Tuesday, October 22, 2024
காப்பிரேட் ஏகாதிபத்திய அரசைத்
தோற்கடித்து
விடுதலைத் தேசியப் புரட்சி
வென்றெடுக்கும்
சோசலிசம்
“நமது புரட்சி” எனும் லெனினால் (1923 ஆம் ஆண்டு) எழுதப்பட்ட கட்டுரை மிகச் சிறியது; வரலாற்றுச் செல்நெறி மாற்றத்தைக் காட்டுவதில் காத்திரமிக்க பங்களிப்பை நல்கியுள்ள கட்டுரை அது!
பின்தங்கிய - முதலாளித்துவ வளர்ச்சியை எட்டாத - ருஷ்யாவில் சோசலிச மாற்றத்தை எட்ட இயலாது என்ற ‘மாறா நிலை மார்க்சியர்களை’ நிராகரித்து, ஏகாதிபத்தியச் சகாப்தத்தில் மார்க்ஸ் எதிர்பார்த்ததற்கு மாறான வழியிலேயே சோசலிசக் கட்டுமானம் அமையும் எனக் காட்டுவார் லெனின்!
“ஆனால், அதிகமாகவோ குறைவாகவோ செல்வாக்குடைய மேற்கு ஐரோப்பிய நாடு ஒவ்வொன்றும் ஈடுபட்டிருக்கும்படியான ஏகாதிபத்திய உலகப் போரில் ருஷ்யாவை இழுத்துவிட்ட அந்தச் சூழ்நிலை - மற்றும் கிழக்குலகில் முற்றி வந்த, அல்லது, ஏற்கனவே ஓரளவுற்குத் தொடங்கிவிட்ட புரட்சிகளது முன்னறிவிப்பை ருஷ்யா கண்டுகொள்ளும்படிச் செய்த அந்தச் சூழ்நிலை - ‘விவசாயிப் போர்’ ஒன்றைத் தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் இணைத்துக் கொள்ளும் சாத்தியப்பாடு பிரஷ்யாவுக்குக் கைவரப்பெறலாம் என்று மாபெரும் ‘மார்க்சியவாதியான’ மார்க்சே 1856 இல் ஆலோசனை கூறிய அதே இணைப்பை நாம் சாதித்துக் கொள்ளும்படியான ஒரு நிலைக்கு ருஷ்யாவையும் ருஷ்ய வளர்ச்சியையும் கொண்டுவந்த நிலைமைகளைத் தோற்றுவிக்குமாயின் என்ன செய்வதாம்?”
பாட்டாளி வர்க்க - முதலாளி வர்க்க முரண் நன்கு முற்றிய மேற்கு ஐரோப்பா சோசலிசத்துக்கு மாறுகிற வரை ருஷ்யப் பாட்டாளி வர்க்க (பண்ணை அடிமைத்தனத்தைத் தகர்க்கும் விடுதலைத் தேசியத்தை வென்றெடுத்த விவசாயி வர்க்க மற்றும் ஜாரிஸ ருஷ்யாவிலிருந்து சுயநிர்ணய உரிமை பெற்றுச் சோசலிசக் கூட்டரசில் இணைந்திருந்த ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின்) அரசு பொறுமை காக்க இயலாது என்பதையே லெனின் வலியுறுத்துகிறார்!
இரண்டொரு தசாப்தங்களின் பின்னர் உலகின் பிச்சைக்கார நாடாக ஒடுங்கிக்கிடந்த சீனாவில் சோசலிச மாற்றியமைத்தலை முன்னெடுத்த மாஓ சேதுங் தூர கிழக்குக்குப் புரட்சி அலை சாத்தியப்பட்டதை வெளிப்படுத்தினார்; இனி மேற்கல்ல, கிழக்குலகே வரலாற்று மாற்ற வீச்சின் மையமென மாஓ முன்னறிந்து பிரகடனப்படுத்தியதை மெய்ப்பிக்கும் வகையில் மக்கள் சீனம் விடுதலைத்தேசிய உலகின் தலைமை சக்தியாக மிளிர்ந்து வருகிறது!
“நமது புரட்சி” என்ற மேற்படி கட்டுரையின் இறுதிப் பகுதியில் லெனின் இந்த மாற்றத்தைக் கோடிட்டுக் காட்டி உள்ளார்: “கிழக்குலக நாடுகளில், மக்கள் தொகையில் இன்னும் மிகப்பெரிய, சமூக நிலைமைகளில் மேலும் பெரிய அளவுக்குப் பல்வேறுபட்ட இந்நாடுகளில், இனி நடைபெறப் போகும் புரட்சிகள் ருஷ்யப் புரட்சியைக் காட்டிலும் இன்னும் கூட அதிகமாகத் தனி இயல்புகளை நிச்சயம் வெளிப்படுத்திக் காட்டும் என்பது நமது ஐரோப்பிய அற்பவாதச் சிறுமதியினருக்கும் கனவிலும் கருத முடியாத ஒன்று தான்.”
