Wednesday, October 23, 2024

அடம்பன் கொடி போல ஒன்றுபட்டுத்திரளத் தடை என்ன? கடந்த 6 ம் திகதி பேராசிரியர் கைலாசபதி நினைவு கூரப்படும் மெய் நிகர் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. உரையாளர்கள் பல்கலைக்கழக எல்லைக்குள் வைத்தே அவரை அணுகினர். கட்சிப் பத்திரிகையான தேசாபிமானி முதல் செம்பதாகை வரை அவரது எழுத்து வியாபித்திருந்தது குறித்துக் கலந்துரையாடலின் பொழுது சுட்டிக்காட்டப்பட்ட கருத்தை உரையாளர்கள் மறுக்கவில்லை. சமூக மாற்றத்தின் வாயிலாகச் சமத்துவ சமூகம் படைக்கப்படுவதற்குத் தம்மை அர்ப்பணிக்கத் தவறுகிற கலை-இலக்கியச் செயற்பாட்டாளர்களது ஆக்கம் தலைசிறந்ததான இடத்தை எட்ட இயலாது என்ற கருத்தை உடையவர் க.கை.! புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் கட்சியுடனும் அந்தக் கட்சியைச் சாராதவராயினும், சமூக மாற்றத்துக்காக உழைக்கும் அக்கறை உடையவராக உள்ள படைப்பாளிகளுடனும் நெருக்கமான உறவைப் பேணியவர் க.கை. ! பல்கலைக்கழகத்துக்கு வெளியே சமூக மாற்றக் களத்தில் செயற்பட்ட பலரை வளர்த்தெடுக்க அவரால் இயலுமானதாக இருந்தது; அதற்கான அடிப்படை அவருக்கு மார்க்சியத்தில் மட்டுமன்றி அதனை முன்னிறுத்தி இயங்கும் கட்சியுடனும் அவருக்கு இருந்த ஊடாட்டமே! இவ்விவகாரம் பேசுபொருளான பொழுது உரையாளர் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட கருத்தொன்று கவனிக்கத்தக்கதாக இருந்தது. இப்போதும் கைலாசின் அடியைப் பின்பற்றும் பேராசிரியர்கள் இருக்கவே செய்கின்றனர்; கட்சித் தொடர்புதான் இல்லாது போயுள்ளது என்பதே அக்கருத்து! இவ்வகையில் ஏற்பட்ட இடைவெளிக்கு கல்வியாளர்களை மட்டும் குற்றம் சொல்ல இயலுமா? கட்சி அணி சுய விமரிசனத்தை மேற்கொள்ள இடமில்லையா? சரியான கோட்பாட்டை முன்னிறுத்தி வெகுஜனப் பங்கேற்புக்குத் தலைமை தாங்கும் ஆற்றலைக் கட்சி இழந்து நிற்பதோடு தொடர்புபட்ட விவகாரம் அல்லவா இது? விவாதிப்போம், சரியான மார்க்கத்தைக் கண்டு தெளிய முயற்சிப்போம்! (படக்குறிப்பு: புத்தர் ஞானம்பெற்ற அரச மரக் கிளையுடன் சங்கமித்திரை இலங்கை வந்தடைந்து தரையிறங்கிய தளம் சம்பில் துறை - ஜம்புகோளப் பட்டினம்; அதற்கான விகாரை அமைந்த இடத்திற்கு பக்கத்தில் எமது மயானம். நேற்று சத்தியன் அங்கு அக்கினியில் சங்கமித்த பொழுது கடற்கரைச் சூழலில் இருந்த அடம்பன் கொடி பூத்துக்குலுங்கி வாழ்வின் அர்த்தங்களை உள் மன விசாரணைக்குத் தூண்டியிருந்தது. தொலைபேசிக் கமரா உள்வாங்கிய அந்தப் படத்துடன் கைலாஸ் தன்னைப்பற்றியும் எழுத த்தூண்டியதன் பேரில் இப்பதிவு!)

No comments:

Post a Comment