Monday, October 7, 2024
கழகத்தானாக கலகம் - 2
கழகத்தானாக கலகம் - 2
நேற்றுப் பேசிய விடயத்தைத் தொடர வேண்டி உள்ளது. சிவன் கோயிலுடன் இணைந்த அறநெறிப் பாடசாலையின் 25 வது வருட விழா பற்றிச் சொல்ல வந்தபோது நாங்கள் தொடங்கிய ‘காலையடி முருகன் விளையாட்டுக் கழகம்’ செயற்பட்ட பாங்கை வெளிப்படுத்தப் போவதாக கூறியிருந்தேன்!
நாங்கள் உருவாகிய வகையைக் கூறுவது இன்றைய இளைய தலைமுறையினர் அதனை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல; அதிலிருந்து நல்ல அம்சங்களைக் கற்றுத் தொடர்ந்து வளர்ப்பதோடு தவறுகளைப் படிப்பினையாகக் கொள்ள இயலும்!
எமது முன்னோடிகளிடம் இருந்து கற்றுத்தான் புதிய பாதையை நாம் வகுத்தோம்; அந்த வரலாற்றுத் தொடர்ச்சியை அறிவதன் வாயிலாகவே புது வரலாறும் சித்திக்கும்!
இப்படிச் சொல்வதால் 13,14 வயதுகளில் கழகத்தைத் தொடங்கிய போது ஊரை நன்கு அறிந்து வைத்திருந்தோம் என்று பொருளல்ல. அந்த வெள்ளிவிழாக் கூட்டத்தில் பிறைசூடிக் குருக்கள் நிகழ்த்திய வாழ்த்துரையின் போதுதான் எனது ஊரின் அடிப்படை அம்சம் ஒன்றைப் புரிந்து கொண்டேன்.
முன்னதாக ஊரின் சிறிய குறிச்சிக்குள் இருந்த செட்டிச் சமூகத்தவர் விதானையாக இருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஊரிலுள்ள பெரும்பாலான காணிகளைத் தமக்குச் சொந்தமாக்கிக் காணிப் பதிவைச் செய்திருந்ததாகக் கருதி வந்தேன்; எமது முன்னோடிகளில் ஒருவரால் அப்படி எழுதப்பட்ட கட்டுரையைப் படித்ததனால் அந்த எண்ணம் என்னிடம் ஏற்பட்டு இருந்தது.
பிறைசூடிக் குருக்கள் பேசும்போது அந்தச் சிவன் கோயில் பிரதேசம் முழுவதையும் செட்டிகுறிச்சி என்றார்; நாங்கள் அறிந்த செட்டிகுறிச்சி இங்கிருந்து சற்றுத் தொலைவில் குறுகிப் போயுள்ளது. அவர் அப்படிப் பேசும்போது அந்த அறநெறிப் பாடசாலையின் பெயர்ப் பலகையைப் பார்த்தேன், அதிலே ‘சாத்தாவோலை’ என்றிருந்ததைக் கண்டு மேலும் ஒரு குழப்பம்; ஏதோவொரு தெளிவைத் தேடித் தள்ளப்படுவதை உணர்ந்தேன்.
கூட்டம் நிறைவாக முன்னரே பிறைசூடிக் குருக்கள் வெளியேற வேண்டி இருந்தது. வழக்கமாக இடையில் கூட்டத்தை நீங்கிப் போய் பேசும் பழக்கம் எனக்கு இருந்தது கிடையாது; இந்த விடயத்தை உடன் அறிய வேண்டும் என்ற தவிப்புடன் போய் உரையாடினேன்.
“இவடத்தை செட்டிகுறிச்சி என்று பேசினீங்களே, இப்ப அது தள்ளித்தானே இருக்கு?”
“நான் அறியச் சிறுவனாக இருந்தபோது செட்டியார்கள் தான் இங்கே எல்லாம் இருந்தார்கள். பக்கத்தில் உள்ள செட்டி பள்ளிக்கூடம் (ஆறுமுக வித்தியாசாலை) அக்கம் பக்கம் அவர்கள் குடியிருந்து அவர்களால் உருவாக்கப்பட்டது; சாந்தை சிற்றம்பல வித்தியாசாலையும் அப்படித்தான்.”
