Monday, March 26, 2012

இரட்டை தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்

இரட்டை தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் - ந. இரவீந்திரன் 

                                                                                         
                                                                  பார்த்துப் பழகிய வடிவத்தில் மனமீடுபாடு கொள்ளூம் நிலை காரணமாக ,உண்மைத்தோற்றம் மறைந்து வேறுபட்ட மயங்கிய காட்சியில் தவறான புரிதல்களுக்கு ஆட்படுவது எப்போதும் நிகழக்கூடியதுதான்.நீண்டகாலமாக எம்மிடமுள்ள தோற்றமயக்கமாக இருப்பது சமூக மாற்றம்பற்றிய புரிதலும்,அத்தவறான புரிதலுடன் மார்க்சியத்தைப் பிரயோகிக்க முயன்று தோல்விகளைச் சந்தித்துப் பாரதூரமான பின்னடைவுகளைக் கண்டடைந்துள்ளமையுமாகும்.எமது சமூகத்தில் மார்க்சியத்தை திரிபுகளுக்குஆட்படுத்திக்கொண்டு இயங்குவதே முனேறவியலாத முட்டுக்கட்டைகளுக்கு காரணம் என்றமயக்கங்களும் உண்டு.
திரிபுகளின்றி அப்படியே விசுவாசமாக மிகுந்த அர்ப்பணிப்புகளுடன் இயங்கமுயன்றவர்களும் இடர்ப்பாடுகளுக்கு உள்ளாயினர் என்பதே உண்மை.மார்க்சியம் ஐரோப்பியச் சமூகத்தைப் பகுத்தாராய்ந்த அதே முறையில் நமது சாதியச்சமூகத்தைக் காண இயலாது என்ற புரிதல் நீண்ட காலமாய் எமக்கு இருந்ததில்லை.மார்க்சியம் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்திச் சமத்துவத்தை வென்றெடுப்பதற்கு வழிகாட்ட இயலும்;அதேவேளை மார்க்சியப் பிரயோகிப்பில் வேறுபட்ட வடிவம் இங்கு அவசியமாயுள்ளது.எமது சமூக உருவாக்கம் எத்தகைய பிரத்தியேகத் தன்மையுடையது,அதற்கு ஏற்புடையதாக மார்க்சியத்தை எவ்வாறு பிரயோகிப்பது,இங்கு சமூக மாற்றங்கள் ஏற்கனவே எவ்வாறு நிகழ்ந்தேறின என்பன குறித்த புரிதல் அவசியம்; அவ்வாறன்றி, வேறுபட்ட வரலாற்று செல்னெறியுடையதான ஐரோப்பியப் புரட்சிகளை மாதிரிகளாகக்கொள்ளமுயன்றதவறே பாரதூரமான பின்னடைவுகளுக்கு எம்மை ஆட்படுத்தின.

நமது சமூகக் கட்டமைப்பின் வேறுபட்ட பிரத்தியேகத் தன்மை காரனமாக, முதலாளித்துவம் முன்னதாகத் தோன்றிய ஐரோப்பியாவில் எழுச்சியுறுத்திய தேசிய வடிவம் போல எமது தேசியக் கட்டமைப்பு இங்கு உருவாகவில்லை. ஐரோப்பாவைச் சேர்ந்த ஏகாதிபத்திய நாடுகளின் குடியேற்ற நாடுகளாக உருவாகிய செயற்கையான தேசியத் தன்மை இலங்கை, இந்தியத் தேசியங்களுக்கு இருந்தது என்ற அளவில் மட்டுமே வேறுபாட்டை புரிந்துகொண்டோம். இவ்வகையில் புறனிலைக் காரணி மட்டுமன்றி அகனிலை ரீதியாக அடிப்படையான வேறுபாடு உண்டு என்பது பற்றிய தேடல் இன்று வலுவடைந்து வருகிறது.

