Tuesday, October 22, 2024
இன்று புதிதாய்ப்
பிறந்தோம்
மாற்றம் ஒன்றே நிரந்தரமான ஒரே உண்மை;
அந்த உணர்வுடன்,
கடந்த காலக் கவலைகளுக்குள் மூழ்கி அழுந்தாமல் கணந்தோறும் புது மனிதராய்ச் சிந்தித்து இளமைத் துடிப்புடன் இயங்க வேண்டி உள்ளது.
அதன் பொருட்டு “இன்று புதிதாய்ப் பிறந்தோம்…” எனும் மனநிலையை வரித்துக்கொள்வோம்!
அதுசரி, இப்ப எதுக்கு இந்தப் பிரகடனம்?
வெளியிலை தூரப்பயணம் ஒன்றுக்கு போக வேண்டி இருந்து பெற்றோல் கிடைக்கேல்லை என்ற வருத்தத்தோடை வீட்டிலை முடங்கிக் கிடக்கேக்கை,
நாடு பரந்து பல போராட்டங்கள் நடப்பதான ஊடகங்களது அளப்பறை!
அப்ப, போராட்டம் நடக்கேல்லை - ஊடகங்கள் பொய்யாக பரப்புரை செய்யுது என்று சொல்ல வாறீரோ?
அதெல்லாம் ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்பட்டு, தங்களது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக - ஆத்திரமடைந்த ஒரு பகுதி மக்களைக் களத்தில் இறக்கித் தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் பொருட்டு - மேலாதிக்க சக்திகள் மேற்கொள்ளும் அரசியல் திட்டம்!
இதை ‘மக்கள் போராட்டம்’ என மயங்குகிறவர்கள் மக்கள் விடுதலைக்கான வேலைத்திட்டங்களைக் கைவசம் கொண்டிருக்காதவர்கள்.
பாட்டாளி வர்க்கப் புரட்சி ஒன்று வரும் என நம்புகிற எவரிடமும் இன்றைய உலக நிலவரம் பற்றிய புரிதல் இருக்கப்போவதில்லை!
வர்க்கச் சுரண்டல் மட்டுமன்றி
மேலாதிக்க ஒடுக்குமுறை உடன் சுரண்டலைச் சாத்தியப்படுத்திய தமிழர் வரலாற்றுத் தொடக்கம் -
மருதத் திணை மேலாதிக்கம் சாதியத்தை உள்வாங்கி ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சுரண்டும் வாழ்வியல் முறை ஒன்றை ஏற்படுத்தியது பற்றிய தெளிவூட்டலை உலகுக்கு வழங்கி உள்ளது.
‘பாட்டாளி வர்க்கச் சிந்தனை’ என்பது முதலாளி வர்க்கத்தை வீழ்த்திச் சோசலிசத்தை (சமத்துவத்தை) வென்றெடுப்பதற்கானது; இன்று நாம் எதிர்நோக்கும் மேலாதிக்கங்களைத் தகர்ப்பதன் வாயிலாக மக்கள் விடுதலையையும் அதனூடாகச் சமத்துவத்தை வென்றெடுப்பதுமான புதிய வரலாற்றுக் கடமை வேறுபட்டது.
ஏகாதிபத்தியத் தகர்ப்புடன் சோசலிசம் நோக்கிய பயணத்தைச் சாதிப்பதற்கு மக்கள் சீனக் கொம்யூனிஸ்ட்டுகள் மார்க்சிய-லெனினியத்தின் விருத்தியான மாஓ சேதுங் சிந்தனையை ஏற்படுத்திக் கொண்டனர்!
தேசப்பற்றுள்ள பலவேறு வர்க்கங்களின் கூட்டரசாங்கத்தை அமைக்கத்தக்க ‘விடுதலைத் தேசியச் சிந்தனை’ முறைமைக்கு உரியதாக மாஓ சேதுங் சிந்தனை அமைந்திருந்தது!
மேலாதிக்கத் திணை அரசியல் செயலொழுங்கில் மேலாதிக்கத் திணைச் சக்திகள் அத்தகைய ‘கூட்டு (திணை) சிந்தனை’ முறை ஒன்றையே பின்பற்றின!
சமத்துவத்தை வென்றெடுக்கும் ‘விடுதலைத் திணைச் சிந்தனை முறைமை’ மாஓ சேதுங் சிந்தனையின் இன்றைய உலகுக்கான விருத்தியாகும்!
‘நல்லவேளை நான் மார்க்சிய வாதி அல்ல’ என மார்க்ஸ் சொல்ல நேர்ந்தது ஏன்?
பொருளாதார வாதமாக (இன்றைய நிலையில் வர்க்க வாதமாக) மார்க்சியத்தைப் புரிதல் கொள்பவர்களைக் கடிந்துரைக்க
கார்ல் மார்க்ஸ் கையாண்ட கறாரான விமரிசனப் பிரகடனம் அது!
மார்க்சின் வசனங்களுக்குள் சிறைப்படாமல்,
மார்க்சியச் சிந்தனை முறையைக் கையேற்றால் மட்டுமே
மாஓ சேதுங் சிந்தனையை விடுதலைத் திணை அரசியல் சிந்தனையாக வளர்த்தெடுக்க இயலும்!
அதனொளியில் மேலாதிக்க சக்திகளைத் தகர்க்கும்
கருத்தியலை,
கொள்கைத் திட்டங்களை,
வேலை முறைமைகளை,
பரந்த ஐக்கிய முன்னணியை,
வெகுஜன மார்க்கத்தைக்
கட்டியெழுப்பி
மக்கள் போராட்டத்துக்கான களத்தைச் சாத்தியப்படுத்த இயலும்!
சமத்துவ சமூகத்தை வென்றெடுக்க இயலும்!
காப்பிரேட் ஏகாதிபத்திய ஊடகச் சதிகளை முறியடித்து,
மக்கள் விடுதலைக்கான மக்கள் போராட்டங்களைச் சாத்தியப்படுத்த ஏற்ற
மார்க்சியச் சிந்தனையை வரித்தெடுப்போம்!
No comments:
Post a Comment