்கப்படும் தலித் மக்கள் மத்தியிலான
தலித்தியவாத செயற்பாடுகளே
மேலாதிக்க நாட்டமுள்ள கருத்தியலை வெளிப்படுத்தும்போது
‘ஆண்ட பரம்பரைக்’ கதைகள் பேசும்
இனத் தேசியங்களின் மேலாதிக்க உணர்வைக் கண்டு ஆச்சரியப்பட எதுவும் இல்லை!
எழுபதாம் ஆண்டுகள் வரை
இதே மக்கள்
விடுதலைத் தேசிய அரசியல் களங்களில்
வீரியமிக்க பல போராட்டங்களை முன்னெடுத்தார்கள்
என்பதை மறந்துவிட இயலாது!
எண்பதாம் ஆண்டுகளில் இருந்து அரச பயங்கர வாதமும் விடுதலையின் பேரில் ஆயுதமேந்திய அமைப்புகளும் மக்களுக்கான அரசியல் செயற்பாட்டாளர்களைக் கொன்றொழித்தனர்; தப்பியோர் வெளியேறவும் மௌனிக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டு
மக்கள் அரசியல் களம்
வெற்றிடம்
ஆக்கப்பட்டுள்ளது!
அரசியல் நேர்மையற்ற
‘முன்னாள் சமூகப் போராளிகள்’
கபடத்தனங்களுடன்!
விடுதலைத் தேசிய,
திணை அரசியல்
செயலொழுங்கு முறைமைக்கான
புதிய அணி
மேலெழ இயலாது இருப்பது ஏன்?
மேலாதிக்கவாத ஒடுக்குவோரது அரங்காடலுக்குக் கட்டுப்பட்டுத் தொடர்ந்தும் மௌனம் காப்பது சரியானதா?
மேலாதிக்கச் சக்தியின் கரம் இன்று ஓங்கி இருந்தாலும் கூட
ஒவ்வொரு இனத் தேசியங்களதும்
இலங்கைத் தேசத்தினதும்
சுயநிர்ணய உரிமை குறித்த அரசியல் விழிப்புணர்வை
மக்கள் இடையே வலுப்படுத்துவதன் வாயிலாகவே
எதிர்கொள்ளும் ஆபத்தின் கனதியை மட்டுப்படுத்த வகை செய்தவர்களாவோம்!
சுயநிர்ணய உரிமை குறித்த ஆழ்ந்த கற்றல் இன்று மிகமிக அவசியமான ஒன்று!
மேலாதிக்கத் திணை (ஏகாதிபத்திய) ஒடுக்கு முறைக்குள் ஆட்பட்டவாறு உள்ள நாம், எமக்கான சுயநிர்ணய உரிமையின் வடிவப்படுத்தலை மேற்கொள்ள ஏற்றதான
உரையாடலை மேற்கொள்வோம்!
விடுதலைத் திணை அரசியல் பற்றிய கற்றலுக்கு முன்னுரிமை கொடுப்போம்!
(மேற்படி விடயங்கள் தொடர்பான நூல்கள்:)
நவீன இலங்கையின் திணை அரசியல் முன்னெடுப்பு, மற்றும் எதிர்கால இயங்கு தளம் -1
விளங்காதிருப்பதைப்
புரிந்துகொள்வோம்!
=======================
பழக்க வழக்கம் என்பது பொது வாழ்வியலில் தவிர்க்கவியலாத ஒன்று. ஏற்கனவே முன்னோர் கடைப்பிடித்தவற்றை அதே தடத்தில் பின்பற்றியாக வேண்டும், மரபுகளை மீறுதல் பேரிடர்களுக்கு அடிகோலும் என்ற நம்பிக்கைகளும் வலுவாகவே உள்ளன. ஆயினும், வாழ்முறை மாற்றங்கள் புதிய பழக்கங்களை அறிமுகங்கொள்ளவைத்த பின்னர் அவை புதிய வழக்காறுகளாவதும் நிகழ்ந்தேறியபடிதான் வாழ்வியல் முன்னேறுகிறது. கால மாற்றங்களோடு பழையன கழிந்து புதியன புகுவதனைத் தடுக்காத வரையில்தான் மரபுச் செல்வம் அர்த்தமுள்ளதாக கொண்டாடப்படும்.
