Wednesday, October 2, 2024
திணை அரசியல் புதிய ஊடகத்தில்
திணை அரசியல்
புதிய ஊடகத்தில்
திணை அரசியல் தொடர்பில் கொரோனா முடக்கம் தொடங்கிய நாள் முதலாக 15 பதிவுகளை இட்டு வந்தேன். இப்பொழுது அதன் இரண்டாம் பாகமென “நவீன இலங்கையின் திணை அரசியல் முன்னெடுப்பு மற்றும் எதிர்கால இயங்குதளம்” எனும் தலைப்பில் பதிவிட்டு வருகிறேன். அதற்கான நாலாவது பதிவு நாளை வெளியிடக்கூடியதாக இருக்கும். மேலுமிரு பதிவுகளுடன் இத்தொடர் முடிவுக்கு வரும். இடையே பல நண்பர்கள் இப்பேசுபொருளை வீடியோ வடிவில் பதிவிடுவது கூடுதல் பயனைத் தரவல்லது என வலியுறுத்துகின்றனர்.
ஒவ்வொரு பதிவும் நாற்பது நிமிடங்கள் வரக்கூடியதாக பத்துத் தலைப்புகளில் உரை வடிவத்தை ஒழுங்கமைக்கலாம் என எண்ணுகிறேன். தலைப்புகள்:
1. நவீன இலங்கையில் திணை அரசியல்.
2. இலங்கை அரசியலில் இனத்துவமும் சாதியமும்.
3. தமிழர் வரலாற்று எழுச்சியில் திணை வாழ்முறையும் திணை அரசியல் தொடக்கமும்.
4. மேலாதிக்கத் திணை அரசியலில் சமூக மாற்றம்.
5. மேலாதிக்கத் திணை அரசியல் கருத்தியலாகச் சைவசித்தாந்தம்.
6. வட இந்தியாவில் திணை அரசியல் வெளிப்படாமல் போனதற்கான காரணங்கள்.
7. ஆன்மீக நாத்திகமும் விடுதலைத் திணை அரசியலும்.
8. நவீன இந்திய வரலாற்றில் அடையாள அரசியல் எழுச்சி.
9. பல்தேச மூலதன ஒருங்கிணைவும் புவி அரசியலும்.
10. விடுதலைத் திணை அரசியலுக்கான செயலொழுங்குகள்.
இவை தொடர்பான உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். எமது சொந்த வரலாற்றின் புதிய அரசியல் வடிவம் இது. உலகப் பொதுவான அம்சங்கள் இணைந்துள்ள அதேவேளை வேறெங்கும் வெளிப்பட இயலாத தனித்துவக் கூறாக “திணை அரசியல்” என்று வடிவப்படுத்த ஏற்ற ஒன்று இங்கே ஊடாடுகிறது. இதன் நவீன வரலாற்று வெளிப்பாடு இலங்கையில் துலாம்பரமாக இருப்பதனால் இந்தியவியல் அறிஞர்கள் கண்களுக்குத் தட்டுப்படவில்லை. இதற்கான தொடக்கம் தமிழியலுக்கானது என்பதனால் தமிழகத்துக்கு அப்பால் எங்கும் துலக்கமாகவில்லை. வர்க்க சமூக முறைமை வரலாறு படைப்பதாக இருந்தவரை சாதியமைப்புச் சமூகத்துக்கான வரலாற்று இயக்கு திறன் எதுவெனத் தேடல் முனைப்புறவில்லை. இன்று வர்க்க அணி சேர்க்கையைவிட முழுச் சமூக சக்தியாக தேச, இன, மத, நிறபேத, பாலின உரிமைகளை வென்றெடுக்கும் பொருட்டான அணி சேர்க்கைகளுடனான அரசியல் மேலெழுந்துள்ள நிலையில் திணை அரசியல் அனுபவங்களை உலகப் பொதுவாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு முன்னால் உள்ளது.
பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தி வந்ததைப்போல இது கூட்டு முயற்சி. உங்கள் அனைவரது சிந்தனை-செயல்வீச்சு ஊடாட்டம் கலந்த விடயங்களையே நான் எழுத்து வடிவப்படுத்தி வருகிறேன். உரைவீச்சு வடிவத்தில் வெளிப்படுத்துவதிலும் உங்களுடைய ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் அவசியப்படுகிறது. பேசுங்கள்.
நானும் பேசுவேன்!திணை அரசியல்
பேசுபொருளாக
முன்னெடுக்கப்பட்ட பின்னர்
சிந்தனைத் தளத்தில்
மாற்றங்கள் சாத்தியப்பட்டுள்ளன
நடைமுறையில் புதிய செயலொழுங்குகள் சில வெளிப்பட்டு வருகிற அதேவேளை பரந்த வெகுஜனக் களத்துக்கான ஆரம்ப வேலைக்கு உரிய முதல் படி நிலைக்கு உரிய அளவிலேயே திணை அரசியல் அனுபவங்கள் வழிகாட்டி வருகின்றன.
நினைவூட்டலுக்குரிய வீடியோ பதிவு பெருமளவில் வெளியிடப்பட்டன; இறுதி மூன்றோ நான்கோ குறிப்புகளாக அமைந்தன.
முழுமையான தொகுப்பாக “தமிழ்ப் பண்பாடு: ஊற்றுக்களும் ஓட்டங்களும்” நிறைவான பின்னர் நூலுருப் பெறும்போது திணை அரசியல் குறித்த முழுமைப் பரிமாணம் வெளிப்படும் என நம்புகிறேன். “தமிழ்ப் பண்பாடு…” எனும தொடருக்கு என எழுதப்பட்ட இறுதி அத்தியாயமான “நாட்டார் சமயங்களும் இந்து மதமும்” என்பதைத் தாங்கிய எழுநா இதழ் அண்மையில் வெளிவந்து பகிரப்பட்டு இருந்தது. அதற்கான அடுத்த அத்தியாயத்தை (இந்த நினைவூட்டலில் 6 வதாக இடம்பெற்ற பேசுமொருள்) புதிய வடிவில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
No comments:
Post a Comment