வர்க்கப் பிளவினாலன்றி, மருதத் திணை மேலாதிக்கம் சமூக ஒடுக்குமுறையை ஏனைய திணைச் சமூகங்கள் மீது ஏற்படுத்திக்கொண்டு சாதி வாழ்முறையை ஏற்படுத்திக்கொண்டதன் ஊடாக எமக்கான ஏற்றத்தாழ்வுச் சமூக முறை தோற்றம்பெற்றது. இன மரபுக் குழுக்கள் தகர்க்கப்பட்டு உருவான ஆண்டான்- அடிமைச் சமூகம் கிரேக்க,ரோம் புரட்சிகள் வாயிலாக தகர்க்கப்பட்டு நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பு ஐரோப்பாவில் கட்டமைக்கப்பட்டது. அதனைத் தகர்த்து நவீன ஐரோப்பா முதலாளித்துவ அமைப்புக்கான தேசங்களைக் கட்டமைத்தது. இன்றைய இந்த அமைப்பில் நிலப்பிரபுத்துவ வர்க்கம்-பண்ணை அடிமை வர்க்கம் என்பன முற்றாகவே அற்றுப்போகும் வகையில் துடைத்தழிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நிலப்பிரபுத்துவம் ஆண்டான் - அடிமை வர்க்கங்களை இல்லாது அழித்துவிட்டதனால், அவையும் இன்றில்லை.இன்றைய ஐரோப்பிய சமூகம் முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் மற்றும் மத்தியதர வர்க்கம் எனும் புதிய சக்திகளையே கொண்டுள்ளது.

எமது சமூகத்தில் அவ்வாறன்றி ஏற்றத்தாழ்வு தோற்றம் பெற்ற காலத்திலிருந்த ஆதிக்க சாதிகள், ஒடுக்கப்பட்ட சாதிகள்,இடைனிலைச் சாதிகள் என்பன தொடர்ந்தும் இருந்து வருகின்றன. இங்கும் உற்பத்திமுறை மாற்றங்கள் ஏற்ப்பட்ட போதிலும் உற்பத்தி சாதனங்கள் எந்தச் சாதிகள் வசப்படுகின்றன என்ற வகையில் ஆதிக்க சாதிகளிடையே உடமை மாற்றமும் அதிகார மாற்றமும் ஏற்படுகிறதே அன்றி, சமூக சக்திகள் என்றவகையில் பழையன முற்றாக அழிந்து புதியன உருவாகவில்லை; புதியன புகும் போது பழையன இன்னுமொரு வடிவில் தொடர்வதையே காண்கிறோம்.

இவ்வகையில் நீடித்துதொடர்ந்து இருக்கும் ஆதிக்கசாதி - ஒடுக்கப்பட்ட சாதி என்ற 'நிரந்தரப்பட்ட' [ஏற்றத்தாழ்வு அமைப்பு உள்ளவரை என்ற எல்லைப்பாட்டுக்குரிய] பேதம் காரனமாக எமது தேசியம் பிளவுபட்டுப்போனது. ஐரப்பாவில் ஏனைய வர்க்கங்களை ஐக்கியப்படுத்தியவாறு முதலாளித்துவம் தேசியத்தைக் கட்டமைக்க முடிந்தது போல இங்கு இயலவில்லை;ஆதிக்கசாதித் தேசியத்துக்கும் ஒடுக்கப்பட்டோர் [தலித்] தேசியத்துக்கும் இடையே அடிப்படை நலங்களில் வேறுபாடு வலுவானதாய் உள்ள காரனத்தால் இரட்டைத் தேசியம் ஒவ்வொரு தேசிய இனங்களினுள்ளும் செயற்படக் காண்கிறோம். 

ஏற்றத்தாழ்வு அமைப்பு உருவாக்கத்துக்கு முந்திய இன மரபுக்குழுக்களின் பண்பாட்டு வேறுபாடுகள் தொடர்ந்து நீடிப்பன.இரட்டைத் தேசியத்துக்குரிய இரு சக்திகளிடமும் இரண்டாயிரம் வருடங்களுக்கு அதிகமான வேறுபட்ட பண்பாடுகள் உண்டு. சுரண்டலுக்கான மாற்றங்கள் ஏற்பட்டு அமைப்பு வேறுபாடுகள் அவ்வப்போது சாத்தியமாகி வந்த எல்லாக்கட்டங்களிலும் ஆதிக்கசாதிகளிடையே பிரதான ஆளும் சாதி எது என்பதில் மாற்றம் ஏற்பட்டபோதிலும் , ஒடுக்கப்பட்ட சாதிகள் தமக்கான நீடித்த பண்பாட்டு தொடர்ச்சியுடன் தொடர்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாயே இருந்து வந்துள்ளனர். நவீன சமூகத்தில் இரு தேசங்களை அடையாளப்படுத்துவதில் வேறுபடுத்த்ம் பிரதான அம்சமாக பண்பாடு திகழ்வதை அறிவோம். ஆதிக்க சாதி - ஒடுக்கப்பட்ட சாதி என்ற பேதப்பட்ட இரு சக்திகளது பண்பாட்டு வேறுபாடு இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இரு தரப்பையும் இரு தேசங்கள் போன்றே கட்டமைத்து வந்திருக்கிறது.

