Sunday, October 6, 2024

உலகுக்கோர் தீய எடுத்துக்காட்டு

உலகுக்கோர் தீய எடுத்துக்காட்டு ‘இலங்கையில் நடந்தேறி உள்ள மக்கள் புரட்சி அண்மைக்கால வரலாற்றுக்கான பெரும் பங்களிப்பு’ ‘மக்கள் சக்தி எந்தவொரு சர்வாதிகாரத்தையும் தூக்கி எறியும் என்பதற்கான உதாரணம் இது’ ‘கறுப்பு ஜூலை என்று இதுவரை இருந்த நிலையை மாற்றி சிவப்பு ஜூலை என்ற மகத்தான வரலாற்றை 2022 ஜூலை 9 ம் திகதி பதிவு செய்துவிட்டது’ - என்பதாகவும் இன்னும் பலவாறும் குதூகல வாசகங்கள் வலம் வந்தபடி! இதன் மறுபக்கம் பற்றிய உரையாடல்களும் இடம்பெறத் தவறவில்லை. வழக்கம்போல, மறுத்தோடும் மாற்றுக் கருத்துகளுக்கான அடிப்படைகள் வெவ்வேறு தளங்களுக்கு உரியன! இங்கு எங்களது பேசுபொருளாக அமைவது இந்தப் பிரச்சினையை வெறும் பொருளாதார நெருக்கடி/சர்வாதிகாரம் என்பவற்றைக் கடந்து இத்தகைய சூழலை தமக்கு அமைவாக கையாளும் ஏகாதிபத்திய சக்தியின் நுட்பத்திறன் மிக்க சதுராட்டம் பற்றியது! இலங்கைத் தேசம் பூகோளப் பரப்பில் இருந்து காணாமல் ஆக்கப்படும் செயல் ஒழுங்கை ஏகாதிபத்திய அணி கையாண்டு வருவது பற்றியது. பல தேசங்களாக இருந்தவற்றை இந்தியா என்ற ஒரு தேசமாக ஆக்கிய ஏகாதிபத்தியம் தான் ஒரே பேரரசுக்குள் இயங்கிய வரலாற்று நீடிப்பை உடையதாக இருந்ததோடு, அரபு மொழி-இஸ்லாம் மதம் எனும் ஒரே பண்பாட்டுடன் நிலப்பரப்பு அடிப்படையிலும் ஒரே தேசமாக இயங்க ஏற்றதாக இருந்த அரபு நாடுகளைப் பல தேசங்களாக சிதறடித்து நவீன வரலாற்றை தொடக்கி வைத்தது! இத்தகைய கையாளுகைகளில் உள்ள வேறுபாடு என்பது ஏகாதிபத்திய நலனைப் பேணுவது எனும் ஒரே குறிக்கோளுக்கு உட்பட்ட விவகாரம்! இலங்கைக்குள்ளேயும் ரஜரட்ட, ருகுணு, மலையரட்ட, யாழ்ப்பாண இராச்சியம் என்ற நாடுகள் இயங்கின; அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு தேசமாக்கிய பிரித்தானிய ஏகாதிபத்தியம் நிர்வாக ரீதியில் பல விடயங்களை இந்தியாவுக்கு உட்பட்டதான கையாளுகையை முன்னெடுத்தது. இரு நாடுகளுக்குமான நாணயக் குற்றிகளை வெவ்வேறாகவும் ரூபாய் தாளை ஒன்றாகவும் கையாண்டனர்.
