Tuesday, October 22, 2024

தமிழர் வரலாற்றின் தனிச் சிறப்புப் பண்புக்கான பத்துக் காரணிகள்: நேற்றைய சவுத் விஷன் புக்ஸ் கருத்தாடல் அரங்கின் காணொளி ஏற்கனவே பகிரப்பட்டுள்ளது. திணை அரசியல் எனும் பிரத்தியேக வடிவம் ஒன்றை வெளிப்படுத்திய தமிழர் வரலாற்றை உள்வாங்கி, இன்றைய உலக அரசியல் நெருக்கடித் தீர்வுக்கான மார்க்சிய வழிகாட்டலை அதன் மார்க்கத்தில் முன்னெடுத்தாக வேண்டும் என்பது பற்றிப் பேசி வருகிறோம். வருகிற ஞாயிற்றுக் கிழமைகளில் அவை பற்றித் தொடர்ந்து கருத்தாடலை வளர்ப்போம்! இத்தகைய தனிச்சிறப்பான வரலாற்றுச் செல்நெறி ஒன்றை வெளிப்படுத்தும் ஆற்றல் தமிழுக்கு எப்படி வாய்த்தது? அதனை வரிசைப்படுத்திய போது பத்துக் காரணிகளை இனங்காண இயலுமாயிற்று. மேற்படி காணொளியில் உரை வடிவில் உள்ளதை இங்கே பதிவிடுவது பயன்மிக்கது எனக் கருதுகிறேன்: 1. தமிழக அமைவிடப் புவிச் சூழல். 2. ஏலம், கராம்பு, இலவங்கம் பட்டை (கறுவா), முத்து, பருத்தி எனக் கச்சாப் பொருட்களை நாடி வந்த சுமேரிய, மொசபத்தேமிய, சிந்துவெளிப் பண்பாட்டுக்கு உரிய வணிகர்களது ஊடாட்டம்; அவ்விடங்களில் இருந்து புலப்பெயர்வில் வந்தோரது கலப்பாகத் தமிழர் சமூகம் அமைந்திருந்தமை (அவை அனைத்தும் திராவிட மொழிக் குடும்பக் கூறுகள் கொண்டிருந்தன). 3. இரும்பு கிமு ஆயிரம் ஆண்டில் கண்டுபிடித்துப் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், கச்சாப் பொருட்களின் வணிகத்தில் இருந்து கைத்தொழில் நுட்பத்துடன் (நெசவுத் தொழில் விருத்தி, நுட்பத்திறன் மிக்க நகைகள் எனும்) உற்பத்திப் பொருட்களை வர்த்தகம் செய்யும் நிலைக்கு வளர இயலுமாக இருந்த சூழல். 4. வள வழிபாட்டுத் தாக்கம் இன்றி வணிக கருத்தியல் சிந்தனைத் தொடர்ச்சி கிமு 6 ம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற தமிழக நகர்மயமாக்கத்துக்கான வழிகாட்டலாக அமைய ஏற்ற வகையில் சிந்துவெளிப் பண்பாட்டுத் தொடர்ச்சி இருக்க முடிந்தமை. ஆசீவகம் அன்றைய தமிழகத்தின் வீச்சான கருத்தியலாக இருந்தது! 5. மலை, காடு, கடல் சார்ந்த வர்த்தகப் பொருட்கள் விவசாய எழுச்சிக்கு முந்திய வணிக எழுச்சிப் பண்பாட்டு விருத்தியைச் சாத்தியப்படுத்தியமையால் மருதத் திணையை விடவும் குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆதிய திணைகள் வேளிர்கள் ஆட்சியில் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆளுமையுடன் இருக்க இயலுமாக இருந்தமை. 6. மருத மேலாதிக்கம் கிமு 3 ம் நூற்றாண்டில் ஏற்பட்ட நிலையில் ஏற்றத்தாழ்வு வாழ்முறையை மேலாதிக்கத் தரப்பானது சாதியக் கருத்தியல் ஏற்புடன் செயற்படுத்த நேர்ந்தது; திணை வாழ்முறையில் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக கருத்தியல், இலக்கிய வளர்ச்சி இருந்தமையால் சாதியத்தைத் தமிழ்ப்படுத்தி உள்வாங்க நேர்ந்தது. 7. கிபி 2 ம் நூற்றாண்டை அடுத்து வணிகச் சக்தி மீளெழுச்சி பெற்றுத் தமக்கான புதிய வடிவத்தை பௌத்தம், சமணம் என்பவற்றின் வாயிலாக விருத்தி செய்தபோது அவற்றுக்கான பாளி, பிராகிருத மொழிகள் ஊடாகவன்றித் தமிழின் மூலமாகவே பௌத்த-சமண விருத்தியை முன்னெடுக்க வேண்டி இருந்தமை. 8. மீண்டும் 7 ம் நூற்றாண்டில் வெள்ளாளர் (நிலப்பிரபுத்துவச் சாதி) ஆதிக்கம்பெற்ற போது நிலம் சார்ந்த தமது கடவுளரும் ‘சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது’ பற்றிய புனைவுகளைச் செய்ய வேண்டி இருந்தமை. 9. வணிக - விவசாய சக்திகள் இடையே அதிகாரக் கைமாற்றுகையில் மற்றத் தரப்பைத் தோற்கடித்து - எதிரியாக அழித்தொழிப்பதாக அல்லாமல், அதனை ஆட்படுத்திச் சேர்ந்து இயங்குவதான வாழ்முறை நிர்ப்பந்தம் சமூக மாற்றச் செயலொழுங்கில் இடம்பெற்றமை! 10. புதுமைகளைப் புறக்கணிக்காது ஏற்பதும், அதன்போது தமிழின் அடிப்படைகளைப் பேணியபடி அவற்றை உள்வாங்க இயலுமாக இருந்த வலுமிக்க அடித்தளம்!

No comments:

Post a Comment