அந்தவகையில், இரட்டைத் தேசியப் பிளவுடன் உள்ள எமது சமூகத்தைக் குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனனாயகப் பண்புடைய ஒரு தேசிய இனம் என்று மாற்றம்கொள்வதற்கு - நவீன சமூக உருவாக்கத்துக்கு - பண்பாட்டுப் புரட்சி இங்கே அத்தியாவசியமானதாயாகியுள்ளது. தவிர, முந்திய ஃஷமூக அமைப்பு மாற்றங்கள் பண்பாட்டுப் புறட்சிவாயிலாகவே இங்கு நடந்தேறியுள்ளன. வர்க்கப் பிளவடைந்த ஐரோப்பிய சமூகத்தில் மற்றங்கள் அரசியல் புரட்சிகள் ஊடாக நடந்தேறின என்றால், சமூக ஒடுக்குமுறையுடைய எமக்கான மாற்றம் பண்பாட்டுப் புரட்சிகள் வாயிலாகவே நிகழ்ந்தேறின.

ஏற்கனவே ஒரு தசாப்தத்துக்கு மேலாக இதுகுறித்து எழுதிவந்த போதிலும் , இன்று அதற்கான தேடல் வலுத்துள்ள நிலைகாரனமாகத் தொகுப்புரை போன்று 'இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்டசியும்'பற்றி இங்கு எழுத எண்ணியுள்ளேன். முன்னதாக இதன் தவையை அவசியப்படுத்திய 2012 மார்ச் 22 ஜெனீவா தீர்மானம் ஏற்படுத்திய சூழலைப் பார்த்து, இரண்டாம் பகுதியில் இரட்டைத் தேசியம் பற்றிய கோட்பாட்டு புரிதல் எமது வரலாறு எழுதுமுறையில் ஏற்படுத்த வலியுறுத்தும் அம்சம் குறித்து பார்க்க இயலும். மூன்றாம் பகுதி, சமூக மாற்ற வடிவம் தனித்துவமிக்கதாய்ப் பன்பாட்டுப் புரட்சி வகைப்பட்டதாய் இருக்க, மற்றவர் ஓடிய வழி வேறு தடம் என அறியாமல் ஓடுதல் விரும்பிய திசைக்கு இட்டுச் செல்லாது என்பதைக் காட்டும். 

                                           

              1


மார்ச் 22 ஜெனீவா தீர்மானம் ஈழத்தமிழர்துயர்கள் முடிவுக்கு வரப்போவதற்கான அடித்தளத்தை இட்டிருப்பதாகப் பலரும் நம்புவதாகத் தெரிகிறது. இலங்கை அரசின் முயற்சிகளனைத்தும் தோற்கடிக்கப்பட்டு, யுத்த இறுதித் தருணத்தின் மனித உரிமை மீறல்கள் உலகின் முன் அம்பலமாகியுள்ளதால் சிங்களப் பேரினவாதிகள் பணிந்துபோக வேண்டிய நிர்ப்பந்தம் ஏர்ப்படுத்தப் பட்டுவிட்டது; தீர்வுகளை இலங்கை அரசு நிரைவேற்றும்படியான நெருக்கடி இதன்வாயிலாக உருவாகிவிட்டது என்றே கரிதப்படுகிறது. உண்மையில் வெற்றிபெற்றது யார்? தோற்றுப்போவது எது?

வெற்றிபெற்ற தரப்பில் ஈழத் தமிழத் தேசியத்தையோ, அது காணவிழையும் தீர்வுத் திட்டங்கள் எதனையுமோ காணவியலவில்லை. இலங்கை தோற்றுப்போன ஒருதோற்றம், அது பலமான அடிவாங்கியிருப்பதால் வெளிப்பட்டுள்ளதாயினும், நிச்சயமாக சிங்களப் பேரினவாதம் தோற்றுபோகவில்லை; அது இன்னும் வலுமையுடன் சிங்கள மக்களைத்தன்வசம் அரவனைக்கும் பாரிய வெற்றியை ஈட்டியுள்ளது. உள்ளூர்மட்டத்தில் ஆதிக்க சக்தி இவ்வகையில் ஆதாயம் பெற, உலகளவில் அமெரிக்க மேலாதிக்கவாதிகள் இதன் மூலம் பெற்ற வெற்றி ஈழத் தமிழ்த் தேசியம் இதன்வாயிலாக ஆதாயத்துக்கு உரிமைகோரும் வாயப்பைத் தட்டிப்பறித்துள்ளது.

