Wednesday, October 23, 2024

எல்லாம் எப்பவோ முடிந்ததோ? கே.ஏ. சுப்பிரமணியம் நூலகத்தை பார்வை இட்டு வந்த இளம் செயற்பாட்டாளரான நண்பர் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்டார். ‘மணியம் தோழர் பங்கெடுத்த போராட்டங்கள், நிகழ்வுகளின் படங்கள் இங்கே இருப்பதைப் பார்க்கிற போது இவ்வளவு காத்திரமான செயற்பாடுகளால் வளர்ந்திருந்த மார்க்சிய அணி பின்னர் ஏன் தளர்ந்து பின்னடைவுக்கு உள்ளானது என்ற கேள்விதான் எனக்குள் எழுகிறது’ என்றார். படங்களில் ஒன்று, தோழர்கள் பீற்றர்கெனமன், சரத் முத்தெட்டுவேகம ஆகியோருடன் மணியம் தோழர் கலந்துகொண்ட (பதுளையில் இடம்பெற்ற ஊர்வலம் ஒன்றின் போது) தோளோடு தோள் சேர்த்துப் போராடிய கணத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஒன்றுபட்டுப் போராடிய கால வளர்ச்சி, 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட கட்சிப் பிளவுக்குப் பின் பாராளுமன்றப் பாதையை முன்னெடுத்த அந்தத் தோழர்கள் பாராளுமன்றப் பாதையின் போது ஏற்பட்ட தவறுகளால் பின்னடைவுக்கு உள்ளான பொழுதிலும் தம்மளவில் இனவாதமற்ற மானுட நேசிப்பைக் கொண்டிருந்தனர் என்பது பற்றிப் பேசினோம். வெகு மக்கள் போராட்டப் பாதையே சமத்துவத்தை வென்றெடுக்க ஏற்ற ஒரே மார்க்கம் என்று மாஓ சேதுங் சிந்தனையைக் கையேற்ற புரட்சிகர அணி மாற்றுக் களத்தைத் தேர்வு செய்திருந்தது; வீறுமிக்க தொழிலாளர்-விவசாயிகள்-ஏனைய உழைப்பாளர் போராட்டங்களை அந்த அணி முன்னெடுத்திருந்தது; அக்காரணத்தால் தோழர் சண்முகதாசன் தலைமையிலான தொழிற்சங்க சம்மேளனத்திலேயே மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அணிதிரண்டு இருந்தனர். யாழ்ப்பாணத்தின் சாதியத்துக்கு எதிரான போராட்டங்களையும் அந்தப் புரட்சிகர அணி முன்னெடுத்தது. தெற்கில் அந்த அணி இன்று பலத்துடன் இல்லை; வர்க்கப் போராட்ட அரசியல் பின்னடைந்து முழுச் சமூக சக்திகளது (திணை அரசியல்) செயல் வேகச் சூறாவளியில் தெற்கை மார்க்சிய அணி கைதவறிப்போகவிட்டு இருந்தது. சிங்களத் தேசியவாத நோய்ப் பீடிப்புடன் உள்ள ஜேவிபி அந்தக் களத்தைக் கபளீகரம் செய்தது.
திணை அரசியலுக்குரிய சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த காரணத்தால் வடக்கில் மார்க்சிய அணி இன்னமும் வலுவுடன் இருக்கிறது. ஆயினும், தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைக் கையேற்கத் தவறியமையால் புது வரலாறு படைக்கும் ஆற்றல் கைநழுவிப் போயுள்ளது. தேசியத்தை போர்க்குணமிக்க விடுதலைத் தேசிய உணர்வுடன் முன்னெடுக்கத் தவறியமை பற்றிய சுய விமரிசனம் உள்ள பொழுதிலும் அதற்கான களச் செயற்பாடுகளில் மேலாதிக்கத் தமிழ் தேசிய இனவாதிகளை எதிர்த்து முறியடிக்கும் வேலைப் பாணி குறித்த தெளிவு எட்டப்படவில்லை. வர்க்க அரசியலுக்கு அப்பால் திணை அரசியலுக்கான கோட்பாட்டுத் தெளிவு எட்டப்படவில்லை என்றால் ஜேவிபி யின் இனவாத த் தவறை எப்படி விமரிசிக்க இயலும்? ஏற்கனவே சரியாக அனைத்தும் சொல்லப்பட்டுள்ளது எனப் புத்தகங்களை மட்டும் புரட்டிப் பார்த்துத் தீர்வுகளைக் கண்டடைய இயலுமா? ‘எல்லாம் எப்பவோ முடிந்த கதை’ என்ற மத வாதிகள் போல இருப்போமா? புதிய களம், புதிய பல பிரச்சினைகள், மாறுபடு சூரத்தனங்களுடன் காப்பிரேட் ஏகாதிபத்தியம், மக்கள் மனங்களைச் சிப்பிலியாட்டும் ஊடக குறுக்கறுப்புகள், இத்தகைய சவால்களை முகங்கண்டு புத்தம்புதிய - இன்றும் புதிதாய் பிறக்கும் ஆற்றல் படைத்த மார்க்சியக் கோட்பாடான விடுதலைத் தேசிய மார்க்சியச் சிந்தனை முறைமையைக் கையேற்று, வளர்த்தெடுப்போம்!

No comments:

Post a Comment