Thursday, October 17, 2024

இன்று க. கைலாசபதி 90 நேற்று மலையகம் 200

இன்று க. கைலாசபதி 90 நேற்று மலையகம் 200 நேற்றைய தினம் யாழ். தேசிய கல்வியியல் கல்லூரி ‘குறிஞ்சி 200’ என நடாத்திய ‘மலையக மக்கள்: வரலாறு-பண்பாடு-வாழ்வியல்’ குறித்த விழா எதிர்பார்த்ததை விட மிகமிகச் சிறப்பாக இடம்பெற்று இருந்தது; அது பற்றித் தனியே பதிவிடுவேன். அரை மணி நேரத்து எனது உரையை அனைவரும் கொண்டாடினர்; எங்களாலும் வஞ்சிக்கப்பட்ட மலையக மக்களே இலங்கையின் மிக அதிக ஆளுமைமிக்க இனத்தேசியப் பிரிவினர் என்பதை வலியுறுத்திய கருத்து அனைவரையும் கவர்ந்ததற்கான அடிப்படை காரணமா இருக்கலாம்! பத்து வீத மலையகத்தைச் சேர்ந்த இளந்தலைமுறையினர் அங்கே மாணவ ஆசிரியர்களாக உள்ளனர்; அவர்களது பண்பாட்டு வெளிப்பாடு, ஆளுமை என்பவற்றை அவதானித்ததன் காரணமாகவே இந்த விழாவை ஏற்பாடு செய்ததாக கல்லூரி பீடாதிபதி, நண்பர் சு. பரமானந்தம் கூறியிருந்தார். மலையக மக்களின் போர்க்குணமிக்க (விடுதலை நாட்ட) ஆளுமை அந்த ஆசிரியப் பயிலுனர்களிடமும் வெளிப்படுவதை விழாவில் முழுமையான அவர்களது ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்புகள் எடுத்துக்காட்டின! எங்களது ‘ஆண்ட பரம்பரை’யைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியத் தலைமை ஆரம்பந்தொட்டு இன்று வரை மேலாதிக்கத் தேசிய முன்னெடுப்பையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது; மக்கள் விடுதலை நாட்டமற்ற அதன் அடிப்படை பண்பு இன்று கல்வியில் கடைநிலை இடத்தை யாழ் மாவட்டம் வந்தடைய வழிகோலி உள்ளது. இன்னமும் ஆண்ட பரம்பரைக் கனவுகள் கலையாத சமூகத்தில் மக்கள் விடுதலையை நேசித்த பேராசிரியர் க. கைலாசபதி போதியளவு கண்டுகொள்ளப்படாத அவலத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருடன் இணைந்து பணியாற்றிய பேராசிரியர் இந்திரபாலா விடுதலைத் தேசிய நாட்டமுள்ள அந்தக் கால வீச்சுடன் தனது சகபாடி பற்றி எழுதி உள்ள பதிவு இன்றைய ஈழநாடு தினசரியில் வெளிவந்துள்ளது! அவர்களுக்கான நன்றியுணர்வுடன்:

No comments:

Post a Comment