Wednesday, October 23, 2024

யாழ்ப்பாண மனோபாவம் யாழ் மேலாதிக்கம் ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம் அண்மையில் யோகன் கண்ணமுத்து (அசோக்) வழங்கிய பெறுமதிமிக்க நேர்காணல் ஒன்று தொடர்ச்சியாக முகநூலில் பதிவாகி வருகிறது. ஈழத் தமிழ் இனத்தேசிய வரலாற்று நெருக்கடிகளை உணர்ந்தறிய உதவும் பல தகவல்கள் இதன்வழி வெளிப்பட்டு இருப்பது வரவேற்புக்கு உரியது. தனது அனுபவங்கள் ஊடாக அவர் ஈழப் போராட்ட வரலாற்றை வெளிப்படுத்துகிறார்; சம்பத்தப்பட்ட ஏனைய ஆளுமைகள் தமது நோக்கு நிலைகளை - மாற்றுக் கருத்துகளை - வெளியிடுவது வாயிலாக ஆரோக்கியமான வரலாற்றுப் பதிவு சாத்திமாகும். அதனூடாக மெய் வரலாறு ஒன்று கண்டறியப்பட வாய்ப்புள்ளது. அவர் இயங்கிய PLOTE அமைப்பில் ஏற்பட்ட தவறுகளில் அதிகார மட்டத்தில் இருந்த யாழ்ப்பாண தோழர்களது பங்கு அதிகம் இருந்தது; ‘இவை யாழ்ப்பாண மனோபாவ வெளிப்பாடுகளா?’ எனக் கேட்கப்பட்ட பொழுது ‘மத்தியதர வர்க்கக் குணாம்ச வெளிப்பாடு’ என்பதாக அசோக் பதிலிறுத்துள்ளார். அவர் கிழக்கு மாகாணத்தின் களுவாஞ்சிக்குடியில் பிறந்து வளர்ந்தவர்; விடுதலை பெறும் தமிழீழம் சாதி, மத, பிரதேச வேறுபாடுகளற்ற சமத்துவ சமூக அமைப்பை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக உழைத்தவர். இன்று கிழக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண எதிர்ப்பு உணர்வுடன் கூடிய பிரதேசவாதம் வளர்வதைக் கண்டு விசனப்பட்ட நிலையில் ‘யாழ்ப்பாண மனோபாவம்’ அல்ல இயக்கத் தலைமையில் இருந்த மத்தியதர வர்க்கக் குணாம்சமே தவறுகளுக்குக் காரணம் என்கிறார். இன்றைய கிழக்குத் தலைமையைப் பெற முனைபவர்களில் பெரும்பாலோர் ‘ஒத்தோடிகளாக’ இருந்து (சிங்களப் பேரினவாதக் கைக்கூலிகளாகச் செயற்பட்டு) ஆதாயம்பெறவே ‘யாழ் எதிர்ப்பை’ முன்னிறுத்துகின்றனர் என்பது அவர் கருத்து. அதனை மறுக்க இயலாத வகையில் சிலரது நடைமுறைகள் உள்ளன. யாழ்ப்பாண மேலாதிக்கம் கிழக்கின் முன்னேற்றத்தில் தடைகளை இடுகின்றன என்ற குற்றச்சாட்டுத் தவறானதல்ல. யாழ் மேலாதிக்க உணர்வுடன் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையே அதன் தோல்விக்குக் காரணம் என்பதனை மறுதலிக்க இயலாது; யாழ் குடாவுக்கு அப்பால் ஏனைய பிரதேசங்கள் குறித்த அக்கறை தமிழீழத் தேசியம் பேசும் பலரிடம் இல்லை என்பது உண்மை!
அசோக் ஏற்க மறுக்கும் பார்வையைக் கொண்டிருக்கும் கற்சுறா யாழ் மேலாதிக்க எதிர்ப்புடன் எழுதிய கவிதைகள் (அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு), கட்டுரைகள் அடங்கிய “DISCONNECT” என்ற தொகுப்பு நூலை இப்போது படித்துக்கொண்டு இருக்கிறேன். கற்சுறா ஒடுக்குமுறைகளுக்கு எதிரான விடுதலைத் தேசிய உணர்வுடன் வெளிப்படுத்தும் யாழ்ப்பாண எதிர்ப்புணர்வு எவ்வகையிலும் பிரதேசவாதமோ ஒத்தோடிக் குணாம்சமோ அல்ல (அந்த தூல் குறித்த விமரிசனத்தைப் பின்னர் எழுதுவேன்). ‘யாழ்ப்பாணச் சமூகத்தை எப்படிப் புரிந்துகொள்வது? வீரஞ்செறிந்த ஈழப் போராட்டத்தை ‘தலைமையேற்று நடாத்திய’ ஆளுமைகளைத் தந்ததாகவா, மேலாதிக்கச் சாதிவெறி பீடித்த ஒன்றாகவா?’ என்ற கேள்வி பலரால் எழுப்பப்படுகின்ற சூழல் புறக்கணிப்புக்கு உரியதல்ல! சாதியாதிக்க மனோபாவத்துக்கு இடங்கொடுத்து தலைமை தோல்வியைத் தழுவியதும் மெய்; விட்டுக்கொடுப்பற்ற போர்க்குணம் அங்கு உள்ளது என்பதும் மெய்! குறிப்பாக சாதியத்துக்கு எதிராக ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கத்தைத் தந்து வரலாற்றியலுக்கான மகத்தான பங்களிப்பை நல்கியதும் இதே யாழ் மண் என்பதைக் கவனங்கொள்வது அவசியம்!

No comments:

Post a Comment