Tuesday, January 29, 2013

இறுதி யுத்தம்… முள்ளிவாய்க்கால்… முள்வேலி முகாம்யோ.கர்ணனின் “சேகுவேரா இருந்த வீடு” ஒரு எனும் சிறுகதைத் தொகுதி குறித்து விமர்சனக் கருத்துரை ஒன்றை முன்வைக்க முயலும்போது அவருடனான உரையாடல் தருணங்கள் இடைவெட்டுவதைத் தவிர்க்க இயலாதோ என்று சந்தேகம் எழுகிறது. படைப்பு ஒன்றை, ஆசிரியர் பற்றிய முன்னனுமானங்கள் ஏதுமின்றி அணுகுவது அவசியம் என்பது பெரும்பாலும் சரியானதுதான். இந்தப் பதிவைக் கூடியவரை ஆசிரியரைக் கடந்து சிறுகதைகளை மட்டுமே முன்னிறுத்தி அலசுவதற்கு முயல்வேன். பிரதி வெளிப்படுத்தும் ஆசிரியர் அறிமுகத்தோடு உரையாடலைத் தொடங்கலாம்.
தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக மற்றும் தார்மீக அடித்தளத்தை பலப்படுத்துவதோடு, தமிழர்களின் மீட்சிக்குத் தேவையான அனைத்துலக அங்கீகாரத்தைத் துரிதப்படுத்த யோ.கர்ணன் போன்றவர்களது முழுமையான யுத்தசாட்சியமே விஞ்ஞானபூர்வமானதாகவும், அனைத்துலக கவர்ச்சிமிக்கதாகவும் அமையும் எனக்கூறும் நிலாந்தன் இவ்வாறு கூறியிருந்தார்: “கர்ணன் நாலாங்கட்ட ஈழப்போரின் யுத்த சாட்சிகளில் ஒருவர். நாலாங்கட்ட ஈழப்போர் உயிருள்ள வெளிச்சாட்சிகள் இன்றி நடத்தி முடிக்கப்பட்டது. சக்திமிக்க அரசுகளின் சற்றலைற் கமராக்களைத் தவிர வேறெந்த வெளிச்சாட்சிகளும் அங்கீகரிக்கவில்லை. மற்றவையெல்லாம் யுத்தகளத்தில் நின்ற உட்சாட்சிகளே. இதில் ஒரு தரப்பு வெற்றிக்களிப்பினால் தன்னிலை மறந்து தனது செயல்களைத் தானே தனது கைபேசி கமராக்களால் பதிந்து வைத்திருக்கிறது. மற்றத்தரப்பு தியாகிகளும், கைதிகளும், அகதிகளும் ஆகியது. இவர்களின் மத்தியிலிருந்தே கர்ணன் உருவாகினார். பெரும்போக்காகவுள்ள யுத்தசாட்சியத்திலிருந்தும் அவர் துலக்கமாக விலகிச் செல்கிறார். ஆனால், ஒரு முழுமையான யுத்தசாட்சியம் என்று வரும்போது அதன் தவிர்க்கவியலாத ஒரு கூறாக அவர் காணப்படுகிறார்.”
மேற்படி நிலாந்தனின் குறிப்பு நூலின் பின்னட்டையில் இடம்பெற்றுள்ளது. வடலி வெளியீடான இந்நூல் ஆசிரியர்-படைப்பாக்கம் குறித்து இத்தகவலை மட்டுமே தந்துள்ளது. மற்றும்படி நேரடியாகவே சிறுகதைகளுக்குள் பிரவேசிக்க ஏற்றதாகவே நூல் உள்ளது. என்வரையில், கர்ணனைச் சந்திப்பதற்கு முன்னரே அவரது சிறுகதைகளை அவ்வப்போது வெளியான சஞ்சிகைகளில் படித்தபோது, கள அனுபவங்களோடு எழுதப்பட்டது குறித்த தகவலையும் இணைத்து வாசித்திருக்கிறேன். வெளிச்சாட்சிகள் இறுதி யுத்தத்தில் இடம்பெற அனுமதிக்கப்படாதது பேரினவாத ஆட்சியாளர் கைங்கரியம் என்றால், கள அனுபவங்கள் மக்கள் நலநாட்டத்தோடு வெளிவர ஏற்ற சாட்சிகள் இல்லாது ஆக்கப்பட்டது, தலைமையேற்ற சக்தியின் பாசிச நிலைப்பாட்டுடன் தொடர்புடையது. தமிழ்த் தேசியம் என்பதாக ஆதிக்கவாத நோக்கு மட்டுமே பேசுபொருளாக உள்ள ஈழத் தமிழ்ச் சூழலில் மக்கள் விடுதலை உணர்வோடு இணைந்த தேசிய இனத்துக்கான சுயநிர்ணயக் கோரிக்கையைக் கேட்பது அருந்தல். அத்தகைய மிகக் குறைவாயே உள்ள குரலில் ஒன்றாக கர்ணனின் இந்தச் ‘சாட்சியம்’ அமைந்துள்ளது.
