Thursday, October 24, 2024
ஆயிரம்
உண்டிங்கு
சிந்தனைத் தேட்டங்கள்!
மார்க்ஸ், லெனின் ஆதியோர் முன்வைத்த சோசலிச வடிவம் நடைமுறைக்கு வராமல் - ஸ்டாலினும் மாஓ சேதுங்கும் முன்னெடுத்த சோசலிச முனைப்பு அத்தகையதாக அல்லாமல் வேறுபட்டதாக இருந்ததென, பல மார்க்சியர்கள் கருத்துரைத்து வரக் காண்கிறோம்.
முனைப்புப்பெற்று இருந்த ‘புரட்சிக்குப் பிந்திய’ ஸ்டாலின், மாஓ கையாண்ட சமூக முறைமை எத்தகைய வடிவத்துக்கானது, எவ்வாறு அவற்றை அழைக்க இயலும் என்ற நுண்ணாய்வு வெளிப்பாடுகளும் காத்திரமான வகையில் வந்தவண்ணம் உள்ளன.
ஸ்டாலினும் மாஓ சேதுங்கும் தலைமை தாங்கி முன்னிறுத்திய சோசலிசத்தின் மீது ஈர்ப்புக்கொண்டுதான் எழுபதாம், எண்பதாம் ஆண்டுகளின் பல்லாயிரக் கணக்கான ஆற்றலாளர்கள் அரசியல்-பண்பாட்டு-சமூக களங்களில் செயலாற்ற முற்பட்டிருந்தனர். அந்த ஒளியிலேயே மார்க்சும் லெனினும் முன்வைத்த சோசலிசத்தைப் புரிதல் கொள்ள முனைந்தனர்; அந்த முன்னோடிகள் வடிவப்படுத்திய வகையில் அல்லாமல் சோவியத் யூனியனிலும் சீனாவிலும் வெவ்வேறு வகையிலே வேறுபடுவதற்கான காரணங்களையும் கண்டு தெளிவதற்கு ஆர்வம் கொண்டனர்.
அறுபதுகளின் நடுக்கூறில் அவ்விரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கித் திரிபுவாதப் பாதைக்கு சரிவதாக மற்றதன் மீது குற்றம் சாட்டிய போதிலும் அவற்றை ஆதரித்தோர் அவற்றின் சோசலிச சாதனையைத் தமது நாடுகளுக்கு உரியதாக்க முனைப்புக் கொண்டுழைத்தனர்.
மாறிவந்த வரலாற்று இயக்கம் பண்பு ரீதியாக வேறுபட்டு இருப்பதனை உணராது இரு நாடுகளும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார (வர்க்க அரசியல்) வடிவத்தைப் பிரயோகிக்க முற்பட்டு இடர்ப்பட்டன.
சீர்படுத்த இயலாமல் சோவியத் தகர்ந்தது, மக்கள் சீனம் சந்தைச் சோசலிச முறையை கையேற்று மறுவடிவத்தில் சோசலிசக் கட்டுமானத்தைப் பாதுகாத்து வளர்க்க முனைகிறது.
இரு நாடுகளும் பல தவறுகளுடன் சோசலிசத்தை முன்னெடுப்பதை வலியுறுத்திய ஹொரேஷ் பி டேவிஸ் போன்ற தென்னமரிக்க மார்க்சியர்கள் ஏனைய முதலாளித்துவ நாடுகளை விடவும் அந்தச் சோசலிச நாடுகள் நுட்பத் திறனுடன் சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்து வந்தமையை எழுபதாம் ஆண்டுகளிலேயே காட்டி இருந்தனர். இன்றும் அவ்வழியில் தென்னமரிக்க நாடுகளில் இருபத்தோராம் நூற்றாண்டுச் சோசலிச வடிவத்தைக் கட்டியெழுப்புவதற்கு சோவியத்-சீன அனுபவங்களை முன்னுதாரணமாக கொள்ளும் எத்தனங்கள் முனைப்பில்!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்க்சுக்கு முன்னரே சோசலிச சிந்தனையாளர் பலர் களத்தில் இருந்தனர். அதனை எவ்வாறு வென்றெடுப்பது என்ற தெளிவு எட்டப்படாமல் இருந்தது. பாட்டாளி வர்க்கமே அதனைச் சாத்தியமாக்கும் அதற்கான கருவி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனக் கண்டுகாட்டியதிலே மார்க்சுக்கான பங்களிப்பு மகத்தானது. அதன்பேரிலேயே மார்க்சியம் இன்றும் ஆளுமை செலுத்தும் அரசியல் ஒளிவிளக்காக நீடிக்க இயலுமாயுள்ளது!
இன்று ஆயிரம் திசைப் பிளவாக மார்க்சிய அரசியல் மார்க்கம் சிதறக் காரணம் என்ன?
பாட்டாளி வர்க்க அரசியல் வீறிழந்த நிலையில் மார்க்சியத்தால் வழிகாட்ட இயலாதா?
மார்க்சியர் ஒவ்வொருவரும் ஓரோர் திசையில் மார்க்கத்தைக் காட்டுவதில் இருந்து ஒரு வெளிச்ச வீட்டுக் கீற்று (பாட்டாளி வர்க்கத் தலைமை எனக் காட்டப்பட்டதும் பெற்ற தெளிவைப்போல) கண்ணில் படாதா?
ஒருவகையில் தற்செயலாகத்தான் மகாபலிபுரத்தில் இந்தியப் பிரதமரை வரவழைத்துச் சீன ஜனாதிபதி ஆசியா உலகுக்கு வழிகாட்டும் அரசியல் முன்னெடுப்புக்கு அத்திவாரம் இட்டார்.
மகாபலிபுர வெளிச்ச வீட்டில் சீனா முதலாளித்துவத்தை உள்வாங்கி சந்தைச் சோசலிசத்தை முன்னெடுப்பதற்கு ஏற்பட்ட அவசியத்தை விளக்கும் மருந்து உள்ளது.
திணை அரசியல் எனும் உலகின் இன்றைய ஆளுமைபெற்றெழுந்துள்ள முழுச் சமூக சக்திகளுக்கான வரலாற்று இயக்கு முறையின் தெளிவையும் இந்த மண்தான் உலகுக்குக் காட்டவல்லது!
திணை அரசியலுக்கான தெளிவோடு மார்க்சியர் பிரச்சினைகளை அணுகும் பொழுது முன்னர் போல் ஒருவர்போலப் பேச இயலுமாகும்!
தமிழர் எமக்கு அதனை ஆழ்ந்து கற்றறிந்து தெளிவாக உலகின் முன் சமர்ப்பிக்கும் பொறுப்புள்ளதை உணர்வோம்!
No comments:
Post a Comment