சிங்களப் பேரினவாத இராணுவம் புரிந்த கோரக் கொலைகள் இதன்வாயிலாக உலகுக்கு வெள்ளிச்சமாகி, தமிழ்த்தேசியம் ஒடுக்கப்பட்டமை அம்பலமாகியிருக்கிறதுதானே எனக்கூறலாம். இராணுவம் எதுவாயினும், அதைக் கையாளும் ஆதிக்கவாதிகள் எவ்வளவுதான் புனிதம் கற்பித்து துப்பாக்கி ஏந்திய கை தவிர்ந்து மற்றக்கையில் தம்மபிடகம், பைபிள், பகவத்கீதை, குர்ரான் ஆகியவற்றில் ஏதாயினும் ஒன்றுடன் சென்றிருப்பர் என உலக மக்களெவரும் நம்பிவிடுவதில்லை. யுத்தம் முடிவுக்கு வருகையில் கொலைகளுக்கு இருக்கும் பங்கு குறித்து இன்றைய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளும் அதற்கு எதிரான போராட்டங்களும் நிகழும் சகாப்ததில் அனைத்து இனத்தவர்களுக்கும் ஏதோவொருவகையிலான அனுபவம் உண்டு.

என்ன, தமது இனம் அந்த யுத்தத்தை தொடுத்தது எனும்போது மட்டும் பழிபாவம் அனைத்தும் மறு தரப்புக்கே - தர்ம யுத்தத்தைப் புனிதமான பூரண நியாயங்களுடன் தமது தரப்பு முன்னெடுத்தது என ஒவ்வொரு இனத்தவர்களும் சொல்வர்; அவ்வளவே! சிங்கள மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு புனித யாத்திரை போகும்போது, அங்கு சாந்த சொரூபியாக முளைதுள்ள புத்தரே வெற்றியை ஈட்டித்தந்ததாய் நம்ப விரும்புவரேயன்றிதமது புதல்வர்களின் துப்பாக்கி கொடூரம் எதையும் புரிந்ததாய்க் கருத ஒருப்படமாட்டார்கள். துப்பாக்கி ஏந்திய தேச வீரர்களின் சிலைமுன் கண்ணீருகுக்கும்போது கோரக் கொலைகள் புரிந்த புலிகளை வீழ்த்திய சாகசங்கள் தெரியும்; அந்தக் கொடியவர்களின் துப்பாக்கிகள் பறிக்கப்பட்டது பளிச்சிடும்.   

எமக்கு மட்டும் வேறு மாதிரியா? புலியால் மேற்கொள்ளப்பட்ட பாசிசக் கொலைகள்பற்றி பேச்சுவந்தால் காந்தியின் மூன்று குரங்குகளின்சிலைபோல நாமும் உறைனிலைக்கு ஆளவோம். பெரும்பாலான தமிழ்த்தேசியர்கள் புனிதமான விடுதலை யுத்தத்தையே புலிகள்முன்னெடுத்ததாயும் ,அதன் மேலாதிக்கப் பாசிசப் பண்பு என்ற பேச்செல்லாம் துரோகிகளும் எதிரிகளும் இட்டுக்கட்டிய பொய்களே என்றுந்தான் நம்ப விரும்புகிறார்கள்.சிங்கள - தமிழ் மக்கள் தத்தம் தரப்புக் குறித்து இவ்வாறு நம்ப 'விரும்புகிறார்கள்' எனஸ் சொல்லக் காரனம், அடி மனதில் தமது ஆட்களும் 'தவிர்க்க முடியாத சில கொடூரங்களை' செய்திருக்க இடமுண்டு என்ற புரிதல் உடையவர்கள் என்பதால் ஆகும்.

