Wednesday, October 2, 2024
“பலவீனமானவர்கள் இந்தப் பக்கம் வர வேண்டாம்”
“பலவீனமானவர்கள்
இந்தப் பக்கம்
வர வேண்டாம்”
- என்பதாக எங்கேனும்
இருக்கக் கண்டால்
காத தூரம் விலகிப்போகும்
மனமிருக்கலாம்
அதனிடையே இறங்கி
வலுமைமிக்க இதயத்தை
வாலாயமாக்கும்
வாய்ப்புகளும் உள்ளன
சின்ன வயதில் சண்டைக் காட்சி, வெட்டுக் காயம், இரத்தம், சோக ரசமான காட்சிகள் என்பவற்றை விரும்பாத காரணத்தால் சினிமாவை நான் வெறுத்ததுண்டு. பின்னர் அவற்றைக் கலையாகப் பார்க்கப் பழகினேன்.
எப்போதும் வேள்வித் திருவிழாக்களில் பலியிடப்படுவதைப் பார்த்ததில்லை. மனப் பயம் தடை விதிக்கும்.
இப்போதும் வைத்தியசாலைக்குச் சென்றால் அதிக நேரம் நிற்க இயலாத வருத்தம் உண்டு. நெருங்கிய உறவுகள் சார்ந்து வார்ட்டில் தங்கிப் பயிற்சி எடுத்துவிட்டேன்.
முன்னர் அங்கக் குறைபாடுகளைப் பார்ப்பதில் மனத்தடைகள் இருந்தன. அவற்றுக்கு உரியவர்கள் ஆற்றலற்றுப் பெருந்துயரை அனுபவிப்பர் எனக் கலங்கியதுண்டு.
இன்று நிலைமை மாறியுள்ளது; சமூகம் முன்னேறி உள்ளது. அவர்களை ‘வலது குறைந்தோர்’ என நினைப்பதோ சொல்வதோ குற்றமென உணர்த்தப்படுகிற வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கான ஒரு கதவு அடைக்கப்படும்போது நூறு கதவுகளைப் பயன்படுத்தும் ஆற்றலை வருவித்து ‘மாற்றுத் திறனாளிகள்’ என அவர்கள் திகழ்கின்றனர்.
நேற்று (3.12.2023) ‘சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்’ வழக்கம்பராயிலுள்ள சுழிபுரம் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
“புலர் அறக்கட்டளை” அமைப்பு நடாத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு மிக ஆரோக்கியமாக அமைந்தது.
கலந்துகொண்ட வைத்தியர்கள், பிரதேச செயலாளர், கிராம சேவகர்கள் எனப் பலதரப்பட்டோர் அவர்கள் ஆற்றலுடன் ஊடாட ஏற்ற வெளிகளை ஏற்படுத்தும் பொறுப்புகளை வலியுறுத்தித் தத்தம் களங்களில் அவற்றைச் செயற்படுத்துவதாக உறுதி கூறினர்!
கே.ஏ.எஸ். சத்தியமனை நூலக நிறுவுநர் சத்தியமலர் Buby Ravi நூலகத்தில் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டுக்கான ஏற்பாடுகளை இனிமேல் மேற்கொள்வதாக உறுதியளித்தார்!
செயற்படுதல் வாயிலாகச் சமூகம் மென்மேலும் விருத்தி பெற்றுப்
புதிய பண்பாட்டுத் தளம் சாத்தியமாகும்!
No comments:
Post a Comment