கள அனுபவங்கள் என்ற பேரில் வலதுசாரிப் பிற்போக்கு நிலைப்பட்ட பதிவுகள் வெளிப்படும் தமிழ்ப் பாசிசம் ஆளும்போது அதற்குத் துதிபாடி பேரினவாதம் மேலாண்மை பெற்ற நிலையில் புலிகளை வரிக்குவரி தாக்கும் அனுபவமீட்புகளும் வந்தபடிதான். வைத்தால் கூந்தல், அடித்தால் மொட்டை என்றில்லாமல் உண்மையான விடுதலை நாட்டத்தோடு போராட்டத்தில் இணைந்து, திசை கெட்டழியும் போக்கில் செயற்பாடுகள் தறிகெட்டுப்போவதைக் கண்டு ஆதங்கப்பட்டு, வீழ்ச்சியை மறுமதிப்பீடு செய்ய முனையும் மனப்பாங்கு கைவரப்பெற்ற படைப்புள்ளம் ஒன்றே சரியான ஆக்கங்களை வெளிப்படுத்த இயலும்.
இந்தச் சமகாலத்தில் இத்தகைய ஆரோக்கியமான விமர்சன நிலைப்பட்ட வேறொரு சிறுகதைத் தொகுதி மற்றும் நாவல் என இரு படைப்பாளிகளைப் படிக்க முடிந்துள்ளது. அவைகுறித்து பேசுமுன்னர் கர்ணன் பற்றிப் பேச அவசியம் உள்ளது. மிக நெருக்கமான அனுபவ எல்லையைத் தொட்டமையும் மக்கள் விடுதலைத் திசைமார்க்கத்தில் தனது கருத்தியலை விருத்தி செய்யும் போக்கில் முன்னேறுவதையும் இவரிடம் அதிகமாக காண இயலுமாயுள்ளமையால் இவரது “சேகுவேரா இருந்த வீடு” எனும் சிறுகதைத் தொகுப்புக் குறித்து சில வார்த்தைகள். இந்தத் தலைப்புக் கதை ‘தோழர்களை’ போராளிகளாக தமிழ்த் தேசிய வரலாறு பெற்றிருந்த இருபத்தேழு வருடங்களுக்கு முந்திய வாழ்க்கை பெற்றுவந்த மாற்றங்களைக் கூறுவது. தம்பி சேகுவேரா என்ற பேரோடு இயக்கமானதால் இழந்த வீட்டை இறுதிவரை மீட்கமுடியாத அண்ணனின் குடும்பம் படும் பாடுகள் அந்தக்கதை. சீதனமாக அந்த வீட்டைப் பெறவேண்டியவள் காணாமல் போவது எமது வரலாற்றின் குறியீடுமாகும்.
அந்தக் கதையை அடுத்து இடம்பெறும் “ஐயனின் எஸ்.எல்.ஆர்.” தோழர்களில் ஒரு பிரிவு அரசு சார்பு இயக்கமாக சமாதான காலத்தில் யாழ் மண்ணில் இருந்த சூழலுக்குரியது. முன்னர் புலிப் போராளியைக் காதலித்து, இதே இயக்கத்தால் கைதுசெய்து ‘வைத்திருக்கப்பட்டு’ விடுதலையான பின் வெளிநாடு சென்று 15 ஆண்டுகளின் பின், இந்தச் சமாதான காலத்தில் ஊர்வந்த பெண், ‘தோழர்’ போராளியோடு உரையாடுவது உச்சக் கட்டம். அந்தத் தோழர் தனது தலைமை திருமணமே செய்யாது மக்களுக்காக வாழ்வது பற்றிப் பேசும்போது அவள் சொல்வாள், நான் மட்டும் அப்போது அபோஸன் செய்யாதுபோனால் உன் தலைவரின் வாரிசு என் வயிற்றில் வளர்ந்திருக்கும் என்று. கால ஓட்டத்தில் போராட்டப் போக்கு மாற்றங்களின் நிதர்சனத்தை உள்ளவாறே சொல்லிச் செல்வதற்கு அப்பால், அரசியலற்று எரிந்த கட்சி – எரியாத கட்சி என்கிற மனப்பாங்கில் புலிகளால் விரட்டப்பட்டு அரசோடு இணைய நிர்ப்பந்திக்கப்பட்ட இயக்கத்தை ‘ஒட்டுக்குழு’ என அடையாளப்படுத்த முற்படுகிறவர்களிலிருந்து வேறுபடுகிற அதேவேளை, அவர்களின் புனிதப்படுத்தல் முயற்சியையும் இவ்வகையில் அம்பலப்படுத்துகிறார் இக்கதைசொல்லி.
