Tuesday, October 22, 2024
புதிதாக ஏதுமில்லை,
புதுப்பிக்கவில்லை எனில்
எதுவும் இல்லை!
இன்றைய உலக-நாட்டு நிலவரங்கள் பற்றி பலதும் பத்தும் பேசப்பட்டபடி நாட்கள் ஓடுகின்றன!
போன வாரக் கூட்டம் ஒன்றில் உளவியல் நிபுணரான வைத்தியர் ஒருவர் பேசியது காதுகளில் இப்போதும் ஒலித்தபடி: ‘ஏதோ அரசியல் நெருக்கடி, பொருளாதாரப் பிரச்சினைகள்… எல்லாத்துக்கும் வரிசைகள்… கியூவில நின்றவர் மரணம் என்றெல்லாம் ஒருபக்கம் சொல்லப்படுது; மற்றப்பக்கம், வானளாவ உயர்ந்த கோபுரங்கள் ஒலிபெருக்கிகளைச் சத்தமாக வைத்து ஆர்ப்பாட்டம் பண்ணிறதும் ஆடம்பரக் கொண்டாட்டங்களும் தடபுடலாக நடந்தபடி… எது பிரச்சினை?’
மின் வெட்டு, எரிபொருள் பிரச்சினை, கண்மண் தெரியாத விலையேற்றங்கள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை … என வாழ்வியல் நெருக்கடிகள் வளர்ந்தபடி இருப்பதும் மெய்!
இவற்றுக்குள்ளேயும் வேறோர் உலகச் சஞ்சாரம்போல ஆடம்பரக் குதூகலங்கள் பெருகுவதும் உண்மை!
ஊடகங்கள் இன்னொரு பரிமாணத்தில் இன்றைய அரசாங்கத்தை வீழ்த்தும் அவசியத்துக்கான செய்திப் பரிமாற்றங்களை வளர்க்கின்றன.
இவற்றின் ஊடே இந்தியாவும் அமெரிக்காவும் ஆள்மாறி ஆளனுப்பி எமது நாட்டை இருண்ட யுகத்தில் இருந்து மீட்க எத்தனிப்பதை ஊடகங்கள் அகமகிழ்ந்து வெளிப்படுத்துகின்றன!
இதுதான் பிரச்சினை. இந்தியாவை, அமெரிக்காவை நீங்கி சீனாவை நாடிய நிலையில் தான் இவ்வளவு நெருக்கடிகளும் பெருகின.
இனிப் பிரச்சினை இல்லை; சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிட்டாயிற்று; இந்தியாவினதும் அமெரிக்காவினதும் ‘மனிதாபிமான - உன்னத - ஜனநாயக’ நிபந்தனைகளைச் சிரமேற்கொண்டாயிற்று!
இந்தச் சாய்வு முழுமைப்பட்டு சீனாவை நீங்கினால் நெருக்கடி எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல விலகாதா?!
சீனாவிடம் கடன் பெறுவதை ஏனோ தடுக்கவில்லை (ஏற்கனவே அவர்களிடம் பெற்ற கடனை அடைக்கவே இப்புதிய கடன் என்று ‘சீனச் சூழ்ச்சியை’ பத்திரிகைகள் தோலுரித்துக் காட்டுகின்றன. அரச தரப்போ ‘சீனா எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கடன் தருவதால் அவர்களிடம் கடன் பெறுவதை நிறுத்த இயலாதுள்ளது’ என்று அழுது வடிகின்றன).
தமது வலுவான கட்டுப்பாட்டுக்குள், அதீத வட்டியுடனான குறுகிய காலக் கடன் என்ற பொறிக்குள் மாட்டுப்பட்டு இருப்பதை மறைக்க இலகுவான - நீண்டகால - நிபந்தனையற்ற கடனைச் சீனாவிடம் பெறுவதை அனுமதிப்பதில் இரண்டு அனுகூலங்கள்; தம்மால் திணிக்கப்படும் சுமையிலிருந்து ஆசுவாசப்பட சிறிய அனுமதியை வழங்குவதுமாகிறது, ‘சீனக் கடன் பொறி’ என ஊடகப் பரப்புரைக்கான வாய்ப்பும் ஆகிறது!
இன்றைய அரசாங்கம் மாற்றப்பட வேண்டும் என்ற மக்கள் எழுச்சிகள் ஆரோக்கியமான திசையில் வளருமா?
உண்மையில் அரசியல் விழிப்புணர்வு ஊட்டப்பட்டவாறு மக்கள் போராட்டங்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றனவா?