இத்தகைய மாற்றச் செல்நெறி அரசியல் செயற் களத்துக்கும் பொருத்தமுடையது. எழுபதாம் ஆண்டுகள் வரை அரசியலரங்கு வர்க்க அணிசேர்க்கையைத் தீர்மானகரமானதாக முன்னிறுத்தி அணுகப்பட்டது. எண்பதாம் ஆண்டுகளில் வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்தது. இனத்தேசிய,சாதிபேத, மத, நிறபேத, பெண்ணிய, பிரதேச அடிப்படைகளிலான புறக்கணிப்புகள், ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட சமூக சக்திகள் ஒவ்வொன்றும் தமக்குள் ஊடாடும் வர்க்க வேறுபாடுகளிட்ட பலவேறு பேதங்களைக் கடந்து ஒன்றுபட்ட சமூக சக்தியாகித் தமது அரசியல் நலன்களை வென்றெடுக்க முற்படலாயின; அதன்பொருட்டுத் தமக்கான பொது அடையாளப் பேணுகையை முன்னிறுத்தின. இவ்வகையில் வெளிப்பட்ட அடையாள அரசியல் இன்றைய உலக இயக்குவிசை ஆகியுள்ளது.
இவற்றின் கோரிக்கைகள் நியாயமானவை. இருப்பினும், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இயக்கங்கொண்ட இந்த அரசியல் முன்னெடுப்புகள் எந்தவொரு வெற்றியின் அறிகுறியையும் தெரியத்தரவில்லை. மட்டுமல்லாமல் பாரிய அழிவுகளையே ஒவ்வொரு சமூகப்பிரிவினரும் சந்தித்து வந்த நிலையில் அடையாள அரசியலுக்கான த த்துவ விளக்கங்களை முன்வைத்த பின்நவீனத்துவ வாதிகளே இனவாத, சாதிவாத, மதவாத, நிறவாத, பெண்ணியவாத, பிரதேசவாத முடக்கத்துக்குரிய குழு மோதல்களைக் கைவிட்டு வர்க்க அணி சேர்க்கையுடனான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று சொல்கிற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மார்க்சிய அணிகள் சில விரைவில் ஒரு வர்க்கப் புரட்சி வரவுள்ளதாக கணித்து அதற்கான தயாரிப்புகளை முடுக்கும்படி தமது அணிகளுக்கு வலியுறுத்துகின்றன. தேசிய இன, சாதிய ஒடுக்குமுறை போன்றவற்றுக்கான வேலை முறைக்கு உரியவற்றை வர்க்கப் போராட்டத்துக்குக் கேடு விளைப்பனவாக முத்திரை குத்திப் புறக்கணிக்கின்றன. வர்க்க அரசியலாளர்கள் சமூக ஊடாட்டத்தில் ஆரோக்கியமான ஒன்றுகூடல்களை விருத்தி செய்து வந்தவர்கள்; அப்போது இதே பினநவீனத்துவ வாதிகள் நிதர்சனத்தை மார்க்சியர்கள் கவனிக்கத் தவறுவதாக கூறி, சாதிவாதமுள்ளிட்ட பல்வேறு பேதங்களை இயல்புக்கும் அதிகமாயே முனைப்பாக்கி மக்கள் சக்தியைப் பாரதூரமான வகையில் பிளவுபடுத்தியருந்தனர். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள், சாதிப்பிரிவினர் மார்க்சியத்தை அண்டவிடாமல் தூரப்படுத்தினர். இவர்களது புதிய ஞானோதயத்தால் இனவாத, சாதிவாத அமைப்பாக்கங்கள் மார்க்சியத்தை நாடுவதை விடவும், தனிமைப்பட்டுள்ள மார்க்சிய அமைப்புகள் மேலும் மோசமாக வர்க்க வாத முடக்கத்துக்கு ஆளாவதே நடந்தேறுகறது.
இனவாத, சாதிவாத முடக்கங்கொள்ளாமல் ஒடுக்கப்படும் தேசிய இன விடுதலைக்கும், அதனுள்ளே ஒடுக்கப்பட்ட சாதிகளது புறக்கணிப்புக்குள்ளாகும் கூறுகளை நீக்குவதையும் பிரதேச பேதங்களைக் களைவதையும் உத்தரவாதப்படுத்தும் அரசியல் முன்னெடுப்பே இன்று எம்முன்னால் உள்ள அரசியல் பணியாகும். இதற்கான தலைமைப் பொறுப்பைக் கையேற்பதை விடுத்து, வர்க்கப் புரட்சி ஒன்று வரவுள்ளதான இலவுகாத்த கிளியாக காத்திருக்க வழிப்படுத்துவது சமூக மாற்ற நடவடிக்கையைத் தூரப்படுத்தும் நடவடிக்கையாகும். மார்க்சியர்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட தேசிய இன - சாதி - பின்தங்கிய பிரதேச மக்களை அணிதிரட்ட வக்கற்றவர்களாகவும் அவ்விடத்தை நிறைக்கும் வகையில் இனவாத, சாதிவாத, பிரதேசவாத சக்திகள் தொடர்ந்து களமாடவுமே இந்த வர்க்கப் புரட்சி எதிர்பார்ப்பு வழிகோலும்.
Subscribe to:
Posts (Atom)