எமது வரலாறு எழுதுமுறைக்கான புதிய பார்வை ந.இரவீந்திரன்
முந்திய சந்திப்பின்போது இந்தத் தொடரைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளலாம் எனக் கூறியிருந்தேன். பல நண்பர்கள் அதனை ஆட்சேபித்திருந்தனர். இப்போதுதான் விடயத்தைத் தொட்டிருக்கிறீர்கள், அதற்குள் எப்படி நிறுத்தமுடியும் எனக் கேள்வியெழுப்பியிருந்தனர். இரட்டைதேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் பற்றி பத்து வருடங்களாக நான் பேசி வந்தபோதிலும் பலருக்கும் இப்போதுதான் பரிச்சயமாகியுள்ளதால் இதுதொடர்பிலான மேலும் சில விடயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே. தேசியம் என்பதை எமது வரலாற்றுச் சூழலில் எவ்வாறு புரிந்துகொள்வது என்பதிலே அடிப்படையான பிரச்சனை உள்ளது. முதலாளித்துவம் தோன்றிய நிலையில் அதற்கான சந்தைத் தேவையில் இருந்தே தேசியம் தோற்றம் பெற்றது என்ற கருத்தில் எனக்கு மாறுபட்டகருத்து இல்லை. சாதியச் சமூகமான எமக்கு சாதியிலேயே தேசியத்தின் முந்திய வடிவம் இருந்துள்ளது என்றதும், அப்படியென்றால் நிலப்பிரபுத்துவ அமைப்பிலேயே தேசியம் இருந்ததாகக் கூறுகிறீர்களா எனக் கேள்வி எழுப்பப் படுகிறது. சாதிமுறை நிலப்பிரபுத்துவத்துக்கானது என்ற புரிதலிலிருந்து எழும் இக்கேள்வி இன்னுமொரு அடிப்படையான பிரச்சனை குறித்தும் பேசுவது அவசியம் என உணர்த்தியது. இவைதவிர உப விடயங்களாக விவாதிக்கவேண்டிய அம்சங்களும் உள்ளதால் தொடர்ந்து உரையாடுவோம்.
சாதிமுறையை உச்சமாகப் பயன்படுத்தி அதீதமான ஆடம்பர வளர்ச்சிகளில் நிலப்பிரபுத்துவம் திழைத்தது மெய்யாயினும், சாதி நிலப்பிரபுத்துவத்தினால் தோற்றுவிக்கபட்ட அமைப்பு அல்ல என்பதை மார்க்ஸிய ஆய்வியல் ஏற்கனவே வெளிப்படுத்திவிட்டது. சாதியம் குறித்த ஆய்வில் கேசவனின் பங்களிப்பு கவனிப்புக்குரியது. இனமரபுக் குழுக்கள் சாதிகளானது குறித்து அவர் பேசியுள்ளார்; ஆயினும், அவரும் நிலப்பிரபுத்துவதுக்குரிய சாதியக் கருத்தியலை மட்டுமே கவனத்தில் எடுத்ததால், ஏற்றத்தாழ்வு முறை தோன்றி நிலப்புரபுத்துவத்துக்கு முன்னதாக இருந்ததைச் சாதியத்துக்கான முன் வடிவமாயே கருதினார். இதன்பேறாக, முழுமையான முதலாளித்துவ வளர்ச்சியில் சாதிமுறை ஒழியும் எனக்கூறினார். இன்று அரை-நிலப்பிரபுத்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சம் காணப்படுவதாலேயே சாதியுணர்வு நீடிக்கிறது என்பார்.