வேற்றுமையும் ஒற்றுமையும் என்ற இந்தக் கையாளுகை மட்டுமன்றி வேறு பல சதிகளையும் முன்னெடுத்தனர். இந்தியாவில் விஞ்ஞான-தொழில் நுட்பக் கல்வியை மறுத்தவர்கள் இலங்கையில் தாராளமாக அனுமதித்தனர்; டொக்ரர் கிரீன் தனது மாணவர்களுடன் இணைந்து பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தமிழ் மூலமாக உடற்கூற்றியல், பௌதீகம், இரசாயனம், உயிரியல் சார்ந்த நூல்களை வெளியிட்டார். அதன்பொருட்டாக ‘மானிப்பாய் (யாழ்ப்பாண) ஆங்கில-தமிழ் பேரகராதி’ வெளிவர இயலுமாயிற்று. ஐரோப்பிய நாடுகளில் சர்வஜன வாக்குரிமை நடைமுறைப்பட்டு ஓரிரு வருடங்களில் (1932 இல்) இலங்கையில் அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்தது; இரண்டு தசாப்தங்களின் பின்னரே இந்தியாவில் இதனைச் சாத்தியப்படுத்த இயலுமாயிற்று. உள்ளாட்சிக் கட்டமைப்பு, விஞ்ஞான-தொழில்நுட்ப அறிவு, கல்வி விருத்தி, மருத்துவம் - சுகாதாரம் என்பவற்றில் இந்தியாவைவிட மேலான நிலை என்பவற்றை இலங்கை பெறும் வகையில் பிரித்தானியா செயற்பட்டதற்கான காரணம் என்ன? தேச விடுதலைக்காக அர்ப்பணிப்பு மிக்க போராட்டங்கள் வாயிலாக சுதந்திரத்தை வென்றெடுக்கும் இந்தியாவை ஏகாதிபத்தியப் பிணைப்புக்குள் கட்டுப்படுத்தி வைப்பதற்குப் பின் தளமாக இலங்கையைக் கையாள வேண்டும் என்ற ஏகாதிபத்திய நலனின் ஓரங்கம் அது. சுதந்திர இந்தியா சோவியத் யூனியனுடன் நட்புறவு பூண்டிருந்த காரணத்தால் ஏகாதிபத்திய அணியின் தலைமையைப் பெற்ற அமெரிக்காவுடன் பகைமை பாராட்டிய வரலாறு எண்பதாம் ஆண்டுகளின் ஆரம்பம் வரை இருந்தது. அப்போது அமெரிக்காவை அரவணைத்து இந்தப் பிராந்தியத்தில் உலகமயமாதலை (திறந்த பொருளாதாரக் கொள்கையை) முதன்முதலில் உள்வாங்கிய நாடாக இலங்கை இருந்தது. இந்தியப் பாதுகாப்புக்கு இலங்கை அச்சுறுத்தலாக அமையும் நடவடிக்கை வலுப்பட்டபோது ஈழத் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கான பின் தளத்தை இந்தியா வழங்கியது. முப்பது வருடங்கள் நீடித்த யுத்தம் இலங்கையை முற்றாக கருவறுத்தது. அதற்கெனப் பட்ட கடன்களின் நெருக்கடி இன்றைய பொருளாதாரப் பிரச்சினையின் அடிப்படை என்பதுல் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதைவிடப் பிரதானம், 2009 இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ‘போராட்ட வரலாறு’ என்ற காவியத்தின் கதை-வசனம்-இயக்கத்தை இந்தியா செயற்படுத்திக்கொண்டு இருந்தது என்ற உண்மையைக் களத்தில் இயங்கியவர்கள் போதிய அளவு புரிந்துணர்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை எனும் விவகாரம்! யுத்த களத்தில் போராடியவர்கள் அத்தகைய வகிபாகத்தைப்பெற அவர்களுக்கான ஆற்றல், அர்ப்பணிப்பு என்பவற்றைக் கொண்டிருந்தனர் என்பது கவனிப்புக்கு உரியன. அதேவேளை எவரோ போட்டு இயக்கும் களத்தில் இயங்குகிறோம் என்ற புரிதலின்றிச் செயற்பட்டதால் இயக்குனர் ‘கட்’ சொன்னதும் காணாமல் போக நேர்ந்தது என்ற உண்மையையும் மறுத்துவிட இயலாது. களத்தின் நாயகர்கள் இடையிட்டு சுதந்திரமாகப் பேசித் தமக்கான ‘நாயக விம்பங்களைத்’ தக்க வைத்துக்கொண்ட போதிலும் பலாபலன்களை முற்றுமுழுதாகப் பெற்றது என்னவோ இந்தியாதான். பின்னரான இலங்கை சுயாதீனத்தை முற்றாக இழந்தது. யுத்தம் முடிந்த அடுத்த நாள், அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார்: ‘யுத்தத்தை நடாத்தி முடித்தது இந்தியா; அவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதையெல்லாம் செய்ய வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம்’! அதன்பொருட்டு