“அப்பிடி என்றால் இங்கிருந்தவர்கள் எல்லாம் எங்கே?”
“அவர்கள் அராலி, மட்டுவில்… என்று பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து அப்பவே போய்விட்டார்கள்.”
“இந்த இடம் ‘சாத்தாவோலை’ என்று போட்டு இருக்கே; அப்படி என்றால் ஐயனார் கோயில் இங்கை இருந்ததா?”
“நான் அறியக் கூடியதாக ஐயனார் கோயில் இல்லை; அப்பவே சின்ன மடமாகச் சிவன் கோயிலைத்தான் யோகி கார்த்திகேசு நடாத்தினவர்.”
செட்டியார்கள் சாத்தா (ஐயனார்) வழிபாட்டுடன் இருந்து முருக வழிபாட்டுக்கு மாறி இருக்கலாம்; இன்றைய ஐயனார்கள் முருகனாக மாறியபடி (பண்டத்தெருப்பு இந்துக் கல்லூரி அருகே இந்த மாற்றம் எமது கண் முன்னால் நடந்துள்ளது). இங்கே ஐயனார் நேரடியாகச் சிவனாகப் பரிணமித்தாரா?
இல்லையென்றால்,
இந்தச் ‘சாத்தாவோலை’ யாரால் யாருக்கு எப்போது எழுதி வழங்கப்பட்டு எப்படி எல்லாம் மாறி வந்தது?
சென்ற நூற்றாண்டின் ஐம்பதாம் ஆண்டுகளில் எங்களூரவர்களது முலாவது படித்த தலைமுறை உருவாகி ஊரின் கல்வி எழுச்சிக்கு அடித்தளமிட்டனர். அப்போது செட்டிச் சமூகத்தவர்களும் ஏறத்தாழச் சம அளவில் இருந்தமையால் இரு தரப்பாரும் இணைந்தே எமக்கான சனசமூக நிலையத்தை உருவாக்கினர். எனது அப்பாவின் நண்பர்கள் இணைந்து அந்த வாசிகசாலையைக் கட்டியெழுப்பியதை அறிந்திருக்கிறேன். மறுமலர்ச்சித் தந்தை கந்தசாமி ஆசிரியர் (கந்தையா வாத்தியார்) அதன் தலைவராக இருந்தபோது அப்பா செயலாளராக இருந்ததாகப் பலரும் சொல்லக் கேள்வி; அதன் காரணமாகவே நாங்கள் வளர்ந்து கொண்டிருந்த போது வெற்றி மடமெனத் தான் பராமரித்த பெருவளவில் நாங்கள் கழகம் அமைக்க அவர் அனுமதித்தார் என்பதனை அப்போதே உணரக்கூடியதாக இருந்தது!
இவை, ‘நான்’ , ‘அப்பா’ என்ற தனி நபர்கள் அல்ல; அவ்வாறு நாங்களும் இல்லை, ஊரும் இல்லை. அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஒன்றுபட்டு உழைத்த பேறு இந்த அமைப்புகள்.
எமது ஊரவர் படித்து முன்னேறி அரச உத்தியோகங்களை எட்டியபோது காணி வளவுகள் தேவைப்பட தமக்குரியவற்றை விற்று யாழ் நகருக்கு அண்மித்த இடங்களுக்கு செட்டிச் சமூகத்தவர்கள் பெயர்ந்துள்ளனர். கந்தையா வாத்தியார் போலச் சில குடும்பத்தவர்கள் தொடர்ந்தும் எங்கள் மத்தியில் வாழ்ந்தனர்!
சரி, ஐம்பதுகளில் எழுச்சியுடன் உருவான சனசமூக நிலையம் அறுபதுகளில் எங்களை உருவாக்கிய கதைக்கு வருவோம்!
அப்போது எங்களது மாமாக்களின் தலைமுறை எழுச்சி உணர்வை எங்களிடம் கையளித்தனர்!
நாளை தொடர்ந்து பேசுவோம்!!
No comments:
Post a Comment