Wednesday, October 23, 2024

‘ஜெய் பீம்’ நம்பிக்கைக் குறிகாட்டி இன்றைய அரசியல்-பண்பாட்டுச் சூழல் சமூக மாற்றத்தை நாடும் பலரிடமும் துயர் தரும் சம்பவங்கள் நிறைந்துள்ள காரணத்தால் அவநம்பிக்கைகளை வளர்ப்பதாயே உள்ளது. என்னுடைய நேற்றைய பதிவில் மார்க்சியர்கள் சரியான கருத்தியலை அடையாமல் இருப்பதனால் இத்தகைய அவல நிலை நீடிக்கிற துயர்மிகு சூழல் உடனடியாக மாறப்போவதில்லை என்ற அவநம்பிக்கைக் குரல் இருந்தது. ‘ஜெய் பீம்’ படம்பற்றி கருத்துரைத்த பலர் வர்க்கவாத அடிப்படைகளைக் கடக்காமலே அதனைப் பாராட்டியதும் என் கருத்து வெளிப்பாட்டுக்கான காரணம். அவர்களும் மாறுவர், மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தும் போராட்ட விழிப்புணர்வுகள் வளர்ந்தபடி உள்ளன என்ற நம்பிக்கையை ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, சந்துரு அவர்களது நேர்காணல்கள் இது தொடர்பில் பலமான நம்பிக்கையை விதைப்பன! தொண்ணூறாம் ஆண்டுகளின் பழங்குடி மக்கள் மீதான அரச இயந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் ஒன்றிணைந்த மூன்று சக்திகளை அவர் அடையாளப்படுத்தினார். அடக்குமுறைக்கு எதிரான விட்டுக்கொடுக்காத போராட்டங்களை அந்த மக்கள் தொடுத்தனர். அந்தப் பலத்தோடு பாதிக்கப்பட்ட பெண் ஆளுமைகள் எந்தவொரு மாயைகளுக்கும் ஆட்படாமல் இறுதிவரை மிகப்பலமான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர், மார்க்சிய அணியின் வெகுஜன அமைப்புகள் அந்தப்போராட்டங்களை நாடுபரந்த இயக்கமயப்படுத்தியமை, நிர்வாக ரீதியிலும், உயர்சாதி-அதிகார மட்டங்கள் சார்ந்தும் இருக்கக்கூடிய நல்லெண்ணங்கொண்ட ஜனநாயக சக்திகளது பங்களிப்புகளை உரிய வகையில் கையாண்டமை, - என்கிற அம்சங்கள் கவனிப்புக்கு உரியன. வெகுஜன அமைப்புகள் கவனங்குவிக்காத வேறுபல இடங்களது கொடுமைகளையும் சந்துரு குறிப்பிடத்தவறவில்லை. தோழர்கள் கோவிந்தன் - கல்யாணி போன்றோரும் அறிவொளி இயக்கமும் முன்கையெடுத்த களங்கள் இத்தகைய ஆரோக்கியமான விளைச்சல். தஞ்சை சாணிப்பால், சவுக்கடிக் கொடுமைகளுக்கு எதிரான மார்க்சிய அணியின் போராட்டத்தில் தோழர் சீனிவாசராவ் அவர்களது பங்கேற்பு முக்கியத்துவம் உடையது. அவர்போல தனிப்பட்ட தோழர்களது அக்கறையாகவே ஒடுக்கப்பட்ட சாதியினர், பழங்குடி மக்கள் ஆகியோரது பிரச்சினைகள் மார்க்சியர்களது கவனத்துக்கு வந்திருக்கின்றன என்பதாக சவுத் விஷன் பாலாஜி போன்ற தோழர்கள் முன்வைக்கின்ற விமரிசனங்கள் கவனிப்புக்கு உரியன! இத்தகைய ஆரோக்கியமான சூழல் மார்க்சிய அணி இக்களங்களுக்கான கோட்பாட்டு முடிவை வெளிப்படுத்த உதவுமென நம்புவோம்! தனிப்பட்ட ஆர்வத்துடன் இயக்கத் தோழர்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்கு அமைப்பு உறுதியான ஆதரவை வழங்கி அவற்றை வெற்றிபெற வைத்திருக்கின்றது. கோட்பாட்டு ரீதியாக அமைப்பே முழுச் சமூக சக்திகளுக்கான அத்தகைய போராட்டங்களுக்கு அறைகூவுமெனில் நாம் வரலாறு படைக்கும் தொடக்கத்தை அடைந்துவிட்டோம் என்று பொருளாகும்! ஜெய் பீம் அனைவர் கவனத்துக்கும் கொண்டுவரப்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் முன்னெடுப்போம்!

No comments:

Post a Comment