Tuesday, October 22, 2024
வரலாறு
எங்களையும்
பொய்ப்பித்துவிட்டது
- இப்படிச் சொன்னவர் பிரெடரிக் ஏங்கெல்ஸ்.
“பிரான்சில் உள்நாட்டுப் போர்” என்று கார்ல் மார்க்ஸ் எழுதிய நூலின் புதிய பதிப்பு ஒன்றை வெளியிட வேண்டி இருந்த போது, மார்க்ஸ் மறைந்துவிட்ட நிலையில், மார்க்சின் அதே சிந்தனை அலைவரிசைக்கு உரியவரான ஏங்கெல்ஸ் எழுதிய முன்னுரையில் ‘எங்களை’ வரலாறு ஏமாற்றிவிட்டது எனச் சொல்ல நேர்ந்திருக்கிறது!
ஏமாற்றத்தில் அந்தச் சிந்தனையாளர்கள் துவண்டுபோய்விடவில்லை;
வரலாற்று மாற்றப்போக்கைக் கவனத்தில் எடுத்தனர்!
மேற்கு ஐரோப்பாவில் எதிர்பார்த்த நிரந்தரப் புரட்சி
பரவலாக்கம் அடைந்து -
உலகப் புரடசியாக வியாபிதமடைந்து,
பாட்டாளி வர்க்கச் சர்வதேசப் பணியானது உலகு முழுமையையும் ஒரேயடியாகச் சோசலிச மாற்றத்துக்கு ஆட்படுத்திவிட வல்லது என்ற கணிப்பை
வரலாறு பொய்ப்பித்துவிட்டது!
முன்னேறிய முதலாளித்துவ வளர்ச்சி பெற்ற மேற்கு ஐரோப்பாவிலல்ல,
தொட்டில் பருவ முதலாளித்துவத்தைத் தொட்டு நிற்கும் ருஷ்யாவில் புரட்சி சாத்தியப்பட்டுச் சோசலிசத்துக்கு முன்னேற ருஷ்யாவால் இயலுமா என அறிவதற்காக
கார்ல் மார்க்ஸ் ருஷ்ய மொழியைக் கற்றார் - அதனூடாக,
புராதன பொதுவுடைமைப் பொருளாதாரக் கூறுகள் உடைய,
‘ஆசிய உற்பத்தி முறைப்’ பண்புடனுள்ள ருஷ்யா
பாட்டாளி வர்க்கச் சிந்தனையைக் கையேற்றுப் புரட்சியை முன்னெடுக்கும் பட்சத்தில் முதலாளித்துவப் புரட்சிக் கட்டத்தை
உடன் வளர்த்தெடுத்து -
நேரடியாகச் சோசலிசத்தை வென்றெடுப்பதற்கானதாக விருத்தி செய்ய இயலுமென முடிவுக்கு வந்தார் மார்க்ஸ்!
மாறிய வரலாற்று செல்நெறியை ஆணித்தரமாக உணர்த்தும் பொருட்டே ஏங்கெல்ஸ் ‘வரலாறு எங்களையும் பொய்ப்பித்து விட்டது’ என்றார்!
அத்தகைய மார்க்சியச் சிந்தனையை வளர்த்தெடுத்துப் பிரயோகித்ததன் காரணமாக லெனினிசம் எனும் புதிய வளர்ச்சி சாத்தியப்பட்டது!
உலகப் புரட்சி சாத்தியமற்றுப் போனது,
தனியொரு தேசம் (பாட்டாளி வர்க்கப் புரட்சியால் விடுதலை பெற்ற ருஷ்யாவும் அதனால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்து தேசிய விடுதலைக்காகப் போராடிய ஒடுக்கப்பட்ட தேசங்களும் ஒன்றிணைந்து உருவான ‘சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்’ எனும் ‘ஒரே தேசம்’) சோசலிசத்தை வென்றெடுக்க வல்லது என்பதை லெனினிசம் சாதித்துக் காட்டியது!
வரலாற்றின் மாற்றப் போக்குச் சரியாக - முழுமைப் பரிமாணங்களுடன் - கவனங்கொள்ளப்படவில்லை என்பதால் முக்கால் நூற்றாண்டுச் சாதனை புரிந்த பின்னருங்கூடச் சோவியத் ஒன்றியம் வீழ்ந்துபட்டுச் சிதற நேர்ந்தது.
விடுதலைத் தேசியங்கள் கட்டியெழுப்பும் சோசலிசம் ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ என்ற அரசியல் வடிவத்துக்கு உரியதல்ல என்ற உண்மையைச் சோவியத் வீழ்ச்சி எடுத்துக்காட்டி இருக்கிறது!
- வரலாற்றினால் கற்றுத் தரப்பட்ட இந்தப் படிப்பினையை எத்தனை மார்க்சியர்கள் புரிந்து கொண்டு இருக்கிறோம்?
விடுதலைத் தேசியத்துக்கு உரிய அரசியல் வடிவம் ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ அல்ல,
‘மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்’
எனக்கூறி, மக்கள் சீனத்தில் மார்க்சிஸ - லெனினிசப் பிரயோகத்தை வளர்த்தெடுத்துப் பிரயோகித்த மாஓ சேதுங் கூட,
ஜனநாயக மாற்றியமைத்தல் சாத்தியபட்ட பின்னர் -
சோசலிசத்தைக் கட்டி எழுப்புவதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கையேற்கும் தவறுக்கு ஆளானார்!
விடுதலைத் தேசியத்துக்கு உரிய மக்கள் சீனத்தின் சோசலிச நிர்மாணம் தனிவகைப் பரிமாணம் உடையது என்ற வகையில் அதற்குமானதாக மாஓ சேதுங் சிந்தனையை விரிவு படுத்திய இன்றைய சீன கொம்யூனிஸ்ட் கட்சி ‘சந்தைச் சோசலிசம்’ என்ற புதிய வடிவத்தைக் கண்டடைந்துள்ளது!
இது திணை அரசியல் சிந்தனைக்கான பரிமாணம்!
அத்தகைய பண்பு மாற்றத்துடன் வரலாற்றுச் செல்நெறி மாறி உள்ளது என்பதைக் கண்டறிய வாய்ப்பு இல்லாத காரணத்தால்,
இந்தப் புதிய பாதையைச்
‘சீனாவுக்கான பிரத்தியேகப் பிரயோகம்’ என்பதாக சீ.கொ.கட்சி பிரகடனம் செய்துள்ளது.
வரலாற்று மாற்றப் போக்கை முழுமையாக கவனங்கொள்ள வேண்டுமாயின்
தமிழர் வரலாறு மட்டுமே வெளிப்படுத்திய
திணை அரசியல் இயங்கு முறையைக் கற்றாக வேண்டும்!
இல்லையெனில்
வரலாறு எங்களையும் பொய்ப்பித்துவிடும்!
No comments:
Post a Comment