Thursday, October 3, 2024
பல்கலைக் கழகத்தின் உள்ளே
மற்றும்
பறாளாய் முருகன் கோயில்
என்பவற்றில்
புத்தரின் மேலாதிக்கமும்
பிச்சைக்காரப் புண்களின்
நினைவு மீட்டல்களும்
எந்தத்
திசைமுகப்படுத்தலுக்காக?
குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, தையிட்டி ஆகியவற்றில் புத்தரின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ‘வரலாறு காணாத போராட்டங்களை’ நடாத்தி ‘வெற்றி கண்டவர்கள்’ இப்போது பறாளாய் முருகன் ஆலயத்திலும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் உள்ளேயும் புத்தர் நுழைய முற்படுவதற்கு எதிராக ‘வீரஞ்செறிந்த’ போராட்டங்களைத் தொடக்கி உள்ளனர்.
ஒழுங்கான வேலைத்திட்டம் எதனையும் கொண்டிராத ‘மேலாதிக்கத் தமிழ்த் தேசியவாத’ அமைப்புகள் அவ்வப்போதைக்கான நிலவரத்துக்கு ஏற்ற பரப்புரைப் போராட்டங்களை நடாத்தி அவற்றுக்கான எந்தவொரு உருப்படியான முடிவும் எட்டப்படாத நிலையிலே,
‘விழுந்தாலும் மீசையில் மண் பிரளவில்லை’ என்று புறங்கையால் தட்டிக் கழித்துவிட்டு அடுத்தவொரு களத்தில் வீர வசனங்கள் பேசக் கிளம்பி விடுகின்றனர்!
அதேவேளை சிங்களத் தேசியத் தலைவர்களோ
நாட்டின் இறைமையைத் தாரை வார்த்து விட்டதுடன் இன்று சுதந்திரத்தையும் பறிகொடுக்கத் தயாராக உள்ள செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மக்கள் விடுதலையை நோக்கிய இடதுசாரித்துவ எழுச்சி உணர்வு எழுபதாம் ஆண்டுகளில் வீறுடன் இருந்த நிலையில் அதிகாரத்துக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா, அத்தகைய ‘ஆபத்து’ நேர்ந்துவிடாதிருக்க இனவாதத் தீயை வளர்த்து ஆரோக்கியமான வளர்ச்சியைக் குழி தோண்டிப் புதைத்தார். அதன் சுவாலை இன்று வரை கொழுந்துவிட்டு எரிகிறது.
தரகு முதலாளி வர்க்கக் குணாம்சத்துடன் இயங்கிய ஜே.ஆரின் ஐ.தே.க. ஏகாதிபத்தியப் பிணைப்புடன் தமது மேலாதிக்கச் சுரண்டலை மேற்கொள்வது. நாற்பதாம் ஆண்டுகளிலேயே இடதுசாரித்துவ எழுச்சி இலங்கையில் வளரத் தொடங்கியதால் அப்போதே ஜே.ஆர். ‘இந்தியாவின் மாநிலமாக இலங்கை இருக்க வேண்டும்’ எனத் தீர்மானத்தைப் பிரேரித்தவர் (ஐதேக மாநாட்டில்).
சுதந்திரத்தின் பின்னர் ‘முதலாளித்துவத் தலைமைச் சோசலிச’ (கலப்புப் பொருளாதாரத்தை) நேரு முன்னெடுத்து முழுமையான ஏகாதிபத்திய அணிக்கு வராமல் சோவியத் சார்பையும் கொண்டிருந்தமையால் இலங்கையை ஏகாதிபத்தியத் தளமாக ஆக்கும் ‘சுதந்திரம்’ ஐதேக வுக்கும் ஜேஆருக்கும் வேண்டி இருந்தது.
சோவியத் தகர்ந்து ஏகாதிபத்திய அணிக்குத் தலைமை தாங்கும் தகைமையை வளர்த்து வருகிற இந்தியாவுடன் நாட்டை இணைக்கும் கைங்கரியத்தை ஜே.ஆரின் மருமகனான இன்றைய ஜனாதிபதி முன்னெடுத்து வருகிறார்.