ஆக,யுத்தக் கொடூரங்கள் அம்பலமாக்கப்பட்டுள்ளது என்பதில் பெரிதாக வெற்றி எதுவுமில்லை. இந்த அம்பலப்படுத்தும் புனித காரியத்தை செய்த அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பண்ணிய கொலைகள் பற்றி உலக மக்கள் அறிய இயலாதவர்களா? எமக்கான தீர்மானம் எனப்பசப்பிய அதே நாளில் பலஸ்தீனர்களுக்கு தீங்கிழைக்கும் இஸ்ரவேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தனியொரு நாடாக எதிர்த்து கொலை வெறிபிடித்த இஸ்ரவேலை காவாந்து பண்ண அமெரிக்கா முயலவில்லையா? இப்போது எமது விவகாரத்தில் தலை வைப்பதும் எமக்கு விடுதலை பெற்றுத்தருவதற்கா? இந்தப் பிராந்தியத்தில் வளர்ந்துவிட்ட இந்திய - சீன செல்வாக்கை மட்டுப்படுத்தித் தனது மேலாதிக்கத்தை மீளவலியுறுத்த அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது இந்த ஜெனீவாத் தீர்மானம்; அமெரிக்காவின் இந்தக் கபட நாடகத்தை முழுமையாகப் புரிந்துகொண்டவர்களும், பக்கவிளைவாகத் தமிழருக்கு சில தீர்வுச்சாத்தியங்கள் இதனால் எட்டப்படலாம் தானே என்று கூறுவர்.

அப்படி எதுவும் நடந்துவிடப் போவதில்லை. மனித உரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை என்ற இலங்கை அர்சுக்கு இது பெரும் அடியாக இருந்த போதிலும் சிங்களப் பேரினவாதம் இதன் வாயிலாக வெற்றி பெற்றிருக்கிறது என மேலே குறிப்பிடப்பட்டிருந்தது. மனித உரிமை மீறலுடனான யுத்தக்கொடூரங்கள் நடந்தமையை இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவும் ஏற்றுக்கொண்டுள்ளது, அது குறித்த நியாயமான விசாரணையும் தீர்ப்பும் அவசியம் என்பதோடு அந்த ஆணைக்குழு பரிந்துரைத்த தீர்வுத்திட்டங்களைக் காலதாமதம் இன்றி உடன் நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட்ட அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் தோற்றுப்போய் இலங்கைக்கு ஆதரவு கூடுதலாகியிருந்தால் இலங்கை அரசுக்கும் அது பிரதினிதித்துவப் படுத்தும் சிங்களப் பேரினவாதத்துக்கும் பாரிய வெற்றியாக இருந்திருக்கும். இப்போதுங்கூட ஒரு வாக்கினாலேயே தீர்மானம் வெற்றிபெற்றது; அதுவும் அமெரிக்க மேலாதிக்கத்தின் அச்சுறுத்தலுக்கு பயந்துபோன நாடுகளின் கோழைத்தனத்தின் பேறு எனக்கூறி தனது வீராவேசத்தையே அரசு தரப்பு மெச்சிக்கொண்டிருக்கிறது [24 நாடுகள் ஆதரித்தும் 15 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தபோது 8 நாடுகள் நடுனிலை வகித்தன. எவருக்கும் வாக்களிக்காத எட்டையும் தனக்கானது என அடாத்துப்பண்ணும் இந்தப் பேரினவாதிகள் மட்டும் மேலாதிக்க எண்ணம் கொண்டவர்கள் இல்லை, அமெரிக்க மேலாதிக்கம் மட்டும்தான் அடாத்துப் பண்ணி தனக்கு சார்பாக வாக்களிக்கப்பண்ணியுள்ளது!]