ஒரு வருடத்தின் பின்னர் டில்லிக்குச் சென்று 16 ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு வந்தார். இயக்கும் கரங்களை அறிந்த போதிலும் உச்சிவிட இயலும் என்று நினைத்தார். உண்மைகளை மக்களுக்கு முன்வைக்காமல் யுத்தத்தை வென்ற வீரனாகத் தன்னைக் காட்டி மக்கள் ஆதரவை வென்றெடுக்க நினைத்தார்! இந்தியா இரண்டாம் சருக்க கதை-வசனம்-இயக்கத்தைத் தொடங்கிவிட்டதை ராஜபக்சக்கள் கவனத்தில் எடுக்கத்தவறி இருந்தனர்; 2015 இல் மகிந்த எப்படித் தோற்கடிக்கப்பட்டார் என்பதைப் படிப்பினையாக எடுத்துக் கொள்ளாமல் 2019 இன் வெற்றியில் மதிமயங்கிப் போயினர்! கோத்தபாய ஜனாதிபதி ஆனது முதல் பசில் நிதியமைச்சர் ஆனதுவரை டில்லிக்குப் போவதும் வருவதும் ‘உங்கள் சித்தப்படியே எங்கள் நடப்புகள்’ என ஒரு பக்கம் காட்டிக்கொண்டே மக்களின் முன் தங்களது வீர நாயக விம்பங்களைப் பிரம்மாண்டமாக்கிக் காட்ட இயலுமெனக் கருதியும் நடந்துகொண்டவற்றுக்கான விலையை இன்று நாடு முழுவதும் கொடுத்தபடி! வீழ்த்தப்பட்ட அவர்களுக்கான பாடங்கள் மட்டுமல்ல இவை. இந்திய மேலாதிக்க சக்தியின் இயக்கமே அரங்கேறி இருக்கிறது என்பதைக் காணத்தவறி ஏதோ ‘மக்கள் போராட்டம்’ ஒன்றைத் தாங்கள் நடாத்தி முடித்து இருப்பதாக கருதிக்கொண்டு இருக்கும் அரகலய (போராட்ட) வீரர்களும், கடந்து செல்லும் இந்த வரலாற்றுப் படிப்பினைகளைக் கவனங்கொள்வது அவசியம்! முதலாவது சருக்கத்தை 2009 இல் நடாத்தி முடித்தது போன்ற பண்புக்கூறுகளுடன் இன்றைய இந்தியா இல்லை; அப்போதும் (சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர்) ஏகாதிபத்திய அணிக்கான சாய்வு இந்தியாவுக்கு (அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியாலேயே) ஏற்பட்டு வந்தது என்பது மெய். இன்றைய இந்துத்துவ பா.ஜ.க. ஆட்சி முற்றுமுழுதாக அமெரிக்க மேலாதிக்கத்துடன் கரங்கோர்த்தபடி ஏகாதிபத்தியத்தின் தலைமைக் கேந்திரமாக இந்தியாவை மாற்றும் செயலொழுங்குகளைக் கனகச்சிதமாக முன்னெடுத்து வருகிறது. இன்று இலங்கையில் நடந்தேறி வருகிற மாற்ற நிலைகள், இந்தியாவின் ஆளுகைக்குள் முழுதாக இந்த நாட்டை மாற்றுவதற்கான செயற்திட்டங்களை உள்ளடக்கியவை; நிலையான ஆட்சியை இலங்கையின் எந்தத் தரப்பாலும் ஏற்படுத்த இயலாது என மக்களே ஏற்கும்படி செய்வதற்கானவை. மக்கள் போராட்ட நடைமுறைகளுக்கான செயலொழுங்குகளாக இல்லாத, அராஜகவாதப் ‘போராட்டங்கள்’ ஊடகப் பரப்புரைகள் வாயிலாக இன்னும் இன்னும் தூண்டப்படும். எவரோ இயக்கும் கைப்பாவைகளாகத் தொடர்ந்தும் இருக்கப்போகிறோமா? வீர வசனங்களல்ல இன்று அவசிப்படுவது; நிதானமிக்க செயற்பாடுகள் அவசியம். விடுதலைத்தேசியச் சிந்தனை முறையை வளர்ப்போம்! அன்றைய ஏகாதிபத்திய அணிக்கு ஆளுமை மிக்க இலங்கை - தேச விடுதலைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த இந்தியாவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காகத் தேவைப்பட்டது! இன்றைய ஏகாதிபத்திய அணிக்குத் தலைமையேற்கும் வகிபாகம் நோக்கி முன்னேறுகிற இந்தியாவின் அங்கமாக இலங்கை கட்டுப்பட வேண்டும் என்பது மேலாதிக்க வாதிகளின் நாட்டமாக உள்ளது! காப்பிரேட் ஏகாதிபத்திய ஊடக ஊடுருவல்கள் இதற்கானது! இன்றைய அவலத்துக்கு இரையென ஆவோமா? விடுதலைச் சக்திகளுக்கு எடுத்துக்காட்டு என வளர்வோமா - மேலாதிக்க வாதிகளுக்கு இரையாகிக்கொண்டே வீர வசனங்கள் பேசும் போலித்தனங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகத் தொடர்வோமா?

No comments:

Post a Comment