அவர்சரியாக எடுத்துக்காட்டியது போன்றும், முன்னதாகக் கார்ல் மார்க்சே கூறியிருந்தவாறும் இனமரபுக் குழு சாதியானது என்றவகையில் விவசாய வாய்ப்புடன் முன்னேறிய மருதத்திணை கிழார்களாகிப் பின்னாலே நிலப்பிரபுத்துவ வளர்ச்சியை எட்டத்தக்க சாதியான போது ஏனைய வென்றடக்கப்பட்ட திணைகளுக்குரிய இனமரபுக்குழுக்கள் இடைநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளாக்கப்பட்டன. இவ்வாறு ஆன ஆரம்ப காலத்திலேயே சாதியத்துக்கான முதல் கருத்தியல் வடிவம் தோன்றிவிட்டது. அதுவே ரிக்வேத இறுதிக் கட்டத்தில் தோன்றிய வருணக் கோட்பாடு(பிரஹஸ்பதியின் தலையிலிருந்து பிராமணனும், தோள்களிலிருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், பாதத்திலிருந்து சூத்திரனும் தோன்றினர் என்பது); தொடர்ந்த வளர்ச்சியில் பின்னர் வென்றடக்கப்பட்டவர்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்ட அவர்ணர்களான ஒடுக்கப்பட்ட மக்கள் (தலித் சாதிகள்) எமது வரலாற்று அரங்கில் பிரவேசித்தனர். கிழார்களின் இந்த முதல் வெற்றிக்கட்டத்துடன் இந்த ஏற்றத்தாழ்வு வாழ்முறையை ஏற்புடையதாக்கும் பிராமணரும் விவசாயச் சாதியுடன் சொத்துகளுக்குரிய ஆளும் சாதியாக்கப்பட்டனர். இதனூடு வளர்ச்சியுற்ற வணிக ஆதிக்கம் அரசு ஏற்புக்குரியதாக இருக்கவேண்டியிருந்தபோது பிரமணர் ஆதிக்கம் தகர்க்கப்படவேண்டியிருந்த வரலாற்றுக் கட்டம் தோன்றியது; அத்தேவையை நிறைவாக்கும் வண்ணம் சமண பௌத்த எழுச்சி சாத்தியமானது. இப்புதிய மதங்கள் பிராமணர் புனிதமான சாதியினர் என்பதை அகற்றிய அதேவேளை சாதி வாழ்முறையை அங்கீகரிக்க வேண்டியிருந்தது. சாதி எனும் சொல்லே பௌத்தத்துக்குரிய பாளிச் சொல் என்பது தற்செயலானது அல்ல. தொடர் வளர்ச்சியில் இந்துமதம் ஊடாக மீண்டும் பிராமணர் ஆதிக்கம்பெற்ற நிலப்பிரபுத்துவக்கட்டத்தில் உண்மையில் வர்ணக் கோட்பாடு விளக்கக் கடுமையான நிலையில் சாதி என்பதே நிலைபேறடைந்தது(ஆயினும், வர்ணக் கோட்பாடு வாயிலாக சாதியை விளக்க மனு ஸ்மிருதி முயன்றது கவனிப்புக்குரியது).
இந்த மாற்றக்கட்டமான கி.பி.நாலாம் நூற்றாண்டு முக்கியத்துவம் மிக்க ஒரு காலப் பகுதி. இந்த எல்லையில் முன்னர் வணிக ஆதிக்கம் நிலவியது; பின்னர் நிலப்பிரபுத்துவம் மேலாண்மைபெற்று, கி.பி.ஏழாம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ சமூகம் நிலைபேறான ஆதிக்க அமைப்பாகியிருந்தது. இந்தமாற்றத்தில் மதங்களின் கருத்தியலில் ஏற்படும் மாற்றம் மாறுகின்ற அமைப்புக்கான ஏற்பினை சமூகத்தில் சாத்தியப்படுத்துவதாக அமையும். மனுதர்ம சாஸ்திரம், வாத்ஸாயனரின் காமசூத்திரம், பகவத்கீதை ஆகியன இத்தகைய நிலப்பிரபுத்துவ மாற்றத்துக்கான பண்பாட்டுப் புரட்சியின் கருத்தியல் வெளிப்பாட்டுப் படைப்பாக்கங்கங்களாகும். இவற்றின் வாயிலாகவே பிராமண மதம் புதிய இனக் குழுக்களை உள்ளீர்த்து, முழுமுதற் கடவுள் கோட்பாட்டுடனான இந்துமதம் தோற்றம்பெற ஏதுவாயிற்று. இதற்குமுன்னர் எந்தக் கடவுளும் இத்தகைய பரம்பொருள் அல்ல. பௌத்தத்திலும் இக்கட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. நிலப்பிரபுத்துவத்துக்கு ஏற்றதாக அதன் கருத்தியல் மாற்றம் ஏற்பட்டபோது மகாயான பௌத்தம் தோன்றி, புத்தரை ஒரு முழுமுதற் கடவுள் ஆக்கிக் கொண்டது.