மேலாதிக்கம்புரியும் வாய்ப்புள்ளவர் அதனை எவ்வகையிலும் செய்ய ஏற்றதாக அமைந்த சகாப்தம் இது. ஏகாதிபத்தியமாய் முதலாளித்துவம் வடிவம் கொண்டபோது பிற தேசங்களை ஆக்கிரமித்து அவர்களது வளங்களையும் உழைப்பையும் சூறையாடினர். இரு உலக யுத்தங்களின் பின் குடியேற்ற நாடுகளில் பெரும்பாலானவை விடுதலைபெற்றன;அதுவரை முதல்னிலை வகித்த பிரித்தானியாவை முந்திக்கொண்டு சுதந்திரத்தை மதிப்பதாக கூறியவாறு தலைமை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா மேலாதிக்கவாத அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் வாயிலாக உலகைச் சூறையாடுகிறது. சுதந்திரம் பெற்ற நாடுகள் ஒவ்வொன்றினுள்ளும் பெரும்பான்மையினங்கள் சிறு தேசிய இனங்களை மேலாதிக்கம் செய்து சுரண்டுவதாகவே இன்றைய சமூக பொருளாதார முறை அமைந்துள்ளது. அமெரிக்க மேலாதிக்கம் பாரதூரமான தவறையுடையது என்பதற்காக ஏனைய தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை மறுக்கும் சிங்களப் பேரினவாதம் புரிந்த ஆக்கிரமிப்புகளும் முறைகேடுகளும் சரியென்று ஆகிவிடாது (மறுதலையாக, ஜெனீவாத் தீர்மானத்தின் வாயிலாக சிங்களப் பேரினவாதிகளது மனித உரிமை மீறல்களையும் ஆக்கிரமிப்பையும் ருசுப்படுத்திவிட்டதால் அமெரிக்க மேலாதிக்கவாதத்தின் இரத்தக் கறைகள் கழுவப்பட்டுவிடப்போவதில்லை).

பிரச்சினை, மேலாதிக்கத்தினால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுவதிலிருந்து தேசிய இனங்கள் விடுதலைபெற்று சுய நிர்ணயத்தை வென்றெடுப்பதும் தொடர்ந்து சமத்துவம்மிக்க எதிர்காலம் ஒன்றை கட்டியெழுப்புவதும் எவ்வகையில் சாத்தியப்படுத்தப்பட இயலும் என்பதுதான். இலங்கை நிலவரத்தில் மேற்படி ஜெனீவா தீர்மானம் இந்த நோக்கத்துக்கு பாதக நிலையையே ஏற்படுத்தியுள்ளது. புத்த தம்மத்துடன் புனித யுத்தம் புரிந்த தம்மை உலக மேலாதிக்கத்தை வைத்து அமெரிக்கா அவமானப்படுத்த முயல்கிறயது இரு வாரங்களுக்கு முன்னே ஆரவாரமாக முழக்கமிட்ட படியே தான் உணவுப்பொருள் - எரிபொருள் - போக்குவரத்துக் கட்டண விலையேற்றங்களை சிங்களப் பேரினவாத அரசு நிறைவேற்றியது. 'மண்ணெண்ணையும் பாணும் அல்ல, அமெரிக்கா பறிக்க நினைக்கும் தன்மானத்தை மீட்பதே உடனடிப் பணி' எனச் சிங்கள மக்களை அணிதிரட்டி வீதிகள் தோறும் அரச தரப்பால் ஆர்ப்பாட்டம் நடாத்த முடிந்திருக்கிறது. அமெரிக்கபிரேரனைக்கு எதிர்ப்பு வலுத்து பேரினவாதத்தின் 'தன்மானம்' காக்கப்பட்டிருந்தால் கடிக்கும் வயிறும், மண்ணெண்ணையின்றி வாட்டும் இருளும் வீதியில் இறங்க சிங்கள மக்களைத் தூண்டியிருக்கலாம். இல்லாமல், தம்மை ஏமாற்றி சுகபோகங்களைப் பெருக்கும் சிங்களப் பேரினவாதக் கேடிகளின்பின்னால் உழைக்கும் சிங்கள மக்கள் தாம் ஒட்டாண்டிகளாக்கப் படுவதனைக் கண்டுகொள்ளாமலே போகவேண்டி வைத்துவிட்டதுஜெனீவாத் தீர்மானம்(இந்த வேடிக்கை வினோதங்களின் போது ஒரு அமைச்சர் திருவாய் மலர்ந்தருளியுள்ளார், சிறிய குடும்பமொன்றுக்கு மாதம் 7,500 ரூபாய் இலங்கையில் தாராளமாய்ப் போதுமாம்! தனது ஒரு மனி நேரச் செலவைச் சொல்லியிருப்பாரோ?)