‘அதிகத் தனி இயல்புடன்’ மாற்றங்களைப் பெற்றுள்ள இன்றைய உலக ஒழுங்கை எவ்வாறு மதிப்பிடப் போகிறோம்?
உலக மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆட்பட்டு நொடிந்து போகும்போது விரல் விட்டு எண்ணக்கூடிய காப்பிரேட் நிறுவனங்கள் வருமானத்தைப் பன்மடங்கு பெருக்க முடிந்ததை எப்படி விளக்கப் போகிறோம்?
இன்றைய பிரதான முரண்பாடு காப்பிரேட் ஏகாதிபத்திய அரசு (அதற்கு அடிபணியும் உள்ளூர் அரசு) - மேலாதிக்கத்தை தகர்க்க வேண்டிய விடுதலைத் தேசியங்கள் என்பவற்றிடையே இயக்கம் கொண்டுள்ளது என்பதை இனியும் கண்டுகொள்ளாதிருக்க இயலுமா?
இலங்கையில் பௌத்த சிங்களப் பேரின வாத த்துக்கு எதிராக சிறு தேசிய இனங்கள் போராடும் அவசியம் உடையன; அது இனத்தேசிய வாத அடிப்படையில் முன்னெடுக்க ஏற்றதல்ல. இந்திய-அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராகப் போராட வேண்டியுள்ள சிங்களத் தேசியத்துடன் ஐக்கியப்படும் அவசியத்தை விடுதலைத் தேசியச் சிந்தனை வலியுறுத்தி நிற்கிறது!
இந்தியாவில் தலித்திய வாத த் தனிமைப்படல் பொதுவான மக்கள் விடுதலைக் குறிக்கோளுக்கு எதிராகச் சாதிப் பிரச்சினையை மேலெழச் செய்யும் முனைப்புடன் இயங்கக் காண்கிறோம். முப்பது வருடங்களுக்கு முன்னர் பொது இடங்களில் காந்தி, நேரு படம் இருந்தது என்றால் ‘ஏன் அங்கே அம்பேத்கர் படம் இல்லை?’ என்று கேட்பது புரட்சி போலக் காட்டப்படுகிறது.
ஏகாதிபத்தியத் தகர்ப்பில் அம்பேத்கர் முன்னுதாரணம் மிக்க பங்களிப்பை நல்கவில்லை. காந்தியும் நேருவும் தம்மளவில் சரியெனப்பட்ட கோட்பாட்டு அடிப்படையில் ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்க்க முயன்றனர். அதுவே அன்றைய வரலாற்று அவசியமாக இருந்ததால், அதனை மதிக்கும் வகையில் அவர்களது படங்களை மக்கள் பிரபலப்படுத்தினர் (முதலாளித்துவ ஊடகங்கள் அதற்கான வெளியை ஏற்படுத்தின எனும் பக்கத்தையும் மறக்க இயலாது).
அவர்களது பாதை பூரண விடுதலைத் தேசியத்துக்கு உரியதல்ல எனும்போது ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்புக்காகப் போராடிய அம்பேத்கர் கவனம் பெறுகிறார். அன்றைய நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை விடவும் தான் சார்ந்த மக்களது ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடுவது அவருக்கு முதன்மையாகப் பட்டிருக்கலாம்; சாதியத் தகர்ப்பு முதன்மை பெறும் இன்றைய நிலையில் விடுதலைத் தேசிய மார்க்கத்துக்கு எதிராகத் தலித் மக்களைத் தனிப்பட்டுத்துவது எப்படிச் சரியாகும்? (இந்தத் தனிப்படுத்தலை ஊடக காப்பிரேட் சதித்திட்டம் கையாள்கிறது என்பதையும் மறக்க இயலாது)!
எமது முன்னோடிகள் பல தளங்களில் விடுதலைக்காகப் போராடினர். ஒவ்வொரு தரப்பும் மகத்தான பங்களிப்புகளை நல்கினர்; சில பல தவறுகளும் நேர்ந்தன.
எந்தவொரு தலைவரையும் (அணியையும்) வழிபாட்டுக்கு உரியதாகவோ, தூற்றுதலுக்கு உரியதாகவோ அணுகுவதை விடுத்து சாதனைகளை வளர்த்தெடுப்போம், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வோம்.
புதிய தடத்தில்
புதிய சிந்தனையை வரித்துப்
புத்துணர்வுடன்
ஒன்றுபட்டு
முன்னேறுவோம்!
No comments:
Post a Comment