அதேவேளை போராட்டத்தின் அனைத்தையுமே புனிதப்படுத்தும் தூய தமிழீழத் தேசியர்களின் மாயக்கற்பனைகளையும் தகர்த்து யதார்த்த இருப்பை உள்ளது உள்ளபடி, இரத்தமும் சதையுமாகக் காட்டுகிறார். சேறும் சகதியும், வேர்வையும் வெறுப்புகளும், வாழத்துடிக்கும் அவதிகளும் மரண ஓலங்களும், இலட்சிய உந்துதலும் காட்டிக்கொடுப்புகளும் என அனைத்துப் பக்கங்களையும் உண்மை மனிதர்களின் முகங்கள் வாயிலாகவே காட்டிச் செல்கிறது “சேகுவேரா இருந்த வீடு”. மேற்குறித்த இரு கதைகளையும் அடுத்ததும், இறுதிக்கதையுமான “இரண்டாவது தலைவர்” எனும் சிறுகதை இது தொடர்பில் கவனிப்புக்குரியது. இயக்கத்தில் இரண்டாவது தலைவர் யார் என நச்சரித்த இளம் போராளி, அரசியல் ‘மாஸ்ட்டரால்’ கடுமையாக எச்சரிக்கப்படுவான். அவன் கடற்போராளியாகி உயர்நிலை அடைந்தபோதும் இரண்டாம் தலைவர் பற்றிய கேள்விகளோடுதான் தாய்லாந்து ஆயுதக்கொள்வனவுக்குச் சென்ற காலத்தில் சர்வதேசத்தொடர்பில் இயங்கும் கே.பி. என்ற இரண்டாம் தலைவரைச் சந்திக்கிறான். எல்லாம் முடிந்து புனர்வாழ்வு பெற்று இராணுவத்திலிருந்து வெளியேறிய நாளில் வந்து வாழ்த்துத் தெரிவித்த அடையாளம் மறந்த அதே இரண்டாம் தலைவரை அறியும்போது அவன் மட்டுமன்றி வாசக உள்ளங்களும் அதிர்ச்சிக்குள்ளாகும்.
ஆதிக்கவாத தமிழ்த் தேசியத்தின் இன்னொரு முகம் இது. கே.பி. என்கிற தனியாளின் ‘துரோகம்’, அல்லது அதை அம்பலப்படுத்த அவசியமற்ற காலப்பொருத்தமற்ற கதைசொல்லியின் முயற்சி என்கிற குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், அரசியலற்ற வெறும் யுத்த சன்னதத்தின் அவல முடிவு இது என்பதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு விருப்பமற்று, நாம் விரும்பாத விடயம் உண்மையேயாயினும் நாம் கவனங்கொள்ளப்போவதில்லை என்கிற எமது பொதுப்புத்தி பட்டும் தெளியாத மனப்பாங்கைக் காட்டுவது. ஈழப்போராட்டம் முழுமையிலுமே இத்தகைய தீக்கோழி மனோபாவம் எம்மிடம் செயற்பட்டதன் பேறு இன்றைய அவல முடிவுக்குக் காரணம் என்பதை உணர்வது அவசியம். இந்த மனக்கோளாறுடன் கர்ணனின் கதைகளைப் படிப்பவர்கள் அசூசைக்குள்ளாவது தவிர்க்க இயலாததே. உண்மையைக் காண அச்சமற்று, கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்துக்கான மார்க்கத்தைக் கண்டறிய முயல்கிறவர்களுக்கு இக்கதைத் தொகுதி மிகப் பெரும் பொக்கிசமாய்த் தெரியும். சிறிய நிலப்பரப்பில் சிக்குண்டு கொடுக்குப்பிடிக்குளிருந்து மீழத்துடித்த இறுதிக்கணத்தில் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் தவிப்புகளும், மனிதம் பேண முயலும் கணங்களும், இலட்சியப்பற்றும் எனப் பல்வேறு தருணங்கள் இங்கு பேசுபொருளாகியுள்ளன.