தமது வாழ்வாதாரங்களைப் பறித்து ஒட்டாண்டிகளாக்கிக் கொண்டு, பாரிய சம்பள ஏற்றத்தாழ்வுகளுடன் தமது வளத்தைப் பெருக்கும் பேரினவாதக் கபடர்களின் பின்னே எதற்கு இந்தச் சிங்கள மக்கள் போக வேண்டும்? இங்கே தான் நாடு கடந்த ஈழ வாதிகள் பேரினவாதிகளின் கூட்டாளிகளாகிறார்கள். முப்பது வருட கால இரத்தம் சிந்தும் அரசியலாக இருந்த யுத்தத்தின் போது நேரடியாக பல மரணங்களையும் வாழ்வாதார இழப்புகளையும் அவர்கள் கண்டனர். இன்று இரத்தம் சிந்தாத யுத்தமான அரசியல் முன்னெடுப்பு வாயிலாக தமிழக ஈழ ஆத்ரவாளை மற்றும் நாடுகடந்த ஈழவாதிகள் அமெரிக்க அமெரிக்க மேலாதிக்கத் தலமையிலான மேலைத் தேசங்களுக்கு நாட்டை காட்டிக்கொடுப்பதாக காண்கிறார்கள். முப்பது வருட யுத்தம் உண்மையில் இந்தியாவினால் நாடாத்தி மிடிக்கப்பட்ட ஒன்றே; இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தை பின்னின்று இயக்கியது இந்தியா என்பதில் எவ்வளவு உண்மை உண்டோ, அதேயளவுக்கு தமிழ்த் தேசியத்தின் பேரில் பிரிவினைக் கோரிக்கையை வென்றெடுக்க செயற்பட்டபோது இந்த்ய மேலாதிக்க சக்திகளது கதை, வசனம், இயக்கத்துக்கு ஆட்பட்டு இயங்கி 'சிங்கள அரசின்' சுயாதிபத்தியத்தை இந்தியாவிடம் தாரைவார்க்க யாழ் வெள்ளாளத் தேசியம் வழியேற்படுத்திக் கொடுத்தது என்பதும் மெய்.

இலங்கையினுள் தனது மேலாதிக்கத்தை வென்றெடுப்பதற்கான முயற்சியில் சிங்களத் தேசியம் வெற்றியீட்டியுள்ளது. தனது ஆட்சிப் பரப்பினுள் கிழக்கும் - வடக்கும் இணைந்த தமிழர் தாயகக் கோரிக்கையுடன் சுயாட்சி கோரிப் போராடும் தமிழ்த் தேசியம் இந்திய அல்லது அமெரிக்க மேலாதிக்க சக்திகளுடன் கூட்டமைத்து தனது சுயாதிபத்தியத்தைக் கேள்விக்குள்ளாக்கி தன்னை தோற்கடிக்க முயல்கிறது என சிங்களப் பேரினவாதம் கருதுகிறது. அந்தவகையில், தமிழ் மக்கள் தமது சுய நிர்ணய உரிமைக்காக போராடுகிறார்கள் என்ற புரிதலைச் சிங்கள மக்கள் வதடைவதற்கு சிங்களப் பேரினவாதம் அனுமதிப்பதில்லை. பேரினவாதிகள் அந்தச் சதியில் வெல்லும் வகையிலேயே பிரிவினை நாட்டத்தை முன்வைக்கும் ஈழவாதத் தமிழ்த் தேசியர்கள் செயற்படுகிறார்கள்.

ஈழத் தமிழ்த் தேசியம் பிரிவினையின் அவசியமின்றியே தனது சுய நிர்ணயத்துக்காகப் போராடுவதற்கான அடிப்படை தேவைகள் நிறைந்திருக்கும் வாய்ப்பை யாழ் வீள்ளாளத் தேசியம் ஈழத் தமிழர் மீது தன் மேலாதிக்கத்தை நிலைனிறுத்துவதற்கு உரியதாக ஆக்கும்வகையில் முன்னெடுக்க விருப்புக்கொள்ளும் போது, தமிழ் மக்களை அணிதிரட்டிப் போராடுவதை விடவும் இந்திய - அமெரிக்க மேலாதிக்க சக்திகளுடன் கூட்டமைத்து செயற்படுவதன் வாயிலாக நிரைவு செய்ய உல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தவே முயல்வர்.நாடு மேலாதிக்க சக்திகளிடம் இறைமையை இழப்பது பற்றி அவர்களுக்கு சலனங்கள் எதுவுமில்லை; ஈழமண்ணில் தமது மேலாதிக்கம் நிலவ வாய்ப்பளிக்கும் உலக மேலாதிக்கங்கள் இங்கு கோலோச்சுவது பற்றி அவர்கள் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. தம்ழ் -சிங்கள ஆதிக்க சாதித் தேசியங்கள் தத்தமது மக்களை ஆளும்போது இன்றைய உலக நியதியாக உள்ள உலகமய மேலாதிக்க சக்தியின் கட்டுப்பாட்டை ஏற்க வேண்டியதுதான் என்பது யாழ் வெள்ளாளத் தேசியக் கணிப்பு.