இவ்வகையில் இந்துமத வடிவம்போல புத்தர் முழுமுதற்கடவுளாக ஏனைய பரிவாரத் தெய்வங்களோடு பவனிவரும் காட்சிகளை சீன, யப்பான் போன்ற நாடுகளின் பௌத்ததில் காணவியலும்; ஆம், சமகாலத்தில் தோன்றிய இந்து மதத்துக்குப் பல கருத்தியல்களை வழங்கிய மகாயான பௌத்தமே கிழக்காசியாவில் பரவியது என்பது கவனிப்புக்குரியது. முன்னதாக இலங்கையில் தேரவாத(புத்தரின் மூலக் கோட்பாட்டைப் பேணி வைத்திருக்கிறோம் எனும் பிரிவு) பௌத்தம் சிங்கள மன்னரின் செல்வாக்கைப் பெற்றிருந்த போதிலும் இக்கட்டத்தில் மகாயான பௌத்தம் இலங்கையில் செல்வாக்குப் பெற்றிருந்தது. பின்னர் மீண்டும் ஆதிக்கத்தைப் பெற்ற தேரவாத பௌத்தம் மகாவம்சத்தினூடாக மகாயான பௌத்தத்திற்கெதிரான வலிய கருத்தியல் போராட்டத்தை நடாத்தியது. மகாயான பௌத்தப் பரவுகையில் தமிழ்ப் பௌத்தத்துக்கு கணிசமான பங்குண்டு. தமிழகதிலிருந்து அவ்வாறு மகாயான பௌத்தத்தைச் சீனாவுக்குக் கொண்டுபோய்ப் பரப்பியதன் பேரில் நம்ம தமிழர் சீனா, யப்பான் போன்ற நாடுகளில் வழிபடப்படுவது பற்றி இன்று விசேடமாக சொல்லத்தேவையில்லை;சினிமாவிலும் ஏழாம் அறிவாகிவிட்டாரே!
இவ்வாறு இலங்கை மக்களிடம் செல்வாக்குப் பெற வைத்ததில்(முன்னர் தேரவாத பௌத்தம் ஏற்கனவே சொன்னவாறு அரசரிடமும் ஆதிக்கத்தரப்பினரிடமுமே மட்டுப்பட்டிருந்தது) மகாயான பௌத்தம் ஏற்படுத்திய தாக்கத்தை மறுக்கும் தேவை மகாவம்சத்துக்கிருந்தது; தமிழகத்தினூடாக பௌத்தம் பரவியதைச் சொன்னால் மாகாயான பௌத்தத்தின் பங்களிப்பை ஏற்றதாகிவிடும் என்பதால், தமிழ் நாட்டினூடாக வந்து யாழ்ப்பாணத்தின் கரையில் இறங்கி நடைபவனியாக வந்த மகிந்த தேரரை பறந்துவந்து மிகிந்தலையில் இறங்கியதாகக் காட்டவேண்டியதாக உள்ளது. என்னதான் மகாயான பௌத்தத்துக்கு எதிராக 'விட்டுக்கொடுக்காத' போராட்டத்தை தேரவாத பௌத்தம் மேற்கொண்டபோதிலும், அதனால் முழுமுதற்கடவுளாக்கப்பட்ட புத்தரைப் பாடிப் பரவுவதன்றி வேறு மார்க்கம் இருக்கவில்லை; இவ்வகையில் நிலப்பிரபுத்துவ மதமாக வேண்டிய நிர்ப்பந்தம் தேரவாத பௌத்தத்துக்கு மாறிய சமூகச் சூழலில் இருந்தது என்பது கவனிப்புக்குரியது.
இந்தப் பௌத்தம் மற்றப்பல விடயங்களில் மகாயான பௌத்தத்தை நிராகரித்தபோதிலும், முழுமுதட் கடவுளாக நடைமுறையில் புத்தரை ஏற்கவேண்டியிருந்தது ஏன்? இலங்கையில் ஆதிக்கச் சாதியான கொவியா ஏனைய சாதிகளைத் தனது ஆளுகைக்குள் கட்டுப்படுத்தும் வகையிலேயே இவ்வாறு முழுமுதற்கடவுள் கோட்பாட்டை வரிக்க வேண்டியிருந்தது . பதினைந்து நூற்றாண்டுகளின் பின் வணிகத்தில் முதன் முதலாக சிங்களச் சமூகம் நுழைவதில் கரவா சாதி முன்கை எடுப்பதுவரை இந்தக் கருத்தியல் சோதனைக்குள்ளாகாது இருக்க முடிந்தது; பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த மாற்றம் உட்பட அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை வேண்டிய நிலையும் இருந்த போது இலங்கையின் பௌத்தம் மறுமலர்ச்சி இயக்கத்தை முன்னெடுக்க வேண்டியிருந்தது.
