Wednesday, October 23, 2024

மாத்தி யோசிக்க நிர்ப்பந்திக்கும் நிதர்சனம் நேற்றைய தினம் ஒக்ரோபர் 21 எழுச்சியின் ஐம்பத்தைந்தாம் ஆண்டு நினைவைப் பகிர்ந்துகொண்ட மெய்நிகர் அமர்வு ஒன்றில் பங்கேற்றிருந்தோம். “ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கத்தின் வரலாற்றியலுக்கான பங்களிப்பு” எனும் தலைப்பிலானது எனது உரை. அதனை எழுத வேண்டுமெனத் தோழர்கள் வலியுறுத்தினர். எழுதுவேன். ஒரு வாரத்திற்கு மேலாக ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம் பற்றிய பேசுபொருள் வெவ்வேறு தளங்களில் இடம்பெற்றபடி உள்ளது. முதல் தடவையாக அதனை அறிமுகங்கொள்கிற இளைய தலைமுறை நண்பர்கள் பலர் இதனை ஊடகங்கள் பரவலாக்காது இருப்பது ஏன் என ஆச்சரியம் தெரிவித்தனர். காப்பிரேட் ஏகாதிபத்தியப் பிடியில் ஏதோவொரு வகையில் அகப்பட்டிருக்கும் ஊடகங்கள் மக்கள் விடுதலைப் போராட்டத்துக்கான அந்தப் பக்கங்களை காட்டப்போவதில்லை; சாதிவாத, இனவாத, மதவாத, வர்க்கவாத முடக்கங்களில் அழுந்தும் மனங்களாக ஊடகங்கள் இன்றைய தலைமுறையினரைக் கட்டமைத்து வருகின்றன. அன்றைய எழுச்சியை வர்க்கப் போராட்டம் என வடிவப்படுத்த முனைகிற வர்க்கவாதம் ஒருபுறம்; அம்பேத்கரிய-பெரியாரியச் சாதிப்போராட்டமாக அதனை விருத்திபெறக் கொம்யூனிஸ்ட்டுகள் விடவில்லை, அதனாலேதான் சாதி ஒழிந்து போகாமல் இப்போதும் வட்டுக்கோட்டை அனர்த்தம் போன்றன இடம்பெற ஏதுவாகி உள்ளன எனும் விமரிசனங்கள் இன்னொரு புறம். முதலாளித்துவ ஜனநாயக முழுமைப்படல் ஏற்பட்டால் சாதி ஒழிந்துவிடும் என்ற குரல்களையும் கேட்கிறோம்! ஐரோப்பிய வர்க்க சமூக முறையினின்றும் வேறான எமது வாழ்முறையைச் சார்ந்த - எமக்கேயுரிய, தனித்துவமிக்க வரலாற்று இயக்கப்போக்கை விளக்கம் கொள்ள மறப்பதால் (மறுப்பதால்) இத்தகைய வர்க்கவாத, சாதிவாத எண்ணங்கள்!
இனமரபுக்குழுக்கள் வர்க்கங்களாகப் பிளவுபட்டு ஏற்பட்டது ஐரோப்பிய சமூக முறை; உற்பத்தி சக்தி விருத்தி ஏற்படும்போது பழைய உற்பத்தி உறவு தகர்க்கப்படும் - அவற்றுக்குரிய பழைய வர்க்கங்கள் அற்றுப்போகப் புதிய உற்பத்தி உறவுக்கான புதிய வர்க்கங்கள் வரலாற்று அரங்கினில் உருவாகும். வர்க்கப் பிளவுறாமல் இனமரபுக் குழு மேலாண்மையால் ஏற்பட்ட சாதி வாழ்முறை எமக்கானது. சமூக அமைப்பு மாற்றத்தில் வேறுபடும் அமைப்பு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சாதி மேலாதிக்கத்தை வென்றெடுத்திருக்கும்; முந்திய மேலாதிக்க சாதி அதிகாரத்தை இழந்தபோதிலும் தொடர்ந்தும் அடுத்தடுத்த அமைப்புகளில் நீடிக்கும், மீளவும் ஆதிக்கம்பெறப் போராடும். ஐரோப்பாவின் சோசலிசம் வர்க்கங்களை ஒழிப்பதாக இருந்தது. பாட்டாளி வர்க்க அரசு ஏற்படும் போது ஒரு வர்க்கமாக முதலாளி வர்க்கம் அற்றுப்போயிருக்கும்; மீண்டெழ இடம் கொடுக்காத வகையில் அரை-அரசுக்கு உரியதாக கொம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியப்படும்! எங்களுடைய வரலாறு அத்தகைய வர்க்க உறவு சார்ந்ததல்ல; வேளிர்கள் ஆட்சியில் திணைகளிடையே சமத்துவம்(கிமு 7-கிமு4 ம் நூற்றாண்டுகள்), மருத திணை மேலாதிக்கத்தில் கிழார்கள் மேலாதிக்கம் (கிமு 3 - கிபி 1 ம் நூற்றாண்டுகள்), வணிகச்சாதி மேலாதிக்கம் (கிபி 2 - கிபி 6 ம் நூற்றாண்டுகள்), வெள்ளாள-பிராமண மேலாதிக்கம் (கிபி 7-கிபி 18 ம் நூற்றா.) காலனித்துவ-ஏகாதிபத்தியப் பிடிப்பில் இன்றுவரையான காலம் நீட்சிபெற்று உள்ளது என்பதாக ஏற்கனவே எமக்கான வரலாற்றுப்போக்கை வகைப்படுத்த முயற்சிக்கிறோம். மேலாதிக்கங்கள் தகர்க்கப்பட்டு, ஏற்றத்தாழ்வுச் சமூக நியதிகள் அகற்றப்பட்டால் மட்டுமே அவற்றின் பொருட்டு உருவான சாதிகள் அற்றுப் போகும் என்பதனைக் கவனத்தில் கொள்ளாமல் இருக்கலாமா? எமக்கான சோசலிசம், சாதிய - மூலதன மேலாதிக்கங்களைத் தகர்த்து சாதிகள் இடையேயும் தேசங்கள் இடையேயும் சமத்துவம் ஏற்படுத்தப் போராடுவதாகவே இருக்க இயலும். சோசலிசம் பற்றிய புதிய கருத்தியல் அவசியப்படுவதனை மறுக்க இயலுமா?

No comments:

Post a Comment