ஒரு முன்னாள் சீனக் கொம்யூனிஸ்ட் புரட்சிவாதி (இப்போதும் ‘புரட்டுவாதிதான்’ சமூக ஏகாதிபத்திய சீனாவை எதிர்க்கும் அளவுக்கு) முழங்கினார் “இந்தியா, சீனா, அமெரிக்க ஏகாதிபத்திய வல்லரசுகளின் பிடியில் இருந்து நாட்டை மீட்போம்” என்பதாக!
ஐயா, புரட்சிக் கனலே - ‘சோவியத் சமூக ஏகாதிபத்தியம்’ பற்றிப் பேசி அந்தச் சோசலிச நாட்டை அழிப்பதற்கு உதவியது போதாதா? மாஓ சேதுங் சிந்தனையின் வழிகாட்டலில் சீன நிலவரத்துக்கான சோசலிசத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்ற மக்கள் சீனத்தையும் ஆக்கிரமிப்பு வல்லரசு என்று பிரசாரப்படுத்தி இன்னும் நாசங்களை வளர்க்க வேண்டுமா?
மேலாதிக்க வல்லரசுகளான இந்தியா, அமெரிக்கா என்ற பாசிச சக்திகளினின்றும் சீனா எவ்வகையில் வேறுபட்டுள்ளது எனக் கண்டு காட்ட அக்கறை இல்லை என்றால் பரவாயில்லை, மூன்று நாடுகளும் ஒரேவகை எனக்கூறி மக்களது விழிப்புணர்வைக் குழிதோண்டிப் புதைக்க இடமளிக்காது இருங்கள்.
எழுபதாம் ஆண்டுகளில் எமது நாடுகள் சுய சார்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முனைந்தபொழுது சோவியத் சோசலிச நாடுகளின் ஒன்றியம் வலுவான பின் தளமாக அமைந்திருந்தது. அதனைச் சமூக ஏகாதிபத்தியம் என்று பிரகடனப் படுத்திப் புரட்சிகர அணிகள் நடாத்திய போராட்டத்தை ‘தர்மிஷ்டர்’ ஜே.ஆர். தலைமையிலான யுஎன்பி அறுவடை செய்துகொண்டது; திறந்த பொருளாதாரத்தின் வாயிலாக காப்பிரேட் ஏகாதிபத்தியத்தின் வேட்டைக்காடாக நாட்டை ஆக்கியதன் அவலங்களை இன்றும் அனுபவிக்கிறோம்!
சந்தைச் சோசலிசம் எனும் மார்க்சியத்தின் புதிய விருத்தி உடன் இயங்கும் மக்கள் சீனத்துடன் கைகோர்க்க முனைந்த இன்றைய ஆட்சியாளர்கள் ஊடகவழி நெருக்கடிப் பிரசார உதவியோடு ஏகாதிபத்திய முகாமுக்குள் முற்றாக உள்ளீர்க்கப்பட்டு உள்ளார்கள்.
எழுபதாம் ஆண்டுகளின் இடதுசாரி அரசாங்கத்தின் சொந்தத் தவறுகளும் அன்றைய வீழ்ச்சிக்கு அடிகோலின; சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டைக் காட்டிக் கொடுத்து மக்களை வாட்டிய ரணிலுக்கு மக்கள் தகுந்த தண்டனை வழங்கி இவர்களை ஆட்சி அமைக்க அனுமதித்தனர். ஐந்து ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சி என்ற கோளாறுகளால் மக்கள் அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைத்து இவர்களும் காட்டிக்கொடுப்பாளர்களாக ஆகியுள்ளனர்.
இவர்களுக்கான மக்களது தண்டனை இன்னொரு ‘தர்மிஷ்டரை’ ஆட்சிபீடம் ஏற்றுவதாக அமையக்கூடாது!
எழுபதுகளில் ஆரோக்கியமான மாற்றத்துக்காக புரட்சிகர சக்திகள் நடாத்திய போராட்டத்தை மக்கள் விரோத சக்திகள் பயன்படுத்தி இருந்த அனுபவத்தை மறக்காது இருப்போம். மாறிய உலக நிலவரத்துக்கு அமைவாக மார்க்சியத்தை வளர்த்தெடுத்துப் பிரயோகிக்கவில்லை எனில் இன்றைய நிலவரத்தையும் மக்கள் விரோதிகளே அறுவடை செய்வர்.
புரட்சிகர அணிகளது போராட்டங்களைப் பெரிதுபடுத்திக்காட்டும் இதே ஊடகங்கள் மாற்றத்துக்கான தருணத்தில் ‘அந்தப் புதிய தர்மிஷ்டரை’ மக்கள் முன் தெரிவுக்குரிய நாயக விம்பமாக்கத் தவறாது!
குறுக்கு வழிப் பிரசாரங்களை நம்புவதை விடுத்து மக்களை விழிப்புணர்வூட்டும் நேரடி நடவடிக்கைகளைக் கையேற்போம்!
No comments:
Post a Comment