Tuesday, October 22, 2024
அடிநிலை
மக்கள் வரலாற்றில்
பக்தி இயக்கம்
ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பக்திப் பேரியக்கம் வேறுபட்ட வரலாற்றியலின் சமூக மாற்ற வடிவத்தை உலகுக்குக் காட்டி இருந்தது.
அருணகிரிநாதர், குமரகுருபர ர் போன்றோரது முருக வழிபாடு சார்ந்த பக்தி இயக்கத்துக்கான சமூக-பண்பாட்டு-வரலாற்றியல் காரணங்கள் பற்றிய ஆய்வுகளும் உள்ளன. எழுபதாம் ஆண்டுகளில் திராவிடர் இயக்கத்தின் நாத்திகவாத அலைக்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழ் சினிமாவின் பக்திப்பட வரிசை, பித்துக்குளி முருகதாசின் பாடல்கள், கிருபானந்த வாரியார் பிரசங்க இயக்கம் என்பவற்றின் வாயிலாக ஒரு பக்தி இயக்கம் எழுச்சி பெற்றதாக பேராசிரியர் கா. சிவத்தம்பி சொல்வார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுக நாவலர் சைவத்தின் காவலராக இருந்தது குறித்து ஐந்தாம் குரவராக கொண்டாடப்படும் ஒரு மரபும் உள்ளது. அவர் ‘சிறு தெய்வ வழிபாட்டை’ நிராகரித்து, ஆகம வரிபாட்டுக்கே முக்கியத்துவம் வழங்கியவர்; அந்தவகையில் மேலாதிக்கச் சைவ வாத த்தை முன்னிறுத்தியவர் - எனும் கணிப்பும் உண்டு!
அவரால் நிராகரிக்கப்பட்ட நாட்டார் வழிபாடே உழைக்கும் மக்களுக்கு உரியதாக இருந்தது. சாதி அகம்பாவத்துக்கு எதிராக அடிநிலையில் வைக்கப்பட்டிருந்த உழைக்கும் மக்கள் மத மாற்றத்தை நாடியபோது ஐந்தாம் குரவரின் இயக்கம் அதனைத் தடுக்க ஏற்ற நடைமுறை எதனையும் கொண்டிருக்கவில்லை.
கோப்பாயில் இருவரது முன்னெடுப்பின் வாயிலாக வைரவர் பக்தி இயக்கம் ஒன்று எழுச்சிபெற்று நூற்றைம்பது வருடங்களுக்கு மேலாக வீறுடன் இயங்கி வந்திருக்கிறது; அந்தக் கிராம மக்களை ஆளுமைமிக்கவர்களாக வளர்த்துப் புதிய பண்பாட்டுக் களமாக வடிவமைத்து உள்ளது.
ஒரு உதாரணம், எங்கும் ஏற்படக்கூடியதை போல வைரவர் கோயிலிலும் முரண்பாடு ஏற்பட்டுப் போட்டியாக இன்னொரு வைரவர் ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது. இரு தடவைகள் அவ்வாறு நிகழ்ந்த போதிலும் இரண்டு சந்தர்ப்பங்களிலும் முரண் களையப்பட்டு மீண்டும் ஒரே ஆலயமாக புத்தெழுச்சி பெற்ற வரலாறைக் காணும்போது வியப்புணர்வுக்கு ஆட்படாமல் இருக்க இயலாது. தோற்றுவித்த அந்த இரு ஆளுமைகளது ஒற்றுமை உணர்வு ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக அந்தக் கிராமத்தை இயக்கி வந்துள்ளது என்ற உண்மையை இது காட்டுகிறது எனலாம்!
எஸ். பாலா அவர்களால் இந்த வரலாறு “ஒரு கிராமத்தின் பக்தி நெறிப் பயணம்” என்ற நூலாக்கப்பட்டுள்ளது. பல நூல்களின் ஆசிரியராக மட்டுமன்றிப் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் எஸ். பாலா அரங்க இயலாளராகவும் அறியப்பட்டவர்!
மேட்டிமை வரலாற்றைக் கேள்விக்கு உள்ளாக்கும் அடிநிலை மக்களது பண்பாட்டுப் பாதுகாப்பு இயக்கத்தின் பல தளங்களிலான செயற்பாடுகளை இந்த நூல் வெளிப்படுத்தி நிற்கிறது (ஒரு சில தகவல் தவறுகளைத் திருத்திக்கொண்டு புதிய பல பதிப்புகள் வாயிலாக கிராமங்கள் தோறும் - கல்விப்புலம் எங்கும் இந்நூல் கொண்டுசெல்லப்படுவது அவசியம்).
No comments:
Post a Comment