இந்து மதமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவ்வகையில் கருத்தியல் மாற்றத்துக்குள்ளாகும் மறுமலர்ச்சி இயக்கத்தை முன்னெடுத்தது. தயானந்த சரஸ்வதி, ராஜா ராம் மோகன் ராய், இராமகிருஸ்ண பரமகம்சர், விவேகானந்தர் என வட இந்திய ஆளுமைகள் போல இராமலிங்க வள்ளலார், நாராயணகுரு, ஐயங்காளி போன்றோர் தமிழக மறுமலர்ச்சியில் தாக்கம் செலுத்தினர். ஆதிக்க சாதி மேலாண்மையை நிலைநிறுத்த முன்னிறுத்தப்பட்ட பரம்பொருளுக்கு மாறாக வெவ்வேறுவகையில் தமக்கேயான வழி முறைகளில் இவர்கள் தமக்கான இயக்கத்தை முன்னெடுத்தனர். அரம்பத்தில் பெருங்கடவுளரைப் புதிய உள்ளடக்கத்துடன் பாடிய வள்ளலார் பின்னர் கடவுள் என்பதை அத்தகைய வடிவங்களிலிருந்து முற்றிலும் விடுவித்துக்கொண்டு சுத்த சமரச சன்மார்க்க அடிப்படையிலேயே அருட்பெருஞ்சோதியை வழிபாட்டுக்குரியதாய் முன்வைத்தார். நாராயண குருவின் போராட்டம் இன்னொருவகையில் அமைந்து ஆதிக்கசாதிக் கடவுள் என்பதைத் தகர்த்தது.
தீண்டாமைக் கொடுமையை அப்போது அனுபவித்த நாடார் சாதியினர் பல்வேறு போராட்டங்கள் வாயிலாக வர்ணத்தளத்தில் அசைவியக்கம் பெற்று வளர்ச்சியை எட்டுவதில் நாராயண குருவின் போராட்டம் வலுமைமிக்க ஆன்மீகத்தளப் பங்களிப்பாயிருந்தது. ஆதிக்க சாதியினர் பிரதிட்டை செய்ய முடிந்த சிவனைத் தீண்டாமைக்குட்பட்டிருந்த தான் வழிபடுவதை எவர் தடுக்க இயலும் என்ற துணிவோடு சிவனைப் பிரதிட்டை செய்தார்; எதிர்ப்புத் தெரிவித்த ஆதிக்க சாதியினருக்கு, "நீங்கள் உங்கள் சாதிச் சிவனை வழிபடலாம், நான் என் சாதிச் சிவனைப் பிரதிட்டை செய்திருக்கிறேன்" எனப் பதிலிறுத்தார் நாராயணகுரு. சிவன் ஆதிக்கப்பீடத்தைத் தகர்த்துக்கொண்டு ஜனநாயகப் பண்பைப் பெறவேண்டி இருந்த சமூக மாற்றக் காலகட்டத்தின் ஆன்மீக ஆளுமையாக இவ்வகையில் நாராயணகுரு திகழ்ந்தார்.
முன்னதாக பிராமணரும் வெள்ளாளரும் மட்டுமே பிரதிஸ்டை செய்ய வல்லவராக இருந்த சிவன் ஆதிக்க சாதிப் பரம்பொருளாவர். இவரின் ஆளுகைக்குட்பட்ட சிறுதெய்வங்கள் அடுத்தநிலைக்கான சாதிகளின் இருப்பை உணர்த்துவர். "சிறு தெய்வம்" என்பதில் குழப்பம் உள்ளது. நாட்டார் தெய்வங்களை அவ்வாறு கருதுவது கோட்பாட்டு ரீதியில் தவறு. பெருந்தெய்வங்கள் எனப்படுவோரையே எவர் பரம்பொருள் எவரெல்லாம் சிறுதெய்வங்கள் எனப்பகுக்க இயலும்; சைவருக்கு சிவன் பரம்பொருளாக இருக்கும்போது, விஸ்ணு-சக்தி-முருகன் என்போர் சிறு தெய்வங்களாவர். வைணவர்களுக்கு விஸ்ணு முழுமுதற் கடவுளாக இருக்கும்போது சிவன்-சக்தி-முருகன் ஆகியோர் அவரால் இயக்க வல்ல அடுத்த நிலைச் சிறுதெய்வங்களாவர். நாட்டார்வழிபாட்டுக்கான கிராமியத் தெய்வகள் இந்தப் போட்டிக்குள் வர அவசியமற்ற முந்திய வழிபாட்டின் தொடர்ச்சியாக இருப்பர். பரம்பொருள்-சிறுதெய்வங்கள் என்ற "பெருந்தெய்வங்கள்" எல்லாம் நிலப்பிரபுத்துவ விழுமியங்களுக்கு ஆட்பட்டு பிராமணப் பூசை புனஸ்காரங்களையும் "சைவப் படையல்கள்" உட்பட்ட புனிதங்களையும் கோருவன; கிராமியத் தெய்வங்களோ முந்திய இனமரபு வாழ்முறையின் தொடர்ச்சியான நெருக்கத்தை வழிபடும் மக்களோடு கொண்டிருப்பன. தான் உண்ணும் இறைச்சி, மீன் மற்றும் குடித்து மகிழும் கள்ளுச் சாராயம், சுருட்டு என்பவற்றைப் படையலாக வைப்பதில் இந்தக் குல தெய்வங்கள் மகிழும் என்ற நெருக்கத்துடன் கிராமியத் தெய்வ வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் கிராமியக் கடவுளர்கள் சாதிகளுக்கானது, சாதிகளுக்குள்ளும் குலத் தொடர்ச்சியினருக்கானது எனத்தனித்துவத்துடன் அமைவன("பெருந்தெய்வம்" என்பவரும் சாதி அடையாளம் கடந்தவரல்ல; அதுதான் ஆதிக்க சாதியினர் மட்டுமே பரம்பொருளைப் பிரதிஸ்டை செய்ய இயலும் என்பதிலேயே வெளீப்பட்டதே).