அதற்கு ஆயுதமேந்தித் தலைமை தாங்கிய பிரபாகரன் ஐந்து வருடங்களின் முன் கூறிய வார்த்தைகள் இவ்விடயத்தில் கவனிப்புக்குரியது. வெரித்தாஸ் வானொலிப் பிரமுகர் ஒருவர் 'நக்கீரன்' இதழில் எழுதிவந்த தொடரில் இதனைப் பதிவு செய்துள்ளார். இந்திய அதிகாரத் தரப்பு தன்னை புரிந்துகொள்ளாமல் நிராகரிப்பதாக அந்த நக்கீரன் தொடர் கட்டுரையாளரிடம் பிரபாகரன் விசனம் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழ்த் தேசியத்துடன் பகைமை பாராட்டாமல் இந்திய அதிகாரத் தரப்பு தமிழீழம் அமைய அனுசரணையாக அமைந்தால், உருவாகும் தமிழீழம் மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு உதவிகரமாய் எப்படி இஸ்ரேல் அமைந்துள்ளதோ அவ்வாறு தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவுக்குரிய வலுவான தளமாக இருக்குமெனக் கூறியிருந்தார்.

இவ்வகையில் உலக மேலாதிக்கத்துக்குப் பணிந்தபடியே கிழக்கு - வடக்கு தமிழர் தவிர்த்து ஏனைய பகுதி சிங்கள மக்களையும் ஏனைய தேசிய இனங்களையும்  ஆதிக்க சாதிச் சிங்கள தேசியம் தனது ஒடுக்குமுறைக்கு உட்படுத்திக் கொள்ளலாம் என்பது யாழ் வெள்ளாளத் தேசிய்ம் முன்னிறுத்தும் வாய்ப்பு. கிழக்கு - வடக்கு தமிழர் தாயகத்தையும் தானே ஆளவேண்டும் என மேலாதிக்க வாய்ப்பை இராணுவ பலம் கொண்டு சிங்களப் பேரினவாதம் ஒடுக்குதலைத் தொடரும்போது விடுதலையை நேசிக்கும் தமிழ்த் தேசிய மக்கள், யாழ் வெள்ளாளத் தேசியம் (அதனை இன்று பிரதினிதித்துவப்படுத்தும் நாடுகடந்த ஈழவாதிகள்) தமது நலங்களுக்கு தீங்கிழைப்பவர்கள் என்ற புரிதல் கொள்ளாமலே, தமிழ்த் தேசிய மீட்சிக்காக யாழ் வெள்ளாளத் தேசியம் போராடுவதாக எண்ணிக்கொண்டு அதன் பின்னால் அணி திரளத் தூண்டப்படுகிறார்கள்.

ஆக, சிறு தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை வழங்குவதை விடவும் அவற்றின் மேல் அதிகாரம் செலுத்தும் பொருட்டு உலக மேலாதிக்கத்திடம் நாட்டின் இறைமையைத் தாரை வார்த்து விடலாம் என்பதாக பேரினவாதம்; தனது மக்களின் மீது அதிகாரம் தானே செலுத்தவேண்டும் என்பதற்கான வாய்ப்புக்காக பிற மேலாதிக்க சக்தியின் வேட்டைக் காடாகவும் நாட்டை மாற்றும் துடிப்பில் சிறு தேசிய இனம். இரு தரப்புக்கும் தமது சொந்த மக்களி அடிப்படை நலங்களில் அக்கறை இல்லை என்பது வெளிப்படை.ஆளும் சாதித் தேசியங்கள் சொந்த மக்களின் நலங்களுக்குத் துரோகமிழைத்து உலக மேலாதிக்கங்களுடன் கூடிக்குலாவும். ஏனைய சாதித் தேசியங்கள் தத்தமது சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்க வேண்டுமாயின் தமது இனத்தின் ஆதிக்க சாதித் தேசியங்களுடன் முரண்பட்டவாறு தமக்குள் ஐக்கியமுறவுள்ள வாய்ப்பை தேடுவது உடனடி அவசிய வரலாற்றுப் பணியாகும்.



No comments:

Post a Comment