Tuesday, October 15, 2024
தேவரையாளி இந்துக் கல்லூரியில்
பத்தாவது புத்தகப் பண்பாட்டரங்க
நிகழ்வின் தடங்கள்:
தே.இ.கல்லூரி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பாடசாலை; ஏற்கனவே தெணியான் அவர்களுக்கான பவள விழா இந்தப் பாடசாலைத் திறந்தவெளி மண்டபத்தில் இடம்பெற்ற போது உரையாளராக அங்கே சென்ற சமயத்தில் பாடசாலை குறித்த வரலாற்றுப் புரிதல் சிறிய அளவில் ஏற்பட்டது. தொடர்ந்து பலரது எழுத்துகள், வாய்மொழி வரலாற்றுத் தகவல்கள் வாயிலாக விரிவாக அறிதல் ஏற்பட்டது. குறிப்பாக, உணர்வுபூர்வமாக இராஜேஸ்கண்ணா ஆற்றிய உரைகள் அதன் நிறுவுனரான சூரன் பற்றி, அவருக்கான சிலை நிர்மாணத்தில் தெணியான் தலைமையில் ஊரவர் வகித்த பங்குகள் குறித்துத் தெரிந்துகொண்ட போது அப்பாடசாலை மீது விசேட பக்தி ஏற்பட்டது (பொதுவாகவே நூலகங்கள், பாடசாலைகள் போன்றவற்றைக் காணும்போது மனதால் ஆத்மார்த்த வழிபாட்டை என்னை மறந்து நிகழ்த்துவேன்).
பத்தாவது புத்தகப் பண்பாட்டு அரங்கம் தேவரையாளி இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற போது இரு தினங்களும் பங்கெடுத்து உரைகளையும் புத்தகங்களையும் உள்வாங்கினேன்.
பத்து நூல்களுக்கான அறிமுக உரைகள் மிகச் சிறப்பாக இடம்பெற்றன; அனைவரும் பொறுப்புணர்வுடன் நூல்களைப் படித்துக் கருத்துரைத்தனர் (ஒரேயொரு உரையாளர் பட்டிமன்ற அனுபவத்தில், மணியொலிக்கவில்லை என்பதால் ஒரு மணி நேரத்தைக் கடந்தும் பேசினார்; அவரது தவறல்ல ஒலிக்க மறந்த மணி வேறு வேலைகளில் மூழ்கி இருந்ததால் நேர்ந்த தப்புத்தாளம்).
நேற்றைய (16.4.2023) சில பதிவுகள் இங்கே. நிகழ்வு நிறைவடைந்த பின்னர் கலாமணி அவர்கள் சத்திரசிகிச்சையை சந்தித்துக் குணமடைந்து வரும் நிலையில் (பூரண சுகதேகியாக ஆகியிருந்தால் நிகழ்வுகளில் பங்கேற்றிருப்பார்) வீட்டில் சென்று சந்தித்தோம்; ‘ஜீவநதி’ பரணீதரன் இன்னொரு முக்கிய வைபவத்தால் நிகழ்வுகளில் பங்கேற்க இயலவில்லை. கலாமணி அவர்களுடன் அந்த வைபவக் களத்தையும் சென்று பார்த்தோம். அவைபற்றிய பதிவு நாளை!
நேற்று பாடசாலை நுழைந்ததும் சூரன் அவர்களது கம்பீரத் தோற்றத்தை உள்ளீர்த்தேன். அதிபர் ச. செல்வாநந்தன் அவர்களுடன் பாடசாலை பற்றி உரையாடிக்கொண்டு இருந்தபோது நிகழ்வில் பங்கேற்க சூரன் அவர்களது பேரன் வந்தார்; அவரைக் கைகொடுத்து அதிபர் வரவேற்றதையும் பதிவாக்கினேன்.
ஐந்து நூல்களது அறிமுக உரையாற்றியோர் அடுத்து வரிசைகட்டி வருவர். அவர்கள்: இரா. அகிலன், ச. ஹாயத்திரி, வேல். நந்தகுமார், பு. நளாயினி, இ. சத்தியமலர்.
நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய மாணவர் சாருஜனன் அனைவரது பாராட்டுதல்களைப் பெற்றவர்; அவரும் உள்ளார்!
தெணியான் அரங்கில் நிகழ்ந்த நூலறிமுக உரைகளுக்குச் சிறப்பான தலைமையுரை உடன், காத்திரமான வகையில் அதனைத் தொடக்கி வைத்தவர் மு. அநாதரட்சகன்!
பயனுறு கருத்துரைகளை வழங்கியோரும் பதிவில்…!
தேசிய கலை இலக்கியப் பேரவையின் புத்தகப் பண்பாட்டமைப்பு இந்நிகழ்வை மேற்கொண்டு வருவதன் காரணத்தால் ஏற்பாட்டாளராகத் தலைமையேற்றுச் சிறப்புடன் முன்னெடுத்துவரும் தேவ சபா தனூஜன் நன்றியுரை சொன்ன கணமும் பதிவில்!
No comments:
Post a Comment