Sunday, September 22, 2024
சென்றவாரம் யாழ்ப்பாணம் சென்றபோது சுழிபுரத்தில் புத்தகதினக் கூட்டம் நடைபெறுவது அறிந்து பார்க்கச் சென்றேன்.ஏற்பாட்டாளர் பின் வரிசையிலிருந்த என்னை முன் வரிசையிலிருக்கக் கேட்டுக்கொண்டார்.எவரும் இருக்கவில்லை என்பதால் கேட்பதாக நினைத்தேன்.அவர் சங்கானை நூலகத்தின் நூலகர் என்றவகையில் என்னைத் தெரிந்தேதான் முன்னேற்றினார் எனக்கூட்ட முடிவில் அறிந்து கொண்டேன்.
ஒரு நூலகர் இத்தனை அவதானிப்பு-நினைவாற்றல் என்பவற்றோடா இருப்பார் என்று பெரும் வியப்பாக இருந்நது.பின் என்ன?நாற்பது வருடங்களின் முன் அந்த நூலகமே கதி என்று இருந்தாலும் பின்னர் ஊரைப்பிரிந்து பலகாத தூரம் போன 'மந்தையைப் பிரிந்த ஆட்டை' இத்தனை ஆண்டுகளாக நினைவில் வைத்திருப்பார்களா?அந்த நூலகத்தைப் பயன்படுத்திய பலரையும் இணைத்த செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட இருப்பதைக்கூறினார்.அதனோடு இணைவோம்!
இந்தப்பதிவு அதே தளத்தின் வேறு களத்துக்கானது.இரண்டு மாதங்களின் முன் "தறியுடன்" நாவல் படித்திருந்தேன்.முடித்ததும் அதை எனக்கு அனுப்பிய நவநீதனுக்கு தொலைபேசி வாயிலாக கூறியிருந்தேன்,அற்புதமான இந்த நாவல் பற்றி உடன் விமர்சனம் ஒன்று எழுதுவேன் என்று.நேரத்தை அதற்கென ஒதுக்க இயலவில்லை.அது 780 பக்கங்களில் விரிந்த நாவல்.தறியோடு வாழ்க்கைப் போராட்டத்தில் முன்னேறி மார்க்சியராக வாழ்ந்த வாழ்வனுபவத்தைப் பேசுவது.அந்தவகையில் நிதானமாக விரிவான விமரிசனம் எழுதும் விருப்பினால் நேரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இப்போது ஒரு முன்னோட்டமாக இந்தப்பதிவு.
நூலகமே கதியென வாழ்ந்த நாட்களை இரா.பாரதிநாதன் தனது முக நூல் பக்கத்தில் உலகபுத்தக தினமான ஏப்ரல் 23 அன்று பதிவு செய்தபோது எனது விமர்சனம் எழுதும் கருத்தைப் பதிவிட்டிருந்தேன்.அதன் காரணமாக இந்தச் சிறுகுறிப்பு.
தரும்புரியைப் போல விசைத்தறியில் அல்லாடும் மக்கள் மத்தியில் மார்க்சியர்கள் ஆழக்கால் பதித்த குமாரபாளையம் கதைக்களமாகும்.சிவலிங்கம் என்ற நக்சல்பரி இயக்கத்தோழர் வென்றெடுக்க வரும் நிலையில் நூலகமும் தறியுமென வாழும் ரங்கன் என்ற நாயகன் தப்பமுடியாது மாட்டுப்படும் உணர்விலிருந்து வளர்ந்து அக்கட்சியின் முழுநேர ஊழியராக வாழ்ந்து போராடிய வரலாறு நாவலாக விரிந்துள்ளது.