“திரும்பி வந்தவன்” என்கிற முதல் கதை, இயக்கத்துக்குப் போய், இறுதிக்கட்டத்தையும் கண்டு புனர்வாழ்வுபெற்றுத்திரும்பிய போராளிக்கு திருமணப் பேச்சின் சலனம் தனது ஆண்மைச் சாத்தியத்தைப் பயிற்சிபெற வழிப்படுத்துவதைக் கூறுகிறது. வவுனியாவில் அதன்பொருட்டுவந்த பாலியல் தொழிலாளிப் பெண், தனது தாயை அத்தொழில் காரணமாக இயக்கப் போராளியாக இருந்தபோது அவன் மரணதண்டனைக்குள்ளாக்கியதைக் கூறி, விட்டுவிடுபடி கேட்டுக்கொண்டதில் அதிர்ச்சிக்குள்ளாவதைக் காட்டும். மூன்றாவது கதை, “திரும்பி வந்தவள்”. ஆணாதிக்க சமூகத்தில் அந்தப் போராளிக்கு இருந்த வாய்ப்புக்கு நேர்மாறாக அமைந்துள்ளது திரும்பி வந்தவளின் கதை. அவளைக் காதலித்தவன், லண்டனில் புலிக்கொடி ஏந்திச் சர்வதேசங்களுக்கு எல்லாம் காட்டும் போராட்டத்தை முன்னணியில் நின்று நிகழ்த்தியபோதிலும், இயக்கத்திலும் இராணுவ முகாமிலும் இருந்தவளைத் திருமணம் செய்ய முன்வராததைக் கண்ணீரோடு ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதைக் காட்டும். அவளது கண்ணீர், லண்டன் போராட்டத்தின் பத்திரிகைப் படத்திலுள்ள புலிக்கொடியைக் கரைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பேப்பருடனுள்ள அவளது உணர்வுகளை முழுதாகப் புரிந்து கொள்ளும் சிறுவன் பார்வையில் நகரும் கதை, அண்ணன் அவளை ஏற்க மறுக்கும் நிதர்சனம் குறித்த விளக்கம் முழுமை பெறாத தவிப்பைக் காட்டுவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண் ஒடுக்குமுறையின் அடிப்படை தொடர்வதைக் கேள்விக்குள்ளாக்குவதாக இருகதைகளும் அமைந்துள்ளன.
“தமிழ்க் கதை” அகதிமுகாம் அவலத்தை மட்டுமல்லாமல், இனக் குரோதத்துக்கு அப்பாலான தந்தையாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் பதிலடியைக் காட்டும்; தாயின் மரணம், தெரியாத சிறுமியின் மரணம் என்ற கொடூரங்களோடு இருப்பிடம் திரும்புகிறவனை “அரிசி” கிழையும் அக்காவின் இருப்பு நாட்டம் வாழ்க்கைக்கு அழைப்பதாக அமையும். “கதைகதையாம் காரணமாம்” விசாரணையாளரிடம் பொய் சொல்ல நிர்ப்பந்திக்கப்படும் போராளியைக் காட்டும். “வேதாளத்திற்குச் சொன்ன கதை” அத்தகைய விசாரணையில் புதைக்கப்பட்ட இயக்கப் பணத்தைப் பங்குபோடக் கேட்கும் தேசபக்த விசாரணையாளனைக் காட்டுவது. “சீட்டாட்டம்” அரசியலற்ற இயக்க வங்குரோத்தைப் பொதுமகன் பார்வையில் காட்டும். “சோசலிசம்” அதை இன்னொரு வடிவில் பேசும். “பாவமன்னிப்பு” சகபோராளிகளைக் காக்கத் தன்னை அர்ப்பணித்த உயர் பண்பாளனைக் காட்டும். “பாலையடிச் சித்தர்” வாய்ச் சவடால் வீரரின் சரணடைவையும், போராளியின் நிதர்சனத்துக்கு திரும்பும் நிர்ப்பந்தங்களையும் பேசும்.
