Thursday, October 24, 2024
“புலம் பெயர்ந்தோர் இலக்கியம்
- பனுவல்களும் மதிப்பீடுகளும்”
- முனைவர் பா. ஆனந்தகுமார்
நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக 2018 இல் வெளிவந்து திருத்தப்பட்ட 2 ம் பதிப்பாக 2020 இல் மலர்ந்த நூல் கையில் கிடைத்த உடன் படிக்கத் தொடங்கி, இன்று படித்து முடித்தேன்!
யுத்தக் கொடூரத்தால் புலச்சிதறல்களுக்கு உள்ளான ஈழத் தமிழர் படைப்பாக்கம் எண்பதாம் ஆண்டுகளில் வீச்சுடன் வெளிப்பட்ட பின்னரே இத்தகைய புதிய வடிவம் தமிழிலக்கியச் சூழலில் பெரிதும் கவனத்தை ஈர்த்திருந்தது. எம்மவர்கள் பெரும்பாலும் யுத்த அனர்த்தப் புலச் சிதறலே ‘புலம் பெயர் இலக்கியத்’ தகுதி உடையன என்ற கருத்துடையவர்கள்!
அதனைக் கடந்த விரிந்த பார்வை இந்நூல் வாயிலாக வெளிப்படக் காணலாம். மனிதக் கொடூரத்தில் ‘இரத்தம் சிந்தும் அரசியலான’ யுத்த அனர்த்தத்துக்கு குறைந்த அவலமல்ல ‘இரத்தம் சிந்தாத யுத்தமான’ அரசியல்-பொருளாதார அனர்த்தம் காரணமான புலச் சிதறல்கள்.
அந்தவகையில், பிரித்தானிய ஏகாதிபத்தியம் கூலிகளாக கப்பலேற்றி நான்கு திசைகளின் பலவேறு நாடுகளுக்கும் சிதறடித்த உழைக்கும் மக்களின் கண்ணீரைக் கவியாக்கிய பாரதி இடம் புலம்பெயர் இலக்கியம் தொடக்கம் பெற்றதென பேராசிரியர் ஆனந்தகுமார் காட்டுவார்!
புதுமைப்பித்தன், பா.சிங்காரம் போன்றோர் வளர்த்தெடுத்த இப்புதிய வடிவம் ஈழப் போராட்டம் காரணமாக ஏற்பட்ட புலச் சிதறல் வெளிப்படுத்தி இருந்த படைப்பாக்கங்கள் வாயிலாகப் புதிய பரிமாணங்களை எட்டி இருந்ததென வலியுறுத்தத் தவறவில்லை.
‘புலம் பெயர்ந்தோர் இலக்கியம்: வரையறைகளும் கூறுகளும்’ என்ற முதல் கட்டுரை இந்தப் புதிய வடிவம் குறித்த பன்முகத் தரிசனங்களை வெளிப்படுத்துகிறது. “ ‘சயாம் மரண ரயில்’ நாவல் - ஓர் அறிமுகம்” என்ற நாலாவது கட்டுரை யுத்தக் கொடூரப் புலச் சிதறலுக்கு முந்திய (இரண்டாம் உலக யுத்த அனர்த்தத்தினுள் தமிழகப் புலம் பெயர்ந்தோர் அனுபவித்த கொடூரங்களைக் காட்டும்) வடிவத்துக்கான இலக்கியம் குறித்துப் பேசும்!
இடையிட்ட இரு கட்டுரைகள் ஈழப் புலம் பெயர் இலக்கியங்கள் பற்றியன!
இப்பேசுபொருளுக்கான ஆக்கங்கள் தொகுப்பில் சரிபாதி இடங்களைப் பெறுகின்றன. எடுத்துக்காட்டுக்கு உரியனவாக (தேர்ந்து எடுத்த சிறப்பான) ஒன்பது கவிதைகள், ஐந்து சிறுகதைகள் ஆதியன இடம்பெற்றுள்ளன.
நூறு பக்கங்கள் கொண்ட நூல் வாயிலாக புலம்பெயர் இலக்கியம் குறித்த விசாலித்த பார்வையை எட்ட இயலுமாக இருப்பது வியப்பளிக்கிற அம்சம்!
‘கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தும்’ நுட்பத்திறன் இதுவெனலாம்!
No comments:
Post a Comment