Thursday, October 17, 2024
நம்பிக்கை தரும் இளைய தலைமுறைக் கல்விச் சமூகம் பற்றி நூலகத் தளத்தில் ஒரு உரையாடல்
நம்பிக்கை தரும்
இளைய தலைமுறைக்
கல்விச் சமூகம் பற்றி
நூலகத் தளத்தில் ஒரு உரையாடல்
நேற்றைய தினம் புத்தகப் பண்பாட்டரங்கச் செயற்பாட்டாளர் சஜீலன் யாழ். பல்கலைக் கழக இந்து நாகரிகத் துறைச் சிரேஷ்ட விரிவுரையாள் செல்வமனோகரனை கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகத்துக்கு அழைத்து வந்தார். ஏற்கனவே அவரது உரைகளைக் கேட்டிருக்கிறேன்; பேச வரும் விடயம் பற்றி கற்றுத் தேர்ந்த ஆளுமையுடன் கூடிய அவரது உரைகளே முதலில் அவர் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தன. சஜீலன் வாயிலாகப் பெற்று இருந்த அவரது நூல்களைப் படித்ததிலும் கல்விச் சமூக எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பு வலுப்பட்டது.
இந்து நாகரிக கல்விப் புலத்தை வடிவமைத்ததில் பேராசிரியர் கைலாசபதிக்கு பெரும் பங்கிருந்தது; வெறும் நம்பிக்கைகளுக்கு அப்பால் வரலாறு, சமூகவியல், பண்பாட்டியல், நாட்டாரியல், அழகியல், அறிவியல், அறவியல், மெய்யியல் போன்ற பன்முகத் தளங்களின் சங்கமத்துக்கு உரிய நுண்மாண் நுழைபுலப் பாடப்பரப்புடன் இந்து நாகரிக கல்வி அமைவதில் க.கை. அவர்களுக்கு இருந்த அக்கறையைப் புரிந்துகொண்டு வளர்க்க ஆர்வம் கொண்டவராக செல்வமனோகரன் காணப்படுகிறார். நேற்று மாலை அவருடனான உரையாடல் மிகப் பயனுள்ளதாக அமைந்தது. அவற்றைத் தொடர்வதற்கான வடிவங்கள் பற்றியும் அக்கறை காட்டினார்.
அதற்கான ஏற்பாட்டை தனூஜன் ஏன் மேற்கொள்ளவில்லை என அவரிடமே கேட்டார்; நூலகத்தில் இத்தகைய உரையாடலை ஏற்பாடு செய்யும் செயலொழுங்குகள் உள்ளன எனத் தனூஜன் கூறினார்.
கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகத்தின் நம்பிக்கை நிதிய நிர்வாகக் குழுவில் செயலாளராக தனூஜன் செயற்படுகிறார்; அதன் பதிவு தொடர்பாக இங்கு வர இருந்த போது இவர்களும் வந்த காரணத்தால் கூடவே இணைந்து உரையாடலை அவரும் வலுப்படுத்தினார்.
பேச்சரங்கம் களைகட்டியதால் படப்பிடிப்பு போதியளவு இடம்பெறவில்லை.
செல்வமனோகரன், தனூஜன் ஆகியோர் நூலகத்துக்கு அன்பளித்த நூல்களின் படங்களும் உள்ளன. ஏற்கனவே நான் படித்திருந்த மிகச் சிறந்த நூலான “காஷ்மீர சைவமும் சைவசித்தாந்தமும்” நூலை உள்நுழைந்து காட்டியுள்ளேன்.
காலையில் இந்தப் பதிவு இடுவதற்கு தோட்ட வேலைகள் இடமளிக்கவில்லை. அதனை நிறைவாக்கி வந்த போது சுவிஸ் இலிருந்து வந்த சசி என்ற நண்பர் வந்திருந்ததில் அங்குள்ள வாழ்வியலைப் பற்றி உரையாட வேண்டி இருந்தது; மூன்று வருடங்களின் முன்னர் அவர் ‘சுழிபுரம் சசி’. அப்போது எங்களுக்கு பேருதவியாக இருந்தவர் (கொழும்பைக் கைவிட்டு நீண்ட காலத்தின் பின்னர் ஊர் வந்த எங்களுக்கு அவரது உதவிகள் வலுவூட்டின). அவரது வருகையையும் இங்கே பதிவிட்டுள்ளேன்!
ஆக, ‘ஓய்வுக்குப் பின் பொழுது எப்படிப் போகிறது?’ என்று நண்பர்கள் யாரும் இனிக் கேட்க அவசியமில்லை!
தொடர்வோம் இணைந்த பயணிப்பில்!
No comments:
Post a Comment