Thursday, October 24, 2024

அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி! இந்தியக் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று(27.07.2015) மாலை தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார் எனும் செய்தி அனைவரையும் அதிர்வுக்குள்ளாக்கியது. அவரது வயது 84 என்றபோதிலும் நோயுற்று மரணிப்பாரோ என்ற எதிர்பாப்பு எதுவும் இருக்கவில்லை. அப்போதும் கூட ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிவிட்டே ,அவரது இதயம் தனது இறுதி அதிர்வைக் காட்ட அவர் இடமளித்திருந்தார். ஒரு சாதனையாளர் மறைந்ததும் சம்பிருதாயத்துக்காக இறுதி மரியாதை செலுத்துவது, அல்லது அப்படி என்ன சாதனை - அவற்றின் பின்னே இன்ன இன்ன தப்புத்தாளங்கள் இருந்தனவே எனப் பட்டியல் இடுவது இன்றைய மரபாகியுள்ளது. அப்துல் கலாமும் இதற்கு விலக்காக மாட்டார். அணுகுண்டு, ஏவுகணை என்பவற்றைக் கண்டு பிடிப்பதில் அவரது பங்களிப்பு, ஜனாதிபதியாக இருந்து அவர் ஆற்றிய பணி என்பவற்றுக்கு அப்பால் அவர் உன்னதமிக்க ஒரு மனிதர், முன்னுதாரணமான மானுட ஆளுமை என்பதற்காக விமர்சனங்களுக்கும் அப்பால் போற்றப்பட வேண்டியவர் எனப் புதிய பண்பாட்டுத் தளம் கருதுகின்றது. இவரது முழுப்பெயர் அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். இந்திய குடியரசு தலைவராக பதவி ஏற்கும் முன்னர், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அழைக்கப்பட்டு வந்தார்.
அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம்! இறுதி மூச்சுவரை தனது மக்களுக்காக - குறிப்பாக எதிர்கால வளம்மிக்க உலகைப் படைக்கவேண்டிய மாணவர் சமூகத்துக்காக உழைக்கும் அவரது மனப்பாங்கைக் கையேற்று விருத்தி செய்ய உறுதி பூணுவோம்! புதிய பண்பாட்டுச் சமூகம் உங்களைத் தனக்குரியவராக வரித்துள்ளது மாமனிதரே; எங்கும் சென்றுவிடவில்லை நீங்கள், மக்கள் உள்ளங்களில் வாழ்கிறீர்கள்! வணக்கம் ஐயா! எங்களை மீறி வரும் கண்ணீரை நீங்கள் விரும்பாத போதும் வருகிறதே, என்ன செய்ய. இல்லை, உங்கள் மூச்சு வலியுறுத்தியவாறு புதிய உலகம் படைப்போம்! உங்கள் மூச்சு எங்களில் கலந்துள்ளது !

No comments:

Post a Comment