Thursday, September 12, 2024
வரலாற்று உந்துவிசையில் வட இந்தியா
திணை அரசியல் தொடரின் 6 வது அமர்வு “வட இந்திய ஆய்வியலில் திணை அரசியல் வெளிப்படவில்லையா?” எனும் பேசுபொருள் சார்ந்தது. (மின் தடைகள் காரணமாக உரை வடிவில் தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும், நூலாக விரித்து எழுதி வருவதனால் இங்கு பத்து அமர்வுகளுக்குமான பேசுபொருளைப் பதிவிடுவேன். மாற்றுக் கருத்துகளை விவாதிக்கும் பட்சத்தில் அவற்றை எழுத்தாக்கத்தில் கவனங்கொள்ள இயலும்).
தமிழக நகருருவாக்கம் ஏற்படத் தொடங்கி ஒரு நூற்றாண்டின் பின்னரே வட இந்தியாவில் நகருருவாக்கம் சாத்தியப்பட்டது.
இங்கு விவசாய எழுச்சிக்கு முன்னரே வணிக - கைத்தொழில் விருத்திகளுடன் நகர் உருவான சம காலத்தில் வட இந்தியாவில் விவசாய எழுச்சியுடன் பிராமண நிலவுடைமையாளர்கள் சார்பான அரசுருவாக்கமும் ஏனையவர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுதலும் இடம்பெறலாயிற்று; வெற்றிகொள்ளப்பட்டு அடக்கப்பட்டவர்கள் உழைக்கும் சாதிகளாக்கப்பட்டதுடன் சாதியக் கருத்தியல் வடிவம்பெறலாயிற்று.
வெளியே இருந்து வந்த ஆரியர்கள் மட்டுமே முற்றுமுழுதான வெற்றியாளர்கள் அல்ல. நில ஆக்கிரமிப்பைச் சாத்தியப்படுத்தி மேலாதிக்கம்பெற்ற பிராமணர் என்ற ஆதிக்க சாதி, திராவிட-ஆரிய இணைப்பில் உருவான சமூக சக்தி.
இவ்வகையில் சாதி உருவான வரலாற்று நிகழ்வுப்போக்கு மார்க்சிய ஆய்வாளர்களால் எடுத்துக்காட்டப்பட்ட பொழுதிலும் சாதியைப் புரிந்து கொள்வதில் தெளிவீனங்கள் உள்ளன. திணை மேலாதிக்கத்துடன் தமிழகத்தில் சாதியம் உள்வாங்கப்பட்டதில் இருந்து சாதி பற்றித் தெளிதலைப்பெற இயலுவது போல வட இந்திய அரசியல் - வரலாற்று செல்நெறி இல்லை.
மட்டுமல்லாமல், தொடர் வரலாற்று போக்கில் இடம்பெற்று வந்த சமூக மாற்ற இயங்காற்றல் பற்றிய தெளிவான வெளிப்பாடும் அங்கு இல்லை. வீர யுக முடிவில் மருதத் திணை மேலாதிக்கத்துடன் நிலச் சொத்துடைய கிழார்கள் வரலாற்று அரங்கில் தோன்றிச் சாதியத்தை வரித்தமை, அறநெறிக் காலத்தில் வணிக மேலாதிக்க அரசியல் சாத்தியமானமை, பக்திப் பேரியக்கத்தில் விவசாய மேலாதிக்கம் மீளெழுச்சி பெற்று நிலப்பிரபுத்துவம் மேலாதிக்கம் பெற்றமை போன்ற தமிழக வரலாற்றியல் தெளிவுறக் காட்டும் அம்சங்கள் போன்றன அங்கு இல்லை.
எமக்கான மத்திய காலம் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் காரைக்கால் அம்மையார் தொடக்கிய சைவ எழுச்சி, 7 ம் நூற்றாண்டில் நாவுக்கரசராலும் ஞானசம்பந்தராலும் முன்னெடுக்கப்பட்ட பக்தி இயக்கம் வாயிலாக உறுதிப்பட்டது - தொடர்ச்சியாகத் தனக்கேயான வரலாற்று விருத்தியை வெளிப்படுத்தியது.
வட இந்தியாவில் சமூகமாற்ற உந்துவிசைகள் தெளிவற்று இருப்பதைப் போல மத்தியகாலம் பற்றியும் தெளிவுபெற இயலாத விடயங்கள் உள்ளன.
சாதியைப் புரிந்து கொள்வதிலான இடர்ப்பாடு, மத்தியகாலம் பற்றிய தெளிவீனம் என்ற விடயங்களை ரோமிலா தாப்பர் “முற்கால இந்தியா” எனும் நூலில் (பக்கங்கள் முறையே 20,75) மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டி உள்ளார்.
ஆயினும் வட இந்தியாவை மையப்படுத்தியே இந்திய வரலாறு ஆராயப்பட்டு வந்ததே, அது ஏன்?
நீண்ட கால இயக்கத்துடன் இருந்ததும் இந்தியச் சமூகச் சிறப்பம்சமாய் அமைந்ததுமான சாதி பற்றிய முதல் ஆதாரங்களை ரிக் வேத இலக்கியமும் வட இந்திய வரலாறுமே காட்டி இருந்தன என்பதன் காரணமாக!
இன்னொன்று, 13 ம் நூற்றாண்டு வரை வீச்சுடன் வரலாறு படைத்தலைச் சாதித்து வந்த தமிழகம் பின்னர் புதியதைப் படைக்கும் ஆற்றலை இழந்தது. தமிழின் அரிய பங்களிப்பான சைவசித்தாந்தம் கூட சமஸ்கிருதத்தில் தோற்றம்பெற்று மொழிபெயர்த்துத் தமிழுக்கு வந்ததென்ற புனைவுகள் மேலோங்கின. சமஸ்கிருதம் தாய்மொழி, தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகள் அனைத்துமே அதிலிருந்து வந்த வழிமொழிகள் என்ற பொய்யுரைகளும் வலுத்தன.
தமிழின் மேலாதிக்க சக்தியான நிலப்பிரபுத்துவச் சாதி, தனக்கான அதிகாரத்தை நிலை நிறுத்த வாய்ப்புள்ளது என்றவகையில் நட்பு சக்தியாக அரவணைத்த பிராமணத் தரப்பு தன்மீதே அதிகாரம் செலுத்த இடமளித்த வாய்ப்புக்கேடு எப்படி ஏற்பட்டது?
“தமிழகத்தின் வீழ்ச்சி” அடுத்துப் பார்க்க அவசியம் உடையது!
No comments:
Post a Comment