ஆக, இந்து சமயம் என்பது சாதிகளின் சமயம் ஆகும். ஒவ்வொரு சாதிக்குமான தனிச் சமயப்பின்பற்றலோடு, ஆதிக்க சாதிப் பரம்பொருளுக்கு ஆட்பட்டு அவை இயங்கின. இந்த சமாதான-சகவாழ்வு செமிட்டிக் மதங்களான யூத-கிருஸ்தவம்-இஸ்லாம் என்பவற்றிலிருந்து அடிப்படையான வேறுபாட்டை உடையது. செமிட்டிக் மதங்கள் வர்க்க சமூக வாழ் முறையின் வெளிப்பாடு என்கிறவகையில், இனமரபுக்குழுக்களுக்கான கடவுளர்கள் இல்லாதாக்கப்பட்டன. எமது சாதியச் சமூகத்தில் சாதிகளின் சமயமாக இந்து சமயம் அமைந்தமை பிரத்தியேக வரலாற்றுப் போக்கின் வெளிப்பாடு.
வர்க்கப் பிளவுறாது, இனமரபுக்குழு மேலாண்மையோடு சுரண்டல் சாத்தியப்பட்ட எமது வரலாறு எழுது முறையை வர்க்கபிளவுற்ற ஐரோப்பியப் பாணியில் எழுதுவதின் பேறாக தோற்ற மயக்கங்கள் மலிந்துபோயுள்ளன. எமது சமூகத்தைப் புரிந்து கொள்வதிலும், மாற்றத்துக்கான மார்க்கத்தை வகுப்பதிலும் இடர்ப்பட வேண்டியுள்ளது. இகருத்தை எந்தத் தயக்கத்துக்கும் இடமளிக்காமலே நிராகரித்து விடுகிற நண்பர்களும் உள்ளனர். எம்மிடம்தான் முழுமையான விஞ்ஞானபூர்வமான மார்க்சியக் கண்ணோட்டம் இருக்கிறதே - அதன் வழி வர்க்கங்களை ஆய்வதும், பாட்டாளி வர்க்கத் தலைமையில் அணிசேர்க்கக்கூடிய வர்க்கங்களை ஐக்கியப்படுத்த வேண்டியதுந்தானே உடனடிப் பணி! அதற்கு அமைவாக இன்றைய ஜனநாயக வாய்ப்பு ஆளும் சாதிக்கு இருந்த முழுமுதற்கடவுளின் அனுக்கிரகத்தைத் தகர்த்து, அனைத்து சாதிகளிலிருந்தும் முதலாளிகள் உட்பட அனைத்து வர்க்கங்களையும் சாத்தியப்படுத்தி விட்டதே, இனிச் சாதிபற்றிப் பார்க்க என்ன இருக்கிறது,வர்க்கத்தைப் பார்த்தால் போதாதா எனக் கேள்விகளை அடுக்குவர். இனி சாதி பற்றிப் பேசினால் தலித்தியவாதம் தானா? மார்க்சியப் பார்வையில் இன்றைய சாதி இயங்குமாறினைக் காண இயலாதா? முதலாளித்துவ ஜனநாயகம் பூரணப்பட்டாலும் சாதி இருக்கத்தான் போகிறது, சாதி அரசியல் இயங்கத்தான் போகிறது என்றால், அது பின் நவீனத்துவக் கண்ணோட்டமாகுமா?
No comments:
Post a Comment