மார்க்சியராக மாறிய சூழல்,மார்க்சிய செயற்பாட்டின்போது எழுந்த விவாதங்கள் என்பன புத்தக வாத வசனக்குவியலாகிவிடாமல் உயிர்ப்புடன் இருக்க முடிந்தமை அவரது சொந்த வாழ்வனுபவத்தைப் படைப்பாக்கியதன் பேறாகும்.குறிப்பாக வெறும் வர்க்கவாதமாகாவகையில் சொந்தச்சமூக இருப்பை நாவல் வெளிப்படுத்துகிறது.விசைத்தறிக்களத்தின் நிதர்சனம் இப்படிக் காட்டப்பட்டுள்ளது:"ஊரின் நான்கு திசைகளிலும்,சுத்துப்பட்டு கிராமங்களிலும்,செட்டியார்,நாடார்,வன்னியர்,அய்யர்,முதலியார்,கொங்கு வெள்ளாளக் கவண்டர்,சாணார்,ஆதிதிராவிடர்,அருந்ததியர் என சொல்ல மூச்சு முட்டுகிற அளவுக்கு ஏகப்பட்ட சாதிகள் இருக்கின்றன.ஜவுளித்தொழிலில் செட்டியார் ஆதிக்கம்,கடை வீதியில் நாடார் ஆதிக்கம்,பால் வியாபாரத்தில் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்,வன்னியர்களோ சிறுவிவசாயிகளாகவும் பெரும்பான்மை விசைத்தறி தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள்.தலித்துகள் கூலி விவசாயிகளாகவும்,துப்புரவு செய்பவர்களாகவும் நீடிக்க,அவர்களுக்கு மட்டும் ஊரில் யாரும் தறிகள் விடுவதில்லை.இயந்திரத் தொழில் வந்து விட்டாலும்,அதன் தலையில் ஏறி உட்கார்ந்து சாதிவெறி ஆட்டம் போடுகிறது"(பக்.23-24).
இத்தகைய புரிதலுடன் சமூகத்தை அணுகி வெவ்வேறு ஊர்களிலும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் வாயிலாக மார்க்சிய அணியில் வென்றெடுக்க இயலுமாகி வளர்ந்தமை பெரும் நம்பிக்கை தரும் ஒன்றாய்த் துலங்குகிறது.அவ்வாறு ஒரு ஊரில் இயங்கத் தொடங்கும்போது முன்னேறிய தோழர்களே போராடுவதாக இல்லாமல்,மீன் தேவையாக உள்ளவருக்கு அதனைக் கொடுப்பதைவிட தூண்டிலைக் கொடுத்து பிடிக்க வழிப்படுத்தும் உதவியையும்,சினிமாப்பாணி ஹீரோயிசத்தை தவிர்க்கும் முனைப்பையும்(ப.309) காணமுடிகிறது.
ஆயினும் மாஒ சேதுங் சிந்தனையை வரித்துக்கொண்ட ஆசிரியர்,இந்திய நிலையில் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் பற்றிப் பேச வேண்டியிருக்க பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வரும் எனச் சொல்வதைப் பார்க்கிறோம்(ப.663).பொதுவாகவே மார்க்சிய அணிகள் அனைத்திடமும் இதுபோல புத்தகவாதமாயும் வர்க்கவாதமாயும் மார்க்சியத்தைக் குறுக்கும் சந்தர்ப்பங்கள் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டபடிதான்.வாழ்வனுபவத்துடன் மார்க்சியத்தை உயிர்ப்புடன் கற்கும் தறியுடன்கூட இது ஒட்டிக்கொண்டுவிடுகிறது.
இவ்வகையில் அர்ப்பணிப்போடு இயங்கிய தோழர்கள் கோட்பாட்டு விவாதங்கள் காரணமாக பிளவடைந்த வரலாறு துயர்மிகுந்தது.என்னதான் புனிதமான கோட்பாட்டு காரணமாயினும் பிளவென்பது மனதில் வலியை ஏற்படுத்துகிறது எனக்கூறித் தொடர்ந்து சொல்கிறார்:"கிராமத்தில்,பொறுப்பற்ற விவசாயியைப் பற்றி ஒரு பழமொழி சொல்வார்கள்.போன மாட்டை தேடமாட்டான்,வந்த மாட்டைக் கட்டமாட்டான் என்று.இதையே கம்யூனிச இயக்கத்தின் மீது ஒரு விமர்சனமாக்க்கூட சொல்லப்படுவதுண்டு.ஆனால்,சிறையில் அப்படியில்லாமல் மாற்றுக்கருத்துள்ள தோழரை அரவணைத்துச் செல்வது பாராட்டத்தக்கது"(ப.670).
ஒரு நாவலுக்கான வாழ்வனுபவம்,த்த்துவார்த்த விவாதங்கள் என வளர்க்கப்பட்ட நாவலின் முடிவு சினிமாப்பாணி முடிவாக்கப்பட்டதைத் தவிர்த்திருக்கலாம்.அதைமீறி,மிகச்சிறந்த நாவல்களின் வரிசையில் "தறியுடன்" இடம்பெறுவதை மறுக்க நியாயமேதும் இல்லை.ஒரு முழுமையான விமர்சனத்தில் சந்திப்போம்.அதற்கு முன்னதாக இதனைத் தேடிப்படிக்கும் உத்வேகத்தை இந்தக் குறிப்பு ஏற்படுத்தியிருக்கும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் தொடர்வோம்!
No comments:
Post a Comment