Thursday, October 24, 2024
நவீன இலங்கையின் திணை அரசியல் முன்னெடுப்பு, மற்றும் எதிர்கால இயங்கு தளம் -1
விளங்காதிருப்பதைப்
புரிந்துகொள்வோம்!
=======================
பழக்க வழக்கம் என்பது பொது வாழ்வியலில் தவிர்க்கவியலாத ஒன்று. ஏற்கனவே முன்னோர் கடைப்பிடித்தவற்றை அதே தடத்தில் பின்பற்றியாக வேண்டும், மரபுகளை மீறுதல் பேரிடர்களுக்கு அடிகோலும் என்ற நம்பிக்கைகளும் வலுவாகவே உள்ளன. ஆயினும், வாழ்முறை மாற்றங்கள் புதிய பழக்கங்களை அறிமுகங்கொள்ளவைத்த பின்னர் அவை புதிய வழக்காறுகளாவதும் நிகழ்ந்தேறியபடிதான் வாழ்வியல் முன்னேறுகிறது. கால மாற்றங்களோடு பழையன கழிந்து புதியன புகுவதனைத் தடுக்காத வரையில்தான் மரபுச் செல்வம் அர்த்தமுள்ளதாக கொண்டாடப்படும்.
இத்தகைய மாற்றச் செல்நெறி அரசியல் செயற் களத்துக்கும் பொருத்தமுடையது. எழுபதாம் ஆண்டுகள் வரை அரசியலரங்கு வர்க்க அணிசேர்க்கையைத் தீர்மானகரமானதாக முன்னிறுத்தி அணுகப்பட்டது. எண்பதாம் ஆண்டுகளில் வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்தது. இனத்தேசிய,சாதிபேத, மத, நிறபேத, பெண்ணிய, பிரதேச அடிப்படைகளிலான புறக்கணிப்புகள், ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட சமூக சக்திகள் ஒவ்வொன்றும் தமக்குள் ஊடாடும் வர்க்க வேறுபாடுகளிட்ட பலவேறு பேதங்களைக் கடந்து ஒன்றுபட்ட சமூக சக்தியாகித் தமது அரசியல் நலன்களை வென்றெடுக்க முற்படலாயின; அதன்பொருட்டுத் தமக்கான பொது அடையாளப் பேணுகையை முன்னிறுத்தின. இவ்வகையில் வெளிப்பட்ட அடையாள அரசியல் இன்றைய உலக இயக்குவிசை ஆகியுள்ளது.
இவற்றின் கோரிக்கைகள் நியாயமானவை. இருப்பினும், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இயக்கங்கொண்ட இந்த அரசியல் முன்னெடுப்புகள் எந்தவொரு வெற்றியின் அறிகுறியையும் தெரியத்தரவில்லை. மட்டுமல்லாமல் பாரிய அழிவுகளையே ஒவ்வொரு சமூகப்பிரிவினரும் சந்தித்து வந்த நிலையில் அடையாள அரசியலுக்கான த த்துவ விளக்கங்களை முன்வைத்த பின்நவீனத்துவ வாதிகளே இனவாத, சாதிவாத, மதவாத, நிறவாத, பெண்ணியவாத, பிரதேசவாத முடக்கத்துக்குரிய குழு மோதல்களைக் கைவிட்டு வர்க்க அணி சேர்க்கையுடனான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று சொல்கிற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மார்க்சிய அணிகள் சில விரைவில் ஒரு வர்க்கப் புரட்சி வரவுள்ளதாக கணித்து அதற்கான தயாரிப்புகளை முடுக்கும்படி தமது அணிகளுக்கு வலியுறுத்துகின்றன. தேசிய இன, சாதிய ஒடுக்குமுறை போன்றவற்றுக்கான வேலை முறைக்கு உரியவற்றை வர்க்கப் போராட்டத்துக்குக் கேடு விளைப்பனவாக முத்திரை குத்திப் புறக்கணிக்கின்றன. வர்க்க அரசியலாளர்கள் சமூக ஊடாட்டத்தில் ஆரோக்கியமான ஒன்றுகூடல்களை விருத்தி செய்து வந்தவர்கள்; அப்போது இதே பினநவீனத்துவ வாதிகள் நிதர்சனத்தை மார்க்சியர்கள் கவனிக்கத் தவறுவதாக கூறி, சாதிவாதமுள்ளிட்ட பல்வேறு பேதங்களை இயல்புக்கும் அதிகமாயே முனைப்பாக்கி மக்கள் சக்தியைப் பாரதூரமான வகையில் பிளவுபடுத்தியருந்தனர். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள், சாதிப்பிரிவினர் மார்க்சியத்தை அண்டவிடாமல் தூரப்படுத்தினர். இவர்களது புதிய ஞானோதயத்தால் இனவாத, சாதிவாத அமைப்பாக்கங்கள் மார்க்சியத்தை நாடுவதை விடவும், தனிமைப்பட்டுள்ள மார்க்சிய அமைப்புகள் மேலும் மோசமாக வர்க்க வாத முடக்கத்துக்கு ஆளாவதே நடந்தேறுகறது.
இனவாத, சாதிவாத முடக்கங்கொள்ளாமல் ஒடுக்கப்படும் தேசிய இன விடுதலைக்கும், அதனுள்ளே ஒடுக்கப்பட்ட சாதிகளது புறக்கணிப்புக்குள்ளாகும் கூறுகளை நீக்குவதையும் பிரதேச பேதங்களைக் களைவதையும் உத்தரவாதப்படுத்தும் அரசியல் முன்னெடுப்பே இன்று எம்முன்னால் உள்ள அரசியல் பணியாகும். இதற்கான தலைமைப் பொறுப்பைக் கையேற்பதை விடுத்து, வர்க்கப் புரட்சி ஒன்று வரவுள்ளதான இலவுகாத்த கிளியாக காத்திருக்க வழிப்படுத்துவது சமூக மாற்ற நடவடிக்கையைத் தூரப்படுத்தும் நடவடிக்கையாகும். மார்க்சியர்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட தேசிய இன - சாதி - பின்தங்கிய பிரதேச மக்களை அணிதிரட்ட வக்கற்றவர்களாகவும் அவ்விடத்தை நிறைக்கும் வகையில் இனவாத, சாதிவாத, பிரதேசவாத சக்திகள் தொடர்ந்து களமாடவுமே இந்த வர்க்கப் புரட்சி எதிர்பார்ப்பு வழிகோலும்.
No comments:
Post a Comment