Thursday, September 12, 2024
கனதியான இரு நிகழ்வுகள் காணத்துடித்தோர் பட்ட அவதிகள்
முதல் நிகழ்வு ஜீவநதி முன்னெடுத்த பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்களின் “ஜீவநதி ஆளுமைச் சிறப்பிதழ்” வெளியீடு மாலை 3.50 மணிக்கு ஆரம்பித்தது; நேற்றைய தினம் அவரது பிறந்த நாள் என்பதனால் உரிய நாளில் நடாத்த வேண்டும் என்ற துடிப்புடன் பரணிதரன் சிறப்பிதழையும் வெளியிட்டு நிகழ்வையும் கனங்காத்திரமாக முன்னெடுத்தார். திட்டமிட்ட ஒழுங்கமைப்புடன் இயங்கும் நண்பர் பரணி முன்னதாகவே இந்த நிகழ்வை அறிவித்திருப்பின் சில சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம். முன்னதாக ஜீவநதி வெளியீடான அநாதரட்சகனின் ‘பின்தொடரும் வலி’ என்ற சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வு தேசிய கலை இலக்கியப் பேரவை யாழ். காரியாலயத்தில் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது; இந்த நிகழ்வை அறிந்ததும் அதனைப் பின்போட்டனர்.
மிகுந்த வேலைப்பழுவுடன் இயங்கும் ஜீவநதி மீதான குற்ற விமரிசனம் அல்ல இது; அவரால் முன் கூட்டியே அறிவிக்க இயலுமான வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் இனிமேல் கவனத்தில் எடுக்க உதவுவதன் நோக்கத்திலானது இந்த முன்வைப்பு!
மற்றைய கூட்டத்துக்குரிய கலம் அமைப்பினரும், ஜீவநதி நிகழ்வு முன்னரே தெரிந்திருப்பின் தாங்கள் கூட்டத்தை வேறொரு நாளுக்கு மாற்றி இருப்போம் எனத் தெரிவித்திருந்தனர்; மட்டுமன்றி, அந்த நிகழ்வு அங்கே நிறைவடைந்த பின்னரே கலம் அமைப்பினர் தமது கூட்டத்தை ஆரம்பித்தனர். ஜீவநதி மீதும் பரணி மீதும் அவர்களுக்குள்ள மதிப்புணர்வை இந்தக் கருத்தும் செயற்பாடும் வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன எனலாம்!
சேரனின் “காஞ்சி” கவிதை நூல் தொகுப்புப் பற்றி பேராசிரியர் மகேஸ்வரன், கலாநிதி திருவரங்கன் ஆகியோர் மிகச் சிறப்பான உரைகளை கலம் நடாத்திய நிகழ்வில் ஆற்றியிருந்தனர். உரைகளுக்கு அப்பால் ஒரு கவிதை நூலை எவ்வகையில் அறிமுகம் செய்யலாம் என்பதற்கு முன்னுதாரணமாக அமையத்தக்க மிகச் சிறந்த நிகழ்வை கலம் அமைப்பினர் வழங்கியுள்ளனர்.
மனநிறைவைத் தந்த இந்த நிகழ்வு மிகப் பெரும் சோர்வையும் தருவதாய் அமைந்தது. யுத்த அவலம் மீட்டுருவாக்கப்படுவது நிகழ்வின் மைய இழையாக அமைந்தது. பதினைந்து வருடங்களுக்கு முந்திய அவலத்தை நினைவூட்டி எதிர்காலத்துக்கான தெளிவுணர்வை வருவிப்பது தவறல்ல; தனியே இராணுவ அட்டூழியங்களைக் கவனங்கொள்ள வைத்துத் தொடரும் தவறான அரசியல் முன்னெடுப்புகளுக்கு உரமூட்டுவது என்ன வகை நியாயம்?
சிங்களப் பேரினவாதம் மட்டும் தவறுக்குப் பொறுப்பானதல்ல, சிறுபான்மையாக இருந்துகொண்டு தமிழ்ப் பேரினவாத உணர்வுடன் மேலாதிக்கத் தேசிய அபிலாஷையை முன்னெடுத்த எமது தரப்பும் சேர்ந்து தான் மக்கள் மீது அந்த யுத்தத்தை அவசியமற்ற வகையில் திணித்தனர்; தீர்வுக்கான சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றையும் நாசமாக்கி, வலிந்து யுத்தத்தை வருவித்தது எமது தரப்பின் ஆயுத வழிபாட்டு மோகத்தால் விளைந்தது (போரில்லையேல் மக்கள் தங்களை மறந்துவிடுவர் என்ற ‘அரசியல் ஞானம்’ இருந்த அளவுக்கு இராஜதந்திர முன்னெடுப்பு எதுவும் எமது தரப்பிடம் இல்லாமல் இருந்ததனை இனியும் கூடப் பேசக்கூடாதா?).
“உன்னையே நீ அறிவாய்” என்றும் “தன் வலியும் மாற்றான் வலியும் அறிந்து களம் இறங்கு” என்றும் சொல்லப்பட்டவற்றை அறிந்திருந்தும் அவலங்களுக்கான பழியை மற்றவர் தலை மேல் போட்டு இன்னமும் இனவாதச் சகதிக்குள் அழுந்துவது,
இனியும் எந்த அவதிகளைக் காண்பதற்கு?
கவிஞர்களும் சமூக அக்கறை உள்ள செயற்பாட்டாளர்களும் தமக்கான பொறுப்புணர்வுடன் கருத்துகளை வெளிப்படுத்துவது அவசியம்.
தவறான பாதைக்கு வழிப்படுத்திவிட்டுப் பள்ளத்தில் வீழ்ந்து துயர்களை அனுபவிக்கும் போது அவற்றையும் பேச நாங்கள் இருக்கிறோம் எனக் களமாடுவதா?
செய்ய வேண்டியதைச்
செய்யாமல் இருப்பதும்,
செய்யத்தகாதவற்றை
செய்வதும்
தீங்கு விளைப்பன!
(ஆரோக்கியமான தரப்பினரிடம் வெளிப்பட்ட தவறென உணரும் ஒரு அம்சத்தின் மீதான இந்த விமரிசனமும் ‘செய்யப்பட வேண்டிய நேரத்தில் செய்தாக வேண்டும்’ என்ற பொறுப்புணர்வின் பேரில் முன்வைக்கப்படுகிற ஒரு கருத்து வெளிப்பாடு தான்; எவரையும் புண்படுத்துவதற்கானது அல்ல).
No comments:
Post a Comment