இவரை அரியாசனம் ஏற்றவே சென்ற வருடம் ‘அரகலய’ (போராட்டம்) முன்னெடுக்கப்பட்டது. அதற்கான மேடையில் போய் அமர்ந்த ‘இளைஞர் போராட்ட அணியினர்’ அந்தத் தேவை நிறைவேறியதும் கலைக்கப்பட்டதை மறைத்து ‘மக்கள் போராட்ட வெற்றி’ என அதனைக் காட்டுவது வெட்கக் கேடானதும் ஆயோக்கியத்தனமானதும் ஆகும்.
ரணில் பதவிக்கு வந்த அடுத்த நாளே கலைக்கப்பட்ட ‘மக்கள் போராட்டம்’ பின்னர் ஏன் தொடரப்படவில்லை?
வெறும் இளந்துடிப்புப் போராட்டமாக காகத்தின் கூட்டுக்குள் போய்ப் போராட்ட முட்டையைப் போட்ட இந்தக் குயில்களால் மக்கள் களங்களை நோக்கிச் சென்று ஏன் இயங்க இயலவில்லை?
குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, பறாளாய் முருகன் கோயில், யாழ். பல்கலைக் கழகம் எனப் புத்தரைக் காவிச் செல்லும் பௌத்த-சிங்கள மேலாதிக்கவாதிகளுக்கு எதிராக அவசியப்படுகிற போராட்டங்களை ஏன் முன்னெடுக்க இயலவில்லை?
மேலாதிக்கத் தமிழ்த் தேசியப் பிச்சைக்காரப் புண் ‘போராட்டக்காரர்’ மாதாந்த ‘நினைவுப் புண்களை’ நிறையக் கொண்டிருப்பவர்கள்; அந்த நாற்றத்துக்குள் போய் நின்று ‘தேசிய நல்லிணக்கம்’ காட்டுவதை விடுத்து,
பௌத்த-சிங்கள மேலாதிக்க நடைமுறைகளை முன்னெடுக்கும் களங்களுக்கு எதிராக மக்களை அணி திரட்டிப் போராடுவது தான் இன்றைய அவசியப் பணி!
இலங்கையை வழி நடாத்திச் செல்ல ஏற்ற வகையிலான தலைமைப் பண்பு எவருக்கும் இல்லை எனக் காட்டி இந்தியப் புகையிரதத்துடன் எமது வண்டியையும் இணைக்கும் வேலையைத் தான் இன்றைய தரகு முதலாளித்துவத் தலைமை செய்கிறது.
சிங்களத் தேசியவாத வரையறைக்கு ஆட்பட்டு, வாக்கு வங்கியை மட்டுமே கவனங்கொண்டு இயங்கியதோடு இன்றைய நிலையில் கொள்ளையடித்துக் களைத்துப்போன தேசிய முதலாளித்துவ அணி (சுதந்திரக் கட்சியும் மொட்டுக் கட்சியும்) கையறு நிலைக்கு ஆளாகி உள்ளது.
இரண்டு தடவைகள் (1971 ஏப்ரல், 1987-89) ரயருக்குள் இளம் தலைமுறையினரை எரிக்கக் கொடுத்த குட்டிமுதலாளி வர்க்க ஜே.வி.பி. ஆபத்தைத் தெரிந்தும் எதுவும் செய்ய இயலாத ‘வாழாவெட்டி’ அமைப்பாக!
மேலாதிக்கத் தமிழ்த் தேசியத் தலைமையில் மௌனிக்கப்பட்ட போராட்ட சக்தியும் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதாகச் சொல்லியவாறு (எண்ணியவாறு) இயங்கிக் கொண்டே இந்திய நலனை நிறைவாக்கிக் கொடுத்தனர்.
‘அடைந்தால் தமிழீழம்’ என்பதற்காகச் ‘சமஷ்டியே தமிழர் கோரிக்கை’ என இப்போது முழங்குவோரும் எமது சுயநிர்ணய உரிமையைத் தாரை வார்த்துக்கொடுத்து ஏகாதிபத்தியச் சுயநிர்ணயத்துக்கு உதவும் கைங்கரியத்துக்கு ஆட்படுகின்றனர்!
“செய்தக்க
அல்ல
செயக் கெடும்
செய்தக்க
செய்யாமையானும்
கெடும்”
No comments:
Post a Comment