பதின்மூன்று கதைகளில் இரண்டு தவிர்ந்து ஏனையவை இறுதி யுத்தத்தையும் முள்ளிவாய்க்காலையும் முள்ளுவேலி முகாமையும் புனர்வாழ்வையும் அவற்றுக்குள்ளான மாட்டுப்படலையுமே பேசுகின்றன. போராளியாக இருந்து இவற்றுக்குள் உள்வாங்கப்படுவதைக் காட்டுவது சொந்த அனுபவ எல்லைக்குட்படுவதால் இயல்பாயமைவதாய் விளங்கத்தக்கது. மாறாக, போராளிகளை மக்கள் முகங்கொண்டவாறும், மக்கள் இறுதியுத்த தருணங்களை அனுபவித்த வகைமையும் இயல்புகுன்றாமல் சித்திரிக்கப்பட்டமை விதந்துரைக்கத்தக்க வகையில் வடிக்கப்பட்டுள்ளது. அதீத இலட்சியம் பேசியவர், இயக்கத்துக்கு ஆள் பிடித்தவர் எல்லாம் எந்தக் கூச்சநாச்சமுமின்றி சரணடையப் போவதைக் கண்டு அதிர்வுக்குள்ளாகும் போராளிகளின் செத்துப்போகாத போர்க்குணம் ஆங்காங்கே பதிவாகியுள்ளது. “இப்ப இவர் சாவதால் என்ன ஆகிவிடப் போகிறது” எனக் கணவன் உயிரைக் காக்க போராளியிடம் இரந்து நிற்கும் மனைவி, மரணப் பிடிக்குள் தவித்து ‘காப்பாற்றுங்கோ’ என்ற பெண் குரலில் தன் வாழ்வையும் தொடர நிர்ப்பந்திக்கப்படும் போராளி, தவிர்க்க இயலாமல் போர்க்குணம்மிக்கவரும் “விரும்பாமலே இயக்கத்துக்கு உள்வாங்கப்பட்டோம்” என விசாரணையில் ஒப்பிப்பது என்ற தருணங்கள் உயிர்ப்போடு வடிக்கப்பட்டுள்ளன. வறட்டுத்தனமான தந்தையை வஞ்சிக்கும் வகையில் இயக்கமெனக் கணவன் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்ட பெண் சிங்களப் படையினரோடு உறவாடுவது வெறும் அதிர்ச்சிப் பாத்திரம் மட்டுமல்ல, அவதிவாழ்வின் இன்னொரு மறுபாதி.
எரிந்த கட்சி – எரியாத கட்சி (போலியான மக்கள் ஆதரவைப் பெற புலிப் புகழ் பாடுவது, வஞ்சிக்கப்பட்டோமே என்ற கோபத்தில் புலி எதிர்ப்பை மட்டும் பேசுவது) என்ற ஏதாயினும் ஓர் ஒருமுனைவாதத் தவறுக்கு ஆட்படாது, வரலாற்றுச் செல்நெறியின் மிகப்பிரதான கணத்துக்கான பல்வேறு தருணங்களைக் கர்ணன் அற்புதமாகக் கலைத்துவப் படுத்தியுள்ளார். இவை சிறுகதைகள் என்ற போதிலும், பல்வேறு பாத்திரங்கள், வேறுபட்ட குணாம்சங்கள், எதிர்-எதிர் நலன் என்பன பேசு பொருளாக அமைகையில், குறித்த களமும் காலமும் காட்டப்படும் வகையில் நாவலுக்குரிய வாசிப்பு அனுபவத்துக்கு நெருங்கிவர வாய்ப்பைத் தருகிறது. இருப்பினும் நாவல் ஒன்றில் இவை ஒருங்கமைக்கப் படும்போது விரிந்த அனுபவச் செழுமையும் தேடலும் தெளிவும் சாத்தியமாகும். கர்ணனின் கருத்தியல் தெளிவைக் காணும்போது அவரால் அத்தகைய நாவல் ஒன்றைத் தர இயலும் என்றே தோன்றுகிறது. தருவார் என்றே நம்புவோம். அதற்கான புறச் சூழலை எமது பண்பாட்டு நகர்வு ஏற்படுத்துமா, குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் குறுகிய மனப்பாங்கால் எதிர்நிலையை ஏற்படுத்துவோமா என்ற கேள்வியும் எழாமலில்லை. எமது பங்குக்கு குறுங்குழு வாதங்களைத் தகர்த்துப் புதிய பண்பாட்டுத் தளத்தை வலுப்படுத்த இச்சவாலை முகங்கொடுக்க ஏற்ற களமாகவும் ஆக்கிக் கொள்ளலாமல்லவா? ஆக்குவோம்!
ந.இரவீந்திரன்
எதுவரை -இதழ் 08

No comments:

Post a Comment