Tuesday, October 8, 2024

கலம் அமைப்பில் அரியதொரு அரங்க அனுபவம் நேற்று (8.7.2023) மாலை யாழ். கச்சேரிக்கு அருகே நாடகம் ஒன்று இடம்பெறுவதாக தேவர் சொல்லி அழைத்துச் சென்றார். நானும் விபரம் கேட்கவில்லை; அவருக்கும் முழுதாகத் தெரிந்திருக்கவில்லை என்பதை அங்கே சென்ற பின்னர் அறிய இயலுமாக இருந்தது. நாடகம் தொடங்க முன்னர் வினாக்கொத்து ஒன்றைத் தந்து அரங்காடல் நிறைவுற்றதும் அந்த அனுபவத்தை நிரப்பித் தருமாறு கேட்டனர். முதல் கேள்வியே ‘இந்தச் செயற்பாடு எத்தகையது என்பது பற்றியும் இதனை எவ்வாறு தெரிந்துகொண்டீர்கள்’ என்பதாகவும் இருந்தது. உடனே தேவர் ‘செம்முகம் சீலன் மூலமாக அறிந்தேன்’ என்றார். அருகே இருந்தவர்: ‘பத்திரிகைகளில் வந்ததே’ ‘பத்திரிகைகள் இப்போது பார்ப்பதில்லை’ ‘முகநூலில் வந்ததே’ ‘அதை முற்றாகவே பார்ப்பதில்லை’ என்றவாறு உரையாடல். நான் இரண்டும் ஓரளவு பார்ப்பதுண்டு, ஆயினும் கண்ணில் பட்டதில்லை. இப்போதும் இப்பதிவுக்காக செம்முகம், தேசிய கலை இலக்கியப் பேரவை என்பவற்றுக்கான பக்கங்களைப் பார்த்தேன் - எங்கும் இது பற்றி இல்லை. இத்தகைய காத்திரமான நிகழ்வுகள் பற்றிப் பரவலாக அறியத் தரும் முயற்சிக்கும் கூடுதல் கவனம் செலுத்துதல் அவசியம். GTZ எனும் ஜெர்மன் அமைப்பின் ஏற்பாட்டில் பேராதெனிய-யாழ்ப்பாணம் பல்கலைக் கழகங்கள் இணைந்து ஜெர்மனியப் படைப்பொன்றை எமது மண்ணுக்கேற்றதாக ஆக்கித் தந்துள்ளனர். கிழக்கு, மேற்கு ஜெர்மன் எனப் பிரிந்து ஒன்றுடனொன்று மோதிய அவலம் ஏற்படுத்திய பாதிப்பை அற்புதமாக அரங்க ஆற்றுகைக்கு உரியதாக்கி உள்ளார். எம்மவர்களும் மூலப் பிரதியை முழுதாக தருகிற வேளை எமக்குரிய விடயங்களை உள்ளூடாக்கிக் கொண்டுள்ளனர். இங்கே வடக்குத் தெற்கு. கொலை அட்டூழியத் துயரைக் கொண்டாட்ட இன்பமாக மடைமாற்றும் மன வக்கிரம் கிழக்கு-மேற்குக்கானது மட்டுமல்ல, வடக்கு-தெற்குக்கும் உரியதே. ஏற்றத்தாழ்வுச் சுரண்டல் உள்ள மட்டும் நீடிக்கும். ‘எனக்குப் பின்னே சிதிலமான ஐரோப்பா’ எனப் படைப்பாளி சொன்ன காலம் மலையேறி இன்று ஐரோப்பிய ஒன்றியமாக ஏகாதிபத்திய உள்மோதல்களை ஒரு பக்கம் வைத்து யுத்தங்களை எங்கள் மண்களை நோக்கி ஏற்றுமதி செய்துவிட்டனர். இன்னமும் வடக்குத் தெற்காக மோதும் எம்மத்தியில் இரண்டுக்குமான பல்கலைக் கழக மாணவர்கள் இணைந்து தந்த இந்த நாடக நிறைவில் காயப்பட்ட தமிழ்ப் பெண் தன்னுடன் கொண்டு வந்த கோலை (பிரச்சினை, நீதி, தீர்வு…) அருகிலுள்ள சக பாடிக்குக் கொடுக்க, கைமாறிக் கைமாறிச் சென்று சிங்கள நடன நங்கையை அடையும். அருகே சிங்கள நடன மத்தள காரர். அவர் தாளத்துக்கு அசைந்தாடி நகர்ந்து வந்தவர் காயப்பட்ட தமிழ் பெண்ணிடம் கொடுத்து ஒன்றுபடலைச் சொல்வார். பிரச்சினைகள் அனைவர்க்கும் ஆனது; ஒன்றுபட்டுத் தீர்வை வென்றெடுக்கும் பொறுப்பும் அனைவருக்கும் முன்! முன்னதாக, நாடகத்தைத் தொடரப்போவதில்லை என தமிழ்-சிங்கள மோதலிளைஞர்கள் சலித்துக்கொள்ளல்… தொடர்ந்தால் ‘நான் அவனாவேன்’ என இருவரும்! நல்ல முயற்சி! அறிவோர் அரங்கைக் கடந்து மக்களிடம் கொண்டு செல்லப்படுதல் அவசியம்!

No comments:

Post a Comment